Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

ப்ரீத்தியைப் பார்த்து கெஞ்சினான் ஜான், “நான் பண்ணினது தப்பு தான். ப்ளீஸ் என்னை மன்னிச்சு என் அப்பா அம்மாவோட சேர்த்து வைங்க ப்ளீஸ்”, என்று கெஞ்சினான்.

ப்ரீத்தி, “என்ன விஷயம்”, என்று புரியாமல் பார்க்கவும்,

பக்கத்தில் இருந்து ரகுவைப் பார்த்து, அவன் யார் என்று தெரியாமல் மேலே ஜான் பேசத் தயங்க,

“என் தம்பி பேசலாம்!”, என்று ப்ரீத்தி சொல்லவும்,

“உங்கப்பாவும், ஹரியும், நிதினும், வீட்டுக்கு வந்த  அன்னைக்கு என்னை என் அப்பா வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னவர் தான், அதுக்கு அப்புறம் என்னை சேர்த்துக்கவே இல்லை, நிறைய தடவை முயற்சி பண்ணிட்டேன், முடியவேயில்லை”, 

“நான் நீங்க எல்லோர் முன்னாடியும் அடிக்க வந்தீங்க, தள்ளி விட்டுட்டீங்கன்ற ஆத்திரத்துல செஞ்சிட்டேன். தப்பு தான்! என்னை மன்னிச்சிடுங்க!”, என்று கெஞ்சினான்.

“என் அப்பா உன் வீட்டுக்கு வந்தாரா? எப்போ?”, என்று ப்ரீத்தி அதிர்ச்சியாகக் கேட்க,

ப்ரீத்திக்கு எதுவும் தெரியாது என்று ஜானிற்கு எப்படி தெரியும்?

“ம், அன்னைக்கே ஜஸ்ட் ஒரு ஒரு மணி நேரத்துல ஹரியும், நிதினும் வந்துட்டாங்க, கொஞ்ச நேரத்துலயே உங்கப்பாவும் வந்துட்டார், உடனே அந்த ஃபோட்டோஸ் நான் டெலிட் பண்ணிட்டேன்”, என்று ஜான் சொல்லவும்,

ப்ரீத்தியின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது. “அப்பா எப்படி வந்தார், இந்த ஹரி ஏன் வந்தான்”.

“என்னைக்கு?”,

“நீங்க என்னைத் தள்ளிவிட்ட அடுத்த நாள்”.  

“அப்போவே மாளவிகா கிட்ட, உங்க கிட்ட சாரி கேட்க உங்க போன் நம்பர் கேட்டேன், இது தெரிஞ்சு ஹரி சர், அப்போவே என்னை அடிச்சு மிரட்டி இருந்தாங்க, எந்த வகையிலையும் உங்களை தொடர்பு கொள்ளக் கூடாதுன்னு, அவருக்கு பயந்து நான் ட்ரை பண்ணலை”,  

“உங்களைப் பத்தி பேப்பர்ல ஒன்னு ரெண்டு முறை பார்த்தேன், அப்புறம் விளம்பரத்துல பார்த்தேன். ஆனா எப்படி உங்களைக் கான்டாக்ட் பண்றதுன்னு தெரியாம இருந்தேன்”, என்று ஜான் மேலே மேலே பேசவும்,

இதையெல்லாம் கேட்டிருந்த ரகுவும் பதட்டமாகி, “என்ன? என்ன ஃபோட்டோஸ்?”, என்று கேட்கவும்,

ஜான் தடுமாறினான்.

ப்ரீத்திக்கு என்ன நடந்தது என்று தெரியாது, அதை ஜானிடம் கேட்கவும் விருப்பமில்லை. 

ரகுவை கண்களால் அடக்கியவள், “நான் இங்க ரெண்டு நாள் இருப்பேன், உங்க நம்பர் குடுங்க உங்க அப்பா அம்மா கிட்ட பேசற மாதிரி இருந்தா கண்டிப்பா கூப்பிடறேன்”, என்று சொன்னவள், பேச்சு முடிந்தது என்பது போல கண்களை மூடி ஆட்டோவில் சாய்ந்து கொண்டாள்.

ஜான் அவன் செய்த காரியத்திற்கு மேலே எப்படி ப்ரீத்தியை அணுகுவது என்று தெரியாமல், அவர்கள் சொன்ன இடத்திற்கு கொண்டு விட்டான்.   

இறங்கிய ப்ரீத்தியிடம் மீண்டும் ஜான் கேட்க, “நான் போன் பண்றேன்”, என்று சொல்லி அவள் உள்ளே போய்விட்டாள்.

ஜானிடம் போன் நம்பர் வாங்கிய ரகுவின் பார்வையே அவ்வளவு உக்கிரமாக இருக்க, ஜான் பயந்து நம்பர் கொடுத்து சென்று விட்டான்.

அதற்குள் சாதனா ஹரியிடம்…….. புனிதா, அந்த கிழவியிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு சொன்ன விஷயங்களை சொல்லியிருந்தாள்.

ப்ரீத்தியிடம் தொடர்பு கொள்ள முயன்றால் அவள் தொலைபேசியை எடுக்கவில்லை என்றும் கூடவே சொல்ல, 

நொந்து போனான் ஹரி, “ஐயோ, எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்க, இது என்ன புது பிரச்சனை, ஏற்கனவே ப்ரீத்தியின் தந்தை வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார் இப்போது இது வேறா”, என்று.

ப்ரீத்தி வீட்டின் உள் நுழையவும், ஹரி அவளை அழைக்கவும் சரியாக இருந்தது,

ரகுவை தூர போ என்பது போல சைகை காட்டினாள், ரகு, “யார்?”, என்று கேட்கவும், “ஹரி”, என்று ப்ரீத்தி சொன்ன பிறகு தான் தூர சென்றான். அதன் பிறகு தனியாக அமர்ந்தவள்,

“என்ன பிரச்சனை?”, என்றாள் ஃபோனை எடுத்து,

எங்கே ஃபோனை எடுக்கவே மாட்டாளோ என்று பயந்து கொண்டிருந்தவன் ப்ரீத்தி ஃபோனை எடுத்து இப்படி கேட்கவும்,

“ஹனி ஒன்னுமில்லைடா, அம்மா ஜஸ்ட் பேச்சுக்காக சொன்னது”, என்று சமாதானம் சொன்னான்.  

“நான் அதைக் கேட்கலை”,  என்ற ப்ரீத்தியின் குரல் மிகவும் கடுமையாக இருக்க…..

ஏதோ பெரிய விஷயம் என்று புரிந்தது. “என்ன ப்ரீத்தி?”, என்றான் கலக்கமாக ஹரி.

ஏனென்றால் கோபம் என்றால் ப்ரீத்தி பேசுவதைத் தவிர்ப்பாள், ஹரியிடம் பேசினால் கோபத்தை இழுத்து வைக்க முடியாது என்பதற்காக…..

ஆனால் இந்த குரல்……

“நீ எங்கப்பாவை முன்னாடியே பார்த்திருக்க, அம் ஐ ரைட், எங்கப் பார்த்த?”, என்றாள்.

ஹரிக்கு சகலமும் ஸ்தம்பித்தது. “யாரு சொன்னா?”, என்றான் படபடக்கும் இதயத்தோடு.

“ஜான்”, என்ற ஒற்றை வார்த்தையில் ஹரி நின்று விட்டான்.

“ப்ரீத்தி….!”, என்று ஹரி சொல்ல,

“என்ன நடந்தது? அப்படியே சொல்லு!”,  என்றாள்.

“நீ தெரிஞ்சிக்கணும்னு அவசியமில்லை ப்ரீத்தி”,

“எனக்குத் தெரியணும், நீ சொல்லலைன்னா நான் அந்த ஜான் கிட்டயே கேட்பேன்… அவன் ஜஸ்ட் ஃபோட்டோஸ் உடனே டெலிட் பண்ணிட்டேன்னு தான் சொன்னான்! என்ன ஃபோட்டோஸ்”, என்று ப்ரீத்தி கோபமாக கேட்ட போதும்,

அந்த குரலில் நடுக்கம் அவளின் பயத்தை பறைசாற்றியது.

“ப்ளீஸ்…… டென்ஷன் ஆகாத, அப்போ அந்த டைம் அது பெரிய விஷயம். இப்போ அது அப்படிக் கிடையாது. டோன்ட் பேனிக்!”,

“சொல்லு! என்னன்னு சொல்லு! என்ன ஃபோட்டோ? எனக்கு பயமாயிருக்கு! என்னை அசிங்கமா காட்டியிருக்கானா?”,

“இல்லையில்லை”, என்றான் அவசரமாக ஹரி, “அது உன் முகம் எடுத்து மார்ஃபிங் பண்ணியிருக்கான், வேற ஒரு பொண்ணோட இமேஜ்ல ”,

“டிரஸ் இல்லாமையா”, என்றாள் நடுங்கும் குரலில்.

“இல்லைடா”, என்றான் அவசரமாக.

“அப்போ என்ன சொல்லித் தொலை, நீ சொல்றதுக்குள்ள டென்ஷன்ல நான் செத்துடுவேன் போல”, என்று கத்தினாள்,

“நீயும், நானும்…….”, என்று அவன் ஆரம்பிக்கும் போதே,

“ஓஹ், இந்த பிரச்சினையில நீ ஏன் வந்தன்னு யோசிச்சேன். இதுதான் காரணமா, சொல்லாத! சொல்லாத! எங்கப்பாக்குக் கூட இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு, இன்னும் யார் யாருக்கு தெரியும்?”, என்று அவள் கிரீச்சிட,

“ஏய்….. நிறுத்து முதல்ல! ஒன்னுமில்லைன்னு நான் சொல்றேன் தானே! முதல்ல கேளு!”, என்று ஹரியும் கோபத்தில்….. “ஐயோ, இவள் ஏதாவது தப்பாக புரிந்து கொள்வாளோ”, என்ற பயத்தில் கத்தினான்.     

“எல்லோரும் என்கிட்ட சொல்லாம மறைச்சு, விஷயத்தை ஹேண்டில் பண்ணியிருக்கீங்க, என்னவோ ரொம்ப பெருசு”,

“ப்ச், கண்டிப்பா அந்த சூழல்ல பெருசு தான், ஆனா அதைவிட பெருசா பண்ணியிருக்க முடியும். அது நம்ம இப்போதைய சூழ்நிலைக்கு சின்னது தான்….”,

“என்ன உளர்ற நீ! அப்பா போய் ஃபோட்டோவை உடனே டெலிட் பண்ண  வெச்சிருக்காங்க. நீயும் போயிருக்க! என்ன விஷயம்?”,

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உங்க அப்பாக்கு விஷயம் தெரியும் தான்! ஆனா ஃபோட்டோ பார்த்திருக்க சான்ஸே இல்லை!”,

“அது என்ன ஃபோட்டோ, சொல்லித் தொலை!”, என்று மீண்டும் தன்னை மீறிக் கத்தினாள்.

“அது சொல்ல முடியாது, ஆனா நீ இவ்வளவு பதட்டப்படற அளவுக்கு ஒன்னுமில்லை, அவ்வளவு தான் சொல்ல முடியும்!”,

“இல்லை, நீ மறைக்கிற, அதுல என்னை ரொம்ப தப்பா காட்டியிருக்கான்”, என்று ப்ரீத்தி மீண்டும் கத்தினாள்.

“இல்லை, அப்படி இல்லை! தினமும் நான் அதைப் பார்த்துட்டு தான் இருக்கேன் போதுமா”, என்று அவனும் கத்தினான்.  

“என்ன?”, என்று ப்ரீத்தி அதிர்ச்சியில் உறைய….

சொன்ன பிறகு, சொன்னதை உணர்ந்தவன், இனி மறைக்க ஒன்றுமில்லை என்றுணர்ந்து. “எஸ், அதை அவன் டெலிட் பண்ணிட்டான் உடனே, யார் கிட்டயும் கிடையாது. ஐ அம் சுயூர். ஆனா அதுக்கு முன்னாடியே அதை நான் எடுத்து வெச்சிட்டேன், போதுமா! அதுல நீ இவ்வளவு பயப்படற அளவுக்கு ஒன்னுமில்லை!”,

“என்ன நீ வெச்சிருக்கியா? நீ எதுக்கு எடுத்து வெச்ச!”,

“நீ மட்டுமா இருக்க அதுல, நானும் தான் இருக்கேன்! அதான் அப்போ எடுத்து வெச்சேன்! என்னை யாரும் அந்த ஃபோட்டோவைப் பார்த்து தப்பா நினைப்பங்களோன்னு செக் பண்ண! அப்போ அதை நான் எடுத்த அந்த நிமிஷம், அதைத் தவிர வேற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது!”, என்றான் தெளிவாக.

“நீ பொய் சொல்ற!”,

“என்ன பொய் சொல்றேன்! நிஜமா உன்னை எனக்கு அப்போ பிடிக்கவே பிடிக்காது. நான் வேற எதுக்கு எடுத்து வைப்பேன்!”, 

அவன் தன்னைப் பிடிக்காது என்று சொன்னது இன்னும் கோபத்தை கிளற, “அப்போ நீ என்னை திரும்ப நேர்ல பார்க்கிறதுக்கு முன்னாடி, என்னை ப்ரப்போஸ் பண்றதுக்கு முன்னாடியே, அதை பார்த்துட்டு இருந்திருக்க, என்னைப் பிடிக்காதுன்னா எதுக்குப் பார்த்த?”,

“எஸ், தினமும் பார்த்துட்டு இருந்தேன், ஏன்னு எல்லாம் சொல்ல முடியாது”,  என்று திமிராகவே ஹரி பதில் சொன்னான்.

“என்ன திமிர் உனக்கு?”, என்றாள் ப்ரீத்தி.

“எஸ்! திமிர் தான்! இப்போ அதுக்கு என்ன?”,

“என்னவோ உங்கம்மா ஊர் உலகத்துலயே என் பையன் மாதிரி உத்தமன் கிடையாதுன்னு பேசறாங்க”,

“ஏன்? இப்போ எனக்கு என்ன குறை? நான் என்ன உத்தமன் இல்லாம போயிட்டேன்”,

“நீ…… நீ ஒரு ரோக்! என்னோட இருந்த ஃபோட்டோஸ் தினமும் பார்த்துட்டு இருந்திருக்க”, என்று ஆத்திர மிகுதியில் மீண்டும் ப்ரீத்தி கத்தினாள்.

“ஏய், சும்மா கத்தாத! அது ஒன்னுமில்லை!”, என்றான் அசால்டாக ஹரி.

“அந்த ஃபோட்டோஸ் எனக்கு அனுப்பு, நான் பார்க்கணும்! பார்த்தா தான் அது விஷயம் இருக்கா இல்லையான்னு சொல்ல முடியும்!”,

“அதெல்லாம் அனுப்ப முடியாது!”,

“நீ அனுப்புற…….. எனக்கு பார்க்கணும்!”,

“அதெல்லாம் அனுப்ப முடியாது”,

“அப்போ அதுல பெருசா ஏதோ இருக்கு! அதான் நீ எனக்கு காட்ட மாட்டேங்கற!”, சொல்லும் போதே ஆத்திரத்தில் மீண்டும் ப்ரீத்தியின் குரல் நடுங்கியது.

“நான் காட்ட மாட்டேன்னு சொல்லலையே! அனுப்ப மாட்டேன்னு தான் சொன்னேன்!”, என்றான்.

“என்ன உளர்ற?”, என்று ப்ரீத்தி சொல்ல,

“பார்க்கணும்னா நேர்ல வா!”, என்றான்.

“எங்க நேர்ல வர?”,

“ஜெர்மனி!”, என்றான் அசால்டாக ஹரி,

“என்ன ஜெர்மனியா?”, என்று ப்ரீத்தி வாயைப் பிளக்க,

“ஆமாம்! உனக்கு அந்த ஃபோட்டோஸ் பார்க்கணும்னா வா, நான் அங்க வந்தப்போ என் கண்ல படாம ஓடி ஒளிஞ்சு, என்னை எப்படி அலைய விட்ட……. என்கூட பேசாம…. என்னைப் பார்க்காம…… என்னை எப்படி தவிக்க விட்ட….. நேர்ல வா!”, என்றான் உறுதியான குரலில்.

“அதெல்லாம் வர முடியாது!”,

“அப்போ நான் ஃபோட்டோ காட்ட முடியாது!”,

“எப்படி ப்ளாக் மெயில் பண்ற நீ! உன்னை போய் எல்லோரும் நல்லவன்னு சொல்றாங்க!”,

“நான் யார்கிட்டயும் போய் நான் நல்லவன்னு சொன்னது இல்லையே! அவங்களா நினைச்சிக்கிட்டா நான் என்ன பன்றது! பொதுவா அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டேன் அது மட்டும் தான், பட் மத்தபடி தப்பை கூட நிதானமா யோசிச்சு செய்வேன்!”, என்று இன்னமும் திமிராக பேசினான்.

“நீ மட்டும் என் எதிர்ல இருந்த…………”,

“என்ன பண்ணுவ? போடி! சும்மா வளவளன்னு பேசிக்கிட்டு!”,

“நீ இப்படியே பேசு……. யாரையாவது கல்யாணம் பண்ணி உன் முன்னாடி நிக்கறேன்”,

அவள் அப்படிப் பேசவும், கோபம் வரப் பெற்ற ஹரி, “செய்ய நினைச்சு பாரு……. நான் என்ன செய்வேன்னு காட்டறேன்!”, என்றான் மிரட்டலாக.  

“என்ன செய்வ? என்னைக் கொன்னுடுவியா!”,

“சே! சே! உன்னை நான் ஏன் கொல்லப் போறேன், இந்த உலகத்துல நான் இருக்குற வரைக்கும் நீ இருக்கணும் ஹனி”,

“என்ன வில்லன் மாதிரி பேசறியா?”,

“நீ எப்படி வேணா வெச்சிக்கோ, ஐ டோன்ட் கேர், எது பண்றதா இருந்தாலும் நேர்ல வா”,

“நான் எதுக்கு வரணும்? தப்பு பண்ணினது நீ!, நீ வா!”,

“இன்னும் நினைச்ச நேரத்துக்கு நாடு விட்டு, நாடு பறக்கற அளவுக்கு என் கிட்ட அதிகமா பணம் கிடையாது, இருக்குறதை அப்படி வேஸ்ட் பண்ண முடியாது…….. உன்கிட்ட இருக்குள்ள நீ வா! நேர்ல வந்து பேசு! சும்மா போன்ல சீன் போடாத!”, என்றான்.

“சே! சே! உன்கிட்ட பேசறதே தப்பு! ஐ ஹேட் யூ! நான் உன்னைப் பார்க்க மாட்டேன்! போடா… போ!”,

“வராத! நீ வரலைன்னா என்ன? நான் தான் உன் ஃபோட்டோவை என்னோட ரொம்ப க்ளோஸா நேர்ல பார்க்கிறேனே, இனிமே அதோடயே குடும்பம் நடத்துறேன்”,

“டேய், என்ன ஃபோட்டோ அது! அனுப்புடா ப்ளீஸ்!”, என்று ப்ரீத்தி கெஞ்சினாள்.

“தேவைன்னா நேர்ல வா!”, என்று சொல்லிப் ஃபோனை வைத்து விட்டான் ஹரி.

          

Advertisement