“ஆறு மாசக் கணக்கு போய் இதென்ன புதுசா?”

 

“இப்போதைக்கு உன்னை சரி கட்ட” என கண்கள் சிமிட்டி சொல்லி புன்னகைத்தான்.

 

அதன் பின் ஏதும் பேசாமல் அவனுடன் சேர்ந்து நடந்தாள். இரண்டு முறை தெரு முனைக்கு சென்று திரும்பி வந்தார்கள். எதிர்த்து ஏதும் சொல்லாமல் தன்னுடன் அவள் நடந்து வருவதிலேயே பிரியும் பேச்சை விட்டு விட்டாள் என்பதை புரிந்து கொண்டான் யுகி.

 

திடீரென, “ஆனா உங்க அண்ணி கூட மட்டும் நான் பேசவே மாட்டேன், யார் சொன்னாலும் பேச மாட்டேன், என்னை கம்பெல் பண்ணினா அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்றாள்.

 

அண்ணியின் பேச்சு வரவும் யுகியின் முகம் இறுகி விட்டது. அந்த பேச்சுக்களை அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை, பாதிக்க பட்டவளுக்கு எப்படி இருந்திருக்கும்? அவர் மீதுள்ள தவறை விட்டு விட்டு அன்றைய தினம் தன்னிடம் அழுது நாடகம் ஆடியதை நினைத்தவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

“என்ன யோசனை?” எனக் கேட்டாள் அஞ்சலி.

 

“நீ அவங்க கூட பேச வேணாம். நானும் பேசுறதா இல்லை” என்றவனை கூர்ந்து பார்த்தாள்.

 

“நீ யாரோ இல்லை அவங்களுக்கு, என் வைஃப், என்ன நினைச்சு அப்படி பேசினாங்க, இத பிரச்சனை பண்ணனும்னா நாளைக்கே பண்ணிடுவேன், அண்ணனுக்கு தெரிஞ்சா உன்கிட்ட மன்னிப்பு கேட்க வச்சிட்டுத்தான் ஓய்வார். அத்தோட நிக்க மாட்டார், அவங்களுக்குள்ள பிரச்சனை வரும், ரோஹித் பாவம் அஞ்சலி. அவனுக்காக மட்டும்தான் அவங்கள சும்மா விடுறேன். ஆனா நான் பேச மாட்டேன்”

 

“இதெல்லாம் நான் எதிர் பார்க்கல, நீங்க எப்பவும் போல இருங்க”

 

“நீ எதிர்பார்ப்பேன்னு  இல்லை இது, என்னை யாராவது அசிங்க படுத்தினா உன்னால அவங்க கூட நார்மலா பழக முடியுமா? நீ பேசுவியா அவங்க கூட?” எனக் கேட்டான்.

 

பதில் தராமல் யோசித்தாள் அவள்.

 

“அடிப்பாவி! நீயே ஆள் செட் செஞ்சு என்னை அவமான படுத்த பிளான் பண்ற மாதிரியே இருக்கு உன் மூஞ்சு”

 

“உங்களை யாரும் பேசிட்டாலும்!” என நொடித்தவள் ஸ்கூட்டர் பற்றி கேட்டாள்.

 

“உனக்குத்தான் அஞ்சலி. வாங்கின கையோட பூஜை எல்லாம் போட்டு எடுத்திட்டு வந்தேன். நீதான் கண்டுக்கவே இல்லை.  அது உன்னோடது, வா வந்து பாரு” என சொல்லி ஒரு வேகத்தில் அவளின் கையை பிடித்தான்.

 

அவள் விலக்க முனைய, அவனே விட்டு விட்டவன் அவளை முன்னால் போக சொல்லி விட்டு பின்னால் நடந்தான்.

 

ஸ்கூட்டரை  பார்த்தவள், “எதுக்கு செலவு? பொள்ளாச்சில என்னோடது சும்மாதான் கெடக்கு, அதை எடுத்திட்டு வந்திருக்கலாம்” என்றாள்.

 

“பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு”

 

“ஸ்பெக்ஸ் வாங்க கேட்டப்ப நீங்கதான் கார்ட் பார்த்து தேய்க்க  சொன்னீங்க, திடீர்னு வள்ளலா மாறிப் போயிட்டீங்களா?”

 

“தேவையானதுக்கு தேவையான அளவு செலவு பண்ணினா போதும்ங்கிற அர்த்தத்துல சொன்னேன். குழந்தை குட்டின்னு நம்ம குடும்பம் பெருசானா நீயே அப்படித்தான் சொல்வ”

 

அந்த பேச்சை தவிர்த்து விட்டவள், “ஸ்கூட்டி நல்லாருக்கு” என்றாள்.

 

“நாளைக்கு ஓட்டி பார்த்திட்டு சொல்லு”

 

“ஏன் இப்பவே ஓட்டி பார்க்க கூடாதா?”

 

“இப்பவா?”

 

“ம்ம்… கூட வாங்க, ரொம்ப தூரம் எல்லாம் இல்லை” என்றவளின் முகத்தில் தெரிந்த உற்சாகம் அவனை சம்மதிக்க வைத்தது.

 

அவனை பின்னால் அமர வைத்துக்கொண்டு தெரு முனை வரை சென்றவள் திரும்ப வராமல் வண்டியை முன்னே செலுத்த, நாய் ஒன்று துரத்த ஆரம்பித்து விட்டது.

 

அவளின் பயத்தில் வண்டி வளைந்து நெளிந்து செல்ல, “ஸ்பீட் அதிகம் பண்ணி போயிட்டே இரு, பயப்படாத, நான் தான் இருக்கேனே” என தைரிய படுத்தினான்.

 

அவளும் வண்டியை சரியாக செலுத்தி அடுத்த தெருவுக்குள் நுழைந்து விட்டாள். வண்டியை நிறுத்தியவளின் இதயம் பட படத்துக் கொண்டிருந்தது. ஆனால் ஏதோ சாகசம் செய்து விட்ட உணர்வு அவளிடம், முகம் ஜொலிக்க அவனை திரும்பிப் பார்த்தாள்.

 

“சர்க்கஸ் ஷோ முடிஞ்சுது, இப்ப வீட்டுக்கு விடு” என்றான்.

 

அவனை பார்த்து வில்லங்கமாக புன்னகை செய்து வண்டியை எடுத்தவள் வேகத்தை கூட்டியிருந்தாள்.

 

அவர்களின் தெருவை தாண்டி வண்டி செல்ல, “என்ன அஞ்சலி?” என சலித்தாலும் மறுப்பு சொல்லாமல் அவள் போக்கிற்கு விட்டு விட்டான்.

 

 வீடுகள் இருந்த தெருக்கள் தாண்டி கடைகள் இருக்கும் முக்கிய சாலைக்கு வந்து விட்டாள். சில கடைகள் இன்னும் இயங்கிக் கொண்டிருந்தன. பேருந்து நிறுத்தத்தின் பக்கத்தில் இருந்த திருமண மண்டபம் ஒன்று செயற்கை விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

அதன் பின்னணியில் செல்ஃபி எடுத்தான் யுகி. ஒன்றோடு நிறுத்தாமல்  எடுத்துக் கொண்டே இருந்தான்.

 

“போதும், வண்டியை எடுக்க போறேன்” என்றாள்.

 

“கல்யாண ஆல்பத்துல ஒன்னுத்துல கூட உன் மூஞ்சுல சிரிப்பு இல்லை, சொல்ல போனா கல்யாணம் ஆன அன்னிலேருந்து கவனிச்சிட்டேன், இன்னிக்குத்தான் உனக்கு சிரிக்க மறந்து போகலைனு எனக்கு நம்பிக்கை வந்திருக்கு” என்றான்.

 

அவன் அப்படி சொல்லவும் வேண்டுமென்றே கோமாளித் தனமாக வித விதமாக சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தாள். அவனும் சின்ன சிரிப்புடன் அனைத்தையும் கைப்பேசியில் சேமித்துக் கொண்டான்.

 

வீடு திரும்பியதும், “பட்டய கிளப்பிட்ட” என பாராட்டு பத்திரம் வாசித்தான்.

 

“கார்ல போறது விட டூ வீலர்ல போறது எக்ஸைடிங்கா இருக்குல்ல?” எனக் கேட்டாள்.

 

“இருக்கும், நீ பாட்டுக்கும் ஸ்கூட்டி எடுத்துக்கிட்டு நைட் டைம்ல வேற எங்கேயாவது போயிடாத, ஸ்ட்ரிக்ட்டா சொல்றேன் அஞ்சலி எனக்கு தெரியாம எங்கேயும் போக கூடாது நீ”

 

“ரூல்ஸ் போடாதீங்க” என்றவள் ஸ்கூட்டியை ஆசையாக வருடி விட்டு ஒரு துள்ளளோடு வீட்டுக்குள் சென்றாள். இதமான மனதோடு அவளை பார்த்தான்.

 

இனி எப்போதும் இவளிடம் அவசரப் பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதே என பலமாக தன்னை எச்சரித்துக் கொண்டான்.

 

   “ராசியான வண்டிதான் நீ, சண்டையை சமாதானம் பண்ணி கொடுத்திட்ட” என சொல்லிக் கொண்டே வண்டியை இன்னும் ஓரமாக போட்டான்.

 

ஜன்னல் திரையை விலக்கி அறையிலிருந்து அவனை பார்த்தவள், “பழைய ஸ்கூட்டி கூட சேர்த்து போடாம என்னோடத தள்ளி போடுங்க” என்றாள்.

 

“தள்ளி போட்டா உனக்குத்தான்  எடுக்க சிரமம் அஞ்சலி” என்றான்.

 

“அதெல்லாம் கவனமா எடுத்துப்பேன், நான் சொல்றத செய்ங்க” என அவள் கட்டளையாக சொல்ல, எப்படி மீறுவான் அவன்.

 

அறைக்கு வந்தவனிடம் “தேங்க்ஸ்” என்றாள்.

 

“நம்ம ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவெர்சரிக்கு  கார் வங்கி தரேன்” என்றான்.

 

“தேங்க்ஸ் ஸ்கூட்டிக்கு இல்லை, ரைட் போக விட்டதுக்கு. மூனு நாளும் எனக்கு ரொம்ப மோசமா இருந்தது, இப்ப அப்படியில்லை. தேங்க்ஸ்!” என்றாள்.

 

அவளின் தலையில் கை வைத்து அழுத்திக் கொடுத்தவன், “இனி வர்ற உன்னோட எந்த நாளும் மோசமா முடியாது, நான் பொறுப்பு” என்றான்.

 

“பார்க்கிறேன்” என சொல்லி படுத்து விட்டாள் அஞ்சலி.

 

“இனி எதையும் நீ தனியா பார்க்க வேணாம், பார்ப்போம்னு சொல்லு” என அவன் சொல்ல அவளை மீறி தலையாட்டிக் கொண்டாள்.