Advertisement

பைங்கிளி பார்வையில் –மித்ரா 
அத்தியாயம் 01 
குற்றாலச்சாரலின் தூதாய் வந்த குளிர்காற்று அவன் தேகமெங்கும் ஸ்பரிசித்துச் செல்ல, புள்ளினங்களின் புள்ளுவமும் கறவை பசுக்களின் கதறலொலியும் விடியலின் நிசப்தத்தைக்  கலைக்க, அவன் மட்டும் கலையாத உறக்கத்தில் கலைய விரும்பாத கனவோடு அமிழ்ந்திருந்தான். 
இன்னும் முழுதாய் வெண்ணிலவும் விடை பெற்றிருக்கவில்லை, பகலவனும் ஒளிபரப்பவில்லை. மங்கிய இருளொளியும் மார்கழி நிகர் குளிரும் தாலாட்டவே, எழுமெண்ணம் சிறிதுமில்லை. 
ஆனாலும் அவனை எழுப்பியது செவி தீண்டிய, பெண்களின் அழுகுரலும் விசும்பலும்! மிதமான வேகத்தில் புத்துணர்வோடு ஒவ்வொரு நாளும் புது உற்சாகத்தில் துவங்கும் கிராமத்து மக்களுக்கு அன்றைய விடியல் வழக்கத்திற்கு மாறானதாக மாறியது. 
முழுதாக கலையாத உறக்கம் அவ்வோசைகள் கனவா? நினைவா? என்னும் குழப்பத்தில் அவனைத் தத்தளிக்க வைக்க, மேலும் கேட்ட சலசலப்பு ஓசைகள் புலன்களை மெல்ல விழிக்கச் செய்ய, நிஜம் தான் என உணர்ந்த நொடி விருட்டென எழுந்தமர்ந்தான் இளங்கதிர்.  
அத்தெருவினர் முழுவதும் எதிர் வீட்டில் கூடியிருக்க, அங்கிருந்து தான் சலசலப்பும் வந்து கொண்டிருந்தது. நேற்றுவரை ஆள் அரூபமின்றி பூட்டிக்கிடந்த எதிர் வீட்டில் இன்று புதிதாகக் கேட்ட துக்கக்குரல்கள் அவனைச் சிறிதும் சலனப்படுத்தவில்லை. 
கட்டிலிலிருந்து எழுந்து நின்ற நொடியில் ஏங்கிப் பார்க்க, வெளிவாசலில் இரண்டு கார்கள் நின்றிருக்க, உள்ளே மின்சார விளக்கு ஒளியும், மக்கள் தலையும் தெரிந்தனரே தவிர, எதிர் வீட்டினர் எவரும் தெரியவில்லை. அதற்கு மேலும் அவர்களைப் பற்றிய ஆராட்சி தனக்கு எதற்கு என நினைத்தவன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். 
கலைந்த தலை, கையில்லாத வெண்ணிற உள் பனியன், வெண்ணிற வேட்டி, கழுத்தில் ஒற்றைச் சங்கிலி என வழக்கமாக வீட்டிலிருக்கும் தோற்றம் அது தான். 
உள் முற்றத்திலிருந்த அண்டாவில் கை கோர்த்து, நீர் தெளித்து முகம் கழுவ, சரியாக அதே நேரம் அவன் வீட்டிற்குள்ளிருந்து வந்த தனவதி, “எழுந்துட்டியா? காபி குடி ராசா..” என்க, தலையசைத்தான்.
காபி டம்ளரைத் திண்ணையில் வைத்துவிட்டு அவன் படுக்கையை மடித்து, கட்டிலைத் தட்டிவிட்டுக் கொண்டிருக்க, அவனோ பக்கவாட்டில் இருக்கும் வேப்பமரத்தில் எக்கி ஒரு குச்சியை ஒடித்து, கடைவாயில் கடித்து மென்று நாராக்கி பல் தேய்க்கத் தொடங்கினான்.  
தேய்த்து முடித்தவன் மீண்டும் அண்டா நீரில் முகம் கழுவிக் கொண்டிருக்க, “செத்த நேரம் கூடுதலா தூங்க வேண்டியது தானயையா..” என தனவதி கேட்க, “எங்க? ஒரே சந்தகடையாட்டம் சலசலத்துக்கிட்டு இருந்தா..?” என்றவன், “என்னவாம் சின்னம்மா..?” என்றான். 
ஒரு நொடி மௌனமானவர், “பெரியவருக்கு உடம்புக்கு முடியலையாம், இப்போவோ அப்போவோன்னு இழுத்துட்டு இருக்காராம், இதுல செத்தாலும் எச்சொந்த ஊருல தான் சாவமென்னு அடம்பிடிக்க, மொத்த குடும்பமும் வந்திருக்காவ” என்றார். 
“ஓ..” என்றவனின் செவிகளில் முன் பாதி ஏறியதோ என்னவோ குடும்பமாக வந்துள்ளனர் என்பதிலே மனம் சிக்கி நின்றது. 
“இளா மாமா..” என காற்றோடு வரும் அழைப்பில் கிங்கிணியாய் குலுங்கிச் சிரிப்பாள் அவள். எச்சில் வழிய ஜவ்வு மிட்டாய் சாப்பிடும் அழகும், தெற்றுப் பல் தெரியச் சிரிக்கும் சிரிப்பும் கொள்ளை கொள்ளும். 
அண்ணன் அடித்துவிட்டான் என கண்கள் சிவக்க கசக்கி, கன்னம் உப்ப, உதடு பிதுக்கித் தேம்பி தேம்பி அழுபவளைக் காண அவன் நெஞ்சம் தாங்காது. தூக்கிக் கொஞ்சி துடைத்துவிட அவன் வேண்டும். ஆரஞ்சு மிட்டாயும், குச்சி ஐஸூம் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்ய அவன் வேண்டும்.
நீளமான வாய்க்கால் நீரில் உடை நனைய சலசலக்க, புள்ளி மானாய் துள்ளி வருபவள் வழுக்கி விழுந்தாலும் தூக்கி விட அவன் வேண்டும், மண்ணில் புரண்டு எழுந்தாலும் துடைத்து விட அவன் வேண்டும். 
அவனின் சின்னச்சிட்டு, செல்லப்பட்டு அவள். ஆனால் இன்று அவனில்லை அவளுக்கு, அவன் நினைவு கூட அவளுக்கு இருக்கிறதோ இல்லையோ? வளர்ந்திருப்பாள். எவ்வளவு உயரம்? தனக்கு எட்டாத உயரமோ? 
அவன் மனம் நொடிகளில் திக்கெங்கும் பறக்க, “அந்த சாவைக் கூட அவருக்கு அவ்வளவு எளிதா கடவுள் கொடுத்திடுவாரா? நமக்குச் செய்த பாவத்துக்கு..” என்ற தனவதியின் குரலில், மாயையிலிருந்து விடுபடுவது போல் உடலை உலுக்கிக் கொண்டான் அவன். 
ஆம் எவ்வாறு நொடியாயினும் அதை மறக்கலாம் நெஞ்சம் விம்ப, முகத்தில் நீராலும் கைகளும் அடித்து அடித்துக் கழுவினான். அந்த அடிகள் எல்லாம் நொடியில் ஏங்கிய நெஞ்சிற்கு அவன் இட்டு வைக்கும் கடிவாளங்கள். வலிகளின் உச்சம் கண்டு மரத்துப்போன அவன் உடலுக்கு வலிமை கூடியதே தவிர வலிக்கவில்லை. 
மூக்கில் நீர் ஏற, செருமிய பின்னே நிறுத்தியவன் முகம் துடைத்தபடி அருகே வந்தான். 
“ஆறிப்போய் ஆடை படிஞ்சிடுச்சே, செத்த உக்காரு வேற காபி போட்டுட்டு வாரேன்?” என்ற தனவதி நகர, “பரவாயில்லை சின்னம்மா, கொண்டாங்க” என வாங்கி ஒரே மடக்கில் மண்டினான். 
“கிரவுண்டுக்கு போயாரேன் சின்னம்மா” என்றவன் நொடியும் நில்லாது கிளம்பி விட்டான். 
தினமும் காலை எட்டுமணி வரையிலும் பள்ளி மைதானத்தில் உடல் வியர்க்க, உடற்பயிற்சி செய்வான். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பள்ளிச் சிறுவர்களுக்கு இலவசமாகச் சிலம்பம் கற்றுத்தருவான். ஆரோக்கியமான கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவன், தேக வலிமையிலும், நலனிலும் எப்போதும் அவனுக்கு அக்கறை உண்டு. 
நேரம் பாராது அன்று வழக்கத்தை விடவும் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, துளியும் களைப்பு என்பதை அவன் உடலும் மனமும் உணரவில்லை. பள்ளிச் சிறுவர்களின் வருகையைப் பார்த்த பின்பே மைதானத்தை விட்டு கிளம்பினான். 
தோப்பு வழி சென்றவன் பெரியகுளத்து நீரில் நீந்திக் குளித்தான். தனவதியின் வார்த்தைகளில் எழுந்த நினைவுகள் இன்னும் அவன் நெஞ்சில் தீராத நெருப்பாக எரிந்து கொண்டிருக்க, அந்த குளிர்ந்த நீராலும் அவனைக் குளிர்விக்க முடியவில்லை, அவனுக்கும் அணைக்கும் எண்ணமில்லை. 
பகை கொண்ட நெஞ்சத்தின் நெருப்பு அத்தனை எளிதாய் அணைந்து விடாது, மீண்டும் மீண்டும் கொடும் நாக்கை நீட்டி இரை வேண்டி எக்காளமிடும்! 
நெஞ்சோடு வயிறும் கபகபவென எரிய, பசியை உணர்ந்தவன் போதும் போதுமென மேலேறினான். வெளிப்படுத்த முடியாத சினம் சற்றே தனிய, இன்னும் ஆறாத ஆற்றாமையில் தத்தளித்தது தான் உள்ளமும்.
வீடு வந்தவன் தன் அறைக்குள் சென்று உடை மாற்றி, பூஜை அறைக்குள் சென்று கடவுளை வணங்கி, வெளியே வந்தான். 
“சட்டுன்னு சாப்பிட வாயையா ராசா..” சரியாக தனவதியும் அழைக்க, “பெரியாத்தா நானும் வந்துட்டேனாக்கும்..” என்றபடி வாசல் படிகளை இரண்டு இரண்டாகத் தாவி ஏறி வந்தான் சீனிவாசன். 
“வாலே கருப்பட்டி, சரியான நேரத்துக்கு மூக்கு வேர்த்துறிச்சாடே..” என்க, “நாக்கும் வேர்த்துப் போய் தான் வந்திருக்கே” என சப்புக் கொட்டியவன், “பின்ன, நீங்க வைக்கிற கருவாட்டுக்குழம்பு வாசம் தெருவையே கூட்டிம்ல..” என புகழ் பாடியபடி தரையில் அமர்ந்தான். 
“கூட்டும் கூட்டும், மூக்கை முக்கு வீடு வரைக்குக் கடன் கொடுத்திருக்கையாடே..” என முகவாயில் குத்தியவரின் உங்கையிலிருந்து வந்தது சாம்பாரின் வாசம். சதி செய்த மூக்கை சபித்தவன் முன்பற்களை காட்டிச் சிரித்துச் சமாளித்தான். 
வெள்ளை நிற காட்டன் சட்டையும், கருப்பு நிற கால் சட்டையும் அணிந்து, நெற்றியில் விபூதியோடு இளங்கதிரும் வந்தமர்ந்தான். தினமும் அதே உடை தான், யாரும் அவனைச் சிறு பையன் என்றோ இளைஞன் என்றோ எண்ணிவிட முடியாது. வளர்ந்த உயரம் வேறு, உடையிலும் பேச்சிலும் நடத்தையிலும் ஒரு பெரிய மனித தோரணை இருக்கும். 
இருவருக்கும் வாழை இலையை விரித்தவர், ஆவி பறக்க இட்டிலியும், பொங்கலும் பரிமாறினார். 
“வெந்நீர் வைச்சிருந்தனே, அதை விட்டுட்டு இப்படி குளத்து தண்ணீல குளிச்சிட்டு வந்திருக்கியே, உடம்புக்கு ஒத்துக்குமாய்யா” என சாடியபடியே பரிமாறினார். 
அன்று வழக்கத்தை விடவும் பசியில் கதிர் அதிகமாகவே உண்ண, அவன் பசியறிந்து பார்த்து பார்த்து பரிமாறினார் தனவதி. ஆனால் கருப்பட்டியோ அவர் பரிமாறவேண்டுமென்ற எதிர்பார்ப்பின்றி அவனாகவே வேண்டும் அளவிற்கு எடுத்து வைத்து உண்டான். 
முழுவதுமாக உண்டு முடித்தவன் புறங்கையையும் சப்பியபடி, “மதியத்துக்கு என்ன சாப்பாடு பெரியாத்தா?” என அடுத்த வேளைக்குத் தாவ, “எய்யா, மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு வைக்கட்டுமா..?” என கதிரிடம் கேட்டார். 
அவன் தலையாட்ட, “அப்படியே கடைஞ்சமோரும், எலுமிச்சை ஊறுகாயும்” என கருப்பட்டியும் கேட்டான். 
அப்போது தான் நினைவு வந்தவராக, “ஊறுகாய்க்கு ஊற வைக்கணும், ஒரு எட்டு சந்தைக்குப்போய் மண்பானை ஒன்னு வாங்கியாந்திடுயையா” என வேண்டினார். 
“சரி சின்னம்மா..” என்ற கதிர் கிளம்ப, கருப்பட்டியும், “ஊரெல்லாம் தேடி பத்தும் எங்க தனவதி போலே தங்கமில்லை” என ராகமிழுத்தபடி பின்னே வந்தான். 
அதே நேரம் நிலைவாசலில் உட்புறமிருந்த மாலையிடப்பட்ட பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்தபடியே வாசலைக் கடந்தவனின் உள்ளத்திலும் அது தான் இருந்தது.  
உண்மை தான், தனவதி அவனுக்கு சிற்றன்னையாயினும் சீராட்டலில் குறை வைத்ததில்லை. ஊரே சொல்லும் பெற்றவள் இருந்திருந்தால் எவ்வாறு அவனை வளர்த்திருப்பாளோ அதை விடவும் தனவதி தாங்குவார் என்று. பெற்றவளின் முகமெல்லாம் புகைப்படத்தில் பார்த்து மனதில் பதித்து கொண்டவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அன்னை என்றால் தனவதி தான் கண்முன் வருவார். இத்தனைக்கும் அவருக்கும் இரண்டு பெண்பிள்ளை வேறு, தந்தை இருந்த போதும் சரி, தற்போதும் சரி பிள்ளைகளுக்கு இடையே என்றும் அவர் வித்தியாசம் காட்டியதில்லை. 
இளங்கதிர் வண்டியை இயக்க, பின்னே ஏறிக்கொண்ட கருப்பட்டி, “ஏண்ணே இந்த கோசலை ஆத்தா இருக்காவல ஆரிசி மூட்டை ஒன்னு கேட்டாக, அடுத்த மாசம் அவுக மவன் துட்டு அனுப்பவும் தருமாம்” என்க, “சரிடே, சாயந்தரம் மறக்காம நம்ம சேகர் ஆட்டோல ஏத்தி விட்டுடு வீட்டுக்கே வந்து இறக்கிடுவ, பாவம் ஆத்தா” என்றான். 
எதிரே வந்த பால்காரர், “எய்யா கதிரு, பிரசர் மாத்திரை தீந்து போச்சி வாரயில வாங்கிட்டு வந்திடுதியா?” என்க, “சரிங்க மாமா..” என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான். 
“ஏண்ணே,  ஊருக்குள்ள பெருசுகளுக்கு உதவினா ஓடிப் போய் நிக்குதியே நீ ஒரு கறுப்புச்சட்டை போடாத காந்தி, கண்ணாடி போடாத காமராசர், கைத்தடி இல்லாத நேதாஜி, பேன்ட் ஜட்டை போட்ட பெரியாருண்ணே” என்றான் கருப்பட்டி. 
“போதும்டே நீ பள்ளிக்கூடத்துல வரலாறு சரியா படிக்கலேனு தெரியுது”
ஐயோ..! அசிங்கம், அவமானம் என மனதில் புலம்பிய கருப்பட்டி, “ஏண்ணே..!” என அலற, சின்ன சிரிப்போடு, “பின்னே என்னை வயசானவன்னு சொல்லுதியோ?” என்றான்.
“ச்சே..ச்சே.. உம்மை உயர்ந்த மனிதனு சொல்லுத”
“எது, ஆறடிக்கும் வளத்திருக்கேனே அதையாலே கேலி செய்யுத?”
“ஐயோ..உன்னை ஒரு கருணைக் கடல் சொல்லுதண்ணே” 
“ஏதோ மீன் பிடிக்கத் தூண்டில் போடுதேனு மட்டோ புரியுதுடே”
“அறிவாளிண்ணே நீ!” என்றவனின் புகழுரைகள் நின்றபாடில்லை. 
அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் தென்காசியில் இருக்கும் அவனது மில்லிற்கு வந்து சேர்ந்திருந்தனர். பணியாளர்களை மேற்பார்வை பார்த்த பின் அலுவலக அறைக்குச் சென்றவன் மதிய உணவு வரையிலும் கணக்கு வழக்குகளை பார்வையிட, வீட்டிலிருந்து மதிய உணவை வாங்கி வந்திருந்தான் கருப்பட்டி. 
இருவருமே இணைத்து உண்டு முடிக்க, அதன் பின்பும் சிறிது நேரம் அலுவலக வேலைகளைப் பார்த்தான். மாலை நேரம், “வெளியே கொஞ்சம் கலெக்ஷன் வசூலிக்க வேண்டியிருக்கு, முடிச்சிட்டு வீட்டுக்குப் போறேன்ல, நீ வேலை முடியவும் சாவியை வீட்டுக்கு கொண்டாத்திடுலே” என்றான் கருப்பட்டியிடம். 
“சரிங்க அண்ணே..” என தலையாட்டியவனின் சட்டைப்பையில் பணத்தை வைத்தவன், “நைட்க்கு வேலு அண்ணாச்சி கடையில கொத்து பரோட்டா சாப்பிட்டுக்கோல” என்றுரைத்து கிளம்பினான். 
வெளி வேலைகள் அனைத்தும் முடிய, தனவதி கேட்ட மண்பானை நினைவில் வர, சந்தைக்குள் சென்றான். உஷ்ணம் குறைந்த மாலை நேரம், ஆதவனும் மேற்கு மலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். அதற்கு முரணாகச் சிலிர்க்கும் இளம் காற்றோடு கலந்த பூக்கள், காய்கனிகளின் வாசமும் நாசி நிறைத்தது. மறுகோடியில் மண்பாண்டங்கள் இருக்கும் கடை நோக்கிச் சென்றவன், ஊறுகாய் போடும் அளவிற்கான ஜாடிகளையும் பானைகளையும் பார்த்தான். 
பானை ஒன்றை எடுத்தவன் அதன் கணம் பார்த்து, சுண்டிப் பார்த்து சத்தம் உணர்ந்து, “எக்கா, இதெம்புட்டு?” என்றபடி ஆராய்ந்து கொண்டிருக்க, “சில்லறை இல்லை, இவுக கிட்ட இதுக்கும் சேர்ந்து வாங்கிக்கோங்கம்மா” என தன்னை நோக்கிய நீண்டிருந்த கரத்திலும், தன்னருகே கேட்ட குரலிலும் வெடுக்கென நிமிர்ந்தான். 
இளம் மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் லாங் டாப்பும், கண்களில் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்த இளம்பெண், தன்னை தான் குறிப்பிடுகிறாள் என்பதை உணர்த்துவது போல் இன்னும் அவள் கைகள் அவனை நோக்கித் தான் நீண்டிருந்தது. 
உடையும் ஆளும் யாரிவள்? புரியாது அவன் பார்க்க, விற்பனை பெண்மணி அவனைப் பார்க்க, அதில் முகம் சிவந்தவன், “இந்தா யார் புள்ள நீ?” என குரல் ஓங்க எகிறினான். 
“ம்ம்.. எல்லாம் உங்களுக்கு உரிமைப்பட்டவ தான்” அசராது பதில் சொல்லியவள், வெடுக்கென முகம் திருப்பினாள். என்ன தைரியம் இவளுக்கு சினத்தோடு நிமிர்ந்தான். 
பேசிய இரண்டே வார்த்தையில் அவளின் வலது உதட்டோர உட்புறம் உபரியாய் இருக்கும் தெற்றுப் பல் வெளிப்பட்டு அவன் கவனத்தைப் பறிக்க, அதிர்ந்து பார்த்தவனின் உதடுகள் ஓசையின்றி, “வது..” என முனங்கியது. 
தன்னை அறிந்ததில் முகம் மலர்ந்தவள், சட்டெனக் கண்களிலிருந்த கண்ணாடியைக் கழட்டிக் கண்சிமிட்டி விட்டுத் திரும்பி நடந்தாள். அந்த கொத்தும் பார்வையில் கொள்ளையிட்டுச் சென்றிருந்தாள் அவனின் பைங்கிளி. 
அவன் பார்வையும் தொடர, கைகளில் இரண்டு சிறு பூந்தொட்டிகளைத் தூக்கிச் சென்றவள் ஸ்கூட்டியின் முன் வைத்துவிட்டு வண்டியை இயக்கி சிட்டாய் பறந்திருந்தாள். 
எதிர்பாராது அதிர்ந்தானே தவிர மகிழவில்லை. இப்போது மட்டும் ஏன் வந்தாள்? என ஒருவித கோபமும் எரிச்சலும் தான் பொங்கி வந்தது. சிடுசிடுப்போடு அவளுக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.
இரவு வழக்கம் போலே வயிறார உண்டுவிட்டு முற்றத்துக் கட்டிலில் காற்றாடப் படுத்தும் விட, உறக்கம் தான் சிறிதும் வராது படுத்தியது. உரிமைப்பட்டவள் என்றுரைத்தாளே என்ன எண்ணத்தில் சொல்லினாள்? எதற்காக வந்திருக்கிறாள்? 
அநாதரவாய் தவித்து நொடி, சாய்ந்து கொள்ளும் தோளுக்காக ஏங்கிய நொடி, இறுதி உயிர் மூச்சை இழுத்துப் பிடித்து நின்ற நொடிகளில் எல்லாம் எங்கே சென்றாளாம்? 
என் இழப்புகளை ஈடுகட்ட இவளால் இயலுமா என்ன? எவ்வாறு இயலும்? இழப்புகளைத் தந்ததே இவர்கள் தானே? இழந்த சந்தோஷங்களும் இளமைக்காலமும் திரும்பி வருமா? நிறைந்து வீடு இன்று வெறுமையாய் இருப்பதற்குக் காரணமே இவர்கள் தானே? நினைக்கையிலே உடல் இறுக, நெஞ்சம் அடைக்க, மூச்சிற்கும் திண்டாடும் நிலை. 
புதைத்த நினைவுகள் எல்லாம் மீண்டும் வர, நிலையில்லாது தவித்தான். நெஞ்சில் கொண்ட வலி வஞ்சமாய் மாறியிருக்க இந்நிலையிலா இவள் வந்திருக்க வேண்டுமென்று வெம்பினான். அவள் வரவை அவனால் சிறிதும் ஏற்கமுடியவில்லை.
அவளைக் காயப்படுத்த விருப்பமில்லை, ஆனாலும் தன் கோபம் அவளைக் காயப்படுத்திவிடும் என்றும் அறிவான், ஒருவாறு நிம்மதியில்லாது சஞ்சலத்தோடு வெகு நேரம் புரண்டவன் அசதியில் தான் உறங்கினான். 

Advertisement