Advertisement

ஒருவேளை இருளில் தான் சரியாகத் தெரியவில்லையோ என நினைத்தவன் அலைபேசியின் முகப்பு விளக்கை இயக்கி உற்று உற்றுப் பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை. ஒரு ஏமாற்ற உணர்வு அவன் முகத்தில் மின்னி மறைந்தது. 
மாடிச்சுவற்றின் உட்புறம் மண்டியிட்டுக் குறுக்கி அமர்ந்த நிலையில் தலையை மட்டும் நீட்டி அவனை ஆராய்ந்து பார்த்தவளுக்குச் சிரிப்பு சிதறியது. கை கொண்டு வாயை மூடிக் கொண்டவள் சத்தமில்லாமல் சிரித்தாள். அந்த ஆசை இருக்குல பின்ன என்னவாம் மனம் சிணுங்க, பரவாயில்லை இன்னும் கொஞ்சம் விரட்டுனா பிடிச்சிடலாம் என்ற உற்சாகம்! 
அவன் சென்றுவிட, தவளை போலே தத்திதத்தி மாடிப்படிகளை அடைந்தவள் பின் இறங்கி வீட்டிற்குள் ஓடி விட்டாள். விடித்ததிலிருந்து நடுநிசி வரைக்கும் பட்டாம்பூச்சி போலே அவனைச் சுற்றி வந்த அவளின் இம்சையால் இனிய கனவு கூட தேவையில்லை என்பது போலே அன்று சுகமாகக் கண்ணயர்ந்தான் இளங்கதிர். 
ஞாயிறு விடுமுறை நாள். முற்பகல் நேரம், சூரியன் இல்லாத வானம், வெம்மை கலக்காத ஈரப்பதமான காற்று சலசலத்துக் கொண்டிருந்தது. அரசுப்பள்ளி வளாகத்தில் பத்திலிருந்து பதினைந்து வரை வயதிலான சிறுவர் சிறுமிகளுக்குச் சிலம்பம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான் இளங்கதிர். 
ஒரு மணி நேரம் இவர்களுக்கு, அடுத்த ஒருமணி நேரம் பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து வயது வரையிலான பிள்ளைகளுக்கும் பயிற்சி தருவான். அவன் தந்தை அவனுக்கு கற்றுத் தந்த கலை, சில வருடங்களாக ஊர் சிறுவர்களுக்கு அவன் கற்றுத் தருகிறான். 
வழக்கம் போலே மடித்துக் கட்டிய வெட்டி, மேலே ஒரு பனியனோடு கையில் சிலம்பக் கம்பை பற்றியிருந்தவன் நடுக்கப்பு வீச்சு முறைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான். கம்பு பிடிப்பது, நிற்கும் முறை, சுழற்றும் முறை என அடிப்படை பற்றிச்சிக்கு அடுத்த நிலை.
வரிசையாக இடைவெளி விட்டு நின்றிருந்த முப்பது சிறு பிள்ளைகள் ஆர்வமோடு சுற்ற, அவர்களை ஆராய்ந்தபடி கையில் கம்போடு முன் வரிசையில் நின்று கொண்டிருந்தான் கதிர். 
சில நிமிடங்களாக அவன் பார்வை பிள்ளைகளின் மீதில்லாது அவனைச் சுற்றிவரும் பைங்கிளியின் மீது தான் சுற்றியது. அவன் வந்து பயிற்சியை ஆரம்பித்த சில நிமிடங்களிலே சைக்கிள் ஒன்றில் வந்த சந்திரா அவனை நேராகப் பார்க்க, அவன் முறைத்தான். 
ஒரு வெப்ப மரத்தடியில் பிள்ளைகளோடு அவனும் நின்றிருக்க, பயிற்சியில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாது பள்ளி வளாகத்தையே சைக்கிளில் வட்டமடித்துக் கொண்டிருந்தாள். 
வானில் மேகங்கள் கலைய, சூரியன் ஒளிவீசத் தொடங்கியது. திண்மையான தோள்கள் வலுவான புஜங்கள் எனத் தேகம் முழுதும் பூத்த வியர்வை முத்துகள் மின்ன, தரையில் ஊன்றிய கம்பை பிடித்தபடி, நிமிர்ந்த நிலையில் போர்வீரன் போன்று நின்றிருந்தவனை ரசனையும் உரிமையும் கலந்த பார்வையால் வருடினாள். 
சைக்கிள் ஓட்டுபவள் பின்புறமிருக்கும் மைதானத்தில் சுற்றாது இங்கென்ன வேடிக்கை என்ற சிடுசிடுப்பு அவனுக்கு. சென்று விரட்டிவிடலாம் ஆனால் அவள் வம்பு செய்வாள், வாக்கு வாதங்கள் வரும், சிறு பிள்ளைகள் முன் வேண்டாமென்று நினைத்தான். அது மட்டுமின்றி அவன் அனுபவம், அவள் அத்தனை சீக்கிரம் தன்னை விட்டுவிட மாட்டாள் என்பதும் புரிய, அவளை முற்றிலுமாக தவிர்த்தான். 
ஏதேனும் வம்பு இழுத்து வைத்தால் அவனையும் உணராது கட்டுப்பாடில்லாது பேசிவிடுவான் அதைத் தவிர்க்க நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்தான். இருந்தும் அவன் கண்கள் கட்டுப்படாது அவளையே ஓர விழியால் காண்க, அவளும் சைக்கிளில் வட்டமடித்தபடி நேர்பார்வையில் அவனைத் தான் பார்த்திருந்தாள். 
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருந்ததில் பிள்ளைகளைக் கவனிக்கவில்லை. அப்போது தான் வீச்சு முறையை கற்றிருந்த சிறுவன் ஒருவன் ஆர்வத்தில் சற்று வேகமாக சுழற்ற, அவன் பிடியிலிருந்து நழுவிய கம்பு வீசிய வேகத்தில் சுழன்று சந்திராவின் மீதே விழுந்திருந்தது. கதிரைப் பார்த்திருந்தவள் இதை கவனியாது போக, திடீரென விழுந்ததில் நிலையில்லாது தடுமாறி அவளும் சைக்கிளோடு கீழே விழுந்தாள். 
அனைத்தும் நொடியில் நிகழ்ந்து விட, அவனையே பார்த்திருந்த கதிர் பதறியோடினான். அவள் கீழே விழுந்திருக்க, அவள் லாங் ஸ்கர்ட் சைக்கிளில் மாட்டியிருக்க, சைக்கிள் அவள் மீது கிடந்தது. 
பயிற்சியை இடையில் நிறுத்தினால் கண்டிப்பான் என்றறிந்த பிள்ளைகள் பயிற்சியில் இருக்க, கம்பை தவற விட்ட பையன் பயத்தில் நிற்க, எதையும் கவனியாது கண்களில் பட்டுவிட்டதோ என ஓடி வந்தவன் சைக்கிளைத் தூக்கி, அவளையும் தூக்கிவிட்டான். 
காலில் வலியை உணர்ந்தவள் தாங்கி தாங்கி நடந்தபடி அருகே இருக்கும் பள்ளிக்கட்டிடத்திலே படிகளில் அமர்ந்தாள். முன்புறம் கிளை படர்ந்து பூக்கள் பூத்த செவ்வரளிச் செடி காற்றில் ஆடியது. 
சைக்கிளை நிறுத்திவிட்டு அவள் அருகே வந்தவன், தாடையில் கை வைத்து முகத்தை நிமிர்த்திப் பார்க்க, இடது நெற்றியிலிருந்து கழுத்துக்குக் கீழ் வரையிலும் கம்பு பட்ட இடங்கள் சிவந்து கோடாகியிருக்க, நெற்றி வீங்கத் தொடங்கியிருக்க, முகமே வலியைப் பிரதிபலிக்க, விழி இரண்டும் நீர் திரண்டு நின்றது. 
சிறுவர்களின் பார்வைக்கு அவர்கள் தெரிய வாய்ப்பில்லை. சந்திராவின் வலது பக்க முகத்தை தன் வயிற்றோடு சாய்த்தவன் இடது பக்க முகத்தை அழுத்தித் தேய்த்தான். வலியை உணர்ந்தவள் அவன் கைகளை விடுவிக்கப் போராட, “கொஞ்சம் பொறுத்துக்கோ வதும்மா, இல்லை இரத்தம் கட்டி முகமே வீங்கிடும். அது இன்னும் தான் வலிக்கும்” என கெஞ்சியபடி தேய்த்தான். வலி கொண்டதே அவன் தான் என்பது போல் குரலில் வேதனை வழிந்தது. 
அவனுக்குத் தெரியும் சிறு வலியையும் சந்திரா தாங்க மாட்டாள் என, சிறுவயதில் சைக்கிள் ஓட்ட கற்றுத் தந்ததே அவன் தான், கீழே விழாமலே கற்றுக் கொண்டவளும் அவள் தான். நொடி நேரம் என்றாலும் தாங்கிப் பிடித்து விடுவான், சிறு வலியே என்றாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஊரையே கூட்டி விடுவாள். 
உண்மையில் அவன் அக்கறையும் குரலும் அவனுள் ஒளிந்து கிடக்கும் அவள் மீதான பாசம் வற்றவில்லை என்பதை உணர்ந்த அவள் உள்ளத்தில் பனிச்சாரல். எப்போதுமே அவன் அக்கறை அவளை உருகச் செய்யும், சிறு வலியென்றாலும் பெரிதுபடுத்தித் தேம்பித் தேம்பி அழுவாள், அவன் தான் சமாதானம் செய்ய வேண்டும். 
இன்றும் உள்ளம் உருகி நின்றவள், அவன் வயிற்றோடு முகத்தை அழுத்திக் கொண்டாள். வியர்வையோடு கலந்த அவன் வாசம் நாசி தீண்ட போதும் போதும் எனும் அளவிற்கு இழுத்து சுவாசப்பைக்குள் சேமித்துக் கொண்டாள். இத்தனை நாளாக இல்லாது இன்று தான் அவன் சிறிது இளக்கமாகப் பேச, அதை ரசித்து அனுபவித்த போதும் அவள் வாய் சும்மா இல்லாது, “பிரியமேயில்லைன்னு சொன்ன?” என சிணுங்களோடு குற்றம் சாட்டும் படி கேட்டு விட்டது. 
சிறு அசைவு, அதுவும் உடை மீது தான் என்றாலும் வயிற்றோடு புதைந்த அவளிதழ் உரசித் தந்த சிறு அழுத்தம், அவன் திடமான தேகத்தைச் சிலிர்க்கச் செய்தது. அதே நேரம் அவள் கேள்வி செவி வருடி அவனைத் தன்னிலை உணரச் செய்ய, சட்டென அவளிடமிருந்து சிறிது விலகி நின்றான். 
“ஏலேய், மணி போய் கருப்பட்டியை கூட்டியாலே..” என நின்ற இடத்திலிருந்தே குரல் கொடுக்க, தலையசைத்து, கம்பு வீசிய சிறுவன் ஓடினான். 
அவன் விலகலே நெஞ்சில் அடித்தது போல் வலிக்க, அவன் முகத்தையே பார்க்க, இரும்பாய் இறுகிப் போய் நின்றிருந்தான். தீச்சுட்டார் போன்ற தத்தளிப்பு, வலியை விட அதிகம் வலித்தது அவன் விலகல் தான். தாங்க முடியாதவள் சட்டென அவன் இடையில் கரம் கோர்த்து தன்னருகே இழுத்து மீண்டும் வயிற்றில் முகம் புதைத்துத் தேம்பி அழுதாள். 
அவன் இரும்பாக இருந்தாலும் ஈர்க்கப்பட்ட காந்தமாய் அவளே அவனை சுற்றியிருந்தாள். உன் அன்பை மட்டுமே அனுபவித்துப் பழகியவளுக்கு இந்த முகம் காணும் தைரியமில்லை, உன் சிறு விலகலும் என் உயிரையே உருவுவது போல் வலிக்கிறதே! குரல் கொடுக்காது, தொடைக்குழி அடைக்க, விம்மிய நெஞ்சோடு தேம்பி அழுதாள். 
அவனோ விலக்கி விட முயல, விட மாட்டேன் என்பது போல் அவன் பனியனையும், இடையையும் இரு கரங்களால் இறுக்கிக் கொண்டவள், “விட்டுடாத இளா, உனக்காகத் தான் இங்க வந்தேன், உனக்காகத் தான் இங்க இருக்கேன். நீயில்லாம என்னாலே இருக்கவே முடியாது” என வாய்விட்டே விம்மினாள். 
அவனோடு போராடி போராடி சோர்ந்த மனநிலை கண்ணீராக ஊற்றெடுத்தது. அவள் கண்ணீரின் ஈரம் உடை தாண்டி உடல் தொட்ட போதும் அவன் நெஞ்சைத் தொடவில்லை. அதை விடவும் அவள் அழுவதைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. 
பலம் கொண்டு அவள் கரங்களைப் பிரித்தவன் அவள் வலியில் சுணங்குவதையும் பொருட்படுத்தாது சுவரில் சாய்த்து அமர வைத்து விலக முயன்றான். விலகும் நிலையிலும் அவன் விரல்களை இறுக்கி அவள் பற்றியிருக்க, அவளை இழுத்து அணைக்கத் துடித்த உணர்வுகளையும் அவளையும் உதறிவிட்டுச் சென்றான்.
இன்னும் சில நொடி நின்றிருந்தாலும் அவன் உறுதிகள் உடைத்து உருக்குலைந்து போயிருக்கும், அந்த சக்தி அவள் கண்ணீருக்கு உண்டு. வலியில் கலங்கி நின்றவன் சீரான மூச்சுகளை வேகமாக இழுத்துக் கொண்டு தலை முடிகளை அழுத்திக் கோத, அவனை நோக்கி ஓடி வந்தான் கருப்பட்டி. 
“என்னண்ணே..” என்க, “அவ அங்க இருக்க, அவளை வீட்டுல விட்டுட்டு, ஆச்சிகிட்ட முகத்துல ஒத்தடம் கொடுக்கச் சொல்லு” என தன் வண்டிச் சாவியை அவனிடம் எறிந்தான். 
“உனக்கு ஒன்னுமில்லையே..?” அவன் பதறி நிற்க, “சொன்னதை செய்யுடே..” என்றவன் நில்லாது சென்று விட, கருப்பட்டியும் பொறுப்போடு சந்திராவை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். 
 

Advertisement