Advertisement

                          

அத்தியாயம் ஒன்று:

அது கோவையின் புகழ் பெற்ற கல்லூரி…… எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கியது…… மெடிசின் , என்ஜிநீயரிங் , பேராமெடிக்கல், மானேஜ்மென்ட் , ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ், பாலிடெக்னிக் என்று அனைத்தும்.

அந்த கல்லூரியின் இன்ட்ரா காலேஜ் மீட் நடக்க, அங்கிருந்த ஆடிட்டோரியம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்து.

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உன்னையே
ஏங்கிடுதே மனமே

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என்ற பாடலை ஒரு கல்லூரி மாணவி பாடிக் கொண்டிருக்க……

“யாருடா இது இந்த கர்ண கடூரமா கத்துறது, இந்த வாய்சை என்கரேஜ் பண்ண என்னை எதுக்குடா கூட்டிட்டு வந்தீங்க”, என்று பல்லைக் கடித்தான் ஹரி. குரல் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஹரி சொல்வது போல இல்லை.   

“டேய் ஹரி, அது எப்படி இருக்குதோ தெரியாது…… ஆனா நம்ம காலேஜ் ஸ்டுடண்ட், சும்மா ஆடிட்டோரியம் அதிரணும் வாடா”, என்று அவனை இழுத்துக் கொண்டு நடந்தான் நிதின். தோழர்கள் அல்ல உயிர் தோழர்கள்.  

ஹரி உள்ளே நுழையவும்….. பின்னோடு அவனின் கல்லூரி மக்கள் கும்பலாக நுழைந்தனர்.

அந்த குரல் பாடி முடிக்கும் வரை அமைதியாக இருந்தனர்….

பார்த்துக் கொண்டிருந்த ஹரிக்கு அது பெண்ணா ஆணா என்று தெரியவில்லை. பாய் கட், ஜீன்ஸ், ஆண்கள் அணிவது போல ஷர்ட்….

“ஏண்டா, பொண்ணு குரல் கேட்குது, ஆனா பார்த்தா பையன் மாதிரி தெரியுது”, என்றான் தூரத்தில் நின்றிருந்ததால்….. அதற்கு முன்னே கல்லூரியில் அவளை பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை.

“ஏண்டா, உனக்கு என்ன நொள்ளைக் கண்ணா, அந்த வளைவு நெளிவு பார்த்துமா உனக்கு சந்தேகம்”, என்றான் நிதின்.

“டேய், அராத்து பசங்களா, பொண்ணுங்க முகத்தை பார்த்து பேசுங்கடா”, என்று ஹரி சொல்லவும்,

“டேய் மச்சி சொல்றாண்டா, கேளுங்கடா கேளுங்க……”, என்று நிதின் சொல்லவும், ஆர்ப்பாட்டமாக கூட இருந்தவர்கள் சிரிக்க..

“டேய் மாமா, வந்த வேலையை பாருடா”, என்றான் ஹரி.  

பாடல் முடிந்திருக்க…… விசில் சத்தமும் கைதட்டலும் அரங்கத்தை பிளந்தது.  

அடுத்த பாடல் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருத்தி பாட….. இங்ஜிநீயரிங் கல்லூரி சார்பில் பாடி முடித்து படியிறங்கிய ப்ரீத்தி…. அவர்கள் கல்லூரி மாணவர்கள் இருக்கும் இடத்தை அடையவும்…….

“யாருடா இது! நான் இதுவரைக்கும் காலேஜ்ல பார்க்கவேயில்லை….”, என்று ஹரி நிதினின் காதில் மெதுவாக கேட்டான்.

“இரு, ஃபுல் ஹிஸ்டரி கலெக்ட் பண்ணலாம், என் ஆளோட ஒரு வாரமா பார்க்கிறேன், யாருன்னு தெரியலை”, என்று நிதின் சொல்லும் போதே…

ஹரியின் வகுப்புத் தோழி ஒருத்தியுடன்….. ப்ரீத்தியும், மாளவிகாவும் வந்தனர்.  

நிதினைப் பார்த்ததும் மாளவிகா தயங்கி நிற்க…… “ஹாய் சீனியர்ஸ்”, என்று ப்ரீத்தி மிகவும் காஷுவலாக அருகில் வந்தாள்.

“ஏண்டா, பசங்களே என்கிட்டே வந்து பேச தயங்கி வருவாங்க, யாருடா இந்த டம்மி பீஸ், இவ்வளவு தைரியமா வருது”, என்றான் ஹரி.

“ப்ளீஸ்டா, அடக்கி வாசி, என் ஆளு கூட வருதுடா”, என்றான் கெஞ்சலாக நிதின்.

“நீயும் என்ன என்னவோ பண்ற, அது உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டேங்குது”, என்றான் ஹரி.

“டேய், டேய் அமைதியா இருடா”,

ஹரி அமைதியானான். ஹரிக்கு தெரியும் நிதின் மாளவிகாவின் பின் அவள் இந்த கல்லூரியில் சேர்ந்த நாள் முதலாக காதல் என்று பிதற்றிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் அந்த பெண் திரும்பி பார்த்தது கூட இல்லை….. இதோ இபொழுது மாளவிகாவிற்கு இரண்டாவது வருடம்…. நிதின் , ஹரிக்கு கடைசி  வருடம். 

“யாரிது?”, என்றான் நிதின் மாளவிகாவிடம்…….

“என்னோட கசின், ப்ரீத்தி லக்ஷ்மி”, என்றாள் தயங்கி தயங்கி….

“ஃபர்ஸ்ட் இயரா, புதுசா சேர்ந்திருக்கா”,

“நோ, நோ, நான் செகண்ட் இயர், மாலு கிளாஸ், ட்ரான்ஸ்பர்ல வந்தேன்”,  என்று ப்ரீத்தி சொல்ல….

நிதினின் முகம் அதிருப்தியை காட்டியது…. அவன் மாளவிகாவிடம் பேச முயல்வதையும், அந்த ப்ரீத்தி அதை புரிந்து கொள்ளாமல் இடையிடுவதையும் பார்த்த ஹரி நண்பனுக்காக…..

“உன்கிட்டயா கேட்டாங்க….. முந்திரிகொட்டை மாதிரி நடுவுல வராத, சீனியர்ஸ் பேசும்போது அவங்க பெர்மிஷன் இல்லாம என்ட்ரி குடுக்க கூடாது”, என்று ஹரி சற்று கடுமையாக பேசவும்…..

ப்ரீத்தி பார்வையை ஹரியிடம் நிலைக்க விட….. அது அட்சர சுத்தமாய் கேட்டது, “நீ ஏன் நடுவுல வர்ற”, என்று.

“ஊப்ஸ்”, என்று மனதிற்குள் ஹரியினால் நினைக்காமல் இருக்க முடியவில்லை, “என்ன பார்வைடா…..”,

அப்போதும், “ஏய், என்ன லுக் விடற! சொல்றோமுள்ள”, என்றான் ஹரி.  

ப்ரீத்தி சற்றும் தயங்கவில்லை, “அவர் என்னை பத்தி கேட்டார், அதான் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணினேன்”, என்றாள் அலட்டிக் கொள்ளாமல். 

“உன்னைப் பத்திக் கேட்டான்? உன்கிட்டயா கேட்டான்…….”, என்று ஹரி எகிறவும்……

அதற்குள் மாளவிகா ப்ரீத்தியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, “நாம போகலாம் வா…….”, என்று செல்லவும்….

“இரு, சீனியர் பேசிட்டு இருக்கான்ல”, என்று வேறொரு நண்பன் சொல்லவும்……மாளவிகா பயந்து நிற்கவும்……

“ஏய், வாடி”, என்று ப்ரீத்தி இப்போது அவளை இழுத்துச் செல்ல……

“ஏய், என்ன?”, என்று மற்றொரு நண்பன் சொல்லவும்…….

“டேய்! இது வெளில, எல்லா காலேஜும் இருக்கு….. நம்ம மானத்தை நம்மளே வாங்கிக்க வேண்டாம், இங்க வேண்டாம்! நாளைக்கு நம்ம காலேஜ்ல பார்த்துக்குவோம்”, என்று ஹரி சொல்லவும்…….

அவர்கள் அடங்கினர்.      

ஹரி, “நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா”, என்பது போன்ற ஒரு பார்வையை ப்ரீத்தியிடம் செலுத்த….. 

ப்ரீத்தியின் கண்கள் சிரித்தது, அது சொன்ன செய்தி, “போடா டேய், போடா!”, என்பது தான்…….

ஹரி அசந்து விட்டான், “எவ்வளவு தைரியம் இவளுக்கு…… என் தோள் உயரம் தான் இருக்கா…… என் கிட்ட கண்ல பேசறா”, என்று அவளை முறைத்துப் பார்க்கவும்…

மறுபடியும், “சாரி சீனியர்”, என்பது போல கண்களால் ஒரு செய்தி சொல்லி ப்ரீத்தி போக…..

ஹரிக்கு ஆச்சர்யமாக போய்விட்டது……. இப்போது, இப்போது தான் அவளை அவன் முதன் முதலாக பார்க்கிறான்….. சாதாரண உயரம், சாதாரண நிறம், என்ன முகம் லட்சணமாய் இருந்தது, அதையும் தலையை பாய் கட் செய்து, அவள் கெடுத்து வைத்திருப்பது போல தான் தோன்றியது….. ஆனால் எவ்வளவு தைரியமாக என்னுடன் கண்ணில் பேசுகிறாள்…..         

நாளை இவள் மாட்டட்டும், வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை என்று மனதிற்குள் கருவிக் கொண்டு….. நண்பர்களுடன் மீண்டும் மற்ற நிகழ்ச்சியை ஊக்குவிக்க சென்றான்.

அங்கே மாளவிகா ப்ரீத்தியிடம் கடிந்து கொண்டிருந்தாள், “என்ன ப்ரீத்தி பண்ற நீ? அவங்க சீனியர்ஸ், வீணா வார்த்தை வளர்க்கிறது நல்லதில்லை”,

“என்னப்பா நீ? அதுல ஒருத்தனை நான் இங்க வந்ததுல இருந்து பார்க்கிறேன், உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்….. உன்கிட்ட பேச ட்ரை பண்ணினான்…. அதான் நடுவுல புகுந்தேன்”,

“அப்படியில்லை ப்ரீத்தி, நாம முடிஞ்ச வரைக்கும் அவாய்ட் பண்ணிடனும், அதிகம் அவங்களோட பேச கூடாது, ஹரி சர் ரொம்ப டேஞ்சரஸ் காலேஜே கொஞ்சம் தள்ளி தான் நிற்கும்”, என்று மாளவிகா சொல்லவும்….

“ஏன் அவன் மேல அவ்வளவு கப்பு அடிக்குமா….”, என்று மூக்கை பிடிப்பது போல ஆக்ஷன் செய்தவள், “யாரும் பக்கதுல நிக்க முடியாத படி”, என்று ப்ரீத்தி சிரிக்காமல் சொல்லவும்,

மாளவிகா சிரித்து விட்டாள்….

தூரத்தில் இருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த ஹரிக்கு, “இந்த குள்ள கத்திரிக்கா ஏதோ நம்மளை பத்தி தான் சொல்லுது போல”, என்று உள்ளுணர்வு கூற அங்கேயே பார்த்து இருந்தான். 

“ஏய், நீ அடங்கவே மாட்டியாடி…. இது மட்டும் ஹரி சர் கேட்டாரு…..”,

“என்ன பண்ணுவான், இரு நான் போய் சொல்றேன், என்ன பண்ணுறான்னு பார்க்கிறேன்”, என்று ப்ரீத்தி திரும்ப….. மாளவிகா அவளை தடுப்பதற்காக திரும்ப……

இருவரும் தூரத்தில் இருந்து ஹரி பார்ப்பதை பார்த்ததும் அப்படியே நின்றனர்.      

“ஷ்! வா! உன்னை வெச்சிக்கிட்டு, பசங்களுக்கு மட்டும் தெரிஞ்சது! அவ்வளவு தான்!”, என்று மாளவிகா மறுபடியும் ப்ரீத்தியை அந்த இடத்தை விட்டு அவசரமாக இழுத்துக் கொண்டு நடந்தாள்.

“சரிங்க பாட்டி, கேட்டுக்கறேன் வாங்க….. அதுக்காக நீங்க ப்ளேட் போடாதீங்க, என்னால தாங்க முடியாது”, என்று சொல்லிக் கொண்டே மாளவிகாவோடு நடந்தாள்.

பெண்களுக்கான தனிப் பாடல் முடிந்து ஆண்களுக்கான போட்டி ஆரம்பமாக……

அவர்களின் காலேஜ் என்று சப்போர்ட் செய்ய, ப்ரீத்தி மாளவிகா இன்னும் சில தோழிகள் உள் சென்று அமர…….

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாலே என் நெஞ்சில்

என்று மைக்கை பிடித்து கண்மூடி உருகி பாட….

ப்ரீத்திக்கு அடங்கமாட்டமல் சிரிப்பு வந்தது…….

மயக்கமென்ன காதல் வாழ்க என்று ஆண்குரலில் பாடிய ப்ரீத்தி,

“ங்கம்மா, ங்கப்பா, சாமி, இவனுங்க இந்த பாட்டை விடவே மட்டானுங்களா, என்ன கொடுமை சரவணா இது”, என்று முணுமுணுத்து, “வர்ற காதல் கூட இதைக் கேட்டா ஓடிப்போயிடும்”, என்று சொல்ல…

பக்கத்தில் இருந்த தோழிகள் எல்லாம் சிரித்தனர். ஆனால் எதுவும் சொல்லாதது போல ப்ரீத்தி அமர்ந்திருந்தாள்.

எப்போதும் ப்ரீத்தி அப்படித்தான்…. ஏதாவது சிரிப்பு வருவது போல அவள் சொல்விட்டு ஒன்றும் சொல்லாதது போல பாவமாய் முகத்தை வைத்து அமர்ந்து கொள்வாள்…. ஆனால் கூட இருப்பவர்கள் சிரித்து மாட்டிக் கொள்வர்.  

அவர்களின் காலேஜ் என்று ஒரே இடத்தில் க்ரூப்பாக அமர்ந்திருக்க…. இவர்களின் சிரிப்பை பார்த்து கவனத்தை இவர்களிடம் வைத்தான் ஹரி. நிதின் பாட, அவன் கிடார் வாசித்துக் கொண்டிருந்தான்.

அங்கே நிதின் பாடும் ஒவ்வோவொரு வரிக்கும் ப்ரீத்தி சிரிக்காமல் கமென்ட் கொடுக்க……. இங்கே தோழிகள் குழாமிற்கு சிரித்து சிரித்து முடியவேயில்லை.

பாடல் முடிந்ததும் கல்லூரிக்காக கமென்ட் அடித்து போல தோன்றினாலும், அது ப்ரீத்தியின் ஜோக்ஸ்னால் தான் அப்படி ஒரு கைத்தட்டல்.

இதில் விசில் அடிக்கிறேன் பேர்வழி என்று ப்ரீத்தி கண்டக்டர் விசிலை வைத்து வேறு ஊத….. அவர்கள் கல்லூரி இருந்த இடத்தை மற்ற எல்லா கல்லூரிகளும் இவர்களை பார்த்தனர்.

“என்னடா இந்த மொக்க பீஸ் வந்த நாளே எல்லோர் கவனத்தையும் கவருரா”, என்று நினைத்துக் கொண்டே மேடையை விட்டு ஹரி இறங்க…..

நிதின் தன் பாடலினால் மாளவிகாவிடம் ஏதாவது தெரிகிறதா என்பது போல பார்த்துக் கொண்டே இறங்க…….

“டேய், இப்போ நான் நடந்து போறதா, இல்லை நீந்தி போறதா”, என்றான் ஹரி.

நிதின் புரியாமல் பார்க்கவும்….. “நீ உடுற ஜோள்ளுல ஆடிடோரியமே நனையுது மச்சி, மானத்தை வாங்காத அடங்குடா”, என்று கடிந்து கொண்டே இறங்கினான்.

“இவனால நம்ம மானமும் போகுது”, என்று முனகிக் கொண்டே இறங்கினான்.

“அண்ணா!”, என்றபடி சாதனா அருகில் வரவும்…….

தனியாக ஒதுங்கினான் ஹரி. சாதனா ஹரியின் தங்கை அதே மேனேஜ்மென்ட்டின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவி.

“சாது, நீ மட்டும் இருக்க, ஃபிரண்ட்ஸ் எல்லாம் எங்க……”,

“நீ கிடார் வாசிச்சேன்னு பார்க்க வந்தேன், அவங்கல்லாம் அங்க இருக்காங்க”, என்று காட்ட…….

“பெரிய கேதரிங், உனக்கு காலேஜ் இன்னும் பழகலை, தனியா எங்கயும் சுத்தாதடா, உன் ஃபிரண்ட்ஸ் கூடவே இரு”, என்றான் அண்ணனாக…… மூன்று நாட்கள் நடக்கும் மீட் இன்று கடைசி நாள்…..

“ஓகே, ண்ணா!”, என்று சாதனா சொல்லி அவளின் தோழிகளிடம் விரைந்து விட…… ஹரி நண்பர்களை நோக்கி நடந்தான்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே சுற்றிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் சற்று கூட்டமாக இருக்க……

அங்கே ஹரி நண்பர்களுடன் விரைய…….. அங்கே ப்ரீத்தி வேறொரு பிரிவு மாணவனை ஏதோ கோபமாக திட்டிக் கொண்டிருந்தாள்.

பதிலுக்கு அவன் ஏதோ பேசவும், அவனை அடிக்க ப்ரீத்தி கை ஓங்கிக் கொண்டு செல்ல…… “ஏய், இரு! என்ன பிரச்சனை!”, என்று ஹரி உள் நுழைந்தான்.

“என்னடா ஜான்”, என்றான் அந்த மாணவனை பார்த்து.  தெரிந்தவனே…..

“ஒன்னுமில்லை பிரதர்”, என்று அவன் இடத்தை விட்டு அவசரமாக நகர்ந்து விட்டான்

“எதுக்கு இப்போ அவனை விட்டீங்க”, என்று ப்ரீத்தி ஹரியிடம் பாய,

“என்ன துள்ற, இங்க தான நாங்க இருக்கோம், ஹாய் சீனியர்ஸ்னு சொல்ல தெரிஞ்சது தான, எதுனாலும் எங்ககிட்ட சொல்ல வேண்டியது தானே….. நீ என்ன அவ்வளவு பெரிய பருப்பா, ஒரு பையனை அடிக்க போற….  என்ன பண்ணினான் அவன்”,

“அதெல்லாம் சொல்ல முடியாது”, என்று ஒரு முறைப்போடு ப்ரீத்தி சொல்லவும்….

“என்ன நடந்தது?”, என்றான் அருகில் இருந்த மாளவிகாவிடம்…….

“தெரியலை சர்….. எதுக்கோ அந்த பையனை திட்டி அடிக்க போனா, என்னன்னு சொல்லலை”, என்றாள் பயந்து.

“எல்லாம் ஆளாளுக்கு நானும் ரௌடி தான்னு கிளம்பிடுங்க”, என்றான் ஹரி கோபத்தில். 

ப்ரீதிக்கு அந்த பையன் மேல் இருந்த கோபம் அடங்கவேயில்லை….. “நீ என்னவோ பேசிக்கொள்”, என்பது போல ஹரியின் பேச்சை காதில் வாங்காமல் நின்றாள்.  

“என்ன திமிர்டா இவளுக்கு.. ஒரே காலேஜ் னு ஹெல்ப் பண்ண வந்தா ஓவரா பண்றா… நாளைக்கு காலேஜ் வருவா தானே, அப்போ பார்த்துக்கறேன்”, என்று மறுபடியும் கறுவிக் கொண்டே போனான்.                    

Advertisement