Advertisement

அதற்குள் அடுப்படியிலிருந்து தோசை வார்த்து எடுத்து வந்து அவன் இலையில் வைத்தார் தனவதி. பார்த்திருந்த சந்திரா சட்னியையும் ஊற்ற, இடையில் கதிரின் அலைபேசி அலற, அதில் திடுக்கிட்டு அரண்டவள் சாம்பாரை கதரின் சட்டையில் ஊற்றியிருந்தாள். 
“ஏய்..” கத்தியபடியே எழுந்தவன், “கொஞ்சமாது அறிவிருக்காட்டி உனக்கு? உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா? அவசரமா கிளம்பும் போது தான் இப்படி செய்வியா?” என மேலும் கத்தினான். 
“இல்லைங்க தெரியாமல் தான்..” என்றவளை முழுதாகப் பேசவும் விடாது, அவள் சொல்லுவதையும் கேட்காது கத்திக் கொண்டிருந்தான். வேலைக்குச் செல்லும் காலை நேரம், அதுவும் முக்கிய வேலையாக செல்கையில் ஏதேனும் குறுக்கிட்டால் இவ்வாறு தான் டென்ஷனாவன் என்பதை எல்லாம் சந்திரா அறிந்திருக்கவில்லை. 
அப்போதும் கையை பிசைந்தபடியே சந்திரா நிற்க, “இன்னும் ஏலே இப்படி சிலை மாதிரி நிக்கிறவ, போய் வேறச் சட்டை எடுத்துட்டு வா” என அதற்கும் அவன் கத்தினான். 
தலையாட்டிய சந்திரா திரும்ப, சரியாக கையில் சட்டையோடு வந்தார் தனவதி. விழி இரண்டும் விரியும் வண்ணம் வியப்பாகப் பார்த்திருந்த சந்திரா, ‘இந்தம்மா ஜோசியம் எதுவும் பார்த்து வைச்சிடுச்சோ’ என்று தான் நினைத்தாள். 
அதற்குள் சட்டையை மாற்றி கதிர் கிளம்பியிருந்தான். அவன் சென்ற பின்னே சந்திராவிடம் வந்த தனவதி, “எல்லாம் உன்னால தான்? இப்போ பாரு அவன் சாப்பிடாமல் போயிட்டான்” என்றார் குறையாக. திட்டுவதற்கு வாய்ப்பு என்று திட்டுகிறார் என்பது புரிந்தது சந்திராவிற்கு. 
“க்கூம்.. அதனால என்ன இப்போ? புருஷன் ஒரு நாள் விரதமிருந்தால் பொண்டாட்டிக்கு ஆயுசு கூடுமாம்” என முகத்தைச் சிலுப்பிவிட்டு நில்லாது சென்றாள், அவள் பதிலில் முகமே கடுகடுக்க நின்றிருந்தார் தனவதி. 
அன்றும் தாமதமாக வீடு திரும்பிய கதிர் இரவு உணவிற்குப் பின் தன்னறைக்குச் செல்ல, அதிசய திருநாளாய் கதவு திறந்திருந்தது. வியப்போடு உள்ளே சென்றவனின் விழிகள் நாலாபுறமும் சுழன்று தன்னவளைத் தேட, அவள் அங்கில்லை. காலையில் கொஞ்சலும் அதன் பின் தனவதியின் முன் திட்டியதும் வேறு அப்போது தான் நினைவில் வந்தது. 
ஒரு சிறு வன்சொல்லுக்கும் தாங்காது வாடிவிடுவளே! சின்னப்புன்னகை மறைய விடுவேணா? சிரிக்கும் விழி சிவக்க விடுவேணா? தன் நெற்றியில் தானே அறைந்து கொண்டவன் மொட்டை மாடி நோக்கிச் சென்றான். 
அவளும் அங்கு தான் இருள் வானை வெறித்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். மலர் சூடா கருங்கூத்தலும் மயில் நிறப் புடவையின் முந்தானையும் காற்றில் பறக்க, அவன் நெருங்குவதில் கூட அவள் கவனமில்லை. அவள் அருகில் சென்று எதிர் சுவரில் சாய்ந்து கைக்கட்டி நின்றவன் அவள் முகம் கண்டான். அந்த இருள் சூழலின் மென்னொளில் நெற்றிக் குங்குமம், கழுத்து மஞ்சள் கயிற்றையும் விட பிரகாஷித்தது விழி தேங்கியிருந்த கண்ணீர்த் துளி! 
தன் மனைவி அழுகிறாள்! அனைத்தையும் விட்டுவா என அழைத்தேனே இப்போது என்ன வாழ்வு அவளுக்குக் கொடுத்துவிட்டேன்? மனம் குமுறியது. எப்போதும் சந்திராவின் கண்ணீருக்குக் கதிரின் இதயத்தை ஊடுருவும் சக்தியுண்டு. அந்த வலியைத் தான் அவனால் தாங்க இயலவில்லை. 
“சந்திரா..” மெல்லிய குரலில் அழைக்க, அவள் கலையவில்லை. 
“வது..” இன்னும் மெல்லியதாய் அழைத்தபடி எட்டி அவள் கரங்களைப் பற்றினான். அதில் கலைந்தவள் மெல்ல விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள். அந்த பார்வையின் வீச்சு அவனுள் மின்சார அலைகளாகப் பாய்ந்தது. 
பற்றிய கையை ஒற்றை விரலால் வருடியபடியே, “என்னலே..?” என்றான். ஆழ்ந்த பார்வை பார்த்தவளின் பதில் மௌனம் மட்டுமே! கையை விட்டவன் சட்டென அவள் இடையைப்பற்றித் தூக்கி, மாடிச்சுவற்றில் அமர வைத்தான். அதிர்ந்தவள் தடுமாறி அவள் தோள்களைப் பற்றிக்கொள்ள, அவளின் இருபுறமும் சுவரில் கையூன்றி நெருங்கி நின்றான். 
“என்னனு சொல்லுல.. எம்மேல கோபமா?” என முகம் பார்த்துக் கேட்க, அவள் கண்கள் மட்டும் ஆமென்றதே தவிர, மூடிய செவ்விதழ் பிரியவில்லை. 
“காலையிலே ஏதோ பேசணும்னு சொன்னியே இப்போ சொல்லு” எனப் பேச வைக்க முயன்றான். 
“என்னை பிடிக்கலையா? இல்லை நான் இங்கிருக்கிறது பிடிக்கலையா? சொல்லுங்க நான் எங்க வீட்டுப் போயிடுதேன்” என்க, “யாரு அப்படி சொன்னா?” என்றான் வேகவேகமாக. 
வேற யார் சொல்லணும் நீ நடந்துக்கிடுறதே அப்படித் தான் இருக்கு என மனதில் குமைந்தவள், “அதான் மண்டபத்துலையே என்னை விட்டுட்டு வந்துட்டியே? நானா தானே இங்க வந்தேன், இங்க வந்தும் மாலதி தான் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தால் அதான் உனக்கு பிடிக்கலைன்னு ஆனா பிறகு இன்னும் ஏன் நான் இங்க இருக்கணும்?” என்றாள். 
ஐயோ! இன்னும் எத்தனை முறை தான் சொல்லிக்காட்டுவாளோ ஆண்டவா! மனதில் அலறியவனின் திருட்டு முழியையும் முகபாவனையும் சரியாகப் படித்தாள் சந்திரா. 
அவள் நெற்றியில் லேசாகத் தட்டியபடி, “போலே என் கோட்டிக்காரி..!” என்க, “பார்த்தியா பார்த்தியா இப்போ கூட என்னை போவச் சொல்லுத?” எனக் குற்றம் சுமத்தியவள் சுவரிலிருந்து குதிக்க முயன்றாள். 
சட்டென இறங்க விடாது இடைப்பற்றி நிறுத்த, கதிர் தன் கேள்விக்குப் பதில் சொல்லாது மழுப்புவதை சரியாக புரிந்து கொண்டவள் மூக்குவிடைக்க முறைத்தாள். 
“உனக்கு ஏன் அப்படித் தோனுது?” ரசனையாகப் பார்த்தபடியே கேட்க, “அப்படி தான், நீ பழைய இளா இல்லை, என் இளா மாமா இல்லை. அப்படி இருப்பேன்னு நம்பி தான் எல்லாத்தையும் விட்டிட்டு நீ தான் வேணும்னு வந்தேன். ஆனால் நீ அப்படியில்லை, எதனால?” என நேராக முகம் பார்த்து நுண்ணிய அளக்கும் பார்வையில் கேட்டாள். பதில் வேண்டி கேள்வி கேட்ட போதும், பதில் அவள் அறிவாள்! 
நேரடியாகப் பதில் சொல்லி அவளைக் காயப்படுத்த விருப்பமில்லாதவன், அவள் இரு கரம் எடுத்துத் தான் இடை சுற்றிப் படரவிட்டு, “கொஞ்சமா வளர்ந்துட்டேன், கொஞ்சம் பருத்துட்டேன் அதுமட்டும் தாண்டி வித்தியாசம் மத்தபடி நான் அதே உன் இள மாமா தான்” என்றவன் அவள்  வலது கரம் எடுத்து நெஞ்சில் வைத்து, “இங்க சேர்ந்து வைச்ச அன்பும் மாறலை, அப்படியே தான் இருக்கு” என்றான். 
கதிரின் இதயத்தின் அலைவரிசையை நெஞ்சில் வைத்த கரத்தின் விரல் நரம்புகள் வழி அவள் உணர, இணை இதயங்கள் இரண்டும் தடதடத்துக் குதித்தது. நிசப்த இருளும், குளிர் இரவும், விண்மீனின் மின்மினி ஒளியும் என ஏகாந்தமான சூழலில் கரைந்து போயிருந்தனர்.
சட்டென நெஞ்சில் அடித்து, “நீ மட்டும் தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க, இங்க வைச்ச அன்பு மட்டும் அப்படியே இருக்குதாமாம்!” எனக் குறை கூறியபடி மெல்ல கைகளை உருவியவள், “இந்த 96 மூவி எல்லாம் நானும் பார்த்துட்டேன்” என்றாள் முறைப்போடு. கதிருக்கு அப்போதும் சிரிப்பு தான்! 
அவன் பேசத் தவிர்ப்பதை அவளும் வற்புறுத்திக் கேட்கவில்லை. 
சிரித்தபடியே, “அதான் கோபம் போச்சில்ல வா தூங்கப் போவோம்” என்றழைக்க, அவன் தாடையைத் திருப்பி தரையில் சுட்டிக்காட்ட, அங்கே படுக்கையை விரித்திருந்தாள். அவன் ஏமாற்றமாய் பார்க்க, “அதான் முதல் நாளே என்னை விட்டுட்டு வெளியே வந்து படுத்தில்ல இனி காலம் முழுக்க இங்கேயே படு” என்றபடி இறங்கி படிகளை நோக்கி நடந்தாள். 
அடிப்பாவி! மனதில் அலறியவன், “இங்க ரொம்ப குளிருது சந்திரா” என்றவன் கத்த, “ஏன் நேத்து வரைக்கும் கதகதப்பா இருந்துச்சோ?” எனக் கேட்டவள் திரும்பியும் பாராது நடக்க, இனி பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்தவன் ஓடிச் சென்று அவளைத் தூக்கினான். 
அவள் என்னவென்று உணரும் முன்பே ஒரு சுற்று சுற்றிப் படுக்கையில் கிடத்தி, அணைத்தபடி அவனும் படுத்திருந்தான். அவளோ திமிறி எழ முயல, இடையை தன்னோடு இறுக்கி அணைத்து எழ விடாது, “என்னை இரண்டு நாள் ரூம்குள்ள விடாததுக்கு இது தான் உனக்குத் தண்டனை..” என செவியோரம் கிசுகிசுதத்தவன் காது மடலை மெல்லிதாய் கடித்தான். 
கதிரின் தோளில் அடித்தவள், “நீ தானே முதல் நாளே ரூம்பை விட்டு வந்த? என்னவோ நான் விரட்டின மாதிரி குறை சொல்லுத?” எனச் சிலுப்பியபடி அவன் நெஞ்சில் சாய்ந்து விழி மூடிக் கொண்டாள். ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தால்? மனம் அலறிய போதும் அந்த சுகத்தை தன்னோடு தாங்கியவன் மெல்லிதாய் தலை வருடிக்கொடுக்கத் தொடங்கினான்.  
“ஷ்ஷ்.. ரொம்ப குளிருது..” என்றபடி மேலும் அவன் நெஞ்சோடு முகம் அழுத்தப் புதைந்து கொண்டவள், “ஆமாம், ஏன் தினம் வெளியே படுக்குறீங்க?” என விழி திறக்காமலே முனங்கினாள்.
“அது அப்படி தான், எத்தனை மணியானாலும் தினமும் அந்த சந்திரன் உதிச்சு, அதைக் கண்குளிர காங்காம எனக்குத் தூக்குமே வராது. என் இரவுக்கும் உறவுக்கும் ஒரே துணை!” என்றவனின் ஒற்றை விரல்கள் அவள் முகவடிவை அளந்தது. 
அவன் மென் குரலையும் ஸ்பரிசத்தையும் விழி திறக்காது உள் வாங்கிக் கொண்டிருந்தவளின் முகம் செந்நிறமாக மாற, கர்வத்தில் சின்ன சிரிப்பு! நொடியும் இமைக்காது அவளைப் பார்த்திருந்தவனை புருவத்தின் கீழிருக்கும் மச்சமும், படபடக்கும் இதழும் ஈர்க்க, குனிந்து மூடிய இமைகளில் முத்தமிட்டான். 
அதை எதிர்பாராதவளுள் சில்லென்ற ரசவாதங்கள் குமிழ, பூத்தது வெட்கப்புன்னகை ஒன்று. இட்ட ஒரு முத்தமும் அவனையும் மயக்க, மேலும் குனிந்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டு இறுதியாக இதழில் இதழ் பதித்தான். அவள் வேண்டுமென்கவில்லை, இவனுக்குப் போதுமென்கவில்லை, நிமிடங்களாக நீண்டது அழுத்த முத்தம்! மலர் தீண்டுவது போன்று மென்மையாகத் துவங்கியபோதும் தித்திப்பு தீயாய் பற்றிக்கொள்ள வன்மையாய் முன்னேறிய முத்தம் அவள் துவளுகையில் முடிவுற்றது. 
மெல்ல விலகியவன் முகம் பார்க்க, விழி மூடியிருந்தபோதும் அதை உணர்ந்தவள் மீண்டும் அவன் நெஞ்சிலே புதைந்து முகம் மறைந்துகொண்டாள். இருவருக்கும் இதழ் முத்தம் என்றால் இது தான் முதல் முத்தம்! இருவருக்குமே நிறைவானதொரு உணர்வு! மெல்ல அணைத்துக் கொண்டவன் முதுகில் தட்டிக்கொடுத்து உறங்க வைத்தபடி, அவனும் நிம்மதியாக விழி மூடினான். 

Advertisement