Advertisement

“அதெப்படி வருவான், அவங்க அப்பா இறந்ததுக்கு நாம தான் காரணமுன்னு நினைக்கிறானே பின்ன எப்படி வருவான்? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை..” என்ற கலைவாணியின் புலம்பலுக்கும் பதில்லாது அமைதியாக இருந்தாள் சந்திரா. 
வாசலில் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர் நாராயணனும், வரதராஜனும். முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க, சரியாகப் பாதுகாப்புப்படை காவலர்கள் சூழ வந்தனர் அமைச்சர் தென்னரசும் அவர் மனைவியும். நாராயணனின் அழைப்பாலே அவர் வந்திருக்க, சரியாக எங்கிருந்து தான் வந்தாரோ சேர்மமூர்த்தி அவரும் வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அனைவரும் மணிமேடைக்கு அருகே சென்றிருந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியது. 
முன் இருக்கையில் அமர்ந்த பின்னே நினைவு வர, கணவரின் காதில், “ஏங்க கிப்ட்டா வாங்கி வைச்சிருந்த குத்துவிளக்கைக் கொண்டு வர மறந்துட்டேங்க” என்றார் தென்னரசுவின் மனைவி.
“சரி, சரி நம்ம பையன் யாரையாவது எடுத்து வரச் சொல்லுதேன்” என்றவர் அலைபேசியை இயங்கினார். 
முகூர்த்த நேரம் நெருங்கியது. ஐயர் மணமக்களை அழைத்து வரும்படி உரைக்க, அர்ச்சனா சந்திரவதனியை அழைத்து வந்தாள். என்ன செய்வது? எப்படி திருமணத்தை நிறுத்துவது என்ற கேள்வியிலே தத்தளித்துக் கொண்டிருந்தவளை அர்ச்சனா மேடை வரை நகர்த்தி வந்திருந்தாள். மேடையை நோக்கி வர, ஒரு நொடி அவளை அங்கு நிறுத்திய அம்சவேணி அவள் கழுத்தில் ரோஜா மாலையிட்டார். 
அந்த கனத்தைக் கூட தாங்காது துவண்டவளின் பார்வை வாசலை நோக்க, சரியாகக் கையில் குத்து விளக்குடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் இளங்கதிர். அவனைப் பார்த்தவள் பின் ஒரு அடியும் மேடையை நோக்கி வைக்கவில்லை. பார்வை மொத்தமும் அவன் மீது தானிருந்தது. 
உள்ளே வருபவனின் பார்வையும் அவள் மீதே இருக்க, ‘ஏதாவது செய்யேன்..’ தவிப்போடு கெஞ்சும் அவள் பார்வையின் மொழியை இன்றும் அறிந்து கொண்டான். கழுத்திலிருக்கும் மலர் மாலையை கசக்கிப் பற்றியபடி இருந்தவளின் கைகளை அர்ச்சனா இழுக்க முயற்சிக்க, நகர மறுத்து ஒருவிதமான பிடிவாதத்தில் கதிரையே பார்த்திருந்தவளின் விழிகள் மெல்ல கலங்கத் தொடங்கினது. 
கதிருக்கும் நெஞ்செல்லாம் மின்னல் பாயும் வேகத்தில் வலி பரவுவதை உணர முடிந்தது, இப்பொழுதும் அவள் சிறிது கலங்கினால் இவனால் துளியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது மண்டபத்திற்கு உள் வந்தவனின் பார்வை ஈர்ப்பு விசையில் இழுபட்டது போல் அவளை நோக்கியே இருக்க, சரியாகக் கேட்டது, “மாப்பிள்ளையைக் காணும்..!” என்ற ராஜேஷின் குரல்.  
அதைக் கேட்கும் முன்பே இளங்கதிரின் வருகையைக் கண்ட மனோ, “நீ எதுக்குலே உள்ள வந்த? உன்னை யாரு உள்ள விட்டது?” என எகிறியபடி அவன் சட்டையைப் பிடித்திருந்தான். 
“என்ன பிரச்சனை செய்ய வந்திருக்கியா? வெளியே போடா நாயே..?” என வெளியே தள்ள நினைத்து கதிரின் சட்டையப் பற்றி இழுக்க, ஒரு கையில் குத்துவிளக்கு இருக்க, ஒற்றைக் கையில் தன் சட்டையிலிருந்த மனோவின் கையை பிரித்துவிட்டு முறுக்கினான் கதிர். 
அனைத்தும் நொடியில் நிகழ்ந்துவிட, சந்திராவைத் தவிர, மனோவின் மொத்த குடும்பமும் பெண் வீட்டு உறவுகளும் அவனை நோக்கி நெருங்கிட, அமைச்சர் தென்னரசுவும் அவர்களை நோக்கி வந்தார். கதிர் வருவானோ பிரச்சனை செய்வானோ என்ற பயத்தில் ஏற்கனவே மச்சான், மாமன் பிள்ளைகள் என உறவுகளில் ஆட்களைத் தயார் செய்தே வைத்திருந்தான் மனோ. 
வந்த கதிரும் மனோவின் கையை முறுக்கியதும் அவர்கள் முந்தி வந்து கதிரை சூழ, அத்தனை பேரையும் கதிர் ஒற்றை ஆளாக சமாளிக்க, அங்கே கைகலப்பு ஆனது. இளசுகளை அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் அடக்க முயற்சிக்க, “நம்ம வீட்டுக் கல்யாணத்துல ஏன்டா வம்பு பண்ற?” என மனோவை அடக்க முயன்றார் வரதராஜன். 
வெண் பட்டில் இரத்தத்துளிகள் தெளிக்க, குத்துப்பட்டு கன்றிய முகத்தோடு அடங்காது மனோ துள்ள, கதிரும் விடாது அவனைத் தாக்க, சுற்றி இருக்கும் இளசுகள் பெரியவர்களின் கண்டிப்பையும் மீறி கதிரை தாக்க முயற்சிக்க, சரியாக உள்ளே வந்த அமைச்சர், “நிறுத்துங்கப்பா..” என அதட்டலிட்டர். 
அத்தனை பேரும் சற்றே அடங்கி விலகி நிற்க, “என்ன கதிரு இதெல்லாம்? நீயா இப்படி?” என்றவர் நம்பாது கேட்க, “அண்ணாச்சி எனக்கும் இவாளுக்குக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை, குத்துவிளக்கைக் கொடுக்க தான் வந்தேன் ஆனாலும் என்னை அடிக்கும் போது நான் என்ன கை கட்டி வேடிக்கையா பார்க்க முடியும்?” என்றவன், கீழே கிடந்த குத்து விளக்கைத் தூக்கி தென்னரசுவின் மனைவி கையில் கொடுத்தான். அவரைச் சுற்றிலும் பெண்கள் கூட்டம். 
“என்ன நீங்க? எல்லாரும் சொந்த பந்தம், ஒரு ஊர்க்காரங்க இப்படி உங்களுக்கு உள்ளேயே அடிச்சிக்கிடலாமா?” என அவர்கள் பக்கமும் அவர் வருத்தம் தெரிவிக்க, “உனக்குப் பொறுமையே கிடையாதா? என்ன எதுன்னு விசாரிக்காம இப்படியா மனோ கை நீட்டுறது? நம்ம பிள்ளை கல்யாணம்லே..” என கேட்டபடி அவன் கன்னத்தில் அறைந்திருந்தார் வரதராஜன். 
அடுத்த அடி அடிக்கும் முன் உறவுகள் தடுக்க, மனோவிற்கு பெரும் தலைகுனிவு, அவமானம்! அனைத்தும் கதிரால் தான் என்றே நினைத்தவன் கதிரை முறைத்து நின்றான். “கல்யாணம் முடிச்சி குழந்தையும் பெத்தாச்சு, வயசுக்குத் தக்கன கொஞ்சம் கூட பொறுப்பே இல்லைல உனக்கு” என மென்குரலில் மனோவை கண்டித்த வரதராஜன் கைகளை இறக்கிக் கொண்டார். 
அமைச்சர் அவ்விடத்தில் விசாரித்துக் கொண்டிருக்க, அதே நேரம் மணமேடைக்கு மறுபுறம் ராஜேஷை விசாரித்துக் கொண்டிருந்தனர் மாப்பிள்ளை வீட்டார்கள். 
“நேத்து நைட் நீங்க இரண்டுபேரும் தானேடா ஒரே ரூம்ல தூங்குனீங்க? இப்போ அவனை மட்டும் காங்கலை? எங்கடே போனான் அவன்?” உச்ச பதட்டத்தில் சேர்மமூர்த்தி கேட்க, ராஜேஷ் விழித்து நின்றான். நேற்றைய இரவு சந்திரா செல்லவும் அரவிந்தனின் முன்னாள் காதலியைப் பற்றிப் பேசியது வரை அவன் நினைவிலிருந்ததே தவிர, அதன் பின் எதுவும் நினைவிலில்லை. 
எங்குச் சென்றானோ? போதையில் வேறு இருந்தானே? என்ற பதைபதைப்பு குடும்பத்தினருக்கு, சரியாகத் திருமண நேரத்தில் காணாமல் போய்விட்டானே இனி திருமணம்? என்ற கவலை சேர்மமூர்த்திக்கு. கண்ணிமைக்காது சந்திராவைக் கண்காணித்திருந்த அனைவரும் அரவிந்தனைக் கவனிக்கத் தவறியிருந்தனர். 
கசங்கிய சட்டையை நீவியபடி கூட்டத்திலிருந்து விலகி வெளியே வந்த கதிரின் பார்வையில் இன்னும் அதே இடத்தில் கழுத்தில் மாலையைத் தாங்கியபடி கலங்கி நின்ற சந்திரா தான். அவளைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க இயலாது செயலிழந்து நின்றான் ஒரு நொடி.
‘அப்போ எனக்காக வரவில்லையா?’ என்ற கேள்வியை அவள் விழிகள் கேட்க, நெஞ்சம் விம்பியது. தனக்காகத் தான் தன்னவன் வந்துவிட்டான் என மகிழ்ந்தவளுக்கு நொடியில் ஏமாற்றம், கூர் அம்புகளாக குத்தியது. இதயம் வெட்டுண்டு வலித்தால் கூட இத்தனை வலியை உணர்ந்திருக்க மாட்டாள். தன்னை விட அவன் கோபம் பெரிதாகிப் போனதோ? தன் மீதான அவன் நேசம் பொய்த்துப் போனதில் வலி! 
இத்தனை ஆண்டுகளால நேசத்தை நெஞ்சில் சுமந்து, அவனோடு மட்டுமின்றி அத்தனை பேரிடமும் இந்த நொடி வரை ஒற்றை ஆளாக போராடியதெல்லாம் வீணாப் போனதோ? எங்கோ பெரிதாகத் தோற்ற உணர்வு. பொங்கி வந்த அழுகை மூச்சடைக்க, பெரும் குரலெடுத்துக் கத்தி, கதறி விடும் வேகம்! 
“தாத்தா..” கதறல் குரல் அங்கிருந்த அத்தனை பேருக்கும் கேட்க, திரும்பிப் பார்த்தலில் நாராயணன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அர்ச்சனா தான் கத்தி இருந்தாள், அருகே விசும்பியபடி நின்றிருந்தார் வள்ளியம்மை. 
பதறிய அனைவருமே அவரை நெருங்க, சந்திராவும் கதிரும் அதே இடத்தில் சிலையாக நின்றனர். பேச முடியாது மூச்சு வாங்கத் திண்டாடியவர் சந்திராவை வருமாறு கை அசைத்து அழைத்தார். அவ்வளவு தான் மறுநொடியே ஓடி வந்து அவர் முன் மண்டியிட்டவள், “தாத்தா..” என தேம்பினாள்.
“உன் கல்யாணத்தைப் பார்க்காமலே போயிடுவேனோன்னு பயமா இருக்குடா..!” என வார்த்தை குளற வேதனையுற்றவர் சந்திராவின் தலை தடவ, “மணமேடை வரை வந்து நின்னு போகும்னு யாரும் எதிர்பார்கலையேங்க..” என வள்ளியம்மை புலம்பினார். 
“அதனால இப்போ என்ன? சென்னைக்கு போய் வேற நல்ல மாப்பிள்ளை பார்க்காலாம் மாமா கவலைப் படாதீங்க, கண்டிப்பா அவ கல்யாணத்தை நீங்க பார்ப்பீங்க” என கலைவாணி ஆறுதலுரைக்க, மறுப்பாகத் தலையசைத்தார். 
வியர்த்த முகமும், நெஞ்சில் அழுத்தியிருந்த விதமும் அவர் வலியைப் பிரதிபலிக்க, வரதராஜனும் மனோவும் மருத்துவமனைக்கு அழைக்க, சந்திராவின் திருமணத்தைப் பார்க்காமல் வர மாட்டேனென பிடிவாதமாகச் சைகையில் தெரிவித்தார். 
“கவலைப்படாதீங்க ஐயா, அரவிந்தன் பக்கத்துல எங்கேயாவது தான் போயிருப்பான் தேடிக் கூட்டியார ஆளுகளை அனுப்பி இருக்கேன்” என மாப்பிள்ளை வீட்டார் தெரிவிக்க, “காணாமல் போனா தேடலாம், ஓடிப் போனவனை எங்க போய் தேடுறது?” என சந்திராவின் உறவுகளிலிருந்து யாரோ குரல் கொடுத்தனர். 
சில நொடிகளிலே அனைத்தும் நிகழ்ந்து விட, வலியில் துடிப்பவரைப் பார்த்திருந்த தென்னரசு முன்னே வர, சந்திரா விலகி பின் சென்று நின்றாள். கதிரை அருகே அழைத்தவர், “ஐயா இவன் கதிரு, என் பையன் மாதிரி. நான் சொல்லணும்னு அவசியமில்லை உங்களுக்கே தெரியும் அம்புட்டு நல்ல பையன். உங்களுக்கு விருப்பம்னா உங்க பேத்திக்குக் கட்டி வைக்கிறேன்யா” என்றார். 
“அண்ணாச்சி..!” அதிர்ந்த கதிர் நழுவப் பார்க்க, அவன் கைகளை இறுகப் பற்றினார் தென்னரசு. அவர் மீதிருக்கும் மரியாதை அவ்விடத்தில் அவனைச் செயலிழக்க வைக்க, மௌனமாக நின்றான். அதற்குள் மனோ எதிர்ப்பு தெரிவிக்க, வலியில் துடிக்கும் தந்தையே பெரிதாகத் தெரிய, மகனை அடக்கினார் வரதராஜன். 
ஆனாலும் அரவிந்தனின் பெற்றோருக்கு சந்திரவதனி விட்டுவிட மனமில்லை, தங்கள் குடும்பத்திற்கு என நிச்சியம் செய்த பெண்ணை வேறொருவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்க மாட்டோம், வழக்கு தொடுப்போம் என பிரச்சனை செய்தனர். ஆனாலும் அவர்களால் தான், அவர்கள் மகன் காணாமல் போனதால் தான் இந்த பிரச்சனை, அவர்களால் ஏற்பட்ட அவமானத்திற்கு அவர்கள் மீது தான் மனநஷ்ட வழக்குத் தொடுக்கமுடியும் என்ற தென்னரசு அவர்களை அடக்கினார். 
கூட்டம் மொத்தமும் நாராயணனைச் சுற்றி இருக்க, சூழ்நிலை இடம் மாறுவதை உணர்ந்த சேர்மமூர்த்தி ராஜேஷை நோக்கிக் கண்ணசைக்க, மேடையில் தாம்பூலத்தின் மீதிருக்கும் தாலிக் கயிற்றைக் கையில் எடுத்தவன் நொடி நேரத்தில் சந்திரவதனியைத் தன்னை நோக்கி இழுத்திருந்தான்.
அனைவரும் அவர்களை நோக்கி திரும்பும் முன், என்ன நிகழ்கிறது என்பதை அவள் உணரும் முன் அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டப்பட்டிருந்தது. 
அரவிந்தனுக்கென்று நிச்சியம் செய்த தங்கள் பெண்ணை யாரென்றே அறியாதவன் திருமணம் செய்து கொள்வதா? சந்திராவின் மொத்த சொந்தமும் நொடியில் பதற, சரியாகத் தாலியைக் கட்ட முயன்ற நொடி, தென்னரசு வீசிய குத்துவிளக்கு ராஜேஷின் மீது விழ, அவன் காயப்பட்டு, தடுமாறிய கீழே விழ, அதே நொடியில் கதிர் தனது சட்டைப்பையிலிருந்த தாலியை எடுத்து சந்திராவின் கழுத்தில் கட்டியிருந்தான். 
தென்னரசு சொல்லியதால் காவலர்கள் ராஜேஷை கைது செய்ய, அரவிந்தனின் குடும்பமும் சொந்தபந்தமும் வெளியேற, கதிரின் கரம் பற்றி வந்த சந்திரா நாராயணின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். அதன் பின்னே வரதராஜனும் மனோவும் மற்ற உறவுகளும் நாராயணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, சந்திராவின் கைக்குள் இருக்கும் தன் கரத்தை உருவினான் கதிர். 
“என் மனைவியா மட்டும் என்னோட வாழ்றதுனா வா..” என்றவன் யாரையும் கண்டுகொள்ளாமல் மண்டபத்திலிருந்து சென்றுவிட்டான். 
என் மனைவியா மட்டும் என்னோட வாழ்றதுனா வா.. இல்லை எனில் உன்னோடு ஒரு வாழ்வு தேவையில்லை என்பதை சொல்லவில்லை எனினும் சந்திராவால் புரிந்து கொள்ள முடிந்தது. பெற்றோர்களை, குடும்பத்தை, மொத்த உறவுகளையும் விடுத்துச் செல்வதா? அவள் தான் கலங்கி நின்றாள். 

Advertisement