Advertisement

அத்தியாயம் 15
மஞ்சள் ஒளி மங்கும் முன் மாலை நேரம். தனவதியின் அலைபேசிக்கு செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது. ரேவதி குறைவான இரத்த அழுத்தால் மயங்கி விட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தான்.  உடன் யாரும் பெரியவர்கள் இல்லாததால் தனவதியை உதவிக்கு வரும்படியும் வேண்டினான். சந்திரா வீட்டை விட்டுச் சென்று விட்டதும் நினைவிற்கு வர, உடனே கிளம்பினார் தனவதி. 
கதிரின் அறைக்கதவைத் தட்ட, வெளியே வந்தவனிடம், “எய்யா, ரேவதி புள்ளைக்கு உடம்பு சொகமில்லையாம், நான் போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வரேன். நீங்க இரண்டு பேரும் கவனமா இருந்துக்கோங்க. சந்திராவுக்குச் சமைக்கத் தெரியாது, நல்ல கடையா பார்த்து சாப்பாடு வாங்கிக் கொடுத்துடு” என்றார், எதுவும் அறியாதவர் போலே. 
அவனோ பதட்டமுடன் ரேவதியைப் பற்றி விசாரித்தபடி, அவரையும்  அழைத்துக் கொண்டு வெளி வாசல் வரை வந்துவிட்டான். வெளியே வந்தவன் வாசல் கதவையும் மூடியபடி, “ஏன் சின்னம்மா, சந்திரா போகும் போது உங்ககிட்ட சொல்லிட்டுப் போகலையா..?” என்றான். 
“வெளியே போயிருக்காளா? சொல்லையே!” என்றார் வியப்பாக. 
“இல்லை சின்னம்மா ஒரு சின்னப் பிரச்சனை அவ கோச்சிட்டு வீட்டை விட்டுப் போயிட்டாள். விடுங்க நான் பார்த்துக்கிடுதேன்” என்றான். 
வருந்தும் முகபாவனையில், “அவ போனா நீ தடுக்க.வேணாமா? அப்படியேவா விடுவ?” என்றார் உரிமையான அதட்டலோடு. 
அவன் பதிலின்றி இருக்க, “சரி ஊருக்கு போயிட்டு வரவும் மெட்ராஸ் போய் அவங்க வீட்டுல பேசி, அவளைச் சமாதானம் செய்து கூட்டிட்டு வருவோம் என்ன ராசா?” என்றார். 
பதிலேதும் சொல்லவில்லை. செந்திலுக்கு அழைத்து ரேவதியின் உடல் நிலை பற்றி விசாரிக்க, பயப்படும்படி எதுவுமில்லை, பலகீனமாக இருப்பதால் சில நாட்கள் படுக்கையில் ஓய்வாக இருக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தான். நிம்மதியுற்ற கதிர், தென்காசி வரை தனவதியை அழைத்து வந்து, செங்கோட்டைப் பேருந்தில் அனுப்பி வைத்து விட்டு அரிசி ஆலைக்கு வந்தான். 
வந்தவனுக்கு வேலைகள் இருந்த போதும் எதிலும் கவனம் பதியவில்லை. கருப்பட்டியும் மாலையிலே வெகு சீக்கிரம் கிளம்பியிருக்க, வேலைகள் தேங்கின. ஆனாலும் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்படியே விழி மூடி சாய்ந்து அமர்ந்துவிட்டான். 
அடுக்கடுக்கான குற்றத்தை அவன் மீது வைத்து விட்டு, அவள் பாட்டிற்குச் சென்றே விட்டாள். இல்லாததைச் சொல்லவில்லை தான்,  அவனுக்கோ இருப்பதிலும் பாரம் கூடிய நிலை. ஏற்கனவே இருந்த குற்றவுணர்வை விட, தற்போது மேலும் அழுத்தியது நம்பி வந்தவளை நலமோடு வாழ வைக்கவில்லையோ என்ற உணர்வு. 
வெகு தாமதமாக நள்ளிரவை நெருங்கும் நேரம் வீடு வந்தான் கதிர். தனவதியும் சந்திராவுக்கு இல்லாதது வெறுமையாகத் தெரிய, மனதிலும் ஒரு வெறுமையான உணர்வு தான்! திருமணம் தன் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் தரவில்லையா? என எதற்கோ ஏங்கினான். 
வெகு நாட்களுக்குப் பின் கட்டிலை விரித்து படுத்து, விழிகளையும் மூடினான். மூடிய விழிகளுக்குள் கசிந்துருகும் நீரில் கலங்கி பிம்பமானாள் சந்திரா. உறக்கமென்பதே நெருங்காது புரண்டு புரண்டு படுத்தவனின் செவிகளில் கடகடவென தகர டப்பா உருளுவது போன்ற சத்தம் கேட்டதில் தலையை உயர்த்திப் பார்க்க, பழைய சைக்கிளில் கையில் ஒரு பார்சலோடு வந்து கொண்டிருந்தான் கருப்பட்டி. 
“என்னலே இந்த நேரம்? கையில என்ன?” என்ற கதிரின் குரலுக்கு, “நம்ம ஐயர் மெஸ்ல நெய் தோசை வாங்கியாந்தேன்” என்றபடி சைக்கிளைச் சட்டென நிறுத்தினான் கருப்பட்டி. 
“நான் இப்போ தானே சாப்பிட்டேன்” என்றவன் பொய்யாக மறுக்க, “ஐயே! அஸ்க்கு புஸ்க்கு ஆசை தோசை! உனக்கு வாங்கியாந்தேன்னு நினைச்சிசோ..?” என்றான் பொங்கிச் சிரித்தபடி. 
“அப்போ யாருக்குலே? ஒருவேளை உன்னைய வீட்டைவிட்டு விரட்டிடாவளா?” என்றபடி கதிர் கட்டிலிருந்து விருட்டென எழுந்து அமர்ந்தான்.
“என்னைய யாரு விரட்ட முடியும்? அந்த வீடு எங்க தாத்தா சொத்துல? இது மதினிக்குத் தான் வாங்கியாந்தேன்” என்க, குழம்பிய கதிர், “யாரடே சொல்லுத? சந்திராவையா?” என்று கேட்டவனின் மெல்லிய குரலில் சிறிது எதிர்பார்ப்புகள் ஒளிந்திருந்தது. 
“பின்ன? எம்மதினியை தவிர, யாருக்கு இந்த மாதிரியெல்லாம் சேவகம் செய்யப் போறேன்” என்ற கருப்பட்டி எதிர்வீட்டின் வாசல் நோக்கிச் சென்றான். 
அப்போ இவள் ஊருக்குச் செல்லவில்லையா? ஒருநாள் முழுவதும் இங்கு தான் இருந்தாளா? அதைக் கூட தெரியாது இருந்திருக்கிறேனே! என தன்னையே நொந்து கொண்டான். மனதிற்குள் ஏதோ சந்தோஷ ஊற்று, தனக்காக இருக்கிறாள். 
சில நிமிடங்களிலே வந்த வெளியே வந்த கருப்பட்டி நேராகச் சென்று அவன் சைக்கிளை எடுக்க, “ஏலே உம்மதினி சாப்பிட்டாளா?” என்றான் விசாரணையாக. 
“ரொம்ப அக்கறை இருந்தால் போய் ஊட்டிவிட வேண்டிய தான?” என வாய்க்குள் முனங்கியவன், “ம்ம்..” எனத் தலையை மட்டும் அசைத்து விட்டு சைக்கிளைத் திருப்பினான். 
சட்டென எழுந்து வழிமறித்த கதிர், “நிசமாவலே?” என்க, கடுப்பான கருப்பட்டி, “இன்னுமா நம்பலை? நான் வேணா சாப்பிட்ட தட்டை போய் எடுத்து வந்து காட்டவா?” எனக் கத்தினான். 
“வேணாம், வேணாம்” என அமைதிப்படுத்தியவன், தன்னைப் பற்றி விசாரித்தாளா என்ற எதிர்பார்ப்பில், “வேற எதுவும் சொன்னலா?” என்றான். 
“ம்ம், சொன்னாங்க காரச்சட்னியை காணோம்னு சொன்னாங்க” என்றவன் ராகமிழுக்க, கதிர் முறைத்தான்.
“இப்போ எதுக்கு இந்த முறைப்பு? மதினியை கூப்பிடணுமா?” என்றவன் கத்த, “ஒன்னும் வேண்டாம், நீ கிளம்பு முதல்ல” என அனுப்பிய கதிர், மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தான். 
தன்னைவிட்டு அவள் எங்கும் செல்லவில்லை என்பது அவனுக்கு அப்படியொரு நிம்மதியைக் கொடுத்தது. தனக்கென்றும் ஒரு உறவு நிலையாக உள்ளது என நினைக்கையில் உள்ளுக்குள் மகிழ்ச்சி மத்தாப்புகள் பூத்தது. அவளைப் பார்க்கும் ஆவலும் அதிகமாக, எழுந்தவன் தயக்கமின்றி நேராக எதிர் வீட்டை நோக்கிச் சென்றான். 
சுற்றுச்சுவரின் இரும்புக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். எளிதாக திறந்து கொள்ளும் பின் வாசல் கதவு அவனுக்கு நன்கு பழக்கம். வீட்டிற்குள் செல்ல, மொத்த வீடும் இருளில் இருக்க, வரவேற்பு அறையில் தொலைக்காட்சி மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
ஒரு ஆங்கிலப்படத்தை ஒளிரவிட்டு, எதிரே சோபாவில் டீசர்ட், முட்டி வரையிலான பேன்ட் என இரவு உடையில் அமர்ந்திருந்தாள் சந்திரா. கையில் சிப்ஸ் பாக்கெட்டோடு வெகு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் பிரிவில் உருகியிருப்பாள் என்ற எண்ணமில்லை ஆனாலும் சிறிதேனும் அழுது, வடித்து, வருத்தமாக இருப்பாள் என நினைத்து வந்தவனுக்கு பெரும் ஏமாற்றம் தான்! 
பல்லைக் கடித்தவன் அவளருகே  செல்ல, அந்த அரூபத்தில் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் தொலைக்காட்சியை நோக்கித் திரும்பிக் கொண்டாள். மேலும் கடுப்பில் பல்லைக்கடித்தவன் அவளருகே பொத்தென அமர்ந்தான். முன்னிருக்கும் மேசையில் உணவுண்ட தட்டும், பார்சலைப் பிரித்த  நெகிழிப்பைகளும், தண்ணீர் குடுவையும் குப்பையாகக் கிடந்தது. 
அனைத்தையும் கண்டவன், “ஏட்டி, புருஷன் சாப்பிடாம இருப்பானேங்கிற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாம நீ மட்டும் நல்லா அமுக்கிட்டு இருக்க?” எனக் கேட்டான். 
அவள் மௌனமாக இருக்க, பதில் வேண்டி அவள் கன்னத்தைப் பற்றிக் கிள்ளியவன் தன் புறமாகத் திருப்பினான். 
வெடுக்கென்று அவன் கரத்தைத் தட்டி விட்டவள், “ஏன் பட்டினி இருக்கிற? அதான் உங்க சின்னம்மா இருக்கிறாங்களே! சுடச்சுட வேளைக்கு வேளைக்கு வகையாக கவனிப்பாங்களே! ஒரு தரம் கூட உன் வயிறு வாடவிடாம பார்த்துப்பாங்களே?” என்றாள். குரலிலும் அந்த தொனியிலும் சிறிது நக்கல். 
உண்மையில் கதிரின் மீது கோபமிருந்த போதும் அவனை விட்டு விலகி இருக்க முடியவில்லை சந்திரவதனியாள். அடுகடுக்கான குற்றங்கள் சொல்லினாள் தான் அனைத்திற்கும் அவனை மட்டும் காரணமாக்கிவிட இயலாது, தனவதியின் தூண்டுதல் என அவளுக்கு நன்கு தெரியும்! 
தனவதியை விட்டுக்கொடுக்காத கதிர், “உண்மை தான், ஆனால் அவங்க இல்லையே ஊருக்குப் போயிட்டாங்க”  என்க, “ஹோ…” என்றவளின் குரலே உள்ளிறங்க, அதான் தைரியமா என் வீட்டுக்குள்ள வரைக்கும் வந்திருக்கனோ என மனதில் நினைத்தாள். 
ஆனால் அவனிடம் சொல்லிக் கொள்ளவில்லை. தனவதி ஒரு போதும் சந்திராவைப் பற்றி கதிரிடம் குறை கூறியதில்லை, கதிரின் பெரும் விருப்பத்திற்குரியவள் அவளென்று அறிவார். அதனாலே அவளை நேரடியாகக் குறை கூறாது, அவன் தந்தையின் இறப்பையயும் அதற்கு அவள் குடும்பம் தான் காரணம் என்பதையும் அடிக்கடி நினைவு படுத்திவிடுவார். அவரை கவனித்திருந்த சந்திரா, அவரிடமிருந்தே அதையும் கற்றிருந்தாள். 
“அது சரி, வேகவேகமாக வீட்டை விட்டு கிளம்பின, சென்னைக்கு போகாம இங்க வந்து உக்காந்திருக்க?” என்றவன் கேட்க, “ஏன் நான் போகாதது உனக்குக் கவலையா?” என்றாள் சட்டென. 
கதிர் பதிலின்றி சிரிக்க, “இங்க பாரு, உனக்காக ஒன்னும் நான் இங்க இல்லை. இது என் வீடு அதான் இருக்கேன். மனோவை வரச்சொல்லி இருக்கேன், காலையில கிளம்பிடுவேன்” என்றாள் சிலுப்பலுடன். 
அவள் தோள் சுற்றி தன் கரம் போட்டு அணைத்தவன், “போறதுனா போ, அதுக்கு முன்ன இன்னைக்கு நைட் நம்ம வாழ்க்கையைப் பத்திப் பேசுவோம்..” என்றவன் மேலும் நெருங்கி அமர, அவளோ ஏக கடுப்பில் அவனைத் தள்ளிவிட்டு தாக்கினாள். 
தனக்காக அவள் செல்லவில்லை என்றதில் அவனும், தன்னை தேடி இத்தனை விரைவாக வந்ததில் அவளும் என இருவரும் குளிர்ந்திருந்தனர். இருவரும் ஒருவித மன நிம்மதியிலிருந்ததால் கோபம் காணாது போக, செல்லச் சண்டையாக அவர்கள் சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. 
சிவந்த முகமாக, “நம்ம கல்யாணத்தை மனசார ஏத்துக்கும் போது, பேசலாம்னு தானே சொன்னேன்” என்றவள் கேட்க, அவன் கவனம் அவள் சிவந்த மூக்கின் மீது மட்டுமே இருந்தது.
“ம்ம், அதான் பேசலாம் வா” என்றவன் மீண்டும் அழைக்க, “இப்போ மட்டும் உன் மனசுல இருந்த குற்ற உணர்வு எப்படிப் போச்சு? என்னைக் கல்யாணம் பண்ணது தப்புன்னு நீ நினைக்கிற தானே?” என்றாள் விடாது விசாரணையாக. 
சிவந்த மூக்கை பற்றிக் கிள்ளியவன், “இல்லை, நீயா கற்பனை பண்ணிக்காதலே, நான் என்ன மயக்கத்துலையா தாலி கட்டுனேன்? சுயநினைவோட தானே கட்டுனேன் பின்ன எப்படித் தப்பா நினைப்பேன்?” என அவளையே எதிர்க் கேள்வி கேட்க, அவளுக்கே நான் தான் தவறுதலாக கேட்டுவிட்டேனோ என்ற எண்ணம் தோன்றியது. 
இருந்தும் சமாதானமடையாதவள், “அப்போ என்ன உங்க மனசை உறுத்துது?” என்றாள். 
சோர்ந்த குரலில், “எங்க அப்பா இறப்புக்கு நியாயம் வாங்கலையோன்னு உறுத்துது தான், அதை நான் பார்த்துக்கிறேன். ஆனால், அதையும் நம்ம கல்யாணத்தையும் சம்மந்தப்படுத்திக்காதே, முதல்ல ஏன் உனக்கு அப்படித் தோனுது?” என்றான். 
அவன் விசாரணையில் உஷாரானவள் தனவதியை இழுக்காது, “நீ என்னை வெளிய எங்கேயும் கூட்டிட்டிப் போறதேயில்லை. என்னை கவனிச்சு, இல்லை ரசனையா ஒரு பார்வை கூட பார்க்கிறதில்லை. ஏற்கனவே எங்க குடும்பத்தை வேற பிடிக்காதா அதான் நானே அப்படி நினைச்சிக்கிட்டேன்” என்றாள் மெல்லிய குரலில். 
அவள் குறையாகக் கூறினாலும் அதிலிருக்கும் அவள் ஏக்கம் அவனுக்குப் புரிந்தது. சற்றே நகர்ந்து அமர்ந்திருந்தவளை மீண்டும் இழுத்து அணைத்தான். 
“இருந்தாலும் அநியாயம் பண்றட்டி நீ! நம்ம கல்யாணம் முடிச்சே கிட்டத்தட்ட இருபது நாள் தானே ஆகுது? மில்லு வேலையோட, புது காம்ப்ளெக்ஸ் கட்டுமான வேலையும் போயிக்கிட்டு இருக்குல, நானே பிஸியா இருக்கேன் அதை புரிஞ்சிக்காம பேசாத” என்றான் மெல்லிய அதட்டலில். 
அவன் கையை உதறிக்கொண்டு விலகியவள், “க்கூம், இல்லைன்னா மட்டும், அப்படியே கொஞ்சவே பாரு? ஏன் நீ தான் கொத்தனாருக்கு செங்கல்லும், சித்தாளுக்கு சிமெண்டும் எடுத்துக் கொடுக்கப் போறீயா?” எனக் குத்தியவள், “அது கூடப் பரவாயில்லை, ஒருநாளாவது ஒரு முழம் பூ வாங்கிட்டு வந்திருப்பியா?” என்றாள் ஆற்றாமையில். 
அவனோ வெகு எளிதாக, “பூ தானே தினமும் காலையில சுந்தரியக்கா விக்க வருவாங்கலே வாங்கிக்க வேண்டியதானே?” என்றான். 
பொறுமை பறக்க, பல்லைக்கடித்தவள் அருகிலிருக்கும் தலையணையை எடுத்தது மொத்தியபடி, “நான் பூ வேணும்னா கேட்டேன்? வெளிய போனாலும், என்ன தான் நாள் முழுக்க வேலை இருந்தாலும் என்னை மறைக்கலைன்னு சொல்லுற மாதிரி எனக்கு ஏதாவது வாங்கிக்கிட்டு வரணும்னு எதிர்பார்த்தேன். மங்கா! மரமண்டை.. புரியுதா?” என்றவள் மேலும் வெளுத்தாள். 
அடி தாங்காது தலையணை பறித்தவன், “இதான் வாய்ப்புன்னு அடிக்காதட்டி போதும் நிறுத்து, பொண்ணுங்க இதெல்லாம் எதிர்பார்ப்பாங்கனு எனக்கு எப்படித் தெரியும்?” என்றான் பரிதாபமாக. 
அப்போதும் விடாது கைகளால் அடித்தபடி, “பொண்ணுங்க இல்லை, பொண்டாட்டி எதிர்பார்ப்பான்னு தெரியாதா? அப்புறம் நீயெல்லாம் ஏன் கல்யாணம் பண்ற?” என்றாள். 
அடித்த கைகளைப் பற்றி இழுத்து தன்னோடு அணைத்தவன், “அதெல்லாம் தெரிஞ்சிக்கத் தான் கல்யாணம்! நீ சொல்லிக் கொடேன், நான் கத்துக்கிறேன்” எனக் காதோரம் ரகசியம் பேசியபடி குறுகுறுப்பு மூட்டினான். 
சிவந்திருந்த கன்னங்கள் தகிக்க, தடுமாறியவள், “இப்படியெல்லாம் சொன்னா என் கோபம் போயிடுமா..?” என்றபடி விலகினாள். 
முகம் சுருக்கியவன், “பின்ன குத்தால அருவியில குளிப்பாட்டினா போகுமா?” என்றான் கேலியாக. 
சட்டென மலர்ந்த முகத்தோடு, ஆசைகள் ததும்ப, “ம்ம்..” எனத் தலையாட்டினாள், எதிர்பார்ப்போடு. 

Advertisement