Advertisement

அத்தியாயம் 09
பொன் அந்தி மாலைப் பொழுது, இரு வீட்டு உறவுகளாலும் சுற்று வட்ட சொந்தங்களாலும்  நிறைந்திருந்தது அந்த திருமண மண்டபம். வண்ண விளக்குகளும் வரவேற்பும் ஆடம்பரமாகக் காட்சியளிக்க, எங்கும் செழுமையே! சற்று முன் தான் அரவிந்தனுக்கும் சந்திரவதனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்திருந்தது. 
அனைவரும் உறவினரையும் விருந்தினரையும் கவனிக்க, உடை மாற்றுகிறேனென சந்திராவின் அறையில் அவள் மட்டும் கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். கையிலிட்ட மருதாணியும் மையிட்ட கருவிழியும் சிவந்திருந்தது. 
சந்திராவின் உள்ளமும் உடலும் ஒருவாறு கூசியது. சற்றே முன் தான் அவள் தோளில் கரம் போட அரவிந்தனோடு புகைப்படம் எடுத்திருந்தனர். மறுநொடியே நிற்க இயலாது ஓடி வந்து விட்டாள். 
ஒரு நொடி கூட சகிக்க இயலவில்லையே, யாரை நோவது? எழுதி வைத்த விதியைத் தவிர, மனமெங்கும் அவளின் அவன் தான். திக்குத் தெரியாதொரு காட்டில் எங்கோ மலை உச்சியில் தெரியும் சிறு மின்மினி ஒளி தான் அவள் நம்பிக்கை. அந்த நம்பிக்கை யார் தந்தது என்றெல்லாம் தெரியாது, அவள் கொண்ட உயிர் காதலின் மீதான நம்பிக்கை, அதனாலே இன்னும் அவள் உயிர் உடல் தங்கியிருந்தது. 
மனோகர் வந்த இரண்டாம் நாளே குடும்பத்தினர் அனைவரும் வர, தனிமை என்பதே அவளுக்கில்லை. அதிலும் உங்கள் கவனிப்பு சரியில்லை என வள்ளியம்மையை மனோ குறை கூறியிருக்க, அதன் பின் நொடியும் விடாது சந்திராவை அவர் தான் கவனித்துக் கொண்டார். திருமணம் முடித்து செல்லப்போகும் பேத்தி எனச் சீராட்டலிலும் குறை வைக்கவில்லை. அடுத்தடுத்து. வேகவேகமாக திருமண வேலைகள் துவங்க, பத்து நாளில் திருமணமும் ஏற்பாடாகி விட்டது. 
இந்த பத்து நாட்களில் அவன் என்னென்ன செய்தானென்று தெரியவில்லை. அவனின் சந்திரா தானே நான், தன்னால் தான் அவனைச் சந்திக்க இயலவில்லையே தவிர, அவன் ஏன் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. 
மிகுந்த அழுத்தமான மனநிலையிலிருந்தாள். அனைத்தும் கதிரை குறித்துத் தான். நிச்சியமானதை சொல்லவில்லை எனக் கோபம் கொள்வானோ? வருந்துவானோ? திட்டமிட்டு ஏமாற்றியதாக எண்ணுவானோ? என் நேசத்தை உணர்ந்திருப்பானா? அவனைத் திருமணத்திற்கு அவசரப்படுத்தியதற்கான காரணத்தை புரிந்திருப்பானா? ஏற்கனவே என்னைத் தவிர்த்தவன் தற்போது முற்றிலுமாக ஒதுக்கி விடுவானோ? என அவன் மனம் அறியாது தத்தளித்த போதும் அசைக்க முடியாதொரு நம்பிக்கை தனக்காக அவன் வருவானென. 
கதவு தட்டும் ஓசையில் சிந்தை கலைந்தவள் திடுக்கிட்டு விழித்தாள். “சந்திரா தாத்தா வந்திருக்கேன்” என கேட்ட நாராயணனின் குரலில், “உள்ள வாங்கத் தாத்தா” என அழைத்தாள். 
உள்ளே வந்தவர் அழகோவியமாய் அமர்ந்திருந்த பேத்தியை ஆசையாய் பார்த்தபடி மெல்லத் தலை வருடினார். அவ்வளவு தான் உடைந்தே விட்டாள் சந்திரா. தொண்டைக்குழி அடைக்க, பொங்கிய கண்ணீர் இமை தாண்டி இறங்க, விசும்பினாள். 
“தாத்தா..! நீங்கச் சொல்லித் தானே இந்த கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன், நீங்கச் சொல்லித் தானே ஊருக்கு வந்தேன், நீங்கச் சொல்லித் தானே இளாகிட்ட பேசினேன்..? எல்லாமே நீங்க சொல்லிக் கேட்டேனே, பாருங்க இப்போ என்னை எந்த நிலமையில உக்கார வைச்சிருகீங்கனு..” என அவர் கைகளைப் பற்றிக் கொண்டு தேம்பினாள். 
உண்மையில் மணித்துளிகள் கரைய கரைய சந்திராவினுள் பயம் பரவ ஆரம்பித்திருந்தது. கதிருக்கு அவள் மீது இருக்கும் நேசம் அறிந்தவள் தான் இருந்தும் அவன் மீது நம்பிக்கை வரவில்லை. இதுவரையிலும் அந்த நம்பிக்கையைத் தரும்படியான செயலோ வார்த்தையோ எதுவும் அவனிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை. தன் குடும்பத்தின் மீதிருக்கும் கோபம் தன் மீதான அவன் காதலை அழுத்தி அடிதள்ளி உயர்ந்திடுமோ என்ற பயம் அவளை வலுவிழக்க செய்தது. அவள் நம்பிக்கை மின்மினி ஒளி இழுக்கத் துவங்க அவளைச் சுற்றிப் பய இருள் படர்ந்தது. 
தாங்க மாட்டாமல் அழுபவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தவர், “இன்னும் நேரம் இருக்கு நம்பிக்கையோடு இரு கண்ணு” என்றார். 
“எனக்கு அந்த நம்பிக்கை இல்லை தாத்தா, வாழ்வா சவாங்கிற பயம் தான் இருக்கு. பயமா இருக்கு தாத்தா.. இளா எனக்காக வருவானா தாத்தா..? ம்கூம், அது எப்படி வருவான்? அவன் தான் நம்ம குடும்பமே ஆகாதுன்னு கோபமா இருக்கானே..! எல்லாம் உங்களால தான்..” என புலம்பியவள் அவர் மீதே குற்றம் சாட்டினாள். 
“அவங்கிட்ட பேசப் போனா அவன் தான் என்னைப் பார்க்க மாட்டேன்னு மறுத்துட்டான், இருந்தாலும் கதிர் உன்னைக் கலங்க விட்டிடமாட்டான் சந்திரா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு, நீயும் தைரியமா இரு” எனப் பேத்தியைத் தேற்றினார். கதிர் நிழல் அல்லாது எதுவும் அவளுக்குத் தைரியம் தராது. 
“நீ கவலைப்படாத கண்ணு, நாளைக்கு இந்த கல்யாணம் நடக்காது அதை சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன். அழதே சந்திரா” என்க, மீண்டும் கதவு தட்டும் ஓசை வர, பின்னே மனோவும் வந்தான்.
உள்ளே வந்த மனோ இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சந்திரா மாப்பிள்ளை ரூம் வரைக்கும் கொஞ்சம் வந்திட்டுப் போ, அவர் பிரண்ட் இன்ட்ரோ பண்ணுமாம்?” என்க, முகத்தைச் சுளித்தாள் அவள். இப்போ தானே மேடையிலிருந்து வந்தேன், அதற்குள் என்ன? இவன் என்ன இத்தனை உரிமையாக அழைத்திருக்கிறான்? அடக்கமுடியாத எரிச்சல் அவள் முகத்திலே வெளிப்பட்டது. 
மனோ எதையும் கண்டுகொள்ளவில்லை, அலைபேசியிலே கவனமாக இருக்க, “போ சந்திராம்மா போயிட்டு வா. நீ முன்ன போ, நான் அர்ச்சனாவை அனுப்பி வைக்கிறேன்” என்றார் நாராயணன். 
ஊரிலிருந்து வந்திருந்த அன்று நாராயணனை நலம் விசாரிக்க வந்த போது தான் முதல்முறையாக அரவிந்தனை பார்த்தாள். ஆனால் அவன் அதற்கும் முன் புகைப்படத்தில் பார்த்திருப்பான் போலும். அவனின் முதல் பார்வையே சந்திராவின் முகம் தாண்டிச் செல்ல அதிலே அவனைப் பிடிக்கவில்லை அவளிற்கு. அதன் பின் அவனைச் சந்திப்பதையே தவிர்க்க, பெரியோரின் முன் மட்டுமே சந்திராவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க, அவனும் தழுவல் பார்வையோடு நின்று கொண்டான். 
கதவைத் தட்டிவிட்டு உள்ளே செல்ல, “வா சந்து..” முன்பற்கள் தெரியும்படியான சிரிப்போடு வரவேற்க, அவன் உளறிய வார்த்தையும், அவன் மீதிருந்து வந்த மதுவின் நெடியும் அவளை முகம் சுளிக்க வைத்தது. 
“அப்போவே சாரி மாத்தணும்னு போன, இன்னும் மாத்தலையா? யூ ஆர் லூகிங் ப்யூட்டிஃபுல்” என்றான். 
என்னவோ அவன் பார்வையும் கவனமும் தன் உடலிலும் அழகிலும் இருப்பது அவளுக்கு அருவருப்பைத் தந்தது. சந்திராவிற்குச் சுற்றியிருக்கும் புடவை கூட நெருப்பாய் எறிவது போன்றிருந்தது, “ம்ம், இது என் பிரண்ட் ராஜேஷ், வரதுக்கு லேட்டாகிட்டு அதான் உன்னை அறிமுகப்படுத்தக் கூப்பிட்டேன்” என அருகே நின்றவனைக் காட்டினான். 
நான் என்ன அலங்காரப் பொம்மையா? அடுத்தவனிடம் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ள? மனம் தீக்காடாய் எரிந்தது. ஏனோ கட்டுப்படுத்த முடியாத கோபம். சிரிப்பில்லாது முகத்தைச் சுளித்தபடி அவனை ஒருபார்வை பார்த்தவள் மீண்டும் அரவிந்தனிடம் திரும்பினாள். 
“நான் உங்ககிட்ட தனியா பேசணும்” என அறிவிக்க, நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 
ஒரு மரியாதைக்குக் கூட அவன் நகராது நிற்க, அரவிந்தனோ, “இவனுக்கு தெரியாமல் எந்த சீக்ரெட்டும் என் லைப்ல இல்லை, சும்மா சொல்லு. இவனும் நானும் வேற வேற இல்லை” என்றான். 
ஒரு நொடி கூட தயங்கவில்லை, யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, எந்த பிரச்சனை வந்தாலும் சரி எதிர்ந்து பிடிவாதமாக நிற்பது என்ற உறுதியிலிருந்தாள். 
“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை..” என அவள் ஆரம்பிக்க, “என்னவ இது பத்தி தான் நாமா அப்போவே பேசிட்டோம்ல..” என இடையிட்டான். 
கை நீட்டித் தடுத்தவள், “நான் சொல்லிடுறேன் நான் இளங்கதிரைத் தான் விரும்புறேன். இந்த கல்யாணம் நடக்காது, உங்களுக்குத் தான் அவமானம்..” என்றவள் ஆரம்பிக்கும் போதே, அருகே இருக்கும் நண்பனின் தோளில் கை போட்டபடி கலகலவென சிரிக்கத் தொடங்கினான் அரவிந்தன். 
இவன் என்ன லூசா என்பது போலே ஒரு பார்வை பார்த்தவள், மறு நொடியே கதிரை எதுவும் செய்துவிட்டானோ என பதைபதைத்தாள். 
“இந்த பப்பி லவ் கதையெல்லாம் சொல்லிக்கிட்டு நம்ம ஹேப்பி மொமென்ட்ட வீணடிக்காதல சந்து..” என்றவன் இழுக்க, சந்திராவிற்கு முகமே சிவந்து விட்டது, “சந்திரவதனி..” விரல் நீட்டி எச்சரித்தாள். 
“நீ மட்டும் லவ் பண்ணி, என்ன காலம் முழுக்க ஔவையாரா இருக்கப் போறீயா? அவன் லவ் பண்ண வேண்டாமா? உனக்காக அவன் வருவானா? உன் கதையெல்லாம் எனக்கும் தெரியும்…” என இடையிட்டான் ராஜேஷ். 
ஒருமையில் அழைத்த பண்பும், தன் நேசத்தை இளக்காரமாகப் பேசியதும் அவளுள் எரிமலையையே கொதிக்கவிட, அது வரையிலும் அரவிந்தன் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 
“இளமையும் அழகும் இருக்கு, வாழ வேண்டிய வயசு புள்ள உனக்கு..” என்ற ராஜேஷ் பார்வையிலும் பேச்சிலும் பொறுக்க முடியாமல் அவள் ஒரு நொடியில் கையோங்க, சட்டென அவள் கைகளைப் பற்றினான் அரவிந்தன். 
“அதெல்லாம் நல்லாவே அனுபவிச்சி வாழ்ந்துட்டாங்க மச்சி..” என ராஜேஷிடம் பேசியபடி சந்திராவின் கைகளை முறுக்கிய அரவிந்தனுக்கு அவள் முகத்தில் கண்ட வலியின் ஒரு சைக்கோதனமான ஆனந்தம்! 
வலியோடு பல்லைக் கடித்தவள், “விடுலே..” என கத்தியபடி சுற்றிலும் பார்வையைச் சுழற்ற, “ஏன் இந்த கையை அவன் பிடிக்கும் போது சுகமா இருந்துச்சோ? அதென்னவ தோப்புல கொஞ்சி கூடினது பத்தலையாக்கும் நடு ரோட்டுலையும் என் கண்ணுமுன்ன அவனைக் கட்டிக்கிட்டு நிக்கிற?” என்றவன் கேலியாகச் சிரிக்க, சந்திராவிற்கு உடலே கூசியது. 
அதே நேரமும் கோபமும் தன்னிலை மறக்கும் அளவிற்குத் தலைக்கேற, அவன் முறுக்கிய கையில் வலி கூட, “இளங்கதிர் எனக்கு உரிமைப்பட்டவன், எங்க உறவைப் பத்தி பேச உனக்கு என்னலே உரிமை இருக்கு?” என்றபடி அருகே மேசையில் இருக்கும் மது பாட்டிலைக் கண்டவள் சட்டென அதை இடது கையால் எடுத்து அவனை நோக்கி ஓங்கி எறிந்தாள். அதற்குள் அவள் செயலில் சுதாரித்த ராஜேஷ் அரவிந்தனை தன்னிடம் இழுத்துக் கொள்ள, பாட்டில் அவனைத் தாண்டி சுவரில் மோதி சிதற, சந்திரா அவர்களுக்கு எதிர்த் திசையில் விழுந்திருந்தாள். 
“தப்பு பண்ணிட்டு இவ்வளவு தைரியம் வேற இருக்கா உனக்கு?” அரவிந்தன் போதையில் உளற, “என்ன தைரியம்? இது கொலை முயற்சி இரு உன்மேல கேஸ் போடுறேன்” என ராஜேஷ் உளறினான். 
எழுந்தவள், “கொன்னுடுவேன்ல..” என்ற மிரட்டலோடு விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டாள். 
“இவளையா மச்சி கட்டிகிடப் போற?” ராஜேஷ் கேட்க, “அடேய் இவ ஒன்னும் சாதாரண ஆள் இல்லை, இவளால சில பல வேலைகள் ஆக வேண்டியிருக்கு. அதெல்லாம் எங்கப்பனுக்கும் மாமனுக்கும் தான், எனக்குத் தேவை இவ அழகு தான்! கையை பார்த்தியா பட்டு மாதிரி பளபளன்னு இருக்கு..” என்றான் அரவிந்தன். 
“அந்த கை தான் உன்னை கொல்லப்பார்த்துச்சே..”
“ஆமாம் மச்சி, இவளுக்கு திமிர் அதிகம்ல, கல்யாணம் முடியட்டும் மொத்த திமிரையும் அடக்குறேன்” 
“அப்போ நானு? எனக்கு?” 
“என்னது உன்னதுன்னு வேற வேற இல்லை மச்சி, நானும் நீயும் ஒன்னுடா..” என்க, 
“அப்போ அடக்குறோம், என் நண்பேன்டா..” என பெருமையோடு அணைத்துக் கொண்டான் ராஜேஷ். ஏதோ ஒரு நிழல் உருவம் அவர்கள் அறைவாசலை கடந்ததை அவர்கள் கவனித்திருக்கவில்லை. 
அறைக்குள் வந்த சந்திராவிற்கு ஆத்திரம் அடங்க மறுத்தது, கதிரில்லாது தனியாகப் போராடும் நிலையில் தன்னை நிறுத்திய குடும்பத்தார் மீதும் கோபம் தான் பொங்கியது. சிகை அலங்காரத்தையும், நகையையும் புடவையும் களைத்து எறிந்தவள் அவன் பற்றிய கையே அழுத்தி அழுத்தித் தேய்த்தாள். 
அவள் உள்ளே வந்த வேகத்தையும் அவள் செயலையும் புரியாது பார்த்த அர்ச்சனாவும் கலைவாணியும் பதறி அவள் பின்னே வர, “பயப்படாதிங்க எனக்கொன்னும் கோட்டிப் பிடிச்சிடலை” என கத்த, “பின்ன ஏட்டி இப்படி பிகேவ் பண்ணுற? கத்தாத மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க காதுல விழுந்திட போவுது” என பதறினார் கலைவாணி. 
அது சந்திராவின் கோபத்தை அதிகரிக்கப் பல்லைக் கடித்தபடி முறைத்தாள். அர்ச்சனா தான் அவளை உடை மாற்ற வைத்து உறங்க வைப்பதற்குள் தவித்துப் போனாள். இவர்கள் வந்த இரண்டாம் நாளே வர்ஷா சந்திராவின் அலைபேசியில் கேம் விளையாடுகிறேன் எனக் கீழே போட்டிருக்க, அவ்வலைபேசி மனோவால் உடைக்கப்பட்டிருந்து. மனோவிற்கு சிறிது பயமிருக்க சந்திராவை எங்குமே வெளியில் விடாது, வீட்டுக்குள்ளும் தனிமையில் விடாது அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் இமைக்காது கவனித்திருந்தான்.
இது வரையிலும் சந்திராவிடமிருந்து எவ்வித தகவலும் இளங்கதிருக்கு சென்றிருக்கவில்லை. உண்மையில் கோபத்தை விட அந்த பயமே சந்திராவை இவ்வாறெல்லாம் நடக்க வைத்தது. அந்த பயத்தில் நித்திரை கூட அவள் மனதை இழுத்து வைத்திருக்க முடியாது போக, தத்தளித்தாள். காலம் இப்படியே உறைந்து விட்டால் போதும் என்ற எதிர்பார்ப்பு, விரைந்து வந்து கொண்டிருக்கும் விடியலை விரும்பவில்லை அவள்! 
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திராது, அதன் இயக்கமில்லையெனில் இன்னல்கள் கரையாது. நில்லாது நிமிடங்கள் நகர்ந்திருக்க, அரும்பியது அழகான விடியல், ரசிக்கத் தான் யாருக்கும் மனமில்லை. கொதிக்கும் எரிமலைக்கு உருவகமாகச் சிவந்த முகத்தோடு அமர்ந்திருந்தாள் சந்திரவதனி. 
கதிர் வருவானா என்ற பயமும்? வரவில்லை எனில் என்ன செய்வது என்ற யோசனையும் தாண்டி அவளிடம் கோபம் மட்டுமே! கோபம், கோபம் அப்படியொரு கோபம். தனக்கு விருப்பமில்லாது ஒன்றில் தன்னை அமிழ்ந்துவதில் கோபம். யாரென்று இல்லை அத்தனை பேரின் மீதும் ஒரு முரட்டுத்தனமான கோபம்! 
அந்த கோபத்தில் பிடிவாதமாக இறுக்கமாக இருக்க, அத்தனை பேரின் கைகளிலும் அடங்க மறுக்கும் முரட்டுப்பசுவாக சிலுப்பிக் கொண்டிருந்தாள். அதனாலே மாப்பிள்ளை வீட்டினர் யாரையும் அருகே விடாது கலைவாணியும், அர்ச்சனாவுமே அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். 
“கதிர் உனக்காக வரப் போவதில்லை, இது தான் உன் எதிர்காலம் ஏத்துக்கோ சந்திரா” மென்மையாக அறிவுறுத்தினாள் அர்ச்சனா. 

Advertisement