Advertisement

“என்ன..?” என அதிர்ந்தவன் விழிக்க, “வா குத்தாலம் போலாம்” என அவன் கரம் பற்றி இழுத்தாள். 
இன்னும் அதிர்வு விலகாது, “இப்போவேவா..?” என்க, அவள் தலையை மட்டும் ஆமென்பது போல் ஆட்டினாள். 
“ஏட்டி இதென்ன விளையாட்டா இருக்கா உனக்கு? இந்த நடுச் சாமத்துல எவனாவது குளிப்பானா? உனக்கு  அருவியில குளிக்கணும்னா சொல்லு, ஊரைச் சுத்தி எத்தனையோ அருவிக்கரை இருக்கு, பிரைவேட் பால்ஸ் இருக்கு கூட்டிட்டுப் போறேன். அதை விட்டுட்டு குத்தாலம் போணும்னு சொன்ன செவுட்ல தான் விடுவேன் பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாக. 
சிறிதும் அசராது கை, கால்களை உதறியபடி, “நானா கேட்டேன்? நீயா தானே சொன்ன?” என்றவள் முகத்தைத் தூக்கிக்கொண்டு மீண்டும் சோபாவில் அமர்த்துக் கொண்டாள். கைக்கட்டிக் கொண்டு அவள் அமர்ந்திருக்கும் தோரணையே அவள் பிடிவாதத்தை காட்டிக் கொடுத்தது. சிறு வயதில் பார்த்தது போன்ற தோற்றம். சில நொடி நின்று ரசித்தவன், பின், “சரி வா வது” என அழைத்தான். 
உற்சாக மிகுதியில் கையை தட்டிக்கொண்டு எழுந்தாள் சந்திரா. அவள் முன்னே செல்ல, இரு வீட்டுக் கதவையும் பூட்டிவிட்டு, வந்தான் கதிர். 
கதிர் இருசக்கரவாகனத்தை இயக்க, பின் அமர்ந்து கொண்டாள் சந்திரா. அவளுக்கு நடப்பதெல்லாம் கனவா  என நம்ப இயலாத நிலை. ஆனாலும் அவன் செல்லும் மிதமான வேகத்திற்கு, காதை அடைக்கும் காற்றும், மேனி தழுவும் குளிரின் ஈரப்பதமும் அவளுக்கு உண்மையை உணர்த்தியது. 
இரவு இரண்டு மணி, பெரும் நிசப்தமான சாலையில், சுற்றி எங்கும் இருளும், சிறிதாக மூன்றாம் பிறையின் வெள்ளி ஒளியும், குளிர்காற்றும், மிதமான வேகத்தில் அவனோடு செல்லும் பயணம் சுகமானது. 
திருமணத்திற்குப் பின் முதல் முறையாக அவளொன்றைக் கேட்டிருக்க, அவனால் மறுக்க முடியவில்லை. அதை விடவும், அவளை மறந்த நிலையில் தன்னிடை அணைத்திற்கும் அவள் கரமும், அணைப்பும் அத்தனை இதமாக இருந்தது கதிருக்கு.
அதை நீட்டிக்க விரும்பி அருகே இருக்கும் குற்றாலத்திற்கும் அவன் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருக்க, அந்தச் சில நிமிடங்களில் அவள் சுவாசித்திருந்த இயற்கை மலைக்காற்றே ஒரு புத்துணர்வைத் தந்திருக்க, அவனுடனான கோபம், ஊடல், உரிமை வேண்டல் என அனைத்தையும் மறந்திருந்தாள் சந்திரா. 
குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைகளையும், அடர் பெருங்காடுகளையும், பேரருவிகளும் சிற்றருவிகளையும் கொண்டது. பொது அருவிகள் மட்டுமல்லாது ஊரைச்சுற்றிலும் ஏராளமான சிறு சிறு அருவிகள் தாராளமாக உண்டு. அந்த வட்டாரத்தான் என்பதால் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. 
மனம் சோர்வாக இருக்கும்போதெல்லாம் வந்து சென்றிருக்கிறான். ஆனால் இரவிலும் இவளோடும் இது தான் முதல்முறை. ஊரின் வெளிப்புற பகுதிக்கு வந்துவிட, சாலையில் ஒரு ஓரம் வண்டியை நிறுத்தினான். 
சந்திராவும் இறங்கியபடியே, “இதென்ன எங்கையோ கூட்டிட்டு வந்திருக்கீங்க? என்னை ஏமாத்துறீங்களா?” என்றாள். 
“பொதுஅருவில இந்த நேரம் எப்படி குளிக்க விடுவாங்க? இதுவும் குத்தாலம் தான், நீ வா..” என்றவன், அலைபேசியின் முகப்பு ஒளியில் உள்நோக்கிச் செல்லும் சிறு பாதையில் செடிகளை விலக்கியபடி சென்றாள். 
பாதுகாப்பிலே அவன் அக்கறையும் கவனமுமிருக்க, அவளோ சிறிதும் அச்சமின்றி கை வீசியபடி மெல்ல நடந்து வந்தாள். 
அதைக் கவனித்தவன்,“ஏன் வது? இந்த யானைக்கூட்டம் எதுவும் உன் பின்ன வந்தா என்ன செய்வ?” என்றவன் கேட்க, பயந்து அரண்டவள், ஓடி வந்து கைகளைப் பிடித்துக் கட்டிக்கொண்டு, “இங்க வருமாங்க..!” என்றாள். 
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,“பின்ன, நாம தானே அது இடத்துக்குள்ள வந்திருக்கோம்” என்க, அவளுள் சிறிது பயம் முளைத்தது. 
நான் தான் அறியாப்பிள்ளை தெரியாது கேட்டுவிட்டேன், இவனுக்கு எங்கே போனது அறிவு? என மனதில் புலம்பியவள் புலன்களைக் கூர்மையாக்கினாள். காற்றில் குளுமை அதிகரித்திருக்க, இவர்கள் காலடியோசையோடு இரவு நேரப் பூச்சி இனங்களின் ரீங்காரமும் உடன் சலசலக்கும் நீரோடையின் சத்தமும் கேட்டது. 
விலகி முன்னே சென்றவள் பார்க்க, காலின் கீழே சில்லென்ற நீரோட்டம், கண்ணெதிரே நீல ஒளியில் வெள்ளி நீர்வீழ்ச்சி! பெரிய பாறைப்பிளவிலிருந்து விடாது, பேரிரைச்சலோடு கொட்டிக் கொண்டிருந்தது. 
இயற்கை எவ்வளவு அழகென்று அவள் வியந்து நிற்க, பின்ன வந்தவன், “அளவா தான் தண்ணீக் கொட்டுது தாராளமா, பயமில்லாமல் குளிக்கலாம், போ” என்றான். 
அவள் பின்னே திரும்பி அவனைப் பார்க்க, அவனும் சட்டையைக் கழட்டியபடி குளிக்கத் தயாரானான். பார்த்த விழி பார்த்தபடி அவளிருக்க, அவனோ சட்டையை மட்டும் நனையா இடம் பார்த்துக் கழட்டி வைத்து விட்டு நீரோடையில் இறங்கி அருவி நோக்கிச் சென்றிருந்தான். 
உள்ளே சென்ற பின்னே திரும்பிப் பார்த்தவன், “வா வது..” என்றழைக்க, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டவள், மாட்டேன் என்பது போல் தலையை அசைத்தாள். 
“ஏன்லே..” என்க, “குளிருது..” என்றவள் மேலும் கைகளை இறுக்க கட்டிக்கொண்டாள். 
கடுப்பில் பல்லைக் கடித்தபடி, “அதெல்லாம் ஒன்னும் குளிராது நீ வா” என மீண்டும் அழைத்தான். 
தலையாட்டியபடியே, “இந்த குளிரில நான் குளிச்சால் காலையில விரைச்ச கருவாடு தான்! என் உடம்பு குளிர் தாங்காதுப்பா” என்றாள் மீண்டும் மறுப்பாக. 
கடுப்பான கதிர், “அப்போ சரி வா கிளம்பலாம்” என்றபடி அவளை நோக்கிக் வந்தான். 
“இல்லைங்க ஒரு பத்து நிமிஷம் நின்னு பார்த்துட்டுப் போவோம்” என்றவள் பதில் சொல்லும் போதே சட்டெனத் தூக்கியிருந்தவன், “இப்படி வேடிக்கை பார்க்கத் தான் இந்த நேரம், இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து கூட்டிட்டி வந்தேனா?” எனக் கேட்டபடி அருவி நீரில் நனைய நின்றான். 
ஏற்கனவே அருவிச்சாரலில் பாதி நனைந்திருந்தவன் திடீரென ஒட்டித் தூக்க, அவளுள் எங்கும் குளிர் மின்சாரங்கள் பாய்ந்தது. வழுக்காத இடம் பார்த்து அருவி நீரில் அவளை நிறுத்திட, சில்லென்ற தண்ணீர் பொத்தென்று உச்சந்தலையில் விழுந்து உள்ளங்கால் வரைக்கும் நொடியில் நனைத்திட, எதிர்பாராத செயலில் நடுங்கிப்போனாள் சந்திரா. குளுமை நீர் கொட்டிய வேகத்தில் உடல் முழுதும் வெடவெடத்து நடுங்க, இதயம் கனக்க, ஒரு நொடியில் மூச்சடைக்கும் உணர்வு. 
அதன் பின்னே சுதாரித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், அருகிலிருந்தவனின் தோள்களில் இரண்டு அடி வைத்தாள். பின் முகம் நிமிர்த்தியவள் விழும் நீரை மொத்தமாக முகத்தில் தாங்கினாள். கைகளில் அள்ளி அவன் மீது தெளித்தாள். சிரிப்போடு வாங்கிக் கொண்டவன், அவளையும் தன்னை நோக்கி இழுக்க, இருவருமாக நனைந்தனர். 
பாலருவியிலும் தேனருவியிலும் உருண்டோடி வந்த துளிகள், மனிதர் வாசம் படாத, மூலிகை வாசம் கலந்த இயற்கையின் செல்வத்துளிகள். 
யாருமற்ற ஏகாந்த தனிமையும்  தன்னவளின் அணைப்பும் நீரில் மின்னும் முகமும் கதிரைத் தடுமாறச் செய்தது. தேகம் உணரும் குளுமைக்கு இதமாய், ஒரு வெம்மையை வேண்டியது. ஆனால் சந்திராவோ அனைத்தையுமே மறந்து போனாள். முழுதும் நனைய, சிறு குழந்தையாய் குதூகலித்துக் குதித்தாள், அவனையும் கட்டிக்கொண்டு. 
சறுக்கும் உணர்வையும் தாங்கிக்கொண்டு, போதும் போதுமே மூச்சுத்திணற குளித்து விட்டு கதிர் வெளியேறி நின்று விட, அவளுக்கு இன்னும் போதவில்லை. புது உற்சாகம், புத்துணர்வு பொங்கி வர, இயற்கையோடு கரைத்துப் போனாள். 
சிறிது நேரம் பொறுமையாக நின்ற கதிர், குளிக்கிறேன் என அவள் போடும் ஆட்டத்தையும் அவளையும் ரசித்தான். அதன் பின்னே, “வது, போதும்ல நேரமாச்சு வா கிளம்பலாம்” என அழைக்க, “இன்னும் கொஞ்ச நேரம், நீயும் வா” எனக் கொஞ்சி கொஞ்சியே அவனையும் உள்ளிழுத்தாள். 
அவனும் உள்ளே வர, இரு கைகளையும் அவனை நோக்கி நீட்ட, புரிந்தவன் அவளை கைகளில் தூக்க, அவன் தோள்களில் கையூன்றி முகம் நிமிர்த்தினாள். அந்த உயரத்திலிருந்து விழும் வேகம் குறைய, தேகமெங்கும் புது சிலிர்ப்பு! அதுவும் பிடித்துப் போ, அந்த உயரம் அவளுக்குப் போதுமானதாக இல்லை. இன்னும் இன்னும் உயரத் தூக்கச் சொன்னாள். 
இறுதியில் அவள் தோள்களின் மீது அமர்ந்திருந்தவள் கைகளை நீட்டி நீரைக் சேர்த்து முகத்தில் தெளித்து குதூகலித்தாள். அவள் உற்சாகம் அவனுக்கும் உற்சாகம் தர, ஒரு சுற்றுச் சுற்ற, குலுங்கிச் சிரித்தாள். 
அரைமணி நேரத்திற்கும் மேலாகச் சுமந்திருப்பான். அதன் பின்னும் அவள் ஆட்டம் அடங்காது போக, கீழே போட்டிவிடுவேன் என்ற மிரட்டலோடு தான் இறக்கி விட்டான். 
இறங்கிவிட்ட பின் அவன் அதட்ட வர, அவளோ, “ஷ்ஷ்..” என அவனை அதட்டிவிட்டு நெஞ்சில் சாய்ந்து இறுக அணைத்துக்கொண்டான். 
இயற்கை துளி இருவரையும் நனைத்துக் கொண்டிருக்க, பெரும் மௌனமோடு தன் நெஞ்சில் சாய்ந்து விழி மூடியிருந்தவளைப் பார்த்தான் கதிர். வெகு நேரம் நீரில் ஊறியதில் மூக்கு நுனி, காது மடல்கள் முதல் முகம் மொத்தமும் சிவந்திருக்க, அந்த நிலவொளியில் நீரில் பூத்த செந்தாமரையாக மின்னினாள். 
கதிருக்குக் கண்ணிமைக்க இயலவில்லை. அவள்  விழிகள் மூடியே இருக்க, மெல்ல குனிந்தவன் நீர்த் துளிகள் ததும்பி நிற்கும் இதழில் தன்னிதழ் பதித்தான். அதை உணர்ந்து ஏற்றவள் அவனுக்கு இசைந்தாள். 
இருவரின் இதழும் மிட்டாயின் தித்திப்பை உணர்ந்தது, முத்தத்தோடு கலந்த அந்த நீரின் சுவை மேலும் இனிப்பாது. குளிர் நீரோடு பரிமாறிக் கொள்ளப்பட்ட முத்தம் இருவருக்குள்ளும் புது வெட்கையை மூட்டியது. 
தொலைவில் கேட்ட ஒரு பறவையின் கீச்சொலியில் தன்னியல்பிற்கு மீண்ட கதிர், மெல்ல சந்திராவின் செவியோரம், “வீட்டுக்குக் கிளம்புவோமா வது?” என கிசுகிசுத்தான். 
முகம்காட்டாது திரும்பிக் கொண்டவள் மறுப்பாய் தலையசைத்து விட்டு மீண்டும் தண்ணீரில் ஆட்டம் போடத் துவங்கினாள். விடிந்தாலும் இவள் வர மாட்டாள் போலும் என்பது புரிய, ஆரம்பம் போலே அவன் தான் சட்டென கைகளில் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினான். 
சாலை வரைக்கும் சுமந்து வந்தவன் தனது வாகனத்தின் அருகில் வந்து இறக்கி விட்டான். நீரில் ஆடும் வரையிலும் தெரியாத குளிர், தற்போது விடியல் குளிர் காற்றோடு மேலும் அதிகப்படியாகத் தெரிந்தது. உடலைக் குறுக்கிக் கொண்டு, உள்ளங்கைகளைத் தேய்ந்து கன்னங்களில் வைத்தபடி நிற்க, கதிர் வண்டியிலிருந்த துண்டை எடுத்துத் துவட்டி விட்டு அவளுக்கு போர்த்தியும் விட்டான். 
வண்டியை இயக்கப்படி, “மாத்திக்க ட்ரெஸ் எடுத்துட்டு வரலையே, சரி வா சீக்கிரம் வீட்டுக்குப் போயிடலாம். மழை வேற வர மாதிரி இருக்கு” என்றழைக்க, வயிற்றில் கை வைத்துக் கொண்டு மறுத்தவள், “கொலை பசி, பேய் பசியில இருக்கேன். ஒழுங்கா ஏதாவது கடையைப் பார்த்து வண்டியை நிறுத்து” என மிரட்டலோடு வண்டியில் ஏறினாள். 
நேற்றிலிருந்து அவள் ஒவ்வொரு சொல்லையும் செயலாக்கி இருந்தான். அவளை விடவும் அதிகப்படியான பசி அவனுக்கு. 
மெல்லிய விடியல் நேரம், குற்றாலத்தின் பிரதான சாலைக்கு வைத்திருந்தனர். கடை வீதியில் ஒரு சில டீக்கடைகள் அப்போது தான் திறந்துக் கொண்டிருக்க, ஒரு கடையில் வண்டியை நிறுத்தினான். குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் சூட்டில் ஆளுக்கு இரண்டு டீயும் நான்கு வடையும் உண்ட பின்னே கிளம்பினர். 
பின்புறம் அமர்ந்திருந்தவள் மெல்ல அவன் தோளில் சாய்ந்திட,“சரியான அரவை மெஷினினுட்டி நீ!” என்றவன் கேலியுரைக்க, “கண்ணு வைக்காதீரும், மில்லுக்காரன் புத்தியைப் பாரு” எனத் தலையில் கொட்டினாள் சந்திரா. 
சற்று பசி மட்டுப்பட்ட பின் உடல் அலுப்பு அதிகப்படியாகத் தோன்ற, அவன் செல்லும் வேகத்திற்கு கண்கள் சொக்க, அவன் தோள்பட்டையில் முகம் புதைத்திருந்தவள் மெல்ல விழிகளையும் மூடி விட்டாள். 
வீட்டிற்கு வரவும் அவன் தான் எழுப்பி அரை உறக்க நிலையில் உடை மாற்ற வைத்து, படுக்க வைத்தான்.  வண்டியோட்டியது, அருவிக்குக் குளியல், அவளைச் சுமந்தது என அவனுக்கும் அதிகப்படியான அலுப்பு. அவனும் உடை மாற்றிவிட்டு அருகில் படுத்தவன், போர்வையை இழுத்து மூடிக் கொண்டான். 

Advertisement