Advertisement

அத்தியாயம் 12 
நள்ளிரவை நெருங்கும் நேரம் வீடு திரும்பினான் கதிர். வீட்டிற்குள் வர தனவதி இன்னும் உறங்காது கூடத்துத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க கண்டவன், அருகே செல்ல, அந்த சத்தத்தில் விழித்து எழுந்துவிட்டார். 
“வந்துட்டியா ராசா.. கை,கால் கழுவிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிதேன்” என்க, “நீங்க ஏன் சின்னம்மா காத்திருக்கீங்க, எப்பவும் போல எடுத்து வைச்சிட்டு போய் தூக்கியிருக்கலாமே என்றபடி, உள்ளே சென்றவன் கை, கால் கழுவி வந்தான். 
தனவதி அமைதியாக உணவு எடுத்து வைக்க, கதிரும் பசியோடு உண்டு முடித்தான். கை கழுவியபடியே, “நீங்கப் போய் தூங்குங்க சின்னம்மா, நான் எடுத்து வைச்சிடுதேன்” என்றவன் எழுந்தான். 
நகராது நின்றிருந்த தனவதி, “என்னனு தெரியலையையா இரண்டு, மூனு நாளா படுத்தா தூக்கமே வர மாட்டேங்குது, கெட்ட கெட்ட கனவா வருது, உங்கப்பா உடம்பெல்லாம் எரியுதுன்னு அழற மாதிரியும் என்னை கூப்பிடுற மாதிரியுமா வருது. அந்த சாவு வந்தால் நானும் அவருக்குத் துணையா போயிட மாட்டேனா..” எனக் கலங்கிய விழியோடு விசும்பினார். 
அதிர்ந்த கதிரின் நெஞ்சமும் வேதனையில் விம்பியது. தந்தை அன்று துடிதுடிக்க உணர்ந்த வலியை இன்று அவன் உணருவது போன்று வலித்தது. காலங்கள் கடந்துவிட்ட போதும் தவழ்ந்து கொண்டிருந்த பிள்ளை சிகரமாய் எழுந்து நின்றுவிட்ட போதும் குலசேகரன் விட்டுச் சென்ற இடத்தில் நீங்காத வெறுமையே நிலைத்துவிட்டது. 
இத்தனை ஆண்டுகளும் வேலை வேலை என வெளி உலகில் தொலைத்துப் போனவனிற்கே இன்னும் ரணம் ஆறாதிருக்க, இத்தனை ஆண்டுகளாகத் தனிமையில் இந்நான்கு சுவரிற்குள் கிடந்தவரால் மட்டும் மறந்துவிட இயலுமா? 
எதுவும் பேசாது பூஜை அறைக்குள் சென்று கையில் பூஜைத் தட்டோடு திரும்பி வந்தான். தனவதியின் முன் தட்டை நீட்டியவன், “விபூதி எடுத்து பூசிக்கோங்க சின்னம்மா, நல்லா தூக்கம் வரும். தைரியமா போய் படுங்க நான் தான் இருக்கேன்ல..?” என்றான் அனுசரணையாக. 
விழி தேங்கிய நீரை முந்தானையால் துடைத்துக் கொண்டு, “நீ பார்த்துப்ப ராசா! நீ தானே எங்க தைரியம்! நீதானே எங்களுக்குக் காவல்..” என தளதளத்த குரலில் உரைத்தவர் அவர் அறை நோக்கிச் சென்றிட, நெஞ்சை அடைப்பது போன்ற பாரத்தோடு கதிரும் மாடி ஏறினான். 
இது எதையும் அறியாது கதிர் மேலிருந்த கோபத்தில் தங்கள் அறைக்கதவைப் பூட்டிவிட்டுப் படுத்திருந்தாள் சந்திரவதனி. தன்னறை வாசலில் நின்றவன் கதவைத் திறக்க முயல, காலையில் போலே பூட்டியிருந்ததால் மாடியில் சென்று சோர்வோடு படுத்து விட்டான். அன்றேனோ உழைத்த உடல் அலுப்பாக இருந்த போதும் உறக்கம் என்பதே வரவில்லை. புரண்டு புரண்டு படித்துக் கொண்டு இருளின் கருமைக்குள் ஏதோயை தேடுவது போன்று தத்தளித்தது மனம்! 
தற்போதும் காலையிலும் தனவதி உரைத்து அவனைச் சலனப்படுத்தியிருக்க, தந்தையின் நினைவு தான் அதிகமாக மேலோங்கி இருந்தது. உள்ளுக்குள் புதைத்த நினைவுகளும் வலியும் கிளறி விட்டது போன்றிருக்க, ரணமாக எறிந்தது. தன் இறப்பிற்குக் காரணமானவரோடு நீ உறவு கொள்வாயா? அவன் தந்தை கேட்பது போலிருக்க, அவனுள் எங்கும் குற்றவுணர்வு தான் பெரிதும் பரவியது. 
ரேவதி கூட குத்திக்காட்டினாளே! தந்தையின் ஆத்மாவிற்குக் கூட நான் அநியாயம் செய்து விட்டேனோ? என மேலும் மேலும் நெஞ்சை அழுத்திக் கொண்டான். குற்றவுணர்வைத் தவிர பெரியதொரு உயிர்க்கொல்லி எதுவுமில்லை. 
அன்றும் உறக்கமில்லாது விடியற்காலையிலே எழுந்து சென்றவன் வழமையான காலைப் பணிகளை முடித்து குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பினான். தன்னறைக்கு வந்தவன், தன்னிடம் உள்ள மாற்றுச்சாவி கொண்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். மெத்தையில் நேராகப் படுக்காது கை கால்களைப் பரப்பிக்கொண்டு குறுக்கு வாக்கில் படுத்திருந்தவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். 
தலையணையை கை அணைப்பிற்குள் வைத்துக் கொண்டு, மூடிய விழியும், பிதுங்கிய உதடுமாய் அப்போதும் கோபத்தில் அவனிடம் சிணுங்கும் சிட்டு போன்றே படுத்திருக்க, அவளைக் கடந்து செல்ல இயலாது ஒரு நொடி நின்று ரசித்தான். 
புது வானில் பொழிவான சந்திரன் உதித்தது போன்று பிரகஷமானது அவன் காலை நேரம். ஒருநாள் முழுதும் சந்திராவின் முகம் காணாது என்னவோ போலிருந்தது, அவள் கோபமாக இருந்தால் கதிர் தான் சமாதானம் செய்ய வேண்டும், ஆனால் அதற்கான வாய்ப்பையும் தர மறுப்பவளை என்ன செய்வது என்ற யோசனை! 
யோசனையுடனே தனது மாற்றுடைகளை எடுத்தவன் திரும்பி நின்ற வாக்கிலே உடை மாற்றினான். அதிலும் மேல் சட்டை அணியும் முன் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருக்க, மெல்லியதாய் கேட்டது விசில் சத்தம்! 
அதிர்ந்தவன் திரும்ப, பட்டென ஈர நெஞ்சில் வந்து ஓட்டியது பன்னீர் ரோஜா போன்ற சந்திராவின் முகம். அவன் என்னவென்று அறியும் முன் அவனை அணைத்திருந்தாள் சந்திரவதனி. நெஞ்சில் சுகமாக முகம் புதைத்திருந்தவளின் கைகள் கதிரின் இடையை அணைத்திருந்தது. 
கதிரின் உடல் சிலிர்க்க, ஈரம் படிந்த தேகத்தில் நொடியில் வெம்மை பரவுவது போன்ற மாயை! அவள் ஸ்பரிசம் பழையது ஆனாலும் மங்கையவளின் அணைப்பு புதியது! அந்த வித்தியாசங்களையும் அவன் நன்கு உணரும் நெருக்கத்தில் அவளிருக்க, அவனுள் புது உணர்வுகள் புதிதாய் பூத்தது. 
அவள் பஞ்சுக்கரம் மெல்ல மேலேறி அவன் வெற்று முதுகு மொத்தமும் அளக்க, நிலையில்லாது கூச்சத்தில் நெளிந்தவன், “என்னட்டிச் செய்த?” என அதட்டலில்லாது குழைவாகக் கேட்க, “எப்படி இப்படி?” என அவன் கட்டுடலை அணைத்துக் கேட்டாள். 
“எல்லாம் உழைச்சே உரமேறுன உடம்புட்டி” என்றபடி அவனும் அணைக்க, “ம்ம்.. ம்ம்..” என்றவள் நெஞ்சிலே விழி மூடியிருந்தாள். 
சில நொடிகள் பின்னே குனிந்துப் பார்க்க, மஞ்சத்தில் விட்ட உறக்கத்தை அவன் நெஞ்சத்தில் தொடர்ந்து கொண்டிருந்தாள் அவனின் மனையாள். “அடிப்பாவி..” மெல்லியதாய் முனங்கியவன் அவளை விலக்க முயற்சிக்க, மேலும் இறுக்கமாக ஒட்டிக்கொண்டாள் அவள். 
“எம்புட்டு நேரத்துக்கு இப்படியே நிக்கிறதா வேண்டுதல்?” என்றவனின் கேள்விக்கும் பதிலில்லாது விழி மூடியே கிடந்தாள். தடுமாறும் உணர்வுகளுக்குத் தடையிட நினைத்த கதிரோ அதற்கு மேலும் பொறுக்காது தூக்கிச் சென்று அவளை மெத்தையில் கிடத்த, “முன்ன எல்லாம் சண்டைன்னா நீ தான் சமாதானப்படுத்துவ, இப்போ நான் செய்ய வேண்டியதா இருக்கு. இத்தனைக்கும் தப்பும் உன் மேல இருந்தும்..” என்றவள் அப்போதும் அவன் விட்டு வந்ததையே குற்றம் சாட்டினாள்.
பிரச்சனை வேண்டாமென்று நினைத்தவன் அவள் குற்றச்சாட்டைக் கண்டு கொள்ளாது, “அப்போ நீ தூங்கலை, எல்லாம் நடிப்பு தானா உன்னை..!” எனக் கேட்டபடி கைகளில் கிள்ள, வலியோடு சட்டென விழி திறந்தாள். 
எழுந்தமர்ந்தவள், “நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் உனக்கு என்ன விளையாட்டு?” என அதட்டியவள், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என அழைத்தாள். 
அதற்குள் சட்டையை அணிந்திருந்தவனின் அலைபேசி வேறு அழைக்க, அதைத் தூக்கிக்கொண்டு அறையிலிருந்து நழுவி ஓடினான். எப்படியும் அவளைப்பற்றிப் பேச ஆரம்பித்தாலும் உரையாடல் அவள் குடும்பத்தைப்பற்றியும் திசைமாறும் அதில் அவனுக்குப் பிடித்தமில்லை. காலைப்பொழுதின் இனிமைகளை கலைக்க விரும்பாது நழுவி விட்டான். 
அரிசி ஆலையிலிருந்து அவசரமாக வருமாறு கதிரை அழைக்க, தனவதியோ காலை உணவு உண்ணாது செல்லக் கூடாது என அவனை அமர வைக்க, அப்போது தான் சந்திரா கீழே வந்தாள். 
“அம்மாடி இலையை விரி, நான் தோசை ஒத்தி எடுத்துட்டு வரேன்” என அவளை ஏவியவர் அடுப்படி நோக்கி வேகமாகச் செல்ல, தன்னிடமா உரைத்தார் என ஒருநொடி வியந்து நின்றாள். 
மாலதி சென்ற பின் ஒருமுறை தனவதியிடம் பேசச் செல்ல, “இன்னும் என்ன வேணும் உனக்கு? அதான் நாடகமாடி கதிரை கட்டிக்கிட்டது மட்டுமில்லாம வந்த அன்னைக்கே என் மகளையும் வீட்டை விட்டு விரட்டிட்டியே அது பத்தாதா?” எனக் காட்டமாகக் கேட்க, ஆற்றாமையில் பேசுகிறார் என்றே நினைத்திருந்தாள். 
பெரும்பாலும் அவர் கீழே இருக்க, சந்திரா மாடியில் இருக்க, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதையே இருவரும் தவிர்த்தனர். அவர் மனதிலும் வலிகள் இருக்கும் தான், அந்த ஆற்றாமையில் கோபம் காட்டினாலும் கதிர் முன் மட்டும் பாசமாக நடந்து கொள்வது சந்திராவிற்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 
யோசனையோடு இலை எடுத்து விரித்தவள், “ஏதோ வேலையிருக்குன்னு அவசரமா கிளம்பினீங்கலே இதானா?” முறைப்போடு கேட்டவள் நிதானமாக நிற்க, தனவதி தான் மழை வரும் முன் காய வைத்த துணிகளை எடுக்க ஓடுவது போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார். 
“சின்னம்மா எப்பவும் இப்படித் தான், சாப்பிடாம வெளியே போக விட மாட்டாங்க” என்றான் மலர்ந்த முகமாக. 
இந்தம்மா எதுக்கு இப்படி பறக்குது? என்னவோ ஸ்கூல் பிள்ளையைக் கிளப்பி வேன்ல பிடிச்சி தள்ளுகிற மாதிரி தான்! ஏன் இத்தனை ஆர்ப்பரிப்பு என்று தான் தோன்றியது அவளுக்கு. 

Advertisement