Advertisement

அப்போது தான் பிரக்ஞை பெற்ற மல்லி, “ஐயோ… செல்வி…’’ என அலற, “வாயை மூடு…” என அவளிடம் கர்ஜித்தான் சுந்தர். எப்போதும் சுந்தர் கடுகடுவென இருப்பான் என்றாலும், மல்லி இத்தனை அருகில் அவன் கோப முகத்தை இதற்கு முன் கண்டதில்லை.

ஆக இரு உள்ளங்கைகளையும் கொண்டு வாயை அழுத்தி மூடிக் கொண்டாள். அவளை தரையில் நேராக படுக்க வைத்தவன், அவளுக்கு முதல் உதவி சிகிச்சை செய்தபடி, தரையில் ஓரமாய் அவன் வீசி எறிந்து வந்திருந்த அலைபேசியை காட்டி எடுத்துட்டு வா என்றான்.

அவள் நடுங்கியபடி எழுந்து சென்று கொண்டு வந்து நீட்ட, “குணான்னு ஒரு நம்பர் இருக்கும். அதுக்கு கால் செஞ்சி ஸ்பீக்கர் போடு.’’ என்றான். மல்லி அதற்கு முன் அலைபேசியை உபயோகித்தது இல்லை.

அப்போது தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பட்டன் போன் முளைத்திருந்த காலம். ‘ப்ச்…’ என்று சலித்தவன் அவளிடமிருந்து அலைபேசியை வாங்கி தானே நண்பனுக்கு அழைத்தான். அடுத்த பத்து நிமிடத்தில், வெண்ணிற அம்பாசிடர் கார் அந்த இடத்திற்கு வந்தது.

அவர்கள் அவளை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த தலைமை மருத்துவமனைக்கு விரைய, மல்லியிடம், செல்வியின் வீட்டில் நெல்லிக்காய் பறிக்கும் போது, அவள் தவறி கிணற்றில் விழுந்து விட்டாள் என சொல்ல சொன்னான்.

அவன் சொல்லியபடியே அவர்கள் வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டு மல்லி வீட்டை அடையும் போது பொழுது அடைந்திருந்தது. அதற்குள் நடந்த நிகழ்வு இவர்கள் வீட்டை எட்டியிருந்தது. செய்தி அத்தனை வேகமாய் ஊருக்குள் பரவியிருந்தது.

இவளின் புத்தகப்பையை பிடுங்கிய சீதை, “அப்படி அரை நெல்லி பறிச்சி தின்னாட்டா என்ன…? கூட நீயும் வேற இருந்தன்னு மேல வீதி ராசாத்தி சொல்லும் போது எனக்கு கெதக்குன்னு போச்சு. இனி தோட்டத்துக்கு உள்ள போற சோலியே வச்சிக்கதா. சுத்து பாதையா இருந்தாலும் சரி. மெயின் ரோட்டு வழியாவே வந்துரு.”  என்றவர், “பிள்ளையாரப்பா… அந்த ஆத்தாளுக்கு பிள்ளைய காப்பாத்தி கொடுத்துருப்பா.’’ என்று வேண்டியபடி மஞ்சள் துணியில் ஒற்றை ரூபாயை முடிந்து வைத்தார்.

ஒருவாரம் கழிந்த பின்பே செல்வி மீண்டும் பள்ளிக்கு வந்தாள். வெளுத்துப் போய் சோர்வாய் காணப்பட்டாள். ஆனால் அவள் கண்களில் பழைய ஒளி திரும்பியிருந்தது. “வந்துட்டியா… வா வா… இங்க வந்து உக்காரு. நீ இல்லாம எனக்கு ஸ்கூல் வரவே பிடிக்கலை.’’ என்று முகம் முழுக்க புன்னகையோடு வரவேற்று அமர வைத்தாள்.

சுந்தர் தன் வீட்டு மொட்டை மாடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பை ஆரம்பிக்க அவனிடம் நிறைய மாணவர்கள் சேர்ந்து படித்தனர். செல்வியும் அவனிடம் டியூசனுக்கு சேர, சீதை, “யார் யாரோ படிக்க வருதுக. நீயும் தான் புஸ்தக பையை கொண்டு போய் அங்க படிச்சிட்டு வந்தா என்ன…? அதான் கணக்கு பாடம் வரலைன்னு ராவெல்லாம் மண்டையில கொட்டிட்டு திரியிற இல்ல.’’ என அங்கலாய்க்க வேறு வழியின்றி மல்லி தானும் சுந்தரிடம் சிறப்பு வகுப்பில் மாணவியாய் சேர்ந்தாள்.

அப்போதும் சுந்தர் அவளிடம் கடு கடுவென்று தான் இருந்தான். ஒரே தவறை இரு முறை செய்தால் வளர்ந்த பெண் என்றெல்லாம் பார்க்க மாட்டான். கையில் இருக்கும் குச்சியால் வலுவாக தலையில் தட்டி வைப்பான்.

செல்வியை மட்டும் எதுவும் சொல்லவே மாட்டான். அவள் நன்றாக தான் படிப்பாள் என்றாலும், அவளுக்கு மட்டும் அதிக சலுகை காட்டுவதாக மல்லிக்கு தோன்றும். சிறப்பு வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து சென்ற பின்பும் செல்வியை மட்டும் நிப்பாட்டி வைத்து, தங்கள் ஊர் நூலகத்தில் இவன் இரவல் எடுத்து வந்த நூல்களை கொடுத்து படிக்க சொல்வான்.

மல்லியோ அந்த வயதிலும் சுட்டி விகடன், பஞ்ச தந்திர கதை, இரும்புக்கை மாயாவி என்று சுற்றிக் கொண்டிருந்தவள். அந்த புத்தகத்தின் தடிமனை பார்த்தே, செல்வி படி என்று கொடுத்தால் கூட வேண்டாம் என சொல்லி விடுவாள்.

செல்வி அந்த புத்தகங்களை வாசித்து, கதைகளை சொல்ல, மல்லிக்கு அந்த கதைகள் பிடித்து போக தானும் வாங்கி அந்த புத்தகங்களை படித்தாள். அப்படித்தான் சுந்தர் ஜெயகாந்தனையும், சமுத்திரத்தையும், சுஜாதாவையும், கல்கியையும் மல்லிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

செல்வி இருவரும் படித்து முடித்த பின் புத்தகங்களை அவனிடம் திருப்பி தர, அப்போதும் செல்விக்கு மட்டும் தாழ்ந்த குரலில் அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பான். இப்படியே பனிரெண்டாம் வகுப்பு முடிய, செல்வி அவர்கள் பள்ளியிலேயே முதல் மாணவியாய் வந்தாள்.

அவள் எடுத்த மதிப்பெண்ணிற்கு மருத்துவமும், பொறியியலும் கிடைக்கும் என்றாலும் செல்வி விரும்பி சட்டத்தை தேர்ந்தெடுத்தாள்.  கிளம்பும் முன் சுந்தருக்கு அவன் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரின் புதிய புத்தகம் ஒன்றை பரிசாய் வாங்கியவள், அதை வண்ண காகிதத்தில் சுற்றி கொடுக்க சென்றாள்.

தன்னுடன் வரும்படி அவள் மல்லியை அழைக்க அவளும் வேண்டா வெறுப்பாக சென்றாள். சுந்தர் வீட்டிற்குள் நுழைந்ததும், வரவேற்பறையில் இருந்தவன் செல்வியை மகிழ்வுடன் வரவேற்க, உதட்டை சுளித்த மல்லி, நேராய் பாரியை தேடி பின்பக்க கொல்லைக்கு நடந்துவிட்டாள்.

சரியாய் அரைமணி நேரம் கழிந்து இருவரும் வெளியே வந்ததும், செல்வி திடுமென, “வெள்ளையன் தாத்தா தோட்டத்துக்கு போவோமா…?’’ என்றாள். உடனே மல்லியின் முகம் வெளிறிவிட்டது.

“ஐயோ… மறுபடி கிணத்துல குதிக்கிறதுக்கா. வேணாம்டி. உனக்கு ஊரு விட்டு ஊரு போய் படிக்க பிடிக்காட்டி சொல்லு… நாம வீட்ல பேசலாம். அதை விட்டுட்டு ஏதாச்சும் ஏடா கூடமா செஞ்சி எங்க ஆத்தா விளக்கமாத்தை பிய்ய வச்சிடாத.’’ என்றாள் பயத்துடன்.

உடனே வாய்விட்டு சிரித்த செல்வி, “ஏய்… அதெல்லாம் ஒன்னும் இல்ல. நிஜமா நெல்லிக்கா சாப்பிடனும் போல இருக்கு. அதோட அந்த இடத்தை கடைசியா ஒருமுறை பார்க்கனும்னு தோணுது. அவ்ளோ தான்.’’ என்றவள் முன்னால் நடக்க, மல்லி நம்பிக்கையின்றியே பின் தொடர்ந்தாள்.

கிணற்றை நெருங்கியதும், செல்வி அதன் சுற்று சுவர் மீது ஏறி நின்று நெல்லிக்காய் பறிக்க, அவள் உடையை மல்லி இறுக்கமாய் பற்றி கொண்டாள். அவள் கீழே இறங்கவும் தான் அடுத்தவளுக்கு உயிரே வந்தது.

தோழியிடமும் செல்வி நெல்லிக்காயை நீட்ட, இரண்டை எடுத்து வாயில் போட்டவள், அதன் புளிப்பு சுவையில் முகத்தை அஷ்டகோணலாக்கினாள். இருவரும் ஆள் அரவமற்ற தென்னத்தோப்பில் நடந்து வரும் போது, நெடு நாட்களாக தன் தோழியை கேட்க எண்ணியிருந்த கேள்வியை மல்லி கேட்டாள்.

“நீ ஏன் புள்ள அன்னைக்கு கிணத்துல குதிச்ச. ஒரு நிமிஷம் எனக்கு மூச்சே நின்னு போன மாதிரி ஆயிடுச்சு. நீயா சொல்லுவன்னு இத்தனை நாளா கேக்கல. நம்ம ப்ரன்ஷிப் மேல உனக்கு இருக்க நம்பிகையை நினைக்கும் போது தான் புள்ள கஷ்டமா இருக்கு. எதுனாலும் நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம்.’’ என்று மல்லி வருத்ததுடன் மொழிந்தாள்.

அதை கேட்க செல்வி அமைதியாக இருக்க, சற்று நேரம் அங்கே சங்கடமான மௌனம் நீடித்தது. அதை மல்லியே கலைத்தாள். “சரி விடு புள்ள. நான் ஒரு லூசு. நீயே இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்டல் கிளம்பிடுவ. அப்புறம் வருசத்துக்கு ஒருமுறை தான் வருவ. இப்போ போய் கண்டதையும் பேசிட்டு இருக்கேன்.’’ என் தனக்கு தானே சமாதானமும் சொல்லி கொண்டாள்.

ஒரு நெடு மூச்சை வெளியிட்டு தன்னை நிலைபடுத்திக் கொண்ட செல்வி, “உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்ல புள்ள. எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் சொல்லல. அந்த விஷயம் தெரிஞ்சா என்னை விட நீ தான் ரொம்ப கஷ்டப்படுவ. அதோட சுந்தர் அண்ணாவும் உன்கிட்ட எதையும் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தாங்க. அதான்…’’ என்றவள் இழுக்க, மல்லிக்கு நொடியில் கோபம் மூக்கை கடந்து நெற்றிக்கு ஏறியிருந்தது.

“அண்ணன் பெரிய நொண்ணன்… நாம பால்வாடி படிக்கும் போது என் சத்துமாவு உருண்டையை உனக்கு புட்டு கொடுத்தது நானு… நீ கல்லா மண்ணா விளையாடும் போது முட்டி பேந்து ரத்தம் வந்தப்ப உனக்கு என் எச்சி தொட்டு மருந்து போட்டது நானு… என் நோட்ல மயிலிறகு குட்டி போட்டப்ப அதை உனக்கு கொடுத்தவ நானு… என்னை விட உங்க நொண்ணன் உனக்கு முக்கியமா போயிட்டாரு இல்ல. இனி நீ என்கிட்ட பேசாத பிள்ள. நான் எங்க வீட்டுக்கு போறேன்.’’ என்று மல்லி திரும்பி நடக்க, அவள் கையை பிடித்து தடுத்தாள் செல்வி.

“சாரி பிள்ள… ! நீ எனக்கு உயிரானவ தான். ஆனா இந்த உயிரை பிடிச்சி இருக்கி கட்டின கயிறுன்னா அது சுந்தர் அண்ணா தான். நான் என்ன நடந்ததுன்னு சொல்றேன். ஆனா அதை இங்கயே காதுல வாங்கி காத்துல விட்டுடனும். அதை மனசுல நினச்சி சுமந்துட்டு அலைய மாட்டேன்னு சத்தியம் செய். நான் சொல்றேன்.’’ என கையை நீட்ட, மல்லிபுழுதி மண்ணில் தன் கையை புரட்டி தோழியின் கைகளில் சத்தியம் வைத்தாள்.

அந்த கையை வானத்தை நோக்கி ஊதி விட்ட செல்வி, மல்லியை பார்த்து மலர்ந்து சிரித்தாள். எத்தனை வளர்ந்தாலும் இருவரும் தங்களின் சிறுபிள்ளை தனமான செய்கைகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று சொன்னது அந்த புன்னகை.

இப்போது செல்வியின் முகம் ரௌத்திரத்தில் சிவந்திருந்தது. “நம்ம சுப்புரத்தினம் சார் இருந்தாரு இல்ல. டெய்லி சாயங்காலம் நல்லா படிக்கிற பிள்ளைகளுக்கு லேப் எக்ஸ்பரிமென்ட் சொல்லிக் கொடுக்குறதா சொல்லி ஒரு நாலஞ்சி பேரை மட்டும் கெமிஸ்ட்ரி லேபுக்கு வர சொல்லுவாரே நியாபகம் இருக்கா..?’’ என கேட்டாள்.

“ஆமா…! நீயி மரகத மீனா, வனிதா, செந்தாமரை, அனிதா அஞ்சி பேரும் போவீங்க. நான் கூட யப்பா தேங்கா மண்டையன் போடப் போற பிளேடுல இருந்து தப்பிச்சிட்டோம்னு சந்தோசமா வீட்டுக்கு எஸ் ஆவேனே.’’ என்று மலரும் நினைவுகளை பகிர்ந்தாள் மல்லி.

முகத்தை வேறு பக்கம் திருபியிருந்த செல்வி, “அதுல தினம் எல்லாரையும் முன்னாடி அனுப்பிட்டு என்னை மட்டும் நோட் கரக்சன் வரை நிக்க வைப்பான். அப்ப எல்லாம் கண்ட இடத்துல தொடுவான். அது பிடிக்காம நான் ஒரு நாள் அவன்கிட்ட கத்த, அந்த ரூமை பூட்டிட்டு…’’ செல்வி மடங்கி அமர்ந்து அழ, மல்லிக்கு உலகமே தட்டா மாலை சுற்றியது.

Advertisement