Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

ஹரியிடம் பேசிக்கொண்டிருந்த ப்ரீத்தி, அவன் நிஜம் என்று சொன்ன நொடிப் போனைத் துண்டித்தவள், நேராக அவளுடைய தந்தையிடம் தான் சென்றாள்.

அவர் தான் திரும்ப ஏதாவது ஹரியிடம் பேசி அவன் அந்த மாதிரி ஒரு முடிவு எடுத்து விட்டானோ என்று ராஜசேகரனிடம் சென்றவள்,

“ஹரிகிட்ட என்னப்பா பேசினீங்க?”, என்றாள் கோபமாக,

“நான் இப்போ எதுவும் பேசலையே, ஏன் நான் என்ன பேசினேன்னு சொன்னான் அவன். உனக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட பார்க்கிறான்”, என்றார்.

“அவன் ஜெர்மனிக்கு வேலைக்கு போறானாம். நீங்க தான் ஏதோ சொல்லியிருக்கீங்க”,

“அவன் உன்கிட்ட சொன்னானா, நான் சொன்னேன்னு?”, என்றார் ராஜசேகரும் கோபமாக.

“நான் அவன்கிட்ட பேசவேயில்லை, போன் வெச்சிட்டேன்”, என்று பதிலுக்கு ப்ரீத்தியும் கத்தினாள்.

இருவரின் குரல் கேட்டு மாலினி தான் ஓடி வந்தார் என்னவோ ஏதோ வென்று, அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். ராஜசேகரன் ஹரியைத் தனக்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் காண்பித்தார்.  

“நான் எதுவும் சொல்லலை, அது அவனோட முடிவு. அதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை”, என்றார். அவர் சொன்ன விதம் அது உண்மை என்று ப்ரீத்திக்கு சொல்ல, அவள் கோபமெல்லாம் ஹரியின் மேல் திரும்பியது.     

அதன் பிறகு என்ன முயன்றும் ஹரியால் ப்ரீத்தியிடம் பேசவே முடியவில்லை.

அவன் அனுப்பிய மெசேஜ்களுக்கு எந்த பதிலுமில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முயன்று முயன்று பார்த்தவன், ஒரு கட்டத்தில் இந்தியா போனதும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான். 

நேரில் பார்த்தால் சமாதானமாகிவிடுவாள் என்று நினைத்தப் போதே அவனின் முகத்தில் புன்னகை தொற்றியது.

ஆம், நேரில் பார்த்தால் கண்டிப்பாகப் ப்ரீத்தியினால் ஹரியிடம் கோபத்தைப் பிடித்து வைக்க முடியாது, அது நிச்சயம். ஆனால் அது ப்ரீத்திக்கும் தெரியும் என்பது தான் ஹரிக்கு பிரச்சனையானது.

அதனால் அவள் ஹரியை பார்க்கப் போவதே இல்லை என்று முடிவெடுத்தாள். அது அவளின் உறுதியான முடிவு.

இது மிகவும் அதிகம் தான் அவளுக்கு தெரியும். ஆனால் மனிதர்கள் பணத்தின் பின் ஓட ஆரம்பித்து விட்டால் அதனை விட்டு வருவது மிகவும் கடினம்.

அவளின் தந்தையை அவள் சிறுவயது முதல் பார்க்கிறாள். ஒவ்வொரு முறை போகும்போதும் இதுதான் கடைசி முறை என்று போவார். ஆனால் அது இதுவரை நிற்கவேயில்லை.

ப்ரீத்திக்கு அப்படி ஒரு நிலைமை தனக்கு வேண்டாம் என்று முடிவாக இருந்தாள். தான் வேண்டுமென்றால் ஹரி இங்கு தான் வரவேண்டும். வேண்டுமென்றால் திருமணத்திற்கு பின் அவள் ஹரியுடன், அவன் இருக்கும் வேறு நாட்டிற்கு புலம்பெயர்ந்து விட முடியும் தான்.

ஆனால் அதை செய்ய அவளால் முடியாது…. பன்னிரெண்டாவது வயதில் இருந்து இந்த விளையாட்டுப் பயிற்சி……. கிட்ட தட்ட பத்து வருடங்கள் விடாது பயிற்சி, பெயர் சொல்லும் படி எந்த வெற்றியும் கிடையாது.

ஆனால் வெற்றி என்று வந்துவிட்ட பிறகு, அவளது வெற்றி உலக அரங்கில் இந்தியாவின் வெற்றி, பெயர் சொல்லும்படி இந்த விளையாட்டு பெரிய அளவில் இன்னும் வளர்ந்துவிடவில்லை என்றாலும்.

இந்தியாவை உலக அரங்கில் இந்த ஒருவருடத்திற்கும் மேலாக செய்கிறாள். உலக அரங்கில் அவளது வெற்றி இந்தியாவின் வெற்றி.

அவளுக்கு இங்கே தான் இருக்க இஷ்டம், கண்டிப்பாக வேறு நாட்டிற்கு புலம் பெயர விருப்பமில்லை.

ஒரு வேலை இதை ஹரியிடம் தான் தெளிவாக சொல்லியிருக்க வேண்டுமோ? தன் மீது தான் தவறோ…. எதுவாகினும் நான் அவனைப் பார்ப்பதில்லை.   

ஆனாலும் அவனுக்கு தன்னைத் தெரியுமே, கண்டிப்பாகத் திருமணத்திற்குப் பிறகு இவள் ஒரு இடத்திலும் அவன் ஒரு இடத்திலும் இருப்பதைப் ப்ரீத்தி விரும்ப மாட்டாள் என்று.

ஹரியைப் பார்த்தால் அவளின் உறுதி எல்லாம் கரைந்து விடும். அதனால் அவள் ஹரியைப் பார்க்க போவதில்லை என்று முடிவெடுத்தாள்.

ஹரி இந்தியா வந்த போது அவள் எங்கிருக்கிறாள் என்றே தெரியவில்லை.

சென்னையில் இறங்கிய நிமிடம் முதலாக அவனும் ப்ரீத்தியை பார்க்க எவ்வளவோ முயற்சித்தான்….. முடியவேயில்லை.

அவளின் பெற்றோர் அவள் எங்கிருக்கிறாள் என்று சொல்லத் தயாராகவே இல்லை.

அந்த வீட்டிற்கு அவர்களாக அழைக்கும் முன்னர் போகக் கூடாது என்று இருந்தவன், அந்த முடிவை எல்லாம் தூக்கித் தூரப் போட்டு ப்ரீத்தியின் வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்கே வருவான் என்று ராஜசேகரனோ மாலினியோ எதிர்பார்க்கவில்லை. என்ன தைரியம் இவனுக்கு வீட்டிற்கு வருகிறான் இவனை என்ன செய்தால் தகும் என்று ராஜசேகரன் தீப்பார்வை பார்க்க, அதற்கெல்லாம் அசருபவன் நான் அல்ல என்று அவர் முன் நின்றான் ஹரி. 

என்றுமில்லாத திருநாளாக ப்ரீத்தி இரண்டு நாட்களுக்கு முன் தான் அவளின் தோழி ஒருத்தி பெங்களூரில் வேலையில் இருக்க, “அப்பா ஃபிரண்ட்ஸ் எல்லாம் அங்க இருக்காங்க. நான் ஒரு ஒன் வீக் போய் இருந்துட்டு வர்றேன்”, என்று சொன்னாள்.

இப்படி என்றுமே ப்ரீத்தி ப்ரியப்பட்டதேயில்லை. ப்ரீத்தி ராஜசேகரனுடன் நேரடியாக சண்டையிட்டப் பிறகு ஒரு மாதிரி மூட் ஆஃபில் தான் இருந்தாள்.

அதனால் அவள் கேட்கவும், உடனே சரி என்று சொல்லிவிட்டனர். அவள் தனியான பயணத்தைக் கூட விரும்பமாட்டாள் என்று ராஜசேகரன் தான் அவளை பெங்களூர் கொண்டு விட்டு வந்தார்.

இப்போது ஹரி வந்து நிற்கவும் தான், இவன் வருவான் என்று தெரிந்து சென்றிருப்பாளோ என்று தோன்றியது.

“ப்ரீத்தியைப் பார்க்கணும்”, என்று ஹரி வந்து நின்ற போது,

தீப்பார்வை பார்த்து நின்றாலும், “இங்க இல்லை”, என்று குரலில் எதுவும் காட்டாமல் நல்ல மாதிரியாக தான் பதில் சொன்னார் ராஜசேகரன்.

ஹரியைப் ப்ரீத்தி தவிர்க்கிறாள் என்பது அவருக்கு அவ்வளவு சந்தோஷத்தை  கொடுக்க, அவனிடம் நல்ல முறையில் பேசி, “என் பெண்ணை தொந்தரவு செய்யாதே…. அவளுக்கு உன்னை பிடிக்கவில்லை”, என்று சொல்ல முயன்றார்.

“அவ தான் உன் கிட்ட பேசலை, உன்னை அவாய்ட் பண்றா தானே அப்புறம் ஏன் பின்னாடி வர்ற, விட்டுடு”, என்றார்.

ஹரியும் நல்ல விதமாகவே பதிலுக்கு அவரையும் புரிய வைக்க முயன்றான்.

“ஓகே, என் கிட்ட பேசலை, என்னை அவாய்ட் பண்றா, சரி, ஆனா எத்தனை நாளைக்கு?”,

“உன்னை மறந்துடுவா”,

புன்னகைத்தவன், “நான் ப்ரீத்தியை நேர்ல பார்த்து பேசிப் பழகினது சில நாட்கள் தான். ஆனா அவ பொறந்ததுல இருந்து அவளைப் பார்க்கறீங்க, உங்களுக்கு அவளைப் பத்தி தெரியலையா”,

“என் மேல கோபம் பேச மாட்டேங்கறா, பார்க்க மாட்டேங்கறா அவ்வளவுதான். இதனால அவ தான் என்னை விட வருத்தத்துல இருப்பா”.

“நோ உன்னை விட பெட்டர்ரா மாபிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்துவேன்”,

வாய் விட்டே சிரித்தான்.

அது ராஜசேகரனுக்கு அவ்வளவு கோபத்தை கொடுத்து.

அவர் டென்ஷனாவதை பார்த்தவன், சிரிப்பை நிறுத்தி, அவரிடம் பேசத் துவங்கினான்.

“என்ன சொல்றது? உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு”, என்று சிறிது நக்கலாகவே சொன்னவன், “உங்க பொண்ணைப் பத்தி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட உங்களுக்கு தெரியலை”,

அவனுக்கே தெரியும் அது திமிர் பேச்சு தான் என்று. “சும்மா எப்போ பார்த்தாலும் என் பொண்ணை விட்டுடு விட்டுடுன்னு சொல்லிக்கிட்டு”,  என்று மனதிற்குள்  கருவிக்கொண்டான். பிறகு சீரியசாக பேச ஆரம்பித்தான்.

“எத்தனை வருஷம் நான் அவ கண் முன்னாடி வராம இருந்தாலும், அவளோட பேசாம இருந்தாலும், என்னை மறக்க மாட்டா”,

“இவ்வளவு சாதிச்ச உங்க பொண்ணு ஜஸ்ட் ஒரு ஈர்ப்புனால என்னோட பழகுவான்னு நீங்க நினைக்கறீங்களா”,

“இவ்வளவு சாதிச்சவ ஒரு பெஸ்ட் சாய்ஸா என்னையும் தேர்ந்தெடுத்திருப்பான்னு ஏன் உங்களால நினைக்க முடியலை”,

“பழசு நடந்ததுக்கு எதுவுமே நான் பொறுப்பில்லை. அதை வெச்சு நீங்க என்னை மறுக்கறீங்களா, இல்லை என்கிட்டே நீங்க நினைச்ச அளவுக்கு வசதியில்லைன்னு நினைக்கறீங்களா”,

“எவ்வளவு வசதியோட திறமைகளோட புகழோட என்னைவிட அறிவா, அழகா ஒரு பையனைக் கொண்டு வந்து நிறுத்தினாலும்……”,

என்று இடைவெளி விட்டு நிறுத்தியவன்

“அவ சந்தோஷம் என்னோட மட்டும் தான். ஊர் உலகத்துல உங்களை விட பெஸ்ட்டா அப்பா அம்மா இருந்தாலும் நீங்க தானே அவளோட அப்பா அம்மா. அது மாதிரி தான். ஆயிரம் பேர் இருந்தாலும் நான் மட்டும் தான் அவளுக்கு மாப்பிள்ளை”,

“ஒரே ஒரு பாசிபிளிட்டி இருக்கு, நான் இந்த உலகத்தை விட்டு இல்லாம போனா வேணா, அதுவும் காலம் கடந்து ஏதாவது மாற்றங்கள் அவளுக்குள்ள வரலாம்”.

“ஏன்னா ப்ரீத்தி ரொம்ப ரியாலிட்டி தெரிஞ்ச பொண்ணு, ஜஸ்ட் ஒரு வயசுக்குரிய ஒரு ஈர்ப்புனால என்னை தேர்ந்தெடுத்து இருப்பான்னு நீங்க நினைக்கறது தப்பு. அவளுக்கு என்னை பிடிச்சிருக்கும்”.  

“நானே பல சமயம் உங்க பொண்ணு இன்னும் வளரணும் விளையாட்டுத்தனமா இருக்கான்னு நினைச்சிருக்கேன். ஆனா அவ அப்படி கிடையாது”.

“என்னை விட, உங்களை விட புத்திசாலி தான், இதுக்கு மேல என்கிட்டே சொல்ல ஒன்னுமில்லை……”,

“சாரி, என்னைப் பார்த்த நாள்ல இருந்து ஏதோ ஒரு வகையில உங்களை டென்ஷன் பண்ணிட்டே இருக்கேன். ஐ அம் ரியலி சாரி”, என்று ஒரு மன்னிப்பையும் வேண்டி ஹரி சென்றுவிட..

ராஜசேகரன் அப்படியே அமர்ந்துவிட்டார்.

“என்னடா இந்த பையன் நான் ஏதோ தப்பு பண்ற மாதிரி சொல்லாம சொல்லிட்டு போறான்.  என்னவோ சொல்லிட்டுப் போறான் என் பொண்ணு நல்லா இருக்கணும்”,

“அவனவன் ஒரு பொண்ணை பெத்தா தான் அவங்களுக்கு தெரியும். சும்மா நம்மளை வில்லனாக்கிடுவானுங்க, போறான்”,

ஆனால் மாலினிக்கு ஹரி பேசியதெல்லாம் நிஜம் என்பதாகவே தோன்றியது.

“ஒரு வேலை அந்த பையன் சொல்றது நிஜமா இருந்தா?”,

“இப்போ மட்டும் நம்ம என்ன பண்றோம். எல்லாம் ப்ரீத்தியோட முடிவு தான். விடு பார்க்கலாம், இப்போ தான் அவளுக்கு இருபத்தி மூணு வயசு”,

“இப்போ விளையாட்டுல அவ டாப்ல இருக்கா, கல்யாணம் பண்ணி அவ புகழை முடக்க வேண்டாம். அவ அதுல ஷைன் பண்ணட்டும் ஒன்னும் அவசரமில்லை”, என்று விட்டார். 

இருந்த பத்து நாட்களும் ஹரிக்கு நிற்க நேரமில்லாமல் வேலைகள் அணிவகுத்து நின்றன.

மனம் ப்ரீத்தியைப் பார்க்க தவியாய் தவித்தது ஒரு புறம். ஃபிளைட் ஏறும் தினம் மீண்டும் மான ரோஷத்தையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து மீண்டும் அவளின் வீடு சென்றான்.

ராஜசேகரன் இல்லை, மாலினி மட்டும் தான் இருந்தார்.

ஆனால் ப்ரீத்தி வந்திருக்கவேயில்லை. தன்னைப் பார்க்கக் கூடாது என்பதினால் தான் சென்றிருக்கிறாள் என்று புரிந்தது.

“இல்லை ஹரி, அவ வரலை”, என்றார் நல்லவிதமாகவே.

ப்ரீத்தி ப்ரீத்தி ாக  ாள் ை யென்்தையென்று கோப்பபடுவாள், ஆத்திரபடுவாள், சண்டையிடுவாள் என்று ஹரி எதிர்பார்க்க, இதை எதுவுமே செய்யவில்லை. அவனைப் பார்க்கவேயில்லை, அவனிடம் எந்த வகையிலும் பேசவும் இல்லை. 

சாதனா மூலமாகவும் பேச முயன்றான். அவளிடம் கூட பேசவில்லை. எந்த வகையிலும் தொடர்பில் வரவில்லை.   

பார்க்காமல் செல்ல மனமேயில்லை. இந்த முறை நிதின் தான், ஃபிளைட் ஏற்றி விட வந்தான்.

இன்னும் இரண்டு மாதத்தில் அவனுக்கு திருமணம் கூட, “வாடா கல்யாணத்துக்கு, எப்படியாவது வரப் பாருடா, ஜஸ்ட் ரெண்டு நாள் வந்தாக் கூடப் போதும். ஃபிளைட் டிக்கெட் நான் போடறேன்”, என்றான்.

அவனிடம் பார்க்கிறேன் என்று சொல்லியப் போதும், வரும் எண்ணம் அவனுக்கு இல்லை. தூர இருந்தால் கூட ஒன்றும் தெரியாது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு இன்னுமொரு முறை ப்ரீத்தியைப் பார்க்காமல் அவனால் செல்ல முடியாது.     

 மனமேயின்றி ஃபிளைட் ஏறினான்.

“இவ்வளவு பிடிவாதமா?”, என்று மனம் முழுக்க கோபம் வியாபிக்க ஆரம்பித்தது.

மறுநாளே ப்ரீத்தி வீட்டிற்கு வந்து விட்டாள்.

“அந்த பையன் நேத்துக் கூட வந்தான்”, என்று மாலினி சொல்ல,

“அவனுக்கு நேத்து ஃபிளைட் அதனால வந்திருப்பான்”, என்றாள் கூலாக ப்ரீத்தி.

“உனக்கு அவனைப் பிடிக்கலைன்னா சொல்லிட வேண்டியது தானே. ஏன் இப்படி அலைய விடற? தப்பு!”, என்று மாலினி சொல்ல,

“அவனைப் பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன்….. அலையட்டும், நல்லா அலையட்டும். என்னை கேட்காம எப்பவும் எல்லாம் முடிவு செய்யறான்….”,

“அவன் அங்க உட்கார்ந்துட்டு இருப்பான், நான் இங்க உட்கார்ந்துகிட்டு, அவன் அனுப்புற மெயில்க்காகவும், மெசேஜ்க்காகவும், ஸ்கைப் கால்க்காகவும் உட்கார்ந்துகிட்டு இருப்பனா? ப்ரீத்தி என்ன அவ்வளவு ஈசியா? யாரோ சொன்னாங்கன்னு லூசு மாதிரி வேலையை விட்டுட்டுப் போனா….. போறான் இடியட், நமக்கு இது சரி வருமா? வராதா? செய்யலாமா? வேண்டாமான்னு அறிவு வேண்டாம்”,

“அவனவன் பொண்ணைக் கரக்ட் பண்ண ட்ரை பண்ணினா, அவங்கப்பா சொல்றதை எல்லாம் கேட்டு லூசு மாதிரி பண்றான்”.    

என்று சொல்லி பேச்சு முடிந்தது என்பது போல எழுந்து சென்று விட்டாள்.

ராஜசேகரன் இதைப் பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தார். இப்போது தன் பெண் ஹரியை திட்டினாளா இல்லை அதன் மூலமாக தன்னைத் திட்டினாளா புரியவேயில்லை.

இந்த காலப் பிள்ளைகள் பற்றி ஒன்றும்  அனுமானிக்க முடியவில்லை.

எவ்வளவு தைரியம், கடைசியில் பெற்றோர்கள் தாங்கள் தான் முட்டாளாகிவிட்டோம் போல ராஜசேகரனுக்குத் தோன்றியது.

ப்ரீத்தியின் மேல் கோபம் கூட வந்தது. ஆனால் எப்படி காட்டுவது என்று தான் தெரியவில்லை. அவள் வருத்தப்பட்டாள் அவளை விட அவர்களுக்கு தானே வலிக்கும்.

ப்ரீத்தி எப்போதும் போல தான் இருந்தாள். எந்த மாற்றமும் இல்லை. காலை மாலை இரு வேளையும் ப்ராக்டிஸ். அதனால் வேலைக்கு செல்வது பற்றி யோசிக்கவேயில்லை. அவளின் மூட் எப்படி இருக்கிறது என்று பெற்றோர்களாக அப்போதும் அவளின் முகத்தை ஆராய,

“அப்பா! எதுக்கு இப்படி எப்பவும் என்னை ஆராய்சியோட பார்க்கறீங்க, நான் எப்பவும் போல தான் இருக்கேன்! இப்படி பார்க்காதீங்க!”,

ஹரியைப் பற்றி கேட்பதா? வேண்டாமா? தானாக அவனை ஞாபகப்படுத்தி விடுவாதா? குழம்பிப் போனார். என்ன அவளின் எண்ணம். என்ன நடக்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்னடா பொண்ணை வளர்த்து வெச்சிருக்கேன் நான்”, என்று தான் நினைக்கத் தோன்றியது.

எவ்வளவு சாதித்தாலும் பெண்கள் அடிப்பட்டுத் தானே போகிறார்கள். காதலித்து விட்டால் பெண்ணை வளர்த்தது சரியில்லையோ என்று தானே பெற்றோர்களின் எண்ணமாகி விடுகிறது.

Advertisement