Advertisement

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும் புரியுதா? சொல்லு” என்றவன் மிரட்ட, “நல்ல தான் இருக்காங்க, உடம்புக்கு பிரச்சனை எதுவுமில்லை. தென்னரசு அங்கிளும் தாத்தாவும் திட்டம் போட்டுத் தான் உம்மை எனக்குக் கட்டி வைச்சாங்க” என உண்மையை மறைக்காது உரைத்தவள், துல்லியமாக அவன் முகத்தையும் ஆராய்ந்திருந்தாள். கோபம் கொள்வானோ என்ற எதிர்பார்ப்பு! 
“ஹோ..! எனக்கு சந்தேகமிருந்தது அதான் கேட்டேன்..” என்றவன் குரலே உள்ளே செல்ல, பார்வை எங்கோ இருந்தது. அவன் சந்தேகத்தைத் தீர்க்கத் தான் கேட்டானா? உண்மையில் தாத்தாவை நலம் விசாரிக்கவில்லையா அவள் உள்ளம் வாடினாள். 
“அதனால தான் நம்ம கல்யாணம் நடந்தது, இல்லை இந்த கல்யாணமே நடந்திருக்காது..!” என்றவள் சீற, “ஹோ, அப்போ நான் உன்னை அப்படியே விட்டுவேன்னு நினைச்சியோ?” என்றவன் எகிறினான். 
“பின்ன எப்படி நினைக்க முடியும்? தடாலடியா பெரிய சண்டியராட்டம் உள்ள வந்து அத்தனை போரையும் அடிச்சிப்போட்டு என்னைத் தூக்கிட்டுப் போய் தாலி கட்டுவேன்னா எதிர்பார்க்க முடியும்?” என இடிப்பது போலே அவளுரைக்க, “ஏன் செய்ய முடியாதுன்னு நினைச்சியா?” என அவனும் தன் வலு உணர்ந்ததும் படி குரல் உயரக் கேட்டான். 
அசராதவள், “உன்னால முடியும், ஆனால் நீ செய்ய மாட்ட, கல்யாணம் பண்ணிக்கோன்னு உன் பின்ன தாலியோடு சுத்தி சுத்தி வந்த போதே என்னை கண்டுக்காம போனவன் தானே நீ?” எனக் குற்றம் சாட்ட, “நீ அப்போவே உனக்கு அரவிந்தனோடு நிச்சியமானதைச் சொல்லிருந்தால் கல்யாணம் செய்திருப்பேனே..” அவனும் கேட்டான்.
ஏனோ நெஞ்சில் உருக்கென்ற வலி, “அப்போ நீ என்னை ஏத்துகிட்டதுக்கு காரணம், அரவிந்தனுக்கு என்னை விட்டுக் கொடுத்திடக்கூடாது, மனோகிட்ட விட்ட சவால்ல ஜெவிக்கணும், தென்னரசு அங்கிள் மேல இருக்கிற நன்றி உணர்வைக் காட்டணும் இதுக்காக தானா?” எனத் தாங்க இயலாத ஏமாற்றத்தோடு கேட்டாள். 
அது வரையிலும் கோபமாக சண்டையிட்டவளின் குரல் சட்டென உடைந்ததை உணர்ந்தவன், “என்னட்டி கூறுகெட்டத் தனமா உளறுற? எனக்கு உன்னைய எந்தளவுக்கு பிடிக்கும்னு உனக்கே தெரியுமே?” தணிந்து கேட்டான். 
“தெரியுமே! எந்த அளவுக்கு என்னைப் பிடிக்குமோ அந்த அளவுக்கு என்னை ஏத்துக்கிடுத எண்ணமும் இல்லாம இருந்த தானே? இது.. இதுக்கு தான் செல்லலை, என்னை நீ எனக்காவே ஏத்திக்கிடணும்! வேற யாரோடவோ பணையப் பொருளா வைச்சு போட்டிப் போட்டுப் பறிக்கிறதை நான் விரும்பலை அதுக்கு தான் சொல்லாம இருந்தேன். ஆனால் நீ அதைத் தான் செஞ்சிருக்க. அன்னைக்குக் கண்ணீர் விட்டு கட்டி அழுத போதும் கண்டுக்காம போன தானே? இன்னைக்கு என்னை ரொம்ப காயப்படுத்திட்டீங்க மனசெல்லாம் வலிக்குது! ஏமாற்றமா இருக்கு!
அதையும் விட, கல்யாண மண்டபத்துல தாலியை கட்டிட்டு அப்படியே விட்டுப் போயிட்டியே, அந்த இடத்துல என் நிலைமையை நீ நினைச்சியா? ஒவ்வொரு முறையும் என்னை நீ ஏமாத்திட்டு தான் இருக்க” என தணியாத சினத்தில் தொடங்கியவள் விழி நிறைந்த நீரோடும் உக்கிரமாக நிற்க, கதிருக்கு உள்ளம் தாங்கவில்லை. 
“அது அப்படியில்லை வது, உன்னை எந்த வகையிலும் கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன், முடிவு உன்னோடதா இருக்கட்டும்னு விட்டுட்டு வந்தேன்” 
“என் குடும்பத்தை விட்டுட்டு வாரதுனா வான்னு நீ சொன்னது மட்டும் கட்டாயமில்லையா?”
அவன் தன் பக்க நியாயத்தை உரைக்கிறேனென அவள் கோபத்தைத் தான் மேலும் அதிகப்படுத்தி இருந்தான். 
“இல்லையே முடிவு உன்னை தானே எடுக்கச் சொன்னேன்? என்ன ஆனாலும் உங்க குடும்பம் செய்த துரோகத்தை என்னால மறக்க முடியாது. அதைத் திரும்ப திரும்ப அவங்க ஞாபகப்படுத்தி அதனால உன்னைக் காயப்படுத்த நான் விரும்பலை. ஆனாலும் உன் குடும்பம் மேலும் மேலும் எனக்குத் துரோகம் தான் செய்றீங்க, இவ்வளவு நடந்த பிறகும் அந்த சேர்மமூர்த்தி குடும்பத்தோட சம்பந்தம் பேசி இருக்கீங்க? அப்போ எங்க அப்பாவை கொன்ன குற்றவுணர்ச்சி உங்க யார் மனசுலயும் இல்லை,  கொஞ்சம் கூட மனசு உறுத்தலை?” 
சந்திராவின் குடும்பத்தின் மீதிருக்கும் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது என நினைத்தாலும் அவள் அதைத் தான் செய்ய வைத்திருந்தாள். அவர்களுக்காக அவள் பேசுவதும், அவன் மீதும் குற்றம் சொல்வதையும் அவனால் ஏற்க இயலவில்லை. 
“ஏன் உறுத்தாமா? அது இருக்கப் போய் தான் எங்க தாத்தா என்னை உனக்குக் கட்டி வைச்சாரு. ஆனால் உனக்கு மட்டும் மனசு உறுத்தலை இல்லை? தாலியை கட்டிட்டு அப்போன்னு விட்டுட்டு வந்திட்டேயே? எனக்கு அது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? எல்லாரும் என்னவோ என் வாழ்க்கை அப்படியே முடிச்சிடிச்சிகிற மாதிரி பரிதாமபா பார்க்கிறாங்க.
சிலர் நீ என் மேல விருப்பமில்லாம விட்டுப்போயிட்டேன்னு சொல்லுறாங்க, சிலர் வாழ்ற முன்னாடியே வாழ்க்கை இழந்து நிக்கிறா அதிஷ்டமில்லாதவன்னு சொல்லுறாங்க. இதுல இந்த மனோ கேட்குறான் நீ வேண்டாம்னு தான் என்னை விட்டுட்டுப் போனியாம் இந்த இலட்சணத்துல எப்படி அவன் வீட்டுல போய் நீ வாழ்வேன்னு கேட்குதான்? அப்பறம் என்னை வைச்சு சொத்து, பத்து, சீர் வேணும்னு டிமான்ட் பண்ணுவியாம். என்னலாம் சொல்லுதான் பாரு, எல்லாம் உன்னால தான்” 
கோபம் அனைத்தையும் கொட்டிவிட்டு பெருமூச்சு வாங்க, இடுப்பில் கைவைத்தபடி முறைத்து நின்றாள். அவன் அவளுக்காக செய்தது வேறொரு அர்த்தத்தில் மாறி நிற்கும் என எதிர்பாராது போனான். 
கதிரிடம் எதையும் அவள் மறைப்பதில்லை, அவனிடம் பேசுவதற்கோ சண்டையிடுவதற்கோ தயங்கியதுமில்லை. உரிமையாக சண்டையிடுவதில் உள்ளம் குளிர்ந்த போதும் அவள் குடும்பத்துக்காகச் சண்டையிடுவதை, ஏன் அவர்களைப் பற்றிப் பேசுவதே கதிருக்குப் பிடிக்கவில்லை. வேம்பக்காயாகக் கசந்தது. 
“ஆமாம் எல்லாம் என்னால தான், இப்போ அதுக்கு என்ன செய்யணும் சொல்லு?” அவளைக் குளிர்விக்கக் கேட்க, அவளோ மேலும் உக்கிரமானாள். 
“ஹான் இப்போ சொல்லுதியே இதை நேத்தே சொல்லியிருக்கலாமே? எல்லாம் உன்னால தான் சொல்லி இருக்க வேண்டியது தானே? உன் தங்கச்சி ரேவதி என்ன பேச்சுப் பேசுறா? என்னை வேண்டாம்னு விரட்டி விடுதா நீயும் பார்த்துகிட்டு நிக்கிற? தாலி கட்டின கையோடு நீ உரிமையா கூட்டிட்டு வந்திருந்தால் எங்க அப்பா உன் வீட்டு வாசல்ல வந்து நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்காதுல? பகையெல்லாம் மறந்து உன் வீட்டு வாசல்ல எனக்காகக் கெஞ்சி நிக்க வைச்சிட்டில? இதுக்காக தான் என்னை விட்டுட்டு வந்தியோ? 
ஆனாலும் பாரு, நான் தான் இப்பவும் நீ வேணும்னு உன் பின்னாலையே வாரேன். உன்னை கல்யாணாம் செய்துக்க போராடுனேன் சரி, உன் வீட்டுக்குள்ள வாரத்துக்குக் கூட ஒத்தையில என்னைப் போராட வைச்சிட்டில?” நுனி மூக்கு மொத்தமும் சிவக்க கோபத்தில் கத்தினாள். 
அவ்வளவு திட்டியபோதும் அசராது வாங்கிக் கொண்டவனுக்கு அவள் சிவந்த மூக்கை பற்றிக் கிள்ளிக் கொஞ்சத் துடித்தன கைகள். “கிளி மூக்கி” என மெல்லியதாய் உதட்டிற்குள் முணுமுணுத்துக் கொண்டான். 
“சரி விடு, இனிமே நம்ம இரண்டு குடும்பத்தைப் பத்திய பேச்சே வேண்டாம்.. நம்ம வாழக்கையை பார்ப்போம்” என்றபடி அவளை நெருங்கி வர, அவர்கள் இல்லாமல் நான் எது? என மனதில் நினைத்தவள் கோபமுடன், “போடா தடிமாடு..!” எனக் கத்தியபடி, படுக்கையிலிருந்த தலையணையைத் தூக்கி அவன் மீது எறிந்துவிட்டு முகம் வரைக்கும் இழுத்து மூடி படுத்துவிட்டாள். 
எறிந்த தலையணை தூக்கி கொண்டு மாடியில் படுக்கச் சென்றுவிட, தன்னை அணைத்துக் கொஞ்சி சமாதானப்படுத்துவான் என எதிர்பார்த்தவளுக்கு அப்போதும் ஏமாற்றம் மட்டுமே! 
தான் அவளை விட்டு வந்தது பெரிதாகக் காயப்படுத்தியுள்ளது அந்த ஆற்றாமையிலே என்ன என்ன விதங்களில் எல்லாம் குற்றம் சொல்ல முடியுமோ அனைத்தையும் சொல்லிவிட்டாள் எனக் கதிருக்குப் புரிந்தது. ஒரு நாள் முழுதாக ஆரிசிஆலைக்கு செல்லாது வேறு அவனைத் தத்தளிக்க வைக்க, சரியான உறக்கமில்லாது விடிகாலையிலே இறங்கி வந்தவன் தன்னறைக்கு கதவைத் திறக்க முயல, உள் புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. 
உறங்குபவளைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்தவன், எப்போதும் போலே மைதானத்திற்குக் கிளம்பிவிட்டான். பயிற்சி முடித்து, குளத்தில் குளித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் ஆலைக்கும் செல்லக் கிளம்பியும் விட்டான், இன்னும் சந்திரா எழுந்தபாடில்லை. 
உணவுண்ட பின்னும் கருப்பட்டியைக் காணாது அவனுக்கு அலைபேசியில் அழைக்க, ஹாலில் அவன் தந்தையின் புகைப்படத்தை துடைத்துக் கொண்டிருந்த தனவதி அவன் அருகே வந்தார். 
“என்ன சின்னம்மா?” என்க, “அதுக்குள்ள மில்லுக் கிளம்பிட்டியா ராசா..?” என்றார் கேள்வியாக. 
“ஆமாம் சின்னம்மா, எதுவும் வேலையா சொல்லுங்க?” என்க, “அதில்லை கல்யாணம் முடிச்சதும் அதுக்குள்ள கிளம்பிட்டியே! அவளைக் கொஞ்சம் வெளியே கூட்டிட்டுப் போயி அவளுக்கு தேவைங்கிறது எல்லாம் வாங்கிக்கொடு ராசா, இல்லை சினிமாவுக்கு எங்கையாவது போயிட்டு வா. நாலு இடம் ஜோடியா போயிட்டு வந்தால் தானே, புதுப்பணக்கார் பேத்தியை நீ கட்டியிருக்கன்னு வெளியே தெரியும்! எங்க காலத்துல எல்லாம் இப்படிப் போனதே இல்லை, நீங்களாவது போகலாம்ல..” என்றார் வாஞ்சையாக! 
அப்போது தான் சந்திராவும் உறங்கி எழுந்திருக்க, அறையிலிருந்து வெளியே வந்தவள் கீழே இறங்க நினைக்கையில் அவர்கள் குரல் கேட்டு மாடிப்படியின் வளைவில் நின்று கீழே எட்டிப்பார்த்தாள். அதிலும் தனவதி கேட்டதற்காகக் கதிரின் பதில் என்ன என்ற எதிர்பார்ப்போடு நின்றாள். 
கதிருக்குச் சுருக்கென்ற குத்துவது போன்றிருந்தது. தந்தையின் இறப்பிற்கு இதுவரையிலும் ஒரு நியாயம் சேர்க்கவில்லை அவ்வாறிருக்க அதற்குக் காரணமானவர்களோடு தன் மட்டும் இன்பமாய் இருப்பதா? குற்றவுணர்வு நெஞ்சை அழுத்தியது. 
“இல்லை சின்னம்மா நீங்களே அவளை கூட்டிட்டி போயிட்டு வேணும்கிறதை வாங்கிக் கொடுங்க, இல்லை என்னென்ன வேணும்னு கேட்டுச் சொல்லுங்க வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்” என்றவன் மறுக்க, “ஒன்னும் தேவையில்லை தனவதி அத்தை, எல்லாம் எங்க வீட்டுலையே இருக்கு எடுத்துக்கிடுதேன்னு சொல்லிடுங்க” என மேலிருந்து குரல் கொடுத்தாள் சந்திரா. 
அவளை எதிர்பாராது தனவதி அதிர்வோடு நிற்க, அவனோ நிமிர்ந்தும் பாராது, வேலை மிச்சம் என்பது போலே தோளை குலுக்கியபடி கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான். தன்னை அவன் மனைவி என வெளியே அறிமுகப்படுத்துவதில் கூட அவனுக்கு விருப்பமில்லையா? மீண்டும் ஏமாற்ற உணர்வு! கௌரவக் குறைச்சல் என நினைக்கிறானோ? அப்படி என்ன அவனுக்கு நான் குறைவாகப் போய் விட்டேன்? என நினைத்த சந்திராவிற்கு ஏற்கனவே இருந்த கோபம் மேலும் பன்மடங்கானது.

Advertisement