Advertisement

அத்தியாயம் பத்து:

ஹரி மாலினியின் பார்வை மாற்றத்தை உணர்ந்தான், கண்டிப்பாக எந்த அன்னையும் இதை விரும்ப மாட்டார் என்று அவனுக்கு தெரியும் தான்.

ஆனால் இதில் தவறென்று எதுவும் இல்லையே……..

அவர்கள் விஷயம் தெரிவதற்கு முன் தன்னை புரிந்து கொண்டால் பிறகு இந்த மாதிரி பிரச்சனைகள் எதிர்கொள்வது அவனுக்கு சுலபமாக இருக்கும். ஓரளவிற்கு தன்னை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டால் அப்பிராயத்தை மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

விஷயங்கள் கை மீறி தான் விட்டது.

ஹரியும் எப்படி அவருக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் நிற்க அதற்குள் ப்ரீத்தி வந்துவிட்டாள்.

பூட்டி தான் இருக்கு என்று அவள் சொல்லிக் கொண்டு அவர்களை பார்த்தாள், அம்மாவின் முகமும் சரியில்லை, ஹரியின் முகமும் சரியில்லை, “என்னம்மா”, என்று மாலினியிடம் கேட்கவும் செய்தாள்.

“ஒன்னுமில்லைடா, ஹரிக்கு ஏதோ அவசர வேலையாம், உடனே கிளம்பணும்னு சொன்னார். அதான் கேட்டுட்டு இருக்கேன்”, என்று மாலினி சொன்ன விதத்திலேயே வெளியே போ என்று சொல்லாமல் சொல்கிறார் என்று ஹரிக்கு புரிய, சுரீரென்று ஒரு கோபம்.  

அதற்கு மேல் அவனும் தாமதிக்க வில்லை.  

“எஸ் ப்ரீத்தி, கொஞ்சம் எமெர்ஜென்சி வொர்க், நிதின் உங்க தாத்தாவோட பேசிட்டு வரட்டும். எனக்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை”, என்று சொன்னவன், “ஐ மீன் இது என்னோட வேலை”, என்று மாலினிக்கு இரு பொருள் பட கூறிச் சென்றும் விட்டான்.

அவன் மாலினியை பார்த்த பார்வை, “நீங்கள் தப்பு செய்கிறீர்கள்”, என்று சொல்லாமல் சொன்னது. “என்ன, ஏது”, என்று பேச விருப்பப்படாமல் அவர் எடுத்தவுடனே வெளியே போ என்பது போல சொல்லாமல் சொன்னது, ஒரு வகையில் ஹரியின் தன்மானத்தை மிகவும் சீண்டி விட்டது.

இதையெல்லாம் தூரமாக நின்று மாளவிகாவும் பார்த்துக் கொண்டு தானிருந்தாள்.

“நீ பேசிட்டு இரு, ஒரு சின்ன வேலை”, என்று நிதினிடம் சொல்லி சென்று விட்டான். நிதினும் எதுவும் பிரச்சனையை என்பது போல எல்லாம் நினைக்கவில்லை. வந்துவிடுவான் என்று நினைத்து தாத்தாவிடம் பேசியபடி தலையாட்டிவிட்டான்.

நிதின் மாளவிகாவின் வகையறா ஆட்களே…… அதனால் தாத்தாவிடம் அவனின் குடும்பத்தை சொல்லவும், அவருக்கு அவர்களை பற்றி தெரிந்திருக்க பேச்சு நீண்டு… மாலினியைக் கூப்பிட்டு, “நம்ம இவங்க இருக்காங்கள்ள…….”, என்று நிதினின் குடும்பத்தின் பெயர் சொல்லி, “அவங்க வீட்டுப் பையன் மா”, என்று அறிமுகப்படுத்தினார்.

அதற்குள் நிதின் அவர்களின் வீட்டிற்க்கே தொலைபேசி போட்டுக் கொடுத்துவிட அவர்களிடம் தாத்தா தொலைபேசியில் உரையாடினார்,

பழைய பழக்கம் அவர்களின் குடும்பம் தந்தைக்கு என்று மாலினிக்கு தெரியும். அதனால் நிதினிடம் ஒன்றும் காட்ட முடியவில்லை… காட்டி மீண்டும் பிரச்சனைகள் பரவுவதில் மாலினிக்கு விருப்பமில்லை.

ஒன்றும் செய்ய முடியாதவராக மனது பதைக்க, “கொஞ்சம் வலிக்குது, நீங்க பார்த்துக்கோங்கம்மா”, என்று அவரின் அம்மாவிடம் சொல்லி, அவர் ரூமினுள் சென்று படுத்துக் கொண்டார்.

ப்ரீத்திக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்தது. ஆனால் என்ன என்று புரியவில்லை.

நிதினை உணவு உண்ண ப்ரீத்தியின் பாட்டி அழைக்கவும், அப்போதுதான் ஹரியை நிதின் தேட, அவனைக் காணாமல் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க, அது ஸ்விச் ஆப். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்தது.  

தாத்தா வேறு இவர்களுக்காக உணவு உண்ணாமல் காத்திருப்பது புரிய, நேரம் அப்போதே காலை பத்தரை ஆகியிருக்க, நேரம் கடந்த நிலையில் அவரை காத்திருக்க செய்வது மரியாதையில்லை என்று உணர்ந்தவனாக அவருக்காக பாதி மனதோடு தான் உண்ண அமர்ந்தான்.

காலை உணவு உண்டு, பிறகு நிதின் வீட்டிற்கு வந்துவிட்டான். ஆனால் ஹரியை அவனால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

மாலை ப்ரீத்தி ப்ராக்டிஸிற்கு கிளம்பவும் மாளவிகாவும் கூட கிளம்பினாள். இருவரும் கிளம்புவதை அவன் வீட்டில் இருந்து நிதின் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

எப்படியும் ப்ரீத்தி ப்ராக்டிஸிற்கு உள்ளே போகும்போது மாளவிகா வெளியே தான் இருப்பாள் என்று புரிந்து, அவர்கள் சென்று சிறிது நேரம் கழித்து நிதினும் கிளம்பினான்.

ப்ரீத்தி ப்ராக்டிஸிற்கு உள்ளே போகவும், எதிர்பார்த்தபடி மாளவிகா வெளியில் இருந்த லானில் அமர்ந்திருக்க, அவள் முன் நின்றான் நிதின்.

எதிர்பாராத தன்மை மாளவிகாவின் முகத்தில் தெரிந்தாலும், அவன் பேசுவதற்கு காத்திருந்தாள்,

“உனக்கு ஓகே வா, இல்லையான்னு, தெரிஞ்சா தான் நான் வீட்ல பேசமுடியும். பேசட்டுமா?”, என்றான் நேரடியாக,

மாளவிகா அப்படியே நிற்கவும், “இப்போவே கல்யாணம்னு நான் சொல்லலை. எனக்கு ப்ராப்ளம் இல்லை. ஆனா பொண்ணுங்களுக்கு படிப்பு முடிச்சவுடனே கல்யாணம் செய்ய வீட்ல நினைப்பாங்க. உன் பேரண்ட்ஸ் எதுவும் மாப்பிள்ளை பார்க்குறதுக்கு முன்னாடி நான் வீட்ல சொல்லிட்டன்னா பரவாயில்லை……”,

“உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா, ஒன்னும் சொல்ல மாட்டாங்களா”, என்று மாளவிகா கேட்கவும்…..  

“ஏன்? உன்கிட்ட ஒத்துக்காத அளவுக்கு என்ன குறை, ஓரே ஆளுங்க, இப்போ தெரிஞ்ச குடும்பம் வேற, மோர் ஆர் லெஸ் ஈக்குவல் ஸ்டேடஸ் தான். நான் வீட்டுக்கு ஒரே பையன், கூட பொறந்தவங்க யாரும் கிடையாது……”,

“ஆனா ஜாயின்ட் ஃபாமிலி…. கூட பெரியப்பா இருக்காங்க…. அண்ணன் இருக்கான், என்னை விட ரெண்டு வருஷம் பெரியவன்…  அவன் கல்யாணம் தான் பிரச்சனை. அவனுக்கு முடியாம எப்படி எனக்கு செய்யறதுன்னு யோசிப்பாங்க….. மத்தபடி எங்க வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன். நீ சொன்னா தானே நான் பேசவே முடியும்”, என்றான்.

“பேசுங்க”, என்று மாளவிகா சம்மதம் சொல்லவும், நிதினுக்கு இவ்வளவு சீக்கிரம் சம்மதம் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.

நிறைய போராட வேண்டியிருக்கும் என்று நினைத்தான், மனம் லேசாக,  “உனக்கு என்னை பிடிச்சிருக்கா”,

“பிடிக்காமையா பேச சொல்வேன்”, என்றாள். எஸ், அவளுக்கு பிடித்து தான் இருந்தது. அவள் கல்லூரி சேர்ந்த நாள் முதலாக நிதின் அவள் பின்னால் சுற்றுகிறான் தான். ஆனால் அங்கே இருந்த போது அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. நிதின் கல்லூரி முடித்து சென்று விட்ட போது தான் மனம் அதிகம் அவனை தேடியது.

காலை, மாலை அவன் மெசேஜ்கள் வந்த போதும் பதிலளிக்கும் தைரியம் இல்லை. இப்போது ப்ரீத்தி பக்கத்துக்கு வீட்டில் இருப்பதாக சொல்லவும், பார்க்கும் ஆசையில் கிளம்பி வந்து விட்டாள்.

அதுவும் தெரிந்தவர்கள் என்று தெரிந்த பிறகு இன்னும் சந்தோஷம், இப்போது நிதின் கேட்கவும், “சரி”, என்று சொல்லிவிட்டாள்.

கூடவே அவளின் முகத்தில் ஒரு தயக்கத்தை பார்க்கவும், நிதின் “என்ன?”, என்று கேட்டான்.

“நான் சரின்னு சொன்னேனு வீட்டுக்கு தெரியக் கூடாது. அப்பா, அம்மா இந்த காதல் விஷயத்தை எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க”, என்றாள் பயத்தோடு.

“கவலையே வேண்டாம், எனக்கு வேண்டியது உன் சம்மதம் மட்டும் தான். உன் பேர் எங்கயும் வராது. ஆனா எனக்கு பிடிச்சிருக்குன்னு தான் எங்க வீட்ல பொண்ணு கேட்பாங்க”, என்றான் ஒரு கர்வத்தோடு.

மாளவிகாவின் முகமும் மலர, ஹரியிடம் விஷயத்தை சொல்ல வேண்டி மீண்டும் நிதின் ஹரிக்கு முயற்சித்தான்.

“எங்க போன்னான்னு தெரியலையே”, என்று மாளவிகாவிடம் சொல்ல,

“காலையில அத்தையும், ஹரி சாரும் பேசிட்டு இருந்தாங்க. அப்புறம் அத்தை சரியாவே இல்லை. படுத்துட்டே இருகாங்க”, என்று மாளவிகா சொல்லவும் தான், ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று நிதின் யோசிக்க ஆரம்பித்தான்.

கவலையாகவும் மீண்டும் மீண்டும் முயற்சிக்க, “ஃபோன் உடைஞ்சிடப் போகுது. அதையேன் இப்படி நோன்ற”, என்றபடி அருகில் வந்தது ஹரியே தான்.

“எங்கடா போன? காலையில இருந்து எத்தனை போன் பண்றது”, என்று நிதின் கேட்கவும்,

“சினிமாக்கு”, என்றான் ஹரி.

“என்ன சினிமாவுக்கா?”, என்று நிதின் அதிர்ச்சியாக கேட்கவும்,

“எஸ்”, என்றான் கூலாக.

“என்னை ஏன் விட்டுட்டு போன?”,

“எப்பப்பார்த்தாலும் உன்கூடயே போகணுமா என்ன? உன் கல்யாணம் மாளவிகாவோட நடக்கணும்னா என்கிட்டே இருந்து தள்ளி இரு”, என்றான் விளையாட்டு போல.

ஆனால் அதை சீரியசாக சொல்கிறான் என்று நிதினுக்கு புரிந்தது. மாளவிகா உடன் இருந்ததால் எதுவும் கேட்க முடியவில்லை. 

“எதுக்குடா போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணின”,

“டிஸ்டர்பன்ஸ் இருக்கக் கூடாதுன்னு”, என்றான் ஹரி.

அவன் பொய் சொல்கிறான் என்று நிதினுக்கு புரிந்தது,

ஹரியை என்ன விஷயம் என்பது போல பார்க்க, அதற்குள் ப்ரீத்தி வந்து கொண்டிருந்தாள்.

“எங்க போனீங்க காலையில சாப்பிடாம, என்ன வேலை?”, என்று ஹரியை பார்த்ததும் கேட்கவும்,

“நீதான் சமைச்சன்னு உன் கசின் சொன்னா, அதான் எஸ்கேப் ஆகிட்டேன்”, என்றான் சிரிப்போடு.

ஹரி இப்படி அதிகம் சிரிப்போடு பேச மாட்டான். என்னவோ மறைக்கிறான், என்னவோ சரியில்லை என்று நிதினுக்கு புரிந்தது. இந்த நான்கு வருடங்களாக அவனோடு இருக்கிறானே.

அது புரியாமல் ஹரி சீரியசாக சொல்கிறான் என்று நினைத்து, “ஐயோ நான் இல்லையென்று”, மாளவிகா பதறவும்,

“ப்ச், விடு யா. இவர் கப்ஸா விடறார்”, என்று ப்ரீத்தி சரியாக ஹரியை கணித்து சொல்லவும் தான் மாளவிகா சமாதானம் ஆனாள்.

“அவளை ஏன் டென்ஷன் பண்றீங்க, எனி திங் ராங்”, என்று ப்ரீத்தி நேரடியாக கேட்கவும்,

“நீ செல்”, என்று நிதினுக்கு பார்வையால் ஹரி சொல்லவும்,

நிதின், “நம்ம அங்க வெயிட் பண்ணலாம்”, என்று மாளவிகாவை அழைக்க, மாளவிகா வெகுவாக தயங்கினாள்.

“வீட்ல சொல்ல மாட்டேன், போ”, என்று ப்ரீத்தி சொல்லவும் தான் நகர்ந்தாள்.

“இப்போ சொல்லுங்க, வாட்ஸ் ராங்”, என்று ப்ரீத்தி கேட்க,

“எவ்ரி திங்”, என்றான் ஹரி.

“என்ன அம்மாக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா, காலையில நீங்க ரெண்டு பேரும் தான் பேசினீங்க. அப்புறம் அம்மா ரூமுக்குள்ள போனவங்க, இன்னும் வெளில வரலை. அப்பாவோட நிறைய பேசினாங்க.  நீங்க ஆளே காணோம், என்ன?”, என்றாள்.

ப்ரீத்தியிடம் என்ன பிரச்சனை என்று நேரடியாக சொல்ல முடியாததால் பாதி மட்டும் சொன்னான்…

“உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னேன், உங்கம்மாக்கு அது பிடிக்கலை”, என்றான்.  

“என்னை பிடிச்சிருக்குன்னா, என்கிட்டே தானே சொல்லணும். ஏன் அம்மா கிட்ட சொன்னிங்க”, என்று ப்ரீத்தி கேட்கவும்,

“ஐயோ”, என்றானது ஹரிக்கு,

அவளை முறைத்து பார்த்தவன், “ம், சும்மா வீட்டுக்கு தெரியாம அதை பண்ண மாட்டேன், இதை பண்ணமாட்டேன், அம்மா கிட்ட பேசுங்க, அப்பா கிட்ட பேசுங்கன்னு யாரு சொன்னா?”, என்று ஹரி கோபப்பட்டான்.

“அதுக்குன்னு என்னை பிடிச்சிருக்குன்னு என்கிட்டே சொல்லாம அவங்ககிட்ட சொல்லிடுவீங்களா”,

“அது சொல்லணும்னு சொல்லலை, பேச்சு வாக்குல வந்துடுச்சு”,

“என்ன பேச்சு வாக்கு?”,

“என்ன இது குறுக்கு விசாரணை, சும்மா கேள்வி எல்லாம் கேட்காத, உங்கப்பாம்மாக்கு என்னை பிடிக்கலை, அது தான் மேட்டர், அதுக்கு என்ன பண்ணலாம்”, என்றான்.

“முதல்ல எனக்கு பிடிக்குதா இல்லையான்னு தெரியலை, அதுக்கு அப்புறம் தானே எங்கப்பாம்மாக்கு பிடிக்கணும்”,

“ஏய், என்ன காமெடி பண்றியா. எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு உனக்கு தெரியவேயில்லையா”, என்றான் டென்ஷனாக. காலையில் இருந்து சற்று டென்ஷன் தான்.

“அதுதான் எனக்கும் புரியலை, உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சது”, என்று ப்ரீத்தி விழிவிரித்து சீரியசாக கேட்டாள்… இது அவளின் மனதில் இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டு தான் இருந்தது.

“ம், உன்னை பிடிச்சதுக்கு, என்னை பேய் பிடிச்சிருக்கலாம்”, என்றான் சிரிக்கமால் ஹரி.

கேட்ட ப்ரீத்தி வாய்விட்டு சிரிக்க, நடந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்த்தனர். ப்ரீத்திக்கு மனதினில் ஒரு இனிமை சாரல் தான் ஹரி அவளை பிடித்திருக்கிறது என்று சொன்னது.

“நான் அதுதான்னு ப்ரூவ் பண்ணுறியா”, என்றான் ஹரி சிரிக்காமல். ஆனால் அவளின் சிரிப்பில் மனம் லேசானது.

நிஜமாக காலையில் இருந்து இருந்த கவலைகள் எல்லாம் ப்ரீத்தியை பார்த்ததும் மறைந்தது….. அவனுடைய மூட் தானாக சேஞ் ஆனது.

இது சரிவருமா என்று மீண்டும் காலையில் இருந்து இருந்த யோசனையெல்லாம் மறைந்து ப்ரீத்தி தான் வேண்டும் என்று சொன்னது.  

ப்ரீத்திக்கு விஷயத்தின் சீரியஸ் நெஸ் இன்னும் புரியவில்லை.

“உங்கம்மாக்கு நான் உன்னை பார்க்குறது பேசறதுல இஷ்டமில்லை ப்ரீத்தி”, என்றான் ப்ரீத்திக்கு புரிய வைத்துவிடும் நோக்கில்.

“ஏன்?”, என்று ப்ரீத்தி திரும்ப கேட்கவும்,

“ப்ச்”, என்று அவளைப் போல சொன்னவன், “ஏன்றதை விடு, பிடிக்கலை என்ன செய்யலாம்?”,

“ஏன்னு தெரிஞ்சா தானே, அதை மாத்த முடியும்”, என்று ப்ரீத்தி ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்கவும்,

“ஊஃப்ஸ்”, என்றவன், “நீ ஆணியே புடுங்க வேண்டாம்”, என்றான்.

“வொய் டென்ஷன்”, என்றாள் கூலாக.

ஹரி ப்ரீத்தியை சற்று சீரியசாக பார்க்க…… “நம்மளே முடிவு பண்ணாத விஷயத்தை நீங்க எங்கம்மா கிட்ட ஏன் சொன்னிங்க”, என்றாள் என்னவோ தப்பு அவனது போல.

“உன் முடிவு எனக்கு தெரியாது, ஆனா நான் முடிவு பண்ணிட்டேன்”,

“என்ன முடிவு?”, என்று ப்ரீத்தி கேட்கவும்,

“என்ன நான் கதை சொல்லிட்டு இருக்கனா”,

“இன்னும் நமக்கு வயசு இருக்கு”, என்று ப்ரீத்தி பெரிய கிழவி மாதிரி பேசவும்,

“வயசு கல்யாணம் பண்ணிக்க இருக்கு, ஆனா காதலிக்க திஸ் இஸ் த ரைட் ஏஜ்”,

ப்ரீத்தி சிரித்தாள் , “உனக்கு எல்லாம் விளையாட்டு”,  என்று ஹரி சொல்ல சொல்ல,

பொங்கி பொங்கி சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கிற”, என்று கடுப்பானான் ஹரி.

“சிரிப்பு வருது, ஆனால் காதல் வந்துருச்சா இல்லையா தெரியலை”, என்று விளையாட்டு போல சொல்ல,

காலையில் இருந்து மிகுந்த டென்சனில் இருந்தவன், ப்ரீத்தி மீண்டும் மீண்டும் சிரிக்கவும்,

“உங்கம்மாவே வேண்டாம்னு சொல்றாங்க, உங்கப்பாவும்…….”, என்று ஆரம்பித்தவன், சற்று சீரியசாக பேச்சை நிறுத்தி,   

“வேண்டாம்னு சொன்னா என்ன பண்ணுவ”,

“பேசமாட்டேன்”, என்று ப்ரீத்தி விளையாட்டாகவே சொல்லவும்,

ஹரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏற ஆரம்பித்தது.

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் ப்ரீத்தி, காலையில இருந்து என் மண்டையை போட்டு உடைச்சிட்டு இருக்கேன்”,

“யாரு உடைக்க சொன்னா”, என்று திரும்பவும் விளையாடுத்தனமாக பேச,

சில அடி தூரத்தில் வேன் ஒன்று நின்று கொண்டிருக்க, யார் பார்வையும் படாதவாறு ப்ரீத்தியை வேன் முன்புறம் இழுத்துச் சென்றான்.

வேனிற்கும் சுவற்றிற்க்கும்  நடுவில் நின்றனர். யாரும்  எட்டிப் பார்த்தால் தான் தெரிவர்.

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன், சும்மா சிரிச்சு என் கடுப்பை கிளப்பாத”,

“நான் என்ன கடுப்படிச்சேன், என் கிட்ட சொல்லாம் எங்கம்மா கிட்ட சொல்லி இப்போ அவங்க பேசவிடமாட்டாங்க என்ன செய்யன்னு கேட்டா நான் என்ன சொல்றது”, என்று புன்னகையோடு பேசியவள்,

“அவங்க பேசவேண்டாம்னு சொன்னா…. கேட்டு தானே ஆகணும்”, என்று நியாயம் பேச,

அந்த நியாயம் பேசிய அவளின் இதழ்களை, சிலநொடிகள் பார்த்தவன், சட்டென்று தன் இதழ்களை அதனோடு பொருத்தினான். 

ப்ரீத்தி இதை எதிர்பார்க்கவில்லை…… ஹரியை பட்டென்று தள்ளி விட, விலகியவன், “நீ இன்னும் நம்ம விஷயத்தை சீரியஸா எடுக்கவே இல்லை……”, என்று சொல்லிக் கொண்டே,

மீண்டும் அவளின் கைகளை இறுக்கமாக அவள் தள்ள முடியாதபடி பற்றினான்.

அவன் முத்தமிட போகிறான் என்று புரிந்த ப்ரீத்தி,

“ஹரி, இது சரியில்லை, என்ன பண்ற நீ?”, என்று உச்சபட்ச அதிர்ச்சியில் கேட்க,

“சாரி ஹனி, ரிசெர்வேஷன் இஸ் எ மஸ்ட். ஃபார் சேஃப் கம்ஃபர்டபில் ஜர்னி. என்னை விட்டு நீ எங்கயும் போகக் கூடாது. போகவும் விட மாட்டேன். என்னை பிடிக்கலைன்னு சொல்லாத. ஐ நோ உனக்கு என்னை பிடிச்சிருக்கு”,

“பட் யூ நோ, யூ ஆர் எ அப்பா அம்மா பொண்ணு. அவங்க சொன்னாங்கன்னு உன் மனசை வெளில சொல்லாம விட்டுட்டா?”,

கைகளை இறுக பற்றியிருக்க அப்படியே அருகில் இழுத்தான்.

ப்ரீத்தி இப்படி ஒரு செய்கையை ஹரியிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை. பயத்தில் அவளின் முகம் வெளுத்தது.

அவன் முகம் வெகு அருகில் வரவும், ‘தப்பு ஹரி”, என்று பயத்தோடு சொல்லத் தான் தோன்றியது.

கத்தி யாரையும் கூப்பிடவோ, அவனை காட்டிக் கொடுக்கவோ தோன்றவில்லை.

அவளின் ஒரு சத்தத்தில் நிதினும் மாளவிகாவும் வந்து விடுவர்.  

“இனிமே நீ என்னை விட்டு போகவே மாட்ட”, என்றபடி ப்ரீத்தி எதிர்க்க, எதிர்க்க மீண்டும் முத்தமிட்டான். ப்ரீத்தியின் அதிர்ச்சி அவளின் எதிர்ப்பை முழு பலத்தோடு காட்ட விடவில்லை. மீண்டும், மீண்டும், ப்ரீத்தி சோர்ந்து போகும் வரை முத்தமிட,

“ப்ளீஸ், விட்டுடு”, என்று ப்ரீத்தி கெஞ்சவும் தான் விட்டான்.

விட்ட பிறகும் அவளை பார்வையால் களவாட, அதில் காதலும் இருந்தது, ஒரு கோபமும் இருந்தது. 

ப்ரீத்தியால் அவனின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை.

ஹரி முத்தமிட்டதை விட அவனை அனுமதித்த தன்னை குறித்து மிகுந்து அவமானமாக இருந்தது.

“எப்படி? எப்படி உன்னால இப்படி என்கிட்டே நடந்துக்க முடிஞ்சது”, என்று நடந்து முடிந்த சம்பவத்தின் தாக்கத்தால் கண்களில் நீரோடு கேட்க……

“சாரி ஹனி, உங்கப்பாம்மா கண்டிப்பா உன்னை என்னோட பழக விடமாட்டாங்க……. நானும் போறேன், என் ஞாபகம் உனக்கு இருக்கணுமில்லை, அதுக்கு தான் இந்த வொர்ஸ்ட் பிஃஹேவியர்”,

“லாஸ்ட் டைம் நீ என்னை கோயம்பதூர்ல பார்த்த போது நம்ம ஒரு நாலு நாள் தான் நேர்ல பார்த்தோம்”,

“இப்பவும் ஒரு நாலு நாள் தான் நேர்ல பார்த்திருக்கோம்”,

“பார்ப்போம், உங்கப்பாம்மா சம்மதிக்கிற வரைக்கும் நீ எனக்காக வெயிட் பண்ணறியான்னு”,

“எனக்கு நிறைய கமிட்மென்ட்ஸ். இப்போ என்னால எதுவும் செய்ய முடியாது. ஹரியை மிஸ் பண்ண வேண்டாம்னு உங்கப்பா அம்மா நினைக்கற அளவுக்கு நான் வரணும். அதுக்காக நிறைய ரிஸ்க் எடுக்க போறேன். ஆனா வின் பண்ணுவேன்னு தோணினாலோ இல்லை வின் பண்ணிடாலோ தான் உன் முன்னாடி வருவேன்”,

“பய், பார்க்கலாம்”, என்று சொல்லி சில அடிகள் எடுத்து வைத்தவன்,

திரும்ப வந்து, “சாரி, ஐ வாஸ் ஹார்ஷ்”, என்றவன்,

ப்ரீத்தி அவன் போகிறேன் என்று சொன்ன அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்க,

இப்போது மென்மையாக மீண்டும் அவளின் இதழில் இதழ் பதித்தான். இப்போது ப்ரீத்தியிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.

அவள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பது புரிய, “ஒன்னுமட்டும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ, என்னோட இந்த பிஃகேவியர் உன்கிட்ட மட்டும் தான்”, என்று சொல்லி அவளின் கண்களை பார்த்தான், எப்போதும் அவனிடம் பேசும் கண்கள் இப்போது என்ன பதில் கொடுக்கிறது என்று.

ப்ரீத்தியின் கண்கள் இன்னும் என்னால் உன்னை தப்பாக நினைக்க முடியவில்லை என்று தான் சொல்லியது, அதே சமயம் நீ ஏன் இப்படி செய்தாய் என்ற கேள்வியும் நிற்க,

“தேங்க் யூ”, என்று அவளைப் பார்த்து சொன்னவன்,

“கண்டிப்பா நீ சேம்பியன்ஷிப் வின் பண்ணனும். உன் சார்பா உன் கோச்க்கு நான் வாக்குறுதி கொடுத்திருக்கேன்”, என்று சொல்லி சென்றே விட்டான்.  

“என்ன நடந்தது, நடக்கிறது”, என்று சத்தியமாக ப்ரீத்திக்கு புரியவேயில்லை. நின்றது நின்றபடி நின்றாள்.

 

Advertisement