Advertisement

‘நான் இங்க இருந்து காலேஜ் கிளம்பும் போது அரைகாப்படி சைசுல தானே இருந்தா. இப்போ பனை மரத்துல பாதி உசரம் வளர்ந்து நிக்குறா. அடேங்கப்பா என் கழுத்து உசரம் இருப்பா போலேயே.’ என்று மனது கற்பனையில் அவளை தன் அருகில் ஜோடி சேர்த்து அழகு பார்த்து கொண்டிருக்க, தன் எண்ணம் செல்லும் பாதையின் வீரியம் உணர்ந்தவன், தன் தலையில் தானே தட்டிக் கொண்டான்.

‘ஸ்கூல் போற பொண்ணை போய் சைட் அடிக்குறடா நீ…’ என்று மனதிற்குள் தன்னை தானே திட்டிக் கொண்டவன், அவள் அங்கிருந்து கிளம்பவும் கீழிறங்கி வந்தான். அன்றைக்கு அவனுக்கு அவர்கள் ஊரை ஒட்டி புதிதாய் முளைத்திருந்த சி.பி.எஸ்.சி பள்ளியில் நேர்முக தேர்வு இருந்தது.

சொற்ப வருவாய் என்றாலும் கூட, ஆசிரியன் என்றால் அது தரும் நிறைவே தனி என்று உணர்ந்திருந்தவன் அந்த வேலைக்கு விண்ணப்பித்து இருந்தான். அவர்கள் நேர்முக தேர்விற்கு அழைத்திருக்க அதற்காய் கிளம்பி கொண்டிருந்தான்.

மகன் வெளியே கிளம்பி நிற்க, அவன் முன் சற்றைக்கு முன் மல்லி கையில் வைத்திருந்த பாத்திரத்துடன் வந்து நின்ற பாரி, “தம்பி… கோமு மாமா வீட்ல இந்த செம்படத்தை கொடுத்துட்டு போறியா. அடுக்களையில எனக்கு வேலை இன்னும் ஒழியல.’’ என்றார்.

அவர் கையில் இருந்த பாத்திரத்தில், புளிச்ச கீரை மசியல் ஆவி பறக்க மணத்து கொண்டிருந்தது. ‘என்ன இது’ என்று மகன் பார்க்க, “இந்த மல்லி புள்ள பள்ளியூடத்துக்கு புளிச்ச கீரை மசியல் வேணும்னு நேத்தே சொல்லிட்டு போயிருந்தா. கீரை வேகும் போதே வாசல்ல வந்து நின்னா… சித்த நில்லு கடஞ்சி தாரேன்னு சொல்ல சொல்ல கேக்காம… ஓடிட்டா. இத செத்த அவங்க வீட்ல குடுத்துட்டு போ ராசா. சீதா நேரஞ் செண்டு தான் குழம்பு வைப்பா. பிள்ள வெள்ள சோத்தை மட்டும் எடுத்துட்டு கிளம்பிற போறா…’’ என்றார் அக்கறை உள்ளூற.

‘பாருடா… அழகி ரெண்டு நிமிஷம் நின்னு வாங்கிட்டு போக மாட்டாளா. வாங்குறது ஓசி. இதுல வெட்டி சீனு வேறயா அம்மணிக்கு.’ என்று உள்ளுக்குள் அவளை போலியாய் கடிந்து கொண்டவன், வேண்டா வெறுப்பாய் பெற்று கொள்பவன் போல, “சரி கொடுங்க. ஆனா இது தான் கடைசி தடவை.’’ என்று வெளியே முறைத்தவன், அந்த பாத்திரத்தை பெற்று கொண்டு கோதண்டன் வீட்டை நோக்கி நடந்தான்.

வெளி முற்றத்தில் தன் மிதிவண்டியின் பின் இருக்கையில் பள்ளிப் பையை பொறுத்திக் கொண்டிருந்தவள், இவனை காணவும், ‘ஆத்தாடி இவனா…’ என தலையை பூமிக்குள் புதைத்து கொள்பவள் போல குனிந்து கொண்டாள்.

சுந்தர் தான் மல்லியை நெடு நாட்கள் கழித்து பார்கிறான். ஆனால் மல்லி அவன் ஊருக்கு வரும்போதெல்லாம் அவனை பார்த்து கொண்டு தான் இருந்தாள். மேலிருக்கும் அவள் அறையில் இருந்து பார்த்தாள் அவர்கள் வீட்டு மொட்டை மாடி தெரியும்.

ஆக அவன் விடுமுறையில் ஊருக்கு வரும் போதெல்லாம், மொட்டை மாடியில் நின்று பல் தேய்கிறேன் பேர்வழி என்று ஊரை நோட்டமிடும் காட்சியை பல முறை பார்த்திருக்கிறாள்.

சுந்தர் ஊருக்கு வரும்போதெல்லாம் கோதண்டனுக்கு தகவல் கொடுத்துவிட்டே வருவான். அதை அவர் மனைவியிடம் மொழி பெயர்க்க, அவரோ மல்லியிடம், “பாரி வூட்டுக்கு போயி அழிச்சாட்டியம் பண்ணாத. அவ பையன் வந்திருக்கான் லீவுக்கு. அம்மா பையனுக்கு நடுவுல நந்தி மாதிரி போய் நிக்காத.’’ என்று மகளை அந்த நாட்களில் அங்கே அனுப்பமாட்டார்.

‘இப்ப இவன் வரலைன்னு யார் அழுதா. ஐயோ அத்தை வீட்ல மட்டன் சுக்கா வாசம் வருதே. போய் ஓசி வாங்கிட்டு வர கூட வழியில்லையே.’ என்று நொந்து போவாள். ஆனால் அவள் ஒவ்வொரு அசைவையும் பார்வையில் உணர்ந்துவிடும் பாரியோ, தானே சுக்காவை கொண்டு வந்து கொடுத்து போவார்.

தம்பிகளுடன் சண்டையிட்டு தனக்கு மட்டும் நிறைய பங்கை லாவகமாய் லவட்டி சுக்காவை பிளந்து கட்டுவாள் மல்லி. என்னவோ சுந்தரிடம் சிறுவயதில் முகிழ்த்த ஒதுக்கம் அப்படியே அவள் மனதில் பதிந்திருந்தது.

அவனை கண்டாலே, ‘ஓடு மல்லி ஓடு…’ என்று உள்ளே ஒரு குரல் கேட்க அங்கிருந்து நழுவிவிடுவாள். இப்போது வாசலில் நின்றிருந்த சுந்தர், அவள் தலை குனிந்திருக்க இன்னும் அவளை ஊன்றி கவனித்தான்.

காலையில் தன் வீட்டு வாயிலில் அவன் ரசித்த மஞ்சள் ரோஜா, தற்சமயம் அவளின் இடது பக்க காதோரத்தில் குடி கொண்டிருந்தது. இப்போது ரோஜா இன்னும் அழகாய் இருப்பதாக அவனுக்கு தோன்ற அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கியவன், அந்த ரோஜாவை தொட தன்னை மறந்து கைகளை உயர்த்தி இருந்தான்.

ஆனால் அதே நேரம், “வாங்க மாப்பிள்ளை. எப்ப வந்தீங்க…?’’ என நலம் விசாரித்தபடி கோதண்டம் வாயில் வந்து நின்றார். “நேத்து நைட் தான் வந்தேன் மாமா. நல்லா இருக்கீங்களா..?’’ என்றான் சம்பர்தாயமாக.

“நமக்கு என்னய்யா குறை. உழவு ஓட்றவன் உடம்பு உளுத்தா போகும். அதெல்லாம் நல்ல உரமா தான் கிடக்கேன். கையில என்ன இது பாத்திரம்..?’’ என கேட்க, “அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க.’’ என்றபடி பாத்திரத்தை அவரிடம் நீட்டினான்.

உடனே பெரிதாய் சிரித்தவர், “எல்லாம் இந்த கழுதைக்கு தான். சீதை வைக்குற குழம்பை ஆயிரம் நொட்ட சொல்லிட்டு உங்க ஆத்தா குழம்பை ஓசி வாங்கி தின்னுட்டு அலையுறா. அதுக்கு சீதா வெள்ளன குழம்பு செய்யுறது இல்லைன்னு உங்க ஆத்தாகிட்ட கதை வேற. நீட்டிகிட்டு  நிக்கிறாரு இல்ல. வாங்கு கழுத.’’ என்றார் மகளிடம்.

உடனே வலது காலை வேகமாய் தரையில் உதைத்தவள், “என்ன கழுத சொல்லாதீங்க…’’ என அவரைப் பார்த்து சன்னமாய் முணகி, முறைத்துவிட்டு உள்ளே சென்றாள். “இப்படி தப் தப்னு  தரையை உதச்சிட்டு திரிஞ்சா… மயிலுன்னா சொல்ல முடியும். கழுதைன்னு தான் சொல்ல முடியும்.’’ என்று அவர் உரத்து குரல் கொடுக்க, இப்போது சுந்தருக்கும் கூட லேசகா சிரிப்பு வந்திருந்தது.

புளிச்ச கீரையை தன் உணவு டப்பாவிற்கு இடம் மாற்றியவள், இப்போது சிரித்து கொண்டிருந்த சுந்தரை முறைத்தபடியே வெளியே வந்தாள். அது அவனுக்கு இன்னும் சுவாரசியத்தை தர, ‘என்ன’ என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

உடனே மல்லி வேகமாய் தன் தலையை தாழ்த்திக் கொண்டாள். அவள் தன் மிதி வண்டியில் பள்ளிக்கு கிளம்பும் நேரம் சீதை வெளியே வந்தாள். “வாங்க தம்பி. எப்ப வந்தீங்க. நல்லா இருக்கீங்களா… படிப்பு எல்லாம் முடிஞ்சதுன்னு உங்க அம்மா சொல்லிட்டு இருந்தாங்க.’’ என்று அவரும் தன் பங்கிற்கு விசாரிக்க, அவரின் கேள்விகளுக்கு பணிவாய் விடை கொடுத்தவன் ஓர விழிப் பார்வையோ மல்லியின் மீது நிலை கொண்டிருந்தது.

பெற்றவர்களிடம் வருகிறேன் என்பதாய் தலை அசைத்து விடை பெற்றவள், இவனிடம் மருத்துக்கு கூட பார்வையை நகர்த்தவில்லை. ‘என்ன பார்த்தா கண்ணு சுளுக்கிருமா…?’ என்ற எண்ணம் உள்ளே தோன்றினாலும், ‘நீ யாரு அவளுக்கு…’ என்று மூளை நங்கென்று கொட்டு வைத்து அவனை அடக்கியது.

அவர்களிடம் விடைபெற்று நேர்முக தேர்விற்கு கிளம்பினான், ஆசிரியப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டான். மாத சம்பளம் சொற்பமாய் இருந்தாலும், அன்றைய தேதிக்கு அவனுக்கு அதுவே ஒரு கணிசமான தொகையாக தோன்ற மகிழ்வுடனே ஒப்புக் கொண்டான்.

அதோடு அவனின் கனவான எம்.எட் படிப்பை தபாலில் தொடர்வதற்கும் அந்த பணம் உதவும் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி அவனுக்கு. இடையில் நிறுத்தியிருந்த கழனிப் பணிகளையும் மாலையில் மேற்கொண்டான். மாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பால் உற்பத்தியின் மூலமும் வருவாய் ஈட்ட முயன்றான்.

காலையில் ஆசிரியன், மாலையில் விவசாயி என்ற இரட்டை வேடத்தை மனமுவந்து மகிழ்ச்சியுடன் ஏற்றான். இதோடு மூன்றாம் வேலையாக மல்லி அவனை கவனிக்காத போதெல்லாம், அவளை கவனிக்க தொடங்கியிருந்தான்.

அவனுக்கே தெரியவில்லை. அவளிடம் தனக்கு என்ன பிடிக்கிறது என. அவளை காணும் போதெல்லாம் மனதில் ஒரு மகிழ்ச்சி உணர்வு வந்து ஒட்டி கொள்ள, அந்த உணர்வை கொண்டாட துவங்கியிருந்தான்.

அந்த வருடம் தான் அவள் பத்தாம் வருட பொது தேர்வை எதிர்கொள்ள போகிறாள் என்று அறிந்து கொண்டவன், அவளை நேரில் சந்திக்கும் போதெல்லாம் பழைய கடு கடு சுந்தாரகவே கடந்து விடுவான்.

முன்பெல்லாம் மொட்டை மாடியில் நிற்கும் அவனை இவள் கண்டிருக்க, தற்சமயம், அவள் வாசலில் கோலம் போடுவதில் ஆரம்பித்து, பள்ளி கிளம்பும் வரை அவளின் நடவடிக்கைகளை மொட்டை மாடியில் நின்றபடி திருட்டுதனமாய் இரசித்து பார்ப்பது இவன் செயல் ஆனது.

அவளின் பார்வை மொட்டை மாடியின் பக்கம் வந்தால், உடனே பார்வையை வேறு திசைக்கு திருப்பி கொண்டு விடுவான். அவள் விரும்பி உண்ணும் தின்பண்டங்களை அறிந்து கொண்டவன், அதை தங்கள் வீட்டில் வாங்கி வந்து வைத்தான்.

பாரி மல்லி வரும் போது, அதில் முக்கால் பங்கை அவளுக்கு கொடுத்து அனுப்புவார். “இங்க யாரும் தின்றது இல்ல. பண்டம் வீணாப் போகும்.” என்ற விளக்கத்தோடு. ‘மருமகளை பார்த்துட்டா… மகன் நினைப்பு வருமா’ என்று மனதிற்குள் செல்லமாய் அலுத்து கொள்பவன் இதழ்களோ புன்னகையில் மலர்ந்து தான் இருக்கும்.

பாரி நட்டு வளர்த்த பூச்செடிகளோடு அடுக்கு மல்லி, ஜாதி மல்லி, வெவ்வேறு நிறங்களில் பூக்கும் ரோஜா என்று வித விதமான பூச்செடிகளையும் தங்கள் தோட்டத்தில் பதியன் போட்டான். “இத்தன பூச்செடி எதுக்குப்பா…?’ என்று கேட்ட தாயிடம், “சாமி படத்துக்கு மா..’’ என்று சொல்லி வைத்தான்.

அவனுக்கு தான் தெரியுமே. மல்லி தலைக்கு போக மீந்தது தான் தங்கள் வீட்டு பூஜை அறைக்கு என்று. இவன் உரம் போட்டு நீர் ஊற்றி வளர்த்த ரோஜா செடியில் முதல் பூ பூத்திருந்தது. அதை மல்லி வைத்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சுந்தரின் மனம் ஏங்கியது.

ஆனால் அதை யாரிடம் கொடுத்து விடுவது என்று சிறிது நேரம் குழம்பியவன், அவளின் இளைய தம்பி சீனு தன் சக தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டவன், அந்த பூவை பறித்துவிட்டு அவனை உரக்க அழைத்தான்.

ஏழாம் வகுப்பில் இருந்த சீனு, “என்ன மாமா…?’’ என ஓடி வந்து நின்றான். முன்பெல்லாம் அகிலும், சீனுவும்  அவனை மாமா என்று அழைத்தால் அவனுக்கு அப்படி ஒரு கோபம் வரும். ‘அண்ணா சொல்லித் தொலைங்களேன்டா…’ என்று தலையில் ஓங்கி கொட்ட சொல்லி கை பரபரக்கும்.

ஆனால் அந்த வார்த்தை இன்றைக்கு அவன் காதுகளில் தேன் போல பாய்ந்தது. அவன் தலையை பாசத்துடன் வருடியவன், தன் கையில் இருந்த ரோஜாவை அவனிடம் நீட்டியபடி, “உங்க பாரி அத்தை இந்த பூவை உங்க மல்லி அக்காகிட்ட கொடுக்க சொல்லி கொடுத்து விட்டாங்க. போ.. போய் உன் அக்காகிட்ட கொடுத்துடு.” என்றான்.

“சரி மாமா..’’ என்றவன் வீட்டிற்குள் ஓட, அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அன்றைக்கு மல்லி பள்ளிக்கு கிளம்பி, தலையில் இவன் கொடுத்த ஒற்றை ரோஜாவை சூடி வெளி வர, சுந்தர் அவளையும் அவள் கூந்தலில் இருந்த பூவையுமே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரம், மணியடித்தது போல பாரி வெளியே வந்தார். மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த சுந்தர் தாயை கண்டதும் ஓரடி பின்னால் நகர்ந்தான். தன் அத்தையை கண்டதும் மல்லி மிதிவண்டியை நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி நின்றாள்.

அது சமயம் அவள் தலையில் சூடியிருந்த ரோஜா, நழுவி தரையை தொட்டது. “அச்சச்சோ” என பதறிய மல்லி குனிந்து அந்த பூவை எடுக்க முயல, “கீழ விழுந்த பூவை திரும்ப தலையில வைக்க கூடாது கன்னுக்குட்டி. இரு அத்தை வேற பூ எடுத்தாறேன்.’’ என்றவர் முன் வாயிலில் மலர்ந்திருந்த ஒரு பன்னீர் ரோஜாவை பறித்து, அதை அழுத்தமாய் அவர் தலையில் சூடினார்.

“நீயே பறிச்சி… நீயே வச்சி விட்டா தான் உன் ரோஜா கூட என் தலையில நிக்குது பாரு அத்தை. இன்னைக்கு அந்த கருவாப்பய கொண்டு வந்த பூவை பிள்ளையாருக்கு வச்சிட்டு உன் கையால வந்து பூ வச்சிட்டு போயிருக்கணும். சரி விடு பிள்ளையாருக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான். ஆமா நீ எதுக்கு அந்த கருவாகிட்ட புதுசா பூவெல்லாம் கொடுத்து விடுற. இனி அப்படி செய்யாத. நீயே வச்சா தான் பூ மண்டையில நிக்கும்னு தெரியும் இல்ல…’’ என்று தன் அத்தையுடன் சண்டை போட்டவள் பள்ளிக்கு கிளப்பினாள்.

Advertisement