Advertisement

“அடி… நான் எங்கடி கொடுத்துவிட்டேன். அவனா வந்து பறிச்சிட்டு போயிருப்பான்.’’ என்றார் பாரி. “என் லப்பரை ஆட்டையப் போட இந்த வேலைய பாத்து இருக்கான் கருவா. சாயங்காலம் வந்து அவனை பேசிக்கிறேன். வரேன் அத்தை.’’ என்றவள், அங்கிருந்து தன் மிதி வண்டியை இயக்கினாள்.

கீழே விழுந்த பூவை ஒரு ஓரமாக எடுத்து போட்ட பாரி, மீண்டும் வீட்டிற்குள் செல்ல, அந்த பூவை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். தன் காதல் மலர், சருகாகி உரமான மண்ணில் தான் வருங்காலத்தில் தன் கல்யாணம் பூ மலரும் என்பதை அவன் அப்போது கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

தொலைவில் எங்கோ காகம் கரைய, தன் கடந்த கால நினைவலையில் இருந்து மீண்டான் சுந்தர். அத்தனை நேரம் அமர்ந்திருந்த மர நிழலில் இருந்து எழுந்து கொண்டான் சுந்தர். முன்பிருந்த கோபத்தை இப்போது ஆற்றாமை நிரப்பியிருந்தது.

நேராக வீட்டிற்குள் நுழைந்தவன், கண்ணில் பட்டது கூடத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த மல்லி தான். தங்கள் அறைக்குள் நுழைந்தவன், அவர்களின் அலமாரியிலிருந்த பணம், பண பரிவர்த்தன அட்டை முதலியவற்றை கையில் எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

அவளின் முன் வந்து நின்றவன், அதையெல்லாம் அவள் எழுதிக் கொண்டிருந்த சாய்வு மேஜையில் வைத்தான். மல்லி திகைத்து போய் பார்க்க, “இனி நீயே நம்ம வீட்டு மேனேஜ்மென்ட் பாத்துக்கோ. என்னோட சம்பளத்தையும் ஒரு ரூபா குறையாம நான் உன்கிட்டயே கொண்டு வந்து கொடுத்துடுறேன். எனக்கு ஒரு டீக்கு கூட காசு வேண்டாம். என்ன இருந்தாலும் என்னை விட உனக்கு தான் அதிகம் சம்பளம். நான் ஒரு முட்டாள். இதெல்லாம் நான் முன்னாடியே உன்கிட்ட கொடுத்து இருந்து இருக்கனும். இன்னொரு குழந்தை நம்ம வாழ்க்கைக்கு வேணுமான்னு முடிவு செய்யவே என்கிட்ட சம்மதம் கேக்காதவ நீ…? ட்ரெஸ் வாங்க எல்லாம் என்னை கேக்கப் போறியா என்ன…? இனி நீ, உன் பசங்க… உங்க அத்தை இவங்களை மட்டும் நீ பாத்துகிட்டா போதும். இந்த வீட்ல இனி ஒரு பிடி சோறு கூட எனக்கு வேண்டாம்.’’ என்றவன் மீண்டும் கோபமாய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

மல்லி என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே சுந்தர் தன் ஏமாற்றத்தை எல்லாம் கோபமாய் கொட்டி தீர்த்து விட்டு போயிருந்தான். மல்லி பணத்தையும், பரிவர்த்தன அட்டையையும் மீண்டும் அலமாரியில் கொண்டு போய் வைத்துவிட்டு கண்ணோடு உள்ளமும் கலங்க நின்றிருந்தாள்.

அதற்கு அடுத்து ஒரு வாரமும், சுந்தர் வீட்டில் ஒரு டீ கூட குடிக்கவில்லை. பாரிக்கு இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றாலும், ஏதோ புருஷன் பொண்டாட்டி பிரச்சனை, சில நாட்களில் தானாக சரியாகிவிடும் என்று இருவரையும் விட்டுப் பிடித்தார்.

ஆனாலும் மகன் வீட்டில் உணவை உண்ணாமல் நாட்களை கடத்துவது தாயாய் அவருக்கு அளப்பரிய வேதனையை கொடுத்தது. ஒரு வாரத்திற்கு மேல் மல்லியால் அப்படியே நாட்களை கடந்த முடியவில்லை.

அன்றைக்கு இரவு தங்கள் அறையில், தோட்டத்தில் விளைந்த செவ்வாழை பழங்கள் இரண்டை உண்டுவிட்டு அவன் படுக்க, அவன் அருகே கண்ணில் கண்ணீரோடு நின்றவள், “நான் இனி உங்ககிட்ட சொல்லாம ஒரு ரூபா கூட செலவு செய்ய மாட்டேன். ஏன் இனி நான் செலவே செய்ய மாட்டேன். ப்ளீஸ்…! இனியும் இப்படி ஒதுங்கி இருக்காதீங்க. அத்தை ரொம்ப வருத்தப்படுறாங்க.’’ என்றாள் கலங்கிய குரலில்.

‘இப்ப கூட உங்க அத்தைக்கு வலிக்குதுன்னு தான் என் முன்னாடி நின்னு நீ அழற இல்ல. ஆனா என்னால உன் கண்ல இருந்து வர தண்ணியை பார்க்க முடியலைடி…!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அப்போதே எழுந்து சென்று சமையல் அறையில் இருந்த உணவை எடுத்து வந்து மனைவியின் முன் அமர்ந்து உண்டான்.

இப்போது மல்லிக்கே மனது விட்டிருந்தது. ஆக தானாய் முயன்று அவனை தவிர்த்து கொண்டாள். அது அப்படி ஒன்றும் கடினமான காரியமாக இல்லாதிருக்க, மறுபடி மல்லியின் வாழ்வு குழந்தைகள், பாரி, அம்மா வீடு என்ற வட்டத்தை சுற்றி வர ஆரம்பித்தது.

“ஹை… அம்மா….!’’ என்ற குழந்தைகளின் உற்சாக குரல் அவளை நடப்பிற்கு திருப்பியது. கடந்த கால சிந்தையில் மூழ்கியிருந்தவள், தன் சிந்தை வலை அறுத்து நடப்பிற்கு திரும்பினாள். குழந்தைகளிடம் இனிப்பை நீட்ட, அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டவர்கள், அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

அடுத்து தன் அத்தையிடம் அவள் பூந்தியை நீட்ட, “என்ன விசேசம் கண்ணு.’’ என்றார். “சும்மா தான்.’’ என்றவள் சுந்தருக்கு வாங்கிய இனிப்பை அடுக்களையில் வைத்து விட்டு, தீபாவளிக்கு என்று வாங்கி அன்று நேரமின்மையால் செய்யாது விடுபட்டு போன குலோப்ஜாமூன் பொட்டலத்தை எடுத்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் காற்றில் சர்க்கரை பாகாகும் வாசம் புறப்பட, சுட சுட ஜாமூன் தயாரானது. அது பாகில் ஊறுவதற்கு ஒரு மணி நேரம் கொடுத்தவள், செய்ததில் முக்கால் உருண்டைகளை தன் தாய் வீட்டிற்கு பாத்திரத்திலடைத்து எடுத்துக் கொண்டாள்.

“அத்த… அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்.’’ என்று பாரியிடம் விடை பெற்றவள், குழந்தைகளோடு நூறடி தள்ளியிருந்த தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கே அவளுக்கு வரவேற்பு தடபுடலாய் இருக்க, தான் செய்து கொண்டு வந்திருந்த ஜாமூனை அம்மாவிடம் நீட்டினாள்.

“என்னடி திடீர்னு.’’ என்று சீதை கேட்க, “சும்மா ஜாமூன் சாப்பிடனும் போல இருந்தது.’’ என்று சொல்லி வைத்தாள். அடுத்த இரண்டாம் நிமிடமே மொத்த ஜாமூனும் காலியானது. மூத்த தம்பி அகில், அவன் மனைவி வெண்பா, அவர்களின் குழந்தை மகேந்திரன், தாய், தந்தை, இளைய தம்பி சீனு என்று அனைவரும் வீட்டில் இருக்க, பாத்திரம் மூன்று சுற்று சுற்றி வந்ததில் காலியாகியிருந்தது.

அதில் அவள் மழலை செல்வங்களும். “எனக்கு ஆ…’’ என்று இடையில் ஓடியிருந்தனர். என்னவோ அப்போது தான் மல்லிக்கு மனது சமனப்பட்டது. ஆனாலும் மனதிற்குள் இருந்த ஆற்றாமை ஓயவேயில்லை.

அன்றைக்கு விரைவாக வேலையை முடித்தவள், குழந்தைகளோடு அறையில் உறங்கியிருந்தாள். சுந்தர் வேலை முடிந்து வந்தவன் கூடத்தில் மனைவியை காணாது லேசாக நெற்றி சுருக்கினான். மல்லி அவனுக்கு பரிமாறுவது இல்லை என்றாலும், இவன் வீட்டிற்கு வந்து உண்டு முடிக்கும் வரை, எழுத்து வேலை இருப்பதை போல கூடத்தில் தான் அமர்ந்திருப்பாள்.

அடுக்களைக்குள் சென்று தனக்கான உணவை தட்டில் பரிமாறிக் கொண்டவனின் கண்களில் பட்டது அந்த சிறிய இனிப்பு டப்பா. அதை திறந்து பார்த்தவன் அதிலிருந்த காஜு கத்லிகயில் இரண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

அதன் சுவை மீண்டும் சுவைக்க தூண்ட அந்த பெட்டியில் இருந்த இனிப்பை மீண்டும் மீண்டும் எடுத்து உண்டவன், அதில் ஒரு மூன்று மட்டும் மிச்சம் இருக்கும் போது, மீண்டும் உணவு தட்டை எடுத்து கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தான்.

உண்டு முடித்தவன் அறைக்குள் நுழைய, அங்கு கண்ட காட்சி அவன் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தது. மூன்று குழந்தைகளையும் முன்னால் விட்டு, சுவர் ஓரம் ஒடுங்கி மல்லி படுத்திருந்தாள். கட்டிலில் இருந்து குழந்தைகள் கீழே விழாமல் இருக்க, ஓரத்தில் தலையணைகள் அடுக்கியிருந்தாள்.

இப்போது அவனுக்கு அந்த கட்டிலில் இடமில்லை. அவனுக்கு அதில் கூட வருத்தமில்லை. அவள் அருகில் உறங்க முடியாதே என்பது மட்டுமே வருத்தமாயிருக்க, அவள் வாசமின்றி இன்றைக்கு இரவு எப்படி உறங்குவது என்பதே அவனுக்கு பெருங்கவலையாகிப் போனது.

மறந்து அப்படியே தூங்கியிருப்பாள் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன் தான் தரையில் பாய் விரித்து படுக்க முடிவு செய்தான். அதே நேரம் மல்லியின் அலைபேசி அழைத்தது. திரையில் ஸ்கெலிட்டல் என்ற பெயர் வர, “யாரை இவ எலும்புக் கூடுன்னு எல்லாம் பேர் வச்சி இருக்கா..?” என்று எண்ணியவன், அவள் உறங்கிவிட்டாள் என்று சொல்ல அந்த அழைப்பை ஏற்றான்.

ஆனால் இவனை ஒரு ‘ஹெலோ’ கூட சொல்ல விடாமல் மறுமுனை பட்டாசாய் வெடித்தது. “என்னடி தூங்கு மூஞ்சி… நம்ம தூக்க மாத்திரை சொன்ன அசைன்மென்ட் எழுதிட்டியா…? எழுதிட்டனா எனக்கு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்புடி. என்னால கான்சென்ட்ரேட் செஞ்சி தேடி தேடி எழுத முடில. தூங்கிட்டே இருந்தாலும் நீ பர்பக்ட்டா எழுதிருவ. நம்ம காதர்பாய் சொன்ன மாதிரி தூங்கி தூங்கியே யுனிவர்சிட்டி எக்ஸாம்ல பர்ஸ்ட் மார்க்கை தூக்கிட்டு வந்தவ தானே நீ. சரியான அமுக்குனி.’’ என்றவள், “பேசுடி” என்று குரல் கொடுத்தாள்.

“நான் சுந்தர். அவங்க ஹஸ்பன்ட் பேசுறேன். அவ தூங்கிட்டா. இப்ப எழுப்பவா. இல்ல காலையில பேச சொல்லட்டா.’’ என்றான்.

“அச்சோ… அண்ணா…! சாரி அண்ணா. நான் காலைலேயே அவகிட்ட பேசிக்கிறேன்.’’ என்ற சங்கரி உடனே அழைப்பை துண்டித்திருந்தாள். சற்று நேரத்திற்கு முன் வாயில் கரைந்த இனிப்பு தற்சமயம் பாகற்காயாய் கசந்தது.

‘கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கிய விசயத்தை நேரில் சொல்லி அந்த இனிப்பை தந்திருந்தால் என்ன…? இவள் என்ன நினைத்து கொண்டிருக்கிறாள்…? இவள் ஒதுங்கிப் போனால்… நானும் இவள் வாழ்விலிருந்து ஒதுங்கி ஓரமாய் போய்விடுவேன் என்றா…?’ என்று அவனுக்குள் கண் மண் தெரியாமல் ஆத்திரம் பெருக, உறங்கிக் கொண்டிருந்தவளின் தோள் பற்றி வேகமாய் உலுக்கி எழுப்பினான்.

கடந்த ஐந்து மாதமாய் மல்லி அவனிடமிருந்து ஒதுங்கிப் போக, அவள் நன்றாக உறங்கிய பின் அவளை வாசம் பிடித்தபடி அருகில் படுத்துக் கொண்டான். அவ்வளவே. மற்றபடி எந்த வகையிலும் அவளை அணுகவில்லை.

உடை விசயத்தில் தான் நடந்து கொண்டது அதிகப்படி என்று அவனுக்கே புரிந்திருந்தது. ஆனால், அதில் தான் வெளிப்படுத்தியது உரிமை உணர்வு என்பதை மல்லி புரிந்து கொள்ள போவதில்லை என்பதை அவன் நன்கு அறிவான். அவன் செலவுக்கு என்று குறைவாக பணம் கொடுத்தாலும், சீனுவின் மூலம் அடிக்கடி  அவள் கையில் பணம் புழங்குமாறு பார்த்துக் கொள்வான்.

‘எப்பவும் அம்மா, அப்பா, அத்த, தம்பிங்க, பிள்ளைங்க… அவ வாழ்கையில எனக்கு என்ன இடம் கொடுத்து வச்சி இருக்கான்னு கூட எனக்கு தெரியல.’ என்று மனதிற்குள் மறுகினாலும் அவளின் மனதிற்கு மதிப்பு கொடுக்க விரும்பி அவளை நெருங்காமலிருந்தான்.

ஆனால் இப்போது அலைபேசியில் சங்கரி சொல்லிய வார்த்தைகள் அவனுக்கு கோபத்தை விட, பயத்தை அதிகம் கொடுத்தது. ‘தான் இப்படியே விலகி இருந்தால்… தன்னை தவிர்த்து வாழும் ஒரு வாழ்வுக்கு மல்லி தன்னை தயார்படுத்திக் கொள்வாளோ’ என்ற பேரச்சம் அவனுள் எழுந்தது.

அவனை உலுக்கி எழுப்பியதில் மல்லி என்னவோ ஏதோவென்று விழித்தாள். அவள் கண்களை நேராக பார்த்தவன், “கீழ இறங்கி வந்து படு.’’ என்றான் உத்தரவாய். தூக்க கலக்கத்தில் அவன் பேசியது முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

புரிந்த பிறகு அவனை அதிர்ந்து பார்த்தவள், பின் பிடிவாதமாய் கட்டிலின் மேலேயே அமர்ந்திருந்தாள். அவளை உறுத்து விழித்தவன், “இப்ப நீ கீழ வந்து படுக்கலைனா இருக்க இடத்துல நான் உன் மேல ஏறி படுப்பேன்.’’ என்றான் பிடிவாத குரலில்.

‘அச்சோ…’ என்று மனதிற்குள் அலறிக் கொண்டவன், வேண்டா வெறுப்பாய் கீழே இறங்கி வந்தாள். அவள் கீழே இறங்கி படுக்கவும், அவன் அருகில் படுக்க, அவளோ பாயிலிருந்து தள்ளி சென்று படுத்தாள்.

மீண்டும் அவளை இழுத்து பாயில் போட்டவன், “ஒழுங்கா இதே இடத்துல படு. உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது. தூங்கு.” என்றவன் அவள் இடையில் கை போட்டு பின்பக்கமாய் அணைத்தபடி கழுத்தின் பின்புறம்  முகம் புதைத்து கொண்டான்.

சற்று நேரம் அவன் பிடியில் இறுகிப் போய் கிடந்தவள், அலுப்பில் தன்னையும் மீறி உறங்கினாள். அவள் நன்றாக உறங்கிவிட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவன், அவள் உச்சியில் இதழ் பதித்து, “கங்ராட்ஸ் அச்சுமா. அது என்ன நான் உன்னை கொஞ்சும் போது தான் தூங்குறன்னு பார்த்தா… கிளாஸ் கூட தூங்கிட்டு இருக்கியா என் கும்பகர்ணி. நீ தூங்கிட்டே இருந்தாலும் உன்னோட பர்பாமான்ஸ் மட்டும் குறையுறதே இல்லையாமே. இந்த மாமனை மட்டும் நல்லா ஏமாத்துற ராட்சசி. இரு ஒரு நாள் இல்ல ஒருநாள் உன்கிட்ட இருந்து வட்டியும் முதலுமா வசூல் செஞ்சிடுறேன்.’’ என்று தன் காதலியை கொஞ்சிக் கொண்டிருந்தான் அந்த கனவுக் காதலன்.

பந்தமாகும்.

Advertisement