Advertisement

“ஒரு வாரமச்சு, துணி துவைக்கும் போது தண்ணிக்குள்ள விழுந்துடிச்சு” மெல்லிய குரலில் உரைக்க, செந்தில் முறைத்தான். 
“சரி விடு, நான் வாங்கித் தரேன்” என்க, அவள் கதிரைப் பார்க்க, “விடுங்க மாப்பிள்ளை, என் தங்கச்சிக்கு நான் வாங்கித் தரக் கூடாதா?” என்றான். 
கதிரின் கேள்வியில், உரிமையில்லை என உறவை ஒதுக்க முடியாது அமைதியாக ஏற்றான் செந்தில். ஆனாலும் ரேவதியின் மீதிருந்த முறைப்பு சிறிதும் குறையவில்லை. ஆனால் அவளிருந்த சந்தோஷத்தில் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 
கணவனிடம் கேட்டால் என்ன சொல்வான்? மாதச்சம்பளம் வரட்டுமென இரண்டு வாரங்கள் காத்திருக்க வைப்பான். பின்பும் எண்ணி எண்ணி தேவைக்கு போதுமென ஒன்றை வாங்கித் தருவான், அதே அண்ணனிடம் எனும் போதும் விரும்பியது உடனே கிடைத்துவிடும் நிலை! 
“அப்பறம் அம்மா சொன்னாங்களே இவங்க சொந்தத்துல ஒரு பொண்ணிருக்கு உனக்கு கேட்போமான்னு கேட்டதுக்கு வேண்டானுட்டியாம்..! ஏண்ணே..? உனக்குத் தான் இவர் குடும்பத்தைப் பத்தி நல்லா தெரியுமே..?” என ரேவதி கேட்க, சட்டென நெஞ்சில் கை வைத்தான் கதிர். 
“வேண்டாம்னு சொல்லலை ரேவதி, கொஞ்சம் வருஷம் போட்டும் பின்ன பார்த்துப்போம்னு சொன்னேன்” 
“ஏன் மச்சான்? கடமையெல்லாம் முடிச்சிட்டீரே பின்னக் கல்யாணம் பண்றதுக்கு என்ன?” என செந்திலும் கேட்க, “ஒரு வேளை யாரையும் விரும்புதியோ?” என எதிர்பார்ப்போடு கேட்டாள் ரேவதி. 
அனைத்தையும் அடுப்படியிலிருந்த தனவதியும் கேட்டபடி இருக்க, ஐயோ..! இதற்குத் தான் இவர்கள் வந்தார்களா? என நொந்தான் கதிர். 
“இந்த வயசுல கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்றவன் சமாளிக்க, “அட! வயசுல தான் பண்ணும் மச்சான், உம்மை ஜோடு தானே நானும்? இதோ இவளை கட்டிக்கிடல? நீர் என்னடானா பச்சப்புள்ளை மாதிரி பயப்படுறீரு? சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சி பிள்ளேல பெத்துகிட்டா அதுகளையும் சட்டுன்னு வளத்து விட்டுடலாம்ல, அப்போ தானே பேரபிள்ளோட விளையாடத் தெம்பிருக்கும். என்ன நான் சொல்லுதது?”
“சரி தான் மாப்பிள்ளை, சித்திரை தேரோட்டம் முடியட்டும் பார்த்துக்கலாம்” என்ற கதிர் எழுந்து செல்ல, ரேவதி கணவனை மெச்சுதலாகப் பார்த்தாள். 
கண்காணும் தூரம் வயலும், தென்னந்தோப்புகளும் நிறைந்திருந்த பசுமைகளுக்கிடையே இயற்கை காற்றை உள்ளிழுத்துச் சுவாசித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான் இளங்கதிர். பொதிகை சாரல் காற்றும் அதில் கலந்த குளுமையும் அவனையும் குளிர்விக்கவில்லை. பார்த்த இரண்டே வாரத்தில் பாடாய்ப் படுத்துகிறாளே! இவளை என்ன செய்வது? என்ற சிந்தையிலே நடந்து வர, சித்திரமாக எதிரே வந்தாள் சந்திரவதனி. 
ஆத்தி இவளா! பார்த்ததுமே மனம் பதற, காணாதவன் போல் வந்த பாதையில் திரும்பி நடந்தான். அருவிக்கரை பிள்ளையாரிடம் வேண்டுதல் வைத்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்த சந்திராவும் அவனை கவனித்துவிட, இதழ் பூத்த மென்னகையோடு அவன் அடி ஒற்றி பின்னே வந்தாள். எவ்வளவு தூரம் செல்கிறான் பார்ப்போம் என்றெண்ணம்! 
பின் தொடர்கிறாள் என்றறிந்த பின்னும் முன்னேறிச் செல்ல முடியாது சட்டென நின்றவன் கோபமுடன் திரும்பினான். அதுவரையிலும் சிரிப்போடு இருந்த முகத்தை அவளும் சட்டென சீரியஸாக மாற்ற, “என்னவ வேணும்? அதான் பின்னாலே வராதேன்னு நேத்தேச் சொன்னோம்ல?” என்றான். 
“நம்ம கல்யாணம்..?” 
“ஷ்ஷ்.. அதை பத்தி பேசாத.. அதெல்லாம் நடக்காது, உன் ஆசைக்கு நான் பலியாக முடியாது” 
“அதுக்கு தான் ரொம்ப யோசிச்சி ஒரு ஐடியாவோட வந்திருக்கேன்”
              கதிர் பதில் சொல்லவில்லை, இத்தனை விரைவாக மனதை மாற்றிக் கொண்டாளோ என்ற எதிர்பார்ப்பில் நோக்கினான். 
“அது.. வந்து.. நாம வேணா கல்யாணம் பண்ணிக்காம வாழ்றதை பத்தி பேசி ஒரு முடிவெடுப்போமா?” என்றவள் எளிதாக கேட்க, அவனோ சட்டென கை உயர்த்தியிருந்தான். மிரட்சியோடு விழிகளை மூடியபடி ஒரு அடி அவள் பின் நகர்ந்திருக்க, கட்டுப்பாட்டோடு கைகளை இறக்கிக் கொண்டவனுக்குக் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 
“ஆக்கங்கக்  கெட்டத்தனமா என்னலே பேசுற? இனியொரு மட்டோ இப்படிக் கேட்ட தொலைச்சிப்புடுவேன்” என விரல் நீட்டி மிரட்டினான். 
அவள் பயத்தைக் கண்டு சற்றே அடங்கினான். எவ்வளவு பெரிய விஷயத்தையும் பின் விளைவுகள் யோசிக்காமல் என்னதிது இவ்வளவு எளிதாகக் கேட்கிறாளே? என்ற ஆத்திரம் அடங்க மறுத்தது கதிருக்கு. கல்யாணம் தான் செய்து கொள்ளாவிடினும் பரவாயில்லை காதலிக்கவும் மாட்டேன் என்கிறானே என அசதியுற்றாள் சந்திரா. 
அவள் காதலாழம் நன்கு அறிந்தவன், ஆனாலும் சாத்தியமற்றது என்பதைப் பொறுமையாக அவளுக்குப் புரிய வைத்திட நினைத்தான். 
“நாம சின்ன வயசுல பழகினது உன் மனசுல சலனத்தை ஏற்படுத்தியிருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை, மாலதியும் ரேவதியும் மாதிரி தான் உன்னோடவும் பழகுனேன். வேறொன்னும் இல்லை எம்மனசில, எங்கப்பன் சாவுக்கு காரணமானவங்களை ஒரு போதும் உறவா ஏத்துக்க முடியாதுலே. வீணா என் பின்னாடி சுத்தி நீ அசிக்கப்படாத, கிளிப்பிள்ளைக்கு சொல்லுத மாதிரி பொறுமையா தான் சொல்லுதேன், இதான் கடைசி மட்டும் பார்த்துக்கோ” என்றான் மென்குரலில் உறுதியாக இழுத்துப் பிடித்த மூச்சோடு!
அனைத்தையும் தலையாட்டி உம் கொட்டியபடி அழகாகக் கேட்டவிட்டு, சட்டென மின்னல் வெட்ட சொடுக்கிட்டவள் துள்ளலோடு, “அப்போ நான் அந்த வீட்டுப் பொண்ணா இல்லைனா என்னை ஏத்துக்க முடியும் அப்படி தானே?” என்றாள். 
அதுவரையில் அவளறியாது அவளை ரசித்திருந்தவன், உக்கிரமாய் பார்க்க, “சொல்லும், ஏத்துக்க முடியுமா? நான் வீட்டை விட்டு வந்திடுதேன். சொத்து, சீர் எதுவும் வேண்டாம், அவங்களும் வேண்டானுட்டு வந்திடுதேன்” என்றாள் வேகவேகமாக!
ஐயோ..! என மனதில் அலறினான். இனி இவளோடு பேசி வேலைக்காவது என்றெண்ணியவன் திரும்பி நடக்க துவங்கினான். அவன் பின்னே ஓடி வந்து வழி மறித்து நின்றாள்.  
“சந்திரா..” கண்டிப்போடு அழைத்தவன், “பெத்தவுங்க சேர்த்து வைத்த புண்ணியம் பிள்ளைகளையும் சேருங்கிற மாதிரி அவங்க பாவமும் பிள்ளைகளைத் தான் சேரும்” என விலகி நடந்தான். 
“அப்போ நீங்க நிறைய புண்ணியம் சேர்ந்து வைச்சிருக்கீங்களோ? பரவாயில்லை, எங்கிட்ட இல்லாட்டியும் நீங்கச் சேர்ந்து வைச்சிருக்கீங்களே! அந்த புண்ணியம் நம்ம பிள்ளேளை வாழ வைக்குமாக்கும்.. அது போதும்..” என அவளும் கத்தியபடி பின்னே வந்தாள். 
“கோட்டிக்காரி..” என கத்தினாலும் உண்மையில் சிரிப்பு தான் வந்தது, சிரித்தான் பின் வருபவள் காண இயலாது என்ற தைரியத்தில். 
“பின்ன, இதென்ன ஸ்சுவிஸ் பேங்குலச் சேர்த்து வைச்சிருக்கிற பணமா பிள்ளைகளுக்குக் கொடுக்க?” 
பேசினால் விடாமல் பேசுவாள் என்பதை அறிந்தவன் அவளைத் தவிர்த்தபடி மௌனமாக நடக்க, மீண்டும் முன் வந்து மறித்து நின்றவள், “எத்தனை பிள்ளைங்க பெத்துக்கலாம்? எத்தனை டன் புண்ணியம் சேர்த்து வைச்சி இருக்கீங்க?” என்ற கேள்வியோடு ஒற்றைப் புருவம் உயற்றினாள். 
அடடேய்..! ஆச்சரியக்குறி என சொல்லும்படியான அழகுக்கவிதை, அள்ளி நெஞ்சாங்கூட்டிற்குள் அடைத்துக்கொள்ள துடித்தன கரங்கள். என்ன தான் கோபம் கொள்ள முயன்றாலும் அவளிடம் மட்டும் அவன் கோபம் செயலிழந்து போனது. ஒரு நொடி தன்னை மறந்து லயந்திருந்தவனியின் செவியில் இரைந்தது வாகனம் ஒன்றெனின் ஹாரன் ஓசை! 
சட்டெனக் கலைந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க, அப்போது தான் தோப்பிலிருந்து சாலைவரை வந்து விட்டதை உணர்ந்தான். இருவரும் நடுச்சாலையில் நிற்பதை அவளும் அப்போது தான் உணர, இருவரும் ஓசை வந்த திசையில் திரும்பினர். 
காரொன்று நின்று கொண்டிருக்க, அதற்கு வழி விடும் எண்ணத்தில் கதிர் சட்டெனச் சாலையில் ஓரம் ஒதுங்க, சந்திராவோ சிலையாக நின்றாள். அதைக் கண்டவன் பதறி அவள் கரம் பற்றி அவளையும் தனதருகே இழுத்தான். ஆனால் அவளோ கரத்தை வெடுக்கென பிடிக்கிக் கொண்டு வாகனத்தை நோக்கிச் செல்ல, அதிலிருந்து இறங்கினான் மனோகர். 
மறுபுறம் மற்றொரு இளைஞனும் இறங்க, அவனை எங்கோ பார்த்த நினைவில் யோசனையோடு நின்றிருந்தான் கதிர். 
“இங்கென்ன செய்யுற சந்திரா?” கண்டிப்போடு வந்த மனோவின் கேள்வி சந்திராவை நோக்கி இருந்தாலும் அனல் பார்வை கதிரை நோக்கி தானிருந்தது. 
சற்று முன் தனக்காக வீட்டை விட்டே வந்து விடுகிறேன் என்றவள், அண்ணனைப் பார்த்ததும் நொடியில் தான் பற்றிய கரத்தை உதறிச் செல்கிறாள் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. ஏனோ அவள் கொண்ட காதலில் அவன் கொண்ட கர்வம் சரிவது போன்றிருக்க, மீண்டும் அவளை தன்னிடம் இழுத்துக்கொள்ள கரங்கள் தத்தளித்தது. ஆனாலும் தன் இயலாமையில் உதறிச் சென்றவளின் மீது கோபத்தை வளர்த்து வைத்தான். 
“ஜெஸ்ட் ஒரு வாக் வந்தேன். என் போன் கீழ விழுந்துடுச்சு, இவர் எடுத்துத் தந்தார்.. அவ்வளவு தான்” என மனோவிடம் வந்தவள் பார்வை மறுபுறம் இருந்தவனைப் பார்க்க, அவனின் பார்வை இவர்கள் இருவரையும் வெறித்தது. 
அனைத்தையும் கவனித்த மனோ, “உங்க கல்யாணப் பத்திரிக்கை தயாராகிடுச்சு, அதான் அதை கொடுத்துட்டு பெரியவங்களையும் பார்த்துட்டுப் போலாம்னு மாப்பிள்ளை வந்திருக்காரு” என்றான். 
சந்திராவிடம் அறிவித்த போதும் மனோவின் பார்வை கதிரிடமிருக்க, நிழல் படும் தூரமென்பதால் அவர்கள் உரையாடல் தெளிவாகக் கேட்டது. 
சந்திராவிற்குத் திருமணமா! ஒரு நொடி உள்ளுக்குள் அதிர்ந்தான். திருமணம் நிச்சியமாகியதை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்ற கோபம், அதையும் மறைத்துவிட்டு தன் பின் சுற்றினாளே என்ற கோபம், தமயனைக் கண்டதும் தன்னை உதறிவிட்டுச் சென்ற கோபம் என அவள் மீதான கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டான். 
“பெரியவங்களை பார்க்கணும்னு சும்மா சாக்கு தான், உன்னைய பார்க்கத் தான் வந்திருப்பாரு.. என்ன மாப்பிள்ளை நான் சொல்லுதது சரிதானே?” என்ற மனோவின் கேள்வியில் மலர்ந்த சிறு சிரிப்போடு உரிமையாக, அவன் பார்வை சந்திராவை நோக்கிப் பாய்ந்தது. 
ஏனோ அந்த பார்வைக்கு இங்கு கதிர் எரிந்து கொண்டிருந்தான், அவனால் நொடி கூட சகிக்கமுடியவில்லை. அவள் ஒன்றும் பேசவில்லை, பின்னிருக்கை கதவைத் திறந்தவள் ஏறும் முன் கதிரை தான் தவிப்போடு பார்த்தாள். மறுநொடி கார் கிளம்பியிருந்தது. 
தன் விழிகளின் தவிப்பை, அதன் மொழிபெயர்ப்பைக் கதிர் அறிவான் என்ற அவள் நம்பிக்கையை மெய்ப்பிப்பது அவன் கடமையானது. தனிமையில் பெரும் யோசனையோடு நின்றான். 

Advertisement