Advertisement

அத்தியாயம் 11
முத்தாலம்மன் கோவில், அவ்வூரின் மேற்கு வயல்வெளிகளின் ஓரமிருந்தது. முன்பே வந்து விட்ட மாலதியும் தனவதியும் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, கேசவன் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தான். நெருங்கிய சொந்தம், பங்காளி மக்கள் என அருகிலிருக்கும் தங்கள் வகையறாக்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தாள் மாலதி. 
கதிரோடு வருமாறு சொல்லி சந்திராவை விட்டு வந்திருக்க, அவளும் கிளம்பி வந்து கதிருக்காகக் காத்திருந்தாள். நிமிடங்கள் கடந்து கொண்டிருக்க, ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் உள்ளங்காலைத் தரையில் ஊன்றி ஊஞ்சலை இழுத்து ஆட்டிக் கொண்டிருந்தாள். 
சிறுவயதில் கால்கள் தரையில் ஊன்ற உயரம் எட்டாது, அவன் தான் ஆட்டிவிடுவான். அரைமணி நேரம் ஒருமணி நேரமில்லை, ஐந்து மணி நேரமென்றாலும் அவளுக்குச் சலிக்கும் வரை அலுக்காது ஆட்டிவிடுவான். வள்ளியம்மை கூட அவளை அதட்டுவார், ஆனாலும் அவன் தரும் செல்லம் குறையாது. 
அந்நினைவிலே ஆடிக்கொண்டிருக்க, அறையிலிருந்து வெளி வந்த கதிர் படிகளில் இறங்கி வர, அவ்வோசையில் சந்திராவும் தலை உயர்த்திர் பார்த்தாள். உயர்த்திய தலையை இறக்க இயலவில்லை, வைத்த கண்ணைச் சிமிட்ட இயலவில்லை. வெண்பட்டு வெட்டி, சட்டை அவன் உயரத்திற்கும் உடல்வாகிற்கும் அம்சமாப் பொருந்தியிருக்க, இரண்டாம் மூன்றாம் பட்டன்களை மாட்டியபடியே வரும் ஸ்டைலும் படிகளில் இறங்கும் போது குதித்து அடங்கும் முன்னுச்சி கற்றை கருங்கூத்தலும் ஏதோ மந்திர அலைகளை வீசுவதைப் போல் அவளை ஈர்த்தது. 
ஆடியபடியே அடங்காது அவள் பார்க்க, இறங்கிய பின்னே அவளின் பார்வையின் மாற்றம் அறிந்தவன் முன் வந்து நின்றான். அவன் கட்டுமஸ்தான உடல்வாகு ஒரு கம்பீரம் காட்ட, வேல் விழியும் கூர் புருவமும் அவனின் ஆளுமையைக் காட்ட, தன்னவன், தனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற உரிமை! அவள் முகத்தில் ஒரு பூரிப்பு, செழுமை, பார்வையில் ஒரு கர்வம் அவனும் உணர்ந்தான். 
ஊஞ்சல் சங்கிலியைப் பற்றி நிறுத்தியவன், “நேரமாச்சு வா போலாம்..” என்க, குதித்து இறங்கி அவன் முன் நின்றவள் எக்கி அவன் மீசையின் ஓரங்களை முறிக்கி உயர்த்தி விட்டாள். அது வரையிலும் பொறுமையாக நின்றிருந்தவன் மறுநொடியே இருபுறமும் இறக்கி விட்டு விட, முறைப்போடு முகத்தை சிலுப்பியவள் முன் செல்ல, அவனும் சிறு சிரிப்போடு பின் சென்றான். 
தம்பதிகளாக இருவரும் கோவிலுக்குள் வந்தனர். பெரும்பாலும் அவன் சொந்தங்களை அவள் அறிவாள் ஆகையால் அனைவரையும் புன்னகை முகமாக எதிர் கொண்டாள். ஒன்றுமே தெரியாமல் சந்திரா தடுமாற, மாலதி உதவ, ஒரு வலியாகப் பொங்கல் வைக்கத் துவங்கினர். 
கையில் அலைபேசியோடு சற்று தொலைவில் மரத்தடியில் நின்றிருந்த கதிரின் அருகே வந்த கருப்பட்டி, “அண்ணே..” என்றழைக்க, நிமிர்ந்த கதிர், “என்னலே இது?” என்றான். 
கையிலிருந்த தேங்காய் மூடியை நீட்டியபடி, “சாம்பாருக்குத் துருவ சொன்னாங்க, அதுல இருந்து ஒன்னை தூக்கிட்டு ஓடியாத்துட்டேன். உனக்கு வேணுமாண்ணே?” என்க, வழக்கம் போலே அவன் முதுகில் ஒரு அடி வைத்தவன், “வாலு மட்டும் தான் இல்லை மத்தபடி குத்தாலத்துக் குரங்கு தான்லே” என்றான் சிறு சிரிப்போடு.
“ஆமா நீ மட்டும் பெரிய மன்மதன்..! அட ஏண்ணே திடீர் கல்யாணம் பண்ண?” 
“ஏன்லே அதுல உனக்கு என்ன கவலை?”
“அட போண்ணே, ஊருக்குள்ள ஆயிரமாயிரமா மொய் செஞ்சி வைச்சிருக்கியே அதை இப்போ வசூலிக்க முடியாம போச்சுல” என்றவன் கவலை தெரிவிக்க, “சரி விடு விடு, எண்ணி ஒரு வருஷத்துல இதே கோவில்ல மச்சான் புள்ளைக்கு மொட்டை போட்டு காது குத்தி டபுலா வசூலச்சிடலாம்லே” என்றபடி அருகே வந்து நின்றான் கேசவன். 
“அட கேலி செய்யாதிரும் மாமா..” எனக் குழைந்த குரலில் மறுத்த போதும் சற்றே தொலைவிலிருந்த சந்திராவைத் தழுவியது கதிரின் பார்வை. 
“பாருங்க மாமா, எங்கண்ணே புதுசா வெட்கப்படுதே..!” எனச் சிலாகித்த கருப்பட்டி, “இதை அப்படியே ஒரு போட்டோ பிடித்து, கட்டவுட் அடிச்சி தென்காசி ஜில்லா முழுக்க ஒட்டப் போறேன்” என்றவன் ஆர்ப்பரிக்க, கதிர் கொலை வெறியோடு முறைக்க, கேசவன் அடக்க முடியாமல் சிரித்தான்.  
அதற்குள் அனைத்தையும் தயாராகிவிட, உச்சி வேளை பொங்கலும் படையலுமிட்டு அம்மனை அனைவருமாக வேண்டினர். அதன் பின் பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்க, இளசுகள் சுற்றி வளைத்துப் புகைப்படமெடுக்க, மறுபுறம் விருந்தும் சிறப்பாக நடந்தது கொண்டிருந்தது. 
அனைத்தையும் ஒரே நாளில் ஏற்பாடு செய்திருந்தனர் கேசவனும் மாலதியும். தனவதி எதிலும் தலையிடவில்லை. ஆனாலும் மாலதி இழுத்து முன் நிறுத்திக் கொண்டாள். சந்திராவோடு சகஜமான பேச்சுகள் வரவில்லை எனினும் தேவைக்கு என சில வார்த்தைகள் பேசினார். அதிகம் ஒட்டிக் கொள்ளாத போதும் பிறர் கண்ணுக்குத் தெரியாத அளவிற்காக ஒரு விலகல் இருக்கவே செய்தது. 
விருந்து முடிய தனவதி வீட்டிற்குச் சென்றுவிட, அடவிநயினார் அணை, திருமலை முத்துக்குமாரசுவாமி கோவில் என மாலதி கணவனோடு அண்ணனையும் அண்ணியையும் அழைத்துச் சென்றாள். சிறுவயதில் பார்த்த கோவில் தான் பல வருடங்கள் கழித்துப் பார்க்கும் சந்திரா உற்சாகமாய் குதூகலித்தாள். 
பண்பொழியில் மலை உச்சியின் மீதிருக்கும் முருகர் கோவில் மிகவும் பழைமை வாய்ந்தது, தைப்பூசத்திற்கு வரும் கூட்டமும் நடக்கும் கொண்டாட்டங்களையும் காண அவ்வளவு உற்சாகமாக இருக்கும். இருகுடும்பத்தோடு வந்த நாட்கள் நினைவிலிருந்தது. இன்று மலைப் பாதையைச் சமன் செய்து அரசாங்கம் தார்ச்சாலை அமைத்துவிட்டதால் காரிலே வந்திருந்தனர். 
ஆனாலும் அறுநூற்று இருபது படிகளை ஏறுகையில் பாதியிலே சோர்ந்து அமர்ந்து விடுபவளைச் சிறிதும் அசராது தூக்கி சென்ற கதிர் இன்றும் நினைவிலிருந்தான். 
அதே நினைவோடு கதிரைப் பார்க்க, அவனோ கண்டுகொள்ளாது கோவில் வாசல் நோக்கி நடந்து கொண்டிருந்தான். பல்லை கடித்தவள், மெல்ல நடந்து சென்று அவன் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு அவனோடு நடந்தாள். மாலை பூஜை நேரம் சரியாக இவர்கள் சென்று விட, முருகனின் தரிசனம் நன்கு கிட்டியது. அப்படியொன்றும் அன்று கூட்டமில்லாததால் பொறுமையாக வேண்டிவிட்டு, கோவில் பிரசாத்தை உண்டபடி மலையின் சுற்றுப்புறத்தின் அழகை ரசித்தனர். 
பார்க்கும் இடமெங்கும் தென்னை தோப்புகளும் சுற்றிலும் தெரியும் பசுமை வயல்களும் கடல் போன்று தேங்கிய நீரில் எங்கும் பசுமை பிரதிபலிக்கும் அடவிநயனர் அணையும் கண்ணைப் பறிக்கும் இறக்கை அழகுகள்! பொறுமையாக மலை உச்சியிலிருந்து சுற்றுப்புறத்தை ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருளும் நேரம் தான் கிளம்பினர். 
அவர்கள் வீட்டிற்குத் திரும்புகையிலே தனவதி அனைவருக்கும் இரவு உணவினை சமைத்து வைத்திருக்க, பசியில் வந்தவர்கள் வயிறார உண்டனர். பின் சந்திராவை அலங்கரித்து கதிரின் அறையில் விட்டு வந்த மாலதி, மறுநாள் கல்லூரி செல்ல வேண்டுமென்று அன்னையிடம் விடைபெற்றுக் கொண்டு கணவனோடு ஊருக்குக் கிளம்பி விட்டாள். 
உள்ளே வந்த சந்திராவிற்கு அறையே அமைதியாகத் தெரிய, கதிர் இல்லாததால் அறையே ஆராயத் தொடங்கினாள். பெரிய அறை அதிகமாக வெறுமையாக இருந்தது, ஒரு ஓரம் குளியலறை கதவு, மூடிய இரண்டு கதவு கொண்ட மாடத்துச் சாளரம், ஒரு மரக்கட்டில், கண்ணாடி பதித்த ஒரு மரப் பீரோல் அவ்வளவு தானிருந்தது. 
சிறுவயதில் அவள் பார்த்த அதே அறை அப்படியே தான் இருந்தது. மாடத்துச் சாளரத்தில் அமர்ந்து கொண்டு சாலையை வேடிக்கை பார்த்தபடி தனவதி தரும் சிற்றுண்டிகளை அவனோடு பங்கிட்டு உண்ட நாட்கள் ஏராளம்! கண்ணாமூச்சி விளையாடுகையில் எல்லாம் இந்த கட்டிலுக்கு அடியிலும் பீரோலிலும் தான் ஒளிந்து கொள்வாள். அதே நினைவோடு பீரோவைத் திறக்க உள்ளேயும் பெரிதாக ஒன்றுமில்லை. கதிரின் வெள்ளைச்சட்டைகள் தொங்கிக் கொண்டிருக்க, கீழே கருப்பும், ஊதா நிறத்திலுமான கால்சட்டைகள் ஒழுங்காக மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வேறு நிறங்களே இல்லையே! என வியந்தவள் அனைத்தும் விளக்கிப் பார்க்க, கீழே பழைய புகைப்படங்கள் சில இருந்தது. 
தனவதியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட குடும்பப்புகைப்படம் அதில் கதிரின் மடியில் ஒன்றைரை வயது குழந்தையாகச் சந்திரா, ஊர்த்திருவிழாவின் போது எடுத்த புகைப்படம், இறுதியாக அவளுக்குச் சடங்கு வைத்தபோது முதல் முறை தாவணி அணிந்திருந்த புகைப்படம் வரை அனைத்துமிருந்தது. தன்னிடம் கூட இத்தனை இல்லையே! இதெல்லாம் எப்போது சேகரித்து வைத்தான் என வியந்தாள். 
அதிலும் அவளது ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவள், “அட களவாணிப் பையலே..!” என வாய்விட்டே மெல்லிய குரலில் முனங்க, “யாரைச் சொல்லுத..” என பின்னே கேட்டது கதிரின் குரல். 
“வேற யாரைச் சொல்ல? உங்களை தான்..!” எனத் திரும்பியவள் கையிலிருக்கும் புகைப்படங்களை அவனிடம் நீட்டியபடி கேள்வியாய் புருவம் உயர்த்தினாள். கதிருக்கு இது எதுவும் கருத்தில் பதியாது போக, இடது புருவத்தின் கீழிறக்கும் சிறு மச்சத்தை இமை முடிகள் தொட்டு மீளும் அழகிலே தன்னிலை மறந்து நின்றான். வெகு ஆண்டுகளுக்குப் பின் வெகு அருகே நிதானமாக அவள் முகம் பார்த்து நின்றான். 
“களவாணிப் பைய..!” மீண்டும் அவள் இதழ்கள் முனங்கியதும் சிந்தை தெளிந்தவன் சட்டென அவள் கன்னம் பற்றி கிள்ள, வலியில் முகம் சுளித்தவள் அவன் நெஞ்சிலடித்தாள். 
அடித்த கைகளை இறுக பற்றிக் கொண்டவன், “ஆமாம், தாத்தா எப்படி இருக்காவ?” என்றவன் விசாரணையைத் தொடங்க, “அதான் என் குடும்பமே உங்களுக்கு ஆகாதே, பின்ன எதுக்கு கேட்கீங்க?” என பதிலளிக்காது குற்றம் சாட்டும் தொனியில் கேட்டாள். 

Advertisement