Advertisement

அத்தியாயம் 13 
சோலை வனத்திலிருந்து ஓர் செடியை வேரோடு பிடுங்கிக் கொள்வதைப் போலே சந்திராவை மட்டும் மொத்தமாக அவள் குடும்பத்திடமிருந்து பறித்துக் கொண்டான் கதிர். அந்த குடும்பத்திலிருந்து வந்த போதும் தற்போது அவள் தன் மனைவி என்பதில் மட்டும் ஓர் உறுதி! இருந்தும் அவளை முழுதாக ஏற்க இயலாது தடுத்தது அவன் மனதிலிருக்கும் குற்றவுணர்வு. தந்தைக்கு நியாயம் செய்யவில்லையோ! என நெஞ்சுக்குள் மறுகினான். 
இருமனதாக அவன் தவித்த போதும் சிறு வார்த்தைகளில் கூட அதை சந்திராவிடம்  வெளிப்படுத்தியதில்லை. தன் குற்றவுணர்விற்கு அவளைப் பலியிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அதனாலே வார்த்தைகளில் கூட அவளைக் காயப்படுத்திவிடாது கவனமாக இருக்க, சந்திராவிற்கு அதில் ஏமாற்றம் தான். 
சந்திரா இன்னும் எழுந்து வந்திருக்கவில்லை, காலை உணவிற்குப் பின் கதிர் கிளம்பும் நேரம் சரியாக உள்ளே வந்தான் கருப்பட்டி. தனவதி எப்போதும் போலே அவனை உணவுண்ண அழைக்க, வேண்டாமென மறுத்தான். 
“எங்கடே ஆளே காங்கலை ஒரு வாரமா?” என தனவதி விசாரிக்க, “அது ஒன்னுமில்லை ஆத்தா, எங்க வீட்டுல ஒரே பஞ்சாயத்து, நான் இருந்து முடிச்சிக் கொடுக்க வேண்டியதா போச்சு” என்றான் சாதாரணமாக. 
பரிதாபம் கொட்டியபடியே தனவதி, “அப்படி என்னலே பிரச்சனை?” என்க, “எங்க அண்ணனுக்கும் மதினிக்கும் பிரச்சனை அது கோச்சிட்டுப் போயிருச்சு. இவனும் கூப்பிட மாட்டேன்னு வீம்பு, எங்க மாமனும் பொண்ணை அனுப்ப மாட்டேன்னு பிடிவாதம், அப்பறம் நான் தான் முன்ன நின்னு பேசி முடிச்சி, மதினியையும் சமாதானம் செஞ்சு கூட்டியாந்தேன். ஒரு வாரமா ஒரே அலைச்சல் தான், என்ன செய்ய? எல்லாத்துக்கும் நான் தான் போக வேண்டியிருக்கு!” என்றவன் பெருமை போலே சட்டையை காலரையும் தூக்கி விட்டுக் கொண்டான். 
வியந்து வாயில் கை வைத்துவிட்ட தனவதி, “நீ எப்போடா இம்புட்டு பெரிய மனுஷனானே?” என நம்ப இயலாது கேட்க, கருப்பட்டி முறைக்க, கதிர் கலகலவென சிரித்தான். 
சிரிப்புடனே, “நம்பிடாதிங்க சின்னம்மா, பஞ்சாயத்து பேசினது எல்லாம் அவங்க அம்மை தான் இவன் ஒரு வாரம் அவகளுக்கு ட்ரைவர் வேலை பார்த்திருக்கான் அம்புட்டு தான்” என்க, “அதானே பார்த்தேன், முசப் பிடிக்கிற நாயை மூஞ்சப்பார்த்தா தெரியாதாக்கும்” என்றவர் இடித்துக் கொண்டார்.
“நானும் கொஞ்சம் பெர்பாமன்ஸ் பண்ணி ஹீரோவாகிடலாம்னு பார்த்தா பொறுக்காதே!” என்ற புலம்பலோடு கதிரைப் பார்த்துத் திரும்பிய கருப்பட்டி அடக்கமாட்டாமல் சிரித்தான். 
புரியாது குழம்பிய கதிர், “எதுக்குலே இந்தச் சிரிப்பு?” என அதட்டலாகக் கேட்க, “என்ன பார்த்து சிரிச்சது இருக்கட்டும், நீ மட்டும் இப்படியே வெளிய போன ஊருக்குள்ள எல்லாம் உன்னைப் பார்த்து தான் சிரிப்பாங்க” என்றான் மேலும் கேலிச் சிரிப்புடன். 
தனவதியும் அப்போது தான் கதிரை திரும்பிப் பார்க்க, அடக்கப்பட்ட சிரிப்போடு, “இப்படியே வெளியே போகாத ராசா, உள்ள போய் வேறச் சட்டை மாத்திட்டுப் போயா” என்றார். 
ஏனென்று புரியாத கதிர் சட்டெனத் திரும்பி வரவேற்பு அறையிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்க்க, அவனின் இடது தோள் மற்றும் மார்புப்பகுதிலும் மஞ்சள் கரைப்படிந்திருந்தது. பார்த்த கதிருக்கு மின்சாரம் பாய்ந்தது போல் சுறுசுறுவென கோபம், தன்னறை நோக்கிய படிகளில் அவனும் வேகமுடன் ஏறினான். 
“ஏன்டே உனக்கு இந்த கேலிச் சிரிப்பு?” தனவதி கண்டிக்க, “நான் சிரிச்சதாலே பிழைச்சாரு, இல்லை புதுமாப்பிள்ளை வாரத் தோரணையைப் பாருலேன்னு ஊருக்குள்ள எல்லாரும் கேலியாச் சிரிச்சிருப்பாவல்ல?” என்ற கருப்பட்டியின் சமாளிப்புகளில் பாதி கதிரின் செவிகளை அடையும் முன் தன்னறைக்குள் நுழைந்திருந்தான்.   
அப்போது தான் விழித்திருந்த சந்திரா படுக்கையைச் சரி செய்து கொண்டிருக்க, விறுவிறுவென உள்ளே வந்த கதிர் அவளைப் பற்றி இழுத்து தன் புறம் திரும்பினான். கதிருக்கு அவன் வெண் சட்டையில் பிற கரையோ கலரோ சிறிது பட்டாலும் சுத்தமாகப் பிடிக்காது. அதுவும் காலையில் வேலைக்குக் கிளம்பும் நேரம் வேறு கண்ணில் பட்டு விட கண்மண் தெரியாத அளவிற்கான கோபத்திலிருந்தான். 
முழுதும் கலையாத உறக்கத்தில் பாதி மூடிய விழியோடு புரியாத நிலையில் மலங்க மலங்க விழித்து கொண்டிருந்த சந்திராவை நோக்கி, “இது என்னட்டி?” என்றான் கோபமாக. 
அவன் மார்ப்புப்பகுதியை சுட்டிக்காட்டிக் கேட்க, அவளுக்குப் புரியவில்லை. 
“நெஞ்சேதும் வலிக்கிதா?” புரியாது பொறுமையாக அவள் கேட்க, “ஆமாம் இப்போ அது ஒன்னு தான் குறை..!” என நொடிந்து கொண்டவன், “இங்க பாரு, நல்லப்பாரு உன் மஞ்சள் என் சட்டையில் ஒட்டியிருக்கு” என்றான் குறையாக. 
அவ்வளவு தானா? என்பது போல் அவள் சாதாரணமாகப் பார்க்க, அவனோ எல்லை கடந்த அயல் நாட்டு அந்நியனை எரிப்பது போன்ற அனல் பார்வையைக் கக்கினான். ஏற்கனவே நெருக்கத்திலிருந்தவள் மேலும் நெருங்கி மென்மையாக அவனை அணைத்து இடது நெஞ்சில் முகம் புதைத்தாள். 
அந்த சினத்திலும் அவன் கைகள் மெல்லியதாய் அவளை அணைத்துக்கொள்ள, “நான் மட்டும் ஒட்டிக்கிடலாம் என் மஞ்சள் உம்மை சட்டையில் ஒட்டிக்கிடக் கூடாதா?” என மெல்லிய குரலில் அவள் நியாயம் கேட்டாள். 
“உம்மை சட்டையில என் மஞ்சளுக்கு இல்லாத இடம் வேற எதுக்கிருக்கு?” என உரிமையோடு கேட்டாள். மனதில் தான் முழு இடமில்லை சட்டையில் கூடாவ தானிருக்கக்கூடாது என்ற ஆதங்கம் அவளிற்கு! 
அணைப்பின் அழுத்தம் கூட்டியவன் மெல்லிய குரலில், “இந்த ஒரு சட்டையோடு போட்டும், உரிமையிருக்குன்னு எல்லாச் சட்டையையும் வீணடிச்சிடாதட்டி” எனக் கெஞ்சலோடு குழைய, அதற்குள் அவன் சட்டையின் பட்டனை விலக்கியிருந்தவள் மனமிறங்கி மெல்லிய சிரிப்போடு அவன் நெஞ்சில் முகம் புதைத்து இதழொற்றினாள். 
சில நிமிடங்களிலே சட்டையை மாற்றிவிட்டு கீழே வர, கதிரின் முகத்திலிருந்த உல்லாசப் பொழிவு, இருளில் மின்னும் புது ஒளிபோலே மின்னியது. 
அதைக் கண்ட கருப்பட்டி, “அது எப்படிண்ணே சத்தமே வராம இரண்டுபேரும் சண்டை கட்டிக்கிடீங்க?” எனச் சந்தேகம் போலே பாவனை காட்ட, கதிர் முறைப்போடு முதுகில் ஒரு அடி வைக்க, “ஒரு சட்டையை மாத்திட்டு வர இம்புட்டு நேரமா?” என அப்போதும் வியந்தான் கருப்பட்டி. 
தனவதியும் அங்கிருக்க, சங்கடத்தோடு கருப்பட்டியை வெளி வாசலை நோக்கித் தள்ளியபடி பின்னே வந்தான் கதிர். அத்தனை அதட்டல் உருட்டலையும் கண்டு கொள்ளாது கருப்பட்டி கேலி செய்ய, ஒரு வழியாக அவனைத் தள்ளிக் கொண்டு அரிசி ஆலைக்கு வந்து சேர்ந்தான் இளங்கதிர். 
அவன் சென்ற பின்னே கீழே வந்த சந்திரா காலை உணவை உண்டுவிட்டு சமையலறையையும் தனவதியும் சுற்றி வந்தாள். அவளை ஒதுக்கி வைத்த எண்ணத்தில் எப்போதும் பேசுவதில்லை தனவதி. அவளும் வழிய வந்து பேசுவதில்லை, இருப்பதை உண்டுவிட்டு அறைக்குள்ளே அடைந்து கொள்ள, பாதி நேரம் புத்தங்களும் பாதி நேரம் அலைபேசியும் அவளை ஆக்கிரமித்துக் கொள்ளும். 
இன்று அதிசயமாக அவரையே சுற்றி வர, ஏனென்றே தெரியாத போதும் கண்டுகொள்ளாது ஹாலில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். அவர் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தவள் கதிரின் வெண்சட்டையை விரித்துக் காட்டி, “இது எப்படி வாஸ் பண்றது? இந்த கரையை எப்படிப் போக வைக்கிறது?” என்றாள். 
“அதை எங்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்?” என்றவர் முகம் சிலுப்ப, “இனி கரை படிய வைச்சா, அதை போக்குறதுக்கான வழியும் தெரிஞ்சி வைச்சிட்டு செய்யுங்க” என்றாள் சட்டையை மடித்தபடி. 
கதிர் சென்றதும் இதை தான் யோசித்தாள். தன்னைத் தவிரக் கதிர் நெஞ்சில் சாயும் உரிமை யாருக்குமில்லை, தானும் மஞ்சள் பூசுவதில்லை. கல்யாண மஞ்சள் வாசமும் கரைந்து நாளாகியிருந்தது. பின் வீட்டில் இருப்பது தனவதி மட்டும் தானே என்ற சந்தேகத்தோடு தான் கீழே வந்தாள். 
அதை எதிர்ப்பாரது சட்டெனத் திரும்பியவர் “என்ன சொன்ன?” எனப் புரியாத பாவனையில் கேட்க, “ம்ம், நகக்கண்ணுல இருந்து உள்ளங்கை வரைக்கும் மஞ்சள் அப்பிக்கிடக்கு, இனி தப்பு செய்தால் தடையமில்லாம செய்யுங்கன்னு சொல்லுதேன்” என்ற சந்திராவின் பார்வை அவர் கைகளில் பதிய, சட்டெனக் கையை புடவை முந்தானைக்குள் மறைத்தார் தனவதி. 
ஆனாலும் அவள் சுற்றி வருகையிலே ஆராய்ந்து பார்த்திருந்தாளே! அவள் பார்வையே அதைத் தெரிவிக்க, “சமையல் செய்யும் போது அப்படி இப்படின்னு மஞ்சள் கரை படத்தான் செய்யும், அதுக்காக என்னவோ நான் தான் அவன் சட்டையில மஞ்சளை அப்புனேன்னு சொல்லுவ போலிருக்கே..?” என்றார் குறையாக. 
“நான் சொல்லையே, நீங்க தான் சொல்லுறீங்க..!” என்ற சந்திரா சிரிப்பை அடக்க, தனாக உளறி விட்டோமோ என்ற நினைப்பில் அவர் முகம் கோண, “உங்க வயசுக்கு ஒரு மரியாதை இருக்கு, இந்த மாதிரி குழந்தைதனமான வேலை செஞ்சு அதை குறைச்சிகாதிங்க” என்றாள் இரு பொருள் பட. 
உச்சரிக்கும் தொனியில் ஒரு எச்சரிக்கையும் வார்த்தைகளில் ஒரு கண்டிப்பும் காட்டி விட, தனவதியும் முகம் நொடியில் மாறியது. சட்டை அவர் அருகே வைத்த சந்திரா, “நம்ம புளியங்குடி எலுமிச்சையும் ஒரு சர்பெக்ஸ்ஸலும் போட்டு துவச்சிடுங்க, ஏன்னா கரை நல்லதில்ல பாருங்க” என்றபடி எழுந்து சென்றாள். 
தனவதியின் முகமே கடுகடுத்தது. எல்லாம் கதிர் கொடுக்கும் இடம்! தன் வீட்டிற்குள் வந்த அன்றே மகளை விரட்டி விட்டு இப்போது அதிகாரம் வேறா? மனம் ஆற்றாமையில் பொங்கியது. 
இத்தனை நாட்களில் கதிரை விடவும் நுண்ணிப்பாக சந்திரா கவனித்திருந்தது தனவதியைத் தான்! ஊர்க்காரர்கள், கருப்பட்டி முதல் கதிர் வரை அனைவருக்கும் தனவதி, கதிரை அன்போடு கவனித்துக் கொள்வதாகத் தோன்ற, சந்திராவிற்கும் மட்டும் அது சற்று அதிகப்படியோ எனத் தோன்றியது. 
கதிர் தந்தையை இழந்து சுயமாக முன்னேறி விட்ட போதும் இன்னும் அவர் இழப்பிலிருந்து மீள முடியாது தவித்துக் கொண்டிருப்பதைச் சந்திரா நன்கு அறிவாள். மறக்க முடியவில்லை எனினும் வலி மறந்து கடந்து வந்துவிட வேண்டிய, ஒரு இழப்பில் காலங்கள் கடந்த பின்னும் கடந்து வர முடியாது தவித்துக் கொண்டிருக்கிறான் எனில் அது தனவதியால் தான்! அதிலும் அவளைத் திருமணம் செய்து கொண்டது ஒரு குற்றமோ என நினைக்க வைக்கும் படியாகக் குற்றவுணர்வை ஆழமாகத் தூவியிருந்தார். 

Advertisement