Advertisement

சந்திரவதனி இதை நன்கு கவனித்திருந்தாள். இருந்தும் இவ்வெண்ணம் கதிரின் மனதில் எவ்வளவு ஆழம் பதிந்துள்ளது என்பதை அவள் அறிய முயல, அவன் ஒத்துழைக்காது நழுவியிருந்தான்.
குலசேகரனின் இழப்பு ஒரு எதிர்பாராத இழப்பு தான் எனினும் அதற்கு முழு முதற்காரணம் என அவள் குடும்பத்தைச் சொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கதிரிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனினும் மனதில் அவளுக்குச் சிறு உறுத்தல் இருக்கவே செய்தது. தூய பாலில் துளி விஷம் சிதறியது போல் அவர்கள் உயர்வான காதலில் இத்திருமணம் ஒரு குற்றமோ என்னும் படியான அவன் குற்றவுணர்வு அவளுக்கு வலியை கொடுத்தது.
வழக்கம் போலே சந்திரவதனி எழுந்து வரும் முன் கதிர் அரிசி ஆலைக்குச் சென்றிருந்தான். தனவதியும் நெற்றி நிறைய விபூதியோடு வெள்ளை புடைவையில் சுற்றியவர் வீடு முழுவதையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். மதிய உணவு சமைக்காது அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, “நான் எதுவும் உதவி செய்யட்டுமா?” என இடையில் சென்று கேட்டாள். 
நிமிர்ந்து பார்த்தவர் பதிலேதும் சொல்லவில்லை. எப்போதும் அவளை ஒதுக்கி வைப்பதும் விருந்தினர், அன்னியர் போன்றே நடத்துவதால் அவளிடம் எதுவும் வேலைகள் சொல்வதில்லை. தன் வீடு, தன் மகன், தன் ராஜ்ஜியம் என்றே தான் எப்போதும் அவர் செயல்கள் இருக்கும். 
உதாசீனம் எனப் புரிந்த போதும் சந்திரா மேலும் பொறுமையாக, “இல்லை கொஞ்ச நேரத்துல கருப்பட்டி சாப்பாடு வாங்க வந்திடுவானே, நீங்க இன்னும் சமைக்காம இருக்கீங்களே அதான் கேட்டேன்” என்றாள். 
“உன் புருஷனுக்குத் தானே? நீ வேணா சமைச்சி வை..!” என முகம் திருப்பாது பதில் உரைத்தவர் அவர் வேலையிலே கவனமாக இருந்தார். அக்கறையாக உரைத்தாரோ இல்லை குத்திக்காட்டினாரோ ஆராயும் அவகாசம் அவளிற்கு இல்லை. 
சந்திரவதனிக்குச் சமையல் தெரியாது, அவள் வீட்டிலிருந்த வரைக்கும் அம்மா, பாட்டி, அண்ணி என அனைவரும் அருமையாகச் சமைத்து தர, ரசித்து உண்டவளுக்கு அதை கற்றுக் கொள்ள வேண்டுமென்று தோன்றியதில்லை. அதனாலே இன்று தனவதியிடம் வந்து நின்றிருந்தாள். 
அவர் மறுத்ததில் அவளுக்கு ஒரு வீம்பும் வீராப்பும் கூடிவிட, அலைபேசியை கையில் எடுத்தவள் இணைய வீடியோக்களின் உதவியோடு சமைக்கத் தொடங்கினாள். ஒரு மணி நேரத்தில் தட்டுத்தடுமாறி சிக்கன் பிரியாணியும், பிஸ் ப்ரையும் செய்து முடித்து ருசி பார்த்தவளுக்கு ஒரு உற்சாக சந்தோஷம்! பரவாயில்லையே சந்திரா, ஆச்சி கை பக்குவம் உன் கைக்குள்ளேயும் ஒளிச்சி இருக்கு என அவளுக்கு அவளே ஒரு பாராட்டுரை வாசித்தபடி எதிர் வீட்டிலிருக்கும் அவள் வண்டியை எடுத்துக் கொண்டு ஆலைக்குக் கிளம்பினாள். 
சந்திரா வருவதைக் கதிர் அறியாது அவன் வேலையில் இருக்க, ஆலைக்குள் நுழைத்ததும் மரத்தடியில் வண்டியை நிறுத்திவிட்டு உணவுக் கூடையோடு இறங்க, அருகே கேட்ட பாடலில் திரும்பிப் பார்த்தாள்.
“வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க… ம்கூகுகுகு.. ம்ம்..” என்ற பாடல், அருகே நின்று கொண்டிருந்த டாடா ஏசி வாகனத்தில் கேட்டது. அதன் ஓட்டுநர் இருக்கையில் சாய்வாக படுத்தவாக்கில் முகத்தில் சோகம் சொட்டக் கிடந்தான் கருப்பட்டி. 
அருகே வந்த சந்திரா, “ஏலே எதுக்குலே இந்த அழுகை?” என்க, அவள் குரலில் நிமிர்ந்து பார்த்தவன், “அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே..” எனப் பாட, சிரித்தே விட்டாள் சந்திரா. 
“ஏம்மதினி ஒருத்தேன் செட்டிமென்டா அழுதா உனக்குச் சிரிப்பா இருக்கா?” எனக் கோபமாகக் கேட்க, மேலும் சிரித்தவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “சரி சொல்லு, அந்த பறந்து போன பச்சைக்கிளி யாருலே?” என்றாள் விசாரணையாக. 
“ரோசா.. இவ்வளவு பெரிய மில்லுல ஒரே ஒரு ஒத்த ரோசா, நான் ஊருக்குப் போன ஹேப்ல சுப்ரர்வைசர் சுப்பிரமணிய கட்டிக்கிட்டு போயிட்டா..” என கேவியவன் நெஞ்சில் கை வைத்து மீண்டும் கண்ணில் கண்ணீர் வடித்தான். 
“அதுக்கு எதுக்குலே நீ அழுதுகிட்டு இருக்க?” என்றவள் ஆறுதலாகக் கேட்க, “எல்லாம் உம்ம புருஷனால தான் அவளுக்குக் கல்யாணம் செஞ்சி வைச்சதே அவர் தான், அவருக்கு அப்ரண்டீஸா சேர்ந்த பாவத்துக்கு தண்ணியடிச்சு தாடி வளர்த்துக் கூட காதல் தோல்வியைக் கொண்டாட முடியலை” என்றவன் கத்திவிட்டு முகத்தில் ஒரு துண்டைப் போட்டு மூடியபடி மீண்டும் சரிவாகப் படுத்தான். 
“சரி சரி, நீ சோகப் பாட்டுக் கேட்டுகிட்டு ஒத்தையிலே பீல் பண்ணிட்டுகிடலே..” என்றபடியே அவள் நடந்து சென்றிருந்தாள்.
அவள் செல்லவுமே அவ்விடத்தில் பிரியாணியின் வாசம் உணர்ந்தவன் மீண்டும் மூச்சிழுத்து வாசம் பிடித்தான். அஹா! மதினி சந்திரவதனி இல்லை சமையல் சக்கரவதனி என வாசத்திற்கே வசனம் வடித்தான். பீலிங்கா இல்லை பிரியாணியா ஒரு நொடி யோசித்தவன் பிரியாணியை ஒரு கட்டுக் கட்டிவிட்டு வந்து மீதி சோகத்தைப் பிழியலாம் எனத் தோள்களை குலுக்கியபடி இறங்கி ஓடினான். 
சந்திரா அலுவலக அறைக்குள் செல்ல, கதிர் அங்கில்லை. மில்லிற்குள் சென்றிருப்பான் போலும் என நினைத்தவள் மேசையில் உணவு கூடையை வைத்தாள். மேசையில் இருக்கும் கோப்புகளை ஒதுங்கு வைக்க, ஒரு புகைப்படம் ஒன்று கீழே விழ, எடுத்துப் பார்த்தாள். பன்னிரண்டு வயது சிறுவனாக ஊர்த்திருவிழாவில் விளையாட்டுப் போட்டியில் வென்று அவன் பரிசு வாங்கியிருந்தான். பரிசோடு மகனையும் தோளில் தூக்கி வைத்தபடி சிரித்த முகமாக நின்றிருந்தார் கதிரின் தந்தை குலசேகரன். 
ஒரு நொடி விழி விரியப் பார்த்தவள் அனைத்தையும் பத்திரப்படுத்தி ஒதுக்கி வைத்துவிட்டு, மேசையில் இலையை விரித்துக் கொண்டுவந்திருந்த உணவையும் எடுத்து வைத்திருந்தாள். அய்யனாருக்குப் படையல் இடுவது போல் பெரிய இலையில் அத்தனையும் அவள் பரப்பி வைத்துக் கொண்டிருக்க, சரியாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் இளங்கதிர். 
அந்த சத்தத்தில் திரும்பியவள், “வாங்க வாங்க, இன்னைக்கு நானே சமைச்சி எடுத்துட்டு வந்தேன் ருசி பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க” எனத் துள்ளலாக அவனருகே வந்து அவனைப் பேச விடாது இழுத்து வந்தாள். 
“ஆல்ரெடி நான் ருசி பார்த்துட்டேன் எல்லாம் சரியா தான் இருக்கு, கொஞ்சம் காரம் மட்டும் கூடிடுச்சு, நீங்க காரம் சாப்பிடுவீங்கல்ல?” என்றபடி அவனை இருக்கையில் அமர்த்தியவள், “அதெல்லாம் நல்லாவே சாப்பிடுவீங்க” என அவளே பதிலும் சொல்லிக் கொண்டு பெரியதொரு தண்ணீர் பாட்டிலையும் மேசையின் மீது வைத்திருந்தாள். 
எதையோ சாதித்த பரவசத்தில் இருந்தவள் அவனைச் சிறிதும் ஆராயாது விட்டுவிட்டாள். அமர்ந்தவனின் பார்வை அருகே பிளாஸ்டிக் நாற்காலியில் கிடக்கும் தந்தையின் புகைப்படத்தைக் காண முகமும் உடலும் இறுகினான். 
“சாப்பிட்டுங்க..” என முடுக்கியவள் அவன் பார்வையையும் கவனிக்காது, “ஹோ ஹேன்ட் வாஸ் பண்ணலையா?” என்ற கேள்வியோடு அவன் பதில் சொல்லும் முன் ஒரு பிடி உணவை விரல்களில் அள்ளியிருந்தாள். 
அவனுக்கு ஊட்டிவிடும் எண்ணத்தில் அவள் கையை உயர்த்தியிருக்க, சரியாக அதே நேரம் அவள் புறம் திரும்பியவன் மறுப்பாய் கை அசைக்க, அவள் அடமாக ஊட்ட முயல, ஒரு வேகத்தில் தட்டி விட்டிருந்தான். அவன் தட்டிய வேகத்தில் அவள் கைப்பட்டு தண்ணீர் பாட்டிலோடு குழம்பும் கொட்டிவிட, நொடியில் அவ்விடம் அலங்கோலமானது. 
நொடியில் நிகழ்ந்ததைக் கண்டு சந்திரா அதிர்ந்து நிற்க, உச்ச கோபத்தில் எழுந்த கதிர், “இதென்ன விளையாட்டு அறிவில்ல உனக்கு? உன்னை யாரு இதெல்லாம் இங்க எடுத்துட்டு வரச் சொன்னா? இனி ஒரு நிமிஷம் கூட என் கண்ணு முன்னால நிக்காத, போ முதல்ல இங்கிருந்து” என அடிக்குரலில் கர்ஜித்தான். 
தவறு செய்யாது தண்டிக்கப்பட்ட குழந்தையின் மனநிலையில் விழி நிறைந்த நீரோடோ புரியாது பார்த்திருந்தவள் கடைசியாக அவன் அதட்டலில் அரண்டு உடல் நடுங்கினாள். உண்மையாக முதல் முறையாக அவன் கோபத்தை இன்று தான் பார்க்கிறாள். முன்பு கூட தவிர்த்திருக்கிறான் தான் ஆனாலும் கோபத்தைத் தீயாய் கொட்டியதில்லை. 
அவ்வளவு தான் மனமுடைந்தவள் மறுநொடியே விறுவிறுவென வெளியேறி சென்றிருக்க, கண்களை இறுக மூடி பிடரியைக் கோதிக் கொண்டான் கதிர். பின் வேலையாளை அழைத்து சுத்தம் செய்யுமாறு உரைக்க, அப்போது தான் கதிரின் அறையை நோக்கி வந்து கொண்டிருந்த கருப்பட்டி, “முஸ்தப்பா முஸ்தப்பா எங்கப்பா பிரியாணி டாப்பா..” என ராகமிழுத்தபடியே உள்ளே வந்தான். 
எதிர்பார்ப்பில் வந்தவனுக்கு அவ்விடத்தைக் காண பெரும் ஏமாற்றம்! தன்னை தாண்டிச் செல்ல இருந்த கதிரை நிறுத்த அவனோ தட்டிவிட்டுச் சென்று வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்தை நோக்கிச் சென்றான். 
அறையை மீண்டும் ஒருமுறை ஏமாற்றமாகப் பார்த்த கருப்பட்டி, “சரி நமக்கு இது தான் மிச்சம்!” என மீண்டும் ஒரு முறை அவ்விடத்தில் வாசம் பிடித்துவிட்டுச் சென்றான். 
நூறாய் நொறுங்கிய இதயத்தோடு கலங்கியபடி வீட்டிற்குள் வந்த சந்திரா எதிரே வந்த தனவதியையும் கண்டுகொள்ளாது தன்னறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். அழுது ஓய்ந்து அசதியில் உறங்கி விட்டாள். மாலை நேரம் எழுந்தவள் அதன் பின்னே ஏன் கதிர் அவ்வாறு நடந்து கொண்டான் எனத் தெளிவோடு யோசிக்கத் தொடங்கினாள். ஏனென்றே அறியாது போக, தனவதி அறிந்திருப்பார் என்ற உள் மன உந்துதலோடு தன்னை சீர்படுத்திக் கொண்டு கீழே வந்தாள். 
வந்தவளுக்கு கேளாமலே விடை கிடைத்தது. ஹாலில் குலசேகரனின் புகைப்படம் மலர் மாலையிட்டு வைத்திருக்க, சுற்றிலும் பூஜைப் பொருட்களோடு ஐயர் ஒருவர் நின்றிருக்க, தனவதியும் தூய வெள்ளைப்புடவையில் நின்றிருந்தார். கதிரின் தந்தைக்கு நினைவுநாள்! அவன் இன்று துக்கம் அனுசரிப்பான் என்பதைக் கூட அறியாது, தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் என நினைத்தவள் மனம் வெம்பி நின்றாள். தனக்குத் தான் தெரியாது ஆனால் தனவதிக்குத் தெரியும் தானே? வேண்டுமென்றே தன்னை அலைக்கழித்ததும் புரிந்தது. 
அதற்குள் ஐயர் ஏதோ பூஜைப்பொருளைக் கேட்க, சட்டென எடுத்துத் தர முன்னே வந்த சந்திராவை, “நீ தொடாதே..” எனத் தடுத்த தனவதி தானே எடுத்துக் கொடுத்தார். வெம்பிய நெஞ்சிற்குள் வெந்நீரே ஊற்றியது போலே பதறியவள் தானாக பின் நகர்ந்து சற்று தொலைவில் தூணருகே நின்று கொண்டாள். 
பின் வாசலிலிருந்து, மார்பு, புஜங்கள், நெற்றியில் பூசிய விபூதியும், ஈர வேட்டியும் இடையில் கட்டிய துண்டோடும் வந்தான் இளங்கதிர். ஈர உடையோடு முன்னே வந்தமர்ந்தவன் மௌனமோடு ஐயர் உரைத்த காரியங்களைச் செய்தான். அனைத்தும் முடிய, ஐயர் செல்ல, ஆற்றங்கரை சென்று ஸ்தானம் செய்து, கதிரும் தனது கடமைகளை முடித்து வந்தான். 
வீட்டிற்குத் திரும்பி வந்தவன் இரவு உணவையும் தவிர்த்து தரையில் படுத்துவிட்டான். மூச்சுவிடும் சத்தத்தைத் தவிர, ஒரு வார்த்தைப் பேசவில்லை. ஆழ்ந்த அமைதியில் அவனிருக்க, அவளும் தொந்தரவு செய்யாது விட்டுவிட்டாள். 

Advertisement