Advertisement

சந்திராவை நோக்கியே வந்த கதிர், “நீ என்ன செய்த இங்க?” என்க, அவன் குரலை எதிர்பாராது சட்டெனத் திரும்பினாள் அவள். 
சின்ன நமட்டுச் சிரிப்போடு கையிலிருந்த காகிதத்தை முந்தானைக்குள் மறைத்தவள், “சும்மா தான், ஒரு கொசு, அதை விரட்டி விட்டுட்டு இருந்தேன்” என்றாள். 
அதைக் கவனித்த போதும், அதற்கு மேல் கதிர் எதையும் கேட்கவில்லை. அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான். 
சந்திரா தான் பொறுமையில்லாது, “நீங்க ஏன் இந்த நேரம் வீட்டுக்கு வந்தீங்க?” என விசாரிக்க, அவன் பதில் சொல்லவில்லை.
இருவரும் வீட்டிற்குள் நுழைய, வீடு திறந்திருப்பதையும் தனவதி உள்ளிருப்பதையும் கண்டாள். அப்போது தான் புரிந்தது, கதிர் இந்த நேரம் வீட்டிற்கு வரக் காரணம் அவர் தானென்று. 
ஐயோ ஆண்டவா! இப்போ தான் ஒரு மங்குஸ்கியை விரட்டிட்டு வந்தேன், அடுத்து ஒரு ரங்குஸ்கியா? என் வாழ்க்கையில மட்டும் ஏன் இத்தனை கொசுத்தொல்லை என மனதில் புலம்பினாள். 
இவளைக் கண்டதும், “வாம்மா சந்திரா, எங்க போயிருந்த? சாப்பாடு வைச்சது அப்படியே இருக்கு சாப்பிடலையா நீ?” என்றார்.
எண்ணையில் வெடித்த கடுகு போலே மனதில் வெடித்துக் கொண்டிருந்தாள் சந்திரா. எதைக் காட்டிக்கொடுக்க இப்படி கதிரை இந்த நேரம் அழைத்து வந்துள்ளார் என்ற ஆற்றாமை! 
அவர் கேட்பது கதிரின் முன் தன்னை விசாரிப்பது போலும், குற்றம் சுமத்து போலும் தோன்றியது. மனத்தில் வெடித்த கடுகு கருகிப் புகை வரவே ஆரம்பித்துவிட்டது.
தன் வீட்டிலே தன்னை யாரும் கேள்வி கேட்டதில்லை. இவர் யார் தன்னை கேட்க? அக்கறையில் கேட்டாலும் சொல்லியிருப்பாள் அவரோ குற்றம் விசாரிப்பது போலே கேட்க, வீம்போடு மௌனமாக நின்றாள். 
வயதில் பெரியவர், கதிரின் சின்னம்மா அவரின் உறவு வேண்டும் என சீர்படுத்திக் கொள்ள முயன்றாலும் முட்டிக் கொண்டு தான் நின்றது. 
அவள் முகத்தில் பிடித்தமின்மையைக் கண்டவன், “நீ ரூம்புக்கு போ” என அனுப்பி வைத்தான். 
“ஐயோ, புள்ளை சாப்பிடாம போறாளே..” என்றவர் பதற, “விடுங்க சின்னம்மா, நீங்கப் போய் சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன்” என்றபடி அவனும் பின்னே சென்றான். 
“எய்யா, கோபம் எவ்வளவு இருந்தாலும், பொண்டாட்டியைத் தரக் குறைவா பேசவோ அடிக்கவோ கூடாது உங்க அப்பா அப்படி தான் சொல்லுவார்” என்றவர் அறிவுரை வேறு கூற, தலையாட்டிச் சென்றான். 
சந்திரா கதிரின் பின் சுற்றியது எதுவும் அவருக்குத் தெரியாது. திடீரென நடந்த திருமணம் ஆகையால் அரவிந்தன் மீது சந்திராவிற்கு பிடித்தமிருக்கும் என்பது அவர் கணிப்பு. ஆகையால் இன்று அவள் அரவிந்தனைச் சந்தித்து இருவருக்குள்ளும் பிரச்சனையை உருவாக்கும் என்றே எதிர்பார்த்திருந்தார். 
சந்திராவின் நிழலோடு அவள் பின்னே வந்திருந்த கதிர், சட்டென எட்டி அவள் கைகளைப் பிடிக்க வந்தான். சுதாரித்தவளோ விலகி விட, அவள் புடவையின் முந்தானையை இறுகப் பிடித்திருந்தான். 
அவள் கைகளுக்குள் எதையோ சுருட்டி மறைப்பதைக் கவனித்தவன், “ஏட்டி, என்னத்த மறைக்கித?” என விசாரித்தான். 
அரவிந்தனோடு பேசியதை அவனும் பார்த்தான் தான் ஆனால் அது பற்றி எல்லாம் அவன் விசாரிக்கவில்லை. சந்திரா கொசு என எனக் குறிப்பிட்டது போலே முக்கியத்துவமற்றவனாகத் தான் நினைத்தான். 
அவனிடமிருந்து உடையை உருவிக் கொள்ளும் முயற்சியிலிருந்தவள், “ஹான், அதெல்லாம் காட்ட முடியாது, இது  என் பர்சனல்” என்றாள். 
அவள் மழுப்புவது புரிய மேலும் புடவையோடு அவளையும் தன்னை நோக்கி இழுக்க முயன்றபடி, “அதென்ன புடலங்காய் பர்சனல்? இப்போ ஒழுங்கா சொல்லப் போறீயா, என்ன வேணும்?” என்றான் மிரட்டலாக. 
ஏதேனும் பிரச்சனைக்குள் சிக்கிக் கொண்டாளோ என்ற பதைபதைப்பு தான் அவனிற்கு. அவன் உணர்வுகள் அவளுக்குப் புரியவில்லை, ஆனால் தன்னுணர்வைக் கதிருக்கு புரிய வைக்க எண்ணினாள். 
முகத்தைச் சிலுப்பியவள், “சொல்ல முடியாது, என்ன செய்வ?” என வம்பு பேசினாள். 
அவ்வளவு தான் கதிரின் பொறுமையெல்லாம் காற்றோடு கலந்த புகையாய் காணாமல் போனது. பலமோடு அவளைத் தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன், பின் புறம் மறைத்திருக்கும் கரங்களைப் பற்றினான். 
அவள் மறைக்கப் போராட, அவள் போராட்டம் அதை அறியும் ஆவலை அவனுக்கு அதிகப்படுத்த, அவன் வலுவும் அவளிடம் கூடியது. 
ஒருவழியாகக் காகிதத்தை பிடிக்கியவன் விரித்துப் பார்க்க, அது ஒரு கடிதம். முழுதாக வாசிக்காது முகவரியை மட்டும் கவனித்தவன், “என்ன உங்க தாத்தா உனக்கு லெட்டர் எழுதுறாரா?” என்றான் விசாரணையாக. 
“எங்க வீட்டு ஆளுகளோட பேசக் கூடாதுன்னு தானே சொன்னீங்க, அதான் லெட்டர் போட்டுகிட்டோம்” என இலகுவாக உரைத்தவள் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, “பழைய டெக்னிங்கா இருந்தாலும் நல்லா தான் இருக்கு” என்றாள். 
குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாகக் கதிரோடு தங்கி விட்டதால் அவள் நலம் எண்ணி கவலையோடு இருந்தனர். நாராயணன் தான் கடிதம் எழுதி அனுப்பி இருக்க, அதற்கு அவளும் பதில் கடிதம் எழுதி அனுப்பினாள். தபால் நிலையத்திலிருந்து வரும் வழியில் தான் அரவிந்தனை சந்தித்தாள். 
முறைப்போடு, “அதை ஏன்ல மறைக்குத?” என்றான் கதிர். 
அவன் திட்டுவான் என்ற எதிர்பார்ப்பிலிருந்தவள் வியப்போடு, “அப்போ நான் பேசிக்கலாமா? உங்களுக்கு ஒன்னும் கோபமில்லையே?” என்றாள். 
“உன் உறவு எல்லாம் உன்னோட வைச்சிக்கிட்டா நான் எதுக்கு வேண்டாம்னு சொல்லப் போறேன். என் அளவுக்கு வரக் கூடாது அவ்வளவு தான்” என்றான். 
சந்திராவுக்குப் புரிந்தும் புரியாதது போலிருந்தது. இப்போது என்ன சொல்கிறான் எனக்கும் அவனுக்குமே உறவில்லை என்கிறானா? திருமணம் அன்று என்னோடு மட்டும் வாழ்வதென்றால் வா என்றானே! எனக் குழம்பினாள்.
அவள் முகபாவனையில் தெரிய, “இது ஏன் எங்கிட்ட சொல்லலை?” என்றான் மீண்டும் விசாரணையாக. 
“நீங்க மட்டும் எல்லாம் சொல்லுறீங்களாக்கும்?” 
“என்ன நான் சொல்லலை? என்னைப்பத்தி உனக்குத் தெரியாது என்ன இருக்கு?” 
“உங்க மனசு..!”
பட்டென்று பதில் பேசுபவன் மௌனமானான். 
“உங்க மனசு, அதுல இருக்கிற குற்றவுணர்வு” 
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால உங்க அப்பாவுக்குத் துரோகம் பண்ணிட்டதா நினைக்கிறீங்க தானே?” 
கதிர் பதில் பேச முடியாது மௌனமானான். மறுக்க முடியாத உண்மை தான், எத்தனையோ முறை அவள் கேட்டும் சொல்லவில்லை. ஆனாலும் அவள் அறிந்து கொண்டாள். 
முகம் மாறியவன், “இது பத்தி எதுக்கு இப்போ பேசுற?” என்றான் கடினமான குரலில். 
அவளை வருந்தச் செய்யும் விஷயம் அவனுக்கும் வருத்தம் தானே! 
“இல்லை பேசணும், இப்போ பேசியே ஆகணும். இந்த வீட்டுல நான் யாரு? சொல்லுங்க” 
குரலில் ஒரு அழுத்தம், பிடிவாதம். கதிர் முகம் சுணங்க, அவள் பார்வையில் உஷ்ணம் கூடியது. 
சலிப்போடு, “இதென்ன கேள்வி? இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி, என் வீட்டுக்காரி” என்றான் ஸ்திரமாக. 
மறுப்பாகத் தலையசைத்தவள், “இல்லை யாருமே அப்படி நடத்தலை, நீங்கச் சொன்ன ஒரு வார்த்தைக்கு நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன். அப்படி விட்டுட்டு வந்தும் யாரும் என்னை இந்த வீட்டுப் பொண்ணா பார்க்கலை, இன்னும் நாராயணன் பேத்தியா தான் பார்க்குறீங்க” என்றாள் தொண்டை அடைக்க. 
அவனைக் குற்றம் சொல்வது போல் தனவதியையும் சேர்த்தே சொல்லி விட்டாள். 
மனம் சோர்ந்த கதிர், “அப்படியெல்லாம் இல்லை வது, நீயா எடுத்துக் கூட்டிப் பேசாத?” என்றான். 
அவளுக்கு ஆத்திரம் அதிகமானது, “என்ன இல்லாததை பேசிட்டேன்? உங்க மனசுல தப்புப் பண்ணிட்டோமோன்னு குற்றவுணர்ச்சி இருக்கு தானே? அதனால தானே என்னை வெளியே எங்ககையும் கூட்டிட்டு போக மாட்டேங்கிறீங்க. மில்லுக்கு வந்த போது கூட கோபப்பட்டீங்க. என்னை உங்க மனைவின்னு  வெளியே சொல்லிக்கிட்டுறதுல அப்படி என்ன உங்களுக்கு கௌரவ குறைச்சல்?” என பெரும் குரலில் கத்தினாள். 
நெற்றியில் கை வைத்து விட்டான் கதிர், தலை வலிக்கத் தொடங்கியிருந்தது, அவள் அதீத குரல், வலியை மேலும் அதிகப்படுத்தி இருந்தது. 
குரலின் அதிர்வு கீழே கேட்க, இருவருக்குள்ளும் பிரச்சனை என்ற குதூகலிப்பிலிருந்தார் தனவதி. 
பல்லைக் கடித்த கதிர், “விடு எல்லாம் நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும்” என்றான் இறுதியாக. 
ஆனால் அவள் விடுவதாயில்லை, “சரியாகிடுமா? எப்படி? ஐம்பது வயசுக்கு மேல அதுவே பழகிடும்பாங்களே அப்படியா?” என்றாள் முகம் சிலுப்பியபடி. 
கதிரின் பொறுமை குலைந்தது, கோபம் எல்லை தொட்டது. முகத்தில் கடுமை கூடியது. 
அவள் எதையும் கவனிக்காது, “நானும் சரியாகிடும்னு இத்தனை நாள் பொறுமையா தான் இருந்தேன், பொறுத்துத் தான் போனேன். ஆனால் எனக்கு இந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இப்போ இல்லை. உங்க வீட்டுல நடக்குற நல்லது கெட்டது எதுலையும் நான் இல்லை. உங்க வீட்டுல இருந்த போதும் உங்களோடு நானில்லை” என தன் மனக்குமுறலை எல்லாம் கொட்டி விட்டாள். 
அவள் கொட்டிவிட, அவன் வெடித்தே விட்டான். 
தேகமும் முகமும் இறுக, “ச்சே, இதுக்கு தான் வேண்டாம் வேண்டாம்னு விலகிப் போனேன், நீயும் விடலை, வீதியும் விடலை” என்றான் எரிச்சலாக. 
“சோ.. என்னை வேண்டாம்னு தான் விட்டுட்டு வந்திருக்க? நான் தான் திரும்ப உங்கிட்ட வந்திருக்கேன்” என கேட்டவள், உள்ளுக்குள் உடைந்தே போனாள். 
ஏற்கனவே விளக்கம் கொடுத்த ஒன்றை அவள் மீண்டும் சொல்லிக் காட்ட, நொந்து போனான் கதிர். வலியோடு நெற்றியோரம் தேய்த்துக் கொண்டிருந்தவன், “ச்சே… தப்புப் பண்ணிட்டேன்” என்றான் மெல்லிய குரலில் புலம்பலாக. 
அவளுக்காக சொல்லவில்லை. ஆனாலும் அவள் கேட்டு விட்டாள். அவளை விட்டு வந்ததையே அவன் குறிப்பிட, அவளோ தன்னை திருமணம் செய்தது தான் தவறு எனப் புலம்புவதாக அர்த்தப்படுத்திக் கொண்டாள். 
கொதித்துக் கொண்டிருந்தவள் மேலும் கொதிப்போடு, “என்ன சொன்ன? சரிய கேட்கலை, சொல்லு?” என வந்தாள். 
அவனும் கட்டுப்போடு, “இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்லு..” என்றான். 
அவளோ நில்லாது விலகிச் சென்று தன் கைப்பையை எடுத்துக்கொண்டு, “நீ எதுவும் செய்ய வேண்டாம். எப்போ நம்ம கல்யாணத்தை மனசார ஏத்துக்கிறியோ அப்போ நாம வாழலாம்” என முன் வந்தவள், “இல்லையில்லை, அப்போ நாமா வாழ்க்கையைப் பத்தி பேசலாம்” என நில்லாது சென்றுவிட்டாள். 
சந்திரா கைப்பையோடு விறுவிறுவென வர, கவனித்துவிட்ட தனவதி அவள் பார்க்கும் முன் அறைக்குள் சென்று மறைந்து கொண்டார். 
கதிர் வார்த்தைக்குக் கூட அவளைத் தடுக்கவில்லை, வீதி வரை கூட எட்டிப் பார்க்கவில்லை. தடுப்பவர் யாருமில்லாததால் வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள் சந்திரவதனி.

Advertisement