Advertisement

உடனே வாய் விட்டு பெரிதாய் சிரித்த மகிழ், “சத்தியமா இல்லடி. இருந்தாலும் நீ ஒரு தூங்கு மூஞ்சி ராணியாச்சே. அதான் சந்தேகத்துக்கு கேட்டேன்.’’ என்றாள். 

“அது எப்படி அப்ப கூட தூங்க முடியும். தூங்க எல்லாம் மாட்டேன். முழிச்சிட்டு தான் இருப்பேன். அதுவும் கல்யாணம் ஆன புதுசுல மூஞ்சில தலைகாணி போட்டு வச்சிப்பேன்.’’ என்றாள் மல்லி விளக்கம் கொடுக்கும் பொருட்டு. 

“ஏண்டி அப்படி?’’ என்றாள் மகிழ் திடுக்கிட்டு. “அடிப் போடி இவளே…! காலேஜ் படிக்கும் போது… ஹாஸ்டல் ரூம்ல ரமணி சந்திரன் நாவலா படிச்சி படிச்சி… ரொமான்ஸ்னா ஜில்லுனு ஐஸ்கட்டி போல இருக்கும்னு நம்பி இருந்தேன். ஆனா… ஐயோ…  சிங்கிளா ஐம்பது நார்மல் டெலிவரி பார்த்தப்ப போது கூட பர்ஸ்ட் நைட் அப்படி டெரறா இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு.’’ என்றாள் மல்லி கவலை குரலில். 

உடனே மீண்டும் குலுங்கி சிரித்த மகிழ், “ஏய்…! என்ன கூத்தை அடிச்சி வச்ச நீ..?’’ என்றாள். உடனே குரலில் அலுப்பை ஏற்றி கொண்டவள், “ஊசி போட்டாலே தொண்டையை தாண்டி கத்தி அழற ஆளு நானு. வலியாடி அது. ஷப்பா… நான் கத்தி அழுததை பார்த்து எங்க மாமாவே பயந்து அதுக்கு அப்புறம் ஒரு வாரம் என் பக்கமே வரல. நடக்க முடியாம, உக்கார முடியாம… எங்க அம்மாவை பார்க்கும் போதெல்லாம் காரணமே இல்லாம திட்டி தீர்த்தேன். ஹும்… என் மாமாவும் எத்தனை நாள் பாவம் பார்ப்பார். ஒரு வாரம் கழிச்சி அவர் தொட ஆரம்பிக்கும் போதே தலைகாணியை எடுத்து மூஞ்சில வச்சிப்பேன். அவர் நகந்து படுத்த அடுத்த நிமிஷம் அலுப்புல தூங்கிருவேன். தலைகாணியை மறுபடி தலைக்கு வைக்க ஒரு மாசம் ஆச்சு. நம்ம சோக கதை இப்படி இருக்க… ரொமான்ஸ் கதைல எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம விடிய விடியன்னு எழுதுவாங்க பாரு… நிஜமா எனக்கு எல்லாம் அப்படி ஒரு கடுப்பாகும். ஏன் மகிழ் அப்படியெல்லாம் உண்மையா நடக்குமா…? ஒரு வேளை நான் தான் டம்மி பீசோ..?’’ என தன் தோழியிடம் சந்தேகம் கேட்டாள். 

தற்சமயம் எழுந்து அமர்ந்த மகிழ், “ஹையோ…! என்னால முடில. ஹா… ஹா…! ரெண்டு நாள்ல சரியாகுற விசயத்துக்கு ஒரு மாசம் ஒப்பாரி வச்சி இருக்க பாரு. ஹா ஹா…! விடிய விடிய முடியாதுன்னாலும் அட்லீட்ஸ் மிட்நைட் வரைக்கும் படம் பாக்குற கப்புல்ஸ் இருப்பாங்கன்னு தான் நினைக்கிறேன். நீ மனசுல மட்டும் இல்லடி உடம்பாலாயும் சரியான பஞ்சு மிட்டாய் தான்.” என்றவள் தோழியின் முதுகில் செல்லமாய் ஒரு அடி போட்டாள்.  

“போ… மகிழ். அதெல்லாம் எனக்கு நியாபகம் இல்ல. ஆனா மாமா என்னை விட்டதும் அனஸ்தீசியா கொடுத்த மாதிரி வரும் பாரு ஒரு தூக்கம். செமையா இருக்கும். அதுக்கு அப்புறம் ரொம்ப அழகான கனவு வரும். அதுல என்ன மாமா அச்சு அச்சுன்னு கொஞ்சிட்டே இருப்பாங்க. அந்த வாய்ஸ் கேக்க கூட அவ்ளோ ஸ்வீட்டா இருக்கும்.’’ என்றாள் கண்களில் காதல் மின்ன. 

“அது சரி. மாமா கைல கொஞ்சும் போது ஜடம் மாதிரி இருந்துட்டு…கனவுல கொஞ்சும் போது சேர்ந்து டூயட் ஆடுவ போல. உன்னை இத்தனை வருசம் அந்த மனுஷன் கட்டி மேய்ச்சதே பெரிய விஷயம் தான் போ. வழக்கமா ஜென்ஸ் தான் அப்படி தூங்குவாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். பெட்ல கூட தூங்குறதுல பஸ்ட்டா இருக்க பாத்தியா… அங்க நிக்குற நீ… மை டியர் ஸ்லீபிங் பியூட்டி.’’ என சொல்லி சிரித்தாள். 

“போ மகிழ் நீ என்னை ஓட்ற.’’ என்று மல்லி திரும்பி படுக்க, அவள் அருகில் படுத்து அவள் தலையை வருடி கொடுத்தவள், “நீன்னு இல்ல நம்ம நாட்ல நிறைய பொண்ணுங்க நிலைமை இது தான். பசங்களுக்கு சரியோ தப்போ உடலுறவை பத்தி கல்யாணத்துக்கு முன்னாடி அது அப்படித் தான்னு கொஞ்சமாவது புரிதல் வந்துடுது. மெடிகல் பீல்டுல இருக்க நம்ம நிலமையே இப்படி இருந்தா… ஏதோ ஒரு குக் கிராமத்துல… மலைக் கிராமத்துல பத்தாவது முடிச்சதும் கல்யாணம் முடியிற பொண்ணுங்க நிலைமை எல்லாம் என்னவா இருக்கும். இந்த ஸ்மார்ட் போன் யுகத்துல கூட  தன் உடலோட அமைப்பியல் இயக்கவியல் தெரியாத பொண்ணுங்க நம்ம நாட்ல அதிகம். அவசர அவசரமா எதையெல்லாம் தெரிஞ்சிக்க கூடாதோ அதை மட்டுமே தேடி தேடி விட்டில் பூச்சியா வாழ்கையை தொலைக்கிறவங்களும் அதிகம்.’’ என்றாள் மகிழ் வருத்தமாய். 

“ம்…!’’ என்றாள் மல்லி தானும் அவள் கருத்திற்கு உடன்படுபவளாய். மகிழ் தலையை கோதி கொடுக்க, அவளை நேரம் காலம் பார்க்காது ஆட்கொள்ளும் சுக நித்திரை இமைகளின் மீது ஊர்ந்து மெல்ல விழி மூட தயாரானது. 

“இனி மாமா நைட்ல உனக்கு கிளாஸ் எடுக்க வந்தா… தூங்காமா ப்ரொபசர் உனக்கு ஒழுங்கா கிளாஸ் எடுக்குறாரான்னு கவனி. ஒழுங்கா எடுத்தா முத்தம் கொடுத்து என்கரேஜ் செய்றதும்… உனக்கு பிடிக்காட்டி கடிச்சி தண்டனை கொடுக்குறதும் ஒரு பொண்டாட்டி கடமை தெரியுமா…? அதோட எப்பவும் அவரே தான் கிளாஸை ஆரம்பிக்கணும்னு அவசியம் இல்ல. அப்பப்ப நீயும் டீச்சர் அவதாரம் எடுக்கலாம். தப்பில்ல.புரியுதா…?’’ என கேட்டாள் மல்லி. 

“ம்….’’ என்று முணகிய மல்லி அதோடு உறக்கத்திற்கு சென்றிருக்க, “தூங்கிட்டாளா…? ரெண்டு நிமிஷம் ஹஸ்கி வாய்ஸ்ல பேசினாலே தூங்குறாளே… இவளோட…’’ என்று தலையில் அடித்து கொண்ட மகிழ் தானும் உறங்க தயாரானாள். 

அடுத்த நாள், தோழிகள் இருவரும் ஆர்ப்பாட்டமாய் பரிசளிப்பு விழாவிற்கு கிளம்பி சென்றனர். மல்லிக்கு இரண்டாம் பரிசை அறிவித்த போது, மகிழ் கீழிருந்து கைகள் இரண்டும் சிவக்கும் படி கைதட்டினாள். 

மூன்றாம் பரிசு, ‘அரசு மருத்துவமனை’ என்ற தலைப்பில் கவிதை எழுதிய மாறவர்ம பாண்டியனுக்கு என்று ஒலிபெருக்கியில் அறிவித்ததும், மகிழ் நெற்றி சுருக்கி மேடை ஏறிக் கொண்டிருந்தவனை கவனித்தாள். 

‘பாருடா…! கோடு போடுற ரூல்ஸ் புக் கவிதை எல்லாம் எழுதுவார் போலையே.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், மேலோட்டமாக மாறனுக்கு கை தட்டினாள். அதே நேரம் மேடையில் நின்று கொண்டிருந்த தோழி, முகம் முழுக்க புன்னகையோடும் கையில் கேடயத்தொடும் கீழிறங்க, மகிழ் தோழியை நோக்கி விரைந்தாள். 

“கங்கிராட்ஸ் மல்ஸ்…’’ என்று அவள் தோழியின் கரங்களை பற்றி குலுக்க, மல்லிக்கு பின்னால் மேடையிலிருந்து இறங்கியிருந்த மாறன், “கொஞ்ச ஓரமா நின்னு உங்க பிரண்டை கொஞ்சினா பின்னாடி வரவங்களுக்கு நடந்து போக இடம் இருக்கும்.’’ என்றான் இடக்காக. 

தனக்கு பின்னால் ஒலித்த குரலில் மல்லி சட்டென திரும்பி பார்க்க, முகத்தை சுளித்த மகிழ், “கொஞ்சம் சுத்திட்டு போனா உடம்புல எக்ஸ்ட்ராவா இருக்க ரெண்டு எலும்பு தேஞ்சிடுமா தோழர்.’’ என்றாள் பதிலுக்கு நக்கலாய். 

‘மறுபடியும் முதல்ல இருந்தா…’ என்று மல்லிக்கு தலை சுற்ற தொடங்கியது. உடனே தோழியை மறைத்தார் போல திரும்பி நின்ற மகிழ், “கங்கிராட்ஸ் ப்ரதர்.’’ என்றாள் மகிழ்வுடன். அவளின் வாழ்த்தை ஏற்று கொள்வதாய் தலை அசைத்தவன், மல்லிக்கும் தன்னுடைய வாழ்த்தை பகிர்ந்தான். 

“உங்க கவிதையை வாசிச்சேன். உங்க கவிதை புரட்சியா இருந்தாலும்… பாலியல் தொழிலை பெண்கள் விருப்பத்துடன் ஏற்பதை போல சொல்லி இருக்கீங்க. அந்த கீழ்மை செயல் அவங்க மேல திணிக்கப்படுது. அதை நீங்க இன்னும் கொஞ்சம் அழுத்தமா பதிவு செஞ்சி இருக்கலாம்.’’ என்று தன் கருத்தை முன் வைத்தான். 

“இங்க கவிதையோட பேசு பொருள் விலைமாதர் இல்ல… அவளை சமூகம் என்ன கண் கொண்டு பார்க்குது அப்படிங்கிறது தான். அவளை சக மனுசியா பார்க்க முடியாத அவங்க பார்வையை தான் கவிதை சுட்டி காட்டுது. இங்க விருப்பு, மறுப்பு பத்தி பேச என்ன அவசியம் இருக்கு.’’ என்று மகிழ் சூடாக திருப்பி கொடுத்தாள். 

‘ஐயோ இல்லாத பீபி சுகர் எல்லாம் எனக்கு இழுத்து விட்ருவாங்க போலையே ரெண்டு பேரும்.’ என்று மனதிற்குள் நொந்து கொண்டவள், “நீங்க ரெண்டு பேர் சொல்றதும் சரி தான். ஒவ்வொருத்தர் வாசிப்பு, மனநிலை, உள்வாங்குதல்னு ஒரு கவிதையை பல அர்த்தம் கொடுக்கும். சோ… தனக்கு புரிஞ்சதை அடுத்தவங்க மேல இது தான் சரின்னு திணிக்காம கடந்து போறது சரியா இருக்கும்னு நம்புறேன்.’’ என்றாள் மல்லி லேசான புன்னகையுடன். 

தற்சமயம் மாறன் அமைதியாகி அவளின் கருத்தை ஆமோதிக்க, மகிழ் அங்கிருந்து நகர்ந்து நின்றாள். அதற்குள் மாறனை யாரோ வாழ்த்த வர, தோழிகள் இருவரும் தங்கள் இருக்கையை நோக்கி நடந்தனர். 

அதன் பிறகு நிகழ்ச்சி நிறைவுபெற, அனைவருக்கும் மதிய உணவு தயாராகி இருந்தது. மல்லியும், மகிழும் அருகருகே அமர்ந்து பசியாறிக் கொண்டிருக்க, உணவு பரிமாறல் பணியில் ஈடுபட்டிருந்த மாறன், அவர்கள் அருகில் வரும் போது, அவன் கையில் வைத்திருக்கும் உணவு தவிர்த்து வேறு எதையாவது எடுத்து வர சொல்லி மகிழ் அவனை அங்கும் இங்கும் அலைய வைத்தாள். 

“சும்மா இருடி. ஏற்கனவே நம்மளை பார்த்தா ஏதாச்சும் சொல்லிட்டு இருப்பார். இப்படி நீ அவரை அலையவிட்டா உன்னை சாப்பாட்டு ராமின்னு நினைக்கப் போறார்.’’ என்றாள் மல்லி மகிழின் காதருகில். 

“ரூல்ட்  போட்ட நோட்டு மாதிரியே ரூல்ஸ் பேசிட்டு இருந்தா. கொஞ்சம் சுத்தட்டும் விடு.’’ என்றாள் மகிழ் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல். தன் தோழியின் கவிதையை அவன் எப்படி குறை சொல்லலாம் என்ற கோபம் மனதில். 

மாறன் அவள் கேட்ட பதார்த்தங்களை எடுத்து வரும் போதெல்லாம், “போதும்…’’ என்று அவள் மறுக்கும் போதும், இன்னும் கொஞ்சம் சேர்த்து வைத்து, மகிழை தனக்கு தெரிந்த வகையில் பழிவாங்கினான். 

ஒரு வழியாய் நிகழ்வு முடிய, வந்தவர்கள் கலைந்தனர். மல்லி பேருந்து பயணத்தின் போது, மாறனின் வாழ்க்கை வரலாற்றை ஏற்ற இறக்கத்தோடு மகிழிடம் பகிர, அருணோ தங்களின் தனிமையான மகிழுந்து பயணத்தில், மகிழின் வாழ்க்கை போராட்டத்தை சுருக்கமாய் மாறனிடம் பகிர்ந்தான்.  

தோழன் பகிர்ந்தவற்றை மௌனமாய் கேட்டு வந்த மாறனின் முகம் அவன் கூறிய விடயம் மூளையில் ஏற ஏற முகம் கடினத்தை தத்தெடுத்தது. தூரத்தில் கடந்து சென்ற வாகனம் ஒன்றில், “ராங்கி என் ராங்கி… ராங்கி…’’ என்ற பாடல் ஒலித்து செல்ல, அருணை ஏறிட்டவன், இறுகி போன முகத்துடன், “இந்த நல்ல பொண்ணுங்க எல்லாம் எப்படிடா சரியா வில்லனை தேடி போய் விழுறாளுங்க.’’ என்றான் ஆற்றாமையோடு. 

“யாருக்கு பாஸ் தெரியும். ஹவ் டூ ஐ நோ..’’ என்றான் அருண் சலிப்பான குரலில். “அது சரி…’’ என்ற மாறன், தன் அலைபேசியில் முக புத்தகதிற்குள் நுழைந்தவன், அவள் பெயர் மற்றும் பணியை குறிப்பிட்டு தேட, தன் தந்தையின் தோள் சாய்ந்த சிறுவயது புகைப்படத்தோடு மகிழ்வேணி மாயக்கண்ணன் என்ற பெயரோடு மகிழ் நிழற்படமாய் அவனை நோக்கி புன்னகைத்தாள். 

‘ஏற்பாளோ மாட்டாளோ’ என்ற குறுகுறுப்புடன் மாறன் அவளுக்கு நட்பின் அழைப்பு மடலை அனுப்பி வைத்தான். அப்போது தான் மல்லி கூறிய செய்தியை கேட்டு, ‘நாணயத்திற்கும் இரண்டு பக்கம் இருக்குமே.’ என்று மனதளவில் மாறனுக்காய் வருந்தி கொண்டிருந்தவள், தன் அலைபேசி செய்தி வந்ததற்கான சிணுங்கல் ஒலியை கொடுக்கவும், அதை திறந்து பார்த்தாள். 

மாறனிடமிருந்து வந்த நட்பின் அழைப்பு என்றதும், கொஞ்சமும் யோசிக்காமல், உடனே அந்த அழைப்பை ஏற்க, படபடப்புடன் அலைபேசியை உற்று பார்த்து கொண்டிருந்த மாறனின் முகத்தில், ‘மகிழ்வேணி மாயக்கண்ணன் உங்கள் நட்பில் இணைந்தார்.’ என்ற செய்தியை கண்டதும், அவன் இதழ்கள் இனிய மென்னகையில் விரிந்தது. 

அதே நேரம் மதுரை மாவட்டம் சொக்கி குளத்தில், தன் மகள் மகிழ்வேணிக்கு ஒன்று விட்ட தன் அக்கா மகன்  கணியனை மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார், சொக்கி குளத்தின் முதன்மை தர்மகர்த்தா மாயக்கண்ணன். 

பந்தமாகும்.  

  

  

Advertisement