Advertisement

அத்தியாயம் 10
புலராத காலை பொழுதில் வரும் புது ஒளியும் வேண்டாமென்பதை போல் இமைகளை இறுக மூடியபடி அரிசியாலையில் ஒரு மரப்பெஞ்சில் படுத்திருந்தான் இளங்கதிர். சந்திராவின் கழுத்தில் தாலி கட்டி முழுதாக ஒருநாள் முடித்து விட, இன்னும் அவன் வீடு செல்லவில்லை. தனக்காகச் சந்திரா இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க இயலாது! அனைத்தையும் விட நான் தான் அவளுக்கு முதன்மையானதாக இருக்க வேண்டுமென்ற பேராசை! 
இத்தனை ஆண்டுகளாக அவள் இல்லாது அவள் நினைவோடு இருந்துவிட்டான் தான், ஆனால் மனைவி என்றான பின் அவனை விட்டுச் சென்றால் தாங்க இயலாது. அவள் தரும் கௌரவம் தான் அவன் கர்வம்! 
அதே போல் இருக்கிறாள் எனில் தன்வீட்டினரை எவ்வாறு சமாளிப்பது? அவளுக்கான அங்கீகாரத்தை எவ்வாறு பெற்றுத்தருவது? என்ற யோசனை. அதை எதிர் கொள்ளும் திடமும் உடன் யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணமும் இருக்க, இக்கட்டான நிலையிலிருந்தான். 
புதுப்பணக்காரர் பேத்தியை மில்லுக்காரன் திருமணம் செய்து கொண்டான் என்ற செய்தி சுந்தரபாண்டியபுரம் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்திற்கே பரவியிருந்தது. ஆக தனவதியும் அறிந்திருப்பார்! 
இந்த சோதனையை எதிர்கொள்ளத் திராணியின்றி ஆலையில் ஆளில்லாத தனிமையில் அடைந்து கிடந்தான். சட்டென மின்விளக்குகள் ஒளிர, அவ்வறை எங்கும் வெளிச்சம் பரவ, அவனை நெருங்கியது ஒரு காலடியோசை. அப்பெரு அமைதியில் அவன் செவிகளில் தெளிவாகவே விழ, கண்களை திறக்காமலே, “அவ இருக்காளா? போயிட்டாளா கருப்பட்டி?” என்றவனின் குரலில் ஒழித்து வைத்த ஏக்கம்!
“இப்படி நீங்க ஏங்கிறதுக்கு தாலி கட்டுன கையோட தங்கச்சியை கூட்டிட்டு வந்திருக்கலாமே மச்சான்?” என்ற குரலில் சட்டென விழி திறந்து எழுந்தமர்ந்தான் கதிர். 
எதிரே கேசவன், அவனை எதிர்பாராது ஒரு நொடி விழித்தவன், “என்னோட வாழ்ற வாழ்க்கை அவளோட விருப்பமா இருக்கணும், எந்த விதத்திலும் அவளைக் கட்டாயப்படுத்த விரும்பலை மாமா” என்ற கதிர் தலைகோதியபடி எழுந்து நின்றான்.  
“நீங்க இப்படி உக்காந்து பார்த்ததே இல்லை மச்சான், வாங்க வீட்டுக்குப் போவோம். உங்களை காங்கலைன்னு அத்தை தவிச்சி, எல்லாருக்கும் போனைப்போட்டு வர வைச்சிட்டாங்க. நாங்க இப்போ தான் வந்தோம், சகலை நேத்தே வந்துட்டாராமே..!” என பேசிபடியே நடக்க, கதிரும் உடன் நடந்தான்.  
தனவதியின் மற்றொரு மகள் மாலதியின் கணவன் கேசவன். ஸ்ரீவைகுண்டத்தில் மரக்கடை வைத்துள்ள கேசவனின் குடும்பம் பெரியதொரு கூட்டுக்குடும்பம். அதுமட்டுமின்றி திருமணம் முடித்ததுமே மாலதி மேலும் படிக்க வேண்டுமென்ற ஆசையைத் தெரிவிக்க, கேசவனும் படிக்க வைக்க, தற்போது அவள் முதுகலை முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள். மாலதி அன்னை வீட்டிற்கு வருதே அரிது, ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டுமே வர இயலும். 
கதிருக்கு நடந்த திடீர் திருமணத்தைக் கேள்விப்பட்டு, நேற்றே செந்திலோடு ரேவதி வந்திருந்தாள். தான் பார்த்த பெண்ணை வேண்டாமென்று மறுத்தவன், அதிலும் தற்போது தனக்குத் திருமணமே வேண்டாமென்றவன் சந்திராவைத் திருமணம் செய்து கொண்டதை அவளால் ஏற்க இயலவில்லை. அந்த கோபத்திலே அவள் வந்து காத்துக்கிடக்க, வீடு வராத கதிரை எண்ணி தனவதி பயம் கொண்டார். 
இரவு தனிமையில் தனவதியிடம், “பார்த்தியாம்மா ஒரே நாள்ல அண்ணன் எவ்வளவு மாறிட்டான்னு, எல்லாம் அவ தான் இப்படி ஆட்டி வைக்கிறாள். எதிர்வீட்டுல இருந்துகிட்டே இவ்வளவு செய்றவ, நாளைக்கு நம்ம வீட்டுக்கு மட்டும் வந்துட்டால் அவ்வளவு தான் இந்த வீடு முழுக்க அவ ராஜ்யம்! உன்னை எல்லாம் வேலைக்காரியா தான் நடத்துவாள், அண்ணன் கூட அவளுக்குப் பொம்மை மாதிரி தான் தலையாட்டப் போறான்” என ஏற்றிவிட, தனவதியின் முகத்தில் எதிர்காலம் எண்ணிய பயம்! 
“ஏன் உன்னை வீட்டை விட்டே அனுப்பினாலும் அனுப்பிடுவான்! எங்க போவ? என்ன செய்வ? அவன் என்ன நீ பெத்த பிள்ளையா? என்ன தான் நீ வளர்த்திருந்தாலும் அண்ணனுக்கு நீ சித்தி தானே? இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் நமக்கு அடங்கிப் போற பொண்ணை பார்த்து அவனுக்குக் கட்டி வைக்கணும்னு, நான் தான் பொண்ணு பார்த்தேனே நீ அழுது ஆர்ப்பாட்டம் செய்தாவது நான் பார்த்த பொண்ணை அவனுக்குக் கட்டி வைத்திருந்தால் இப்போ உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என்க, தனவதியின் முகமே வெளிறிப் போக, பயம் பற்றி அமுக்கியது. சந்திரா இருக்கும் வரை அவருக்கு இங்கு மதிப்பில்லை, எதிர்காலமில்லை என்பதை அவர் மனதில் ஆழப் பதித்திருந்தாள் ரேவதி. 
இரவிலே தனவதி தொலைப்பேசியில் அழைத்திருந்ததால் அதிகாலையில் கேசவனும் மாலதியும் வந்திருந்தனர். அலைபேசி அழைப்புகளை ஏற்காத கதிர் ஆரிசிஆலையை தவிர வேறு எங்கும் சென்றுக்க மாட்டான் எனக் கேசவன் நினைத்து வர, அங்கு தான் கதிரும் இருந்தான். 
இருவரும் வீட்டிற்கு வந்தனர், கதிர் இறங்கியதுமே எதிர்வீட்டைப் பார்க்க, அதற்குள் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர். 
“அவங்க நேத்தே ஊரை விட்டுப் போயிட்டாங்களாம், அவளுக்கு வாழ்க்கை தரேன்னு நீ தான் இப்போ சீரழிச்சி நிக்கிறண்ணே! அப்படியென்ன அவ உனக்கு முக்கியமா போயிட்டா? ஒரு வேளை அவ மேல விருப்பமா உனக்கு? நம்ம அப்பா சாவுக்குக் காரணமே அவ குடும்பம் தான் அதை மறந்துடாதண்ணே. அவ துரோகி, நடிப்புக்காரி நம்பிடாதண்ணே நம்ம அப்பாவை விட உன்னை விட்டுட்டுப் போனவளா உனக்கு முக்கியம்..?” என ரேவதி ஆரம்பித்தாள்.
“வாசல் நிக்க வைச்சு கேள்வி கேட்கிறது தான் மரியாதையா?” என மாலதி அவளைக் கண்டிக்க, “உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு?” எனச் செந்தில் ரேவதியை அதட்டினான்.  
கதிர் பதில் சொல்லவில்லை அதற்குள், சாலையில் கார் ஒன்று வந்து நின்றது. பார்த்ததுமே தெரிந்தது அது மனோவின் கார் என்று, ஆனால் ஏன் திரும்பி வந்துள்ளனர் எனப் புரியாது பார்க்க, சந்திராவின் பெற்றோர் இறங்க, ஓட்டுநர் இருக்கையிலிருந்த மனோவும் இறங்க, அதற்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சந்திரா மட்டும் இறங்கவில்லை. 
சிதையாத நேற்றைய அலங்காரத்தில் காய்ந்த பூச்சருகு போன்றிருந்தவளை இமைக்காது பார்க்க, அவளும் நிமிர்ந்து அவனைத் தான் பார்த்தாள். அந்த பார்வையிலும் மெல்லிய முறைப்பு ஏதோ குற்றம் சுமத்தினாள் என்னவென்று தான் புரியவில்லை. 
அதற்குள் கதிரை நெருங்கிய வரதராஜன், “அப்பாவை ட்ரீட்மென்ட்காக சென்னைக்கு அனுப்பி வைச்சிருக்கோம், இப்போ நாங்களும் கிளம்புறோம்..” என்றவர் நீண்ட மூச்சுகளை இழுத்தார். 
கதிரின் பார்வை அவள் மீதிருக்க, “சந்திரா எங்களோட வரலைன்னு சொல்லிட்டா..” என்ற வரதராஜனின் குரலில் கலைந்தவன் தனக்காகத் தான் இருக்கிறாளோ என நினைக்க, ஆனந்தகுமிழிகள் நெஞ்சில் சலசலத்தது. 
“உங்க வீட்டுக்கும் வராம இங்கையே இருக்கேன்னு சொல்லுறா, எப்படி தனியா விட்டுப்போக முடியும்..?” என வரதராஜன் உரைக்கும் போது தான் அவளின் கோபம் ஏனென்றே அவனுக்குப் புரிந்தது. 
நேற்றை நாள் முழுவதும் திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் மொத்த குடும்பமும் நாராயணனிற்காக வேண்டி நின்றனர். அவர் சற்றே உடல் தேற, மேல் சிகிச்சைக்கு வள்ளியம்மை அர்ச்சனாவோடு சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தார். 
அனைவருமே கிளம்ப நினைக்க, சந்திரா மட்டும் வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்ய, “நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் உன்மேல இருக்கிற ஆசையில கல்யாணம் செய்துக்கலை. எங்கிட்ட விட்ட சவால்ல ஜெவிக்க, நம்ம குடும்பத்தைப் பலி வாங்க தான் கட்டிக்கிட்டான். உன் மூலமா வாழ்க்கை முழுக்க சுகுசா வாழலாம்னு திட்டம் வைச்சிருக்கான் பரதேசி பையன்” என மனோ திட்ட, உக்கிரமாக முறைத்த சந்திரா, “முழுசா தெரியாமல் வார்த்தை விடக் கூடாது மனோ, அதுவும் அவரை ஒரு வார்த்தை கூட குறைவா சொல்ல உனக்குத் தகுதியில்லை” என விரல் நீட்டி எச்சரித்திருந்தாள். 
இளங்கதிருக்கு அவர்கள் மீது கோபம், வன்மம், வெறி இருந்த போதும் ஒதுங்கித் தான் செல்வானே இன்றி பலிவாங்க ஒரு போதும் நினைத்ததில்லை. அதையும் சந்திரா நன்கு அறிந்தவள்! 
மனோவும் கோபமுடன், “அதான் மண்டபத்துலையே தாலி கட்டின நொடியே உன்னை விட்டுட்டுப் போயிட்டானே, இனி நீயே போய் கெஞ்சினாலும் அவன் ஏத்துக்கமாட்டான். அடம் பிடிக்காம ஊருக்குக் கிளம்பு” என்றவன் மிரட்ட, “நான் வர மாட்டேன், பாட்டி வீட்டுலையே தனியா இருந்துக்கிடுதேன்” என்றாள் உறுதியான குரலில். 
சந்திராவிற்குத் தான் கதிர் மீது விருப்பமிருக்கிறதே தவிரக் கதிருக்கு அவ்வாறான எண்ணங்கள் இல்லை என்றே நினைத்திருந்த மனோவிற்கு கதிர் மீது சிறிதும் நம்பிக்கையில்லை. அவளை எப்படியும் அழைத்துச் சென்றுவிடும் எண்ணம் தான் இந்த நொடி வரையிலும் ஆனால் மாறாக வரதராஜனுக்கு கதிரின் மீது நம்பிக்கை இருந்தது. தான் சொல்லிய ஒரு சொல்லுக்கு உயிரைக் கொடுத்து தன் உடைமையைக் காப்பாற்றிய குலசேகரின் மகன் என்பதால் அழுத்தமான நம்பிக்கை!

Advertisement