Advertisement

அத்தியாயம் 06
காலைப்பொழுதின் பரபரப்புகள் எல்லாம் அடங்கிய நேரம், அரிசி ஆலையை ஒரு முறை சுற்றி வந்து மேற்பார்வை பார்த்த கதிர் பின் தன்னறைக்குச் சென்றிருந்தான். அலுவலக வேலையில் கவனமாய் இருக்க, கதவு தட்டும் ஓசையை உணர்ந்தான். அசுவாரசியமாக நிமிர்ந்தவன் பதில் சொல்லும் முன் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் சந்திரவதனி. 
வந்தவள் நேராக அவன் இருக்கைக்கு அருகில் வந்து நிற்க, அவளைச் சிறிதும் எதிர்பாராது அதிர்ந்தவன், “ஏய்.. நீ எதுக்குலே இங்க வந்த?” என்றான். 
சின்ன சிரிப்போடு, “யாரோ என்னை தேடுனாங்கலாம், அதான் பார்த்துட்டுப் போலாமேன்னு..” என்றாள். 
அவள் வருகை பிடித்தமில்லாத போதும் கண்கள் ஏனோ கட்டுப்பாடில்லாது அவளை ஆராய்ந்திருந்தது. வலியும் கண்ணீருமாக இறுதியாய் கண்ட முகமே இந்நொடி வரையிலும் நெஞ்சை வதைக்க, இப்போதோ முகத்தில் முற்றிலுமாக காயம் ஆறியிருக்க, புதுப்பொலிவு கூடியிருந்தது, அதை விடவும் அவனைப் பார்த்திருந்த விழிகளில் தான் துள்ளலான மின்னல், ஒரு பரவச வீச்சு! 
“யார் சொன்னா? அப்படியெல்லாம் எதுவுமில்லை..!” என்றவன் மழுப்ப, கீழுதட்டில் சிரிப்பை அடக்கியவள், “அப்போ அந்த யாரோ நீங்க தானா?” என கேள்வியால் மடக்கினாள். 
“இல்லை.. இல்லை..”
“அஹா.. நழுவாதிங்க, கோவில்ல என்னை தேடுனிங்கலாம்.. தாத்தா சொன்னாங்க” 
“பொய் சொல்லுறாங்க..”
“ஹான்.. நானும் தான் பார்த்தேனே! வெத்துப் பேப்பர்ல என் கையெழுத்தை தேடுனதையும் கோலம் போடும் போது என்னை சைட் அடைச்சதையும்..” என்றவள் ராகமிழுந்ததபடி அவனைப் பார்த்தாள். 
ஐயோ..! உளறிவிட்டேனே என்ற உணர்வு! 
“உன்னை யாரு உள்ள விட்டா? தொந்தரவு பண்ணாம முதல்ல கிளம்பு நீ! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றான் கோபம் போலே. ஆனால் கோபமில்லை, அன்று அழுத முகமே அவன் கண்முன் நிற்க, அமைதியாக உரையாடத் தான் நினைத்தான். 
தான் ஊரில் இருப்பது ஏதோ ஒருவகையில் அவனை பாதிக்கிறது என்றறிய, உற்சாகம்! இனி எவ்வாறு கிளம்புவது? 
சுழல் நாற்காலியில் அவள் புறம் திரும்ப, அவள் முக மலர்ச்சியைக் கண்டவன், தான் உரைத்ததை வேறுவிதமாக அர்த்தப்படுத்திக் கொண்டாளோ என குழம்ப, “அப்படியெல்லாம் கிளம்ப முடியாது, யார் என்ன நினைப்பாங்க? எனக்கு உரிமையான இடத்துல தான் நான் இருக்கேன்” என்றாள்.
சிறிதும் அசராத பாவனையில் கதிரின் கட்டுப்பாடுகள் உடைய, உக்கிரமானவன், “உனக்கென்னட்டி உரிமை இருக்கு?” என கத்த, சட்டெனக் குனிந்து அவன் கழுத்தை அணைத்தவள் வலது கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள். 
அதிர்ச்சியில் கதிருக்கு இதயத்துடிப்பே ஒரு நொடி நின்றுவிட, அவனுள் மின்சார மென்னலைகள் பரவும் அதிர்வு! முதல் முத்தமல்ல ஆனாலும் புதிதாயிருந்தது. அவள் பூவுடலின் பட்டு ஸ்பரிசமும், இதழ் ஈரமும் முழுதாக அவனை மயங்கும் முன், மூளை எச்சரிக்க, அவளை விலக்க முயன்றான். 
உரிமையை அழுத்தமாக உணர்த்திவிடும் எண்ணத்தில் வெகு நிதானமாக, அழுத்தமாக இதழ் பதித்திருந்தவள், இடது தோளில் அவன் முகம் தாங்கி கழுத்தோடு அணைத்திருக்க, அவன் விலக்கிவிட முயன்றதில் தள்ளாடினாள். 
எங்கே இது தான் வாய்ப்பென்று மடியில் விழுந்து விடுவாளோ எனப் பயந்தவன், தன் கைக்கு வாகாய் இருந்த அவள் இடையைப்பற்றி நிலையாக நிறுத்தினான், சற்று தள்ளியும். 
அவள் செயலில் எரிச்சலுடன் வேகமாக அவன் எழ, அவளோ நிதானமாக மேசையின் மீது ஏறியமர்த்திருந்தாள். இடது கரத்தை சுழற்றியவன், என்னவோ அடிக்க வருவது போலே பாவனை செய்ய, அவள் மென்னகை பூக்க இளகிய முகமாகத் தான் பார்த்திருந்தாள்.
”கோட்டிக்காரி, யாராவது திடீரென்னு வந்தா என்ன நினைப்பாங்க? கூறுங்கிறேதே கொஞ்சமும் கிடையாதுலே உனக்கு?” 
இதழ் ஒற்றலைத் தவிர, யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்பதிலே அவன் பதட்டமாக, மனம் குளிர்ந்தவள், “அதெல்லாம் யாருமில்லை. எல்லாரும் லஞ்ச டைம் தானே வெளியே வேப்பமரத்தடியில தான் இருக்காங்க. அதுவும் போக நான் வெளியே வர வரைக்கும் யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு கருப்பட்டிகிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன்” என விளக்கம் கொடுக்க, “உஷ்ஷ்..” உதட்டின் மீது விரல் வைத்து அதட்டினான். 
என்ன பேச்சு பேசுகிறாள் யாரேனும் கேட்டுவிட்டால் என்ன நினைப்பார்கள், இவள் ஏன் அவசியமின்றி என் அறையில் இத்தனை நேரம் இருக்கிறாள். அவளுக்கோ சிறுபிள்ளையை அதட்டுவது போன்றிருந்தது அவன் செயல்! அவனிடம் பயமென்பதே இல்ல அவளுக்கு! 
“யாராவது பார்த்தா தப்பா சொல்லுவாங்க, ஏற்கனவே உங்க குடும்பத்தோட ஆகாது. நீ இனி என் பின்ன வந்து தொந்தரவு செய்யாம கிளம்புலே.. முடிச்சா ஊரவிட்டே கிளம்பிடு” என பொறுமையாக உரைத்தான். 
“வந்ததுல இருந்து கிளம்பு கிளம்புன்னு விரட்டுறீங்களே தவிர எதுக்கு வந்திருக்கேன்னு கேட்கக் கூடாதா?” என குற்றம் சாட்ட, அவன் முறைத்தான்.
முகத்தை சிலுப்பியவள், தனது கைப்பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவன் முன் நீட்ட, அன்று போல் விளையாடுகிறாளோ என நினைத்து ஆர்வமின்றி வாங்கிப் பார்த்தவன் அதிர்ந்தான். 
“சந்திரா..!” அவனின் அதட்டலான அழைப்பிற்கு “இதுல ஒரு சைன் தான், நாம மேரேஜ் ரிஜிடர் பண்ணிடலாம். எல்லாம் எங்க லாயர்ட பேசிட்டேன்” என பொறுமையாகப் பதில் வந்தது அவளிடமிருந்து. 
“நாம எப்போ கல்யாணம் பண்ணோம்..?” பல்லைக் கடித்தவன் நெற்றியில் கை வைக்க, “எப்போ வேணாலும் செய்துக்கலாம், உங்களுக்குச் சரின்னா இப்போவே மோதிரம் கூட மாத்திக்கலாம்” என்றவள் உடன் கொண்டு வந்திருந்த ஒரு ஜோடி தங்க மோதிரத்தையும் நீட்டினாள். 
அவன் பொறுமை எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாக மெல்ல மெல்லக் கரைந்திருக்க, அவள் செயலில் உக்கிரமானவன், சட்டென அவள் கரங்களைத் தட்டிவிட, காகிதம் ஒரு மூலையிலும் மோதிரங்கள் மறு மூலையிலும் சென்று சிதறியது. 
அன்றும் இவ்வாறு தான் தாலியை நீட்டினாள், இதென்ன விளையாட்டு! அவனுக்கு அளவில்லா கோபம், “கல்யாணம் என்ன உனக்கு விளையாட்டா போச்சா? இதெல்லாம் பெரியவுங்க பார்த்துச் செய்யணும், இப்படி திருட்டுத்தனமா எல்லாம் செய்யக் கூடாது, போதும் உன் விளையாட்டு, வம்பு செய்யாம கிளம்புலே” என முகத்தில் அடிப்பது போன்று விரட்டினான். 
சந்திராவிற்கு வலி தான், ஆனாலும் காரியம் ஆக வேண்டிய பொறுமை. கண் நிறைந்த காதலோடு, “உங்களுக்கு எப்போ இஷ்டமே அப்போவே தாலி கட்டுங்க, இப்போ ஒரு கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுங்க போதும் எனக்கு” என்றாள் பிடிவாதமாக. 
திருமணத்திற்கு ஏன் இத்தனை அவசரப்படுத்துகிறாள் என யோசிக்காது, கண் மறைக்கும் அளவிற்குக் கோபம் தான் கதிரிடம். 
“உனக்குக் கல்யாண ஆசையிருந்தா உங்க வீட்டுலச் சொல்லுலே நல்ல மாப்பிள்ளையை பார்ப்பாங்க, அதை விட்டு என்னைய ஏன் தொந்தரவுச் செய்யுத?” எங்கோ பார்த்துக்கொண்டு கேட்டவனை அனலாய் பார்த்தவள், எழுந்து சட்டென அவள் தோள் பற்றி தன் புறமாகத் திருப்பினாள். 
அவன் முகம் பார்த்து, “யாரோ எல்லாம் வேண்டாம், நீங்க தான் வேணும். எனக்கு உங்களைத் தான் பிடிச்சியிருக்கு. ஏன் உங்களால வேற பெண்ணைக் கல்யாணம் செய்திக்க முடியுமா? நான் இல்லாம நீங்க மட்டும் இருந்திடுவிங்களோ?” என்க, அவள் பார்வையில் கெஞ்சலில்லை, சவால் விடும் தோரணை! 
பட்டாம்பூச்சியாய் துடிக்கும் கண்களும், சிமிட்டிய இமையும், புருவத்தின் கீழிருக்கும் மச்சமும் ரசித்திருந்தே வாழ்நாளைக் கழிப்பான், அவளில்லாது உயிர்ப்பே இல்லை அவனுள்! 
பேரமைதியில் இறுகிய உடலோடு கைக்கட்டி நின்றவனின் பார்வை அவளைத் தவிர்க்க, அவளுக்குள் சினம் மேலும் பெருகியது. 
“நான் உணர்ந்த முதல் ஆண் வாசமும் ஸ்பரிசமும் நீங்க தான், சின்ன வயசுலையே விதையா நெஞ்சில விழுந்தது விறகோடு எரியிற வரைக்கும் போகாது! இத்தனை நாள் தள்ளி நின்னும் உங்க நினைப்போட தான் இருந்தேன். நீ என்னை கொண்டாடணும், நீ கொட்டுற அன்பு என் ஆசுயுக்கும் வேணும்னு மனசு ஏங்குது! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், ஏன் எனக்குப் பொய்யான நம்பிக்கையை கொடுத்தீங்க? எனக்குள்ள ஏன் ஆசையை விதைசீங்க? எனக்கு உரிமையானவன்கிற எண்ணத்தை ஏன் கொடுத்தீங்க?” 
அனைத்திற்கும் காரணம் கதிர் தானெனக் குற்றம் சாட்ட, அவனிடம் பதிலில்லை. தன் மீது இத்தனை ஆழமாக நேசம் வைப்பாள் என்றும், அதற்காக இத்தனை ஆண்டுகளுக்குப் பின் வந்து போராடுவாள் என்றும் விதி மாறிய அன்றிலிருந்தே நம்பிக்கையற்று நின்றிருந்தது தற்போது பிழையானது! 
தன் மீதான அவளின் அன்பினாழம் அறியக் குளிரவில்லை, ஏனோ நெஞ்சில் அமிலச் சாரல்! தடம் மாறிய விதியை தான் நோக வேண்டும் இருந்ததும் ஏனோ குற்றவுணர்வு, சிறு பெண்ணை சலனமடையச் செய்துவிட்ட சாபம் அவனை வதைத்தது. 
அவன் வருந்துகிறான் என அவளும் உணர, “யார் கூட வேணாலும் போராட நான் தயார் தான்! சட்டென்னு முடிவெடுக்க நீங்க, நான் மாற மாட்டேன், பிள்ளேல் எல்லாம் பெத்து அதை வளக்குற வரைக்கும் நீண்ட கனவிற்கு எனக்கு, காத்திட்டு இருக்கேன்” என்றவள் அவனை நெருங்கி, மீசையின் ஓரங்களை லேசாக முறுக்கிவிட்டு, “இப்போ தான் சூப்பர்” என சென்றிருந்தாள். 
அசையாத சிலையாக நின்றிருந்தான், உண்மை என்ன வென்றால் அவளோடு பெரிதாக போராட வேண்டியிருக்கும் அதுவும் நெஞ்சில் புதைத்த அவன் காதலையும் மறைந்துக் கொண்டு, அத்தனை வலு தன்னிடம் இல்லையே என்று தோன்ற அசதியான மனநிலையில் இருக்கையில் அமர்ந்தான். 
நெஞ்சோரம் வலிப்பது போன்றிருக்க, நீவி விட்டவனின் கைகளில் உறுத்தியது சட்டைப்பையில் அன்றே அவள் வைத்து சென்றிருந்த தாலி! 
வார இறுதிநாள், காலை நேரம், சந்திராவிற்குத் தெரியும் கதிர் இந்த நேரம் மைதானத்தில் இருப்பானென. அன்று அடிபட்ட பின் அவளைப் பயிற்சி இடத்திற்குள் அனும்பதிப்பதில்லை. அவளை என்றில்லை, பயிற்சி பெரும் பிள்ளைகளைத் தவிர யாரையுமே பயிற்சி நேரம் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டான். 
அலைபேசியில் ஒரு பார்வையும் எதிர்வீட்டில் ஒரு பார்வையும் வைத்தபடி முற்றத்து மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் சந்திரவதனி. சரியாக எதிர்வீட்டு வாசலில் கேட்ட வாகன ஓசையில் நிமிர, தம்பதியினர் ஒருவர் இறங்கினர். யாரென ஆராய்ந்தவாறே வெளிவாசல் இருப்புக் கதவிற்கு அருகே வந்து நின்றவள் அவர்களைக் கண்டு கொண்டு, “ஹேய்.. ரேவதி..!” என உற்சாகமாகக் கூவினாள். 
இவள் குரலில் அவளும் திரும்பிப் பார்க்க, “சுகமாயிருக்கியா? இவங்க தான் உன் வீட்டுக்காரா?” என பேச்சைத் தொடர, சந்திராவைக் கண்டுகொண்டவளோ வெடுக்கென முகம் திருப்பி நடக்கத் தொடங்கினாள். 
“ஹே..உங்கிட்ட தானே பேசுறாங்க..” என்றவனின் குரலுக்கு, “துரோகிகளோட நமக்கென்ன உறவு வேண்டி கிடக்கு, பேசாம வாங்க..” என்ற அதட்டலோடு செல்ல, அனைத்தையும் கேட்ட சந்திராவின் முகம் தான் அனலிலிட்ட நறுமலராய் கருகியது.  
கதிர் கூட நேரடியாகக் கொலைகாரர்கள் என்று தான் உரைத்தான் ஆனால் இவளோ துரோகிகள் என்க, ஏனோ அவள் மென்மனம் வன்மையாகக் காயம் கொண்டது. 
ரேவதியும், செந்திலும் உள்ளே வர இன்முகமாக வரவேற்றார் தனவதி. அன்று விடித்ததிலிருந்து மகள், மருமகனின் வருகையால் புது உற்சாகத்தோடு இருந்தார். அதிலும் மகள் கருவுற்றிருக்கும் சந்தோஷத்தில் பார்த்துப் பார்த்து அவர்களுக்குச் சமைத்தும் வைத்திருந்தார். பொதுவான நலவிசாரிப்புகள் முடிய, அன்னையும் மகளும் ஊர்க்கதைகள் பேச, மதிய உணவு நேரத்திற்கு வந்தான் இளங்கதிர். 
அவனும் வந்தவர்களை வரவேற்க, தனவதி அனைவருக்கும் மதிய விருந்தை பரிமாறினார். முன்மாலை நேரம், செந்திலும் கதிரும் பேசிக்கொண்டிருக்க, அண்ணனின் அருகில் வந்தமர்ந்தாள் ரேவதி. 
ரேவதிக்கு கணவன் எனினும் உறவாகும் முன்பிருந்தே செந்திலுக்கும் கதிரிக்கும் இடையிலொரு நட்பிருந்தது. செந்திலை நன்கு அறிந்தவன், அதனாலே தங்கையின் விருப்பம் புரிந்து நட்பை உறவாக மாற்றிக் கொண்டான் கதிர். செந்திலின் குடும்பம் மொத்தமும் நாகர்கோவிலில் இருக்க, வேலை காரணமாக மனைவியோடு அவன் மட்டும் செங்கோட்டையில் இருந்தான். 
அவளின் உடல் நிலைபற்றி நலம் விசாரிக்க, பதிலுரைத்தவள், “அண்ணே! என் போன் உடைஞ்சி போச்சு, புதுசா ஒரு போன் வாங்கிக் கொடு” என்றாள். 
“அவ்வளவு தானே நாளைக்கே தென்காசிக்கு வா, உனக்கு பிடிச்ச மாடல்ல வாங்கிக்கோ” என கதிர் உரைக்க, “போன் உடைஞ்சிட்டா? ஏன் எங்கிட்டச் சொல்லை?” என செந்தில் இடையில் விசாரித்தான். 

Advertisement