Advertisement

பந்தம் – 20

“அப்பா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கப்பா. நீங்க நினைக்குற மாதிரி இது ஒன்னும் லவ் கிடையாது. அண்ணா பதிஞ்சி வச்ச மேட்ரிமோனியல் பாத்துட்டு வந்த ஒரு வரன். சேம் ப்ரோபசன்ல இருக்க ஒருத்தரை கல்யாணம் செஞ்சிகிட்டா என் லைப் நல்லா இருக்கும்னு தோணுது அப்பா. ப்ளீஸ் அப்பா…’’ என்று தன் தந்தையிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் மகிழ். 

ஒருநாள் இருநாள் அல்ல கடந்த இரண்டு மாதங்களாக அவளின் இந்த அறப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவள் தந்தையோ, ‘மணந்தால் மகா தேவி இல்லையேல் மரண தேவி’ என்ற திரைப்பட வசனம் போல, ‘கணியன் தான் உனக்கு ஏத்த மாப்பிள்ளை. மறுபடி வேத்து ஜாதிக்காரனை எல்லாம் திண்ணையில மாப்பிள்ளைன்னு உக்கார வைக்க முடியாது.’ என்று தயவு தாட்சண்யமின்றி மறுத்து கொண்டிருந்தார். 

2020 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் அது. அந்த மாத இறுதியோடு அவர்களின் கல்லூரி வாழ்க்கை முற்று பெற இருந்தது. கொரோனோ பரவல் காரணமாக, முதலில் இரண்டாம் வருட தேர்வு ரத்து என்றவர்கள், பின் இணைய வழி தேர்வு என்றுவிட்டு இறுதியில் நேரடித் தேர்வுகள் டிசம்பரின் பின் பகுதியில் நடக்கும் என்று அறிவித்து இருந்தார்கள்.

முதலில் சொன்ன இரு தகவல்களும் மாணவிகளை ஆனந்த கடலில் தள்ளி இருக்க, நேரடித் தேர்வு என்றதும், சட்டி கணக்கில் விளக்கெண்ணெய் குடித்ததை போல அவர்கள் முகம் சுருங்கிப் போனது. 

தேர்வு இருக்காது என்ற அலட்சியத்தில் பல மாணவிகள் புத்தகங்களை பரணில் ஓய்வெடுக்க அனுப்பி இருந்தனர். மறுபடி நேர்முக தேர்வு என்று அறிவித்த நாளில் இருந்து, வாலில் தீப்பற்றிய குரங்கை போல, “ஐயோ… இங்க தான என் மென்டல் ஹெல்த் நோட்ஸ் இருந்தது. கம்யூனிட்டி ஜெராக்ஸ் இதுல தான வச்சிருந்தேன்.’’ என பரபரவென தேடித் திரிந்தனர். 

ஐவர் குழு மட்டும் இந்த அலப்பறைகள் எதிலும் கலந்து கொள்ளாது, நாயை தொலைத்த தேவதாசை போல சோக கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இன்னும் இருபது நாட்களில் தங்களின் இரண்டு வருட கல்லூரி வாழ்வு முற்று பெறப் போகிறது என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. 

கொரோனோ பரவல் சற்றே மட்டுப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கல்லூரி முடிந்ததும் கல்யாணம் என்று மகிழை பெற்றவர் நிற்க, அவளோ பெற்றவரோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தாள். 

“அப்பா…’’ மகிழ் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் அழைப்பை துண்டித்து விட, ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் அலைபேசியை மேஜையில் வைத்துவிட்டு படுக்கையில் சென்று விழுந்தாள். 

கடந்த ஒரு மாதமாக அவளுக்கும் மாறனுக்கும் வாக்குவாதமாய் தொடங்கும் விவாதம் இறுதியில் சண்டையில் தான் சென்று முடிகிறது. தினமும் அவள் அலைபேசிக்கு அழைப்பவன், “உங்க அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியா…? எங்க வீட்ல இருந்து பேச வர சொல்லவா..?’’ என்று கேட்கும் போதெல்லாம், “அப்பா இன்னும் ஒத்துக்கலை’’ என்று தேய்ந்த ஒலிநாடாவை போல அவள் ஒரே பதிலை திருப்பி சொல்ல மாறன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தான். 

இதே தினம் வாடிக்கையாகிவிட, “இப்ப என்ன செய்றது…?’’ என ஒரு கோபத்தில் கேட்டு விட்டிருந்தாள் மகிழ். “உங்க அப்பா சம்மதிக்காம நம்ம கல்யாணம் நடக்காது. என்னோட பர்ஸ்ட் மேரேஜ் பொண்ணு வீட்டு பக்கம் சம்மதம் இல்லாம தான் நடந்தது. அதனால தான் எங்க வாழ்க்கை நல்லா அமையலை அப்படிங்கிற வருத்தம் ஆழமா அம்மா மனசுல பதிஞ்சி போச்சு.’’ என்றான் மாறன் இயலாமையோடு. 

தினம் தன் தந்தையின் குரலில் கூடும் உறுதியை நெஞ்சுக் கூடு அடைக்க உணர்ந்தவள், ‘சப்போஸ் அப்பா சம்மதிக்கவே இல்லைனா…?’’ என்று உள்ளம் பதற கேட்டாள். 

“எனக்காக உன் லைப்பை நீ ஸ்பாயில் செய்ய வேண்டாம். உங்க அப்பா பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சிட்டு நிம்மதியா இரு.’’ என்றான் மாறன் குரல் அடைக்க. 

“அப்போ… உங்க வீட்ல பாக்குற பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சிட்டு குதூகலமா இருக்க போறீங்க. அப்படித்தானே…?’’ என்றவள், “பொண்டாட்டி… போண்டா டீன்னு கொஞ்சுனது எல்லாம் பொய்…’’ என்றவள் அலைபேசியை வேகமாய் துண்டிக்க, அன்றைய இரவு முழுக்க அவளை கொஞ்சி கொஞ்சி செய்தி அனுப்பி மகிழை மலை இறக்குவான் மாறன். 

‘இன்னைக்கு நைட் அவர் கால் செய்யும் போது மறுபடி அப்பா சம்மதிக்கலைன்னு சொன்னா என்ன எல்லாம் பேசப் போறாரோ…’ என்று மகிழ் தலையில் கை வைத்து அமர்ந்து கொள்ள, அவள் அலைபேசி சிணுங்கி அவளை அழைத்தது. 

ஒரு சலிப்புடன் அவள் அலைபேசியை ஏற்க, மறுபுறம் மல்லி,  “மகிழ்… நம்ம பேர்வெல் பார்ட்டிக்கு டீன் ஓகே சொல்லிட்டாங்கடி. வர புதன் கிழமை நமக்கு பேர்வல் பார்ட்டி. நீ ஒன்னு செய். சீக்கிரம் கிளம்பி நம்ம ரேணு, சங்கரி ரூமுக்கு வா.’’ என்றவள் அலைபேசியை துண்டித்து விட, இப்போதிருக்கும் மன நிலையை மாற்ற அந்த சந்திப்பு அவசியம் என்பதை உணர்ந்தவள் வேகமாய் கிளம்பி தோழிகளை காண சென்றாள். 

சங்கரியும், ரேணுவும் தற்சமயம் கல்லூரிக்கு அருகில் ஒரு அறை பார்த்து தங்கி இருந்தனர். மகிழ் கல்லூரிக்கு எதிரில் இருந்த அவர்கள் அறைக்குள் நுழையும் போது, அங்கிருந்த மின்சார அடுப்பில் மதி அனைவருக்கும் காபி கலந்து கொண்டிருந்தாள். 

சங்கரி ஆம்லேட் போட வெங்காயங்களை நறுக்கி கொண்டிருந்தாள். தற்சமயம் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி நிர்வாகம் பின்பற்றுவதால், கல்லூரிக்குள் அனைத்து மாணவிகளும் ஒரே சமயத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால், வெளியே இருக்கும் மரத்தடியில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக வந்து குறிப்பேட்டில் கையெழுத்து வாங்கி செல்லவும், விடுதி வாயிலில் அமர்ந்து படிக்கவும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

‘கடைசியா போனா போதாது’ என்ற மனநிலையில் இருந்த ஐவர் குழு சங்கரி, ரேணுவின் வீட்டில் குழுமி விட, மகிழ் மட்டும் தாமதமாய் வந்து இணைந்து கொள்வதாய் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு சென்றிருந்தாள் தனிமையில் தந்தையுடன் பேசி வர. 

மல்லி இவர்களின் நிறைவு விழா நிகழ்ச்சிக்காக கல்லூரி முதல்வரை சந்திக்க சென்றிருந்தாள் சங்க தலைவியாய். முதல்வர் அனுமதி கொடுத்த விசயத்தை கல்லூரி பேராசிரியர்களிடம் தெரிவித்து விட்டு, முன்னேற்பாடுகள்  குறித்து நடந்த ஆலோசனையிலும் கலந்து கொண்டவள், அதன் பிறகே அறைக்கு வந்தாள். 

அப்போது தான் சூடாக தவாவில் வெந்து கொண்டிருந்தது  ஆம்லேட். அதை சுட்டுக் கொண்டிருந்த மதியின் அருகில் அமர்ந்தவள், “மதினா பீவியார் வாழ்க வாழ்க…’’ என குரல் கொடுக்க, “எவ்ளோ வாழ்க கோசம் போட்டாலும்… ஆளுக்கு ஒன்னு தான். போய் கை கழுவிட்டு வா எரும” என்றாள். 

“என் வாழ்க வீணாப் போச்சே” என்று புலம்பியவள் கை கழுவி  விட்டு வந்து அமர்ந்தாள். தட்டில் ஆளுக்கு ஒரு ஆம்லேட் வைத்து கொடுத்த மதி, சூடான காபியையும் பரிமாற, மல்லி நைசாக ரேணுவின் தட்டிலிருந்து ஒரு ஆம்லேட் துண்டை லவட்ட பார்த்தாள். 

“மொதோ உன் தட்ல இருக்குறதை தின்னு எரும.’’ என அவள் திட்ட உடனே மகிழ் தன் தட்டில் இருந்து கொஞ்சம் பெரிய துண்டாக பிய்த்து மல்லியின் வாயருகே கொண்டு சென்றாள். “சும்மா அவளை வம்புக்கு இழுத்தேன். நான் ஒன்னு திங்குறதே பெருசு. நீ சாப்பிடு.’’ என்றாள் மல்லி. 

“புடுங்கி தின்னா தான் உன் தொந்தி நிறையும்னு எனக்கு தெரியும். மூடிட்டு வாய திற.’’ என்றாள் உத்தரவிடும் தொனியில். தோழி கொடுத்ததை வாங்கி கொண்டவள், தன் பங்கில் அவளுக்கு ஊட்ட, உடனே மற்றவர்களும், ‘நானும் நீயி’ என்று போட்டி போட்டு ஊட்டி யார் தட்டில் இருந்த ஆம்லேட் யார் வயிற்றில் தஞ்சம் புகுந்தது என்று கண்டறிய முடியாத வகையில் உண்டு முடித்தனர். 

சூடான காபியும் உள்ளே செல்ல, அதன் பிறகே நால்வருக்கும் பார்வை தெளிவானது. மருத்துவமனையில் இப்போதெல்லாம் இவர்களே அதிக நேரம் பணி புரிய நேர்வதால் வந்த உடல் சோர்வு அது. 

“அப்புறம் உங்க டீன் என்ன சொன்னாங்க.’’ என்று மதி பேச்சு வார்த்தையை துவக்கி வைத்தாள். சற்று நேரம் நடக்கப் போகும் நிறைவு விழா குறித்து உரையாடி கொண்டிருந்தார்கள். இறுதியில் மல்லி, “இன்னும் ஒன் வீக்ல நமக்கு ஆன்லைன் கவுன்சிலிங் இருக்காம். எத்தனை ஊர் வேகன்ட் காட்டுவான்னு தெரியல. நிறைய புது டிஸ்ட்ரிக் எல்லாம் மெடிக்கல் காலேஜ் ஆகியிருக்கு. எங்க போய் சிக்கப் போறோமோ.’’ என்றாள் பிரிவின் ஆற்றாமையோடு. 

சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது. திடீரென நியாபகம் வந்தவளாய் சங்கரி, “ஏண்டி அப்பாகிட்ட பேசுனியா. ஓகே சொல்லிட்டாரா…?’’ என ஆர்வமாய் கேட்டாள். மகிழ், மாறன் விசயம் தோழிகளும் அறிந்த கதை. 

“எங்கடி… அவர் அதே பழைய புராணத்தை தான் பாடிட்டு இருக்கார். எங்க அண்ணன்களும் ஒருமுறை அப்பாவை எதிர்த்து நின்னு உன் வாழ்க்கை வீணா போச்சு. கொஞ்சம் பொறுமையா இருன்னு சொல்றாங்க. மாறன் வீட்ல வேற அவரை கல்யாணத்துக்கு அவசரப்படுத்திட்டு இருக்காங்க. எனக்கு என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியல.’’ என்றாள் வருத்தமாய். 

“சரி விடு. நடக்கும் போது எல்லாம் நடக்கும்.’’ என்று ரேணு ஆறுதல் சொல்ல, “ஆமா இவ நேத்து தான் சமஞ்சி குச்சிகுள்ள போனா… நாம பொறுமையா கல்யாணம் பேச. முப்பதை தாண்டி வயசு ஓடிகிட்டு இருக்கு. இனி எல்லாம் டைம் வேஸ்ட் செய்ய கூடாது. நீயும் மாறா அண்ணாவும் கலந்து பேசி சட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.’’ என்றாள் மதி கோபமாய். 

“மதி சொல்றதும் சரிதான். பத்து வருசத்துக்கு முன்னாடி நீ முன் யோசனை இல்லாம செஞ்ச தப்பை வச்சி இன்னும் உன்னை கணிக்க கூடாது. அதுவும் இந்த முறை தெளிவா அவரை பத்தி வீட்ல சொல்லியாச்சு. சந்தேகம் இருந்தா உங்க அண்ணன்களை வச்சி விசாரிச்சி பார்த்துட்டு கூட உங்க அப்பா சம்மதம் சொல்லலாம். அதை விட்டுட்டு இப்படி சும்மா சாதிக்காரன், சனத்துக்காரன்னு பாடின பாட்டையே பாடிட்டு இருக்க கூடாது.’’ என்றாள் சங்கரி.  

Advertisement