Advertisement

அத்தியாயம் 02
தென்றல் தவழும் தென்காசியில் கோடையிலும் இளம் வெயிலுக்கு ஏங்க தான் வேண்டும். பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை, ஆகையால் ஊர் முழுவதும் சிறுவர்கள் நிறைந்திருந்தனர். வயலில் தந்தைக்கு சிறிது நேரம் உதவிவிட்டு, மாலை நேரம் புழுதி பறக்க, களத்தில் கபடி விளையாடினான் இளங்கதிர். மழை வருவது போல் கருமேகங்கள் சூழ்ந்து மண் வாசமும் வீச, பக்கத்து வயலில் இருக்கும் பெரியவர் அனைத்து சிறுவர்களையும் வீடு நோக்கி விரட்டி விட, கதிரும் வீடு வந்தான்.  
அவன் வீட்டிற்கு வருகையிலே சில துளிகள் தூரத் தொடங்க, திண்ணையில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்ததும் அவள் அருகில் வந்தமர்ந்தான். 
“சந்திரா.. எதுக்கு இப்படி உக்காத்திருக்கவ” என்க, அவளோ பதில் சொல்லாது மேலும் முகத்தை திருப்பிக் கொண்டாள். 
தாடையில் கை வைத்து அவள் முகத்தை தன்புறம் திருப்பியவன், “சொல்லுட்டி..” என்றான் பிடிவாதமாக. பார்வை மட்டும் அவள் சிவந்த கன்னத்தில் பதிந்திருந்தது. 
அவன் கைகளை தட்டிவிட்டவள் மீண்டும், “உன் தங்கச்சிக என்னை ஆட்டையில சேத்துக்கல, நீயும் பேசத போ” என்றவள் உதட்டையும் சுளித்தாள்.
“அம்புட்டு தானா..” என்க, அவளோ முறைக்க, “நாளைக்கு சேத்துக்க சொல்லுத, இல்லை எங்கூட விளையாடலாம்” என்றான் சமாதானமாக. 
அதற்கும் அவள் இறங்குவதாக இல்லை, “மழை பெய்யுதுல உள்ளார போவோ, எங்க சின்னம்மா சுசீயம் செய்யுது. வாட வருது வாலே..” என அவள் கரம் பற்றி இழுக்க, அவள் எழுந்திருக்க மறுத்தாள். 
“வது..” கெஞ்சினான், ம்கூம் அவளோ சிறிதும் அசயவில்லை. சந்திரவதனி சரியான பிடிவாதக்காரி, அவனை தவிர யாராலும் அவள் பிடிவாத்தை தளர்த்த இயலாது அல்லது அவனுக்காக மட்டுமே இறங்கி வருவாள். 
“சரி, இப்பவே விளையாடுவோமோ? இல்லை ஊஞ்சல் ஆட்டிவிடட்டுமாவ? சாரல் அடிக்குது பாரு. நனையிறல..” மீண்டும் இழுத்துப்பார்த்தான். 
அவ்வளவு தான் அவனுக்கும் பொறுமை பறக்க, “இப்போ நீ வாரீயா? இல்லை தூக்கிட்டுப் போவவா? கிளி மூக்கி” என்றான் மிரட்டலாக. நன்கு சிவந்த தேகம், கோபத்தில் மட்டும் மூக்கு அதிகப்படியாகவே சிவக்கும் சந்திரவதனிக்கு. 
சிறு இடைவெளியில் அருகில் அமர்ந்திருந்தவன் அவளைப் பார்க்க, அவளும் மிரட்சியில் கண் சிமிட்டி ஒரு பார்வைப் பார்த்தாள். இடது புருவத்திற்கு கீழ் சிறு மச்சம், கண் சிமிட்டும் போதெல்லாம் இமை முடி இரண்டு தொட்டு விடும், அழகோ அழகு! அருகில் பார்த்தாள் தான் தெரியும். 
ஆனால் இன்று அதை விடவும் அதிகம் அவன் கண்ணைப் பறித்தது அவள் கன்னம் தான். மாசுமருவற்ற குழந்தை முகம், சிவந்த கொழுகொழுக் கன்னங்கள், அதை விடவும் செந்நிறமாக மின்னியது புதிதாக வந்திருந்த முகப்பரு. 
அவள் மறுப்பாக தலையசைக்கையில் எல்லாம் கவனத்தை ஈர்க்க, குறுகுறுத்த அவன் கைகளால் சட்டென கிள்ளியும் விட்டான். அந்த முகம் தான் அப்படியே இன்று கண்ட முகமாக காட்சியளித்தது. சிமிட்டிய அதே கண்கள் தான் அவனையே கொள்ளையிட்டுச் சென்றது. அரை உறக்க நிலையில் விடியல் நேரம் நினைவுகள் கலந்த கனவோடு புரண்டு கொண்டிருந்தான் இளங்கதிர். 
எதிர்வீட்டில் முன் வாசல் மின்சார விளக்கு எரியத் தொடங்க, கையூன்றி தலையை தாங்கியபடி பள்ளிகொண்ட நிலையில் ஒருக்களித்துப் படுத்தான். இன்னும் புலராத விடியல் குளிர்காற்று தழுவும் நேரம். இரும்புக்கதவையும் திறந்து வெளியில் வந்தவள் வாசல் பெருக்கத் தொடங்கினான். இவ்வளவு காலையிலே எழுந்து விடுவாளா? வியந்தான்! 
அவள் வெளிச்சத்தில் இருந்ததால் அவனால் நன்றாக காண முடிந்தது, அவன் இருளில் இருந்ததால் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே நினைத்தான். இன்னும் தெருவில் ஆள் நடமாட்டமில்லை, நைட்டியை முட்டிக்கு சற்று கீழ் வரையிலும் தூக்கிக் கட்டியிருந்தாள். வளவளப்பான கால்கள் மின்னொளியில் பொன்னிறமாக மின்னியது. 
இறக்கிவிட்டால் தான் ஆகாதோ? என சிடுசிடுத்தான். கல்லூரி படிப்பையும் முடித்திருப்பாள், நன்றாக வளர்ந்து விட்டாளே! என் நெஞ்சுயரம் இருப்பாளோ? தோளுக்கு இருப்பாளோ? கலரும் அழகும் கூடியிருக்கிறது. அந்த இருளிலும் அகச்சிவப்பு பார்வை கொண்டு அறிந்திருந்தான். 
கீழே கால் ஊன்றி அமர்ந்து கோலமிட்டுக் கொண்டிருந்தவளை இமைக்காது அணு அணுவாய் பார்த்திருந்தான். கொலுசு அணிய மாட்டாளோ பேஷன் என்று நினைப்பாளோ? 
மொத்த முடியையும் தூக்கி உச்சியில் கிளிப் மாட்டியிருக்க, இதென்ன மண்டைக்கு மேல குருவிக் கூடு மாதிரி கொண்டை? பின்னல் இடத்தெரியாதோ? கோலமிடும் வெறுமையான கைககளில் ஒரு முத்து வளையல் அணிந்தால் அழகாக இருக்குமே? 
நேற்றைய இரவில் நெஞ்சிலிருந்த சஞ்சலமெல்லாம் துளியும் நினைவில் இல்லாது அவளை ரசித்தபடி இருக்க, அவளோ பொறுமையாக வாசலில் அமர்ந்தே விட்டாள். நேற்று வாங்கி வந்திருந்த பூந்தொட்டிகளில் மண்ணை நிரப்பி கொண்டிருக்க, சிவந்த மூக்கை பிடித்தாட்ட விரல்கள் ஏங்க, பஞ்சு கன்னத்தை கிள்ள நகங்கள் ஏங்க, சந்திரவதனத்தை கட்டி அணைக்க கைகளும் ஏங்கியது. ஆசைகளுக்கு தடையிடும் தைரியம் சிறிதும் இல்லாதவன் அதற்கு மேலும் நில்லாது எழுந்து ஓடி விட்டான்.                                                                                      
கிணற்றில் குளித்துவிட்டு படிகளில் வழி மேலே ஏறி வர, கிணற்று மேட்டில் கையில் அலைபேசியோடு நிதானமாக அமர்ந்திருந்தாள் சந்திரவதனி. 
எவ்வளவு நேரமாக இங்கு அமர்ந்திருக்கிறாளோ? சிறிதும் எதிர்பாராது அதிர்ந்தான். அதிலும் அவள் கையூன்றி அமர்ந்திருக்க, அவள் கைகளுக்கு அடியில் தான் அவன் உடைகள் இருந்தது. 
மேலே ஒரு பனியன், இடையில் கட்டிய துண்டோடு கனல் கக்கும் பார்வையில் நின்றிருந்தவன், “இங்க என்ன செய்யுறவ..?” என்றான். அவளோடு பேசுவதற்கு அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை, மனம் முழுதும் மலையளவு வன்மம், வெறி, கோபம் தான் நிறைந்திருந்தது. 
“ம்ம், வேடிக்கை பார்க்குத..” என இழுந்தவள், இத்தனை வருடம் கழித்து பார்க்கிறானே ஒரு வார்த்தைக்கு கூட நலம் விசாரிப்பு இல்லையா என ஏக்கத்தில் முறைத்தாள். 
“வேடிக்கை பார்க்க எங்கென்னவ இருக்கு..?” என அவன் கட்டுப்பாட்டை மீறி பேச்சை தொடர்ந்திருந்தான். 
கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சை வயலும் ஆங்காங்கு காற்றாலை விசிறிகளும் தவிர பார்ப்பதற்கு எதுவுமில்லை. 
தெற்றுப்பல் தெரிய அழகான சிறு சிரிப்போடு, “அதா நீங்க இருக்கீங்களே..” என்றாள். 
அவன் முறைப்பில் உஷ்ணம் கூட, “சும்மா மொறைக்காதிக நீங்க மட்டும் பார்க்கலாம், நாங்க பார்க்கக் கூடாதா? இதென்ன நியாயம்?” என சீறினாள். 
காலையில் நான் பார்த்ததை கண்டுபிடித்து விட்டாளா? ஐயோ என்றிருந்தது அவனிற்கு. அதை வெளிக்காட்டாது, “வழி விடுலே..” என்றவன் சிடுசிடுத்தான். 
உடைகளை உருவி விடுவான் தான், ஆனால் அவன் இழுக்கும் வேகத்திற்கு அவள் தான் வாரி கிணற்றிற்குள் விழ வேண்டியதாய் இருக்கும். 
அவளோ அதை சிறிதும் காதில் வாங்கதவள் போலே, “ஆம்ஸ் எல்லாம் வெய்ட்டா இருக்கு, ஒரிஜினல் தானா? தொட்டுப் பார்க்கலாமா?” என்க, அவனோ மேலும் எரிச்சலானான். 
இவளோடு என்ன பேச்சு? என மனசாட்சி வேறு கேட்க, அவள் விழுந்தாலும் சரியென உடைகளை உருவ, அதற்குள் சுதாரித்தவள் கைகளை எடுத்துவிட்டு அருகே வந்தவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 
“ஏய்..ச்சீ.. என்ன செய்யுத? கைய எடுட்டி..” என சினமும் பதற்றமுமாக சுற்றும் முற்றும் பார்த்தவன் அவள் கைகளையும் விலக்கி விட்டு உடையோடு விலகினான்.  
“பின்ன உங்களை கட்டிகிடுத உரிமை என்னைத் தவிர எவளுக்கு இருக்கு?” அவளும் வேகமாக வார்த்தைகளில் புதைத்த அர்த்தத்தோடு கேட்க, ஒரு நொடி அவள் முகத்தில் பார்வை நிலைக்க, படபடத்த இமைகளையும், சிவந்த மூக்கையும் ரசிக்க இயலாது தவித்தான். 
“பகல் கனவு கண்டுட்டு அலையாத, ஜோலியைப் பாருலே” என்றவன் நடக்கத் தொடக்க, வேகமாக முன் வந்து வழி மறித்து நின்றாள். அவன் சினத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டிருந்தாள். 
“இப்போ உனக்கு என்னலே வேணும்..?” விட்டால் அடித்துவிடும் நிலையில் எரிந்து விழுந்தான். 
“உம்ம கோபம் எங்கிட்டச் செல்லுபடியாகாது. கோபப்படாதிக, கொஞ்சம் பேசணும்” என சிறிதும் அசராது கெஞ்சினாள். 
உண்மை தான் அவளை காயப்படுத்த அவனால் இயலாது, அவன் கோபம் அவளிடம் செல்லுபடியாகாது! பலகீனம் அறிந்தே வம்பு செய்கிறாள் என நினைக்கையில் மேலும் சினம் அதிகரிக்க, அதை வெளிப்படுத்தும் வழி தெரியாது அவன் தான் தவித்து நின்றான். 
“உங்கிட்டப் பேச எனக்கு எதுவுமில்லை, என்னைக்கு எங்கப்பா இறந்தாரோ அன்னையோட உங்குடும்பத்துக்கும் எங்களுக்குமான உறவு முறிஞ்சதுவ” என அடித் தொண்டையிலிருந்து சீற, ஒரே நொடியில் அரண்ட அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. அதைவிடுவும் அவள் வார்த்தைகள் நெஞ்சில் அடிக்க கண்களில் நீர் ஊறியது. 
அவனோ சிறிதும் கண்டுகொள்ளாது விலகி நடக்க, அதை உணர்ந்தவள் மீண்டும் கண்ணீரோடு அவன் முன் வந்து வழி மறிந்தாள். மொத்தமாக அவனுக்கு தன்னிலை இழந்த நிலை, சட்டென அவளை விலக்கிவிட்டு திரும்பியும் பாராது சென்றுவிட்டான் இளங்கதிர். 
அவன் சிறிதாக தள்ளியதற்கும் நிலையாக நிற்க முடியாமல் ஈர வயலில் கால்கள் இடறி வாய்க்கால் நீரில் விழுந்திருந்தாள் சந்திரவதனி. 
காலை உணவு பரிமாறிய தனவதி, “எங்க ராசா இந்த கருப்பட்டி பயல காங்கல?” என்க, இளங்கதிர் காதுகளில் அவர் வார்த்தைகள் ஏறவேயில்லை. 
“ரேவதி போன் போட்டா, என்னிய வரச் சொல்லுதா.. ஒரு எட்டுப் போயி பார்த்துட்டு வந்திடட்டுமா..?” 
“சரிங்கச் சின்னம்மா, பத்துமணி காருக்கு தென்காசி வாங்க, அங்கிருந்து நான் பஸ் ஏத்திவிடுத, ஒருவாரம் கூட இருந்து கவனிச்சிட்டு வாங்க, புள்ளை தனியாதானே இருக்கா” என்றபடி உண்டான். 
கதிர் வீடு நோக்கி வந்த கருப்பட்டியை, “ஏலே தம்பி, இங்க வாலே” என எதிர்வீட்டு வாசலில் இருந்து சந்திரவதனி அழைக்க, “என்னக்கா..?” என்றபடி அவளை நோக்கி சென்றான். 
“ரூம்ல புது பல்ப் ஒன்னு மாட்டணும், மாட்டிடுவியாலே..?” 
“யக்கா, ஆளைப் பார்த்து எடை போடாதிக, இந்த ஏரியாவிலே எல்லாத் தெரிஞ்ச ஆல் இன் ஆல் அழகுராஜா நான் ஒருத்தன் தான். எங்க மாட்டணும்? வாங்க” 
சிறு சிரிப்போடு சந்திராவும் உள்ளே அழைத்துச் செல்ல, அவள் தாத்தா நாராயணன் படுக்கையில் இருக்க, பாட்டி வள்ளியம்மை அடுப்படியில் இருந்தார். நேற்று முழுவதுமே ஊராரும் உறவினரும் வந்து நலம் விசாரித்த வண்ணமிருக்க, இன்று தான் வீடே சற்று அமைதியாக இருந்தது. 
ஊரில் இல்லாவிடினும் அவர்களுக்கு என்றும் தனி மரியாதை உண்டு. பெரிய வீடு தான், ஆனாலும் நவீனகால கட்டமைப்பும் வடிவமைப்பும் கொண்டது.  
தாத்தாவின் அறைக்குள் கை காட்ட, ஒரு நாற்காலியில் ஏறி மின்விளக்கை மாட்டிக்கொண்டிருந்தான் அவனும். 
“தம்பி பெயர் என்னடே..?” 
“கருப்பட்டிக்கா..” என்க, சட்டென சந்திரா சிரித்து விட, “அது எம்பெயர் சீனிவாசன், பார்க்க நல்ல கருப்பா, கலரா, ஸ்வீட்டா இருக்கேனா, அதான் ஸ்கூல்ல இருந்தே எல்லாரும் கருப்பட்டினே கூப்பிட எம்பேரே எனக்கு மறந்து போச்சிதுக்கா” என விளக்க, சிரித்தாள். 
“சரி தான்டே, என்ன படிக்கிறவ..?” 
“பனிரெண்டாம் வகுப்பு பாஸ்க்கா..” என்றான் கெத்தாக. 
“இப்போ..?”
“இதோ, உங்க எதிர்வீட்டு அண்ணாச்சிகிட்ட அப்ரண்டீஸா வொர்க் பண்ணுறேக்கா” 
“அப்ரெண்டீஸ் வைச்சி வேலை வாங்கிற அளவுக்கு உம்ம அண்ணாச்சி என்ன வேலை பார்க்கிறாவ?” 
“தென்காசில சொந்த ரைஸ்மில்லு வைச்சிருக்காவ, அவருக்கு ஊருக்குள்ள பெயரே மில்லுக்காரன்த” 
“ஹோ, அப்போ உன்னை வைச்சு நல்லா வேலை வாங்கிறாவளோ?”
“ச்சே..ச்சே..அப்படியெல்லாம் இல்லைக்கா, எங்கண்ணே சுத்த தங்கம், காலையிலே அவரோடவே கூட்டிட்டு போவாக, சாயங்காலம் ஆறுமணிக்கெல்லாம் என்னைய அனுப்பிவிட்டு அவரு நைட்டு தான் வருவாவ” 
“தென்காசியில மில்லு எங்கன இருக்கு?” என ஆரம்பித்தவள் நாள் முழுவதுமாக அவனின் வேலைகள் மொத்தமும் என்னென்ன என கேட்டறிந்திருந்தாள். 
வேலை முடித்து அவன் கிளம்ப, எதிரே வந்த வள்ளியம்மை, “யாரு மவன்லே நீ?” என்க, “தங்கமணி மவன், எங்க அப்பாவை உங்களுக்கு தெரியுமா ஆத்தா?” என்றான். 
“அதெல்லாம் தெரியும்டே, சின்னப் பிள்ளேள பார்த்தது நல்லா வளர்ந்திட்டுகலே. சரி உங்கம்மை என்ன செய்யுதா?” 
“அதுக்கு என்ன? எங்கண்ணே, அக்கா பிள்ளேளோட விளையாண்டுகிட்டு கிடக்காவ” 
“சரி வாலே சாப்பிட்டு போலாம்..” என்க, அவன் மறுக்க, அதற்குள் “சந்திரா இலைய எடுத்துப் போடு” என அவளை ஏவ, “அவளும் சரிங்க ஆச்சி” என சென்றிந்தாள். 
வள்ளியம்மை எப்போதும் அப்படி தான் வீட்டிற்கு வருபவரை உணவுண்ணாமல் அனுப்பவே மாட்டார். 
மீன் குழம்போடு வயிறார உண்டவன் பரிமாறிய சந்திராவிடம், “யக்கா, டீப்லைட்டு, கிரைண்டரு, மிக்ஸின்னு வேறதும் மட்டணும்னா சொல்லுக்கா” என்றான். 
“சொல்லுத, மொதல்ல என்னைய மொறைச்சொல்லி கூப்பிடுலே” 
ஒரு நொடி முழித்து, “மதினியா..?” என கேட்டவன், “எங்கண்ணே கொடுத்துவைச்சவன் தான்” என சிரித்தான். 
உண்டு முடித்தவன் அவள் வீட்டிலிருந்து வீதி வரை வந்திருக்க, சரியாக இளங்கதிரும் தான் வீட்டிலிருந்து வந்து வண்டியை இயக்கினான். பின் சென்று கருப்பட்டி ஏறிக்கொள்ள, “ஏம்லே எதிர்வீட்டுல இருந்து வார?” அதட்டலாக கேட்டான்.
“எவ்வீட்டுல இருந்து இப்படியாக்க வந்தே..” என கைகளிலே வட்டமிட்டு காட்ட, நம்பாது பார்த்தவன், “சரி சாப்பிட்டியாடே?” என்றான். 
“இந்தா, மீன் குழம்பண்ணே..” என கதிரின் மூக்கின் முன் வாசம் பிடிக்க கரத்தை நீட்டினான். 
மூக்கில் இடிக்காத குறையாக நீட்ட, “கருப்பட்டி கைய ஒடிச்சிப்புடுவன்டே” என தட்டிவிட்டு, வண்டியை நகர்த்தினான். 
சந்திரவதனி வாசலில் தான் நின்றிருந்தாள் ஆனால் நிமிர்ந்தும் அவன் பார்க்கவில்லை, கருப்பட்டி தான் அவன் முதுகின் பின் மறைந்து கொண்டு கையசைத்து விடை பெற்றான். 
காலையிலிருந்து அவனை சுற்றியே நேரம் கழிய, ஒரு வித முகம் மலர்ச்சியோடு உள்ளே வந்தாள். வள்ளியம்மை அவளோடு அமர்ந்து உணவுண்டபடி, “நம்ம மனோவ விட ரொம்ப திறமையான பையத்த, தகப்பன் போன பிறவும் சொந்தபந்தோ யாருமில்லாம ஒத்தியல உழைச்சி, எட்டுப் பத்து வருசத்துல சொந்தமா மில்லு வாங்கி, பொம்பளை பிள்ளேளையும் கட்டிகொடுத்துட்டானே!” என உயர்வாக உரைத்தார். 
சந்திரவதனிக்கு உச்சி குளிர்ந்து போனது, என்னவோ அவளையே புகழ்வது போலே பூரித்தாள். முகமும் அப்படியே பூரிப்பை வெளிப்படுத்த, அதை சரியாக கவனித்தார் வள்ளியம்மை. 
ஆனாலும் பேத்தியின் மலர்ச்சி அவருக்கு மகிழ்வாகயில்லை, “எல்லாமிருந்தும் என்ன செய்ய? நம்ம நிழல்ல கூட கிட்ட விட மாட்டான், எவா கண்ணுப்பட்டதோ நல்லாயிருந்த குடும்பம் இப்படி இரண்டா உடைய..!” என்றார் விம்பிய நெஞ்சோடு. 
அவ்வளவு தான், அவளால் தாங்கவே முடியவில்லை. நத்தைக் கூடு போலே நொடியில் முகம் சுருக்கினாள், யாரோ போலே அவனை தள்ளி வைக்கவோ, தள்ளி நிற்கவோ அவர்களை போல் அவளால் இயலாதே! 
“ஏன் ஆச்சி இப்படி சொல்லுதிக?” பொறுக்க முடியாமல் கூம்பிய முகத்தோடும் குற்றம் சாட்டும் குரலோடும் கேட்டே விட்டாள். 
“உண்மைய தான்டி சொல்லுத, அவன் அப்பன் செத்த போது உனக்கு பரீட்சை நீ வரலை, நாங்க மட்டும் தானே வந்திருந்தோம் எவ்வளவு கோபப்பட்டு கத்தி, கலவரம் செஞ்சான்னு தெரியுமாட்டி. நம்ம உறவே வேண்டானுட்டான், இனி நம்மளை ஏத்துக்கவும் மாட்டான், அவனை மட்டும் சொல்லி குத்தமில்ல நாம செய்த பாவமும் அப்படி தான்!” 
அதற்கு மேலும் கேட்க முடியாது தட்டிலே கை கழுவியவள், விழி நிறைந்த நீரோடு அவள் அறைக்கு ஓடியே விட்டாள். பார்த்திருந்த வள்ளியம்மையும் போகட்டும் என விட்டுவிட்டார், ஆறுதல் சொல்லும் எண்ணமில்லை. அவளை பற்றி அறிந்தவர் சமாதானம் பேசினால் அவள் பிடிவாதம் தான் அதிகமாகும். 
வந்திருந்த குடும்பம் மொத்தமும் சென்னை திரும்பியிருக்க, கணவரின் இறுதி ஆசைக்காக அவர் இங்கிருக்க, பேத்தியும் பிடிவாதமாக உடன் இருக்கும் காரணம் அவருக்கு நன்கு புரிந்தது. 
தெரிந்தென்ன பயன்? காலம் கடந்த பின் கதறி என்ன பயன்? கரை மீறிய வெள்ளத்திற்கு கற்பனையால் அணை கட்ட இயலுமா? வளரும் முன் கிள்ளி எரியும் முடிவிலிருந்தார். 

Advertisement