Advertisement

அத்தியாயம் 07
இளம் பிஞ்சு கைகளை நொறுக்கிவிடுவது போல் அழுத்தப்பிடித்திருந்த மனோ, “சந்திரா என்னோட வா. நான் நீச்சல் சொல்லித் தாரேன், அவன் வேண்டாம்” என அழைக்க, அவளோ “ம்கூம்.. நீ அடிப்பே, நீ வேண்டாம் போ” என மறுத்தாள். 
“நான் உன் அண்ணன்ல அடிக்க மாட்டேன், நல்லா சொல்லித் தருவேன் வா” என கரங்களைப் பற்றி அழுத்தமுடன் இழுக்க, “ம்கூம், சைக்கிள் சொல்லித் தரும் போதும் இப்படி தான் தலையிலே அடிச்சே, கை வலிக்குது விடு…” எனச் சிவந்த கைகளோடு வலி பொறுக்காமல் அவள் கண்ணீர் வடிக்க, பார்த்திருந்த கதிருக்கு மனம் பொறுக்கவில்லை. 
கிணற்று மேட்டில் சிறுவர் ஐவரும் நின்றிருந்தனர். சட்டென மனோவின் மறு கரத்தை எலும்பு முறியும் அளவிற்கு நொறுக்கிக் படித்திருந்த கதிர், “அவ கையை விடுலே..” என மிரட்ட, வலி பொறுக்காமல் அவனும் விடுவித்தான். 
“ஒன்னுமில்லை வலிக்காது, சரியாகிடும்” என சந்திராவின் கரங்களைப் பற்றி மென்மையாக வருடிய கதிர், இதழ் குவித்து ஊதிவிட, அதைக் கண்ட உக்கிரமடைந்த மனோ சட்டென நொடியில் சந்திராவை கிணற்றிற்குள் தள்ளிவிட்டு நில்லாது ஓடி விட்டான். 
மறுநொடியே கதிரும் உள்ளே குதித்தான். பன்னிரண்டு வயது சிறுமி, நீச்சல் சிறிதும் தெரியாது, ஆழமென்றால் அத்தனை பயம் அறிந்திருந்தும் அண்ணனே தள்ளி விட்டிருந்தான். சற்றும் எதிர்பாராத செயலில் உயிர் பயம், மூச்சுத்திணறலோடு தண்ணீருக்குள் மூழ்கியிருந்தவளைக் கதிரின் கரங்கள் தான் அணைத்துத் தூக்கியது.  
பற்களும் உடலும் நடுநடுங்க, நனைத்த உடையோடு கதிர் அவளை வீட்டிற்குத் தூக்கி வர, எதிர்கொண்ட வள்ளியம்மை என்னெவென்று விசாரிக்க, சந்திரா தான் அனைத்தையும் தெரிவித்தாள். 
அன்றைய நள்ளிரவில் சந்திராவிற்கு கடும் சுரம், உடல் தூக்கி வாரிப்போட, நினைவிழந்த நிலையில் இருந்தாள். பிள்ளை பிழைப்பாளோ இல்லையோ என வள்ளியம்மை பயந்துவிட, நாராயணனோடு கதிரின் தந்தை அவளை மருத்துவமனை தூக்கிச் சென்றனர். விடியல் வரையிலும் தீவிர சிகிச்சையிலிருந்து பின் சற்றே உடல் தேற, விஷயம் அறிந்து சென்னையிலிருந்து ஓடி வந்தனர் சந்திராவின் பெற்றோர். 
வள்ளியம்மை நடந்த அனைத்தையும் சொல்லிவிட, வீட்டிற்கு வந்த வரதராஜன் மகனென்றும் பாராது இடுப்பிலிருந்து உருவிய பெல்டால் மனோவை வெளுக்க, இடையில் வந்து தடுத்தார் குலசேகரன். வரதராஜன் பெரும்பாலும் பிள்ளைகளை கண்டிப்பதில்லை அதிலும் மனோ தவறே செய்தாலும் ஒரு சிறு அதட்டல் அல்லது மென்மையான அறிவுரையிலே சொல்லிவிடுவார். அவ்வாறு இருக்க இன்று முதல் முறையாகத் தந்தை அடித்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பயத்தில் சந்திரா பேசியிருக்க மாட்டாள், வீட்டில் தெரிவித்தது கதிராகத் தான் இருக்கும் என அவனே முடிவு செய்து கொள்ள, அனைத்திற்கும் காரணம் கதிர் என நினைத்து அவன் மீது வன்மத்தை வளர்த்தான். 
இளங்கதிரை விட பெரியவனான மனோவிற்கு அவன் அளவிற்குப் பொறுப்புணர்வு இல்லை. பிள்ளைகளோடு பிள்ளைகளாக விளையாடினாலும் அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வதும், தந்தைக்கு உதவியாகக் கடினமாக வயலில் வேலைகள் செய்வதும் கதிர் தான். அதனாலே பெரியவர்கள் கதிரைப் பாராட்ட, சிறியவர்களும் அவனோடு விளையாட  பிரியப்பட, ஏனோ மனோவிற்கு தனிமை உணர்வு. 
மனோவின் சிடுசிடுப்பிற்கு முன் கதிர் வாங்கித் தரும் மிட்டாய்களின் தித்திப்பே பெரிதாக தோன்றியது அவர்களுக்கு. அவர்களாக ஒதுங்கவில்லை எனினும் இவனாக ஒதுங்கிக் கொண்டான். அனைத்திலும் கதிரிடம் போட்டியும் பொறாமையும் தான், சிறுவயதிலிருந்தே கதிரை பிடிக்காமலே போனது மனோவிற்கு. அதை விடவும் பலமடங்கு கதிரை பிடித்துப் போனது சந்திராவிற்கு. 
நெருங்கிய நண்பர்களாக முத்தையாவும் நாராயணனும் இணைத்தே விவசாயம் பார்த்தனர். அவர்களிடமிருந்தே அதே நட்பின் பிணைப்பு அவர்கள் பிள்ளைகளான குலசேகரன் வரதராஜனிடமும் இருந்த போதும் தொழில் வெவ்வேறானது. குலசேகரன் ஊரிலே தந்தையின் நிலத்தில் விவசாயம் பார்க்க, வரதராஜன் வெளியே சென்றுவிட்டார். சில வருடம் ட்ரவல்ஸ் ஒன்றில் வேலை பார்த்தவர் பின் நண்பரின் உதவியோடும் தன் அனுபவத்தின் துணையோடும் சொந்தமாக ட்ரவல்ஸ் ஒன்றை ஆரம்பித்தார். 
தொழில் நன்றாக செல்ல, ஊரில் இருக்கும் மனைவி பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வீடு வாங்கி சென்னையிலே குடியமர்ந்து விட்டனர். தொழில் வளர, ஆம்னிபஸ்கள் மட்டுமே முதலில் இருக்க, அதன் பின் டேக்ஸிகளையும் இணைக்கப்பட்டது. தொழில் ஏற்ற இறக்கம் பார்த்த அனுபஸ்தர். நண்பர் மொத்தமாகத் தொழிலைக் கொடுத்துவிட, பின் மனோகரை உடன் இணைத்துக் கொண்டார். 
மனோகர் விருப்பம் அறிந்து மறுப்பேதுமில்லாது அவர்களை விடவும் வசதியான இடம் என்பதால் அர்ச்சனாவை திருமணம் செய்து வைத்தார். பெரியவர்களும் உடன் வந்து தங்கிவிட, நிறைவான குடும்பம். சந்திரா தான் அனைவருக்கும் செல்லம்! அவள் கேட்டு மறுத்ததே இல்லை கதிரைத் தவிர, சில மாதங்களுக்கு முன் நாராயணன், சந்திராவைத் தவிர, அனைவரும் ஊர்த் திருவிழாவிற்கு வந்திருந்தனர். அவளுக்கு முதுகலை பட்டப்படிப்பின் இறுதியாண்டின் இறுதி தேர்வு ஆகையால் அவள் கவனமெல்லாம் படிப்பில் மட்டுமிருந்தது. 
படிப்பு முடியவும் சந்திராவிற்குத் திருமணம் செய்யும் எண்ணத்திலிருந்த வரதராஜனுக்கு திருவிழாவிற்கு வந்த இடத்தில் தானாகவே வந்தது சம்பந்தம். அனைவருக்கும் அதில் விருப்பம், அதன் பின் மாப்பிள்ளை வீட்டினரை விசாரிக்க, தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி நடத்துவதாகவும் அவன் தந்தை லாரிகள் அடங்கிய ட்ரவல்ஸ் நடத்துவதாகவும் தெரிய, வரதராஜனுக்குத் திருப்தியாக இருந்தது. மனோவின் மூலமும் தெரிந்தவர்கள் மூலமும் அவர்களைப் பற்றி நன்கு விசாரித்த பிறகே சம்மதம் தெரிவிக்க, அவர்களுக்கும் சந்திராவின் புகைப்படத்தைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. 
இறுதிநாள் திருவிழாவின் போது வீட்டளவில் பெரியவர்களை வைத்து திருமண உறுதி செய்துகொண்டனர். எதிர் வீட்டிலிருந்த போதும் கதிர் இது பற்றி அறிந்திருக்கவில்லை. திருவிழா ஆகையால் சொந்த பந்தங்கள் வந்து செல்வது போன்றே தோற்றமளித்தது. 
அனைவரும் ஊர் திரும்பிய இரண்டாம் வாரத்திலே இது பற்றி பேத்தியும் தாத்தாவும் அறிய, இருவருமே அதிர்ந்தனர். அவள் உடனடியாக மறுக்க, அவர் அறிந்து சந்திரா அங்கு யாரையும் விரும்பவில்லை, அவளுக்கு நிறைய நண்பர்கள் உண்டு அதில் ஆண் நண்பர்களும் கூட, வீட்டினருக்கும் அறிமுகம் உண்டு. அதில் யாரையும் அவள் வித்தியாசமாக நடத்தியதில்லை என்பதிலே அவள் மனம் அறிந்து வைத்திருந்தார். அப்படியிருக்க அவள் திருமணத்தை மறுப்பதன் காரணம் என்ன என்பதே தந்தையின் கேள்வி. 
பிடிவாதமாக மறுக்கும் போதே அவள் மனதையும் தெரிவித்து விட, காதலென்றால் மறுக்காதவர்கள் கதிர் என்றதும் மறுக்கவே செய்தனர். இவர்களே சென்று கேட்டாலும் கதிர் ஏற்றுக் கொள்ள மாட்டான், உடைந்த உறவு ஒட்டாது, தன் மகள் அறியாமையில் பிடிவாதம் கொள்கிறாள் அவளுக்கு நல்வாழ்வு அமைத்துத் தருவது தன் கடமை என்றே அவர் நினைத்தார். மனோவின் மனதில் என்றோ சேர்த்து வந்த வன்மம் எல்லாம் இன்றும் குறையாது இருக்க, அவன் தான் அதிகப்படியாக மறுத்தான். 
”நீ மட்டும் லவ் மேரேஜ் செய்துக்கலாம், நான் கேட்டா தப்பா?” அடமாக நின்று கேள்வி கேட்டாள். 
“நாங்க இரண்டு பேருமே லவ் பண்ணோம், இங்க நீ மட்டும் தான் சின்னதா சலனப்பட்டிருக்க, அவனுக்கு இப்போ உன் ஞாபகமே இருக்காது. விட்டுடு சந்திரா”
“அது நீ சொல்ல வேண்டாம், அவர் சொல்லட்டும். என்னால விட முடியாது..” 
“இங்கபாரு அவன் உன் தகுதிக்கு இல்லை”
“ஹோ.. அப்போ நீயும் தகுதி பார்த்துத் தான் லவ் பண்ணியோ?”
“அர்ச்சனா ஸ்டேட்டஸ் என்ன? அந்த பையன் ஸ்டேட்டஸ் என்ன? அதெப்படி உனக்குச் சமமாக முடியும்?” மனோ மறுப்பில் உறுதியாக இருந்தான். 
“அப்படி நினைச்சிருந்தால் அண்ணி உன்னைக் கல்யாணம் செய்திருக்க மாட்டாங்களே” பட்டென வெட்டிப் பேசினாள். 
“அது.. அதுக்குன்னு இப்போ இவ என்ன கஷ்டமா படுறா? ஆனால் அவன் இப்போ என்ன நிலைமையில இருக்கான்னு தெரியுமா? படிப்பில்லாம ஒரு வாய் காய்ச்சிக்கும் வக்கில்லாம, ஊரெல்லாம் கடன்பட்டு, கூலி வேலை பார்க்கிறான் அவனைக் கட்டிக்கிட்டு நீயும் கஷ்டப்படப் போறீயா?” 
கதிரைப் பற்றி சந்திரா அறிந்திருக்க வாய்ப்பில்லை என மனோ பெய்யுரைக்க, அவனை அற்பமான ஒரு பார்வை பார்த்தாள். 
“இன்னைக்கு அவர் அப்படியொரு நிலைமையில இருக்கார்னா அதுக்கு காரணம் நீங்க எல்லாரும் தான். அவர் வாழ்வாதாரத்தையே நீங்க தான் பறிச்சிங்க.. உங்களால இல்லைன்னு மறுக்க முடியுமா என்ன?”
அத்தனைப் பேரின் முகத்திலும் அறைவது போன்றிருந்தது அவள் கேள்வி. கேள்வி உண்மை எனும் போது அவர்களிடம் பதிலில்லை. 
“நீ அனுதாபத்தை அன்புன்னு குழப்பிக்கிற சந்திரா…” மனோ தான் ஏதேதோ காரணங்களை அடுக்க, “காதலோ கத்திரிக்காவோ அது என் விஷயம், நீ தலையிடாத தள்ளியே இரு மனோ..” என அனைவருக்குமாக எச்சரித்தவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். 
ஒருவாரம் அறையை விட்டு வெளியே வரவில்லை, யாரிடமும் பேசுவதில்லை. அர்ச்சனா தான் அவ்வப்போது பிடிவாதமாக உணவூட்டினாள். வீடே இறுக்கத்தில் அமைதியாக இருக்க, யார் முகத்திலும் சிரிப்பில்லை. வரதராஜன் கூட திருமணத்தை நிறுத்துவிட யோசிக்க மனோ தான் தைரியம் உரைத்தான்.  
அவள் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை, வாழ்வை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்பதாலே இத்திருமணத்தை நடத்திவிட நினைத்தார். அனைவரும் சந்திராவை குறித்த கவலையில் இருக்க அதிகம் மனதை அழுத்திக் கொண்டது நாராயணன் தான். ஆகையால் மாரடைப்போடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  
வீட்டினர் யாரும் கட்டாயப்படுத்தவில்லை நாராயணன் தான் சந்திராவின் கரம் பற்றி, அவள் திருமணத்தைப் பார்ப்பதே தன் இறுதியாசை என வேண்டினார். வளர்த்தவர், பெரியவர் அதிலும் இறுதி ஆசை என்ற பிறகு மறுக்க அவளால் இயலவில்லை. விழி நிறைந்த கண்ணீரோடு தலையசைத்தாள். 
அதுவே குடும்பத்தவர்களுக்கு போதுமானதாக இருக்க, சத்தமின்றி திருமண வேலைகளைத் தொடங்கினர். இறுதி தேர்விற்காக சந்திரவதனி கல்லூரி சென்று வர, வீடு கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. சரியாகத் தேர்வுகள் முடிய, நாராயணனும் சொந்த ஊர் செல்ல வேண்டுமென்று பிரியப்பட, மொத்த குடும்பமும் அவரை விட்டுச் செல்ல ஊருக்கு வந்தனர். 
அவர்கள் வந்த அன்று பெரும்பாலானோர் நலம் விசாரிக்க வர, அதில் அரவிந்தன் குடும்பமும் வந்து சென்றிருந்தனர். அனைவரும் கிளம்ப, வீட்டினரும் கிளம்ப, சந்திரா மட்டும் தாத்தா, பாட்டியோடு தங்கிவிட்டாள். மனோ மறுப்புத் தெரிவித்த போதும் வள்ளியம்மை தான் கவனித்துக் கொள்ளாவதாகச் சொல்லவே விட்டுச் சென்றிருந்தான். 

Advertisement