தனக்கு வேறு பரிமாறிக் கொண்டவள், அவனுக்கும் கவனித்து பரிமாறினாள்.
கண்டிப்பாக சமாதானத்தின் பக்கம்தான் நகர்கிறாள் என புரிந்ததில் வயிராற உண்டான் யுகி.
கடந்த மூன்று நாள் வழக்கமாக, “வாக் போறேன் அஞ்சலி, இன்னிக்காவது வருவேன்னு நினைக்கிறேன்” என சொல்லி சென்று விட்டான்.
இரவில் வாகன போக்குவரத்து ஏதுமின்றி அமைதியாக இருந்தது தெரு. அஞ்சலி வர வேண்டுமே என நினைத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டான். இன்றும் வரவில்லை என்றால் இனி ஹாலில் படுப்பது சரியாகாது. அறைக்கு சென்றுதான் அவளை பேச வைக்க முயல வேண்டும் எனவும் தீர்மானித்துக் கொண்டான்.
இன்று தான் இணக்கமாக பேசியிருந்ததால் அறைக்கு வந்து விடுவான் என நினைத்து சற்று நேரம் அவனுக்காக காத்திருந்தாள் அஞ்சலி. அவன் வராமல் போகவும் அவளும் வெளியில் வந்தாள்.
புதிய ஸ்கூட்டியை பார்த்தவள் பெருமூச்சு விட்டு அவனை தேடினாள்.
“வந்திட்டியா, வா இங்க” என அழைத்தான் கேட்டுக்கு வெளியில் நின்றிருந்த யுகி.
முகத்தை உர் என வைத்துக் கொண்டுதான் அவனிடம் சென்றாள்.
தெரு முனை வரை செல்லலாம் என பேசிக் கொண்டு நடந்தார்கள். நான்கைந்து நாய்கள் குழுவாக நின்றிருக்கவும் பயந்தவள் அவனுடன் ஒட்டி நடந்தாள்.
“பயப்படாத, திரும்ப போயிடலாம்” என்றான்.
“சில மனுஷங்களுக்கு இந்த நாய்ங்க பரவாயில்லை” என்றாள்.
பெரிதாகி விட்ட விழிகளோடு, “என்னை சொல்றியா நீ?” எனக் கேட்டான்.
“ உங்களை இல்லை. ஃசாஃப்ட்வேர் நாலேட்ஜை கீழத் தரமா யூஸ் பண்ணினவனை சொன்னேன். ‘அது ஃபேக் இல்லை, நிஜமா நீதான்’னு சொன்ன உங்க அண்ணிய சொன்னேன்” என்றாள்.
“அஞ்சலி!” என அதிர்ந்தான் யுகி.
அன்று நடந்ததை அப்படியே சொன்னாள்.
அண்ணியின் குணம் அறியாதவன் அல்ல, ஆனால் இந்த பேச்சுக்கள் அவன் எதிர் பாராதது, இவ்வளவு குரூர முகமா அண்ணிக்கு என நொந்து விட்டான். என்ன வார்த்தைகள் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லவென அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கும் அண்ணியின் மீது கோவம் கிளர்ந்து எழுந்தது.
“என் நினைவிலேருந்து அழிக்க நினைக்கிற விஷயத்தை யாராவது எனக்கு ஞாபக படுத்திட்டே இருக்காங்க. ஒரு வேளை எல்லாருக்கும் என்னை பத்தி சொல்ல பேச நினைக்க அதுதான் விஷயமா இருக்கு போல” என வேதனையாக சொன்னாள்.
யுகிக்கு அவள் பால் இரக்கம் சுரைக்க, “நீயா அப்படி நினைக்காத அஞ்சலி. நந்தினியோட எங்கேஜ்மெண்ட்ல எவ்ளோ கல கலப்பா நின்ன? அதை மாதிரி மாறனும் நீ” என்றான்.
“அந்த ஃபோட்டோஸ்ல இருந்தது நான் இல்லை, ஆனா எல்லார் பார்வையிலேயும் திங்கிங்லேயும் அது நான்தானே? இருட்டு குகைல மாட்டிகிட்டு வழி தெரியாம முட்டி மோதிகிட்டு நிக்கிற மாதிரி நிக்கிறேன். சுத்திலும் இதோ இங்க நிக்குதே இந்த ஸ்ட்ரீட் டாக்ஸ் போல யாராரோ சத்தம் போட்டுட்டே இருக்காங்க”
“அஞ்சலி… நீ ஸ்ட்ராங்கான பொண்ணு, இப்படிலாம் ஓவர் திங்கிங் பண்ணாத”
“நான் எதையும் அதிகமா சொல்லலை. எனக்கு நடக்கிறதைதான் சொல்றேன். இந்த விஷயத்தை தாண்டி பெருசா ஏதாவது செய்யணும், என் பேர் சொன்னா நான் எனக்காக உருவாக்கிக்கிட்ட அந்த விஷயம்தான் எல்லாருக்கும் ஞாபகம் வரணும்னு யோசிச்சிருந்தேன். எங்க…” என சலித்தாள்.
“நீ நினைக்கிறத உன்னால நடத்திக்க முடியும் அஞ்சலி. அண்ணியோட பேச்சுக்கெல்லாம் ரூம்குள்ள போய் அடைஞ்சுக்குவியா? அப்படி பேசின அவங்கதான் யார் முகத்தையும் பார்க்க வெட்க படணும், நீ இல்லை”
“அப்போ எனக்கு ஷிவர் ஆகிடுச்சு, அப்படியே எப்படி அத்தைகிட்ட போவேன்? அவங்க கேட்டா என்ன பதில் சொல்வேன்? அதனால்தான் ரூம்லேயே இருந்திட்டேன். இந்த கல்யாணம்தான் நான் எவ்ளோ தூரம் வீக் ஆகியிருக்கேனு எனக்கு புரிய வைக்குது. நீங்க பேசினது சரிதான், என்னோட வாழறது கஷ்டம்தான். ஆள விட்ருங்கன்னுதான் இப்பவும் கேட்கிறேன்” என்றாள்.
“எப்படி விட சொல்ற அஞ்சலி, நான் சொன்ன நாலு வார்த்தையால காலம் முழுக்க வர்ற உறவை ஒன்னுமில்லாம செய்ய பார்ப்பியா? உணர்ந்து ஸாரி கேட்கும் போது மன்னிக்கலாம்னு தோணாதா உனக்கு?” என வருத்தம் படர்ந்த குரலில் கேட்டான்.
அவனது பார்வை உண்மையான மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்க, அவளால் இளகாமல் இருக்க முடியவில்லை.
“ஆனா என்னை ஹேண்டில் பண்ண உங்களுக்கு கஷ்டமா இருக்குதானே?” எனக் கேட்டாள்.
“என் கஷ்டத்தையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு நல்லவளா நீ?”
“நான் நார்மலா இல்லை, மேரேஜ் லைஃப்லாம்…” என சொல்லி தோள்களை குலுக்கியவள், “நீங்க நினைக்கிற மாதிரி என்னோட வாழ முடியுமான்னு தெரியலை, டென்ஷன்ல நீங்க பேசுறதையெல்லாம் எவ்ளோ காலம் டாலரேட் பண்ண முடியும்னு எனக்கும் தெரியலை. அதனால…” என சொல்லி நிறுத்தினாள்.
சொல்லி முடி என்பது போல அவளை பார்த்தான்.
“அண்ணி கல்யாணம் வரை மேனேஜ் பண்ணிப்போம், எனக்கு தேவை உங்க யாரோட தொடர்பும் இல்லாத ஒரு இடத்துல ஒரு வேலை, அதை நான் செக்யூர் பண்ணிக்கிறேன். என்னை சமாளிக்க வேண்டிய கஷ்டம் இல்லாம ஹேப்பியா இருங்க நீங்க” என்றாள்.