நாற்காலியில் தலை சாய்த்து சரிவாய் அமர்ந்திருக்க, வலது கரத்தில் நடுவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் சுழன்று கொண்டிருந்தது பேனா ஒன்று. மிகுந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் இளங்கதிர்.
அவனை திருமணத்திற்குச் சம்மதிக்கும் படி ரேவதி வேண்டிச் செல்ல, தனவதியும் அதைத் தான் கேட்டார். அவர்கள் கேட்டு அவன் மறுத்ததுமில்லை, அதேபோல் அவனுக்கு விருப்பமில்லாததை செய்ததுமில்லை. இது ஒன்றும் பெரிய செயலல்ல சமாளித்துவிடுவான், ஆனால் அவன் சிந்தை எல்லாம் சந்திரா தான் சுழன்று வந்தாள்.
‘இதில் என் தவறில்லை, என் விருப்பமில்லை என்னைப் புரிந்து கொள்ளேன்’ எனத் தவிப்போடு கெஞ்சவில்லை அவள் பார்வை! ‘எனக்கு இதில் விருப்பமில்லை, ஏதாவது செய்’ அவளின் உரிமை அவனானதால் கட்டளையிட்டது அவள் பார்வை! கட்டுப்படுவதா, கடந்து செல்வதா என்பதிலே அவன் யோசனை!
அவளொரு பார்வையில் அவள் உள்ளம் சொல்லிச் சென்றிருந்தாள். ஆனால் அவனால் தான் ஏற்க முடியவில்லை. அவள் மீது கோபம், இத்தனை நாட்களாகத் தன்னைச் சுற்றிச் சுற்றி வந்தவள் இதுபற்றி ஓர் நொடியில், ஓர் வார்த்தையில் உரைக்காது போய் விட்டாளே என! அதே நேரம் அரவிந்தன் சந்திராவைப் பார்த்த பார்வையும் கதிரால் சகிக்க முடியவில்லை.
வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் அவன் முடிவில் உறுதியாக நின்றிடுவான், யார் எதிர்த்தாலும் தடுத்தாலும் தகர்த்து விடும் உறுதியுண்டு. ஆகா அவன் யோசனையெல்லாம் முடிவெடுப்பதில் தான் இருந்தது.
“இது ஸ்ரீராம் ஹோட்டல் பில், இது கணேஷ் அண்ணாச்சி அரிசி மண்டி பில். கலெக்ஷன் போகும் முன்ன ஒருக்கா பார்த்துக்கோண்ணே. நெல்லு மூட்டை வந்திருக்கு, ஆளுக இறக்குறாங்க, குடோன்ல வடக்குப் பக்கம் அடுக்கச் சொல்லியிருக்கேன் அதையும் பார்த்துக்கோ” என அவன் முன் வந்து கோப்புகளை வைத்துவிட்டு நின்றான் கருப்பட்டி.
தொழிலில் ஒருபோதும் கவனம் சிதறாதவன் அனைத்தையும் அவன் பார்வைக்குள்ளே வைத்துக் கொள்பவன் இன்று ஸ்ரத்தே இல்லாமல் பேச வியப்பு தான்.
“என்னண்ணே காலையிலே இன்ஜினியரை பார்க்கப் போன எதுவும் பிரச்சனையா?” என விசாரிக்க மறுப்பாக தலையசைத்தான் கதிர்.
“எண்ணே, நான் எவ்வளவு பொறுப்பா கேள்வி கேட்கே, நீ என்னடானா பொறுப்பே இல்லாம தலையாட்டுற?” என பல்லைக்கடிக்க, நிமிர்ந்து பார்த்தான் கதிர். வண்ணமிழந்து வாடிய முகம்!
“ஹோ..மதினியை இரண்டு நாளா பார்க்காத கவலையா?” என கேட்டவன், “அது கல்யாணமாகப் போற பொண்ணுல அதான் அடிக்கடி வெளியே வாரதில்லை” என்றான் விளக்கமாக.
“உனக்கு யார்லே சொன்னா?”
“நம்ம சவுன்ட் சர்வீஸ் சரஸு! அவளுக்குத் தெரியாம ஒரு விஷயம் ஊருக்குள்ள இருக்க முடியுமா? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமாண்ணே?”
“அதாண்ணே அவர் வீட்டுக்காரம்மா அம்சவேணி இருக்குல அவக தம்பியாம், தூத்துக்குடிகாரங்க”
“ஹோ..” குரல் உள்ளே சென்றது.
“தூத்துக்குடியில பிஎஸ்ஏ கிரண்னைட்ஸ், பெரிய தொழிலில்ல! ஹார்பர்ல ஓடுற லாரி அம்புட்டும் அவக ட்ரவல்ஸ் தான், அதுபோக காலேஜ் வேற.. எம்புட்டு சொத்துபத்து இருக்கு. வீடே கடல் மாதிரி இருக்குமாம்னா பார்த்துக்கோண்ணே, நம்ம மதினி அங்கபோய் மகாராணியா இருக்கும்ல..”
அதான் அறிந்த முகமாகத் தோன்றினானோ? என்ற யோசனையில் கதிர் அமைதியோடு இருக்க, “அதுவும் உன் பின்னாலையே சுத்திச்சு நீ தான் கண்டுக்கிடலை, நல்லதுக்குத் தான் உன்னை கட்டியிருந்தா இந்த அரிசியில கல்லுப் பொறுக்கிட்டு, விக்காத பிண்ணாக்கு மூட்டைக்கு ஈயோட்டிகிட்டுல இருக்கணும்” என்ற கருப்பட்டி வாய் மூடி சிரித்தான்.
“அதுக்கு தாம்லே நீயிருக்க, என்னவோ பெரிய கலெக்டர் மாதிரி பேச்சு..” என்ற கதிர் முறைக்க, தோளில் கிடந்த துண்டை தலையில் போட்டவன், “எல்லாம் என் விதி, எங்கப்பா தாலிக் கயிறில்லாமலே என்னிய உனக்கு கட்டிகொடுத்துட்டாரு..” என்றான் புலம்பலாக.
சொத்து சுகத்தில் குறைவில்லாத போதும் படிப்பில் ஆர்வமின்றி இளசுகளோடு ஊர் சுற்றிக்கொண்டிருந்தான் கருப்பட்டி. அவன் தந்தைக்கு அது சுத்தமாக பிடிக்காது போக, படிக்கவில்லை எனினும் மகன் ஒழுக்கமோடு இருந்தால் போதுமென்று நினைத்தார். அதனாலே கதிரிடம் தொழில் பழகிக்கொள்ள அனுப்பி வைத்திருந்தார்.
“சரி, சரி போய் வேலையைப் பாரு”
“இன்னொன்னு, கல்யாணத்துக்கும் போய் விருந்து சாப்பிட்டு வீட்டையும் ஒரு மட்டோ பார்த்து வந்திடுவோம் என்னண்ணே?” என்ற கருப்பட்டியின் காதைப் பிடித்து அருகே இழுத்தவன் முதுகில் ஒரு அடி வைக்க, நாய் கவ்விய நல்லி எலும்பு நழுவியது போன்று நொடியில் நழுவியோடி விட்டான்.
காலையில் நிலஅளவையர், இன்ஜினியரைப் பார்த்துப் பேசிவிட்டு அறையில் அமர்ந்தவன் கருப்பட்டி வரவும் தான் கலைந்தான். மதிய உணவு உண்ணாத வயிறு பசியில் எரிய, தேநீர் அருந்த வெளியே சென்றான்.
வழக்கமாக வரும் டீக்கடைக்கு வர, மாலை நேரம் சூடாக வடை போட்டுக் கொண்டிருந்தார் உரிமையாளர். இரண்டு உளுந்தவடையும் ஒரு டீயும் சொல்லியவன் ஒரு இருக்கையில் அமர, சில நொடியில் அதே மேசையின் எதிர் இருக்கையில் வந்தமர்ந்தான் மனோ.
அவன் வரவை புரியாது பார்த்தான் கதிர். மனோவிற்கு இங்கென்ன வேலை? அதுவும் தனது ஆலைக்கு அருகில் இருக்கும் சிறு டீக்கடையில்.
மனோ அறிந்தவரை சந்திராவிடம் தான் சிறு சலனம் உண்டு, இருந்தும் தாத்தாவிற்காகத் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்கிறாள். திருமண வேலைகளும் ஆரம்பித்த நிலையில் அவள் மனதை கதிர் கலைப்பதாக தவறான கற்பனை. சந்திராவிடம் பேசி வேலைக்காவது என்றறிந்தவன் ஆகவே கதிரை மிரட்டிச் செல்ல வந்திருந்தான்.
இதழ் சுளிப்பும், வேண்டாத வெறுப்பும், இவனெல்லாம் ஒரு ஆளா! என்பது மாதிரியான அலட்சியமும் கலந்த மனோவின் பார்வையைச் சரியாக மொழி பெயர்த்துக் கொண்ட கதிரின் விழிகள் ரௌத்திரமானது.
எப்போதுமே தன்னை கீழாகப் பார்ப்பதைக் கதிர் விரும்பமாட்டான் அதனாலே அவன் தோற்றத்தில் கூட அந்த அளவிற்கு ஒரு அக்கறை உண்டு. என் வாழ்வாதாரத்தைப் பறித்த பின்னும் சுயம்புவாக மலை போல் எழுந்து நின்றிருக்கிறேன், அப்பன் நிழலில் வாழும் இவனுக்கு எங்கே என் அருமை தெரியப் போகிறது? என்ற செருக்கோடு சளைக்காது எதிர் பார்வைப் பார்த்தான் கதிர்.
சிறுவயது கதிரை அறிந்திருந்த மனோ தற்போதைய கதிரின் பின்புலமும் உயரமும் அறிந்திருக்கவில்லை. எப்போதுமே அவனிடம் ஒரு அலட்சியம், போட்டி மனோபாவமும் தான்!
“எங்க சந்திராவிற்குக் கல்யாணம்..”
அதுக்கு..? என்பது போல் அலட்சியமாகப் பார்த்திருந்த கதிர் சூடான தேநீரை உறிஞ்சினான்.
“எங்க மாப்பிள்ளை எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? தூத்துக்குடி பழனிச்சாமி கேள்விபட்டிருப்பியே அவரோட ஒரே வாரிசு, அவர் முன்ன நீயெல்லாம் தூசிக்குக் கூட ஆக மாட்டலே..”
டீ கிளாஸை மேசையில் வைத்து விட்டு மனோவை நோக்கி நெருங்கியவன், “அதை ஏம்லே எங்கிட்டச் சொல்லுத? உன் மாப்பிள்ளைக்குப் போட்டியா வந்துடுவேங்கிற பயமா?” என்றான் நிதானமாக.
உண்மை அது தான் எனினும் அவனைக் குறைவாகப் பேசியதில் குறுக வேண்டுமென்று எதிர்பார்த்த மனோவிற்கு ஏமாற்றம் தான்.
“அவர் உசரத்துக்கு நீ வரமாட்டலே ஊரே மெச்ச இந்த கல்யாணத்தை நடத்துவார் பாரு..”
“அதை உன் தங்கச்சிடல சொல்லணும், ஏன் அவள் கேட்க மாட்டாளோ?” என்க, மனோ வாயடைத்துப் போனான்.
இவ்வளவு அழமாக சந்திராவைப் பற்றி அறிந்திருக்கிறானே வியப்பு தான்! கதிரின் நிதானமும் வார்த்தைகளும் மனோவை நிதானமிழக்கச் செய்யக் கோபத்தில் தடுமாறினான்.
“அவளை பார்த்துக்க எனக்குத் தெரியும். நிச்சமான பொண்ணோட உனக்கு என்னடே தனியா பேச்சு வேண்டி கிடக்கு? அதுவும் கையைப் பிடிச்சிப் பேசுற அளவுக்கு என்னலே உரிமை இருக்கு உனக்கு?”
கோபமாகக் குரல் உயரக் கேட்க, “என்ன உரிமைன்னு காட்டட்டா?” அதற்கும் நிதானமாகக் கேட்டான் கதிர். அவள் கேள்வியில் குப்பென்று வியர்க்க, படபடத்தான் மனோ.
“இங்க பாருலே, சந்திராகிட்ட முழு உரிமையும் எனக்குத் தான் இருக்கு. நீ வேற எவனுக்காது கட்டிக்கொடுக்க நினைச்சாலும் அது நான் விட்டுக்கொடுத்தா தான் உண்டு. இது வரைக்கும் எங்கப்பனை கொன்ன கொலைகார குடும்பத்தோட நிழல் வேண்டாம்னு விலகி இருக்கேனே தவிர, விட்டுக்கொடுத்துட்டு இல்லை..புரியுதா?”
இயல்பிலே கதிரின் உரத்த குரல் தற்போது மிரட்டலாக வர, அதற்கும் கண்மூடித்தனமான கோபம் தான் மனோவின் பிரதிபலிப்பு.
“நீ என்னலே விட்டுக்கொடுக்குறது? இல்லை உன்னாலே என்னச் செய்திட முடியும்? உங்கப்பனை மாதிரி நீயும் சாகப்போறீயா? அவுகளோட மோதாதே! கொன்னு கடல்ல ஏறக்கிடுவாக. ஒழுங்கு மரியாதையா விலகிப் போயிடு. நீயே ஒரு வாய் கஞ்சிக்கும் வழியில்லாம அல்லல்படுற பரதேசி, சந்திரா மகாராணியா வளர்ந்தவள், உனக்கு என் தங்கச்சி கேட்குதா?
ஒருவேளை என் தங்கச்சியைக் கட்டிக்கிட்டு சுகமா இருந்திடலாம்னு கனவு கட்டியோ? உன் ஆசை நிறைவேறாது, நீ நினைக்கிறது நடக்காது”
“நடத்திக் காட்டிட்டா..?” மூச்சு வாங்க வசனம் பேசிய மனோவை ஒரே கேள்வியில் மூச்சடைக்க செய்திருந்தான்.
“உன்னாலே முடியாது..”
“முடியும்..” என்றவனின் குரலிலிருந்த உறுதி, உதட்டுச் சிரிப்பிலிருந்த மமதை மனோவினுள் சிறு பயத்தைத் தூவியது. அதை வெளிக்காட்டாது கோபத்தில் கடுகடுத்தது அவன் முகம்.
“எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்..” எனச் சவால் விட்ட மனோ, எழுந்து செல்ல, கதிரின் உதடுகளில் மூரல். உண்மையில் மிரட்ட வந்தவன் தான் மிரண்டு சென்றிருந்தான். அதுவரையிலும் தடுமாற்றத்தில் இருந்தவனை ஒரு நிலைப்பாட்டில் நிற்க வைத்துச் சென்றிருந்தான் மனோகர்.
நண்பகல் நேரம் பதிவாளர் அலுவலகத்திலிருந்து வந்த இளங்கதிர், வெளியே இருக்கும் தனது இருசக்கர வாகனத்தை இயக்க, அவனைத் தாண்டிச் சென்ற கார் ஒன்று நின்றது. அதைக் கவனித்த கதிரும் பணிவோடு வண்டியிலிருந்து இறங்கிச் செல்ல, காரிலிருந்து இறங்கி வந்தார் அமைச்சர் தென்னரசு.
“அடேய் கதிரு, சௌக்கியமா?” என்றவர் முகம் மலர விசாரிக்க, “உங்க புண்ணியத்துல சௌக்கியத்துக்கு ஒரு குறையுமில்லை அண்ணாச்சி” என்றான்.
சின்னதாகச் சிரித்துக் கொண்டவர், பணிவோடு நின்றிருந்தவனின் தோளில் தட்டிக்கொடுத்து “உன் உழைப்புக்கு இன்னும் நீ உசருவலே” என வாழ்த்தினார்.
பதிலுக்குக் கதிர் புன்னகைக்க, ஒரு பார்வைப் பார்த்தவர், “இங்க என்னடே செய்த? எதுவும் பிரச்சனையா?” என்றார் விசாரணையாக.
“அப்படியெல்லாம் எதுவுமில்லை அண்ணாச்சி, போன வருஷம் நம்ம கடைவீதில ஒரு இடம் வாங்கிப் போட்டேன்ல அதுல ஒரு காம்ளக்ஸ் கட்டிவிடலாம்னு நினைக்குதேன். இன்ஜினியர் தான் வேலை ஆரம்பிக்க முன்னால ஒருக்கா இடத்தை அளந்து பார்த்துடுவோம்னு சொன்னாரு அதுக்கு தான் அலையிறேன் அண்ணாச்சி” என்றான்.
“எவனும் பிரச்சனை செய்தானா?”
“ச்சேசே, உங்க நிழல் வளருற மரம் நானு.. அது இந்த வட்டாரத்துக்கே தெரியும்ல பின்ன ஒரு பையன் வாலாட்ட முடியுமா?”
“சரி தாம்டே, காசு எதுவும் பத்தலைன்னா வாங்கிக்கோ, கீழ நாலு மேல நாலுன்னு எட்டு கடையா கட்டிடு, பின்னாடி உதவும்ல உனக்கு” என்க, தலையாட்டினான்.
மீண்டும் தோளில் தட்டிக்கொடுத்தவர் உள்ளே செல்ல, அதுவரையிலும் சலசலத்துக் கொண்டிருந்த கூட்டமும் அவர் பின்னே செல்ல, கதிரும் கிளம்பினான்.
அரும்பு மீசையும், ஒட்டிய தேகத்தோடு தனது அரிசி ஆலையில் மூட்டைத் தூக்குகையில் தான் கதிரை கவனித்தார். பரிதாபமாகப் பார்க்கவில்லை, ஒளி மங்கிய வைரமாகப் பார்த்தார். என்னவோ ஒரு ஈர்ப்பு! அவன் உழைப்பைப் பார்த்தவருக்கு உயர வருவானென அன்றே உள்ளம் சொல்லியது.
தினக்கூலியாக இருந்தவனை மாதச்சம்பளத்திற்கு தனது ஆலையில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். சின்ன நடையிலும் சீரான வேகம், பேச்சிலிருக்கும் தெளிவும், எதுவுமே இல்லாத போதும் அவனிடமிருந்த நம்பிக்கை அவரை ஈர்த்தது. அவர் சேர்த்துக் கொண்ட நேரம், அதிஷ்டமும் அவருக்குச் சேர்ந்துக் கொண்டது. அரசியலில் வாய்ப்புக்கிடைக்க, அந்த முறை நடந்த தேர்தலில் கவுன்சிலர் ஆனார். ஆலையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவனிடம் தர, நேர்மையும் நாணயத்தையும் நிரூபித்த கதிர், தொழிலும் லாபம் காட்டினான்.
மூன்று ஆண்டில் அரசியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட நினைத்தவர் அரிசி ஆலையை விற்க முயற்சிக்க, அதை தடுத்தான் கதிர். ஆலையை தனக்கே தரும்படியும் தற்போது லாபத்தில் அவருக்குச் சரிபாதியும் பின்னர் மொத்த பணத்தையும் தத்துவிடுவதாக உரைத்தான்.
இத்தனை ஆண்டுகளில் தொழில் கற்றுக்கொண்டதைத் தவிர, மூலதனம் என அவனிடம் ஏதுமில்லை, இருந்தது அசாத்திய தைரியம் மட்டுமே! தொழிலை விட்டுவிடக் கூடாது, உழைக்க வேண்டுமென்ற வேகம் கதிரிடமிருக்க, கண்டுகொண்டவர் உயர வேண்டுமென்று முதல் முறையாக அவன் தோளில் தட்டிக்கொடுத்தார்.
முடியும் போது பணத்தைக்கொடு என மொத்தமாக அரிசி ஆலையை அவனுக்கே கொடுக்க, மாதாமாதம் வாடகையும், வட்டியையும் கொடுத்தவன் சிறுக சிறுக பணத்தையும் கொடுத்து அடுத்த மூன்று ஆண்டில் மில்லுக்காரன் ஆனான்.
அந்த மூன்று ஆண்டில் அவனின் உழைப்பு அத்தனை பலமடங்கு அதிகமானது, கூலியைக் குறைக்க என பத்து ஆள் சுமக்கும் மூட்டைகளை அவனே பகல் முழுக்க சுமப்பதும் இரவுகளில் உறங்காது இயந்திரங்களை இயக்குவதும் எனக் கடினமாக உழைத்தான்.
கதிரே சுற்றுவட்டார கிராம விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் செய்து கொள்வதில் தொடங்கி, சிறு சிறு கடைகளுக்கும் சென்று அரிசியைச் சேர்ப்பது வரை அனைத்தையும் அவன் கட்டுப்பாட்டிலே வைத்துக் கொண்டான். சம்பாத்தியத்தை விட, அதைத் தங்க வைத்துக் கொள்ளுவதற்கும் பெருக்குவதற்கும் தனித் திறமை வேண்டும்.
கதிரிடம் அத்திறமையும் இருந்தது. சம்பாத்தியத்தைப் பார்த்துப் பார்த்து முதலீடு செய்து மூலதனத்தை பெருக்கினான், தற்போது தென்மண்டல வணிகர் சங்க கூட்டத்திற்குள் அவன் சொல்லுக்குத் தனி மதிப்புண்டு என்ற நிலைக்கு உயர்ந்திருந்தான்.
தென்னரசு இன்று அரசியல்வாதியாக உயர்ந்திருந்தாலும் கதிருக்கு இவர் என்றுமே அண்ணாச்சி தான். அவன் மீது தனிப்பாசம் அவருக்கு இருக்க, அவர் மீது பெரும் மரியாதை அவனுக்கிருந்தது.
தாத்தாவிற்காகச் சம்மதித்து விட்டாலும் இத்திருமணத்தில் சந்திராவிற்குச் சிறிதும் விருப்பமில்லை. அடுத்த சில நாட்களிலே அன்னையிடம் விசாரித்து அரவிந்தனின் அலைபேசி எண்ணை வாங்கி அவனிடமும் தொடர்பு கொண்டு பேசினாள். திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரிவிக்க, அவன் காரணம் கேட்க, அதையும் மறைக்காது தெரிவித்துவிட்டாள்.
அவன் என்னடாவென்றால் குழந்தைப் பருவ ஈர்ப்பு, ஒரு தலை காதல் தானே பரவாயில்லை திருமணத்திற்குப் பிறகு மறந்துவிடுவாய் நம் வாழ்க்கையைப் பார்ப்போம் என அநியாயத்திற்கு நல்லவனாகப் பேச ஐயோ என்றிருந்தது சந்திராவிற்கு. அதைவிடவும் அவன் பேசியதை தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. எவன் எவனிடமோ தன் காதலைப் புரிய வைக்க முயற்சிப்பதற்கு பதில் கதிரிடமே போராடிவிடலாம் என்ற எண்ணத்தில் ஊருக்கு வந்திருந்தாள்.
அன்று அண்ணனைக் கண்டதும் சாலையில் கதிரை தனித்து விட்டு வந்தது தான், அன்றைய நாளிற்குப் பிறகு அவனை சந்திக்கவில்லை. மனோகர் தான் சந்திக்கவிடவில்லை. பெரும்பாலான நேரங்கள் வள்ளியம்மையின் கண்காணிப்பிலே இருக்க, கதிரை எவ்வாறு சந்திப்பது என பெரும் யோசனையோடு அமர்ந்திருந்தாள் சந்திரா.
அதற்குள் வாசலில் வண்டிச் சத்தம் கேட்க, யாரென்று எட்டிப்பார்க்க மறுநொடி அவளை நோக்கி ஓடி வந்தாள் வர்ஷா. அவள் பின்னே மொத்த குடும்பமும் ஒவ்வொருவராக இறங்க, வள்ளியம்மையும் வாசலில் சென்று வரவேற்றார்.
வர்ஷாவை தூக்கிக்கொண்ட போதும் சந்திராவின் முகத்தில் சிறிதும் மகிழ்வில்லை. அவள் திட்டமெல்லாம் குடும்பத்தினர் வரும் முன் எப்படியேனும் கதிரை திருமணம் செய்து விடுவதாக இருந்தது. ஆனால் அன்னை அறிவித்த இரண்டு நாட்களுக்கு முன்பே மனோ வந்துவிட, தற்போது மொத்த குடும்பமும் வந்திருக்க, இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலையில் நின்றாள் சந்திரவதனி.
வார்த்தைக்குக் கூட வரவேற்காமல் சிலையாக நிற்க, கலைவாணியும் வள்ளியம்மையும் பேசியபடியே பின்னே வர, முன்னே வந்த வரதராஜன், “என்ன சந்திரம்மா சௌக்கியமா இருக்கியா?” என்றார்.
அவள் பதில் சொல்லாது முகம் திருப்பிய நிலையிலே நிற்க, அருகே வந்த கலைவாணி, “அப்பா தான் அக்கறையா கேட்குறாங்களே பதில் சொல்லு சந்திரா, இன்னுமா கோபமா இருக்க?” என அதட்ட, “அக்கறை இருந்தா என் விருப்பத்தை ஏன் மறுக்கணும்?” என்றாள் சட்டென.
கணவன் நோகும் படி மேலும் பேசிவிடுவாள் என நன்கு அறிந்திருந்த கலைவாணி அதற்கு மேலும் அதட்டாது அமைதியாகிவிட, சந்திரா தன்னறைக்குள் சென்றுவிட்டாள். மனோவிடமும் தந்தையிடமும் அன்றிலிருந்தே அவள் பேசுவதில்லை. சில நாட்களில் அவள் கோபம் சரியாகி விடும் என நினைத்து விட்டதால் நாளுக்கு நாள் அவள் பிடிவாதம் அதிகமாகி விட்டதோ என வருந்தினார்.
அவர் முகத்தைப் பார்த்த கலைவாணி, “போன்ல பேசும் போதெல்லாம் நல்லாதாங்க பேசினா, எல்லாரும் எப்போ வருவீங்கன்னு கவலையா விசாரிச்சா இப்போ என்னடான்னா கண்டுக்காம போறா?” என புலம்ப, “விடு கலை, கல்யாணம் முடித்துப் போகப் போறா தானே நம்மளோட கொஞ்ச நாள் இருக்கணும்னு கூட நினைச்சிருப்பா, என் பொண்ணை பத்தி எனக்குத் தெரியாதா?” என மனைவிக்கும் அவர் மனதிற்கும் சமாதானம் சொல்லிக் கொண்டார்.
அனைவரும் வந்துவிட்டதால் திருமணவேலைகள் வேகமாகத் தொடங்கியது, வரதராஜனும் மனோவும், உறவுகளுக்கும் ஊர் முழுவதும் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருக்க, பெண்களும் நகை, புடவை என அவர்கள் வேலையைத் தொடங்கினர். எழுந்து நடமாடிக் கொண்டிருந்த நாராயணன் கூட உதவியாக தன்னால் இயன்ற வேலைகளைச் செய்ய, திருமணநாள் நெருங்கியது.