Advertisement

அப்போது தான் வீட்டிற்கு ஒரு அலைபேசி முளைத்து கொண்டிருந்த காலமது. அலைபேசியை எடுத்ததவன் சீனு. சுந்தர், “டேய் போனை அக்காகிட்ட போய் கொடுடா…’’ என சொல்ல, அக்காவின் அறைக்குள் நுழைந்தவன் அவள் குளியலறையில் இருப்பதை கண்டு, “அக்கா… மாமா பேசணுமாம்.’’ என்று பெயர் சொல்லாது குளியலறை கதவை தட்ட, “ஒரு நிமிஷம் சீனு. ட்ரஸ் மாத்திட்டு இருக்கேன். நீ போனை டேபிள்ல வச்சிட்டு போ. நான் எடுத்து பேசுறேன்.’’ என குரல் கொடுக்க, அதை தன் மாமனிடம் மொழி பெயர்த்தவன், அலைபேசியை மேஜை மேல் வைத்துவிட்டு சென்றுவிட்டான். 

தன் அச்சுமா வந்து அழைப்பை ஏற்பாள் என்று காத்திருந்தவன் காதில், சீதையின் தங்கை யசோதையின் குரலே செவி அடைந்தது. “மல்லிக்குட்டி…’’ என்று அவர் குரல் கொடுக்க, “யசோ சித்தி…’’ என்று ஆர்வமாய் வெளியே வந்தவள் வெளியே அவளுக்காய் காத்திருந்த அலைபேசியை மறந்து போனது விதியின் செயலானது. 

இருவரின் நல விசாரிப்புகள் முடிந்த பின், “ஆனாலும் கோமு மாமா உன்னை மோசம் செஞ்சிட்டார் மல்லி. அப்படி என்ன நில புலன் இல்லாத ஆளுக்கு உன்னை தூக்கிக் கொடுக்கணும்னு இருக்கு. உனக்கு அழகு இல்லையா…?படிப்பு இல்லையா…? இல்ல சொத்து பத்து தான் குறைச்சலா…? எல்லாம் இருந்தும் எதுக்கு இப்படி ஒரு சம்மந்தத்துல உன்னை தள்ளிவிடுறாங்கன்னு எனக்கு புரியல. என் அக்காகாரி இடத்துல நான்லாம் இருந்தா நடக்குறதே வேற.’’ என்றார் கடுப்புடன். 

தன் நாத்தனார் வீட்டுக்கு அவளை கொடுக்கவில்லை என்ற வருத்தத்தை அவர் வார்த்தையில் வெளிபடுத்த, அலைபேசியின் வழி அதை கேட்டுக் கொண்டிருந்த சுந்தரின் முகம் கடுமையாய் இறுகியது. 

யசோதையின் மேல் மல்லிக்கு எப்போதும் அளப்பரிய பாசம். சிறுவயதில் அவளை தூக்கி வளர்த்தவர் என்று. ஆக அவர் மனம் நோகாமல் பதில் சொல்ல விரும்பி, “நீ என்ன சித்தி நாட்டு நடப்பு தெரியாம பேசிட்டு இருக்க. இன்னைக்கு தேதியில வெளி சம்மந்தம் முடிச்சா சீரே எக்க சக்கமா கேப்பாங்க. அதோட மாப்பிள்ளை வீட்டு கெத்துக்கு நாம தலையாட்டிட்டு நிக்கணும். இதே இவருன்னா அப்பாவை பார்த்தாலே எழுந்து நிப்பாரு. பாரி அத்தையும் அப்பா செஞ்ச உதவிக்கு காலம் முழுக்க நன்றி மறக்காம என்னை நல்லா பார்த்துப்பாங்க.” என்றதும், யசோ, “அதுக்காக…?’’ என கேள்வி கேட்டு அக்கா மகளை மடக்க முயன்றார். 

‘இன்னும் பேசணுமா’ என மனதிற்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டவள்,  “அதை விட முக்கியமான விஷயம் ஒரு சுவத்தை தாண்டினா அம்மா வீடு. பேருக்கு அங்க ரெண்டு நாளை கடத்திட்டு மீதி நாள் முழுக்க அம்மா வீட்ல டேரா போடலாம். அதோட பிள்ளை குட்டின்னு வந்ததுன்னு வையி… எங்க ப்ரோபசன்ல நேரக் கணக்கு கிடையாது இல்லையா. அதை பார்த்துக்க நல்ல ஆள் வேணும். இந்தப் பக்கம் அம்மா, அந்தப் பக்கம் பாரி அத்தை. நான் ஜாலியா இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு ஜாப் ரெகுலர் ஆகும். கை நிறைய சம்பளம். இதே உன் நாத்தனார் பையனுக்கு நான் வாக்கப்பட்டு போனா அவங்க என் சம்பளத்தை நுனி முறியாம வாங்கி வச்சிப்பாங்க. அதே பாரி அத்தை வீடுன்னா எல்லாம் என் ராஜ்ஜியம் தான். நாள பின்ன நம்ம சுபி வயசுக்கு வந்தா அக்கான்னு நான் நாலு பவுன்ல சங்கிலி எடுத்து போடுவேன். அந்த உரிமை எனக்கு உன் நாத்தனார் வீட்ல கிடைக்குமா…?’’ என கேட்க, யசோவோ, “எல்லாம் சரி தான்….’’ என இழுக்க, ‘இன்னுமா’ என்று நொந்து போனாள் மல்லி. 

ஒரே வார்த்தையில் யசோவை மடக்க எண்ணி, “அப்பாகிட்ட கை கட்டி நின்னவர் என் கழுத்துல தாலி கட்டினா தான் என் வாழ்க்கை என்கிட்டயே இருக்கும். அதோட அவர் அவங்க வீட்டுக்கு ஒத்தை மகன், அவங்க பக்கம் சொந்த பந்தம்னு யாரும் இல்லாம நம்ம வீட்டை அண்டி வாழ்ந்தவங்க. உனக்கு புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன். இதுக்கு மேல எதிர்மறையா பேசாத சித்தி ப்ளீஸ்…’’ என தன் முத்து பல் சிரிக்க, “சரிடி கல்யாணப் பொண்ணு. நீ சொன்னா சரி தான்.’’ என்ற யசோ தன் தமக்கையின் குரல் கேட்க எழுந்து போனார். 

அப்போது தான் மல்லி மேஜை மீதிருந்த அலைபேசியை பார்த்தாள். ‘எந்த மாமா போன் போட்டு இருப்பாங்க…’ என்ற சிந்தையோடு அலைபேசியை காதில் வைக்கவும் அது துண்டிக்கப்பட்டிருக்க, ‘மறுபடி கூப்பிட்டா பேசுவோம்.’ என நினைத்து கொண்டவள், அரைத்து வைத்திருந்த மருதாணியை கைகளில் இட்டுக் கொள்ள தொடங்கினாள். 

அலைபேசியை துண்டித்து விட்டு நிமிர்ந்த சுந்தரின் கண்களில் இயலாமையின் கண்ணீர் குளம் கட்டியிருந்தது. “அவ அம்மா என்னை ஏன் வேணாம்னு பேசினாங்களோ அதே காரணம் தான் இவளை வேணும்னு சொல்ல வச்சிருக்கு. ஆக மொத்தம் ரெண்டு பேர் இரத்தமும், எண்ணமும் ஒன்னு தான். இங்க முட்டாள் நான் தான். அவங்களை பொறுத்தவரை நான் அவங்க வீட்டை அண்டிப் பிழைக்க வந்தவன். ஒண்ணுமில்லாதவன். அவங்க கொடுக்குறதை கைநீட்டி வாங்கிக்கப் போற யாசகன்.’ என எண்ணி எண்ணி மௌனமாய் அழுகையில் கரைந்தவன், மறுநாள் இறுக்கமான மணமகனாய் நிச்சயத்தை எதிர் கொண்டான். 

அழுத கண்ணீர் தடத்தோடு அவள் மீதான காதலையும் உள்ளுக்குள் புதைத்து கொண்டவன், அவள் எண்ணத்திற்கு ஏற்ப ஆடும் கணவனாய் ஒரு போதும் தான் இருக்க கூடாது என்ற முடிவினை உள்ளுக்குள் உறுதியாய் எடுத்துக் கொண்டான். 

மாப்பிள்ளை திமிரை வெளிப்படையாய் காட்டினான். கோதண்டத்திடம் ஓரிரு வார்த்தைகள் பேசுபவன் அவளின் மற்ற சொந்தங்கள் பேசினாலே குரல் இறுக பதில் கொடுத்தான். திருமணம் முடிந்து மறுவீட்டிற்கு அழைத்த போது, ‘கல்லூரியில் பணி இருக்கிறது’ என்று மறுத்தான். 

‘ஒத்த சுவர்ல என்ன வேத்துமை’ என்று அவன் தாய் தான் சமாளிக்க வேண்டியதாயிற்று. திருமணம் முடிந்த இரவே, அவளின் ஏ.டி.எம் கார்டை, கேட்டு வாங்கியவன், அதை மறுபடி அவளிடம் கொடுக்கவே இல்லை. 

ஒருவாரம் வரை அவளை தள்ளி தான் வைத்திருந்தான். ஆனால் ஒரே வீட்டிற்குள் அவள், அவன் கட்டிய தாலி சுமந்து உரிமையாய் வலம் வர, இருளின் போர்வையில் அவளை நெருங்கினான். ‘புகுந்த வீடே என் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்’ என்று பேசிய மல்லியா இவள் என்று அவனே வியந்து போகும் அளவிற்கு மல்லி வெள்ளந்தியாய் தான் இருந்தாள். 

ஆனாலும் அவள் பேசிய வார்த்தைகள் அவனை உள்ளிருந்து கொல்ல, அவளை உதாசீனப்படுத்துவதின் மூலமே தன் வலிகளுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அதில் அவன் அறியாத உண்மை, அவளுக்கு வலித்தால் அதை விட இருமடங்கு அவனுக்கு வலித்து தொலைத்தது. 

என்னதான் அவளை  உதாசீனம் செய்து வலிக்க வைத்தாலும் அவள் தேவைகளை அவள் அறியும் முன் அறிந்து கவனித்து கொள்வான். அவளுக்கு ஒன்றென்றால் அவள் தாயை விட பதறிப் போவான். மருமகன் சிடு சிடு என்று வெளியில் திரிந்தாலும் அவன் தன் மகளை கவனிக்கும் பாங்கில் சீதை அமைதி கொண்டார்.

இந்நிலையில் இவன் விலகி போக மல்லியோ தன் அத்தையோடும், குழந்தைகளோடும் ஒன்ற தொடங்கிவிட்டாள். அவள் சம்பள பணத்தையே அவள் கையில் கொடுக்க கூடாது என்ற உறுதியில் இருந்த சுந்தர், அவ்வப்போது தன் பணத்தை சீனுவின் கரத்தில் கொடுத்து, அதை மனைவியிடன் சேர்ப்பான். 

அவளின் பத்து ஆண்டு ஊதியமும், சேமிப்பாகவும், தங்க நாணயங்களாகவும் உருமாறி வங்கி கணக்கில் உறங்கிக் கொண்டிருப்பதை மல்லி அறியாள். இவன் தான் முதலில் மல்லியை ஒதுக்கி வைத்தான் என்பதை மறந்து, அவள் பாரியை நாடும் போதெல்லாம் அவனுள் தாறு மாறாய் கோபம் கொப்பளிக்கும். 

‘அவளுக்கு நான் புருசனா.இல்ல எங்க அம்மா புருசனான்னு தெரியல.’ என்று உள்ளுக்குள் குமைந்து போனாலும் வெளியே அதை எள் முனை அளவும் காட்டாது, ‘நீ எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல’ என்பதை போல கடந்து விடுவான். 

மல்லி தன் ஊதிய பணத்தை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்திருந்தாலோ, அல்லது அவள் அன்னையின் வீட்டில் சென்று அங்கேயே தங்கியிருந்தாலோ சுந்தர் உடைந்து போயிருப்பான். ஆனால் அவளோ ‘இது தான் என் வீடு’ என்று கணவன் வீட்டில் ஒட்டிக் கொண்டவள், தாய் வீட்டில் செல்லமாய் வளர்ந்திருந்தாலும் தன்னால் இயன்ற வேலைகளை செய்தாள். 

பிரசவ சமயத்தில் கூட தாயின் வீட்டிற்கு சென்று தங்கவில்லை. சீதையை தன் வீட்டிற்கு வந்து குழந்தைகளை குளிப்பாட்ட வைத்தாள். அதோடு அந்த நேரம் மூத்த மகனின் திருமண வேலைகள் காத்திருக்க, சீதையும் அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை.       

ஆகையால் சுந்தர் வெளியே எத்தனை முறைத்து திரிந்தாலும் உள்ளுக்குள் அவள்பால் பித்தாகிப் போனான். அவள் வாசம் அருகில்லாத நாட்களில் நித்திரா தேவி அத்தனை சீக்கிரம் அவனை அணுகி விட மாட்டாள். 

அவளோடு அன்யோன்யமாய் வாழும் வாழ்வை பல வருடங்கள் கனவு கண்டு லயித்திருந்தவன், அந்த ஏக்கத்தை எல்லாம் தனக்கும் போட்டு பூட்டிக் கொண்டு, சாதா அவளை முறைக்கும் முசுட்டு கணவனாகவே வலம் வந்தான். 

‘அன்னைக்கு எப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சி பேசினா. காதல் இல்லாம வெறும் பிரதி உபகாரத்துக்கு வந்த புருஷன் எப்படி இருப்பான்னு அவளுக்கு தெரியட்டும்.’ என்று மனதிற்குள் கறுவி கொள்பவன், இறுக்க முகமூடியை கொஞ்சமும் தளரவிடாது அணிந்து கொண்டான். 

இப்போது கொரோனோ முதல் அலையில், ‘என் மனைவி பத்திரமாய் இந்த கொல்லை வியாதியை வென்று ஆரோக்கியமாய் இருந்தால் போதும்’ என்ற எண்ணத்தில் இருப்பவன், வாரி சுருட்டப் போகும் இரண்டாம் பேரலையில், ‘எனக்கு என் அச்சுமா வேணும்.’ என்று புலம்பி அழ போவதை அப்போது அறியவில்லை. 

பந்தமாகும்.

 

Advertisement