Advertisement

அத்தியாயம் 05
வழக்கத்திற்கு மாறாக உச்சியிலேறிய சூரியன் அக்கினி மழையாக வெப்பக்கதிர்களை வீச, ஆற்றக்கரையோரம் அமர்ந்திருந்தான் கதிர். பொதுவாகவே அப்பக்கம் அதிகம் ஆட்கள் நடமாட்டம் கிடையாது, அதிலும் நண்பகல் நேரம் புள்ளினங்கள் கூட புலப்படவில்லை. கண்ணெதிரே கையளவில் வான்தொடும் பச்சை மலை முகடுகள், அதில் ஒற்றை புள்ளியில் தொடங்கி, உருக்கி ஊற்றிய வெள்ளி நீராய் பெருக்கெடுத்து, கிளை பரப்பிக் குதிக்கும் அருவிகள் என இமைக்காது பார்த்திருக்க வைக்கும் பேரழகு. 
கால் கீழே ஜீல்லேன்ற குளிர்ந்த நீரோட்டம், அதற்குள் காலை உரசிச் செல்லும் மின்மினி போன்ற மீன் குஞ்சுகள், பழமையான சிதிலமடைந்த கல் மண்டபத்தின் படிகளில் அமர்ந்திருந்தவனால் எதையும் உணர முடியவில்லை. தூரத்தில் தெரியும் பட்ட மரத்தை அவன் பார்வை வெறிக்க, சிந்தை, உணர்வு என மொத்தமாக ஆக்கிரமித்திருந்தது அவள் நினைவு.  
அவன் தான் வேண்டும் என்று அழுபவளை நினைத்து மகிழாது, அழுகிறாளே என்று வேதனை கொண்டான். வேதனை ரணமானது, அவள் தான் வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் அவன் வீட்டில் தடுப்பார் யாருமில்லை, அவள் வீட்டை எதிர்க்கும் திடமும் உண்டு. ஆனாலும் அவனால் ஏற்க முடியவில்லை. 
தனது சிறு கோபத்தையும் தாங்காதவள் மீது இத்தனை கோபத்தைக் கொட்டுகிறேனே! அப்படி இருந்தும் அவள் திரும்பத் திரும்ப தன்னிடமே வருகிறாளே! என் மீது ஏனடி உனக்கு இத்தனை நேசம்? என கலங்கி அமர்ந்திருக்க, அவனைத் தேடி வந்தான் கருப்பட்டி. 
“ஏண்ணே உன்னை எங்கெல்லாம் தேடுறது? இங்க எதுக்கு உக்காத்திருக்க? ஆத்தக்கரை பிள்ளையாருக்கு தேங்காய் பொறுக்கிப் போடவா?” என்றபடி அருகே அமர்ந்தவன், மறுநொடியே அலறி எழுந்தான். 
“இந்தச் சூட்டுல எப்படிண்ணே உக்காத்திருக்க? வெட்டி பொசுங்கிடல?” என்றபடி எதிரே வந்து நின்றான். 
“என்னடே..?” தோய்ந்த நிலையில் கதிர் கேட்க, “எதுக்கு எம்மதினியை அடிச்ச? அது பாவம் தெரியுமா? ஒருபக்க முகமே வீங்கிருச்சு, உன் ஐந்து விரலும் அது கன்னத்துல தடமா பதிஞ்சி கிடக்கு. அப்படியிருந்தும் ஆத்தாட்ட, சைக்கிளோட்டும் போது கீழ விழுந்துட்டேன், கல்லுல முகம் வாரிடிச்சுன்னு கதை விட்டு உன்னைய காப்பாத்தியிருக்கு தெரியுமா?” என்றவன் உண்மையறியாது குற்றம் சுமத்தினான். 
“நான் அவளை அடிச்சேன்? நீ பார்த்த?” என முறைப்போடு கதிர் கேட்க, “ஆமா, நீ கோபமா வந்த, அது அழுட்டு உங்காத்திருந்துச்சே..! இருந்தாலும் உனக்கு இம்புட்டு கோபம் ஆகாதண்ணே” என்றான். 
“ஏலே, செவுட்டுல இழுத்துவுட்டுன்னு வைய் என் ஐந்து விரலும் இப்போ உன் கன்னத்துல இருக்கும்” என்றவன் விரல் நீட்டி எச்சரிக்க, தன்னாலே சில நொடிப் பின் நகர்ந்திருந்தான் கருப்பட்டி. 
“சரிண்ணே எழுந்திரு வீட்டுக்குப் போவோம், வயிறெல்லாம் மியாவ் மியாவ்ன்னு பிராண்டுது” 
“ஏன்டே பூனைக்குட்டியை வயித்துல கட்டிவைச்சிருக்கியா?”
“அடச்சீ, நீ வந்தா தான் பெரியாத்தா கறிச்சோத்தை கண்ணுல காட்டும்” என்றவன் சிணுங்க, சிறு சிரிப்போடு, “சரி சரி வாலே” என முதுகில் தட்டிக் கொடுத்தபடி உடன் அழைத்து வந்தான் இளங்கதிர். 
வாசலில் வண்டியை நிறுத்தியவனின் கண்கள் எதிர் வீட்டைக் காணத் துடிக்க, இறுகிய மனதோடு தலையைத் திருப்பாது உள்ளே வந்தான். 
“நான் பின்னாடி போய் இலை அறுத்துட்டு வாரேன், நீ பெரியாத்தாவை கூட்டிட்டி அடுப்படிக்கு வா” என்ற கருப்பட்டி வாசலிலிருந்தே வீட்டைச் சுற்றி பின் பக்கம் ஓடி விட, கதிர் உள்ளே வந்தான். 
அவன் உள்ளே வர, சுவரில் மாட்டியிருக்கும் அவன் தந்தை குலசேகரனின் புகைப்படத்தைத் துடைத்தபடி விழிநிறைந் நீரோடு கலங்கி நின்றிருந்தார் தனவதி. அவன் அருகே வந்ததை அவர் உணராதிருக்க, “சின்னம்மா..” என மெல்லிய குரலில் அழைத்தான். 
அதில் கலைந்தாலும் பார்வையை அந்த படத்திலிருந்து விலக்காது, “உன்ன மாதிரியே தான் இருப்பாரு ராசா, உன்னை விடப் பெரிய மீசையா வைச்சிருப்பாரு, தலை நிமித்து பார்க்கிற உசரம். அடங்காத காளையும் அடக்கிப் பிடிக்கிற வீரம், ரெட்டை காளை பூட்டி நிலத்தை உழுது, நெல்லு மூட்டை தூக்கிற வரைக்கும் எல்லா அவரே பார்த்துப்பாரு, அசராத உழைப்பாளி! உன்னை மாதிரி தான் ஊருக்கே உதவுவாரு, மனசு தான் குழந்தை மனசு, அதான் லேசுல ஏமாத்துட்டாரு..” என்றவர் தொண்டை அடைக்க விசும்ப, கதிரும் கலங்கி விட்டான். 
“அக்கா கொடுத்து வைச்ச மகராசி, பூவோடும் பொட்டோடும் போயிட்டா..” என அருகே இருக்கும் அவன் அன்னையின் புகைப்படத்தைப் பார்த்தவர், “நான் தான் அந்த கொடுப்பனை இல்லாத மூழியா நிக்குத” என நெஞ்சில் அடித்துக் கதறினார். 
அவனுக்குச் சித்தி என்றாலும் அக்கா எனச் சொல்லும் படியான தோற்றம் தான், வாழ வேண்டிய வயதில் இரண்டு பெண்பிள்ளைகளோடு கணவனை இழந்தவர், எத்தனை கனவோடும் கற்பனையோடும் நின்றிருப்பார் அவன் உள்ளம் அவருக்காக வருந்தியது. 
சட்டென அவர் இரு கைகளையும் பிடித்துத் தடுத்த கதிர், “வருத்தப்படாதிக சின்னம்மா, நான் இருக்கேன்ல, இப்போ எதுக்கு இதெல்லாம் யோசிக்கிங்க” என்றான் அதட்டலாக. 
“உனக்கொரு கல்யாணம் பண்ணி வைச்சு, கண்குளிரக் காண இவங்களுக்குக் கொடுத்து வைக்காம போச்சே” 
“ம்ச்.. அதா அவங்களுக்குச் சமமா நீங்க இருக்கிங்கலே, நீங்க போதுச் சின்னம்மா. என்ன விஷயம்?” என்றான் தளர்வாக. 
“ரேவதி வீட்டுக்கு போயிட்டு வந்தேன்ல அவள் தான் சொன்னா அவகச் சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்குதாம், கேட்போமா ராசா” என்றார் ஆசையும் எதிர்பார்ப்புமாக. 
“வேண்டாம் சின்னம்மா..” 
சட்டென அவனிடமிருந்து பதில் வந்தது, சந்திராவைச் சந்திக்காமலிருந்திருந்தால் கூட யோசித்திருப்பான், ஆனால் இப்போது அவளை அருகே வைத்துக் கொண்டு வேறொரு பெண்ணை நினைக்கவும் அவனால் முடியவில்லை. 
“ஏன் ராசா..?”
“இரண்டு மூனு வருஷம் போட்டும், பார்த்துக்கலாம்” 
“சித்திரை வந்தா இருபத்தெட்டுப் பிறக்கப் போவுது, இப்போவே கல்யாணம் பண்ற வயசு தான்லே. நானும் எத்தனை நாளைக்குத் தான் இந்த வீட்டுல தனியாவே இருக்கிறது?” 
அவன் பதிலின்றி பார்க்க, அதற்குள் சமையலறையில் பாத்திரங்கள் உருளும் ஓசை.  
பதறியவர் “கறிக்கொழம்பு வைச்சிருக்கே, திருட்டுப் பூனை அடுப்படியையே சுத்தி சுத்தி வருது” என்றபடி ஓட, “அடிச்சிடாதிகச் சின்னம்மா, அது நம்ம கருப்பட்டித” என சின்ன சிரிப்புடன் கதிரும் பின் சென்றான். 
இளங்கதிர் பிறந்ததுமே அவன் அன்னை தவறிவிட, அவனை வளர்த்தது தந்தை குலசேகரனின் தாயார் லோகநாயகி தான். அவரும் அவனின் ஐந்தாம் வயதிலே தவறி விட, தாத்தா முத்தையா, தந்தை குலசேகரனோடு அவனும் தவித்துத் தான் நின்றான். பெண்ணில்லாத வீடு, வெளிச்சமில்லாத இருள் போலே இருக்க, எதிர்வீட்டில் இருக்கும் சந்திராவின் தாத்தா நாராயணனும், முத்தையாவும் குலசேகரனை மறுமணம் செய்து கொள்ள வேண்டினர். 
மகனின் முகம் பார்த்தே அவரும் சம்மதிக்க, உறவுகளில் பக்கத்து ஊரில் எனப் பார்த்துப் பார்த்து தனவதியைத் தேடித் தந்தார் சந்திராவின் பாட்டி வள்ளியம்மை. இரு குடும்பங்களின் ஏற்பாட்டில் நிறைவாக முடித்தது அவர்கள் திருமணம். சித்தி என்ற போதும் கதிரை தலைமகன் போன்றே அவர் சீராட்டி வளர்க்க, அடுத்த வருடமே அவருக்கும் இரட்டை பெண்பிள்ளைகள் பிறக்க, நிறைவானதொரு குடும்பம் அமைந்தது. 
ஆனால் அந்த நிறைவு நீண்ட காலம் நிலைக்கவில்லை. சந்தோஷத்தின் சுவடுகள் அழுத்தப் பதியும் முன் அலைகளால் நொடியில் அழிக்கப்பட்டது. குலசேகரன் இறக்க, குடும்பம் மொத்தமும் தவித்து நிற்கும் நிலை. பெரிதான சேமிப்பு இல்லை, இருப்பதிலும் அப்போது தான் புதிதாக வீடு கட்டியிருந்தார். 
பள்ளிச்செல்லும் பிள்ளைகளோடு, வாழ்வின் ஒளி தெரியாது தவித்து நிற்கும் தனவதி! தன் குடும்பம், அவர்களின் கண்ணீர் எனக் கடமைகளில் கட்டுண்டான் கதிர். தலைமகனாக எழுந்து நின்றான். அரிசி ஆலை ஒன்றில் தினக்கூலியாக உழைக்கத் தொடங்கினான். பள்ளியின் இறுதி வருடப் படிப்பில் இறுதி பரீட்சையைக் கூட எழுதாது விட்டுவிட்டான். 
சில வருடங்கள் கடுமையான உழைப்பு, அரும்பிய மீசையைப் போல் அவனும் வளர்ந்தான்.  சுயமாகவே தன்னை செதுக்கிக் கொண்ட தோற்றம், உழைக்கும் வெறி, ரசனைகள், கனவுகள் எல்லாம் கனலாய் போனது. 
வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, தந்தையை இழந்து தவித்த வலி, இன்று வரையிலும் அதற்கொரு நியாயம் சேர்க்க முடியவில்லையே என ஆற்றாமை. இதில் அதற்குக் காரணமானவர்களோடு உறவு வேறு வைத்து கொள்ள முடியுமா? அவன் உடம்பில் ஓடுவது அவர் இரத்தமாயிற்றே!
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது என்பதற்கு ஏற்ப ஒருவாரம் ஓடி விட, அவன் மட்டும் காத்திருந்தான் அவளின் தரிசனத்திற்கு. அருகே காண வேண்டுமென்றில்லை, தொலைவில் அவள் அறியாது ஒருமுறை முகம் பார்த்தால் போதுமென மனம் தவித்தது. அடிபட்ட முகத்தின் காயங்கள் அறியவிட்டதா என அறிந்தால் கூட போதும். ஆனால் அதற்குக் கூட வாய்ப்பு அமையவில்லை. 
அவனும் அவளை பார்க்கவெல்லாம் முயற்சிக்கவில்லை, அவன் வண்டியை நிறுத்தும் போதும் எடுக்கும் போதும் எதிர்வீட்டை ஒரு பார்வை பார்ப்பான் ஆனால் அவளைத் தான் பார்க்க முடியவில்லை. ஒரு வேளை ஊருக்குத் திரும்பிவிட்டாளோ என்ற சந்தேகம். அவள் இம்சை இல்லாது மனம் மகிழவில்லை, எதையோ இழந்ததை போன்ற வெறுமை, ஏக்கம்!
கருப்பட்டியிடம் கூட ஜாடையாக விசாரித்துப் பார்த்தான் பதிலில்லை. இத்தனை வருடங்களும் அவள் இல்லாமல் தானே இருந்தாய், இப்போது மட்டும் என்ன? என ஏங்கும் மனதைக் குட்டி அடக்கி வைத்தான். ஒரு விரக்தியான நிலை! எல்லாம் உள்ளத்தில் மட்டும் தான், வேலையிலும் வெளியிலும் யாரிடமும் காட்டிக்கொள்ள மாட்டான். 

Advertisement