Advertisement

அத்தியாயம் 16
ஒளி தராது மறைந்து போன சூரியன், மேக மூட்டமான வானம், இளம் சாரல் காலைப்பொழுதை மந்தமாக்கியது. அருவிக் குளியல் அடித்துப் போட்டது போன்ற அப்படியொரு உடல் வலியை கொடுத்திருக்க, இளங்கதிர், சந்திரா இருவருமே அசந்து தூங்கிவிட்டனர்.  
மெல்லக் கண் விழித்த கதிர் கைகளைத் துழாவி கைப்பேசியைத் தேடி எடுத்து மணியைப் பார்த்தான், காலை ஒன்பது முப்பது. வீட்டிற்கு வந்ததே விடிகாலை நான்கு மணிக்குத் தான். ஆனாலும் அதிகப் படியாக தூங்கி விட்டோமோ? நேரமாகி விட்டதோ என்ற நினைவோடு எழுந்தான். முதல் பார்வை அருகிலிருக்கும் மனைவியின் மீது தான் பாய்ந்தது. 
விடியற்காலையில் உடை மாற்ற அவனுக்கென எடுத்த சட்டையை உறக்க கலக்கத்தில் அவள் அணிந்து கொண்டு படுத்திருந்தாள். வெண் சட்டைக்குள் முகம் மட்டுமே தெரிய, சுருண்டு படுத்திருக்கும் தோரணை,  அழகு பூனைக்குட்டி போலே அந்த அரை இருளில் தெரிந்தது. என்ன கன்னங்கள் தான் சற்றே வற்றிப் போன தோற்றம். உற்றுப் பார்த்தால் அவளுமே முதலில் பார்த்ததை விடவும் சற்று மெலிந்திருப்பதாகத் தோன்றியது. 
இத்தனை நாளில் இதைக் கூட கவனிக்காது இருந்திருக்கிறேனே எனத் தன்னையே நொந்து கொண்டான். தன்னை போலே தானே தன்னவளும் சின்னம்மா இருக்கிறார் கவனித்து கொள்வார் என நினைத்திருந்ததெல்லாம் எந்தன் அலட்சியமே! 
மெல்ல எழுந்து, முகம் கழுவித் துடைத்தபடி வெளி வாசலுக்கு வந்தவன் கதவைத் திறக்க, பந்து போலே சுருண்ட நிலையில் வீட்டிற்குள் விழுந்தான் கருப்பட்டி. பதறிய கதிர், “ஏலே..” எனக் குரல் கொடுக்க, அவனை விடவும் பதட்டமாக எழுந்தான் கருப்பட்டி. 
கதிர் விசாரிக்கும் முன்பே, “ஏன் அண்ணே, உனக்கு கொஞ்சம் கூட கூறே இல்லையா? கதவை இப்படி வேகமாவா திறக்குறது?” என்க, “ஏன்லே கதவுக்கு அந்தப்புறம் நீ இருப்பன்னு நான் என்ன ஜோசியமா பார்த்தேன்?” என்றான். 
“பார்த்து இருக்கணும், பின்னே நான் வந்து ஒருமணி நேரமாச்சு, கதவைத் தட்டியும் நீ திறக்கலை. அதான் வாசல்ல உக்காத்திருந்தேன்” என்க, பல்லைக் கடித்த கதிர், “உன்னை யாருலே காவக் காக்கச் சொன்ன? நான் வரலைன்னா நேர மில்லுக்குக் போவ வேண்டியதானே?” என்றான்.
அவன் எரிச்சல் புரியாது, “முடியாதே, சாவி தான் உங்கிட்ட இருக்கே!” என்க, உள்ளே சென்ற மறுநொடியே சாவியை எடுத்து வந்து அவனிடம் நீட்டிய கதிருக்குப் பெரிதாய் தும்மல்! உள் பனியனோடு சுற்றும் தோற்றத்திலே கதிர்  ஆலைக்குக் கிளம்பவில்லை என்பது புரிய மேலும் சீண்டினான் கருப்பட்டி. 
“என்னண்ணே கண்ணெல்லாம் சிவந்து ஆளே வாட்டமா தெரியுதே? இராத்திரி வெளியே படுத்திருந்தியே பேய், பிசாசு எதுவும் அடிச்சிட்டுச்சா?” என்றவன் விசாரிக்க, தான் தோற்றம் ஆராய்வதில் கதிருக்கு ஒருமாதிரி அவஸ்தையான நிலை.
“ஹ்ஷ்..! இந்தா சாவி வாங்கிட்டு ஓடிடு, ஒரு நிமிஷம் நிக்காத” எனக் கதிர் விரட்ட, “முடியாது முடியாது, நீ வராம என்னால போவ முடியாது” என்றவன் பிடிவாதம் பிடிக்க, அட ஆண்டவா! என மனதிற்குள் புலம்பினான் கதிர். 
இறங்கிய குரலில் கெஞ்சலாக “ஏலே, நீ போலே நான் மதியம் வாரேன்” என்க, “அஹான்..நீங்க மட்டும் தூங்குவீங்க நான் மட்டும் மில்லுக்குப் போவணுமாக்கும்?” என்றான். 
“நீயும் தூங்கு, நல்லா தூங்கு! அதை மில்லுல போய் தூங்குன்னு தான் கேட்குதேன்” என இறங்கிய குரலில் கேட்க, அப்படி ஒன்றும் வேலை நேரம் ஓய்வாக விடுபவன் இல்லையே என்ற சந்தேகம். 
கருப்பட்டியோ தாடையில் கை வைத்து யோசனை போலே, “என்னவோ எனக்குச் சரியா படலை! இருந்தாலும் கிளம்புறேன் பார்த்துக்கோ” என வெளியேறினான். 
கதிர் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் கருப்பட்டியோ நேராக எதிர் வீட்டிற்கு நோக்கிச் செல்ல, மீண்டும் பதறிய கதிர், “அங்க என்னடே வேலை உனக்கு?” எனக் குரல் கொடுத்தான்.
பதிலுக்கு,“காலைல டிஃபன் வாங்கியாராட்டுமான்னு கேட்க போறேன், நீங்க தான் மதினியை வீட்டைவிட்டு அனுப்பிட்டீங்களே” எனக் கத்தினான். 
வீதியில் இருந்து கத்திக் கொண்டிருக்க, ஐயோ! என நெற்றியில் அடித்துக் கொள்ளும் நிலையிலிருந்த கதிர், “நான் பார்த்துக்கிடுதேன் கிளம்புலே நீ..” என்றான். 
அவனோ அடமாக, “அதெல்லாம் நீங்க சொன்னா போவ முடியாது, மதினி சொல்லட்டும்” என்றான். 
ஆளில்லாத வீட்டில் எவ்வளவு வேண்டுமோ கத்திக்கொள்! என நினைத்த கதிர் பதிலின்றி கதவை மூடிவிட்டான். நேற்று காலை உண்டது முழுதாக உண்டு ஒருநாள் முடிந்திருந்தது, கருப்பட்டியிடம் இத்தனை நேரம் கத்தியது வேறு பசியை தூண்டியிருக்க, உள்ளே சென்றவன் மெல்லச் சந்திராவை எழுப்பினான். 
“வது..” மெல்லிய குரலில் தோள் தட்டி எழுப்ப, அவளோ சிணுங்கலோடு திரும்பிப் படுத்தாள். அப்போதும் விடாது, கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றான். 
வழக்கமாக எழும் நேரம் தானென்றாலும் இருக்கும் அசதியில் அவளுக்கு எழும் எண்ணமேயில்லை, அவனுக்கும் புரிய, “வது, மனோ வந்திருக்கான். எழுந்திரு நீ” என சுரண்டினான். 
அண்ணனின் பெயரைக் கேட்டதும் சட்டென எழுந்தவள், அதன் பின்னே நினைவு வர, “நான் தான் மனோவை கூப்பிடவே இல்லையே, அப்புறம் எப்படி வருவான்?” என்றபடி முடிகளை மொத்தமாக சுருட்டி கிளிப் மாட்டினாள். 
“ஆமாம், ஏன் கூப்பிடலை..” என்றான், எதிர்பார்ப்புடன். தனக்காக தான் அவள் செல்லவில்லை, என்ற வார்த்தையை அவளிடமிருந்தே கேட்கும் ஆசை! 
“வேணாம், அவன் வந்தால் உங்களைக் குறைவா பேசுவான், என் தேர்வு தப்புன்னு சொல்லுவான், எனக்கு அது பிடிக்காது. நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை, அதனால இஷ்டமோ, கஷ்டமோ நான் தான் அனுபவிக்கணும் யாரையும் சார்ந்திருக்க விருப்பமில்லை. அதுவும் போக, போறதுனா சந்திராவா போகலாம், இளவோட மனைவியா போனா அதுல உனக்கும் தான் அவமானம்!” என்றாள் மெல்லிய குரலில் நிதானமாக. 
அவள் என்னவோ அவன் கேள்விக்கான பதிலைத் தான் உரைத்தாள். ஆனால் கதிருக்கோ ஒவ்வொரு வார்த்தைகளும் கசையடி போலே வலித்தது. இவள் இவ்வளவு யோசிக்கிறாளா? என மலைப்பாக இருந்தது. அவளோ திரும்பி அவன் நிற்கும் தோற்றத்தை ஆராய்ச்சியாய் பார்த்தாள். வேலைக்குச் செல்வதென்றால் எழுப்பாமலே சென்றிருப்பான், செல்லவில்லை போலே என நினைத்தாள்.
எழுப்பிவிட்டதில் அவள் பார்வையில் ஒரு உஷ்ணம் தெரிய, சிறு சிரிப்பில் சமாளித்தவன், “பசிக்கு ஏதாவது டிஃபன் செய், இரண்டு பேரும் சாப்பிடலாம்” என்றான். 
அவ்வளவு தான் இன்னும் அவள் பார்வையில் உஷ்ணமெறியது, “ஏன், நீ தட்டிவிட்டு விளையாட  நான் சமைச்சி வைக்கணுமா?” என்றவள் நொடிந்து கொள்ள, ஐயோ என்றிருந்தது கதிருக்கு. என்ன சொன்னாலும் அவன் மீதே குற்றம் என்று முடிய, நொந்து போனான். 
“நானே செய்யுறேன் நீ போய் குளிச்சிட்டு வா” எனப் பம்பியவன் சமையலறை நோக்கிச் செல்ல, அவளோ மென்னகையோடு உள்ளே சென்றாள். 
தனவதி வரும் முன்பே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தாள் ரேவதி. பொதுவாகவே உடல் வளைய வீட்டு வேலைகள் கூட அதிகம் செய்வதில்லை தான், இப்போது அன்னையும் வேறு வந்துவிட நாள் முழுதும் ஓய்வாக படுத்துக் கொண்டாள். மேலும் நலமோடு தானிருந்தாள். 
செந்தில் உணவுன்னும் போது கூட அவள் எழுத்து வரவில்லை. தனவதி பரிமாறினால் கேட்டு வாங்கி உண்ண மாட்டான், சங்கோஜத்தோடு போதுமென்று எழுத்து விடுவான். அவன் வேறொரு அறையில் படுத்துக் கொள்ள, இரவிலும் அன்னைக்கும் அவளுக்கும் பேசிக்கொள்ள ஏராளமிருந்தது. 
முதலில் விசாரித்தது சந்திராவைத் தான், வீட்டில் அவள் நிலையை விசாரிக்க, “அவ எங்கே வீட்டுல இருக்கா? உங்க அண்ணன் கூடச் சண்டை போட்டு கோவிச்சிட்டுப் போயிட்டா” என்றவர் இடிந்து கொள்ள, அதிர்ந்தாள் சின்னவள். 
“என்னம்மா பிரச்சனை?” என்க, அரவிந்தனைச் சந்தித்ததால் இருவருக்குள்ளும் பிரச்சனை என்ற எண்ணத்திலிருந்தவர் அதை வெளிப்படுத்தவில்லை. 
“தெரியாதுலே..” என்க, “அவளோட ஒத்துப்போகாதுன்னு தான் நான் முதல்லையே வேண்டாம்னு சொன்னேன்! யாரு கேட்டா? இப்போ பாரு அண்ணன் தான் வாழ்க்கை இழந்து நிக்குறான்” என நொடிந்து கொண்டவள் அண்ணனுக்காகவும் சிறிது பரிதாபம் கொண்டாள். அத்தோடு நில்லாது மேலும் பல கதைகள் பேசினார். 
மறுநாள் அவள் தோழிக்குத் திருமணம் செல்ல வேண்டுமென்று கிளம்ப, செந்தில் மறுக்கக் காலையிலே இருவருக்குள்ளும் வாக்குவாதம். அலுவலகத்தில் முக்கிய வேலை விடுமுறை எடுக்க இயலாது, தன்னால் வர இயலாது. நீயிருக்கும் உடல் நிலையில் நீயும் செல்ல வேண்டாம் என்க, அவளோ செல்ல வேண்டுமென்று ஒரே பிடிவாதம். வேறு வழி? தனவதியை உடன் சென்று வருமாறு வேண்டிக் கொண்டவன் அலுவலகம் கிளம்பிவிட்டான்.  
ஜேஜேவென கிளம்பி தனவதியோடு திருமணத்திற்கு வந்திருந்தாள் ரேவதி. திருமணம் முடிய, அவள் தோழியைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல அவள் சென்று விட, தனியாக அமர்ந்திருந்த தனவதியிடம் வந்தார் சேர்மமூர்த்தி. 
“அடடா! வாங்க தனவதியம்மா! எந்த விஷேத்துக்கும் வராதவங்க வந்திருக்கீங்க! நெருங்குன சொந்தமா? எங்க தம்பி கதிரைக் காணலை?” என வரவேற்பும் விசாரணையுமாக கேட்டார். 
இவன் ஏன் தன்னிடம் பேசுகிறான் என நினைத்த போதும், பொதுவாகப் பதிலுரைத்தார்.  மெல்லச் சிரித்துக் கொண்டவர், “கதிர் வராததும் நல்லதுக்குத் தான் நானே உங்களை பார்க்கணும் நினைச்சியிருந்தேன். வரம் தரும் தெய்வமா வழிய வந்துட்டீங்க!” என்க, பாராட்டு போலே தெரியவில்லை, என்னோவோ ஒரு திகில் உணர்வைத் தான் கொடுத்தது தனவதிக்கு. 
“எப்படியிருக்கவ உங்க வீட்டு மருமவ?” என்க, “ம்ம், நல்லா இருக்கா, என்ன விஷயம்?” என்றார். 
“உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும் நினைக்கிறேன். ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு தெரியாம இருக்குமா? உங்க மருமவ சந்திராவை முதல்ல நிச்சியம் செய்தது என் மச்சானுக்குத் தான். உறவு வேணும்னு சம்பந்தம் பேசலை, அந்த பொண்ணுகிட்ட இருக்கிற நிலம் வேணும்னு தான் பேசுனோம். விலைக்குக் கேட்ட போதே அவைக தாத்தா தரலை. இப்பவும் ஒன்னும் சேதாரமில்லை,  மறுபடியும் உங்ககிட்ட கேட்குதேன்” என்றார். 

Advertisement