Advertisement

பந்தம் – 16 

“ஏய் நீ தான் இந்த கவிதையை எழுதினியாடி…’’ என்று பத்தாவது முறையாக கேட்டுக் கொண்டிருந்தாள் மதி. மகிழுக்கு அந்த சந்தேகம் எல்லாம் இல்லை. அவளோ மல்லியை கட்டிக் கொண்டு, “கங்கிராட்ஸ் டி மை டியர் குலாப்ஜாமூன்.’’ என்று வாழ்த்தினாள். 

ரேணு ஒரு புறம், சங்கரி மறுபுறம் என தோழியர் அவளை அணைத்து வாழ்த்து சொல்ல, மல்லி வெட்க முறுவல் பூத்து கொண்டிருந்தாள். அவளே எதிர்பார்க்கவில்லை. கவிதை போட்டியில் தனக்கு இரண்டாம் பரிசு கிடைக்கும் என்பதை. 

“எதுகை மோனையில நீ டயலாக் சொல்லும் போதெல்லாம் நம்ம தலை டி.ஆர் ரேஞ்சுக்கு ஒரு கவிதை எழுதுவன்னு நினச்சி இருந்தேன். ஆனா நீ சும்மா தெறிக்க விட்டு இருக்கடி மல்ஸ்…’’ என்று மதியும் தன் வாழ்த்தை பகிர்ந்தாள். 

“என்னவோ ஒரு ப்ளோல எழுதிட்டேன். இப்போ படிச்சி பார்க்கும் போது எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு.’’ என்றாள் மல்லி மகிழ்வுடன். தற்சமயம் ஐவரும் மகிழின் வீட்டில் உணவு இடைவேளைக்கு குழுமியிருந்தனர். மதி மீண்டும் ஒருமுறை தோழிகள் முன் மல்லியின் அலைபேசியில் இருந்த கவிதையை உரத்த குரலில் வாசிக்க துவங்கினாள். 

விலை மாதர்… 

 

நான் ஒரு வேசி 

அதனால் என்ன..?

அதுபற்றி எனக்கு 

ஒரு போதும் வருத்தமில்லை. 

இரவில் தினம் உறங்கும் 

உங்களுக்கு ஒருபோதும் 

தெரியாது காமத்தின் நகம் 

நீண்ட கொடூர பேய்களை. 

என்னிடம் தினமும் 

ஒரு மிருகம் வருகிறது. நான் 

அதை மனிதனாக்கி மீண்டும் 

உங்களிடம் சேர்ப்பிக்கிறேன். 

 

எனக்கு அநேகரை தெரியும். 

அதில் ஒருவரை கூட 

நீங்கள் சந்தித்திருக்க 

வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். 

எனக்கு தெரியும் 

ஏமாற்றிய காதலியை எண்ணி

அவள் பெயர் சொல்லி 

அழுதபடி புணரும் ஒருவனை..

சோரம் போன மனைவியை

நேரில் கண்டு – அவளை 

அழிப்பதாய் எண்ணி என் 

உடல் கிழித்து புணரும் ஒருவனை. 

மாயத்திரையில் மங்கை ஒருத்தியின் 

உடல் வாளிப்பை கண்டு 

ஏங்கி ஏங்கி அதன் வடிகாலை 

என்னில் தேடும் ஒருவனை. 

ஆபாச குப்பைகள் அத்தனையும் தன் 

அழகிய மூளையில் 

கொட்டிக் குழம்பி  என்னுள் பாடம் 

படித்த பள்ளி சிறுவன் ஒருவனை.

இன்னும் இன்னும் அநேகரை எனக்கு தெரியும். 

அவர்கள் உங்கள் உயர் அதிகாரியாகவோ 

பக்கத்து வீட்டு சிறுவனாகவோ 

தோள் தட்டும் தோழமையாகவோ இருக்கலாம். 

நீங்கள் அனைவரும் அறியாதது 

நான் அவர்களின் வெளிச்சம் என்பதை. 

உதிரம் மொத்தமும் வெப்பமேற்று 

உச்சம் எட்டிய ஒரு உன்னத வேளையில்..

தம் மன அழுக்குகள் அத்தனையும் 

என்னுள் கொட்டி கவிழ்த்திய அவர்களின்  

நீண்ட நெடிய பெருமூச்சை என் 

மார்பில் தாங்கிய நொடியொன்றில்.. 

உணர்த்துகிறேன் நான்.  

காமமும் இவ்வாழ்வில் 

கடந்து போகும் ஒரு 

அரைநொடி அற்(புத)ப உணர்வென்றே. 

என்னுள் கரைந்தவன் காதலியை மறக்கிறான்.

என்னுள் கரைந்தவன் மனைவியை மன்னிக்கிறான்.

என்னுள் படித்தவன் மீண்டும் மழலை ஆகிறான். 

நான் அப்படியே நிற்கிறேன். 

நான் உங்கள் பார்வைக்கு பல 

எச்சில் இலை சுமக்கும் ஒரு குப்பை தொட்டி. 

ஆனால் உண்மையில் நானே 

மனிதியாய் உலவும் ஒரு பெரும் நதி. தன்  

மன அழுக்களை என்னுள் மூழ்கி கலைந்தவன்  

படியேறுகிறான் மனிதனாய். 

நான் ஒரு வேசி தான்.

அதனால் உங்களுகென்ன..?

என்னை சக மனுசியாய் காண முடியா 

உங்கள் கண்களில் இருக்கிறது..

காலம் காலமாய் மானுட சமூகம் 

கற்பென்ற பெயரில் பெண்ணின் 

கால்களில் கட்டிய 

அடிமை சங்கிலியின் கன நுனி.

 

மதி கவிதையை ஏற்ற இறக்கத்துடன் வாசித்து முடிக்க, அவளோடு சேர்த்து நால்வரும் உற்சாக கரகோசம் எழுப்பினர். மல்லி மீண்டும் ஒரு வெட்க புன்னகையை சிந்த, “நீ தாண்டி தூங்கு மூஞ்சி…! ஆனா உன் கவிதை ரொம்ப துடிப்பாத் தான்டி இருக்கு.’’ என்றாள் சங்கரி. 

இவர்கள் சமூக நல கல்வியையும் முடித்திருக்க, அடுத்து பயிற்றுவித்தல் முறைமை பாட திட்டத்திற்குள் நுழைய இருந்தார்கள். மகிழ், “சன்டே தான் அவார்ட் பங்கசன் சொல்லி இருக்காங்க. பக்கத்துல இருக்க திருச்சி தானே. எல்லாரும் போயிட்டு வருவோமா…?’’ என கேட்டாள் மகிழ். 

“ஆளை விடுங்கடி. கம்யூனிட்டி ப்ராக்டிகல் முடிஞ்சி மூளை செம சூடாகியிருக்கு. எங்க மாமா கையால ஒரு ஆயில் மசாஜ் போட்டா தான் பாடி நார்மல் மோடுக்கு வரும்.’’ என்று உடலை நெளித்தாள் ரேணு. 

உடனே சங்கரி, “இந்த குபிட் தொல்லை தாங்கல.’’ என்று உதட்டை சுளிக்க, “என்னையே எல்லாரும் ஓட்டுங்க. நேத்து ஒரு நாள் கிடைச்ச கேப்ல வீட்டுக்கு போன நாய் வேலையை அமுக்கமா முடிச்சிட்டு வருவா அவளை எதுவும் கேட்றாதீங்க. இன்னைக்கு புதன் கிழமை தானே. ஏன் தலைக்கு குளிச்சிட்டு வந்தான்னு கேளுங்கடி ஒருத்தியாச்சும்.’’ என்று தன் கீச்சு குரலில் சண்டைக்கு நின்றாள் ரேணு. 

உடனே தலையில் தட்டி யோசித்த மகிழ், “ஆமான்டி…! ஊருக்கு போயிட்டு வரும் போது எல்லாம் பீசு இப்பி மண்டையோட தான் வருது. ஓ… நீ வாத்தியார்கிட்ட பாடம் படிக்க போனா… இவ மெக்கானிக் மாமாவை ரிப்பேர் செய்ய போயிட்டு வறாளா…?’’ என்று புருவம் உயற்றி  கேள்வியாக பார்க்க மாட்டிக் கொண்ட சங்கரி வேகமாய் திரும்பி கொண்டாள். 

“ஏய்…. சும்மா இருங்கடி… அவ தான் எதையாவது பேசி வைக்கிறான்னா… கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு…’’ என்றவள் புத்தகப்பையை அடுக்குபவள் போல உள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

“பாரேன்…! ஒரு ஒரிஜினல் குபிட்டை விட்டுட்டு இத்தனை நாளா ஒரு போலியை ஓட்டிட்டு இருந்து இருக்கோம். நான் கூட அவ எலும்பை பார்த்து ஏமாந்து போயிட்டேனே…’’ என்று மதி தன் புலம்பலை தொடங்க, “நானும் தான்…’’ என அவசரமாய் அவளுடன் கூட்டு சேர்ந்தாள் மல்லி. 

‘ஐயோ… இவளுக ஆரம்பிச்சா இனி கீரை கலர்ல பேசி கொல்லுவாளுகளே…’ என மனதிற்குள் நொந்து கொண்ட சங்கரி, தன்னை சுற்றி வட்டமிடும் பேச்சின் சுழலை திருப்பி விட முடிவெடுத்து வெளியே வந்தாள். 

“போதும்… போதும்… எங்க குபிட் கதை தான் வாரா வாரம் ஓடுது. ஏண்டி தின்னு வளர்ந்த பிரியாணி குண்டா… ஒரு நாள் ஒரு பொழுது உங்க மாமாவோட மன்மத புராணத்தை பாடி இருக்கியா…?’’ என மதியை கேட்டாள். 

உடனே மல்லியும், மகிழும் ஆர்வமாய் அவள் புறம் பார்வையை திருப்ப, ரேணுவும் அவளை நெருங்கி அமர்ந்தாள். “அது… அது…’’ என்று வெட்கப்படுபவள் போல முகத்தில் மொக்கையான உணர்வை கடினப்பட்டு காட்டியவள், “மீ ஒரு தொப்பை எங்க மாம்ஸ் ஒரு தொப்பை.. தொப்பை ப்ளஸ் தொப்பை இசிகுவல்ட் குறட்டை…’’ என்று ராகம் பாட நால்வரும் அவளை மொத்த தொடங்கினர். 

“சை… இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா… போடி பிரியாணி அண்டா…’’ என  அவளை ஓட்டிய ரேணுவின் பார்வை அடுத்து மல்லியின் பக்கம் திரும்பியது. “ஓய் தூங்கு மூச்சி…! கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா உடனே தூங்கிருவ. உங்க மாமா ரொம்ப பாவம் தான்.’’ என அவளை கிண்டலடிக்க, மல்லி முகத்திலிருந்த புன்னை படிப்படியாய் வடிய துவங்கியது. 

‘இவகிட்ட பேசவே கூடாத டாபிக் இதுன்னு இவளுக்கு இன்னுமா புரியலை மரமண்டை..’ என்று மற்ற தோழிகள் அவளை மனதிற்குள் காய்ச்சி எடுக்க, மகிழ், “டைம் ஆச்சு. கிளாசுக்கு கிளம்பலாம்.’’ என்று தற்காலிகமாக அந்த பேச்சு வார்த்தைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தாள். 

ஞாயிற்று கிழமை ஏற்பாடாகியிருந்த பரிசு வழங்கும் விழாவிற்கு மகிழை தவிர மற்ற தோழியர் வர முடியாது என பின்வாங்கியிருந்தனர். தனக்கு பரிசு கிடைத்த விசயத்தை மல்லி தன் கணவனிடம் பகிர அவனோ வழக்கம் போல ஒரு, ‘ம்..’ கொட்டலோடு கடந்திருந்தான்.  

ஞாயிறு அன்று சுந்தருக்கு கல்லூரி விரிவுரையாளர் போட்டி தேர்வு  இருந்தது. ஆக அவன் அவளுடன் பயணப்பட முடியாது போனது. 

எனவே மல்லி சனிக்கிழமை இரவு மகிழின் வீட்டில் தங்கி, தோழியர் இருவரும் ஞாயிற்று கிழமை காலை ஒன்றாக திருச்சி செல்ல முடிவெடுத்தனர். சுந்தரும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்து கொள்ள, மல்லி மகிழின் வீட்டிற்கு சென்றாள். 

அடுத்த நாள் விடுமுறை என்பதால் மற்ற மூன்று தோழிகளும் அடித்து பிடித்து வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்து இருந்தனர். கல்லூரி மதியத்தோடு முடிந்து விடும் என்பதால், இருவரும் மதியமே வீடு திரும்பியிருந்தனர். 

மகிழ் சமைக்க, மல்லி வீட்டை ஒதுங்க வைக்க என்று சற்று நேரம் வேலை பார்த்தவர்கள் உணவு முடிந்ததும் ஒரு குட்டி தூக்கம் போட்டனர். மாலை இருவரும் நேரம் நகராதிருக்க, மல்லி மகிழிடம், “மகிழ்…! கோமாளி படம் செம காமெடியா இருக்குன்னு என் தம்பி சொல்லிட்டு இருந்தான். நாம அந்த படத்துக்கு போலாமா…?’’ என கேட்டாள். 

மகிழும் சரி வீட்டில் அடைந்து கிடப்பதற்கு வெளியே சென்று வருவோம் என்று சம்மதிக்க, இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்ட தோழிகள் திரையரங்கத்தை அடைந்தனர். மகிழ் இருவருக்கும் நுழைவு சீட்டை எடுத்து வர, உள்ளே நுழையும் போது, தேவைப்படும் நொறுக்கு தீனிகளை மல்லி வாங்கி கொண்டாள். 

உள்ளே நுழைந்தது மட்டுமே அவர்களுக்கு நினைவில் இருந்தது. அடுத்த இரண்டரை மணி நேரமும் இருவரும் ஒருவர் மேல் மற்றவர் விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். சுந்தர் எப்போதாவது குழந்தைகளுடன் மனையாளை திரையரங்கிற்கு அழைத்து வருவான். அப்பொழுது ஒருவர் மாற்றி ஒருவரை பார்த்து கொள்ளவே அவளுக்கு நேரம் சரியாய் இருக்கும். 

இதை போல அனுபவித்து அவளால் திரையை ரசிக்க முடியாது. மகிழ் தன் போராட்ட வாழ்வில் ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே கணவனுடன் சென்று இருக்கிறாள். அதுவும் அத்தனை உவப்பான நினைவாக அவள் உள்ளத்தில் சேமிக்கப்படவில்லை. 

அதனால் தோழிகள் இருவருக்குமே அந்த முதல் தன்னிச்சை திரையரங்கு புதுவிதமான உற்சாக மனநிலையை கொடுத்தது. படம் முடிந்து வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அதில் வந்த நகைச்சுவை காட்சிகள் குறித்து பேசி சிரித்தபடியே வீடு வந்து சேர்ந்தனர். 

மல்லி அடுப்பு திண்டில் ஏறி அமர, மகிழ் தோசை வார்த்து கொடுக்க, காரமான பருப்பு துவையலுடன் நான்கு தோசையை உள்ளே தள்ளினாள் மல்லி. அடுத்து அவள் தோசையை முறுகலாய் சுட்டு கொடுக்க மகிழ் ஊதி ஊதி தோசையை சூடாக வயிற்றுக்கு வார்த்தாள். 

உண்டு முடித்ததும், சற்று நேரம் தொலைக்காட்சியில் பாடல்கள் ரசித்தவர்கள் அடுத்த நாள் பயணப்பட வேண்டும் என்ற உணர்வில் விரைவாக உறங்க முயன்றனர். மகிழ் மின் விளக்கை அணைத்து இரவு விளக்கை ஒளிர விட, மல்லி அவளை நெருங்கி படுத்துக் கொண்டாள். 

இத்தனை நாட்களில், தன் திருமண வாழ்வு பிரச்சனை தன் தோழிகள் அனைவர் காதையும் எட்டி விட்டது என்பதை மகிழ் அறிந்து வைத்திருந்தாள். ஆனால் அது குறித்து யாருடனும் பேச மாட்டாள். அவர்களும் அவளிடம் அந்த பேச்சை துவங்க மாட்டார்கள். 

அவள் இடுப்பில் கை போட்டு படுத்திருந்த மல்லி, இரவின் ஏகாந்தத்தில் அவள் முகம் காண முடியாத தைரியத்தில், “எல்லாத்தையும் எப்படி மகிழ் தாங்கின. நான் எல்லாம் உன் இடத்துல இருந்து இருந்தா… உடஞ்சி ஓரமா உக்காந்து இருப்பேன். உண்மையா நீ ரொம்ப கிரேட் தெரியுமா…?’’ என்றாள் கரகரத்த குரலில். 

உடனே அவள் மீது தன் கை போட்டு அணைத்து கொண்ட மகிழ், “என்னால உன்னோட வாழ்கையை வாழ முடியாது மல்லி. சொல்லப் போனா உன் அளவுக்கு பொறுமை எனக்கு இல்ல. யார் என்ன சொன்னாலும் மண்டையை உருட்டிட்டு எப்பவும் சாத்வீகமா இருக்க என்னால சத்தியமா முடியாது. அந்த வகையில நீயும் கிரேட் தான். நம்ம வாழ்கையில தாங்க முடியாத சம்பவங்கள் நடக்கும் போது… அதை கடந்து நடக்குற சக்தி இயல்பா நமக்குள்ள வந்திடும். என்ன சம்பவம் நடக்கணும். அவ்ளோ தான்…’’ என்றாள். 

“ம்…’’ என்ற மல்லி புரண்டு படுக்க, “நிஜமா நீ அப்பவும் தூங்கவா செய்வ…?’’ என்றாள் மகிழ் தயக்கமாய். “எப்ப…’’ என்றாள் மல்லி புரியாமல். “அது சரி. நான் எதுவும் கேக்கல. நீ தூங்கு.’’ என்றாள் மகிழ் சிரிப்புடன். 

அவள் நகைப்பொலியில் எது குறித்து கேட்கிறாள் என ஊகித்து கொண்ட மல்லி, “நீயும் அவளுகளோட சேர்ந்து என்னை ஓட்றியா…?’’ என்றாள் கடுப்புடன். 

Advertisement