Advertisement

“சரி அந்த பேச்சை விடுங்கடி. பேரவல் பார்ட்டில மார்னிங் ப்ரோகிராம் நம்ம ஜூனியர்ஸ் பண்றாங்க. ஆப்டர் லன்ச் நாம அவங்களுக்கு தாங்க்ஸ் கிவ்விங் கொடுக்கப் போறோம். அப்போ ஸ்டேஜ் முழுக்க நம்ம கன்ட்ரோல்ல தான் இருக்க போகுது. பத்து வருசத்துல யாரும் பார்காத காமெடி பர்பாமான்ஸ் செஞ்சி தெறிக்க விடுறோம்.’’ என்று மகிழின் முக வாட்டம் உணர்ந்து உற்சாக திசையின் பக்கம் பேச்சை திசை திருப்பினாள் மல்லி. 

தோழிகளும் அதை பின்பற்ற சற்று நேரம் அந்த இடமே கலகலத்தது. தாங்கள் ஐவரும் இணைந்து நாடக பாணியில் நகைச்சுவை நடனம் ஒன்றை வடிவமைத்தவர்கள், அதை கொஞ்ச நேரம் ஒத்திகை பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள். 

அன்றைக்கு இரவு மாறனிடம், மகிழ் தன் தந்தையின் நிலை மாறது இருப்பதை குறிப்பிட ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், தற்சமயம் தான் எதை பேசினாலும் அது சண்டையில் தான் போய் முடியும் என்பதை உணர்ந்து, “சரி… முதல்ல உன் செகன்ட் இயர் எக்ஸாம் முடியட்டும். நாம அப்புறம் பேசலாம்.’’ என்று சொல்லி அப்போதைக்கு அந்த பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தான். 

ஒருக்களித்து படித்திருந்த மல்லியை இடையில் கரம் கொடுத்து அணைத்தபடி அவள் தலை தன் மார்பில் இருக்கும்படி அழுத்தி பிடித்து உறங்க முயன்று கொண்டிருந்தான் சுந்தர். முதல் மூன்று மாதங்கள், அறைக்கு வெளியே உறங்கியவன், அதன் பிறகு ஒரு மழைநாளில் அறைக்குள் நுழைய வேண்டி வந்தது. 

அன்றைக்கு மறுநாள் காலை எழுந்தவுடன் வெந்நீரில் குளித்துவிடுவதாய் சொல்லி மனைவியை சமாதானப்படுத்தியவன், அதை தொடர்ந்து வந்த மழையற்ற நாட்களிலும் மனைவியின் அருகிலேயே மஞ்சம் கொண்டான்.

முன்பை போல மனைவி உறங்கும் வரை எல்லாம் அவன் காத்திருப்பதில்லை. எட்டு மாதங்களாய் அவளை விலகி இருந்த விரக தாபம் உள்ளிருந்து கொல்ல, ‘அச்சு… அச்சு… என் அச்சு…’ என்று புலம்பியபடியே அவளை உருட்டி உருட்டி அவளுள் கரைந்து போகிறான். 

மல்லிக்கு அவனின் இந்த முகம் புதிதாய் இருந்தாலும், கணவனின் கொஞ்சல் உள்ளத்தில் கிளுகிளுப்போடு பூரிப்பையும் அள்ளித்தர உளமார அந்த நொடிகளை ரசித்திருப்பாள் மல்லி. இன்றைக்கும் அப்படித் தான் வேட்கையான கூடலில் மனைவியை அசதியில் தள்ளியிருந்தவன், அவளை அணைத்து பிடித்தபடி படுத்திருந்தான்.  

அவள் முன் உச்சியில் அழுத்தமாய் முத்தம் ஒன்றை பதித்தவன், “தூங்காம என்ன யோசனை…?’’ என்றான். அவன் தோள் வளைவிற்குள் மேலும் நன்றாக புகுந்து கொண்டவள், “மகிழ் அப்பாவை புரிஞ்சிக்கவே முடில மாமா. அவ மேல அத்தனை பாசமா இருக்கார். ஆனா அவ விரும்புற வாழ்கையை அமைச்சி கொடுக்க மாட்டேங்கிறார். மகிழும் தலைகீழா நின்னு போராடிட்டு இருக்கா…! எப்ப அவங்க அப்பா ஒத்து வருவாரோ தெரியல.’’ என்றாள் கவலையுடன். 

மனைவியின் மீதான தன் நெருக்கத்தை மேலும் அதிகரித்தவன், “அதெல்லாம் அவங்க அப்பா இடத்துல நின்னு பார்த்தா தான் தெரியும். பொண்ணுக்கு அமையப் போறது ரெண்டாவது வாழ்க்கை. தன் கண்ணு முன்னாடி வளர்ந்த நல்ல பையன் கையில அவளை பத்திரமா ஒப்படைக்கணும்னு நினைக்கிறார். அதுல அவரை தப்பு சொல்ல முடியாது. அவங்க அப்பா இப்ப மட்டும் இல்ல… எப்பவும் உன் பிரண்ட் ஆசைக்கு ஓகே சொல்ல மாட்டார்.’’ என்றான். 

உடனே சிணுங்கிய மல்லி, “போ மாமா… நீ ஏதாச்சும் நல்ல யோசனை சொல்லுவன்னு உன்கிட்ட கேட்டேன். ஆனா நீ குடுகுப்பைக்காரன் குறி சொல்லிட்டு போற மாதிரி பேசிட்டு இருக்க.’’ என்றாள் கடுப்புடன். 

உடனே மனையாளின் மூக்கை பிடித்து திருகிய சுந்தர், “சும்மா சும்மா சிணுங்காதடி. மாமனுக்கு மூட் ஏறுது. ஒத்துக்கவே மாட்டார்னு தெரிஞ்சி அவங்க அப்பாகிட்டயே ஏன் கெஞ்சிட்டு இருக்கீங்க. பேசாம அவங்க அம்மா இல்ல அண்ணனுங்க மூலமா பேசி பார்க்கலாம் இல்ல.’’ என்றவன் உதட்டால் மனையாளின் கழுத்தில் கோலம் போட துவங்க, “அச்சோ மாமா காலைல சீக்கிரம் கிளம்பனும்…’’ என்ற மல்லியின் வார்த்தைகளை சுந்தரின் இதழ்கள் விழுங்கிக் கொண்டன. 

சுந்தர் அப்போது அறியவில்லை. தான் யோசனை கொடுக்கிறோம் என்ற பேர்வழியில் கன்னி வெடி ஒன்றின் திரியை பற்ற வைத்திருக்கிறோம் என. அது காலம் கடந்து வெடிக்கும் போது தன் மனதிற்கினிய மனையாளின் மனமும் சேர்ந்து அதிரப் போகிறது என்பதை. 

அந்த புதன் கிழமையின் விடியல் வெகு அழகாக இருந்தது. மாணவிகள் வண்ண வண்ண உடையில் பட்டாம்பூசிகளாய் சிறகடித்து கொண்டிருந்தனர். மகிழ்வின் அலை பொங்கி பிரவகித்து கொண்டிருந்தாலும் மென்மையான பிரிவாற்றாமையின் சோக நிழல் அங்கு படிந்து தான் இருந்தது. 

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்க விடை பெறும் மாணவிகள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் பிரியப் போகிறோம் என்று மாணவிகள் வருத்தத்தில் அமர்ந்திருக்க, அவர்களின் இளைய மாணவிகள் பல பல கலை நிகழ்சிகளை தந்து அவர்களை சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். 

மதிய உணவு முடிந்ததும், ஐவர் குழு கலை நிகழ்ச்சிக்காய் மேடை ஏறியது. பேராசியர் முதல், மாணவ, மாணவியர் வரை எதிர்பார்போடு அவர்களை நோக்கினர். நீள் வட்ட வடிவில் நின்று கொண்டவர்கள் கண்களை காட்ட ஒலிபெருக்கி அலறியது. 

‘இந்த ரெண்டு வருசம் கண்ணை மூடி கண்ணை திறக்குறதுக்குள்ள ஓடிப் போச்சு. நம்ம லைப்பை இந்த ரெண்டு வருசமும் ஒரு டைம் மிசின்ல ஏறி போய் பார்த்துட்டு வந்தா எப்படி இருக்கும். வாங்க முதல்ல நாம நர்சா இருதப்ப நம்மை வாழ்க்கை எப்படி இருந்ததுன்னு பார்த்துட்டு வரலாம்.’ என்ற மல்லியின் குரலை தொடர்ந்து, மேடையில் முழு செவிலிய சீருடை அணிந்த மாணவி  தோன்றினார். 

அவர் வேக வேகமாய் நோயாளிகளுக்கு சேவை செய்வதை போல நடித்து கொண்டிருக்க, பின்னணியில், ‘வேலை வேலை வேலை… ஆம்பளைக்கும் வேலை… பொம்பளைக்கும் வேல…’ என்ற அவ்வை சண்முகி பாடல் ஒலித்தது. 

ஐவர் குழு வேலை செய்யும் செவிலியை சுற்றி சுற்றி ஆடி வர அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. அந்த பாடல் ஒரு சில நொடிகளே தொடர, ஒலிப்பெருக்கியில் தற்சமயம் மகிழின் குரல் ஒலித்தது. 

இப்போது அவள் தன் வாயை அசைக்க, அக்குரலோ, ‘டே…டூட்டி… நைட் டூட்டி… புல் டூட்டி… டூட்டி மேல டூட்டி பார்த்து என் பியூட்டியே போயிடும் போல. எப்ப தான் இந்த போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி அப்ளிகேசன் தருவாங்களோ…?’ என அலுத்துக் கொள்ள, கீழே சிரிப்பு மழை.  

அடுத்து மதியின் குரல், ‘ஹே… போஸ்ட் பேசிக் அப்ளிகேசன் கொடுக்க ஆரம்பிசிட்டாங்களாம்…. கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்…’ என்று குதூகலிக்க, அதை தொடர்ந்து சங்கரியின் குரல், ‘சிங்கம் எப்போ சிங்கிளா போய் கிணத்துல விழுந்து இருக்கு. வாங்க இவங்க எப்படி துணைக்கு ஆள் சேக்குறாங்கன்னு பார்ப்போம்.’ என்றது. 

அந்த குரலை தொடர்ந்து ஒலிப்பெருகில், “டான் ட டான்டைன் … ட டட்டா டட்டா டான் டைன்… வரியா…. வரியா…’’ என்ற புதுகோட்டை படத்தில் தனுஷ் ஆடும் பாடல் ஒலிக்க, இவர்கள் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியதில் கீழே இருந்த மொத்த கூட்டமும் விசிலடித்து ஆடிக் கொண்டிருந்தது. 

அடுத்து சென்னையில் கலந்தாய்வு சென்றதற்கு, ‘மெட்ராசை சுத்தி பாக்க போறேன்…’ பாடலும், புரியாத பதிமூன்று பாடத் திட்டங்களை கண்டதும், ‘ஒண்ணுமே புரியல உலகத்துல பாடலும்…’ பரிட்சைக்கு படிக்கும் நாட்களுக்கு, ‘பார்த்தவிழி பார்த்தபடி பூத்து கிடக்க….’ என்ற பாடலும், பரீட்சை முடிவுகளுக்கு , ‘உன் குத்தமா… என குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல..’ என்ற பாடலும் சில நொடிகள் ஒலிக்க, அதற்கு தகுந்தபடி அவர்கள் மேடையில் உடல் அசைக்க, கீழே மொத்த அரங்கமும் சிரிப்பில் அதிர்ந்து கொண்டிருந்தது. 

இறுதியில், ‘ரெண்டு வருசம் போனதே தெரியல. இனி எங்க எப்படி மீட் செய்வோம்னு தெரியல. ஆனாலும் இந்த நட்பு நாம வாழும் காலம் வரைக்கும் நம்ம மனசுல அழகான நினைவுகளா தங்கி இருக்கும்.’ என்ற மல்லியின் குரல் ஒலிக்க, தோழிகள் ஐவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர். 

‘முஸ்தபா… முஸ்தபா… டோன்ட் வொரி முஸ்தபா…’ என்ற பாடல் ஒலிக்க, தோழிகள் ஒருவர் மற்றவரின் தோளில் கரம் போட்டு அசைந்து ஆட, அவர்களை போலவே ஒருவரின் மேல் மற்றொருவர் கைபோட்டு கொண்டு ஆடினர். 

பாடல் முடியவும் நிகழ்ச்சி முடிந்தது என்று தோழிகள் எண்ணியிருக்க, ‘ரொம்ப எல்லாம் பீல் பண்ணாதீங்க தோஸ்து. ஆடிப் போனா ஆவணி மாதிரி பி.எஸ்சி போனா எம்.எஸ்.சி. வாழ்க்கை ஒரு வட்டம். பிரிவோம்… சந்திப்போம்…’ என்ற மகிழின் குரல் ஒலிக்க, அதை தொடர்ந்து மதியின் குரல், ‘எம்.எஸ்.சி நர்சிங் அப்ளிகேசன் கொடுக்குறாங்களாம்’ என்று ஒலிக்க, ‘மெட்ராசை சுத்தி பாக்க போறேன்.’ என்ற பாடல் உச்சகட்ட டெசிபலில் அலறியது. 

மேடையில் இருந்த ஐவரும் சுற்றி சுற்றி குதூகலமாய் நடனமாட, அத்தனை நேரம் அவர்களை சூழ்ந்திருந்த மென் சோக வலை அறுத்து, மாணவர்கள் விசிலை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர். 

‘நன்றி வணக்கம்…’ என்ற குரல் ஒலிக்க ஐவர் குழு மேடை நீங்கினர். அவர்களை சுற்றி சூழ்ந்து கொண்ட அவர்கள் வகுப்பு மாணவிகள், “சான்சே இல்லடி… கலக்கிடீங்க… ஏய் கும்தலக்க கும்மாவா… பைவ் ஸ்டார்ஸ்னா சும்மாவா…” என்று வழக்கமாய் இவர்கள் சொல்லும் வார்த்தைகளை சொல்ல சூழ இருந்த கூட்டமும், “பைவ் ஸ்டாருக்கு ஒரு ஓ போடுங்கடி…’’ என உரக்க குரல் கொடுக்க, திருப்பி கேட்ட ‘ஓ…’ கல்லூரி தாண்டியும் எதிரொலித்தது. 

இப்படி பலரின் பாராட்டுகளை பெற்று, உற்சாக சுழலில் சிக்கி, இல்லம் திரும்ப இரவு எட்டு மணியாகியிருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் அவர்களுக்கு இணைய வழி கலந்தாய்வு இருந்தது. 

அது முடிந்ததும் தேர்வுகள் தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரை நடைபெற இருந்தது. இதோடு அனைவரும் வேறு வேறு பகுதிக்கு பணிபுரிய செல்ல நேரும் என்பதால் அன்றைக்கு தோழிகள் ஐவரும் மகிழின் வீட்டில் தங்கினர். 

ஒருவர் இருவர் என்றாலே வீடு கலகலத்து போகும். ஐவரும் ஒன்றாய் தங்கியதில், வீடு அமளி துமளியில் ரணகளப்பட்டது. பதிவு செய்து வைத்திருந்த நாடக ஒலிக்கோர்வையை ஒலிக்க விட்டவர்கள், மீண்டும் ஒருமுறை ஆடிவிட்டே ஓய்ந்தனர்.      

விருப்பமான உணவினை உண்டு அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் உருண்டு உறங்கும் நேரம் மல்லி, “ஏண்டி இன்னும் ஒருவாரத்துல எக்ஸாமும் முடிஞ்சிடும். உங்க அப்பாகிட்டயே கெஞ்சிட்டு நிக்காம உங்க அம்மாவை வச்சி பேசிப் பாருடி. இப்படியே பேசிப் பேசியே உனக்கு வயசாகப் போகுது.’’ என்றாள் மல்லி. 

“தூங்கு. எக்ஸாம் முடிச்சிட்டு அதையெல்லாம் யோசிக்கலாம்.’’ என்ற மகிழ், தோழியின் யோசனையை ஏற்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். 

உள்ளும், வெளியும் இரண்டற கலந்த தோழிகள் அப்போது அறியவில்லை, 2021 மார்ச் மாதத்திற்கு பிறகு இரண்டாம் அலையென உலகை புரட்டிப் போடும் கொரோனோ பேரலை, அவர்கள் கனவிலும் கண்டிராத பேரழிவுகளை நிகழ்த்தப் போகிறது என்பதை. 

பந்தமாகும்.     

          

 

Advertisement