Advertisement

பந்தம் – 13

முதாலம் வருட பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. அரசு செவிலிய மாணவிகளில் அவர்கள் வகுப்பில் மல்லி முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். ஒன்பது மாதத்தில் பதினோரு விதமான பாடங்களை படித்து தேர்வை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமாக தான் இருந்தது.

ஆனால் விடா முயற்சியில் மாணவிகள் அதை சாதித்து காட்டியிருந்தனர். மல்லியை விட அவள் வெற்றியை அவளின் தோழிகள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மகிழ் நான்காம் மதிப்பெண்ணை பெற்று இருக்க, ‘பாஸ் ஆயிட்டேன்… அவ்ளோ தான்.’ என்று மிதப்பாக சுற்றி கொண்டிருந்தாள் மதி.

“ஏய்… கும்தலக்க கும்மாவா… பைவ் ஸ்டார்ஸ்னா சும்மாவா….’’ என்று அவர்கள் அமரும் இடமே களேபரமாக இருக்க, சங்கரியும், ரேணுவும் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதே என்ற கவலையில் இருந்தனர்.

“இந்த மதிப்பெண் எல்லாம் நம்மளை மதிப்பிட முடியாது. உனக்கு மட்டும் தான் தெரியும் உன்னோட மதிப்பு. ப்ரீயா விடுங்கடி.’’ என்று மல்லி இருவருக்கும் ஆறுதல் சொல்ல இருவருமே சற்று தெளிந்திருந்தனர்.

அவர்கள் அனைவருமே இரண்டாம் வருட கல்வியாண்டில் அடியெடுத்து வைத்திருந்தனர், அன்றைக்கும் வகுப்பு முடிய, ஐவரும் வழக்கமாக செல்லும் தேநீர் அங்காடிக்கு சென்றனர்.

“தூங்கி… தூங்கி பர்ஸ்ட் மார்க்கை தூக்கிட்டு வந்த செல்லத்துக்கு ஒரு ‘ஓ’ போடுங்கடி.’’ என்று மதி சொல்ல, மற்ற மூவரும், “ஓ…ஓஹோ…’’ என அதை வழி மொழிய, அங்கிருந்து ஒருசிலர் இவர்களை திரும்பி பார்த்தனர்.

“ஷ்… அடங்குகடி. நீங்க தெறிக்க விடுற சில்லறையில எல்லாரும் எழுந்து ஓடிற போறாங்க. எவ்ளோ ‘ஓ’ போட்டாலும், ஆளுக்கு ஒரு டீ… ஒரு மிளகா பஜ்ஜி. அவ்ளோ தான் வாங்கி குடுப்பேன். அதுக்கே காசு என் தம்பிகிட்ட தான் ஆட்டைய போடணும்.’’ என்றாள்.

உடனே முகத்தை சுருக்கிய மதி, “நம் ராஜ தந்திரங்கள் அத்தனையும் வீண் ஆனதே. ஐயகோ…முதல் மதிப்பெண் வாங்கியவள்… ஒரு முட்டை கலக்கி கூட வாங்கி தர மாட்டாளா…” என்று வசனம் பேச, அவளுக்கு ஹைபை கொடுத்த மகிழ், “அதானே கேளுடா… உன் கழுத்துல இருக்க ஜெயினை வைப்பியோ… இல்ல கால்ல இருக்க கொலுசை விப்பியோ.. எங்களுக்கு முட்டை கலக்கி வந்தே ஆகணும்.’’ என்றாள் உறுதியாய்.

“என்னை மட்டும் ஏன்டி கேக்குறீங்க. இவளும் தானே போர்த் மார்க். நான் மிளகா பஜ்ஜி வாங்குறேன். முட்டை கலக்கிய அவ வாங்கி தரட்டும்.’’ என்றவள் கடைக்காரர் சூடாக கொண்டு வந்து வைத்த மிளகாய் பஜ்ஜி ஒன்றை எடுத்து கடிக்க தொடங்கினாள்.

ஆளுக்கு ஒன்றை கையில் எடுத்து கொண்ட மற்றவர்களும், ‘அதானே’ என்பதை போல மகிழை பார்க்க, ‘இதுக்கு பேர் தான் செல்ப் ஆப்பா. யாரும் சொருகல. நானா வாலண்டியரா ஏறி உக்காந்துடுறேன்.’ என்று எண்ணிக் கொண்டவள், மதி ஏதேனும் உதவிக்கு வருவாளா என்று அவள் முகத்தை பார்க்க, ‘முட்டை கலக்கி மிக முக்கியம் அமைச்சரே’ என்று அவள் முகத்தை திருப்பியிருந்தாள்.

‘துரோகி’ என்று அவளைப் பார்த்து முணுமுணுத்தவள், “சரி சொல்றேன்…’’ என்றவள் அமர்ந்த இடத்திலிருந்தே, “அண்ணா…! அஞ்சி கலக்கி.’’ என குரல் கொடுத்தாள். கடைக்காரர் இவர்களை நன்கு அறிவார். கிட்டத்தட்ட பத்து மாதமாக தினம் காண்கிறார் அல்லவா…! அவர்கள் வந்தாலே கடை கலகலத்து போகும்.

எப்போதும் கேலியும், கிண்டலுமாக இருக்கும் அந்த தோழியர் கூட்டம் அவரையும் கவர்ந்திருந்தது. ஆக அவர்கள் வந்தவுடனே வடிகட்டியில் புதிய தேயிலை தூள் இடம் பிடிக்கும். பால் கெட்டிப்படும்.

அருந்தி, உண்டு முடித்ததும் ஐவரும் அங்கிருந்து கிளம்பினர். மல்லி பணம் செலுத்த போக, “என் புஜ்ஜு குட்டி நம்ம பென்ச் மானத்தை காப்பாத்திட்டா. அதனால நான் தான் காசு கொடுப்பேன்.’’ என்று மதி முன் வர, “ஓவரா சீன் போடாத. காசு இருக்கு. இல்லைனா உன்கிட்ட தான் கேட்டு வருவேன். நான் இப்பவே பில் கொடுத்துடுறேன். இல்லனா நான் இன்னும் ட்ரீட் வைக்கலைன்னு சொல்லி, அடுத்தவாரம் மஜ்னு ஹோட்டல் சிக்கன் பிரியாணி கேப்ப நீ.’’ என்ற மல்லி தானே பணத்தை கொடுத்தாள்.

‘இது உனக்கு தேவையா…?’ என்ற ரீதியில் மகிழ் பார்க்க, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற பார்வையை திருப்பி கொடுத்த மதி, “போலாமா. டைம் ஆச்சு. எங்க வீட்டு வானரத்தை எல்லாம் நான் போய் தான் ஹோம்வொர்க் செய்ய வைக்கணும்.’’ என்றவள் தான் வண்டியை நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தாள்.

தோழிகள் ஐவரும் தங்கள் இல்லம் நோக்கி புறப்பட்டனர். மல்லி தங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும், முன்னால் இருந்த இனிப்புகள் விற்பனை செய்யும் அங்காடியில்,தன் கணவன் எப்போதாவது இரசித்து உண்ணும், காஜுகத்ளி நூறுகிராம் மட்டும் வாங்கினாள்.

அதற்கு அடுத்து, பிள்ளைகள் விரும்பி உண்ணும் கிண்டர்ஜாய் மூன்றை வாங்கியவள், தன் அத்தைக்கு பிடித்த, இனிப்பு பூந்தியை கொஞ்சம் வாங்கி கொண்டாள். அம்மா வீட்டிற்கும் இனிப்புகள் வாங்கி சென்றால் நன்றாக இருக்கும் என மனம் ஆசைப்பட்டது.

ஆனால் கையில் இருக்கும் பணம், அத்தனை கட்டி வராது என மூளை நினைவூட்டியது. அதோடு அங்கு ஆட்களும் அதிகம். இவர்கள் வீட்டை போல நூறு, ஐம்பது கிராமில் எதையும் வாங்க முடியாது. வாங்கினால் ஒருகிலோ, குறைந்தது அரை கிலோவாவது வாங்க வேண்டும்.

தான் வாங்கும் ஐந்து இலக்க சம்பளத்திற்கு இனிப்பு வாங்குதல் என்பது கையில் ஒட்டியிருக்கும் தூசியை தட்டி விடுவது போல சுலபமான காரியம். ஆனால் அவளின் பண பரிவர்த்தன அட்டையை சுந்தர் அல்லவோ வைத்திருந்தான்.

அதை அவன் என்ன செய்கிறான் என்று கூட இவள் கேட்பது கிடையாது. வீட்டு செலவு, பிள்ளைகள் கல்வி கட்டணம், மற்ற மேல் செலவு எல்லாவற்றையும் அவன் தான் பார்த்து கொண்டான். மல்லிக்கு கூட அவளின் போக்குவரத்து செலவுக்கு என்று ஒரு தொகையை கணக்கிட்டு அதோடு ஒரு முன்னூறு ரூபாய் சேர்த்து கொடுத்துவிடுவான் அவ்வளவே.

ஏதேனும் தேவை என்று கேட்டால் அடுத்த நொடி அது வீட்டிற்கு வந்து விடும். ஆனால் அது அவசியமற்றது என்று அவன் கருதினால் அவளை ஒரு பார்வை பார்ப்பான். அவ்வளவே அதன் மீதிருந்த விருப்பம் மல்லிக்கு சட்டென வடிந்துவிடும்.

இதை கேட்டால் அவன் அப்படி பார்ப்பானோ என்று பயந்து பயந்தே தன் தேவைகளையும், விருப்பங்களையும் மல்லி குறுக்கி கொண்டாள். இப்படி கேட்பதற்கு தயங்கி தயங்கியே இன்றைக்கு தன் பெற்றவர்களுக்கு கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள  ஒரு இனிப்பு வாங்கித் தர கூட வக்கற்று நிற்கிறாள்.

ஏனோ கையிலிருந்த இனிப்பு தற்சமயம் அவள் மனதை போல கனத்தது. சுந்தரின் மேல் அளப்பரிய ஆத்திரம் பெருகியது. ‘என் ஏ.டி.எம் கார்டை என்கிட்ட கொடுங்க…!’ என்று அவன் முன் சென்று கத்த வேண்டும் என்று தோன்றியது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு மகிழ் சொன்னாளே என்று சுந்தரை முத்தமிட்டு, அது வேறு ஒரு கோணத்தில் திரும்ப, சுந்தர் அவளை ஆழ்ந்து முத்தமிட்டது கனவோ என்று கரைந்து போகும் படி நாட்கள் மீண்டும் பழமைக்கு திரும்பியிருந்தது.

அன்றைக்கு மகிழ் வாழ்வு குறித்து சுந்தரிடம் கதறி அழுது அடைக்கலம் தேடிய போது, ஆறுதல் சொன்னவன், அதன் பின் வந்த நாட்களிலும் முகம் முறியாது தான் பேசினான். ஆனால் அடுத்த பத்து நாட்களில் இளைய தம்பியின் நிச்சய விழாவிற்கு, இரண்டு  பெண் குழந்தைகளுக்கும் ஒன்றே போல ஆடையை இணையத்தில் தேடியவள், தனக்கு பிடித்த உடையை வாங்கியும்விட்டிருந்தாள்.

இவள் இணையத்தில் தேர்வு செய்த உடை வீட்டு வாயிலில் வந்து நின்ற போது சுந்தர் நெற்றியை சுருக்கினான். உடையை காணப் போகும் ஆனந்தத்தில் மல்லி, சுந்தரிடம் எதையும் பகிராமல், தங்கள் உள் அறை அலமாரியில் இருந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டு, அதை கொண்டு வந்தவரிடமிருந்து உடையை வாங்கினாள்.

அதுவரை கூட சுந்தர், அவளை ஓர கண்ணில் பார்த்தபடியே மாட்டிற்கு தீவனம் கலக்கிக் கொண்டிருந்தான். திண்ணையில் அமர்ந்தவள், அந்த பொட்டலத்தை பிரித்தபடி, “அத்த…! இங்க வாயேன். பசங்களுக்கு புது ட்ரஸ் வாங்கியிருக்கேன். தம்பி நிச்சயத்துக்கு. வந்து பாரு.’’ என்று உரத்த குரலில் மகிழ்ச்சியோடு அழைத்தாள்.

அவ்வளவு தான். உள்ளே அதுவரை அமுங்கியிருந்த ஏதோவொன்று வெடித்து சட்டென வெளிவந்தது. பாரியோடு பிள்ளைகளும் அவளை சூழ்ந்து கொள்ள, அனைவரும் குதூகலத்துடன் புதிய உடைகளை ரசித்தனர்.

அங்கிருந்தால் கோபத்தில் குழந்தைகள் முன்னிலையில் எதையேனும் பேசிவிடுவோம் என்று உணர்ந்தவன், வேக வேகமாக அங்கிருந்து வயலுக்கு கிளம்பினான். உடைகள் வந்த தினம் ஒரு ஞாயிற்று கிழமை. அதனால் மல்லி வீட்டில் தான் இருந்தாள்.

மதிய உணவு வேளை முடிந்து குழந்தைகள் வெளியே விளையாட சென்றிருக்க, பாரி  தென்னந்தோப்பில் ஓலை பின்ன சென்றிருந்தார். மல்லி தானும் உண்டு முடித்து அப்போது தான் தன் கல்லூரியில் மறுநாள் சமர்பிக்க வேண்டிய, நோய் குறியியல் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தாள்.

தோட்டத்தில் மாமர நிழலில் அமர்ந்திருந்த சுந்தரின் முகம் ஆற்றாமையில் இறுகியிருந்தது. ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி…?’ என்று நூறாவது முறையாக அவனுக்குள் அவனே கேள்வி எழுப்பிக் கொண்டான்.

மல்லியை அவள் பிறந்த நாள் முதல் அறிவான். ஆனால் அப்போதெல்லாம் அவனுக்கு அவள் மீது பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நான்கு வயது சிறுமியாய் மல்லி எப்போதும் அவன் வீட்டையே சுற்றி சுற்றி வருவாள்.

இதில் பாரி வேறு, அவளை தூக்கி வைத்து கொண்டும், பண்டங்கள் செய்து கொடுத்து கொண்டும் இருக்க, ஒற்றை மகனாய் தன் பெற்றோரின் பாசத்தை யாரிடமும் பங்கு போடாத அவனுக்கு எரிச்சலாய் இருக்கம்.

பாரி அருகில் இல்லையென்றால் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், அவள் கன்னத்தை கிள்ளியோ, அல்லது தலையில் கொட்டியோ அவளை தன் வீட்டை விட்டு துரத்தி விட்டு விடுவான். அப்போது அவனுக்கு தெரியாது. பின்னொரு நாளில் தான் அவள் பின்னால் சுற்றோ சுற்று என்று சுற்றப் போகிறோம் என்று.

சுந்தர் எட்டாம் வகுப்பில் இருக்கும் போது, அவன் தந்தை இறந்து விட, கழனியில் கடுமையாய் உழைத்து கொண்டே, படிப்பிலும் கவனம் செலுத்துதல் என்பது அவனுக்கு சவாலான காரியமாக இருந்தது.

பதின் பருவத்திற்கு உரிய அத்தனை மகிழ்ச்சியும் வேரோடு புதைந்து போக அந்த நாட்களில் சுந்தர் தனக்குள் மிகவும் இறுகிப் போயிருந்தான். தந்தை இறந்ததும், உண்மை முகத்தை வெளிக்காட்டிய சுற்றமும், “உங்களுக்குன்னு ஒன்னும் சேர்த்து வைக்கமா உங்களை நிர்கதியா விட்டுட்டு போயிட்டானே நான் பெத்த ராசா…’’ என்ற அவனின் அப்பத்தாவின் கதறலும் அந்த இறுக்கத்திற்கு மேலும் உரமூட்டின.

அந்த அறியா வயதிலேயே பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்ற பாடத்தை வலிக்க வலிக்க கற்றுக் கொண்டான்.  அதனால் அப்போதே, பணத்தை சேர்த்து வைக்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் தான் தற்சமயம் அனுபவிக்கும் வலியை தன் வருங்கால சந்ததி அனுபவிக்க கூடாது என்ற எண்ணம் அவன் மனதில் அழுத்தமாய் பதிந்து போனது.

அவன் பனிரெண்டாம் வகுப்பில் இருக்கும் போது, நான்காம் வகுப்பில் இருந்த மல்லி அவனிடம் கணக்கு பாடம் சந்தேகம் கேட்டு வருவாள். அப்போதும் அவளை அதட்டி உருட்டியே சொல்லிக் கொடுப்பான். அவள் சின்ன தவறு செய்தால் கூட வலிக்கும் படி கொட்டி விடுவான்.

ஆக மல்லி அவனை கண்டாலே எதிர்புறம் நடக்க பழகி கொண்டாள். நகரத்தில் இருந்த கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைக்க, சுந்தரின் வாழ்க்கை வெளியூர் விடுதி வசமானது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவான் என்றாலும், அவன் வரும் செய்தி காதை எட்டினாலே மல்லி அந்த திசைப் பக்கமே திரும்பமாட்டாள்.

இப்படியே நாட்கள் ஓட, மல்லி பத்தாம் வகுப்பு படிக்கும் போது, தன் முதுநிலை கல்வியை முடித்த சுந்தர் ஊருக்கு திரும்பினான். அதுவரை அவன் பார்த்த அரும்பொன்று அவன் எதிர்பாரா நேரம் இதழ் விரித்து மலர்ந்ததை போல வளர்ந்திருந்தாள் மல்லி.

அப்போது சுந்தர் தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று வாயில் ஒரு வேப்பங் குச்சியை மென்றபடி பல் துலக்குகிறேன் பேர்வழி என்று ஊரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அந்நேரம் எதிர் வீட்டு கதவை திறந்து ஒரு பெண் தன் வீட்டை நோக்கி வருவதை கண்டான். பாரி பெயர் சொல்லி உரக்க அழைத்ததில் அந்த பெண் மல்லி என்பதை அறிந்து கொண்டவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

அவள் தன் வீட்டை சுற்றி சுற்றி வந்த சிறுபெண் என்பதை அவன் கண்களாலேயே நம்ப முடியவில்லை. கையில் ஒரு சிறு கிண்ணத்தை வைத்து கொண்டு வாசல் படியில் நின்றபடி தன் தாயுடன் வாயாடும் அவளை விழி விரித்து வியப்போடு பார்த்தான்.

பள்ளிக்கு கிளம்பியிருந்தால் போலும். அடர் கூந்தலை இரட்டை சடையாய் ரிப்பன் வைத்து மடக்கி கட்டியிருந்தாள். அது அவளின் முழங்கை வரை தொங்கிய பாங்கில், நான் நீண்டிருந்தால் அவள் இடை தாண்டி தவழ்வேன் என்று காண்போருக்கு அறிவித்து கொண்டிருந்தது.

அப்போதைய அரசுப் பள்ளி சீருடையான தாவணி பாவாடை அவள் தளிர் மேனியை தழுவியிருந்தது. ‘நம்ம மல்லி பெரிய பொண்ணாயிட்டா.’ என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய கடித வரிகள் அப்போது அவனுக்கு நினைவிற்கு வர, அவனையும் அறியாமல் அவன் இதழ்களில் சிறுநகை ஒன்று பூத்தது.

Advertisement