Advertisement

“ஏன்னு கேக்க அப்ப அங்க யாருமே இல்ல…! ரொம்ப வலிச்சது மல்லி. ட்ரெஸ் எல்லாம் பீர்யட்ஸ் வந்த மாதிரி ஒரே இரத்தம். அங்க நடந்ததை வெளிய சொன்னா அந்த ஆளுக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சி வச்சிருவாங்கன்னு மிரட்டினான். ப்ராக்டிகல்ல பெயில் செஞ்சிடுவேன்னு சொன்னான். எனக்கு யார்கிட்ட போய் சொல்றதுன்னு கூட தெரியல. வாஷ் ரூம்ல போய் ட்ரஷை வாஷ் செஞ்சிட்டு வீட்டுக்கு போய் அமைதியா படுத்துட்டேன். அதுக்கு அப்புறம் நான் அவன் லேபுக்கு வர சொன்னா போகவே மாட்டேன். இல்லைனா துணைக்கு எப்பவும் ஆள் இருக்குற மாதிரி பாத்துக்குவேன்.’’

அப்போது தான் மல்லிக்கு, “லேபுக்கு போகணும் வாடி…’’ என்று செல்வி தன்னை வலுக்காடாயமாக இழுத்து சென்று தன்னை வாசலில் காத்திருக்க வைத்த நாட்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது.

“அந்த சம்பவம் நடந்து ஒரு மாசம் கழிச்சி  எனக்கு பீரியட்ஸ் வரல. ஒருவேளை நான் கர்ப்பம் ஆயிட்டேனோன்னு பயந்து போயிட்டேன். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. அதான் அம்மா, அப்பா மத்த சொந்தக்காரங்க, ஊர்காரங்க எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுறதுக்கு பதிலா செத்துப் போயிடலாம்னு கிணத்துல குதிச்சேன்.’’ என்றாள்.

இப்போது செல்வி எழுந்து நிற்க, மல்லி அப்படியே மடங்கி தரையில் அமர்ந்தாள். என்னை காப்பாத்தினதும் ஹாஸ்பிட்டல்ல என்னை மனநல டாக்டர்கிட்ட அனுப்பி வச்சாங்க. அப்போ என் கூட சுந்தர் அண்ணாவும் இருந்தார். நான் என்னோட பிரச்னையை அங்கிருந்த டாக்டர்கிட்ட சொல்ல, அவங்க சுந்தர் அண்ணாவை கூப்பிட்டு சொல்லிட்டாங்க.

அன்னைக்கு சுந்தர் அண்ணா என்கிட்ட ரொம்ப நேரம் தனியா பேசினார். அவரோட ஒவ்வொரு வார்த்தையும் தான் என்னை மறுபடி நேரா நடக்க வச்சதுன்னே சொல்லாலாம்.

‘செல்வி உன்னோட மனசு தான் புனிதம். அதை உனக்கு பிடிக்காத யாருமே தொட முடியாது. அதனால தான் கடவுள் எல்லாரும் பாக்குற உடம்பை வெளிப்பார்வைக்கும், உன்னதமான மனசை ஒளிச்சும் வச்சு இருக்காரு.கெட்டுப் போக பொண்ணுங்க ஒன்னும் பண்டம் இல்ல. இதே ரோட்ல கீழே விழுந்து எலும்பு முறிஞ்சி போனா என்ன செஞ்சி இருந்து இருப்ப… அந்த இடத்துக்கு வைத்தியம் பார்த்து அதை சரி செஞ்சிட்டு நேரா நடந்து இருப்ப இல்ல. இப்பவும் அதே தான். அன்னைக்கு ஒரு மிருகம் உம்மேல பாஞ்சிருச்சு. அவ்ளோ தான். இப்ப மருந்து போட்டாச்சு உன் மனசுக்கும் சேர்த்து.

இனி இதையே யோசிச்சிட்டு இருக்காம… நல்லா படி. சமூகத்துல யாரையும் சார்ந்து நிற்காம உன் சொந்த கால்ல நில்லு. வெறும் சதையை மட்டும் வச்சி பொண்ணுங்களை எடை போடாத நிறைய ஆண்கள் நம்ம சமூகத்துல இருக்காங்க. அதுல ஒருத்தர் உன்னை தேடி சரியான நேரத்துல வருவார்.

அதுவரை படி. நான் கெட்டுப் போனவ. எனக்கு கற்பு இல்ல… இப்படி எந்த கண்றாவி விசயத்தையும் மூளையில ஏத்திக்காத. உன்னை மதிப்பிடுற தகுதி உனக்கு மட்டும் தான் இருக்கு. அதை நீ வேற யாருக்கும் தூக்கி கொடுக்காத. உன் மனசாட்சிக்கு உண்மையாயிரு. அன்னைக்கு நடந்தது எல்லாம் கால காலமா ஆண்கள் பெண்கள் மேல கட்டவிழ்த்து விடுற வன்முறை தான்.

அதுல கிட்டத்தட்ட 99 சதவீத பெண்கள் சிதைஞ்சு போயிடுறாங்க. ஆனா நீ நிமிர்ந்து தைரியமா எழுந்து வா. உன்ன மாதிரி எந்த பொண்ணு பாதிக்கப்பட்டாலும் அதை தட்டிக் கேக்குற இடத்துக்கு வா. உன்னால அது முடியும் செல்வி.’ அப்படின்னு என்கிட்ட சொல்லிட்டே இருந்தார்.

அந்த வாத்தியை மிரட்டி வேற ஸ்கூலுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போக வச்சார். என்னை அடிக்கடி மனநல கவுன்சிலிங் கூட்டிட்டு போனார். நல்ல நல்ல புத்தகத்தை வாங்கி கொடுத்து அதை வாசிக்க வச்சார்.

சில்லு சில்லா உடஞ்ச என்னை மறுபடி முழுசா ஒட்ட வச்சார். என்னை நானாவே நிக்க வச்சார். இப்ப சொல்லு பிள்ள சுந்தர் அண்ணா செஞ்சது சின்ன காரியமா…? நான் ஏன் கிணத்துல விழுந்தேன்னு இன்னும் என் பெத்தவங்களுக்கு கூட தெரியாது. அன்னைக்கு அந்த வாத்தி என் விருப்பமே இல்லாம என்னை சீரழிச்சப்ப.. பெத்த அப்பா பக்கத்துல வந்தா கூட உடம்பெல்லாம் நடுங்கும்.

சுந்தர் அண்ணா மாதிரி ஆட்களை பார்க்கவும் தான் ஆம்பிளைங்க எல்லாரும் கெட்டவங்க இல்லைன்ற நம்பிக்கையே பொறக்குது. என் கடைசி மூச்சு இருக்க வரைக்கும் சுந்தர் அண்ணாவுக்கு நான் கடமை பட்டு இருக்கேன் பிள்ள.’’ என்று நா தழுதழுக்க செல்வி பேசி முடிக்க, மல்லி எழுந்தவள் பாய்ந்து செல்வியை கட்டிக் கொண்டாள்.

நெடு நேரம் தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கண்ணீரில் தங்கள் மனபாரங்களை கரைத்து கொண்டிருந்தனர். அதன் பிறகு செல்வி சட்டம் பயில சென்னை சட்டக்கல்லூரியில் இணைந்து விட, ஆசிரிய படிப்பிற்கு மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த மல்லிக்கு செவிலியம் தான் கிடைத்தது.

அதுவும்  தனியார் கல்லூரிகளுக்கு பணம் கட்டி படிக்க வைப்பது எப்படி என யோசித்து கொண்டிருக்கும் போது, சுந்தர் தான் அரசில் செவிலியம் படித்தால் சீக்கிரம் அரசுப் பணியும் கிடைக்கும், அதோடு செலவும் குறைவு என சொல்லி விண்ணப்ப படிவத்தை வீடு வரை எடுத்து வந்து கொடுத்து சென்றவன்.

பழைய மல்லியாக இருந்து இருந்தால் அவன் சொல்கிறான் என்பதற்காகவே படித்து இருக்க மாட்டாள். ஆனால் செல்வியின் வழியே அவள் சுந்தரை அறிந்திருக்க, அவன் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கும் பழக்கம் வந்தது.

அப்போது சுந்தர் மல்லியை பெரிதாக கண்டு கொள்ள மாட்டான். அதனால் இவளும் பேச மாட்டாள். ஆனால் முன்பு போல முறைப்பதை குறைத்து கொண்டாள். செவிலியம் படிக்க விடுதியில் இணைந்து, ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போது, சுந்தர் எதிர்பட்டால், “நல்லா இருக்கீங்களா…?’’ என்று கேட்கும் அளவிற்கு வந்திருந்தாள்.

அவனும், “ம்..” என்ற ஒற்றை வார்த்தையில் அவளை கடந்து விட, மல்லிக்கு அப்போதும் அவனை மணக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. செவிலியம் முடித்த ஒரே ஆண்டில் அவளுக்கு அவர்கள் ஊர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பணி கிடைக்க அதன் பிறகு முளைத்தது வம்பு.

கோதண்டன் இவளுக்கு வரன் பார்க்க, வந்த இடத்தில் எல்லாம் சொல்லி வைத்தார் போன்று, “பொண்ணு நைட் டியூட்டி பாக்குமா..?’’ என கேட்டு முகத்தை சுளித்தனர். இன்னும் சிலரோ திருமணத்திற்கு பின் வேலையை விட முடியுமா என கேட்டு நின்றனர்.

மல்லிக்கு கிலி பிடித்தது. அதை ஊதி பெரிதாக்குவதை போல, இவளோடு படித்த தோழி ஒருத்திக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறந்திருக்க மல்லி குழந்தையை பார்ப்பதற்காய் அவள் வீட்டிற்கு சென்றிருந்தாள்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாது இருக்க, அந்த தோழி புலம்பி தீர்த்துவிட்டாள். “சை.. ஏந்தான் கல்யாணம் செஞ்சோம்னு இருக்கு. பஸ்ட்நைட் அன்னைக்கே என்னை ரூம்ல விட வந்த நாத்தனார், பொண்ணு நர்ஸ் தானே அவளுக்கு எல்லாம் தெரியும்னு ஜாடை பேசிட்டு போனா. நான் நைட்டியூட்டிக்கு போனாளே ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போனை போட்டு என்னை டார்ச்சர் செய்ற புருஷன்.  செய்ற வேலையை சொன்னா… நர்சான்னு… ராகம் பாடுற சொந்தக்காரங்க. இவங்க மத்தியில இப்ப குழந்தையை வேற பெத்துக்கிட்டேன். எல்லாமே வெறுப்பா இருக்கு மல்லி…’’ என்று கண்ணீர் வடிக்க மல்லிக்கே பாவமாய் போனது.

“சும்மா புலம்பாத. எல்லாம் சரியாயிடும். இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு ரெகுலர் ஆனதும் நல்ல சேலரி வரும். உன்னை மதிக்காட்டியும்… உன் மூலமா வர பணத்துக்கு அவங்க பணிஞ்சு தான் போயாகணும். அதுவரைக்கும் இந்த செல்ல குட்டியை கொஞ்சிட்டு இரு. நாளு வேகமா ஓடிப் போயிரும்.’’ என்று தோழிக்கு தேறுதல் வார்த்தைகளை சொல்லி வந்தவள் மனதிற்குள் மிகவும் வெருண்டு போனாள்.

தானே திருமணமான இன்னும் சில தோழிகளிடம் பேசிப் பார்க்க, ஒன்றே போல அவர்கள், “என் கணவன் குடிகாரன்… சந்தேகக புத்தி… என் வேலையை மதிப்பதில்லை… பிறந்த வீட்டை மதிப்பதில்லை… பிறந்த வீட்டிற்கே அனுப்புவதில்லை…’’ இதில் ஏதாவது ஒன்றை சொல்லி புலம்பினார்கள்.

‘எனக்கு வரப் போற புருஷன்… சந்தேகபுத்தி இல்லாதவனா… குடிக்காதவனா… என் வேலையை மதிக்கிறவனா… எங்க குடும்பத்தை மதிக்கிறவனா இருக்கனும். ஆனா அப்படி ஒருத்தன் எங்க இருப்பான்…’ என மல்லி மனதிற்குள் மண்டையை பிய்த்து கொண்டிருக்க அதே நேரம் வாசலில், “மாமா…’’ என்ற சுந்தரின் குரல் உரத்து கேட்டது.

உடனே அவள் மூளையில் மின்விளக்கு எரிய, அன்றைக்கு இரவே கோதண்டனிடம் தான் பாரியின் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாய் தெரிவித்துவிட்டாள். அதற்கு அவர்களுக்கு பெரிதாய் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்தாலும், காத்திருக்க முடிவு செய்தாள்.

அதே வாரம் அவள் காய்ச்சலில் விழ, இவளுக்காய் வெகு தொலைவில் இருந்து ஓடி வந்து இரத்தம் கொடுத்ததோடு, முகத்தில் பரிதவிப்பை ஏந்தி தன்னை கண்ட சுந்தரை அவளுக்கு உள்ளூர பிடித்து தான் போனது.

பின்னர் அவள் பெற்றவர்களும் சம்மதிக்க, திருமண மேடையில் சுந்தரை கண்ட மல்லி உள்ளுக்குள் மருண்டு போனாள். அவன் கடு கடுவென்று இருப்பதே தன் இயல்பென அவளிடம் நிரூபித்து கொண்டிருக்க, ‘சரி… எல்லா புருசனும் ஒவ்வொரு டைப். நம்ம ஆளு கடு கடு சுந்தரம். கொஞ்சம் கடுப்பு சுந்தரம். அவ்ளோ தான. இருந்துட்டு போகட்டும். சந்தேகக்காரன் கூடவோ, குடிகாரன் கூடவோ என்னால குடும்பம் நடந்த முடியாது சாமி.’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் தனக்கு கிடைத்த வாழ்வை வாழ பழகிக் கொண்டாள்.

அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை கிடைக்கும் நேரத்தில் சுந்தர் அலமாரியில் வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்து படிப்பாள். அந்த நல்ல புத்தகங்கள் அவளின் உள்வெளியை செதுக்கியது. குழந்தை தனமாய் சுற்றிக் கொண்டிருந்த மல்லிக்கு நிதான இறகுகள் முளைத்தன.

காதல் குறித்து அவளிடம் பகிர்பவர்கள் யாரும் இல்லை. ஆக அதுபற்றி அவள் அதுவரை அவள் அறியாது இருந்தாள். ஆனால் கல்லூரியில் இணைந்த பிறகு, இவள் தோழிகள் கணவன் மனைவி உறவு, கொஞ்சல் கெஞ்சல் என்று அந்தரங்கமாக பேச, நம் கணவன் நம்மிடம் ஏன் அப்படி நடந்து கொள்வதில்லை என்ற கேள்வி முதல் முறையாக அவளுக்குள் பிறந்து.

‘ஒருவேளை என்னை பிடிக்காமல் கட்டாய மணம் செய்து கொண்டாரோ…’ என்றெல்லாம் சிந்தை பறக்க, அவன் அவளிடம் நடந்து கொள்ளும் முறை அப்படியும் இருக்கலாம் என்று கூற நாளுக்கு நாள் மல்லி தனக்குள் ஒடுங்கிப் போனாள்.

‘இவளுக்கு என்னை எப்ப தான் புரியும்.’ என சுந்தரும், ‘இவருக்கு எப்ப என்னை பிடிக்கும்’ என மல்லியும் ஏங்கிக் கொண்டிருக்க, காதல் தலையில் கைவைத்தபடி, ‘நான் என்ன தான் செய்றது உங்களை’ என இருவரையும் பாவமாய் பார்த்திருந்தது.

பந்தமாகும்.

Advertisement