Advertisement

பந்தம் – 14

சனிக்கிழமை நாட்களில் கல்லூரிக்குள் நுழைந்தாலே கல்யாண வீட்டிற்குள்  நுழைந்த ஒரு உணர்வை கொடுக்கும். ஆம் அன்றைக்கு மாணவிகளுக்கு சீருடையில் இருந்து விலக்கு. அதோடு அன்றைக்கு அரைநாள் மட்டுமே கல்லூரி என்பதால், வேறு வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, கல்லூரிக்கு அருகில் இடம் பார்த்து தங்கியிருக்கும் மாணவிகள் அன்றைக்கு தங்கள் சொந்த ஊரை நோக்கி பயணிப்பார்கள்.

ஆக அனைவரும் வர்ண சேலைகளில் தங்களை கவனமாய் அலங்கரித்து வருவார்கள். மற்ற நாட்களிலேயே மகிழின் உடை நேர்த்தி கவனம் ஈர்க்கும். சனிக்கிழமை என்றால், தலை குளித்து காதில் பெரிய குடை ஜிமிக்கி போட்டு, கண்களுக்கு அஞ்சனம் தீட்டி, நேர்த்தியான புடவை கட்டில் அவள் கல்லூரி வரும் பாங்கே பாந்தமாயிருகும்.

அன்றைக்கு மகிழ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவள் காதில் இருந்த பெரிய தங்க குடை ஜிமிக்கியை அவ்வப்போது தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தாள். மதி மல்லியின் காதின் அருகில் குனிந்து, “ஏய் இவ அட்டகாசம் தாங்க முடில. சும்மா சும்மா சிரிச்சிட்டு ஜிமிக்கியை தொட்டு தொட்டு பார்த்துக்கிறா. கிளாஸ்ல எல்லாரும் முத்திருச்சோன்னு பார்க்க போறாங்க.’’ என்றாள் சலிப்புடன்.

அப்போது மென்மையாய் புன்னகைத்த மல்லி, “நம்ம பெஞ்சை என்னைக்கு பெருமையா பார்த்து இருக்காங்க. எப்பவும் வித்யாசமா தான் பார்ப்பாங்க. இப்ப அதுல என்ன இருக்கு…?’’ என்றாள்.

அன்றைக்கு மனநல செவிலிய பாடத்தில் வாரந்திர தேர்வு வேறு இருந்தது. அன்றைக்கு தேர்வு எழுதும் போது கூட மகிழ் அவ்வப்போது தன் ஜிமிக்கையை தொட்டு பார்க்க, பின்னால் அமர்ந்திருந்த மல்லிக்கே ஒரு மாதிரியாகிப் போனது.

மதியம் போல கல்லூரி முடிய, மகிழ் அனைவரிடமும், “ஏய்… வாங்க மஸ்தான் ஹோட்டல் போலாம்.’’ என அழைத்தாள். ‘என்ன ஆச்சு இவளுக்கு…?’ என்ற பார்வையை மற்றவர்கள் கொடுக்க, “நான் தான் பில் பே செய்ய போறேன் பயப்படமா வாங்கடி.’’ என்றவள் முன்னால் வண்டியில் பறக்க, மற்றவர்கள் அவளை பின் தொடர்ந்தனர்.

உணவகத்தில் அமர்ந்ததும், தோழிகள் விரும்பி உண்ணும் அசைவ உணவுகளை தருவித்தவள், காதில் இருக்கும் தன் குடை ஜிமிக்கி கன்னத்தில் உரச, ஒரு சிக்கன் லாலிபாப்பை எடுத்து கடித்தாள்.

சிறிய கிண்ணத்தில் இருந்த பிரியாணியை தன் தட்டிற்கு மாற்றிக் கொண்டே மதி, “என்னடி விசேசம். ரொம்ப சந்தோசமா இருக்க. ரெண்டு நாள் லீவ் போட்டு ஊருக்கு போயிட்டு வந்தாலும் வந்த. ஒரேடியா பல்ப் எரியுதே உன் மூஞ்சுல.’’ என கேட்டாள்.

மற்ற தோழிகளும் அவள் முகத்தை ஆர்வமாய் பார்க்க, “எங்க அப்பா என்கிட்ட பேசிட்டார். ரொம்ப வருசத்துக்கு அப்புறம் பேசிட்டார்… என்னால சந்தோசம் தாங்க முடியல தெரியுமா…? நான் ஊருக்கு போகும் போது அவர் என்கிட்ட பேசுவார்னு பெருசா எனக்கு நம்பிக்கை இல்ல. ஆனா எங்க ரெண்டாவது அண்ணன் நின்ன நிலையில நின்னு என்கிட்ட பேச வச்சிட்டான். ஊர்ல இருந்த ரெண்டு நாளும், நான் சின்ன வயசுல விரும்பி சாப்பிட்ட பண்டம் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தாரு. அதோடு டெய்லி, சிக்கனும், மீனும் தான். அவர் வண்டியில உக்கார வச்சி கோவில் கோவிலா கூட்டிட்டு போனாரு. மறுபடியும் நான் அப்பா பொண்ணு ஆயிட்டேன். அந்த பீலிங் செமையா இருந்தது.’’ என்றவள் கை மீண்டும் ஜிமிக்கியை வருடியது.

அவள் கண்களில் லேசாக நீர் துளிர்த்திருக்க, அதற்கு நேர்மாறாக முகமோ பூரிப்பில் மலர்ந்திருக்க, அந்த காட்சி காண்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. வாயில் இருந்த சிக்கன் பிரியாணியை வேகமாய் விழுங்கிய மல்லி, “அது சரிடி…! அதுக்கு ஏன் அடிக்கடி காதை தொட்டு தொட்டு பார்த்துக்கிற. ஜிமிக்கி அங்கேயே தான் இருக்கும். எந்த காக்கவும் வந்து தூக்கிட்டு போகாது.’’ என்றாள் விளையாட்டாய்.

மற்ற தோழிகளும் அதை தலை அசைத்து ஆமோதிக்க, “இது எங்க அப்பா எனக்கு வாங்கி தந்த ஜிமிக்கி. ஒன்றை பவுன் தெரியுமா…? எங்க ஊர்ல அடுத்த மாசம் கோவில் கொடை. அதுக்கு போட்டுக்க சொல்லி வாங்கி கொடுத்தார். நல்லா இருக்கு இல்ல…?’’ என்று மீண்டும் ஜிமிக்கியை காட்டி தோழிகளிடம் வினவினாள்.

“அம்மா தாயே…! சூப்பரா இருக்கு. காலைலேயே உன் ஸ்டேட்டஸ்ல ‘அன்புள்ள அப்பா… அப்பா… யாருமே இல்லை உன் போல் மண்மேலே’ அப்படின்ற பாட்டை பார்க்கும் போதே நினச்சேன். நீ ஊருக்கு போனப்ப இது மாதிரி ஏதாவது சம்பவம் நடந்து இருக்கும்னு. எனிவே கங்கிராட்ஸ் மகிழ்வேணி. உங்க அப்பாவோட அன்பை திரும்ப அடைஞ்சி நீங்க சாதிச்சிட்டீங்க…” என்று ரேடியோ ஜாக்கி போல பேசினாள்.

உடனே மல்லி, “இந்தியால பிரதமர் மோடி…! மகிழோட இதயத்துல இருக்கார் அவ டாடி…! வீரத்துல அவ கிரண் பேடி…! அன்புல வாங்கி தந்தா சிக்கன் தந்தூரி…! நம்ம க்ரூபுல அவ பாரி..! இதயத்துல அவளுக்கு சிலை வைப்போம் வாடி… வாடி…!’’ என டி. ஆர் போல அடுக்கு மொழி பேச, சுற்றி இருந்த தோழிகள் கை தட்டி ஆர்பரித்தனர்.

“உனக்கு நல்லா அடுக்கு மொழி வருது மல்லி. பேசாம ஏதாச்சும் கவிதை, கட்டுரைன்னு எழுதுடி.’’ என்று சொன்னாள் சங்கரி. “அதெல்லாம் எதாச்சும் தோணும் போது என் டைரில எழுதி தான் வைப்பேன். வெளிய காட்ற அளவுக்கு பெருசா ஒன்னும் இல்ல.’’ என்றாள் மல்லி.

உடனே மகிழ், “வாவ்… செம செம. நேத்து நர்சஸ் தமிழ்நாடு வாட்ஸ் அப் குரூப்ல ஒரு மெசேஜ் வந்து இருந்தது பார்த்தியா. அதுல ஏதோ தமிழ் காம்பிடீசன் அனவுன்ஸ் செஞ்சி இருக்காங்க. உனக்கு பார்வேர்ட் செய்றேன். எல்லாமே ஆன்லைன் தான் போல. நீ முடிஞ்சா பார்டிசிபேட் செய்யேன்.’’ என்றாள் மகிழ்.

“அதெல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை.’’ என்ற மல்லி ரைதாவில் சிக்கனை ஊற வைத்து கொண்டிருந்தாள். உடனே மதி, “டேய் மல்ஸ்…! சும்மா ஹேரை கட்டி ஹில்லை இழுப்போம். வந்தா ஹில்லு… போனா ஹேரு. இட்ஸ் ஜோ சிம்பிள்.’’ என்று விட்டு சில்லி சிக்கனை வாயிற்குள் அதக்கினாள்.

உடனே ரேணு, “ஹில்லு.. ஹேரு.. நீ கூட பெரிய கவிதாயினி தான்டி .” என சொல்ல, “நாம எதையும் வெளிய காட்டிக்கிறது இல்லடா…’’ என அவள் தோளை குலுக்க, அவர்கள் இருவரும் இடது கையில் ஹைபை கொடுத்து கொண்டனர்.

“முருகா… இதெல்லாம் என்னை பார்க்க வைக்கிறியே.’’ என்று சங்கரி தலையில் அடித்து கொள்ள, “சிக்கன் தின்னும் போது முருகா முருகா சொன்னா… கறி எப்படி மேன் உடம்புல ஒட்டும். அதான் அலைவ் ஸ்கெலிடல் மாதிரி சுத்திட்டு இருக்க. எதுக்கும் நீ அனாடமி லேப் பக்கம் போயிடாத. ஸ்கின் உள்ள ஸ்கெலிட்டல்னு உன்னை பிடிச்சி கண்ணாடி அலமாரியில அடைச்சி வச்சிட போறாங்க.’’ என்றாள் மதி நக்கலாய்.

“நீ கூட தான் ஹிப்பே இல்லாமா ஹிப்போபோட்டமஸ் மாதிரி திரிஞ்சிட்டு இருக்க. உன்னையே பிடிச்சி இன்னும் ஜூல அடைக்கல. அப்புறம் எப்படி என்னை அடைப்பாங்க.’’ என்றாள் சங்கரி கடுப்புடன்.

‘அய்யய்யோ இவளுக பஞ்சாயத்தை இங்கயும் கூட்டிட்டாளுகளா…!’ என்று மனதிற்குள் வெருண்ட மகிழ், “ஏய் வாயை மூடிட்டு சாப்பிடுங்க. இல்ல பில்லை எல்லாரையும் ஷேர் செய்ய சொல்லுவேன்.’’ என மிரட்டல் விட, அது நன்றாக வேலை செய்தது.

அத்தனை நேரம் இடி, மழை, மின்னல் என்று முழங்கிக் கொண்டிருந்த இடத்தில் புயல் வந்து ஓய்ந்த அமைதி மீண்டது. அனைவரும் உண்டு முடிக்கவும் மல்லி மெதுவாக, “குல்பி…’’ என்றாள் தலை சரித்து சிறு பிள்ளை போல.

அவள் அதை கேட்ட பாங்கில் மகிழுக்கு முன் மதி, “வாங்கிக்கோடி செல்லம்.’’ என்றிருந்தாள். அடுத்து ஐஸ்கிரீம் சுற்றையும் முடித்தவர்கள் வெளியே வர, மகிழ் உணவிற்கான தொகையை செலுத்தப் போனாள்.

அப்போது மதி தான் பாதி பங்கை செலுத்த வர, மகிழ் மறுக்கும் போதே,  மல்லி பனிக்கூழிற்கு உரிய பணத்தை செலுத்த முன் வந்தாள். இருவரும் வேண்டாம் என தடுத்த போதும், “சீனுவுக்கு நிறைய ட்ராவல்ஸ் புக் ஆச்சு இந்த வீக் புல்லா. பயபுள்ள வச்சிக்கோன்னு சொல்லி தவுசன் கொடுத்துச்சு.” என்று கண் அடிக்க, அதன் பின் இருவரும் அவளை தடுக்கவில்லை.

தொகையை செலுத்தி முடித்த பின் ஐவரும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர். வீட்டை அடைந்த மல்லி, வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, அலைபேசியை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள். அப்போது மகிழ் அனுப்பியிருந்த போட்டிக்கான விவரங்களை கண்டவள், “மதி சொன்ன மாதிரி சும்மா ஒரு ட்ரை செஞ்சி பார்த்தா என்ன..?’’ என்ற எண்ணம் தோன்ற, கவிதை என்ற திரிக்குள் நுழைத்தவள், அவர்கள் கொடுத்திருந்த தலைப்புகளை பார்வையிட்டாள்.

‘அரசு மருத்துவமனை, சார்லஸ் டார்வின், விலைமாது, கூழாங்கல், வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…’ இப்படி ஐந்து வகையான தலைப்புகள் இருந்தன. மல்லிக்கு ஏனோ, விலைமாது என்ற வரியை படித்ததும், அந்த தலைப்பிற்கு ஒரு கவிதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

தன் டைரியை எடுத்து அமர்ந்து கொண்டவள், கண் மூடி சில நொடிகள் அமர்ந்தாள். அதன் பின் இதயத்தில் தோன்றிய உணர்வுகளுக்கு வார்த்தையில் வடிவம் கொடுத்து, பேனாவென்ற உளியால் காகிதத்தில் செதுக்கினாள்.

இருபது நிமிடங்களில் கவிதை முற்று பெற்று இருக்க, முதன் முதலாய் தான் எழுதிய நீண்ட கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்து பார்த்தாள். அவளுக்கு கண்களின் ஓரம் நீர் துளிர்த்தது. அந்த போட்டியின் விதி முறைகளின் படி கவிதையை தன் அலைபேசியில் தமிழில் தட்டச்சு செய்து, அவர்கள் கொடுத்திருந்த மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தவள், அதோடு அதை மறந்து அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.

நேற்றைக்கு சுந்தர் தன்னை கீழே இறங்கி படுக்க சொன்ன போது, என்ன தான் மனம் கோபத்தில் குதித்தாலும், அவன் அருகே உள்ளம் பாதுகாப்பாக உணர்ந்தது என்னவோ உண்மை. சிறு வயதிலிருந்தே அவனுக்கு தன்னை அத்தனை பிடிக்காது என்பதை மல்லி அறிவாள். ஆனாலும் திருமணம் என்று வந்த போது, ஏன் அவனை தேர்ந்தெடுத்தாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

சிறுவயது முதலே அவளோடு ஒரே பள்ளிக் கூடத்தில் படித்தவள் செல்வி. இருவரும் நெருங்கிய தோழிகள். செல்வி நன்றாக படிக்க கூடியவள். அதிலும் மல்லிக்கு புரியாத கணக்கை அவள் மண்டையில் உட்கார வைப்பதே செல்வி தான்.

அவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் இருக்கும் போது, செல்வி திடீரென சோகமானாள். மல்லி எத்தனை பேச்சு கொடுத்து பார்த்தும், அவளால் காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஒருநாள் அவர்கள் இருவரும் வெள்ளையன் தாத்தா தோட்டம் வழியே சைக்கிளில் வரும் போது, செல்வி இவளிடம், “அந்த கிணத்தோரம் அரை நெல்லி மரம் இருக்கு. பறிச்சிட்டு போவோமா…?’’ என கேட்டாள்.

சில நாட்களாக ‘உம்’மென்று திரிந்த தோழி, வாய் விட்டு ஒன்றை கேட்கவும், மல்லி சரியென சொல்லி, தன் சைக்கிளை நிறுத்தி விட்டு, நெல்லிக்காயை பறிக்க, கிணற்றின் பக்க சுவரில் ஏறி நின்றாள்.

அப்போது கிணத்தில் ஏதோ பலமாக விழுந்த ஓசை கேட்க, மல்லி பதறி திரும்பினாள். உள்ளே விழுந்தது செல்வி என்பதை முங்கி வெளி வந்த அவள் பள்ளி உடை அறிவிக்க, அவள் சர்வமும் நடுங்கிவிட்டது.

அவள் அலறுவதற்கு வாயை திறக்கும் முன்பே, யாரோ ஒரு ஆடவன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல, கிணத்தில் குதித்திருந்தான். இவள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, செல்வியின் தலைமுடியை பற்றி சுந்தர் பக்க படிக்கட்டுகளின் வழி மேலேறிக் கொண்டிருந்தான்.

Advertisement