Advertisement

அத்தியாயம் 04
நட்சத்திரங்கள் அரும்பும் மைமல் நேரம், முழுதாய் இருள் சூழ்ந்திருக்க, விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்திருந்தான் இளங்கதிர். கோவிலிலிருந்து வந்த சில மணி நேரங்களாக அவ்வாறு தான் அமர்ந்திருந்தான். 
சட்டைப்பையில் வைத்த தாலி நெஞ்சிலேறிய பாரமாக கனத்தது. அவள் ஏதோ பூப் போலே எளிதாக வைத்து விட, அவனுக்குத் தான் இரும்பாக கனத்தது. சட்டெனத் தூக்கி எறிந்துவிடலாம் தான் ஆனால் நெஞ்சில் இருப்பதும் அவள் தானே, அவனால் இயலவில்லை. அவளை எறிய வேண்டுமெனில் இதயத்தை தான் பிய்த்து எறிய வேண்டும். 
அவன் இயலாமையும் அவள் மீது தான் கோபமாகத் திருப்பினான். அவளுக்கு எவ்வளவு தைரியம்? செய்த துரோகத்தையும் மறந்து விட்டு எப்படி அவள் அவ்வாறு கேட்கலாம்? இவளுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தமா இல்லை? அவர்கள் வீட்டுப் பெண் தானே? பின் எவ்வாறு என்னால் ஏற்க முடியும்? திருமணம் என்பது என்ன விளையாட்டா? காலையில் தான் நோகும் படி பேசி இருக்கிறேன், இருந்தும் மாலை வருகிறாளே? அத்தனை எளிதாகத் தன்னை விட்டுவிட மாட்டாள் போலும்? இவளை என்ன செய்வது? பொங்கிய மனதோடு அமர்ந்திருந்தான். 
தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்க, கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த கருப்பட்டி, “என்னண்ணே தலைவலியா?” என்றவன் பதில் கேட்கும் முன்பே, “அதுக்குன்னு இப்படியா தலை முடிய பிச்சிக்குவ? நாளை பின்ன சொட்டத்தலையன்னு ஊருக்குள்ள பொண்ணு கொடுக்க மாட்டானுங்கண்ணே பார்த்துக்கோ” என்று சிரித்தான். 
ஏற்கனவே எரிச்சலிலிருந்த கதிர் முறைக்க, காரணமறியாத போதும் சகுனம் சரியில்லை, உசுரு முக்கியம்டே பிழைச்சு ஓடிடு என்றலறியது ஏழாம் அறிவு. 
“சரிண்ணே, நான் வீட்டிக்கு கிளம்புறேன். பார்த்து மில்லைப் பூட்டிட்டு நீயும் கிளம்பு. பெரியாத்தா வீட்டுல இல்லைல முக்குக்கடை மூடுறதுகுள்ளையும் சாப்பிட்டுக்கோ” என்றவன் வாசல் நோக்கி நடக்கவும் தொடங்க, “அடே கருப்பட்டி செத்த நில்லு” என்றான் இளங்கதிர். 
“என்னண்ணே..” அஸ்சுவாரசியமாக திரும்ப, இருக்கையிலிருந்து எழுந்து, முன் வந்து மேசையில் சாய்ந்தபடி கை கட்டி நின்றான் கதிர். 
அவன் நிற்கும் தோரணையே விசாரணைக்கு அழைப்பது போல் இருக்க, நாம இன்னைக்கு என்ன தப்பு செய்தோம்? என யோசித்த கருப்பட்டி, ஒன்னு இரண்டுன்னா நியாபம் வரும் நாள் முழுக்கு செய்யுறது எல்லாம் அரைகுறை வேலை தானே? சரி சமாளிப்போம் என்பது போலே நின்றான். 
“என் எதிர்வீட்டுக்காரிகிட்ட காலையில என்னடேச் சொன்ன?” 
“வீட்டுக்காரியா? உங்களுக்கு எப்போண்ணே கல்யாணமாச்சு? ஒரு வேளை நாங்க குடும்பமா குலதெய்வம் கோவிலுக்குப் போன கேப்ல செய்துட்டீங்களோ? என்னைய விட்டுட்டு செய்துட்டிங்களேண்ணே? உங்க கல்யாணத்துக்கு எனக்குப் பட்டு வேஷ்டி சட்டை எடுத்து தருவிங்கன்னு எம்புட்டு ஆசையா இருந்த..” என விம்மியபடி புலம்பியவன் கண்ணையும் கசக்க, பொறுக்க முடியாத கதிர் கையிலிருந்த டேபுள் வெய்ட்டை அவனை நோக்கி வீசினான். 
கருப்பட்டி சரியாகச் சுதாரித்து விலகிவிட, “டேய், எதிர்வீட்டுக்காரிடா அதான் அந்த புதுப்பணக்கார் பேத்தி” என்றான் இறுகிய முகத்தோடு. 
“ஹோ..மதினியா..?” என்றவன் இழுக்க, இவன் முறைக்க, “மீன் குழம்பு நல்லா இருக்குன்னு சொன்னேண்ணே, வேணா நாளைக்குக் கொஞ்சம் கேட்டு வாங்கிட்டு வரேன், நீயும் சாப்பிட்டுப் பார்த்து சொல்லு” என்றான் பாவம் போலே முகத்தை வைத்துக் கொண்டு. 
கதிரின் கோபத்திற்கு அவன் தூபமிட, “ஏலே, ஒரு பிள்ளைப்பூச்சியை கொன்ன பாவம் எனக்கு வேண்டாம், என்னைய பத்தி என்னடே சொன்ன அவகிட்ட?” என பற்களைக் கடித்து மென்றான். 
“நான் எதுவும் சொல்லையேண்ணே..” சட்டெனப் பதில் உரைக்க, “நீ சொல்லாம அவளும் எப்படிச் சரியா நான் போற நேரம் கோவிலுக்கு வருவா?” என்றான் விசாரணையாக. 
அப்போது தான் அவனுக்குப் புரிய, ஐயோ ஒரு மீன் குழம்புக்கு சப்புக்கொட்டி இப்படி மொத்த ஹிஸ்டிரியையும் உளறி வைச்சிருக்கேனே மனதில் புலம்ப, அவன் உடலும் காட்டிக் கொடுப்பது போலே வெடவெடக்கத் தொடங்கியது. 
அதே நேரம் கதிரின் பார்வையும் கூர்மையாக, “அப்போ மதினிக்கு ஜோடி நீங்களாண்ணே? காலையில தான் மீன் குழம்பு சூப்பர், உன்னைய கட்டிக்கிட போற அண்ணே கொடுத்து வைச்சவன்னு சொன்னேன். அது நீயா இருப்பேன்னு எதிர்பார்க்கலையே! ஐயோ! இப்போ நான் என்ன பண்ணுவேன்? இந்த சந்தோஷத்தை யாருக்கிட்ட சொல்லுவேன்” என அவன் பாட்டிற்கு குத்தாட்டம் ஆடாதா குறையாகக் குதூகலித்தான். 
அதற்குள் அவன் அருகில் வந்திருந்த இளங்கதிர் அவன் கைகளை முதுக்குப் பின் முறுக்க, அதற்கும் அசராது, “பேசாம அவங்களையே கல்யாணம் செய்துக்கோண்ணே, மதினி கையாள தினைக்கும் மீன் குழம்பு சாப்பிடுற பாக்கியம் கிடைக்கும்” என்றான். 
“ஒரு மீன் குழம்புக்கு என் வாழ்க்கையை அடமானம் வைக்கப் பார்க்குறையா?” என்ற கதிர், அவன் முதுகில் மொத்த, சுகம் போலே அசராது வாங்கிக் கொண்டான். 
“இனி ஏதாவது என்னைப் பத்தி அவகிட்டச் சொல்லுவ?” என்றவன் மிரட்ட, இனி சொல்லுறதுக்கு என்ன இருக்கு அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே! மனதில் நினைத்த கருப்பட்டி வெளிக்காட்டாது தலையை மட்டும் உருட்டி வைத்தான். 
அசதியுற்ற மனநிலையில் போ என்பது போல் கதிர் கையசைக்க, விட்டால் போதுமென கருப்பட்டியும் ஓடிவிட்டான். 
அவன் சென்ற பின், இருந்த மீதி வேலையாட்களும் கிளம்பிவிட, கதிர் மட்டும் செல்லும் எண்ணமில்லாது அமர்ந்திருந்தான். தனவதியும் வீட்டிலில்லை பின் ஏன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்? என்ற சோர்வு. வெகு நேரமாக நள்ளிரவை நெருங்கும் வரையிலும் அமர்ந்திருந்தான்.
மதியமும் உண்ணவில்லை, இப்போதும் உண்ணவில்லை. வயிறு பசியில் எரியத் தொடங்கியது. வயிறை வாடவிடும் பழக்கமில்லை, தனவதியும் அப்படி விட்டதில்லை. அவளை பார்த்த இரண்டாம் நாளிலே இத்தனை இம்சை செய்கிறாளே என சந்திராவின் மீது தான் சினமும் பெருகியது. 
அதற்கு மேலும் தாங்காது வெளியில் எழுந்து வந்தவன் வீதியின் முடிவு வரைக்கும் நடந்து வர, மூடிய உணவகத்தைத் தான் கண்டான். அப்போது தான் மணியைப் பார்க்க நள்ளிரவைத் தாண்டியிருக்க, பிடரியைத் தடவிக் கொண்டு மீண்டும் அரிசி ஆலையை நோக்கி நடந்தான். இனி தான் வீட்டிற்குச் சென்று சமைத்துச் சாப்பிட வேண்டும்! 
ஆலையைப் பூட்டிவிட்டுச் சரி பார்த்து, இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவன் ஊர் செல்லும் சாலையில் பயணித்தான். தலை முடிகள் காற்றில் பறக்க, பனிக்காற்று அதிக குளுமையோடு வருட, சிலிர்த்த மேனியோடு ஆழ மூச்சிழுத்தான்.  
இருள் மூடிய கிராமத்தின் நிசப்தமான வீதிகள், எங்கும் பேரமைதி நிறைத்திருந்தது. தன் வாசலில் வண்டியை நிறுத்தியவனின் கண்கள் தானாக எதிர்வீட்டை ஒரு பார்வை பார்க்க, சிறு வெளிச்சமுமின்றி இருந்தது. தன் வீட்டிற்குள் சென்றவன் கதவை மூடிவிட்டு அடுப்பறை நோக்கிச் சென்றான். 
காலையில் தனவதி வைத்த சாம்பாருக்குத் தோசை ஊற்றியவன் வயிறார உண்டுவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றான். எப்போதும் முற்றத்துக் கட்டிலில் படுப்பவன் இன்று காலையில் சந்திராவை ரசித்ததையும் அவள் அதைக் கண்டுகொண்டாள் என்பதாலும் தவிர்த்தான். படுக்கையை விரித்து வைத்தவன் உறக்கம் வராது மாடிச்சுவற்றில் அமர்ந்து கொண்டு எல்லையில்லாத வானை இலக்கில்லாது வெறித்தான். 
பெற்றவள் இல்லாது ஒரு வாய் உணவிற்கு இத்தனை அலைச்சலா என உள்ளம் வாடினான். தனவதியும் மகளைப் பார்த்த சந்தோஷத்தில் தனக்கு ஒரு போன் கூடச் செய்யவில்லை, தன்னை மறந்து விட்டாரோ என மறுகினான். தனக்கே தனக்கான பிரேத்தேக அன்பு, பங்கீடில்லாத முழுமையான அன்பிற்காக ஏங்கினான். 
அவன் ஏக்கத்திற்குத் துணை வருவது போல் மேகத்திற்குள் மறைந்திருந்த சந்திரனும் மெல்ல வெளிவந்து ஒளி வீசியது. பெரிய பெண்ணான சடங்கில் ஓலை தடிப்பிற்கு மறைவிலிருந்து அவனை எட்டிப் பார்த்த சந்திரா தான் நினைவில் வந்தாள். இந்த ஒளிச் சிதறல்கள் எல்லாம் அள்ளி ஒன்றாகக் கோர்த்தால் அவள் முகம் தான் வரும். அத்தனை பிரகாஷமாக அன்று மின்னியவள் இன்றும் நினைவில் அலையாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள். 
அவன் ஆழ்ந்த தவத்தையும் கலைப்பது போல் கேட்டது, மெல்லிய விசில் சத்தம். பெரும் நிசப்தத்தில் துல்லியமாகக் கேட்க, திடுக்கிட்டவன் சுற்றும் முற்றும் பார்க்க, எதிர் வீட்டு மாடியிலிருந்து கையசைத்தாள் அவன் தேவதை! 
சந்தன நிற இலகு உடை, விடியலில் பார்த்த அதே தோற்றம்! 
இந்த நேரம் இவளுக்கு என்ன வேலை இங்கு? யாராவது பார்த்தாள் என்ன நினைப்பார்கள்? என நினைத்தவன் முறைக்க, “சாப்பிட்டீங்களா? இல்லை சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா?” என்ற குரலோடு சைகை இட்டும் கேட்டாள். 
இருந்த எரிச்சல் சென்ற இடம் தெரியாது ஒரு நொடி உள்ளம் குளிர, அவன் பார்வை அவள் மீது கூர்மையானது. உறங்கி எழுந்த தோற்றமில்லை, உறக்கத்திற்கு ஏங்கும் விழிகள்! தனக்காகத் தான் காத்திருந்தாளோ? என்ற சந்தேகம். வெறும் வார்த்தைக்கு கேளாது அவன் பதில் வேண்டிய அக்கறையும் பிடிவாதமும் அவள் முகத்தில் தெரிய, அவன் தலை தானாக அசைந்தது. 
சின்னதாகச் சிரித்தாள், அவள் தெற்றுப்பல் கூட நட்சத்திரமாக மின்ன, ஏதோவொரு விசை ஈர்க்கும் உணர்வு. ஏதோ மந்திரப் புகை அவன் நினைவுகளை அளித்தது போல் மாலை நினைவுகள் முழுதும் மறந்திருந்தான். 
அவன் மறந்தாலும் அவள் விடுவதாயில்லை. தன் கழுத்தில் கோர்ப்பது போல் இரு கரம் தூக்கி சைகை செய்தவள், “தாலி எங்க?” என்றாள். எங்கே தூக்கி எறிந்து விட்டானோ என்ற பதைபதைப்பு அவளுக்கு. 
உள் பனியனோடு நின்று கொண்டிருந்தவனின் சட்டை படுக்கையில் கிடந்தது. அதே சட்டைப் பைக்குள் அவள் வைத்த தாலி வைத்த நிலையில் தான் இருந்தது. 
பெரும் நிசப்தற்குள் அவள் சிற்றொலியும் அதிகப்படியாகவே எதிரிலோலித்தது. அவள் செய்து வைத்த செயலை விடவும் இப்போது தெருவிற்கே கேட்கும் படி அங்கிருந்து கத்துவது தான் அவனுக்கு அதீத சினத்தைக் கொடுத்தது. 
“உள்ள போ..” அடித்தொண்டையிலிருந்து உக்கிரமாக அதட்ட, அசராது பதில் வேண்டி பிடிவாதமாக நின்றாள். 
“கோவில் உண்டியல்ல போட்டேன், இனி இந்த மாதிரி ஏதாவது மடத்தனமான வேலை செஞ்ச தொலைச்சிடுவ” என்றவன் மிரட்ட, உண்டியலில் போட்டுவிட்டான் என்ற கோபத்தில் முறைத்து நின்றாள் அவள். 
நள்ளிரவு நேரம், குளிர்ந்த காற்றில் மேல ஒரு போர்வை கூட போர்த்தாமல் நிற்கிறாளே எனப் பரிதவித்தவன், “உள்ள போட்டி” என மீண்டும் அதட்டினான். 
அவள் அசையவில்லை, ஒற்றைக் காலில் தவம் நின்றாலும் இறங்கிவரும் எண்ணம் அவனுக்குமில்லை. 
என்னவோ போ என நினைத்துச் சென்றவன் முகம் வரைக்கும் இழுத்து மூடி படுத்தான். மறுநொடி அவன் மேலே ஏதோ சொத்தென வந்து விழ, திடுக்கிட்டு எழுந்தவன் சுற்றும் பார்க்க, கசக்கிச் சுருட்டிய சிறு காகிதம் தான் கிடந்தது. 
எழுந்து எடுத்தவன் விரித்துப்பார்க்க, உள்ளே சிறிய அளவிலான கல் இருக்க, முகம் கடுகடுத்தான். கல்லை விட்டா அடிக்கிற என்ற முணுமுணுப்பில் எதிரே பார்க்க, அவள் இல்லை. ஒரு வேளை காகிதத்தில் ஏதுவும் எழுத்திருப்பாளோ என்ற எதிர்பார்ப்பில் விரித்துப் பார்க்க ஒன்றுமில்லை. 

Advertisement