Advertisement

பைங்கிளி பார்வையில்
அத்தியாயம் 14
பகல் பொழுதில் பண்ணையையும் நெல் வயல்களையும் கவனித்துவிட்டு வந்த சேர்மமூர்த்தி, வீட்டில் தளர்வாக அமர்ந்திருந்தார். அப்போது தான் கார் ஒன்று வந்து நிற்க, நெற்றி, கைகளில் கட்டுக்களோடு, முகத்தில் சற்றே வடிந்த இரத்தக்காயங்களோடு இறங்கி வந்தான் அரவிந்தன். 
நிமிர்ந்து பார்த்தவர், “வாலே மாப்பிள்ளை..” என்றழைக்க, சற்றே தாங்கி நடந்து வந்தவன், அவர் முன்னிருக்கும் இருக்கையில் அமர்ந்தான். 
ஒரு வார்த்தைக்குக் கூட அவனிடம் நலம் விசாரிப்பில்லை, உள்ளிருக்கும் மனைவியை அழைத்து விட்டு செய்தித்தாளில் மீண்டும் பார்வையை வைத்துக் கொண்டார். 
அந்த உதாசீனத்தைக் கவனித்த அரவிந்தன், “சாரி மாமா, எனக்கு நடந்த விபத்தால் உங்க திட்டமெல்லாம் வீணாப்போச்சு” என்றான் வருத்தமாக. 
அரவிந்தன் காணாமல் போன இரு தினங்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது, குடும்பத்தார் அனைவரும் சென்று விசாரிக்க, திருமணத்திற்கு வந்த நண்பனை அழைக்கச் சென்றதாகவும் அதில் தனது கார் விபத்தானதாகவும் அரவிந்தன் தெரிவித்தான். 
அவன் பதிலில் மீண்டும் நிமிர்ந்தவர், நம்ம இயலாத ஒரு பார்வையோடு, “ஏன் மாப்பிள்ளை உண்மையிலே உனக்கு நடந்தது ஆக்ஸிடன்ட் தானா? ஏன் கேட்குறேன்னா முகத்துல பாரு, ஊமைக் காயமும் வீக்கமும் தானிருக்கு, சிராய்ப்பு இல்லையே அப்புறம் கையிலையும் இரத்தகாயமில்லாமல மாவுக்கட்டுப் போடுற அளவுக்கு எலும்பு தாலே முறிஞ்சி இருக்கு” என்றார் பட்டென. 
இத்தனை ஆராய்ச்சியாக கேட்க, அரவிந்தனுக்குப் பதில் சொல்ல இயலாது தொண்டை அடைந்தது. அதையும் விட எப்போதும் தட்டிக்கொடுத்து உயர்த்திவிடும் உத்வேகத்தில், அக்கறையில் பேசுபவரின் தொனியே இன்று வெறுப்பாக இருக்க, சரியாக அவனும் புரிந்து கொண்டான். 
நடந்ததை அவனுக்கு அவமானமாக நினைத்தவன் அதை வெளியில் சொல்ல இயலாது மறைத்திருந்தான். 
“அதை விடுங்க மாமா, நான் தான் இல்லையே அப்போ நீங்க கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் இல்லை, ஏன் வேற ஏதாவது செய்து இருக்காலாம் அதை விட்டுட்டு சந்திராவுக்குக் கதிரோடு கல்யாணம் நடக்க விட்டுட்டீங்களே” என்றான் ஆதங்கமாக.
“ஆமாம்டா நீ சொல்லிக்காம ஓடிப்போவ, உங்க அப்பன் தொழிலுக்கு அந்த பிள்ளையோட நிலம் வேணும், உங்க தேவைக்கு நான் போய் தென்னரசை எதிர்த்துப் பேசணுமா? அவரை பகைச்சிக்கிட்டா என் அரசியல் வாழ்க்கை என்னாகுறது?” 
சுருக்கென்று கேட்க, அரவிந்தனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது, தந்தையோடு சேர்ந்தே தான் இவரும் திட்டமிட்டனர், அதில் சிறு சறுக்கல் என்றதும் தங்களை யாரோ போல் பேசுகிறாரே என்றிருந்தது. 
“சரி மாமா, நடந்ததை விடும், இனி நடக்கிறதைப் பேசுவோம்.. என்ன செய்யலாம் சொல்லுங்க” 
அப்போதும் விடாது அரவிந்தன் இறங்கி வந்து சமாதானம் பேசினான். ஆனாலும் சேரம்மூர்த்தி முகத்தில் ஒரு பிடித்தமின்மையும் வெறுப்பு உணர்வும் அப்பட்டமாக வெளிப்பட்டது. 
“எப்பா, இனி நீ எதுவும் செய்ய வேண்டாம், நீ அமைதியா இருந்தாலே போதும். அந்த பிள்ளையை கட்டுனா பொண்ணுக்கு பொண்ணுமாச்சி பொருளும் நிலமுமாச்சின்னு நினைச்சி தான் நானே போய் சம்மந்தம் பேசுனேன். ஆனாலும் என் ஆசையில நல்லா மண்ணள்ளிப் போட்டுட்டியே! குடியைக் கெடுக்க வெளியில இருந்தெல்லாம் ஆள் வரவேண்டாம் கூட இருக்கிற நீயே போதும்டே போ, வேண்டாம்டா ராசா, இனி நானே அதை பார்த்துக்கிறேன். நீ தலையிடாம இருந்தால் போதும்” 
உறவென்றும் பாராது, நேரடியாகவே அவனைத் தள்ளி நிற்கும் படி உரைத்தவர், ஒரு வெறுப்பான பார்வையோடு எழுந்து உள்ளே சென்றார். அரவிந்தன் முகம் கருக்க, வெம்பி வேதனையுற்றான். 
சேர்மமூர்த்தி உள்ளே செல்ல, சரியாக எதிரே வந்த அம்சவேணி, “ஏங்க தம்பி வந்திருக்கான்ல, நம்ம மாரியை விட்டு ஆட்டுக்கறியும், மீனும் வாங்கி வரச் சொல்லுங்க. மதியத்துக்குச் சாப்பிட்டுப் போட்டும்” என்றவர் இடை மறித்துக் கேட்டார். 
தன் திட்டமெல்லாம் தோல்வியுற்ற கொதிப்பிலிருந்தார் சேர்மமூர்த்தி. அதில் அரவிந்தனைப் பார்த்ததிலிருந்தே எரிச்சல் அதிகமாகியிருக்க, எது எதுவும் புரியாது மனைவி இடையில் வர, “இரண்டு பேரும் மூனு வேளையும் மூக்கு பிடிக்கத் திங்கத் தான் ஆவிங்க, உன் தம்பிக்கு சமைச்சிப் போட்டுக் கொஞ்சிக்கிட்டு இருக்கணும்னா நீயும் அவனோடையே உங்க அப்பன் வீட்டுக்குப் போ” எனக் கத்தி விட்டுச் சென்றார். 
அம்சவேணி ஏதுவும் புரியாது நிற்க, அனைத்தையும் கேட்டிவிட்டான் அரவிந்தன். பெரும் அவமானமாக உணர்ந்தவன் அக்காளிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் சென்று விட்டான். 
நண்பகலை நெருங்கும் நேரம் கதிரின் ஆலைக்கு வந்தார் தனவதி. பெரிய ஆலை என்று தெரியுமே தவிர, அவனின் வரவு, செலவு பற்றி சிறிதும் தெரியாது. முடக்கும் படியான நஷ்டமில்லை ஆகையால் லாபமுண்டு என்பது மட்டுமே அவர் யூகம். 
கதிரும் சொல்லக் கூடாது என்றில்லை. ஆரம்பத்தில் கஷ்டப்படும் போது இவ்வளவு கஷ்டமென வீட்டில் அவன் சொல்லவில்லை. அது தான் நன்கு வளர்ந்த பின்னும் வீட்டில் தொழில் பற்றிப் பேசிக்கொள்ளும் பழக்கமற்றுப் போனது. 
வந்தவரை வரவேற்றவன், “வாங்கச் சின்னம்மா, என்ன இவ்வளவு தூரம்?” என்றான். 
“மனசே சரியில்லைன்னு ஜோதிடரைப் பார்க்க வந்தேன். சந்திராவுக்கு உனக்கும் பொருத்தம் இருக்கு, இனி உனக்கு முன்னேற்றமும் நல்ல நேரமும் தான்னு சொன்னாரு. இப்போ தான் எனக்கும் நிம்மதி” என்றார் நிம்மதியாக. 
அதைக் கவனித்திருந்த கருப்பட்டி, “இது எதுக்கு அவர்கிட்ட கேட்டுட்டு, அந்த ஐநூறு ரூபாயை எங்கிட்ட கொடுத்திருந்தா நானே சொல்லியிருப்பேன்ல” என்றான்.
சிரித்த தனவதி, “ஜோசியம் சொல்லப்போறீயா! ஏன்டே உனக்கு இங்க வேலை வேண்டாமா?” என்க, “க்கூம், உங்க பிள்ளையோட சேர்ந்ததுக் காவி வேட்டி மட்டும் தான் கட்டலை மத்தபடி சம்மியாராவும், சந்நியாசிவும் தான் சுத்துத்தேன்” என நொடிந்து கொண்டான். 
தனவதி சிரிக்க, கதிர் முறைக்க, “இவரு மட்டும் கல்யாணம் செய்துக்கலாம், நான் மட்டும் கன்னிபயலா இருக்கணுமாம். கண்ணே மணியேன்னு ஒன்னே ஒன்னுன்னு இருந்த காதலுக்கும் சமாதியை கட்டிப்புட்டார்” என்ற முனங்கலோடு ஓடி விட்டான். 
கதிரின் முகம் பார்த்தவர், “சரியையா, மினி பஸ் வந்திடும், நான் கிளம்புறேன்” என்க, “இருங்க சின்னம்மா, சாப்பாட்டு நேரம் தானே, நானும் வீட்டுக்கு வாரேன். வாங்கப் போவோம்” என்றவன் உடன் அழைத்து வந்தான். வரும் வழியில் ரேவதி பேசினாளா? நலமோடு உள்ளாளா? என தனவதியிடம் விசாரித்தபடி வந்தான். 
அரவிந்தனுக்கு பெரும் அவமானமாக இருந்தது. விரும்பியதையும் இழந்து, உறவுகளுக்குள் மரியாதையைத் தொலைத்து, வெகுவாக கீழிறங்கிப் போனதாக உணர்ந்தான். மனம் அறவே இல்லை, ஆற்றாமையில் விம்பிய நெஞ்சோடு சொல்லிக் கொள்ளாமல் உடனே கிளம்பி விட்டான். 
ஊரின் மையப்பகுதியை அடைந்திருக்க, சரியாக எதிரே நடந்து வந்து கொண்டிருந்தாள் சந்திரா. ஓட்டுநரிடம் தெரிவித்து காரை ஒரு ஓரம் நிறுத்திய அரவிந்தன் இறங்கிச் சென்றான். இருந்த எரிச்சலில் சரியாக அவளைக் கண்டுவிட, தன்னுடைய இந்நிலைக்கு அவள் தான் மொத்த காரணமெனக்  குற்றம் சுமத்தினான். 
அவன் எதிரே வருகையிலே கவனித்து விட்ட சந்திரா, கண்டுகொள்ளாமல் விலகிச் செல்ல முயல, அவனோ கை நீட்டி வலி மறித்தான். 
கடுகடுத்த முகத்தோடு சந்திரா நிமிர்ந்து பார்க்க, “என்ன புதுப்பொண்ணு சந்தோஷமா இருக்கியா?” என்றான் எள்ளலாக.
அவள் பதில் சொல்லும் முன், “சந்தோஷத்துக்கு என்ன குறை இருக்கப் போகுது? அதான் நினைச்ச மாதிரியே கதிரை கல்யாணம் பண்ணிட்டியே!” என்றான். 
“ஆமாம், அதான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்” என்றாள் அவளும் விடாது. 
அவள் பதிலில் முகம் கடுகடுத்தவன், “ஆனால் உன்னோட சந்தோஷத்தை என்னால சகிச்சிக்க முடியலை. கண்டிப்பாக இந்த சந்தோஷத்தை நிலைக்க விட மாட்டேன்” என்றான் குரலில் வன்மம் உயர. 
இதழ் சுளித்தவள், “ஆமாலே, நான் இளவோட சந்தோஷமா இருக்கேன். என்னலே செய்ய முடியும் உன்னால?” என்றாள் தைரியமாக. 
ஆனால் இப்போதும் கதிரை எதுவும் செய்திடுவானோ என்ற பதைபதைப்பு இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 
அவளிடம் சிறிதளவாவது பயத்தைப் பார்த்திருந்தால் அவன் உள்ளம் ஆறி இருக்கும். ஆனால் அவளோ பயமின்றி தைரியமோடு பேச, அவளைத் தாக்கிவிடும் வெறி அதிகமாகியது. 
அரவிந்தன் முகம் கருக்க, “என்னம்மா அதுக்குள்ள மறந்துட்டியா? என்னோட நிச்சியம் முடிச்சி மணமேடை வரைக்கும் வந்தவளே, அந்த பங்க்ஷன் போட்டோஸ் எல்லாம் எங்கிட்ட தான் இருக்கு, வெறும் போட்டோஸ் தானேன்னு நினைக்காத அதை வைச்சி என்ன என்னாலம் செய்யலாம் தெரியமா? எப்படி வேணாலும் செய்யலாம்” என்றான். கொஞ்சமாவது அவளைப் பயமுறுத்திவிடும் அவா.
அவளோ சிறிதும் அசராது, கைகளைக் குறுக்காகக் கட்டியபடி, “ஏன்? உன் போட்டோஸ் எல்லாம் எனக்குக் கிடைக்காதா? தெரியும்ல அனிமேஷன் படிச்சவ, உன்னை விட நல்லாவே எடிட் பண்ணுவேன். செஞ்சு காட்டுமா? என்னலே?” என்றாள் புருவம் உயர்த்தி. 
சரியாக தனவதியோடு பைக்கில் வந்து கொண்டிருந்தான் கதிர். அதிலும் அத்தெருவிற்குள் நுழைகையிலே சிறு தொலைவில் பக்கவாட்டில்  அரவிந்தனும் சந்திராவும் நின்று பேசுவதைக் கவனித்து விட்டார் தனவதி. 
“ஏய்யா, செத்த வண்டியை நிறுத்தும்” எனக் குரல் கொடுக்க, பதட்டத்தோடு வண்டியை நிறுத்திய கதிர், “என்ன சின்னம்மா?” என்றான் பதைபதைப்பாக. 
மெல்லிய குரலில் சந்தேகம் போலே, “அது.. அந்த புள்ளை நம்ம சந்திரா மாதிரில இருக்கு. நான் கிளம்பும் போது வீட்டுலல இருந்தாள். இப்போ இங்க என்ன செய்ற? ஒருவேளை என் கண்ணுக்குத் தான் அப்படித் தெரியுதா?” என்றார். 
சட்டெனக் கதிரும் அத்திசையில் பார்க்க, “ஆமாம், கூட நிக்குத அந்த பையன் யாரு? சொந்தக்காரனா? சிநேகிதனா? எதுக்கு இங்கன நிக்க வைச்சு பேசுதா? வீட்டுக்கு கூட்டிட்டி வரலாம்ல?” என்றார் குழப்பம் போலே. 
இங்கே சந்திராவின் கேள்வியில் சர்வமும் நடுநடுங்க அதிர்ந்தே விட்டான் அரவிந்தன். அந்த சின்ன தடுமாற்றத்தையும் கண்டுகொண்டவள், “ஏன்? கற்பு, அவமானம் எல்லாம் பெண்ணுக்களுக்கு மட்டும் தானா? உங்களுக்கு இல்லையா? பதில் சொல்லுலே, சரி சொல்ல மாட்டே நானே செக் பண்ணி பார்த்துக்கிடுதேன்” என்றாள் நிதானமாக.
கற்பனையிலே தாங்காது அதிர்ந்தவன் மேலும் குரல் உயர, “ஏய்..” எனக் கத்த, “என்ன சவுண்ட்? முன்னொரு தடவை எங்கிட்ட இப்படிப் பேசுனதுக்கு கடவுள் கொடுத்த தண்டனையா தான் கையில கட்டோட அழையிற, பட்டும் திருந்தலையா நீ? என்ன ஜென்மம்லே?” என்றாள் வெறுப்போடு.  
“நீயும் இன்னும் திருந்தலைல இந்த தெனவெட்டுக்கு நீ இன்னும் அனுபவிப்ப..!” என்றவன் சவால்விட்டு வாகனம் நோக்கிக் கிளம்ப, “முடித்ததைச் செய் நானும் பார்க்குறேன்” என அவளும் நின்ற இடத்திலிருந்து உரைத்தாள். 
மனதினோரம் ஒரு நிம்மதி தன் மீது தான் அவன் பார்வையே தவிர, கதிர் மீதில்லை என்பதில். 
கதிர் பதிலின்றி அவர்களை வெறிக்க, தனவதியோ, “நீ வீட்டுக்குப் போ, நான் போய் அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன்” என்றவர் அவர்களை நோக்கி நகர, தடுத்தான் கதிர். 
தனவதியின் குழப்பத்திற்குப் பதிலாய், “அது அரவிந்தன் சின்னம்மா, சந்திராவுக்கு முதல்ல நிச்சியம் பண்ண மாப்பிள்ளை” என்றான். 
“ஹோ..” என்றவரின் குரலே உள் சென்றது. 
தொலைவில் இருப்பவர்கள் பேசுவதை இவர்களால் கேட்க இயலவில்லை. 
ஒரு நொடி மௌனத்திற்குப் பின், “என்ன இருந்தாலும் உங்க கல்யாணம் திடீரென்னு நடந்தது தானே, அவங்க நிச்சியமானதுல இருந்து எவ்வளவு எதிர்பார்ப்போடு இருந்திருப்பாங்க. என்ன இருந்தாலும் உண்மையை ஏத்துக்க கொஞ்சம் அவளுக்கும் அவகாசம் வேணும். நீ பொறுமையா போ ராசா..” என்றார். 
கதிரின் முகமே சிவந்தது, “நீங்க வீட்டுக்குப் போங்க சின்னம்மா, நான் வரேன்” என்றான். 
ஒரு தெரு என்றிருக்க, அவரோ சரியெனத் தலையாட்டிவிட்டு நடக்கத் தொடங்கினார், தனவதி. நல்லது சொல்வது போல் சொன்னாலும் அதில் யாருக்கு நல்லது என்பது குறிப்பிட வேண்டியது. 

Advertisement