Advertisement

அத்தியாயம் நான்கு:

அன்று மாலையே ஜானிற்கு அவனின் நண்பர்கள், ப்ரீத்தியின் பிரச்னையை ஹரி தலையிட்டு ப்ரின்சிபலிடமும் ஹெச் சோ டி யிடமும் சுமுகமாக முடித்து வைத்ததை கூறினர்.

“ஹரிக்கு என்னடா? அவன் ஏன் இந்த பிரச்னையில தலையிடறான்”, என்று நெற்றியிலும் மூக்கிலும் அடிப்பட்டு பிளாஸ்டர் ஒட்டப்பட்டு   இருந்த ஜான் கேட்டான்.

“தெரியலைடா காலையில இருந்து அந்த பொண்ணு இவன் பின்னாடியே சுத்திட்டு திரியுது….. இவன் தாண்டா ப்ரின்சிபால் கிட்ட கூட கூட்டிட்டு போனான்”,

இன்னொரு நண்பன், “மதியம் ஹரி கேண்டீன்ல இருந்தப்போ அவனை தேடிட்டு அங்கேயே வந்துடுச்சு…..”, என்றும் சொல்ல……

“இதை அப்படியே விடக் கூடாதுடா”,

“என்ன பண்ண முடியும்…..?”,

“பண்ணுவேன், நாளைக்கு அந்த பொண்ணை நாறடிக்கிறேன்…. அவனோட சேர்ந்தா சுத்துறா….. எனக்கு இப்போ தான் தோணுது என்னை படில தள்ளி விட்டது கூட அவளா இருக்குமோன்னு……”,

“அங்க வேற யாரும் இல்லை, இவளும் மாளவிகாவும் தான் நடந்து போயிட்டு இருந்தாங்க…. எனக்கு அந்த அவ மேல தாண்டா சந்தேகம்……”,   

“பிரச்சனை வேண்டாம்டா, அந்த பொண்ணு ஒரு விஷயமில்லை, இப்ப தான் புதுசா வந்திருக்கா யாருக்கும் தெரியாது. ஆனா ஹரி? அவனுக்கு ஒன்னுனா எல்லோரும் கூட நிப்பாங்க…….”,

“இதுக்கு நிக்க மாட்டாங்க. நின்னாலும் நான் தான் செஞ்சேன்னு தெரியாது….”, என்று சொல்லிகொண்டிருந்த ஜானின் மனதில் திட்டங்கள் மளமளவென்று உருவானது.

மாளவிகாவின் வீட்டிற்கு அன்று இரவு ஒரு மணிக்கு ப்ரீத்தியின் பெற்றோர்கள் ராஜசேகரனும் மாலினியும் வந்துவிட்டனர்.  

அவர்கள் வந்து நிற்கவும் தான் கல்லூரியில் நடந்த விஷயம் தெரிய வந்தது….

மாளவிகாவின் அம்மா, மாளவிகாவை ஏகத்திற்கு கடிந்து கொண்டார். ஏன் சொல்லவில்லை என்று.

“சாரிப்பா, வீணா அலைய வெச்சிட்டேன்”, என்றாள் ப்ரீத்தி.

“அதொன்னுமில்லைடா, த்ரீ டேஸ் உன்கூட இருந்துட்டு போறோம்”, என்றனர்.

ப்ரீத்திக்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது… திரும்பவும், “சாரிப்பா! சாரிப்பா! அலைய வெச்சிட்டேன், வீண் செலவு கூட”, என்று சொல்ல……..

“உங்களுக்கு செலவு செய்யதாண்டா, அப்பா சம்பாதிக்கறேன். உங்களுக்கு இல்லாதது என்னடா?”, என்று அவர் திரும்ப திரும்ப ப்ரீத்தியை சமாதானப்படுதும்படி ஆகிற்று.

அம்மா தான், “படு ப்ரீத்தி, அப்பா கொஞ்ச நேரமாவது தூங்கட்டும்…… நான் ஒன்னும் இருக்காதுன்னு சொன்னாலும் ஃபிளைட்ல கூட கொஞ்ச நேரம் கூட தூங்கலை”, என்று கடிந்து கொண்டார்.

ஆனால் அடுத்த நாள் பொழுது தான் நன்றாக விடியவில்லை. மாளவிகாவின் மொபைலிற்கு காலையிலேயே அழைத்த ஒரு தோழி விஷயத்தை சொல்ல…. மாளவிகாவிற்கு செய்தி கேட்டவுடன் கை கால் எல்லாம் நடுக்கம் எடுத்து விட்டது.

“என்ன? என்ன நல்லா தெரியுமா உனக்கு!”,

“தெரியும், நம்ம காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் நிறைய பேரோட பேஸ்புக்ல டேக் பண்ணியிருக்கு, டைம் லைன் போஸ்ட்ல இருக்கு……”,

“யாரு பண்ணினா?”,

“புது பேரு ஃபேக் ஐ டீ……., பிரைவசி செட்டிங்க்ஸ் இல்லாத எல்லார் ஐ டீ ளையும் இருக்கு, பசங்களதுல தான் அதிகம் இருக்கு”,  

“ஓஹ்!”, என்பதற்கு மேல் மாளவிகாவினால் எதுவும் பேச முடியவில்லை.

விஷயம் பெரிது என்பதால் ப்ரீத்தியின் அம்மாவிடம் அவள் சொல்லிவிட….. அதிர்ந்து நின்று விட்டார்.

சில நிமிஷங்கள்…… “ப்ரீத்திக்கு தெரியுமா”,

“தெரியாது, அத்தை!”,

“வீட்ல இங்க யாருக்காவது”,

“யாருக்கும் தெரியாது அத்தை”,

“யாருக்கும் தெரிய வேண்டாம், ப்ளீஸ்”, என்றார் கெஞ்சுதலாக.

“இப்படியெல்லாம் என்கிட்டே பேசாதீங்க அத்தை, சொல்லாதன்னு ஆர்டர் போடுங்க, நானே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்…”,

“ப்ரீத்திக்கு கண்டிப்பா தெரியக் கூடாது”,

“சொல்ல மாட்டேன் அத்தை…….”,

“அவளுக்கு காமன் ஃபேஸ் புக் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா”,

“இல்லை, நான் அதுல இல்லை…. அதுக்குள்ள ப்ரீத்திக்கு யாரும் இன்னும் ஃபிரண்ட்ஸ் ஆகலை……”,

ப்ரீத்திக்கு ஃபேஸ் அக்கௌன்ட் பிரைவசி செட்டிங்சுடன் செய்து கொடுத்ததே அவளின் அம்மா மாலினி தான்.

உடனே கணவரின் போனை எடுத்து ப்ரீத்தியின் அக்கௌன்ட் உள் சென்று பார்த்தார். நல்லவேளை அதில் ஒன்றும் இல்லை….. முதலில் பாஸ்வோர்டை மாற்றி அதை டியாக்டிவேட் செய்தார்.

ஆனாலும் அந்த அக்கௌன்ட் இன்ஃபர்மேஷன் மெயிலிற்கு வரும் ஏதாவது சொல்லி ப்ரீத்தியை இப்போதைக்கு ஃபேஸ்புக் உள் செல்லாமல் பார்த்துக்கொள்ள முடிவெடுத்து……. கணவரை எழுப்பி விவரம் சொல்லவும்….. ராஜசேகரன் ஏகத்திற்கும் டென்ஷன் ஆகிவிட்டார்.

என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை……. பதறிய காரியம் சிதறும் என்பதால் சற்று நேரம் அமைதியாக அமர்ந்தார்.

அப்போது தான் எழுந்த ப்ரீத்தி… தந்தை மற்றும் தாயின் முகங்கள் சரியில்லாததை கண்டு, “என்னமா”, என்றாள்.

“என்ன, என்னமா?”, என்றார் மாலினி ஒன்றும் தெரியாதவர் போல…..

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க……”,

“ஒன்னுமில்லைடா டிராவல் செஞ்சது ஒரு மாதிரி இருக்கு…..”,

“ஏன் பொய் சொல்ற மாலினி?”, என்று ராஜசேகரன் சொல்லவும், ஐயோ ப்ரீத்தியிடம் சொல்லிவிடுவாரோ என்று மாலினி பதற……

அவரின் பதட்டத்தை பார்த்தவள், “என்னமா, என்ன?”, என்று இவளும் பதறினாள்.

“ரகுக்கு உடம்பு சரியில்லையாம் ரொம்ப பீவராம், அதான் டென்ஷன் ஆகிட்டா”, என்று ராஜசேகரன் ப்ரீத்தியின் தம்பியை பற்றி சொல்லவும்,

“நேத்துக் கூட பேசினேனேப்பா நல்லா இருந்தானே”,

“இப்போ தான்மா சொன்னான், நீ அம்மாவை கூட்டிகிட்டு சென்னை கிளம்பு”,

“இப்போவா”,

“ஆமாம், இப்போ தான்”,

“நீங்க…..?”,

“எனக்கு இங்க ஒரு வேலை இருக்கும்மா, முடிச்சிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கறேன், நீங்க கிளம்புங்க”, என்று சொன்னவர்…. உடனே ஒரு டாக்ஸி அர்ரேஞ் செய்து அவர்களை அனுப்பிய பிறகு தான் அமர்ந்தார்.

வீட்டில் உள்ள மாலினியின் அப்பா, அம்மா, அண்ணி கேட்ட பொழுதும் ரகுவிற்கு உடம்பு சரியில்லை என்றே சொல்லப் பட்டது.

அங்கே ப்ரீத்தியின் வீடு பூட்டி அப்படியே தான் இருந்தது…… கீழே வீடு வாடகைக்கு விட்டிருந்தனர்….. மேலே இவர்கள் சாமான்கள் போட்டு வீடு பூட்டியிருந்ததால் தங்குவதற்கு யோசிக்க தேவையே இன்றி அவர்கள் கிளம்பிவிட்டனர்.

மாளவிகாவை அழைத்துக் கொண்டு காலேஜ் கிளம்பிய ராஜசேகரன் அங்கே ப்ரின்சிபாலை பார்த்து, மீண்டும் தனது மகளை பழைய காலேஜிற்கே மாற்ற கோரி கேட்டு அதற்கான ஃபார்மாலிட்டீசை கேட்டார்.

இன்னும் ப்ரின்சிபாலின் காதுகள் வரை செய்தி எட்டியிருக்கவில்லை.

“ஏன் சார், இப்போ தானே ட்ரான்ஸ்ஃபர்ல வந்தீங்க, ஏன்?”, என்று கேட்கவும்.

என்ன சொல்லுவர் அவர்…… அமைதியாக அமர்ந்திருந்தவர் விஷயத்தை சொன்னார்…..

“என்ன?”, என்று ப்ரின்சிபால் அதிர்ந்தார். சில நிமிடங்கள் இதை எப்படி ஹேண்டில் செய்வது என்று புரியவில்லை.

“யார் செஞ்சிருப்பாங்க? யார் மேலயாவது கம்ப்ளைன்ட் குடுக்கறீங்களா?”,

“எனக்கு யார் செஞ்சிருப்பாங்கன்னு ஒரு ஐடியாவும் இல்லை”,. அவர் இப்படி ப்ரின்சிபாலிடம் பேசிக்கொண்டிருந்து, கம்ப்ளைன்ட் வேண்டாம் என்று சொல்லி…. ராஜசேகரன் ப்ரின்சிபாலிடம் ஒரு கோரிக்கை வைக்க……. மிகுந்த யோசனைக்கு பிறகு அவர் கேட்ட அந்த ஜானின் அட்ரெசை கொடுத்தார் பிரின்சிபல்.  அவருக்கும் பெண் பிள்ளைகள் இரண்டு இருந்தது.

ஹரி அதை விடவும் மோசமான மனநிலையில் இருந்தான்.

என்னவோ உள் மனது சொல்லிற்று அவனிற்கு, அதனால் தான் ஜானிடம் நேரடியாக எந்த பிரச்சனையும் செய்யாமல், எந்த ஹீரோயிசமும் காட்டாமல் ஒதுங்கி போக விழைந்தான்.

ஒரு வேலை இந்த ப்ரீத்தி அவனை தள்ளி விட்டது அவனுக்கு தெரிந்திருக்குமோ அதற்கு பழிவாங்க இப்படி செய்து விட்டானா….

ரத்தம் கொதித்தது……. இனி பொறுமை அவசியமில்லை எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன்…… ஜானின் இருப்பிடத்தை விசாரிக்க….

நிதின் முடிந்தவரை சக தோழர்களிடம் சொல்லி…… அது யாரிடம் இருந்தாலும் உடனே அழிக்க ரிகுவெஸ்ட் கொடுக்க ஆரம்பித்தான்.

யாருக்கும் ப்ரீத்தியை அவ்வளவாக தெரியவில்லை…. அவள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது……. ஸ்குவாஷ் நேஷனல் பிளேயர் தான்… ஆனால் அதற்கு ஒன்றும் பெரிய அங்கீகாரம் இல்லையே. அதனால் ப்ரீத்தி கல்லூரியை பொருத்தவரை அடையாளம் காணப்படவில்லை.

அது ஹரிக்கு வந்த ஒரு அவப்பெயராக தான் கல்லூரி முழுவதும் பார்த்தது.                 

 ஹரியும் நிதினும் ஜானின் வீட்டை அடைந்து பெல் அடிக்க……. அவனின் அம்மா தான் வந்து திறந்தார்.

“ஜானை பார்க்கணும்”, என்றதும் அவனை அழைக்க….. ஜான் வெளியே வந்த நேரம் மீண்டும் பெல் அடிக்க…..

வந்தவர் ப்ரீத்தியின் அப்பா…..

முகத்தில் அவ்வளவு கோபம்…….. “யாருடா ஜான் இதுல”, என்றார் மூன்று பேர் நின்றிருந்ததால் அவருக்கு தெரியவில்லை.

அவர் கேட்ட விதத்திலேயே ஜான் ஓரடி பின் வாங்க……. “நீதானா அது”, என்று அருகில் வந்து அவர் விட்ட அறையில் தூரப் போய் விழுந்தான்.

“நீங்கல்லாம் யாருடா? அவன் பிரிண்ட்ஸா”, என்று ஹரியை நிதினையும் பார்த்து கேட்கவும்…..

“இல்லை, நாங்க செய்ய வந்ததை நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க”, என்றான் ஹரி.

அதற்குள் ஜானின் அம்மா பதறி ஓடி வந்தார்…. வீட்டில் வேறு யாருமில்லை.

“என்ன? என்ன? யாரு நீங்க?”, என்று பதற…..

“நீங்க தான் இந்த பொறுக்கியோட அம்மாவா! இந்த மாதிரி ஒரு பையனை பெத்ததுக்கு மலடியாவே இருந்திருக்கலாம்”, என்றார் கோபமாக.

விழுந்திருந்த அவனின் சட்டையை பிடித்து தூக்கியவர், “எங்கடா உன் லேப், போன் எல்லாம்…….. நீ அனுப்பிச்சதை எல்லாம் இப்போ டெலிட் பண்ற இல்லை….”, என்று அவர் வார்த்தையை நிறுத்த…..

“நான் எதுவும் அனுப்பலை, யாரு நீங்க…..”, என்ற ஜான், ஹரியையும் நிதினையும் பார்த்து, “என்னை அடிக்க ஆளா கூட்டிட்டு வந்திருக்கீங்க”, என்று அவர்களிடம் சண்டைக்கு போனான்.

“என்னை பார்த்தா உனக்கு அடியாள் மாதிரியா தெரியுது”, என்று அதற்கும் ராஜசேகரன் ஒரு அறை விட……

“யாரு நீங்க? எதுக்கு அவனை அடிக்கறீங்க?”, என்றார் ஜானின் அம்மா…..

“நான் ப்ரீத்தியோட அப்பா”,, என்று சொன்னதும் ஜான் அதிர்ந்தான். காலேஜ், அங்கிருந்த ஆட்கள், யார் வந்தாலும் கேட்டாலும் நான் செய்யவில்லை என்று ஆணித்தரமாக சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜானிற்கு ப்ரீத்தியின் அப்பா இப்படி உடனே வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. 

ப்ரீத்தி சொன்னது போல அவளின் அப்பா வந்துவிட்டார் என்பது ஹரிக்கு ஆச்சர்யம் தான்.

“யாருங்க ப்ரீத்தி?”, என்று ஜானின் அம்மா கேட்க……

“உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நான் இங்க வரலை புரிஞ்சதா, வாயை மூடிட்டு அப்படி ஓரமா நில்லுங்க, இல்லை இந்த பொறுக்கியோட அப்பான்னு ஒருத்தன் இருப்பானில்லை, அவனை வர சொல்லுங்க”, என்று சொல்ல……

“எதுக்கு எங்கப்பா எங்கம்மாவையெல்லாம் மரியாதை இல்லாம பேசறீங்க”, என்று ஜான் எதிர்க்க…….

“உன் வீட்டு ஆளுங்களை மரியாதையில்லாம பேசினாலே, உனக்கு இவ்வளவு கோபம் வருதே. என் பொண்ணுடா அவ, அவளை நீ எவ்வளவு அசிங்கபடுதியிருக்க”,

“உங்க பொண்ணு இவனோட சேர்ந்து கூத்தடிச்சா, அதுக்கு நான் எப்படி பொருப்பாவேன்…..”, என்று ஹரியை காட்ட,

“நீ யாருடா?”, என்பது போல ராஜசேகரன் ஹரியை நோக்கி வர…..

“சார், சார்”, என்று இடை புகுந்தான் நிதின், “அவன் பொய் சொல்றான் சார், ஜஸ்ட் ஹெல்ப் பண்ண தான் ஹரி போனான், இவன் வேணும்னே இவங்க ரெண்டு பேர் பிக்சர்சையும் தப்பா மார்பிங் பண்ணி சுத்த விட்டிருக்கான் சார், அதை எடுக்க சொல்லத் தான் நாங்களும் இங்க வந்தோம். ஏற்கனவே பேஸ் புக்குக்கு, நாங்க நிறைய பேர் ஸ்பாம் மெசஜ்ன்னு அனுப்பியிருக்கோம்”.

“இவன் மேல மேல எதுவும் செய்யக் கூடாதுன்னு தான் நேரடியா வந்தோம்”, என்று சொன்னான்.

ஏற்கனவே ப்ரீத்தி நடந்ததை அப்பாவிடம் சொல்லியிருந்தாள், மாளவிகாவிடம் இன்னொரு முறை காலையில் எல்லாம் கேட்டு வைத்திருந்தார்.

அவர்களை விட்டு மீண்டும் ஜானிடம் திரும்பியவர்….. “இப்போ நீ எல்லாத்தையும் டெலிட் பண்ற இல்லை, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது…… என் பொண்ணைவிட இந்த உலகத்துல எனக்கு எதுவுமே முக்கியம் கிடையாது. அவளுக்காக நான் என்ன வேணா செய்வேன். இப்போ நீ அதை டெலிட் பண்ற……. இல்லை”, என்று அவர் கர்ஜிக்க……

ஜான் அந்த ஆக்ரோஷதில் பயந்து போனான்.

“இல்லை, நான் பண்ணலை”, என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க….

“நீ பண்ணுனியா பண்ணலையா எனக்கு தெரியாது. இப்போ அது டெலிட் ஆகணும்….. இல்லைனா நீ இந்த உலகத்தை விட்டு டெலிட் ஆக கூட நிறைய வாய்ப்பிருக்கு….. அம்பதாயிரம் போதும், செய்ய நிறைய பேர் இருக்காங்க”, என்று சொல்லிக் கொண்டு தோரணையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

ஜானின் அம்மா இதற்குள் அவரின் கணவருக்கு தெரிவித்திருக்க அலுவலகம் சென்றிருந்த அவர் பதறி வந்திருந்தார்.

வந்ததும் அவருக்கு ஜானின் அம்மா விஷயத்தை சொல்லவும்…. மகனின் முகத்தை பார்த்தார். அவருடைய மகன் முகத்தை வைத்தே அவனின் தவறுகளை கண்டுகொள்வார்… இப்போது அது அவனை காட்டிக் கொடுக்க,  பெல்ட் எடுத்தவர் தான் மகனை விளாசித் தள்ளி விட்டார். உண்மையா பொய்யா என்று விசாரிக்கக் கூட இல்லை.

அப்போதும் ஜான் அசைந்தானில்லை, தான் செய்யவில்லை தனக்கு தெரியாது என்று தான் சொன்னான். 

யாருக்குமே அங்கே வேலையில்லாமல் செய்தார் அந்த தந்தை… “இப்போ நீ அதை அழிக்கலை, நானும் உங்கம்மாவும் உயிரோட இருக்க மாட்டோம்”, என்று சொல்லவும் தான், தந்தை சொன்னதை எப்போதும் செய்வார் என்று தெரிந்த ஜான், அதன் பிறகு ஒன்றும் பேசாமல் மெளனமாக தன்னுடைய லேப்பை எடுத்து அத்தனையும் அழித்தான்.

“இன்னும் எதுவும் இல்லை”, என்று அவனின் தந்தையையை பார்த்து சொல்ல…..

“உன்னை எப்படி நம்பறது…..”,

“நிச்சயமா இல்லைப்பா”,

“மறுபடியும் நீ செய்ய மாட்டேன்னு என்ன நிச்சயம்….”,

“இல்லைப்பா, செய்ய மாட்டேன்”, என்றான்.

இதுவரை பேசாமல் நின்ற ராஜசேகரன், எப்படி அவனை நம்புவது என்பது போல பார்க்க…….

“இல்லை, செய்ய மாட்டான்…. எனக்கு அவன் முகம் பார்த்தே அவன் செஞ்சானா இல்லையான்னு தெரிஞ்ச மாதிரி, இனிமே செய்ய மாட்டான்னு தெரியும்……”,

“உங்களுக்கு அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கறதுன்னா கொடுக்கலாம்”, என்று ஜானின் தந்தை சொல்ல…

“என் பொண்ணு பேரு இதுல வர்றதுல எனக்கு விருப்பமில்லை….. அவளுக்கு இந்த விஷயம் கூட தெரியாது…. தெரிய வரவும் நான் விடமாட்டேன்…… இனி அவ இந்த கோயம்பத்தூர் பக்கம் வரவே மாட்டா”, என்று ராஜசேகரன் சொல்லும் போதே,

“மன்னிச்சிடுங்க”, என்று ஜானின் தந்தை கைகூப்பி வேண்ட…..

எதுவும் பேசாமல் ராஜசேகரன் வெளியேறினார்…….

ஹரிக்கு தன்னால் தான் இந்த பிரச்சனை என்று மனது கொல்லாமல் கொன்றது.

“எங்கப்பா வருவார்”, என்று அந்த பெண் எவ்வளவு நம்பிக்கையாக சொன்னாள், அப்படியே விட்டிருந்தால்  இந்த மாதிரி நடந்திருக்காது…

ஆனால் ராஜசேகரனை நினைத்து வியப்பாய் இருந்தது. என்ன மாதிரியான தந்தை. பொதுவாய் பெண் பிள்ளைகள் இப்படிப்பட்ட விஷயங்களில் சிக்கும் போது தன் பெண் இவனோடு சுற்றியிருப்பாளோ என்று பல தந்தைகள் நினைக்கும் போது….

ஒரு சிறு சந்தேகமும் எழாமல், இந்த விஷயம் தன் பெண்ணிற்கே தெரிய வராமல் எப்படி பார்த்துக் கொண்டார்.

மிகுந்த மரியாதை ஹரிக்கு ராஜசேகரன் மேல் தோன்றியது……

அங்கே ஜானின் தந்தை, “வெளியே போ”, என்று மகனை வீட்டை விட்டு துரத்தி கதவை தாளிட்டிருந்தார்.

அனாதையாக ஒரே நாளில் தெருவில் நின்றிருந்தான் ஜான்.

தன்னை சுற்றி நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல், சில மாதங்கள் கழித்து பார்த்த தாயின் மடியில் ப்ரீத்தி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க…..

மகளுக்கு தெரியாமல் இருக்க ஒன்றும் நடவாதது போல காட்டிக் கொண்டிருந்த ப்ரீத்தியின் அம்மாவிற்கு, அவள் மடியில் உறங்கிய பிறகு தானாக கண்கள் கலங்க ஆரம்பித்தது.

கலங்கிய கண்களை மறைக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த மாலினிக்கு, “அதை எல்லாம் டெலிட் பண்ண வெச்சாச்சு, ஒன்னும் பிரச்சனையில்லை”, என்று ராஜசேகரன் போன் செய்து சொல்லவும் தான் மனது அமைதியாகிற்று. 

இவை எதுவும் தெரியாமல் ப்ரீத்தி சென்னையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்க, ராஜசேகரன் அங்கிருந்தே நண்பர் ஒருவர் மூலமாக சென்னை காலேஜில் பேசி, கொஞ்சம் பணத்தை நன்கொடையாக கொடுப்பதாக பேசி, கோவை காலேஜில் இருந்து டீ சீ யை வாங்கி அவரும் சென்னையை நோக்கி பயணத்தை ஆரம்பித்து இருந்தார்.

 

 

Advertisement