Advertisement

அத்தியாயம் 03 
மேற்கு மலைத் தொடர்களை ஊர்ந்து செல்லும் மேகக்கூட்டங்களும் எப்போதும் பன்னீர் தெளிக்கும் குற்றாலச் சாரலும் சிதையாத சிட்டுக்குருவிகளின் ரீங்காரமும் சொர்க்கம் என்றால் அவ்வூர் சுந்தரபாண்டியபுரம் தான்!  
தேங்கிய நீரில் இரை வேண்டி வெண் நாரை கூட்டங்கள் கூடி தவமிருக்கும் நீண்ட பசுமை வயல்கள், ஜொலிக்கும் சூரியனுக்கு போட்டியிடும் மஞ்சள் மங்கைகளாக நிற்கும் சூரியகாந்தி தோட்டங்கள் ஒருபுறம், மறுபுறம் நீர் தேவையை தீர்க்கும் சமுத்திரம் போன்ற குளம். வயல்வெளிகளையும் நீர் நிலைகளையும் ஊடாகப்புகுந்து இரண்டாகப் பிரிக்கும் தார் சாலைகளும், ஆங்காங்கு காற்றாலை விசிறிகளும், ஊரின் மொத்த அழகையும் நின்று ரசிக்க பாறை மலை குன்றுகளும் இறைவனின் ரசனை தான் இவ்வியற்கை! 
ஊரின் கிழக்கே பழைமையான மீனாட்சிசுந்தரேஷ்வர் கோவிலும் வடமேற்கில் ராஜகோபலசாமி கோவிலும் வடகிழக்கில் முப்பிடாதி அம்மன் கோவிலும் பெரிய தெப்பமும், தெப்பத்தில் அரசமர பிள்ளையாரும், ஊருக்குள் இருக்கும் தேவாலயமும் அவ்வூரின் குடிகளின் நீண்ட பாரம்பரியத்தை சொல்லும்! 
வடகிழக்கில் ஓர் வட்டக்கிணறு, ஒரு ஆள் அமரும் அளவிலான அகலப்படிகள், அதற்கும் மேலே பொங்கி நிற்கும் நீர் மட்டம். 
“சந்திரா என்ன கழுத்தை விடுலே..” எவ்வளவு சொல்லிப் பார்த்தும், அழுத்த மூடிய கண்களோடு இறுக்கிக் கட்டிக்கொண்டாளே தவிர, இம்மியும் நகரவில்லை. 
“நான் தான் இருக்கேன்ல, கைய நீட்டி நீத்திப் பழகு. அதான் டியூப் கட்டியிருக்கேன்ல நானும் பிடிச்சிக்கிடுதேன், முழுக மாட்ட சந்திரா” என்றபடி தன் கழுத்தை இறுக்கிய அவள் கைகளை விலக்க முயன்றான். 
“ம்கூம், பயமா வருது..” என குரங்குக் குட்டியை போலே அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தவளுக்கு அவனையும் சேர்த்து அமுக்குகிறோம் என்பதெல்லாம் பயத்தில் புரியவில்லை. 
முதுகில் தட்டிக் கொடுத்தவன், “என்னையும் சேர்த்து முக்காத, அங்க பாரு. ரேவதி, மாலதி எல்லாம் நீத்துதாங்க, உன்னைய விடவும் சின்னப் பிள்ளேள் தானே” என்க, “இங்க வா சந்திரா, நல்லாயிருக்கும்டி” என்ற அவர்களின் அழைப்பிற்கும் இசைந்தாளில்லை. 
“எனக்குப் பயமா இருக்கு என்னை ஏத்திவிடு, நான் படியில உக்காந்துகிடுத” என தேம்பினாள். 
இதற்கு மேலும் அவளைச் சமாளிக்க முடியாது என்பது புரிய, தூங்கிச் சென்று படிகளில் அமர்த்தினான். 
“அடுத்த வருஷம் கொஞ்சம் பெரியபிள்ளையா ஆகிடுவேன்ல அப்போ கத்துக்கிடுத” என்றவள் இடையோடு கட்டியிருந்த டியூப்பை அவிழ்க்க முயன்றாள். 
கீழ் படியில் பாதி நீரில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் அவள் கயிற்றை அவிழ்க நினைத்து இறுக்கிக் கொள்வதைப் பார்த்து, சிறு சிரிப்போடு அவனே அவிழ்ந்தும் விட்டான். 
“இப்படிச் சொல்லியே வருஷ வருஷம் சமாளிக்காத” என்றவன் அவள் முகம் பார்த்தான். 
அவன் குற்றச்சாட்டில் உதட்டைப் பிதுக்கி, மூக்கை சுருக்கி சிணுங்கினாள். மாலை சூரியனின் மஞ்சள் ஒளி கிணற்று நீரில் பட்டு அவள் சந்திர தேகத்தில் எதிரொலிக்க, மின்னும் பொன்னாய் தோன்றினாள். குழலோடு முகத்திலும் தங்கமாய் நீர்த் துளிகள் சொட்ட, உப்பிய முகமும் சிவந்த மூக்கும் கிள்ள தூண்டியது. அந்த முகம் தான் அழியச் சித்திரமாகக் கதிரின் நெஞ்சில் பதிந்து போனது. 
“நீ பெரிய பிள்ளையாகிட்ட பிறகெல்லாம் நான் சொல்லித்தர மாட்டேன்ல, ஒழுங்கா இப்பவே கத்துக்கவ கிளி மூக்கி” என்று அவள் மூக்கை கிள்ளியவன், பின் புறமாக நீரில் குதித்தான். 
படிகளில் வாகாய் அமர்ந்து கிணற்று நீரில் இரண்டு கால்களை இறக்கி ஆட்டிக்கொண்டே, “எதுக்குச் சொல்லித்தர மாட்ட..?” என நீரில் நீத்துவனை பார்த்துக் கத்தினாள். 
“அதான் நீத்தலையே பிறகு என்னலே தண்ணீல விளையாட்டு எழுந்து மேல போலே” என்றவன் பதில் சொல்லாது அதட்டலிட, அவன் தங்கைகள் இருவரும் சிரிக்க, சந்திராவிற்குக் கோபம் தான். 
இளங்கதிரின் எதிர்வீட்டினர் சந்திரவதனி. உறவு என்றில்லாத போதும் முன்னோர் காலம் தொட்டே நல்ல பழக்கம் தான். அதிலும் இளங்கதிரின் தாத்தா முத்தையாவும் சந்திரவதனியின் தாத்தா நாராயணனும் சம வயதினர். ஆகையால் நடைபயின்ற நாளிலிருந்து ஒன்றாகவே வளர, ஈருடல் ஓருயிர் என்னும் படியான நட்பு இருவருக்குள்ளும். 
ஒன்றாக நிலம் வாங்கி, ஒன்றாக விவசாயம் செய்து, மனைவி மக்கள் என நிறைவாக வாழ்ந்தனர். சந்திரவதனி பிறந்த போது பூரண நிலவை போலே ஜொலி ஜொலிக்க அவளுக்கு சந்திரவதனி எனப் பெயர் வைத்தது கதிரின் தாத்தா முத்தையா தான். அதே போல் அவனுக்குப் பெயர் வைத்ததும் அவளின் தாத்தா நாராயணனே. 
நாராயணனின் மகன் தொழில் காரணமாக சென்னைக்கு மாற, அவரும் வள்ளியம்மையும் கிராமத்திலே தங்கிவிட்டனர். சந்திராவிற்கு தொடக்கக்கல்வி கிராமத்தில் தொடங்கிய போதும் சில வருடங்களிலே குடும்பத்தை சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார் அவள் தந்தை. 
பள்ளி விடுமுறை விட்டதும் மறுநாளே குடும்பத்தோடு பாட்டி வீட்டிற்கு ஓடோடி வந்துவிடுவாள் சந்திரவதனி. இளங்கதிரும் அவன் தங்கைகளையும் தான் பட்டாம்பூச்சியாய் சுற்றிச் சுற்றி வருவாள். பெரும்பாலும் உறங்கும் நேரம் மட்டும் தான் அவள் வீட்டிற்கு, சில நேரங்களில் அதுவும் அவர்களோடு தான். 
பிள்ளைகள் வளர, பெரியவர்கள் தளர சில வருடங்களுக்கு முன் வள்ளியம்மையும் நாராயணனும் கூட சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார் அவர்களின் மகன். வருடத்திற்கு ஒரு முறை அல்லது உறவுகளுள் ஏதேனும் விசேஷம் என்றால் வந்து செல்வர். 
அதெல்லாம் முன் ஜென்மம் என்னும் படியாக அனைத்தையும் மறக்க முயன்றான் இளங்கதிர். ஆனாலும் அவனின் உயிர்த்துடிப்பே அவள் நினைவாகிப்போனது, நித்தமும் கனவில் வருபவளைச் சிறிதும் மறுக்க இயலாதே! 
மாலை வேலை கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி இருக்கையிலிருந்து எழுந்தான் கதிர். காலையிலே தனவதி மகளைப் பார்க்க வேண்டுமென்க, அனுப்பி வைத்திருந்தான். 
நெஞ்சோரம் சந்திராவின் நினைவு! காலையில் தள்ளிவிட்ட போதோ அவனுக்கு உறுத்தல் தான், ஆனால் அதையும் பொருட்படுத்தாது கிளம்பும் நேரம் வாசலில் வந்து நிற்க, மீண்டும் சினம் தான் வந்தது. 
அலுவலக அறையிலிருந்து வெளியே வந்தவன் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கருப்பட்டியிடம் சென்றான். அவன் பார்வை எதிரே இயந்திரத்தை துடைத்துக் கொண்டிருந்த பெண்ணின் மீதிருக்க, சுள்ளென்று முதுகில் ஒரு அடி வைத்தான். 
அலறித் திரும்பிய கருப்பட்டி, “ஏண்ணே? இது கையா இல்லை உலக்கையா? ஏம்பாடி தாங்குமா?” என்றான் வலியோடு. 
“உனக்கே தெரியுமல்ல அப்பறம் என்னடே அங்க பார்வை?” 
“இங்க கேளுண்ணே நீ காலம் முழுக்க சாமியார போ இல்ல சந்நியாசம் போ.. உனக்கு அப்ரண்டீஸா சேர்ந்த பாவத்துக்குக் காலம் முழுக்க கன்னிப்பயலா என்னையும் இருக்கச் சொல்லாத”
“பின்ன உங்கம்மை சேக்காளி சரியில்லை என்னதாலே வையுவாங்க” 
“இல்லைனா மட்டும் வீட்டுல கொஞ்சுவாங்க, இப்போ என்னண்ணே உனக்கு?” 
“மணி ஐந்தாச்சி..” 
“அம்மன் கோவிலுக்குப் போற, பொறுப்பா மில்லைப் பார்த்துக்கணும் அதானே போ” விரட்டாத குறையாகக் கருப்பட்டி கதற, “ஏத்தம் கூடிபோச்சுடே உனக்கு, இருக்கட்டும்..” என முனங்கியபடி கதிர் செல்ல, அவனோ மீண்டும் விட்ட வேலையை தொடர்ந்தான். 
பத்திரகாளி அம்மன் கோவிலுக்குள் வந்தவன் நேராக சன்னிதி சென்று வணங்க, மனதில் ஒரு அமைதி ததும்பியது. தினமும் வருவதில்லை, வாரமொரு முறை சரியாக வந்து விடுவான். மிகுந்த பக்தியாளன் இல்லை, ஆனால் பக்தி என்பதை ஒழுக்க நெறியாகக் கடைப்பிடிப்பான். 
பெரும்பாலானோர் தெரிந்த முகமாக இருக்க, முகத்தில் ஒரு புன்னகையைப் பூசிக் கொண்டான். சுற்று மண்டபத்தின் படிகளில் அமர, பெரியவர் ஒருவர் தொன்னையில் கோவில் பிரசாதத்தைக் கொடுத்துச் சென்றார். 
பெரும்பாலும் வெளியே சாப்பிடும் பழக்கமில்லை, ஆகையால் மதியம் உண்ணாத வயிறு வேறு பசியில் பிராண்டியது. புளியோதரையும், சக்கரைப்பொங்கலையும் பார்த்தவனுக்கு சந்திராவின் நினைவு தான். 
“ஐ..! சக்கரைப்பொங்கல்..” என்ற குதூகல குரலோடு தோள் உரச, அருகே அமர்ந்திருந்தாள் அவள். 
இவள் எங்கே இங்கே? அதிர்வோடு அவன் பார்க்க, “என்னைய தானே நினைச்சிரு? நினைச்சதும் வந்துட்டேனா?” என இரண்டு இமைகளையும் படபடவென அடித்தபடி கேட்டாள். 
சுற்றிலும் எரியும் தீபத்தின் பொன் ஒளியில் தங்கமாக அவள் மின்ன, வேகமாகப் படபடத்த இமைகளைவிட அவன் பார்வை புருவத்தின் கீழ் இருக்கும் மச்சத்திலே நின்றது. கவி பேசும் கலையான விழிகளுக்கு பிரம்மனிட்ட திருஷ்டி மை போன்ற மச்சம்! 
தான் இருப்பதை அறிந்தே வந்தாளா? இல்லை எதார்த்தமாக வந்தாளா என்ற சந்தேகம். 
அவன் அமைதியையும் கண்டு கொள்ளாது, “உமக்கு ஞாபகமிருக்கா? புரட்டாசி மாசம் நான் லீவுக்கு வரும் போதெல்லாம், நம்மூரு கோவில்ல இராத்திரி சாமிக்குச் சப்பரம் இழுத்தா சக்கரப் பொங்கல் நிறைய தராங்கன்னு வாங்கி வருவிரே..!” என்றாள். 
அவனுக்கும் அந்த நாள் நினைவுகள் தான், “அதுவும் நான் தூங்கிட்டா, உங்க தங்கச்சிகளுக்குக் கூட கொடுக்காம என்னைய எழுப்பி ஊட்டி விடுவிரு. ஞாபகமிருக்கா? இருக்கும், இருக்கும்” என அவளே பதிலும் சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள். 
அந்த அன்புக்கெல்லாம் நல்ல கைமாறு செய்துவிட்டீர்களே நினைத்த கதிரின் முகம் மேலும் இறுகியது. 
“அதை வேற ஏட்டு ஞாபகப்படுத்திறவ நெஞ்செல்லாம் புண்ணாப் போய் கிடக்கு, இதானே உங்க மனசுல நினைக்கிரு?” என தெற்றுப்பல் தெரியச் சிரிப்போடு கேட்டாள். 
பதிலுக்கு ஒரு பார்வை முறைத்தவன் எதுவும் பேசாமல் எழுந்தான். ஒரு படி தான் இறங்க, சட்டென அவன் கரம் பற்றினாள் சந்திரா. பார்வையில் உஷ்ணம் கூட, அவளோ சிறிதும் அசராது, “இப்படி உக்காரும், கரும்புன்னு காடிச்சி தின்னுடுத மாட்டேன்” என இழுத்தாள். 
சுற்றும் முற்றும் பார்த்தவன் சட்டென அதே படியில் இடைவெளிவிட்டு யாரோ போல அமர்ந்தான். என்னவோ அவள் முன் தான் வலுவிழந்து கொண்டே வருவது போல் தோன்றியது.
அவள் நெருங்கி அமர, “முதல்ல தள்ளி உக்காருலே, உனக்கு வேறச் ஜோலியே இல்லையா? என்ன வேணும் எதுக்கு எம்பின்னாலே வார?” சிடுசிடுத்தான். 
“சிடுமூஞ்சி..” முனங்கியவள், “காலையிலே சொன்னோம்ல, உம்மைகிட்ட கொஞ்சம் பேசனோம்னு” என்றாள். 
பேசு என்பது போல் அவன் அமைதியாகவே இருக்க, சட்டென மொத்த படிகளிலும் இறங்கி அவன் முன் வந்து நின்றவள் கை நீட்டினாள்.  
பார்த்தவனுக்கு இதயமே ஒரு நொடி அதிர்ச்சியில் நின்றது. உள்ளங்கைக்குள் மஞ்சள் காயிரை வைத்துக் கொண்டு அவன் முன் நீட்டியபடி வெகு சாதாரணமாக நின்றிருந்தாள். 
“ஏட்டி இன்னதிது?” பற்களைக் கடித்தபடி கேட்க, “இது கூடத் தெரியாத சின்னத்தம்பியா நீரு?” என்றாள். 
அவள் கேட்ட தோரணையில் அவனுக்கே சிரிப்பு வர, கீழ் உதட்டைக் கடித்தபடி கண்களை உருட்டி முறைத்தான். 
“ஏய் என்ன கேலியாச் செய்த?” விட்டால் அடித்துவிடும் நிலையில் கைகளை மடக்கியபடி எகிறினான்.
என்னவோ சிறுபிள்ளையை மிரட்டுவது போன்று அவன் மிரட்ட, இதற்கெல்லாம் அசரமாட்டேன் என நிலையாக நின்றாள். அவள் நிற்கும் தோரணையில் ஒரு பிடிவாதமும் உறுதியும். விழிகள் வேறு அவனை ஆராய்ந்திருந்தது, என்ன தான் இரைந்த போதும் அவன் வார்த்தைகளில் இருக்கும் உரிமையும் நெஞ்சில் ஒளிந்திருக்கும் காதலையும் அவளால் நன்கு உணர முடிந்தது. அது தானே அவளின் அசாத்திய தைரியத்திற்கான காரணம், அவளை இயங்க வைக்கும் இயக்க சக்தி. 
“கேலியில்லை தாலி, எங்கழுத்துல கட்டுங்க! இன்னும் கால்மணி நேரத்துக்கு நல்ல நேரம் தான்..” 
காது மடல்களிலிருந்து கன்னம் வரைக்கும் சிவக்க உக்கிரமாக, “கோட்டிக்காரி! என்ன பேச்சுப் பேசுறல..? இதென்ன விளையாட்டா உனக்கு?” கத்தினான். 
“ஹெலோ, விளையாடுறதுக்கு நீரு என்ன விவரம் தெரியாத பச்சப்பிள்ளையா? தெரிஞ்சே தான் கேட்குத இப்போ கட்டுறீரா இல்லை நானே கட்டிக்கிடவா?” 
“ஏய்..” என்றவன் அதிர, “பயப்படாதிரும், உங்க கழுத்துல கட்ட மாட்டேன்” என தலையாட்டியவள், “எங்கழுத்துலையே உங்க பெயரைச் சொல்லி கட்டிக்கிட்டுத” என்றாள். 
கொடுத்த அதிர்வு மேல் அதிர்வில் அரண்டே விட்டான். இதென்ன கடைக்குச் செல்வோம் வா என்பது போல் கல்யாணம் செய்வோம் வா எனத் தாலியோடு இத்தனை எளிதாக அழைக்கிறாள்! 
“முதல்ல அதை உள்ள வையிட்டி, எவனாவது பார்த்தா என்ன நினைப்பாங்க” என்றவன் அடிக்குரலில் அதட்டலிட, சட்டென கைகளை மடக்கியவள் தாலியை அவன் சட்டைப்பைக்குள் வைத்திருந்தாள். 
“திமிராலே உனக்கு? செவுட்டுலே இழுத்துவிட்டேனா முப்பத்திமூனு பல்லும் கொட்டுப்புடும்” என்றவனின் மிரட்டலெல்லாம் அவள் செவி நுழையவில்லை. 
“எப்போ தோன்றுதோ அப்பவே கட்டுங்க, ஆனால் சீக்கிரம்” என்றாள் தோள்களை குலுக்கியபடி மென்குரலில். 
“எப்படி கட்டுவேன்? எங்கப்பன் சாவுக்கு இன்னும் நியாயம் வாங்க முடியலை, நெஞ்சு தீயா கொதிக்குது, எங்கப்பனை கொன்னுட்டு அதுக்கு கைம்மாறு வேற செய்றீங்களோ? ஒன்னும் வேண்டாம் உங்க கரிசனம், என் மூஞ்சிலையே முழிச்சிடாத இத்தோட போயிடு” 
“அது ஏதோ எங்க வீட்டு பெரியவுங்களால நடந்த தப்பு, அதுக்கு நான் என்ன செய்வேன்? என்ன வேண்டாம்னு சொல்லுவீரோ? எம்மேல பிரியமில்லையோ?” 
வாடிய வதனத்தோடும் கலங்கிய விழியோடும் பதிலுக்குக் காத்திருந்தாள். ஏங்கி நிற்கும் அவள் முகத்தையும் படபடக்கும் கயல்விழிகளையும் பார்க்கையில் நெஞ்சோரத்தில் ஒளித்து வைத்த பாசம் பொங்கி வர, அவனால் இல்லை என்று மறுக்க முடியவில்லை.  
இப்படி ஒரு நேரம் அவன் வாழ்வில் வருமென்று சிறிதும் எதிர்பார்த்தானில்லை. அவஸ்தையான நிலை, உடல் இறுகக் கண்களை மூடிக் கொண்டவன், “இல்லை, மனசெல்லாம் கோபம் தான் இருக்கு, கொன்னாலும் கொன்னுடுவேன் போயிடுலே” என்க, அவள் கலங்கி நிற்க, விலகிச் சென்றான் இளங்கதிர்.  
அவனோடு இன்னும் அதிகமாக போராட வேண்டியிருக்கும் என நினைக்கிலே ஒரு சோர்வு நிலையை உணர்ந்தாள். பெரியோர்கள் செய்த பிழைக்கு தன்னை தவிர்ப்பதா? என் மீதும் கோபம் கொள்வானா? என்ற ஆற்றாமை! தன் மீது கொண்ட நேசமெல்லாம் எங்கே சென்றது என்ற தவிப்பு. அவனின் சந்திரா தானே நான்? என்னை வேண்டாமென்பானா? தாங்கவே முடியவில்லை. நெஞ்சும் தொண்டைக்குழியும் அடைக்க, பொங்கி அழ வேண்டும் போல் இருந்தது. 
அசதியுற்ற மனநிலையோடு வீடு வந்தாள். வண்டியை நிறுத்திவிட்டு உள் வாசலை நோக்கிச் செல்ல எதிரே வந்தனர் சேர்மமூர்த்தியும் அவர் மனைவி அம்சவேணியும். 
சந்திரா வரவேற்பான புன்னகையுடன் சிறு சிரிப்பைக் கொடுக்க, “வாம்மா, வெளியே போயிருந்தியா? முகமே சோர்ந்து கிடக்கு” என்க, அவள் பதில் சொல்லும் முன், “கோவிலுக்கு போயிருந்தா, நான் தான் போய் விளக்கு ஏத்திட்டு வரச் சொன்னேன்” என்றார் வள்ளியம்மை. 
அவர்கள் விடை பெற்றுக் கிளம்ப, உள்ளே வந்த சந்திரா, “இவங்க எதுக்கு ஆச்சி வந்துட்டுப் போறாவ?” என்க, “தாத்தாவைப் பார்த்து நலம் விசாரிச்சிட்டுப் போறாங்கட்டி, இவங்க தான் ஊர்த்தலைவர்” என்றார். 
“ஹோ..” என்றவள் எதுவும் பேசாது பிரசாதத்தோடு நாராயணனின் அறைக்குள் சென்றாள். பெரும்பாலான ஊர்மக்களும் வந்து நலம் விசாரித்துச் சென்றிருந்தனர். “உங்க அண்ணி போன் போட சொன்னாட்டி” என்க, அதற்கும் தலையசைத்தபடி உள்ளே சென்றவள் கட்டிலில் அமர்ந்தாள். 
பேத்தியின் முகத்தைப் பார்த்ததும் தளர்வோடு நாராயணன் சின்னதாகச் சிரிக்க, பதிலுக்கு வராத சிரிப்பை இழுத்துக் கொண்டு அவர் நெற்றில் குங்குமத்தை இட்டாள். 
நலிந்த குரலில் “பார்த்தியா? எப்படி இருக்கான்?” என்க, “இதுக்கும் மேல உசரமா வளத்துட்டாரு” என நின்ற வாக்கிலே ஒரு கரத்தை தன் தலைக்கும் மேலாக உயர்த்திக் காட்டினாள். 
லேசாகச் சிரித்தவர் ஏதோ முணுமுணுக்க, அவளும் அருகே சென்று செவி சாய்க்க, “உனக்குப் பொருத்தமா இருப்பான்!” என்றார். 
ஒருநொடி உள்ளம் வாடியவள் உதட்டை சுளித்தபடி, “இப்படிச் சொல்லி சொல்லியே என் மனசுல ஆசையை வளர்த்துவிட்டீங்க தாத்தா” என குற்றம் சாட்டினாள். அதற்கும் லேசாகச் சிரித்தவர் அவள் ஆசை நிறைவேறட்டும் என்பது போல் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். 
“நான் கூப்பிட்டேனு கூட்டியாரையா கண்ணு?” என்றவர் ஆசையோடும் எதிர்பார்ப்போடும் கேட்க, “வர மாட்டாரு..” என்றாள் வாடிய குரலில். 
“கோபமா இருக்கானோ?” லேசாக மூச்சு வாங்க கேட்க, அவள் பதில் சொல்லவில்லை, திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்கிறானே என உள்ளுக்குள் வெம்பினாள். 
சின்ன நாக்கில் தேன் தொட்டுத் தடவி இளங்கதிர் என பெயர் வைத்தவர், தன் பேரப்பிள்ளைகளுக்கு நிகரான பாசம் அவன் மீதும் உண்டு. 
அவர் பெரிதாக மூச்சுக்கு ஏங்க, “தாத்தா..” என பதறியபடி நெஞ்சைத் தடவ, சின்னச் செறுமலோடு, “அவன்கிட்ட மன்னிப்பு கேட்காமல் சாவு கூட எனக்கு வாராது கண்ணு” என திணறினார். அவர் தவிப்பைக் காண்கையில் அவளுக்கு உள்ளமே கனத்தது. 
சிறிது நேரம் பேசி அவரை சிரிக்க வைத்த பின்னே எழுந்து சென்றவளுக்கு தாத்தாவிற்காக எனினும் அவனோடு போராட வேண்டும், விட்டுவிடக் கூடாது என்ற உறுதி. 

Advertisement