Advertisement

அந்த நம்பிக்கையிலே இன்று கதிரின் முன் மகளுக்காக நிற்க, அப்போதும் சந்திராவை அழைக்காது கதிர் மௌனமாகவே இருந்தான். மனோவிற்கு ஆத்திரம் எல்லை கடந்தது, ஒன்றுமில்லாதவனிடம் தன் தந்தை வேண்டி நிற்பதா? என்ற கோபம்! 
“வாங்கப்பா கிளம்புவோம்..” என்றவன் துள்ள, “அப்பா பேசுறார்ல கொஞ்சம் அமைதியா இரு. உள்ளப் போய் உக்காரு” என அதட்டி அடக்கினார் கலைவாணி.
அது எதையும் கண்டு கொள்ளாது, “உங்களை நம்பி தான் விட்டுட்டுப் போறோம், நாங்க செய்த துரோகம் மன்னிக்க முடியாதது தான், அதுக்குன்னு எங்க மேல உள்ள கோபத்தை சந்திராகிட்ட காட்டிட வேண்டாம்” என்றவர் தன்மையாக வேண்ட, ”இல்லை வேண்டாம், உங்க பொண்ணை கூட்டிட்டு போய்டுங்க. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவரோட இழப்பு தான் எங்க எல்லாருக்கும் ஞாபகத்துல வரும், இந்த வீட்டுல அவளால சந்தோஷமா வாழ முடியாது” என வாசலில் நின்றிருந்த தனவதி இறங்கி வந்தார். 
ரேவதி அல்லாது தனவதியே இவ்வாறு உரைப்பார் எனக் கதிர் எதிர்பார்க்கவில்லை. சந்திராவைப் பற்றி இது வரையிலும் ஒரு வார்த்தை சொல்லியதில்லை இப்போது வேண்டாமென்கிறார் எனில் அவர் மனதிலும் எத்தனை வலிகள் நிறைந்திருக்கும் எனக் கதிரால் புரிந்து கொள்ள முடிந்தது. 
சந்திராவை ஒரு பார்வை பார்த்தான். காரிலிருந்து இறங்கிப் பேசுவதற்கும் தனக்கும் சமந்தமில்லை என்பது போல் கைக்கட்டிக்கொண்டு எங்கோ இலக்கில்லாத பார்வையை இருளில் வைத்தபடி இறுகிய தோற்றமாக நின்றிருந்தாள். இப்போது வரையிலும் கதிர் ஒரு வார்த்தை பேசாதிருப்பது அவள் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது. 
“அப்போ நடந்த கல்யாணம்?” வரதராஜன் கேட்க, “உங்களோட உறவு வைச்சிகிட்ட எங்கப்பா ஆத்மா கூட அமைதியடையாது, அவருக்கு நாங்க அநியாயம் செய்ற மாதிரி, இறந்த பிறகும் எங்கப்பாவை அசிங்கப்படுத்த முடியாது, அவளை கூட்டிட்டு போயிடுங்க, உங்க தகுதிக்கு தக்கன வேற கல்யாணம் வேணாலும் பண்ணிக் கொடுத்துடுங்க, எங்க குடியை கெடுத்தவுங்களையும் நல்லா வாழட்டும்னு வாழ்த்தி தான் எங்களுக்குப் பழக்கம். எங்கப்பா அப்படி தான் எங்களை வளர்த்திருக்காரு” என்றாள் ரேவதி வெறுப்போடு. 
கதிர் எதுவும் பேசாதிருப்பதிலே கோபமான சந்திரா, ரேவதியின் பேச்சில் மேலும் உக்கிரமானாள். 
“அம்மா.. நீங்க எல்லாரும் கிளம்புங்க, என்னை நான் பார்த்துப்பேன். யாரும் தேடி வரவேண்டாம்” என்றவள் கத்த, மனோவும் சென்று காரை இயக்க, அவளின் பொற்றோர் இன்னும் கலக்கமாக நிற்க, “அதான் மச்சான் சொல்லிட்டாங்களே நீங்க பத்திரமா போங்க, தங்கச்சியை மச்சான் பார்த்துப்பாவ” எனக் கதிர் சொல்லாததையும் சேர்த்து ஆறுதல் சொல்லி அனுப்பினார் கேசவன். அவர் குரலில் உறவும் உரிமையும் ஒருவித நம்பிக்கையும் இருக்க, அதன் பிறகே நிம்மதியோடு கிளம்பினர். 
“அதான் பெத்தவுங்க கூப்பிடுதாகளே போவ வேண்டியதானே இங்கிருந்து சும்மா நடகமாடிட்டி..” என ரேவதி சிலுப்பிக் கொள்ள, “இது சரியில்ல ரேவதி, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தானே அவங்க போயிட்டாங்க எங்கண்ணன் வாழ்க்கையே வீணச்சின்னு கவலைப்பட்ட, இப்போ இருக்காங்கன்னு கவலைப்படுறியே!” எனச் செந்தில் மெல்லி குரலில் கேட்க, முறைத்தாள் ரேவதி.  
இருந்தும் அசராது, “அவங்கபாட்டுக்கு அவங்க வீட்டுல இருக்காங்க உனக்கென்ன? உள்ள வா நீ” என அனைவருக்கும் கேட்கும் படியான அதட்டலோடு செந்தில் அவளை உள்ளே அழைக்க, மாலதி சென்று சந்திராவின் கரம் பற்றி, “வாங்க அண்ணி..” என முகம் மலர அழைத்தாள். 
“மாலதி கோட்டிக்காரி! என்னச் செய்த நீ?” எனக் காட்டமாக வாசலிலே இடை மறித்து ரேவதி கேட்க, “எல்லாம் சரியா தான் செய்தேன், நம்ம அண்ணியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டி வாரேன்” என்றபடி அழைத்து வந்தவள் கதிரின் அருகே நிற்க வைத்தாள். 
உள்ளே சென்றவள் ஆரத்தித் தட்டோடு திரும்ப, “அண்ணா அவளை கூட்டிட்டு வராதே, அவள் நம்ம அப்பா சாவுக்குக் காரணமான குடும்பத்துல ஒருத்தி” என ரேவதி கதிரிடம் நேரடியாகத் தெரிவிக்க, “அது உண்மை தான், அதுக்குன்னு நான் தாலி கட்டின மனைவியை எப்படி விட முடியும் சொல்லு?” என எதிர்க்கேள்வி கேட்டவன் விடமாட்டேன் என்பது போல் சந்திராவின் கரத்தை இறுகப்பற்றினான். 
“கருடனோ பாம்போ அது அது இருக்கிற இடத்துல இருந்தால் தான் அதுக்கு அழகு!” என மாலதி கண்டிப்போடு அதட்ட, கண்டுகொள்ளாத ரேவதி, “நீ வேணா நம்ம அப்பாவுக்கு அநியாயம் செய்யலாம் என்னால அது முடியாது, என்னால அவளை ஏத்துக்க முடியாது அவளோட உறவா இருக்க முடியாது. அவ இந்த வீட்டுக்குள்ள வந்தானா நான் இனி இந்த வீட்டுக்குள்ள வர மாட்டேன்” எனக் கதிரிடமே பிடிவாதமாக நின்றாள் ரேவதி. 
அதற்குள் ஆரத்தி மாலதி சுற்றி முடித்திருக்க, அது வரையிலும் சந்திராவின் கைகளை விடாது பற்றி இருந்தவன், ரேவதிக்குப் பதிலளிக்காது சந்திராவோடு வீட்டிற்குள் நுழைந்தான். அண்ணன் தன் மீது அளவில்லா பாசம் கொண்டவன் தன் சொல்லை மீற மாட்டான் என்ற மிதப்பிலிருந்த ரேவதிக்கு ஏமாற்றமாகப் போக, வீம்போடு விறுவிறுவென செந்திலை இழுத்துக்கொண்டு வெளியேறினாள். 
தடுக்க இயலாது கண்ணீரோடு பார்த்திருந்த தனவதிக்கு சந்திரா வீட்டிற்குள் வந்த அன்றே கருவுற்றிருக்கும் தன் மகளை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டாளே என்ற ஆத்திரம் தான்!
வீட்டிற்குள் வருவதற்கே இத்தனை போராட்டம் என்றால் இங்கு இனி வாழ்வது பெரும் சவால்! எனத் தோன்றியது சந்திராவிற்கு. கதிரை திருமணம் செய்யவே பெரிதாகப் போராடியவள் இனி அவனோடு வாழ்வதற்கும் போராட வேண்டுமா? என்ன வாழ்க்கை இது? எனச் சோர்ந்த நிலையில் எண்ணினாள். 
சந்திராவை விளக்கேற்ற சொல்லிய மாலதி, இருவருக்கும் பால் பழம் கொடுத்து, இனிப்பும் விருந்தும் தயாரித்து பரிமாறி புதுமணத்தம்பதிகளை சீராட்டினாள். மாலை நேரம் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கும் அழைத்துச் சென்று வர, வேடிக்கை பார்த்திருந்த தனவதி எதிலும் தலையிடாது விலகியே இருந்தார். 
“அம்மா, அண்ணன் இது வரைக்கும் நமக்குன்னே வாழ்ந்தவம்மா! இது வரைக்கும் அவனுக்குன்னு அவன் எதுவும் செய்திக்கிட்டதில்லையே முதல் முறையா அவன் வாழ்க்கையில சந்திரா தான் வேணும்னு தேர்ந்தெடுத்து இருக்கான்னா நாம தடுக்கக் கூடாதும்மா, பெரிய மனுஷியா நீ ஆசீர்வதிகன்னும்மா. இதுவே அண்ணன் நீ பெத்தப் பிள்ளையா இருந்திருந்தால் ஏத்துக்கமாட்டியா? நீ ஏத்துக்கலைனா ஊர் இப்படி தான் பேசும், அது மட்டுமில்லாம சந்திராவும் தான் பெத்தவுங்க எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்காள், இனி நீ தானே அவளை பார்த்துக்கணும், இப்படி ஒதுக்கலாமா?” என்ற மாலதி தனவதியின் கைகளைப் பற்றி கெஞ்சினாள். 
அவர் முகமே அகத்தின் வேதனையை வெளிப்படுத்தியது, உன் மகனெனில் இவ்வாறு செய்திருப்பாயா எனக் கேட்ட கேள்வி அவர் நெஞ்சைக் கிள்ளியது. இத்தனை நாளும் அன்னை போன்றே வளர்ந்தவள் ஒரே நாளில் சித்தியாகிப் போனேனோ? என நினைத்துக் கலங்கினார். 
அவர் முக மாற்றத்தை உன்னிப்பாய் பார்த்திருந்தவள் “அண்ணனுக்கு நம்ம எல்லார் மேலையும் ரொம்ப பாசம், அவனால உன்னை வெறுக்க முடியாதும்மா, வெறுக்கும் படியா நீயும் நடந்துக்காதம்மா?” என வேண்ட, மெல்லத் தலையசைத்தார் தனவதி.
“கவலைப்படாதம்மா ரேவதி வீம்பெல்லாம் ஒரு மாசம் கூட தாங்காது. அவளே வந்திடுவாள், உனக்குத் தான் அவளைப் பத்தி தெரியுமே?” என்க, அதற்கும் அவர் தலையசைத்தார்.
அதில் முகம் மலர்ந்தவள், “அப்போ நாளைக்கு நாள் நல்லா இருக்கு போய் குலதெய்வம் கோவில்ல பொங்கல் வைச்சு சாமி கூம்பிட்டு வந்திடுவோமா?” என்க, சம்மதமாகத் தலையசைத்தவரை மகிழ்வோடு கட்டிக்கொண்டாள் மாலதி. 
மதிய விருந்திற்குப் பின் கேசவன் வேலை இருப்பதாகவும் நாளை வருவதாகவும் சென்றிருக்க, கதிரும் மாலை வெளியே சென்று விட, அன்னையிடம் பேசி சரி செய்த மாலதி பின் சந்திராவிடம் உரிமையோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். நிறையப் பேசினர் அதிலும் நடந்தவற்றை விசாரித்தவள் கதிரை துரத்திய சந்திராவை விடாது கேலி செய்தாள். ரேவதி தன்னை ஒதிக்கி வைக்க, மறவாத பழைய அன்போடு ஒட்டிக் கொண்ட மாலதியைப் பிடித்துப் போனது அவளிற்கு. 
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, இடைப்பட்ட நேரத்தில் தனவதி தான் அனைவருக்கும் இரவு உணவு சமைத்தது. கதிர் வர, மற்ற இருவரையும் அழைத்து அமர்த்தி பரிமாறினார். மாலதிக்கும் கதிருக்கும் மனம் நிறைந்து போனது, உண்ணாது உணவை அளந்து கொண்டிருந்த சந்திராவை யாரும் காணாது சுரண்டியவன் உண்ணுமாறு சைகை செய்தான். 
இருவருக்குமே அவர்கள் இணை மீது கோபமிருக்க, காட்டிக்கொள்ளும் நேரம் இதுவல்ல என்பதாலே அமைதியாக இருந்தனர். உணவிற்குப் பின் மாடிப்படிகளில் ஏறிய கதிர் பாதியில் நின்று கீழே பார்க்க, ஊஞ்சலின் சங்கிலியைப் பற்றியபடி நிமிர்ந்து அவனைப் பார்த்திருந்தாள் சந்திரவதனி. என்னவோ அவள் தெற்றுப்பல் தெரியச் சிரித்து பலகாலம் ஆனது போல், மனம் ஏங்கியது. இந்த நொடியும் அந்தப் பார்வையின் மொழியை அவனறிந்தான், ஒரு தவிப்பும் தத்தளிப்புமாக, அவனுள் அடைந்து கொள்ள ஏங்கும் பார்வை அது!
சரியாக அங்கு வந்த மாலதி, “அண்ணா மத்த சடங்கு எல்லாம் நல்ல நாள் பார்த்துத் தான் வைக்கணுமாம் அம்மா சொன்னாங்க, நான் அண்ணியைப் பார்த்துக்கிறேன் நீ போய் படு” என நிமிர்ந்து குரல் கொடுத்தவள் கையோடு சந்திராவையும் அழைத்துச்செல்ல, மாறாத அதே பார்வையில் பார்த்தபடி முகம் திருப்பாது சென்றிருந்தாள் அவள். 

Advertisement