Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு:

ஹரி சொல்லிக் கொண்டு கிளம்பவும், அவன் முகம் பார்த்தே அவன் மிகவும் அப்செட் என்று அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது.

ப்ரீத்திக்கு அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை.

ஹரியின் ஒரு சின்ன முகச் சுணக்கம் ப்ரீத்தியால் தாள முடியவில்லை என்பது மிகவும் உண்மை. நிறைய பெண்கள் விழும் இடமும் இதுதான். கணவன் முகம் கவலையைக் காட்டும் போது அதை நிவர்த்தி செய்ய தவிப்பர்.  

அப்படி ஒரு மனநிலை தான் ப்ரீத்திக்கு….. இதற்காக தான் ஹரியை நேரில் பார்ப்பதை தவிர்த்து அவன் இந்தியா வந்த போது அவன் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்தாள்.

அவன் வாயிலைத் தாண்டி, பால்கனியில் இருந்த ஷூவை போடும் போது அவன் போகிறானே என்று அப்படி ஒரு தவிப்பு ப்ரீத்தியின் முகத்தில். அதைத்தான் ராஜசேகர் பார்த்துக் கொண்டிருந்தார். 

ஹரியை இரு என்றும் சொல்ல முடியவில்லை, அவனை அப்படியே அனுப்பவும் மனது இல்லை. தவித்தாள். ஹரியின் மீது கோபம் தான், வந்த பிறகு பெண் கேள் என்றும் சொல்லிவிட்டாள் தான். ஆனால் ஜெர்மனியில் இருந்து ஒரு நாளில் ஒரு லேப் டேப் மட்டும் தூக்கிக் கொண்டு அவசரமாக வந்தவனை இப்படி வருத்தத்தோடு அனுப்புவதா.

ஹரி படியிறங்கவும், ரகு தான் ப்ரீத்தியை முறைத்தான், “அவர் எவ்வளவு டார்ச்சர் பன்றாரோ அதுக்கு மேல நம்ம பண்றோம். அவராவது ஒருத்தர் தான் டார்ச்சர் பண்றார், நாம மொத்த குடும்பமும் பண்றோம்”, என்று அவளிடம் சொல்லியவன்….. ஹரியின் பின்னே போனான்.

ப்ரீத்தி அவளின் அப்பாவிடம் வந்தவள், “அவர் கோவை போறார்ன்னு நினைக்கிறேன்ப்பா, நான் அவரை ஊருக்கு அனுப்பிட்டு வரட்டா”, என்று சம்மதம் கேட்டு நின்றாள்.

ப்ரீத்தியின் முகத்தில் அவ்வளவு தவிப்பு, ஹரி அவள் செல்வதற்குள் போய் விடுவானோ என்பது போல, விட்டால் ஓடி விடுவாள் என்பது போல நிற்க,

“என்னுடைய வாழ்கை ஹரியோடு தான்”, என்று மகளின் முடிவு தெரிந்தது தான். இன்னும் நடுவில் நின்று பிரச்சனைகளை ஏன் முற்ற விடவேண்டும். சரிபடுத்திக் கொடுப்போம். அவளின் சந்தோசம் தானே முக்கியம் என்று தான் ராஜசேகரனுக்கு தோன்றியது.  முன்பே அதை மனதில் நிறுத்தி தான் ஹரியின் பெற்றோரிடம் சென்று அவராகவே பேசினார்.

திரும்ப நடுவில் சில குழப்பங்கள் அந்த பாட்டியால். இப்போது ஹரிக்காக மகளின் முகத்தில் தென்படும் தவிப்பு, அவரை அசைக்க.. எதுவாகினும் சீர் படுத்திக் கொடுக்க அந்த கணம் முடிவெடுத்தார்.       

“இப்படியே ஓடிடாத டிரஸ் மாத்திட்டு போ”, என்று புன்னகையோடு ராஜசேகர் மறைமுக சம்மதம் கொடுக்க,

அவரின் முகத்தில் என்ன கண்டாளோ, ப்ரீத்தியையும் உற்சாகம் தொற்ற, “இருங்கப்பா, விட்டா போயிடுவான் என்கிட்டே சொல்லாம, எப்பவும் அப்படிதான், நான் சொல்லிட்டு வரேன்”, என்று நிஜமாக ஓடினாள்.

அந்த வார்த்தைகளில் மகளின் மனது நன்கு தெரிய, அவள் கேட்பதை நடத்திக் கொடுக்காமல் இத்தனை வருடம் சீராட்டி வளர்த்து என்ன பயன் என்று தான் தோன்றியது. 

ஹரி கேட்டைத் திறந்திருக்க, ரகு அவனிடம் பேசி நிறுத்த முயல, அதற்குள் அங்கே வேகமாக படியிறங்கி ஓடி ஹரியின் முன் நின்றாள்.

சென்ற வேகத்திற்குப் பேசக் கூட முடியவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள்.  

அவ்வளவு வேகமாக வந்தவள் ஹரியிடம் பேசவில்லை, ரகுவைப் பார்த்து, “இவரைப் போக விடாத, நான் குளிச்சிட்டு டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்”.

“கார் எடுத்து வெளில நிறுத்தி, சாவி இவர் கிட்ட குடு”, என்று சொல்லி திரும்பவும் வேகமாக மாடி ஏறினாள்.

“உங்கக்கா விழுந்து வைக்கப் போறா”, என்று அவள் சென்ற வேகத்தை பார்த்து ஹரி கவலையாக சொல்ல,

“அவ ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிட்டின்றதையே அப்பப்போ நீங்க மறந்துடறீங்க டூ பேட், ஓடி வந்தாளேன்னு சந்தோஷப்படுங்க. மாடில இருந்து அப்படியே சுவர்ல கால் வெச்சு டைரக்டா இறங்காம போனாளே”, என்றான் ப்ரீத்தியைப் பற்றித் தெரிந்தவனாக ரகு.  

“செய்வா உங்கக்கா”, என்று சொன்ன ஹரியின் முகத்தில் மீண்டும் புன்னகை மலர்ந்து இருந்தது.

ரகுவின் மனதிலும் ஹரியின் மனதிலும் அப்போது ஒரே எண்ணம் தான். ப்ரீத்தி வளர்ந்துவிட்டாள் என்று நினைக்கும் போது சிறு பெண்ணின் செய்கை தான் இருக்கும். சிறு பெண் என்று நினைக்கும் போது ஒரு அனுபவம் முதிர்ந்த வளர்ந்த பெண்ணின் செய்கை இருக்கும். எப்போது எப்படி நடப்பாள் என்று யாராலும் அனுமானிக்க முடியாது.

“வாங்க, கார் சாவி எடுத்துட்டு வரலாம்”, என்று  ஹரியைப் பார்த்து ரகு சம்ப்ரதாய அழைப்பு விடுக்க,

“போ, போயிட்டு வா! என்கிட்ட ஃபார்மாலிட்டீஸ் தேவையில்லை, தேடி வந்து, வந்து, உங்கப்பாக் கிட்ட திட்டு வாங்கறேன். இதெல்லாம் ஒன்னுமில்லைப் போ”, என்றான்.

அவன் நல்ல விதமாக சொல்லுகிறானா? ஜாலியாக சொல்லுகிறானா? இல்லை வருத்தப்படுகிறானா? என்று ரகுவால் அனுமானிக்க முடியவில்லை. 

“இருங்க வந்துடறேன்!”, என்று மேலே போனான்.

தனித்து இருந்த ஹரி சோர்வாக நடந்து வந்து மாடிப்படியில் அமர்ந்து கொண்டான்.

மேலே சென்ற ரகு, “அப்பா, ப்ரீத்தி கார் எடுத்து வெளியே நிறுத்த சொன்னா!”, என்று சொல்லிவிட்டு கூடவே……

“அப்பா, நம்ம ப்ரீத்தியை மிஸ்டர் ஹரிக்கு குடுக்காம இருந்தம்னா இட்ஸ் ஓகே! ஆனா கல்யாணம் பண்ணிக் குடுப்போம்னா, நம்ம அவரை நல்லா நடத்தணும், இப்படி நடத்தறது முறையில்லை”.

“ப்ரீத்திக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு! ஒன்னும் பண்ண முடியாது! வாழ்க்கையில வின் பண்ணினவப்பா அவ, வாழ்க்கைத் துணையை மட்டும் தப்பாவா தேர்ந்தெடுத்து இருப்பா. ஏன் பா இப்படி அவங்களை பிரிச்சு வைக்கறீங்க, சேர்த்து வைங்கப்பா, நீங்க நினைச்சா முடியாதா”, என்றான் கூடவே தாளமாட்டமல்.

“நான் என்ன சொன்னேன், ஹரி பேரன்ட்ஸ் வந்து பொண்ணுக் கேட்க தானே சொன்னேன்”,

“அது சரிப்பா! ஆனா சொன்ன விதம் சரியில்லை!”, என்று ரகு சொன்னான்.

“இப்போ என்ன பண்ணட்டும்!”,

“ஒன்னும் பண்ண வேண்டாம், விடுங்க! இனிமே கொஞ்சம் கவனமா இருங்க…. தன்மையா, மரியாதையா பேசலைன்னாலும், ஹார்ஷா ஹர்ட் பண்ற மாதிரி பேச வேண்டாம்”, என்றான் கூடவே.

பிறகு வேகமா அவன் சாவியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

ப்ரீத்தி பத்தே நிமிடங்களில் குளித்து மாடர்ன் உடைகளை தவிர்த்து, ஒரு மல்டி கலர் பாட்டியாலா சுரிதாரில் வந்தாள்.

ப்ரீத்தி அந்த மாதிரி உடைகளை அணிந்து ராஜசேகரனே பார்த்தில்லை.

“அப்பா, நான் நம்ம வீட்டைக் காட்டிட்டு அப்புறம் அவரை ஊருக்கு அனுப்பட்டுமா”, என்று கூடவே பெர்மிஷனும் கேட்டாள்….. ப்ரீத்தி விளையாட்டில் விளம்பரத்தில் என்று சம்பாதித்த பணத்தை தேங்க விடாமல், பல இடங்களில் ராஜசேகரன் முதலீடு செய்திருந்தார். அதில் ஒன்று தான் இந்த வீடு. 

“சரி, ஆனா அப்பப்போ எங்க இருக்கன்னு எனக்கு மெசேஜ் பண்ணிட்டே இருக்கணும்”, என்றார் நல்ல விதமாகவே.

“தேங்க்ஸ் பா”, என்று சொல்லிக் கீழே மீண்டும் ஓட,

“வீட்டுச் சாவியை எடுக்காம போறா!”, என்று சொல்லிக் கொண்டே ராஜசேகர் அவராகவே சாவியை எடுத்து கீழே இறங்கினார்.

ஹரியிடம் அப்போதும் எதுவும் பேசாமல், அப்போதுதான் ரகுவிடம் “அவரை கார்ல ஏறச் சொல்லலியா நீ”, என்று ப்ரீத்தி கேட்டுக் கொண்டிருக்க,

அவளின் கலர் கலரான உடையைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்க ஹரி பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான். ப்ரீத்திக்கு நன்கு பொருந்தி இருந்தது தான்.  ரசித்து தான் பார்த்தான்.   

ரகு வாய் விட்டே, “என்ன ஆச்சு ப்ரீத்தி உனக்கு! நல்லாத்தானே இருந்த! என்ன டிரஸ் இது? இவர் திரும்பவும் ஜெர்மனிக்கே ஓடப் போறார்”,  என்றான் ஹரியைக் காட்டி. 

“போய்டுவியா நீ?”, என்பது போல ஹரியை ஒரு முறைமுறைத்து, ரகு ஹரியிடம் கொடுத்திருந்த கார் சாவியை ஹரியின் கையில் இருந்து பிடிங்கியவள்.

“நல்லாயிருக்கா இல்லையா!”, என்று ரகுவிடம் ப்ரீத்தி கேட்க, “நல்லா தான் இருக்கு”, என்று ரகு இழுத்துக் கொண்டிருக்க, அதை ஹரி சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது ராஜசேகர் கீழே வரவும், ப்ரீத்தியும் ரகுவும் அலெர்ட் ஆகினர்.

“சாவி வேண்டாமா”, என்று கேட்டுக் கொண்டே ராஜசேகர் வீட்டுச் சாவியை கொடுத்தார், ப்ரீத்தியிடம் இல்லை, ஹரியிடம்.

அவர் நீட்டியதும் கையில் வாங்கி, என்ன என்று ஹரி புரியாமல் பார்த்தான்.

ராஜசேகர் சாவியைக் கொடுத்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. ப்ரீத்தி, “அப்போ நாங்க கிளம்பறோம்பா”, என்று காரின் டிரைவிங் சீட்டில் அமர்ந்தாள்.

எட்டி மறுபக்க கதவையும் ஹரிக்கு திறந்துவிட, உரிமையாக ராஜசேகரன் முன் ஏற ஹரிக்கு தயக்கமாக இருந்தது,

“லேட் பண்ணாத ப்ரீத்தி, லேட் ஆகிற மாதிரி இருந்தா போன் பண்ணு, போகும்போது பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டு போ”, என்றார் திரும்பும். 

“அப்பா, காலையில இப்போதான் மணி ஒன்பது ஆகப் போகுது, நீங்க ஈவினிங் மாதிரி பேசறீங்க”, என்று ரகு அவரிடம் மெதுவாக சொன்னான். 

“ஓகே பா”, என்றவள்,  “ஏறுங்க”, என்று ஹரியைப் பார்த்து சொல்லாமல், “ஏறச் சொல்லு ரகு”, என்று ரகு விடம் சொல்ல,

“ஏறுங்க”, என்று ஹரியை அமரவைத்து காரின் கதவை மூடினான். ஒரு சிறு தலையசைப்போடு ஹரி, ராஜசேகரனிடமும் ரகுவிடமும் விடை பெற்றான்.

கார் கிளம்பியது, எங்கே போகிறோம் என்று ப்ரீத்தியும் சொல்லவில்லை, ஹரியும் கேட்கவில்லை. அமைதியான பயணம் என்பதை விட மௌனமான பயணம், மனதின் சத்தங்கள் கூட இருவருக்கும் குறைவாக இருந்தது.

சிறிது தூரம் சென்றதும், அங்கிருந்த ஒரு ஹோட்டல் முன் நிறுத்தினாள். அவனிடம் ஒன்றும் சொல்லாமல் இறங்கிப் போகவும் செய்தாள்.

ஹரி இறங்க முயல, அவனைப் பார்த்த பார்வையில் இறங்காதே என்ற கட்டளை இருக்க, திறந்த கதவை மூடிக் கொண்டான்.

சென்றவள், பார்சல் வாங்கி வந்து காரின் பின் இருக்கையில் போட்டு காரைக் கிளப்பினாள்.  

சிறிது தூர பயணமே…. நல்ல அகலமான வீதி, வரிசையாக பங்களாக்கள் இருந்தது. அங்கிருந்த ஒரு சிறு பங்களா முன் காரை ப்ரீத்தி நிறுத்தினாள்.  அது எந்த ஏரியா என்பது கூட ஹரியின் கவனத்தில் இல்லை…..

ப்ரீத்தியோடு இருக்கும் அந்த க்ஷனங்களை ரசித்தபடி இருந்தான். அதே சமயம் ப்ரீத்தி அவன் அங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொன்ன பிறகு ஒரு வார்த்தை கூட இன்னும் அவனோட பேசவில்லை என்று புரிந்து அவனும் அமைதி காத்தான்.

நிறைய பங்களாக்கள் வரிசையாக, ஆனால் ரோடில் யாரும் இல்லை. அமைதியாக இருந்தது. ப்ரீத்தி இறங்கவும்  ஹரியும் இறங்கினான்.

காலை வேலை என்பதால் இன்னும் வெயில் ஆரம்பிக்கவில்லை சிலு சிலு என காற்று வீச…. அந்த வாடையே பீச் இங்கிருந்து சிறிது தூரத்தில் என்று ஹரிக்கு உணர்த்தியது.

ப்ரீத்தி இறங்கி அந்த பங்களாவின் முன் இருந்த கேட்டில் சத்தம் செய்ய, ஒரு வயதானவர் ஓடி வந்தார்.

வந்து அவர் கேட்டை திறக்க, பார்த்துக் கொண்டிருந்த ஹரியிடம் கார் சாவியை தூக்கிப் போட்டாள். ஹரி அதை எதிர்பார்க்காமல் கடைசி நேரத்தில் பிடித்தான்.

அவரிடம் என்ன சொன்னாள் என்று சரியாக ஹரிக்கு கேட்கவில்லை.

அந்த பெரியவர் வேகமாக கேட்டை திறக்க, ப்ரீத்தி உள்ளே சென்றாள், ஹரியை வா என்று அழைக்கவில்லை. “இங்க நிறுத்துங்க தம்பி!”, என்று அவர் பணிவாக ஹரியிடம் சொல்ல,

ஹரி காரை எடுத்து உள்ளே நிறுத்தினான். உள்ளே அங்கிருந்த காரிடாரில் ப்ரீத்தி அமர்ந்து இருந்தாள். அப்போது தான் சாவி அவனிடம் இருப்பது ஹரிக்கு உரைக்க, வேகமாக சென்று கதவைத் திறந்தான்.

பின்பு காரில் இருந்த பார்சலை எடுத்து உள்ளே சென்றான்.

வீட்டில் ஹாலில் சோஃபா எல்லாம் இருந்தது. அங்கே அமர்ந்து இருந்தாள் ப்ரீத்தி.

வெளியே அந்த தாத்தா தெரிகிறாரா என்று ஹரி எட்டிப் பார்க்க அவர் இல்லை.

நேராக சென்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்,  “இப்போ என்ன கோபம்”, என்றான்.

“அய்யோடா, நீ பயங்கர புத்திசாலி! ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்டுடண்ட் இல்லை”, என்று நக்கல் அடித்தவள், “எனக்கு கோபம்னு கண்டுபிடிச்சிட்டியே”, என்று இமை கொட்டி எழப் போக,

ஹரியின் முகத்தில் தானாக புன்னகை விரிந்தது.  அவளை எழ விடாமல் மடியில் கைவைத்து அழுத்தி பிடித்துக் கொள்ள,

எப்பவும் உனக்கு இதே வேலை தான்  என்னை எழுந்திருக்க விடாம என்று ப்ரீத்தியின் பார்வை அவனை குற்றம் சாட்டிய போதும் கைகளை தள்ளி எழ முயலவில்லை.

ஆனால் ப்ரீத்தி முகத்தை வேறு புறம் திருப்ப, அவளின் தாடையில் கை வைத்து முகத்தை திருப்பினான். “என்ன கோபம்?”, என்று மறுபடியும் பொறுமையாகக் கேட்க,

“உனக்கு தெரியாதா?”, என்றாள் அவனின் கண்களைப் பார்த்து கோபமாக,

ஹரியும் நேரடியாக, “தப்புதான், ஆனா என்கிட்டே வேற வழியில்லை”, என்றான் அவளின் கண்களோடு கண்களை கலக்க விட்டு……

“அப்போ இப்போ வந்துடுவியா?”,

“அது எப்படி முடியும்?”.

“நீ என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை”,

“சொல்லி, நீ வேண்டாம்னு சொன்னா, என்னால எப்படி செய்ய முடியும்! அதான் சொல்லவேயில்லை…..”,

“அப்போ இப்போ மட்டும் எதுக்கு வந்த, அப்படியே அங்கயே இருந்திருக்கலாம் தானே”,

“ப்ளீஸ், ப்ரீத்தி புரிஞ்சிக்கோ”, என்றான்.

“எப்படி புரியும், நீ தான் என்கிட்டே எதுவும் சொல்லவேயில்லையே, எல்லாம் உன் இஷ்டம் தானே”, சொல்லும் போது குரல் கமறி கண்களில் நீர் எட்டிப் பார்க்க,

“ப்ளீஸ் அழாத!”,

“நீ நான் அழணும்னு தானே இப்படிப் பண்ற……. நீ ஸ்டடீஸ் முடிச்சவுடனே வந்துடுவன்னு நான் எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா, நீ பாட்டுக்கு ஜெர்மனி போயிட்ட, என்கிட்டே போகலாமா, வேண்டாமா கேட்கவேயில்லை”.

“என் கிட்ட வேற ஆப்ஷன் இல்லை ப்ரீத்தி. எனக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக அங்க வேலைக்கு போகணும்னு இல்லை, அதே சமயம் வாழ்க்கை வசதியை மேம்படுத்திக்கவும் போகலை……”,

“அது என்னோட கமிட்மென்ட், எங்கப்பாம்மாக்கு வீடு வாங்கணும், என் தங்கைக்கு கல்யாணம் பண்ணணும்…. நான் கல்யாணம் பண்ணிக்கணும், இங்க வந்து வேலை பார்த்தா அவ்வளவு மணி உடனே கிடைக்குமா என்ன”,

“ஆனா என்னால இங்க விட்டு வரமுடியாது… நான் என்னோட நாட்டுக்காக விளையாடறேன்….. இங்க விட்டு என்னால வரமுடியாது”.

“வராத, ஜஸ்ட் ரெண்டு வருஷம், ரெண்டே வருஷம், நான் இங்க வந்துடறேன்…”,

“என்னால அவ்வளவு நாள் உன்னை விட்டு இருக்க முடியாது…. இப்படி தான் ரெண்டு வருஷம் என்கிட்டே சொல்லாம படிக்க டிசைட் பண்ணி போன…… வந்துடுவன்னு பார்த்தா இப்போ வேலை தேடி ரெண்டு வருஷத்துல வர்றேன்னு சொல்ற….. என்னால உன்னை நம்ப முடியாது”.

“வாழ்க்கையில் புதுசு புதுசா கமிட்மென்ட்ஸ் வந்துட்டு தான் இருக்கும். நீ மறுபடியும் இப்படிப் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம், நீ எதுவும் என்கிட்ட சொல்றதே இல்லை”.

“நான் என்னடான்னா படிச்சு முடிச்சு வேலைக்குக் கூட போகலை… உனக்கு எங்க வேலைன்னு பார்த்து முடிவு பண்ணலாம்னு வெயிட் பண்ணினா நீ பாட்டுக்கு போயிட்ட”,

“ஒரு, ஒரு சின்ன விஷயமும் உன்னைக் கேட்டு உன்கிட்ட சொல்லி நான் செய்யறேன். நீ எதுவும் சொல்றதே இல்லை, மறுபடியும் என்னை விட்டுட்டு போயிட்ட”, சொல்லும் போது கண்களில் இருந்து வேகமாக நீர் இறங்கியது.

ஹரி திகைத்தான், என்ன செய்வது, என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

“உங்கம்மா சொல்றாங்க, உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு உன் கல்யாணமாம்… உன் தங்கச்சியை விட நான் ஒரு வருஷம் பெரியவ, நான் வெயிட் பண்ணனுமா…… உன்னை யாரு இவ்வளவு கமிட்மென்ட்ஸ் வெச்சிக்கிட்டு என் பின்னாடி வரச் சொன்னா”,

“உன்னை யாரு வேலையை விட்டு இப்படி போக சொன்னா….. எங்கப்பா சொன்னா கேட்கணும்னு என்ன? இப்பவும் எங்கப்பா என்னை விட்டுடுன்னு சொன்னா கேட்பியா……. கேட்க மாட்ட இல்லை…. அது மாதிரி முன்னமே செஞ்சிருக்கலாம் தானே”, என்று கேள்விகளால் விளாச,

பதில் சொல்ல முடியாமல் திகைத்தான்.  வார்த்தைகளே வரவில்லை.

“வீட்டை வித்து, லண்டன் போய், என் கிட்ட ஃபோன்ல கூட பேசாம என்னைத் தவிக்க விட்டு,  எல்லா கஷ்டமும் உன்னால”,  

“உங்கம்மா உன்னை நல்லவன் சொல்றாங்க, உன் பின்னாடி வந்து யாரவது பொண்ணு மனசை கெடுப்பாங்கனு சொல்றாங்க, நானா உன் மனசை கெடுத்தேன்”,  

“நீ தான் என்னை கெடுத்தே, போ! போ!”, என்று மீண்டும் அழுகையில் இறங்கினாள்.

“ஐயோ, என்ன இது, இப்படி அழற நீ”, என்று அவளின் காலடியில் அமர்ந்து இருந்தவன், அவளை சமாதானம் செய்ய எழுந்து நின்று அவளின் முகத்தை கையில் தாங்கி, “அழாதடா”, என்று சொல்ல…..

அவனின் வயிற்றை கட்டிக் கொண்டு, “நீ என்னை விட்டு போயிட்டு அடுத்த வருஷம் தான் வருவ, அப்பவும் இங்க இருப்பியா தெரியாது, அப்பா கூட இப்படி சொல்லி சொல்லி தான் இத்தனை வருஷம் அம்மாவை விட்டு வேலை வேலைன்னு இருந்தார்”, என்று தேம்பி தேம்பி அழுதவள்,

நிமிர்ந்து அவன் முகம் பார்த்து, “இவ்வளவு நாள் கூடத் தெரியலை, ஆனா இப்போ என்னால எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியலை. போன வாரம் ஒரு பொண்ணுகிட்ட, ஸ்குவாஷ் கத்துக்க ஆரம்பிச்சே ஆறு மாசம் தான் ஆகுது, நான் அவகிட்ட ஜஸ்ட் ஒரு ஃபிரன்ட்லி மேட்ச் அதுல தோத்துப் போயிட்டேன் தெரியுமா….”,

“என்னோட பன்னிரண்டு வருஷ ப்ராக்டிஸ் வேஸ்ட் ஆகுது. நான் திரும்பவும் வின் பண்ணப் போறதில்லை, நீதான் என்னை ஜெயிக்க வெச்ச, நீயே என்னை தோக்க வைக்கிற, இதுல அந்த ஜான் விஷயம் வேற, நீ இப்படி செய்வன்னு நான் நினைக்கவேயில்லை”, என்று சொல்லி மீண்டும் அவனுள் முகம் புதைத்து அழ….   

நிஜமாகவே ஹரிக்கு என்ன செய்வது என்று தெரியவேயில்லை.  கண்டிப்பாக அவளை தேற்ற வேண்டும், இல்லை மனதளவில் தளர்ந்து போவாள் என்று புரிந்தது.  

அவளை சிறிது நேரம் அழவிட்டான், அவள் நிமிர்ந்து பார்த்ததும், “நான் என்ன பண்ணட்டும், சொல்லு, நீ என்ன சொன்னாலும் பண்றேன்”, என்றான்.

ஆனால் என்ன சொல்வது என்று ப்ரீத்திக்கும் தெரியவில்லை,

“தெரியலை”, என்றாள் ஹரியிடமே.  “எனக்கு விளையாட தெரியும் அவ்வளவுதான். பிடிவாதம் பிடிப்பேன் தான், மத்தபடி எப்பவும் அப்பா சொல்றதைக் கேட்பேன். இப்போ நீ சொல்றதைக் கேட்கிறேன். நான் இப்படி அதிகம் யோசிச்சதே இல்லை”.

“அப்பா செய்ய மாட்டேங்கறார், நீ என்னை விட்டு தூரவே இருக்க, நீதானே செய்யணும், உனக்கு தானே தெரியும்”, என்று அவன் முகம் பார்த்தாள்.

ஹரி சொல்லப் போகும் பதிலுக்காக காத்திருக்க…. ஹரி என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் திணறினான்.

Advertisement