Advertisement

பந்தம் – 19 

‘கொரோனோ காலத்தில் விடுமுறை கிடையாது. மகிழுந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.’ இப்படி சிந்தையில் உதித்த அத்தனை பொய்களையும் சொல்லி நடக்கவிருந்த நிச்சய உறுதியை தடுத்திருந்தாள் மகிழ். 

எட்டு மாதங்களுக்கு முன் அவள் தந்தை அவளிடம் மீண்டும் பேச துவங்கிய அன்றே, “இதையே யோசிச்சு வாழ்கையை வீண் செஞ்சிடக் கூடாது பாப்பா. உன் படிப்பு முடிஞ்சதும் உனக்கு நம்ம சொந்தத்துல நல்ல பையனா பார்த்து அப்பா முடிச்சி வைக்குறேன். இந்த ஒருவாட்டியாச்சும் அப்பா பேச்சை கேளு.’’ என்றார். 

அப்போதைக்கு தந்தை பேசிய மகிழ்வில் இருந்தவள் இனி ஒருநாளும் தந்தையின் சொல்லை மீறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அதே போல ஆறு மாதங்களுக்கு முன்பே, கணியனை இவளுக்கு மாப்பிள்ளை கேட்கப் போவதையும் அவளிடம் தெரிவித்து விட்டே அவர் சம்மந்தம் பேச முயன்றார். 

அந்த நேரம் இவள் மனதும் நிர்மலமாய் இருக்க, அவள் தலை சம்மதமாய் அசைந்திருன்தது. அன்றைக்கு இரவே கணியன் மகிழிடம் குறுஞ் செய்தியில்  பேசினான். “நீங்க வெறும் டிப்ளோமா தானா…? நைட் டியூட்டி அடிக்கடி போடுவாங்களா…? இப்ப உங்க சேலரி என்ன..?’’ இப்படி அவன் கேட்ட எந்த கேள்விகளுமே அவளுக்கு உவப்பானதாய் இல்லை. 

அவனுக்கு மேல் அவன் தமக்கைகள், “உங்க வீட்டுக்காரர் கூட ஏன் டைவர்ஸ் ஆச்சு…? எட்டு வருசம் வாழ்ந்தும் ஏன் குழந்தை இல்ல…?’’ என கேட்டு வைக்க, மகிழின் உள்ளத்தில் தான் என்ற திமிரான திடம் அதிரடியாய் வெளி வந்தது. 

நேராக தன் தந்தைக்கு அழைத்தவள், “அப்பா… இதெல்லாம் சரியா வரும்னு தோணல. நீங்க வேற வரன் பாருங்கப்பா.’’ என்றாள் உள்ளத்தை மறையாது. ஆனால் அவள் தந்தையோ, “ஏலே நீ சும்மா கட. அவன் நான் பார்த்து டவுசர் போட்டு விட்ட பய. என் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச மாட்டான். இதெல்லாம் உனக்கு ஒன்னும் புரியாது. நீ பேசாம கிட.’’ என்றுவிட்டார். 

அதற்கடுத்து அவர்களிடமிருந்து எவ்வித அழைப்பும் இல்லாதிருக்க, மகிழ் அந்த சம்பவத்தையே மறந்திருந்தாள். நடுவில் கொரோனோ கதக்களி ஆட, மாதம் ஒருமுறை ஊருக்கு சென்று வருபவள், அந்த பயணமும் தடைபட்டு விட ஊரில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் போனாள். 

இதற்கு இடையில் தான் மாறனின் அறிமுகம் அவளுக்கு கிட்டியது. தன்னை போல துயரப்பட்ட ஜீவன் என்ற எண்ணமே அவனின் பால் அவளை ஈர்த்தது. தனக்கு மீண்டும் ஒரு வாழ்வு அமைய முடியும் என்றால், அதை தன்னையொத்த ஆணாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அப்போதே மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள். 

கன்னியாய் அடியெடுத்து வைத்த முதல் திருமண வாழ்விலேயே கணவன் வார்த்தைகளால் சூடு வைத்திருக்க, தன்னுடன் முதல் திருமணம் என்ற நிலையில் வாழ்வில் இணையும் வாழ்க்கை துணையின் மீது அவளுக்கு பூதாகரமான அச்சம் தோன்றியிருந்தது. 

அந்தரங்க நேரத்தில் மீண்டும் மணாளன் மகுடன் சூடுபவன் வார்த்தை அமிலத்தால் தன் நெஞ்சை பொசுக்கிவிட்டால் அந்த வன் சொற்களோடு தன்னால் அவனோடு இயல்பாக பொருத்தி வாழ முடியுமா…? அப்படி மூச்சு திணறி வாழ முடியாது மீண்டும் விடுதலை வேண்டி நீதிமன்றத்தை அணுகினால் இந்த கேடு கெட்ட சமூகம் பெண்ணான என்னை தானே பழிக்கும்.

இப்படி பல விதமான எண்ணங்கள் அவளில் முட்டி மோத கணியனை தன்னால் மணக்க முடியாது என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள் மகிழ். நிச்சயத்தை நிறுத்தி இருந்தாலும் தற்சமயம் நின்றிருந்த அழைப்புகள் மீண்டும் ஆரம்பித்திருந்தன. 

ஆனால் அதில் முன் போன்ற குத்தல் பேச்சுக்கள் இல்லை. பெண் திருமணத்திற்கு சம்மதித்து விட வேண்டுமே என்ற ஆவல் மட்டுமே வெளிப்பட்டது. இதற்கு என்ன காரணமாய் இருக்கும் என்று மகிழ் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அந்த குட்டும் வெளிப்பட்டது. 

கொரோனோ பேரிடரில் இவர்களின் வியாபாரம் பாதித்து விட, எப்போதும் நின்று போகாத நிலையான வருவாய் அரசு ஊழியத்தில் மட்டுமே சாத்தியம் என்று உணர்ந்தவர்கள், இரண்டாம் திருமணம் என்ற ஒவ்வாமையை எல்லாம் புறம் தள்ளிவிட்டு மீண்டும் பெண் கேட்டு வந்து நின்றனர். 

அந்த செய்தியை அவளுக்கு அறிவித்ததே அவள் தாய் தான். “என்னம்மா சொல்ற…?’’ என மகிழ் அதிர்ந்து போய் கேட்க, “ஆமான்டி. அந்த சரோஜா வீட்டுப் பக்கம் தான் நம்ம சுசி சித்தி இருக்கா. வியாபாரம் நொடிஞ்சி ரொம்ப நட்டமாயிட்டாம். உங்க அப்பா என்ன பொண்ணை சும்மாவா தூக்கி தருவாரு. எப்படியும் சீரோட, முழுசா உன் வருமானமும் இனி வரும் இல்ல. அதனால தான் அவங்க அக்கா மக சம்மந்த தட்டை தூக்கிட்டு வாசல்ல வந்து நின்னா…!’’ என்றார் காட்டமாய். 

ருக்மணிக்கும், மாயக்கண்ணனின் உறவுகளுக்கும் கொஞ்சம் கூட ஒத்து வராது. அவருக்கும் மகள் வாழ்வு மலர தான் வேண்டும். ஆனாலும் மகள் மனதில் அவர்கள் நல்லவிதமாய் படிவதை அவர் விரும்பவில்லை. 

இந்த திருமணம் நடந்தாலுமே, அவர்கள் எண்ணம் என்ன என்பதை மகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவர் வாசலில் திருஷ்டி பூசணி உடைப்பதை போல மகளிடம் உண்மையை உடைத்துவிட்டார். 

அதில் மகிழின் மனம் மொத்தமாய் சுருண்டது. தனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்காய் சோதனை என நொந்து போனவள், வெகு நேரம் பூஜை அறையிலிருந்த சாய்பாபவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

அன்றைக்கு மாறன் வழக்கம் போல செய்தி அனுப்ப, அவனுக்கு அழைத்து பொதுவாய் பேசிக் கொண்டிருந்தவள், “அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க.’’ என்றாள் பொதுவாய். மறுபுறத்தில் சற்று நேரம் மௌனம். 

மகிழ் மீண்டும், “ஹெலோ…’’ என குரல் கொடுக்க, “வாழ்த்துகள்’’ என்றான் வெறுமையாய். “நான் இன்னும் சம்மதிக்கலை. அதுக்குள்ள ஏன் உங்க வாழ்த்தை வீண் செய்றீங்க..?’’ என்றாள் மகிழ் கோபமாய். 

உடனே, “ஓ…’’ என்றவனின் குரல் சற்றே சமன்பட்டிருக்க, “எப்போ என்னை பொண்ணு கேக்கப் போறீங்க…?’’ என்றாள் மகிழ் அதிரடியாய். “ஹெலோ…. என்ன…’’ மாறன் மறுபக்கம் திணறிக் கொண்டிருக்க, “புரியலைனா மறுபடி சொல்றேன். எப்போ என்னை உங்க பொண்டாட்டி ஆக்கிக்கப் போறீங்க…?’’ என்றாள் உறுதியுடன். 

“மகிழ்…’’ என்றுவிட்டு மீண்டும் மாறன் அமைதியாயிருக்க, “சாரி. என்ன இருந்தாலும் நீங்களும் ஒரு ஆம்பிளை தானே. செகன்ட் மேரேஜ்னா கூட உங்களுக்கு புத்தம் புதுசா ஒரு பொண்ணை தானே பார்ப்பாங்க. அதோட கவர்மென்ட் வேலை. குட் லுக்கிங் பர்சன். நான் ஏதாச்சும் அதிகப்படியா பேசி இருந்தா சாரி.’’ என்றதும் அலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 

மகிழ் இயலாமையுடன் அந்த அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க, காணொளி அழைப்பில் அழைத்து கொண்டிருந்தான் மாறன். அவளோ இமை மூடி திறந்து தன்னை சமனப்படுத்திக் கொண்டவள், அழைப்பை ஏற்றாள். 

அழைப்பை ஏற்றவள் பார்வையை சுவற்றில் பதித்திருக்க, “மகிழ் என்னைப் பாரு.’’ என அவளை அழைத்தான் மாறன். மகிழ் தயக்கமாய் அவன் விழி பார்க்க, “என்னைப் பார்த்தா பொழுது போக்குக்கு ஒரு பொண்ணு கூட பழகுறவன் மாதிரி தெரியுதா உனக்கு…?’’ என்றான் கடினமாய். 

அவள் குற்ற உணர்ச்சியில் முகத்தை சுருக்க, “ஒரு சின்ன செல் தொகுப்புல உருவான திசு ஒரு பொண்ணோட வாழ தகுதியை முடிவு செய்யும்னு நம்புறியா நீ…? எனக்கு உன்னை, உன் திமிரை, உன் நேர்மையை இதையெல்லாம் விட உன்கிட்ட இருக்க  அன்பு, நட்பு, பாசம், உண்மை எல்லாமே பிடிச்சிருக்கு. என்னோட முதல் கல்யாணமும் காதல் கல்யாணம் தான். என்னதான் என் பேரன்ட்ஸ் வில்லேஜ் பேக் ரவுண்ட்ல இருந்து வந்த பழமைவாதிகளா இருந்தாலும் அந்த கல்யாணத்தை முகம் சுளிக்காம தான் நடத்தி வச்சாங்க. ஆனா ரொம்ப மோசமா நான் அவங்க முன்னாடி தோத்து போய் நின்னேன். இப்படி மறுபடி காதல்னு அவங்க முன்னாடி போய் நிக்க தயங்குற காரணம் அது தான். இப்பவும் பெருசா ஒன்னும் மறுத்து பேச மாட்டாங்க. அவங்களை பொறுத்தவரை அவங்க பையன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம் அவங்களுக்கு. ஆனா என் குற்ற உணர்ச்சி தான் என்னை தடுத்து நிறுத்துது.’’ என்றான் வருத்தமாய். 

சற்று நேரம் அங்கே மௌனம் ஆட்சி செய்ய, தன் தொண்டையை செருமிக் கொண்ட மகிழ், “நாம ஏன் இதை லவ் மேரேஜ்னு வெளிய சொல்லணும். எங்க வீட்ல எனக்கு மேட்ரி மோனியல்ல ரிஜிஸ்டர் செஞ்சி இருக்காங்க. நீங்களும் அதுல ரிஜிஸ்டர் செஞ்சி ரெண்டு பேரும் அலயன்ஸா மீட் செஞ்சோம்னு நம்ம வீட்ல சொன்னா என்ன…?’’ என கேட்டு வைத்தாள். 

உடனே அவளை பார்த்து குறும்பாய் புன்னகைத்தவன், “அப்போ மேடம் என்னை லவ் செய்யலையா…?’’ என்று புருவத்தை உயர்த்தினான். “அது உங்களுக்கு தெரியாத…?’’ என்று அவளுக்கும் புருவத்தை உயர்த்த, லேசாய் எட்டிப் பார்த்தவன், “பர்பிள் கலர் நைட்டியா போட்டு இருக்க…?’’ என கேட்டு வைத்தான். 

உடனே மகிழின் முகம் செக்கச் சிவந்து விட, நைட்டியின் கழுத்தை மேலேற்றி விட்டபடி, “அது சரி. இன்னும் பரிசமே போடலை அதுக்குள்ள யாரோ ஒருத்தர் அச்சராத்துக்கு அடி போடுற மாதிரி இருக்கே.” என்றாள் கேலியாய். 

“நீ தானே என்னை எப்ப உங்க பொண்டாட்டி ஆக்கிகப் போறீங்கன்னு கேட்ட. அப்புறம் என்ன அச்சாரம் அஸ்திவாரம்னு. நேரா பில்டிங்கை தூக்கிற வேண்டியது தான்.’’ என்றான் சிரிப்புடன். மீண்டும் கழுத்தை மேல இழுத்து விட்டபடி மகிழ், “ஆசை தோசை தான். முதல்ல ஒழுங்கா எங்க வீட்ல வந்து பொண்ணு கேளுங்க. அப்புறம் தூக்கலாம்.’’ என்றாள். 

“ஏய்… அங்க ஒன்னும் தெரியலை. எதுக்கு சும்மா சும்மா தூக்கி விட்டுட்டு இருக்க. ட்ரஸ் கிழிஞ்சிட போகுது.’’ என்றான் மாறன் வாய் விட்டு சிரித்தபடி. “உங்களை ரொம்ப உத்தமருன்னு நம்பி பேசிட்டு இருக்கேன். இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தீங்க. போனை கட் செஞ்சிருவேன்.’’ என்று கண்களை உருட்டினாள் மகிழ். 

“என்னது இதுவே உத்தமம் இல்லாத பேச்சா…? சரியாப் போச்சு போ. எம்பாடு ரொம்ப கஷ்டம் தான் போலயே.’’ என்றான் மாறன் போலியாய் சலித்தபடி. “கல்யாணம் முடியட்டும்…! யாரு பாடு கஷ்டம்னு நான் உங்களுக்கு காட்றேன். இப்போ ஒழுங்கா சாப்பிட்டு போய் படுங்க.’’ என்றவள் அதோடு  அலைபேசியை துண்டித்து விட, இருவர் முகத்திலும், நிறைவான புன்னகை மலர்ந்திருந்தது.    
   

ஆனால் இருவருமே அப்போது உணரவில்லை. இந்த புன்னகை வாடி வதங்காது தங்கள் எண்ணம் ஒருநாளும் நிறைவேறப் போவதில்லை என்பதை. மல்லி தன் அறையில் அமர்ந்து, கல்லூரியில் ஒப்புவிக்க வேண்டிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தாள். 

சுந்தர் மனையாளுக்கு பனங்கற்கண்டு போட்ட பாலினை எடுத்து வந்தவன், “அச்சு…’’ என குரல் கொடுக்க, “வாசல்ல வச்சிடுங்க மாமா. நான் எடுத்துக்கிறேன்.’’ என்றாள். “வந்து பாலை குடிச்சிட்டு போய் எழுது.’’ என அவன் வாயிலில் நின்று குரல் கொடுக்க, மல்லி வெளியே வந்து தம்ளரை கையில் எடுத்தவள், “பசங்க சாப்பிட்டாங்களா…?’’ என கேட்டாள்.

“ம்… எல்லாரும் சாபிட்டாங்க. நைட் ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காம தூங்கிடு.’’ என்றவன் அருகில் இருந்த பாயை விரித்தவன், உறங்குவதற்கு தயார் ஆனான். “மாமா வெளிய கொசுக்கடி அதிகம். பேசாம கீழ போய் படுங்க.’’ என்றாள் மல்லி அக்கரையாய். 

“அதெல்லாம் வேப்பிலை புகை போட்டுட்டு தான் மேல வந்தேன். நீ உள்ள போ.’’ என்றவன் தலையணையை எடுத்து போட்டு படுத்துக் கொள்ள, பாலை நின்று கொண்டே அருந்தி முடித்தவள், கணவனை சற்று நேரம் பார்த்திருந்து விட்டே மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். 

மனையாள் உள்ளே நுழைந்ததும் சுந்தர் விழிகளை பிரித்தான். அவள் திரும்பி அமர்ந்திருக்க, அவள் பின்புற எழில் கோலமே அவன் விழி சேர்ந்தது. மல்லியின் மேனி சுகந்தம் அறிந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் அதனால் அவனுள் எந்த விரக தாபமும் பற்றியெறியவில்லை. மாறாக சூழ்ந்திருக்கும் விச நஞ்சு அவளை தீண்டாது இருக்க வேண்டுமே என்ற அச்சமே அவனை இறுக்கத்தில் வைத்திருந்தது. 

அவனுக்கு மல்லியை மிகவும் பிடிக்கும். அவளுக்கு அவனை  பிடிக்காது என்றாலும் அவனுக்கு அவளை மட்டும் தான் பிடிக்கும். அது தான் அவன் பிரச்னையும் கூட. மல்லியோடு திருமண நிச்சயம் உறுதியான நாளில் என்னதான் உள்ளுக்குள் இருந்த சுய கௌரவம் பணத்தை பெரிதாய் மதித்து தன்னை யாசகனாய் உருவப்படுத்தியவர் பெற்றவர் மகள் தனக்கு வேண்டாம் என அறிவுறுத்தினாலும், அவள் மீது பித்தாய் அலைந்த காதல் மனது, “அவங்க அம்மா பேசினதுக்கு அச்சும்மா என்ன செய்வா. அவளை உனக்கு தெரியாதா…?’’ என்று அவனிடமே கொடி பிடித்தது. 

“சரி எதற்கும் தன் மீதான அவள் எண்ணம் என்ன என்பதை அவள் வாயாலேயே கேட்டு தெரிந்து கொள்வோம்.’’ என்று எண்ணத்தில், திருமண நிச்சயத்திற்கு முதல் நாள் வீட்டிற்கு வந்தவன் அவர்கள் வீட்டு அலைபேசிக்கு அழைத்தான். 

Advertisement