Advertisement

கோவிலுக்குக் கிளம்பியிருந்த தனவதி கதிரையும் அழைக்க, உடன் சென்றான். முப்பிடாதி அம்மன் கோவில், அதிலும் வெள்ளிக்கிழமை என்பதால் விசேஷ பூஜைகள் உண்டு. பக்தர்கள் நடமாட்டம் அன்று சற்று அதிகமாகவே இருக்க, தனவதியோ முன்னே செல்ல, பின்னே வந்த கதிரின் கண்கள் நாலாபுறமும் சுழன்றது. 
சந்திரா வந்திருக்க மாட்டாளா? என்ற சிறு எதிர்பார்ப்பு, அவன் தேகமெங்கும் தேடல் தான். ஏமாற்றாது தொலைவில் தெரிந்தனர் வள்ளியம்மையும், நாராயணனும். சந்நிதியிலிருந்து எதிர்ப்படுவோரின் நலம் விசாரிப்புக்குப் பதில் சொல்லியபடி வந்தனர். 
அவர்களை கண்டும் காணாதது போலே அவன் கடந்துவிட, அவர்களும் கவனிக்கவில்லை. என்ன தான் கடந்து வந்துவிட்ட போதும் அவளைக் காணாத கண்களில் தேங்கிய ஏக்கம் தவிப்பானது. 
சன்னிதி சென்று தனவதியோடு வணங்கிவிட்டு வெளி வந்தார்.  “நீ பார்த்தியா ராசா? புதுப்பணக்காரரை..” என்க, “ம்ம்..” எனத் தலையசைத்தான். 
“உடம்புக்குச் சுகமில்லைனுச் சொன்னாங்க, அதுச் சரியாயிட்டு போலிருக்கே..” என்க, “இருக்கும்..” என ஸ்சுரத்தே இல்லாமல் பதிலளித்தான். 
“என்னவோ, நடமாடிட்டி நல்லாயிருந்தால் சரி தான்” என்றவர் அவன் மௌனம் கண்டு அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டார். 
முகத்தில் காயம் என்பதால் தான் சந்திராவும் ஒரு வாரமாக வீட்டைவிட்டே வெளி வரவில்லை. தற்போதும் முழுதும் குணமாகியிருக்க, அதே நேரம் அவள் தாத்தா நாராயணனும் நலமடைந்து இருந்தார். பெரியவர்கள் மட்டுமே வந்திருக்க, அவள் வரவில்லை. 
சந்திரவதனி அவள் அறையில் வீடியோ காலில் அவள் வீட்டினரோடு பேசிக் கொண்டிருந்தாள். 
“இப்போ வலி எப்படியிருக்கு குட்டிம்மா?” அவள் அன்னை கலையரசி கேட்க, “முன்னைக்கு நல்லாவே வீக்கம் குறைச்சி தானே அத்தை தெரியுது..! நான் அனுப்பி வைச்ச ஆயல்மென்ட் போட்டியா சந்திரா?” என அவளை ஆராய்ந்தபடி பார்த்தாள் அண்ணி அர்ச்சனா. 
பதிலுக்கு அவள் தலையை மட்டும் ஆட்ட, “அத்தே நீ எப்போ வருவ?” குதலை மொழியில் கேட்டாள் கலையரசி மடியிலிருந்த குட்டிப்பெண் வர்ஷா. 
“நீ தான் என்னை பார்க்க வரணும், எனக்கு தானே அடிபட்டுச்சு..?” குழந்தையிடம் நியாயம் பேசினாள் சந்திரா.
“இதோ எனக்கும் தான் அடிபட்டுச்சி நீ வா?” என அவளும் ஒரு தழும்பைக் காட்ட, “ஹே, அது லாஸ்ட் இயர் பட்டது, இப்போ நல்லாவே ஆறிட்டு..” என்க, “உனக்கும் தான் மூச்சு சரியாச்சில?” என்றாள். 
“இங்க வாயேன் ஒரு ரகசியம் சொல்லுத..” சந்திரா அழைக்க, அன்னையின் கையிலிருந்த அலைபேசியைப் பிடுங்கி தொடுதிரையில் தெரியும் சந்திராவின் முகத்தை தன் செவியருகே வைத்துக் கொண்டாள் சிறு பெண். 
“இங்க வந்தா ஸ்கூல் லீவு போட்டுடலாம், நான் உன்னை மலைக்கோவிலுக்கு கூட்டிட்டி போவேன், பெரியாச்சி திருவிழாவுக்கு கூட்டிட்டி போவாக, அருவில குளிக்கலாம், பின் வீட்டு அருண் பப்பி வைச்சியருக்கான், அது கூட விளையாடலாம்..” என ஆசை காட்ட, மயங்கிய குழந்தை, உடனே செல்ல வேண்டுமென்று அன்னையிடம் அடம் பிடித்தாள். 
“அடிப்பாவி! ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை? உனக்கு போன் போட்டு, எனக்கு நானே ஏழரைய இழுத்துகிட்டேன், இனி நான் எப்படி அவளைச் சமாதானம் செய்வேன்” என மெல்லிய முறைப்போடு புலம்பிய அர்ச்சனா குழந்தையைத் தூக்கிச் செல்ல, இதழ் பூத்த சின்ன சிரிப்போடு அலைபேசியில் பார்த்திருந்தாள் சந்திரா. 
“மாமாவும் அத்தையும் வீட்டுல இல்லையா குட்டிம்மா?” எனக் கலையரசி கேட்க, பதில் சொல்லினாள்.
“பாருட்டி, சொந்த ஊருக்குப் போய் சாவணும்னு சொன்ன மனுஷன் எழுந்து நடமாட ஆரம்பிச்சிட்டாரே! அம்புட்டும் ஊர்ப் பாசம் தான்” என்றவர் வியக்க, “நீங்க எல்லாம் எப்போம்மா வருவீங்க?” என்றாள் ஏக்கமாக. 
அவளிடம் புதிதான இந்த ஏக்கம் அவருக்கும் தவிப்பைத் தந்தது, பொதுவாக அங்குச் சென்றால், பெற்றவர்களை மறந்து உல்லாசமாக சுற்றுபவளாகிற்றே! அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவர், “அடுத்த வாரம் கிளம்பலாம்னு உங்க அப்பா சொன்னாங்க, இல்லைனாலும் நான் கிளம்பி வாரேன். அது வரை சேட்டை பண்ணாம, பெரியவாளுக்கு இம்சை கொடுக்காம சமத்துப் பிள்ளையா இருக்கணும் குட்டிம்மா” என்றார். 
சரியென தலையசைத்தவள் அலைபேசியின் திரையில் அன்னைக்கு ஒரு முத்தம் வைத்து அழைப்பை துண்டித்தாள். 
அவள் எழ, சரியாக உள்ளே வந்தார் நாராயணன். 
“வந்துட்டீங்களா..?” அவள் கேட்க, அருகே வந்து அமர்ந்தவர் மெல்லிய குரலில், “அவனைப் பார்த்தேன்..” என்றார். சட்டென மேனி சிலிர்க்க, இதயம் படபடத்தது சந்திராவிற்கு. 
உள்ளுக்குள் ஒரு பயமும், அவளையே எடுத்தெறிந்து வேண்டா வெறுப்பாகப் பேசுபவன் அதே வெறுப்பைத் தாத்தாவிடமும் காட்டிவிட்டால், அவரால் தாங்க இயலாதே என்ற தவிப்பு!  
“பேசுனிகங்ளா?” புருவம் சுருக்கி, மெல்லிய குரலில் கேட்க, “எங்க? அனுமார் வாலாட்டம் உங்காச்சி என்னோட ஒட்டிட்டில இருந்தா” என்க, நிம்மதி பெருமூச்சு அவளிடம். 
“பேச ஆசை தான், பேசுனே அவ்வளவுதான் உடனே அவள் சீமந்திரபுத்தின்ட இறக்கிடுவா, அவன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான், அவனுக்கு வாலாட்டம் உங்கண்ணே வேற?” என்றவர் பொரிய, அவளுக்குப் பொங்கியது சிரிப்பு. 
“ஷ்ஷ்..” அவர் சத்தமிட, சிரிப்பை அடக்கியபடி பார்த்தாள். பேசவில்லையே பின் ஏன் இவரிடம் குழந்தை போன்ற இத்தனை உற்சாகம்? 
“சத்தமிடப்படாது, நமக்குக் காரியம் ஆகனும்னா நாம தான் கமுக்கமாயிருந்து சாதிச்சிடநனும், என்ன நான் சொல்லுதது?” என்க, சரியென்று தலையாட்டினாள். 
“அவன் உன்னைய தான் தேடுனா, உன்னைய காங்கலைன உடனே அவன் முகமே வாடிப் போச்சி, அதை நான் கவனிச்சிட்டேனுல..! நீ என்ன செய்த, ஒரு மட்டும் அவனைப் போய் பார்த்துட்டு வா” என்றார் கெஞ்சலாக.  
தன் கண்ணீருக்கே கரையாதவன் பார்வையில் மட்டும் இறங்கியா விடுவான்? என அயர்ந்த நிலையில் தான் அவள்! 
“என்ன கண்ணு?” என்றவர் எதிர்பார்ப்போடு கேட்க, அவரின் வெள்ளை மீசை பிடித்து இருபுறமும் ஆட்டியவள், “சரி தாத்தா..” என கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 
“சீக்கிரம், அடுத்த வாரம் உங்கம்மை வந்திடுவால..!” என கரங்களில் தட்டிக் கொடுத்தவர் எழுந்து சென்றார். 
கண்மூடியபடி கட்டிலில் விழுந்தாள். சின்னஞ்சிறு பறவை போலே அவள் பறக்க, எல்லையில்லா அவளின் வானமாக அவனே விரிந்தான். 
சிறுவயதிலிருந்தே அவளுக்கென அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வதும், அவளைத் தாங்குவதும், கொஞ்சுவதும், பொறுப்போடு கவனித்துக் கொள்வதும் அவனே! அவன் முழுதும் தனக்கே உரிமைப்பட்டவன் என்ற எண்ணம் எப்போதும் உண்டு, அப்போது இருந்தே கதிரின்  மீது தனிப் பிரியம் தான்! 
அனைத்தையும் சிறுவயதில் உதித்த ஈர்ப்பென்று ஒதிக்கிவிட இயலாது, பிள்ளைப்பருவம் வரை இங்கு வந்து சென்றிருந்தாள். பின் பெரியவர்கள் அவர்களோடு வந்துவிட, இரு குடும்பங்களுக்கும் பிரச்சனையாகி விட, சொந்த ஊருக்கு வருவதே அரிதாகிப் போனது.  பதினான்காம் வயதில் தான் கடைசியாக அவனைப் பார்த்திருந்தாள்.
உண்மை சொல்லுவதென்றால் அவன் அளவிற்கு இவள் அப்படியொன்றும் அவனை முக்கியமாகக் கருதவில்லை. படிப்பு, நட்பு என்றே இருந்த காலம் அது, அதற்காக அவனை முற்றிலுமாக மறந்திருந்தாள் என்றுமில்லை. மாதமொரு முறை வரும் முகப்பரு அவன் கிள்ளிய முதல் பருவை நினைவு படுத்திவிட, தினமும் ஏதேனும் ஒரு வகையில் அவனை நினைவு படுத்திடுவார் நாராயணனும். அவராலே அவளுள்ளும் அவன் நினைவு உயிர்ப்போடு இருந்தது. 
கல்லூரி இரண்டாமாண்டில் சக மாணவனிடம் இருந்து வந்தது முதல் காதல் விண்ணப்பம். யோசிக்க வேண்டுமென்று கூட தோன்றவில்லை, உடனே மறுத்திருந்தாள். நெஞ்செல்லாம் கதிரே நிறைந்திருந்தான். காதெலன்று இல்லை, தனக்காகவே பிறந்தவன் என்ற எண்ணம்! தனக்கானவன் என்றிருக்கப் பிறரைத் தேர்ந்தெடுக்கச் சுத்தமாக இயலவில்லை. 
முகம் பாராமலே அவன் என்றாகிவிட, அதன் பின்னான அத்தனை விண்ணப்பங்களையும் நிராகரித்திருந்தாள். வேண்டுமென்று இல்லை யாரும் மனம் கவரவில்லை, யாரிடமும் அது போன்றதொரு ஈர்ப்பு தோன்றவில்லை. 
“அவர் இப்போ எப்படியிருப்பார்?” தாத்தாவிடம் ஒரு நாள் கேட்டு வைத்தாள். சில மாதங்கள் முன்பு தான் ஊருக்குச் சென்று வந்திருந்தார் ஆகையால். ஆர்வமாக இல்லை, ஆராட்சியாக! அவன் குறித்த கற்பனை வடிவம் கூட மனதில் வரைந்து வைத்திருக்கவில்லை, அவனின் நிஜம் தான் அவளை நிறைக்கும்! 
“சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு முடி, பூனை கண்ணு, புலி மீசை, யானை தந்தம் மாதிரி இரண்டு எத்துப்பல்லு, ஒட்டக உடம்பு, குதிரை காலு, குரங்கு வாலு எல்லாம் கலந்த மாதிரி” எனப் பொறுப்பின்றி அவர் பதில் சொல்ல, சின்னவள் முறைத்தாள். 
சிரித்தவர், “அதான் இந்த பேஸ்பேக்கு (facebook), வாய்சப்பு (whatsapp) கழுதை எதுலையாவது தேடிப்பாரு” என்க, அடங்காத சிரிப்போடு மறுநொடியே அவள் தேடலைத் துவங்கினாள்.  
போதும் எனும் அளவிற்குத் தகவல் கிடைத்துவிட, கடந்த மூன்று வருடங்களில் ஐந்து முறை அவனறியாது வந்து பார்த்தும் சென்றிருக்கிறாள். 
இன்றும் அவள் தான் பார்க்கிறாள், அவன் பாராமுகம் காட்டும் போதும், பள்ளம் நோக்கி ஓடும் வெள்ளமாக அவன் பின் ஓடுகிறாள். கரடுமுரடு பாதையில் வலியோடு ஓர் பயணம் தான் ஆனாலும் அன்பு கடல் சேராது ஆருயிர் நதியும் ஓயாது! 

Advertisement