“உன் கல்யாணம் இப்போதான் முடிஞ்சது, நந்தினி கல்யாணம் இருக்கு, செலவை பத்தி நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லை, அவளுக்கு எதுவும் வாங்கி தர வேணாம்னு சொல்லலை, மெதுவா செய்யக் கூடாதாடா?” என அதிருப்தி மேலிட கேட்டார் அலமேலு.
“சமாளிச்சுக்க முடியாத நிலைமை இல்லம்மா, இனி அண்ணியோட வண்டி யாருக்கும் வேணாம். நந்தினி இங்க வந்தா ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் இன்விடேஷன் வைக்க, ஷாப்பிங் பண்ணன்னு அவளுக்கும் தேவையா இருக்கும்” என தங்கையை காரணம் காட்டி அம்மாவை தாஜா செய்து விட்டான்.
உண்மையில் அஞ்சலிக்கு என்றே கொடுக்க வேண்டும் என்பதுதான் அவனது எண்ணம். வேறு யாருக்கும் தேவை என்றாலும் அண்ணி போல் தர மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டாள் என அவனுக்கு தெரியும்.
மகனின் பேச்சில் அலமேலுவும் சமாதானம் ஆனவராக, “அப்பா தூங்கிட்டார், காலைல நீயே ஒரு வார்த்தை சொல்லிடு. கருப்பு இல்லாம வேற கலர்ல எடுத்திருக்கலாம்” என இலகுவாக பேசி மோட்டார் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அவனும் பின்னாலேயே வந்தவன் மூடியிருந்த தன் அறைக் கதவை தட்டினான்.
“இருங்கத்தை வர்றேன்” என குரல் கொடுத்தாள் அஞ்சலி.
“நான் இல்லை, உன் வீட்டுக்காரன் வந்திருக்கான்” என சொல்லிக் கொண்டே டிவி போடப் போனார் அலமேலு.
“இப்போதான் குளிச்சிட்டு வந்தேன், வெயிட் பண்ணுங்க” என அஞ்சலி சொல்ல, கைப்பேசி எடுத்துக் கொண்டு அம்மாவின் பக்கத்தில் வந்தமர்ந்து விட்டான்.
மகனையும் மூடியிருந்த அறைக் கதவையும் மாறி மாறி பார்த்தார் அலமேலு. கட்டிய கணவனை அறைக்குள் அனுமதிக்க என்ன தடை அவளுக்கு என அவருக்கு நெருடலாக இருந்தது.
ஏன் இப்படி என யோசித்தவருக்கு புது மணத் தம்பதிகள் போலவே அவர்கள் இல்லையோ என ஐயம் ஏற்பட்டது. அவரின் மனம் மகனுக்காக வேதனை கொண்டது, கூடுதலாக மருமகள் மீது கோவமும் வந்தது.
வேறு ஆடை மாற்றி பளிச் என வந்தாள் அஞ்சலி. யுகி அவளையே பார்த்திருக்க, கணவனை கண்டு கொள்ளாமல் ஹாலை கடந்து உள்ளே சென்று விட்டாள்.
எழுந்து எட்டிப் பார்த்த அலமேலு, அவள் சாப்பிட ஆரம்பித்து விட்டதை கண்டு எதுவும் சொல்லாமல் மீண்டும் மகனிடம் வந்து விட்டார்.
அம்மாவை யோசனையாக பார்த்துக் கொண்டே யுகியும் எழுந்து எட்டிப் பார்த்தான். எதேச்சையாக கணவனை பார்த்தவள் உடனே பார்வையை திருப்பிக் கொண்டு விட்டாள்.
யுகி அம்மாவை பார்க்க, இவளுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாயா என்பது போல பார்த்திருந்தார் அவர்.
“பசி போலம்மா அவளுக்கு, நான் குளிச்சிட்டு வர்ற வரை பசியோட எப்படி வெயிட் பண்ணுவா? நீ தூங்க போகல?” எனக் கேட்டான்.
“உங்களுக்குள்ள நடக்கிறது சாதாரண புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி தெரியலை. உன்னால சமாளிக்க முடியலைனா சொல்லிடு, அவ வீட்டு ஆளுங்கள வச்சு பேசினா சரியாகிடுவா” என்றார் அலமேலு.
“எங்களுக்குள்ள எல்லாம் சரியாதான் இருக்கு, எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி முழிச்சிட்டிருக்க முடியாம தூங்க போயிடுவ, இன்னிக்கு என்ன வந்துச்சு உனக்கு, போ போய் படு” என்றான்.
“நீ நேரமா வந்திட்டு என்னை சொல்லாத, சாப்பிட்டு படு” என சொல்லி அவரின் அறைக்கு சென்று விட்டார்.
யுகி குளித்து வந்த போது படுக்க வந்து விட்டாள் அஞ்சலி.
“சாப்பாடு எடுத்து வைக்க மாட்டியா அஞ்சலி?” எனக் கேட்டான்.
“எல்லாம் எடுத்து வச்சிட்டேன்” என எழாமலே பதில் சொன்னாள்.
“சரி பரிமாற மாட்டியா?” என அவன் கேட்க, எதிர்த்து பேசாமல் அவனுக்கு முன் அறையிலிருந்து சென்று விட்டாள்.
அஞ்சலி அமைதியாக உணவு பரிமாற, “நான் போனதுக்கு அப்புறம் ஏதும் பிரச்சனை இல்லியே இங்க?” என விசாரித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் யுகி.
“ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டு இப்ப வந்து ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் பேச வேணாம். எனக்கு எதுவும் யாருகிட்டேயும் பேச பிடிக்கல. வேளா வேளைக்கு சாப்பாடு கிடைக்குது, அதுக்கு உபகாரமா சொல்ற வேலைய செஞ்சிட்டு தின்னுட்டு தின்னுட்டு நல்லா தூங்கலாம்னு இருக்கேன்” இறுதியில் அவளது குரல் உயர்ந்து விட்டது.
“சரி சரி, சத்தமா பேசாத, மிச்சத்தை ரூமுக்கு போய் பேசிக்கலாம்” என்றான்.
“நான் பேசவே போறதில்லைனு சொன்னேன்” என அவள் சொல்ல, அவனும் மேற்கொண்டு பேசாமல் விட்டு விட்டான்.
அறைக்கு வந்ததும் அவள் படுத்து விட்டாள். ஸ்கூட்டர் வாங்கியது பற்றி சொல்ல நினைக்கிறான், எப்படி பேச்சை ஆரம்பிக்க எனதான் தெரியவில்லை.
மிகுந்த தயக்கத்துக்கு பின், “நான் அப்படி பேசியிருக்க கூடாது அஞ்சலி. உனக்கு நல்ல கேர் தேவை அதை கொடுக்கிற நிலைல நான் இல்லை, என் நிலைய உன் அண்ணன் புரிஞ்சுக்கல, அதைத்தான் ஈவினிங் அப்படி சொன்னேன், உன்னை தப்பா மீன் பண்ணல. நானும் உன் அண்ணனும்தான் தப்பு…”
“பேசாதீங்க, நான் உங்ககிட்ட கேட்டேன்தானே, இந்த கல்யாணத்தை நிறுத்த உங்களுக்கு சான்ஸ் இருந்ததுதானே? அண்ணாக்கும் உங்களுக்கும் இடைல நான் பகடை ஆகிட்டேன். இப்ப என்னை குறை சொல்றீங்க? ஒரு வேளை நமக்கு கல்யாணம் நடந்ததுக்கப்புறம் அப்படி ஆகியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அப்பவும் கேர் எடுத்துக்க டைம் இல்லை பொறுமை இல்லைனு சொல்லி வீட்டை விட்டு போக சொல்லியிருப்பீங்களா?” என கோவமாக கேட்டாள்.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வார்த்தைகளை விட்டு விட்ட தன் அவசரத்தனத்தை நொந்து கொண்டவன், “இனிமே அப்படி பேச மாட்டேன் அஞ்சலி” என்றான்.
“பேசாம போனா உங்க மனசுல உள்ள எண்ணம் இல்லைன்னு ஆகிடாதுங்க”
“முன்னாடி அப்படி நெனப்பு இருந்தது உண்மைதான் அஞ்சலி, நமக்கு கல்யாணம்னு முடிவானதுமே அந்த நினைப்ப மாத்திகிட்டேன். இன்னிக்கு கடைல ரொம்ப பிஸி, அம்மா வேற பயந்திட்டாங்க… அதுல… ப்ச் விடு, என்ன காரணம் சொன்னாலும் தப்பு தப்புதான். நீ சொன்ன மாதிரி இந்த கல்யாணம் நடந்ததுல உன் பங்கு எதுவும் இல்லை”
“அதை நீங்க சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும்னு இல்லை”
“சில விஷயங்கள் தப்புன்னு தெரியும் போது அதை இன்னும் கிண்டி கிளற கூடாது அஞ்சலி, இனி அப்படி பேச மாட்டேன்னா விடணும்”
“நீங்க சொல்ல வேண்டியது சொல்லியாச்சுல்ல? தூங்குங்க”
“நீ எதுவும் என்கிட்ட சொல்லலையே?”
“நான் என்ன சொல்லணும்?”
“அண்ணியோட நடந்த சண்டை பத்தி”
“சொல்ல என்ன இருக்கு? நான் ஸ்கூட்டிய தள்ளி விட்டதுதான் தப்புன்னு ஆகிடுச்சே, அப்படியே இருக்கட்டும்”
“அண்ணி என்ன சொன்னாங்கனு உனக்கு அவ்ளோ கோவம்? உன்னால சமாளிக்க முடியலைனா அம்மாவை கூப்பிட்டிருக்கலாம், என்கிட்ட சொல்லியிருக்கலாம். வண்டியை தள்ளி விட்டது தப்புதானே அஞ்சலி?” என அவன் கேட்கவும் பதிலே சொல்லவில்லை அவள்.
கோவம் வரப் பெற்றவன் வெளியே சென்று விட்டான். அவனின் செயலில் அவளுக்கு ஆதங்கமாக இருந்தது.
கொஞ்சம் நிதானம் வரவும்தான் ‘இப்படி நடந்து கொள்கிறாள் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாதபடி ஏதோ சொல்லியிருக்க வேண்டும் அண்ணி’ என நினைத்து தானாக அவளிடம் வந்து நின்றான் யுகி.
“வெளில வா அஞ்சலி, வாக் போய்ட்டு வரலாம்” என அழைத்தான்.
அவள் எதிர்வினை ஆற்றவில்லை. தொட்டு தூக்கவும் இவனுக்கு பயம். ஆசையாக வாங்கி வந்த ஸ்கூட்டியை இவள் பார்க்க வேண்டும், இன்பமாக இவள் அதிர்வதை காண வேண்டும் என ஏதேதோ கற்பனை செய்து கொண்டுதான் வீட்டுக்கு வந்திருந்தான்.
எங்கே இவள் முகம் கொடுக்கவே மறுக்கிறாள்.
“பேசுறதுக்கே மறுத்தா எப்படி நமக்குள்ள சரியாகும் அஞ்சலி?” எனக் கேட்டான்.
“என்கிட்ட விசாரிக்கவே இல்லை நீங்க, நீங்களே இப்படிதான்னு முடிவு பண்ணிக்கிட்டீங்க, உங்கண்ணி என்ன சொல்லியிருந்தாலும் தப்பில்ல, நான் வண்டிய தள்ளினதுதான் தப்பு. என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது அதை விட பெரிய தப்பு” என அவள் அவன் செய்த தவறிலேயே பிடிவாதமாக நிற்க, அவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.
“வெளில நடந்திட்டு இருக்கேன் அஞ்சலி, நீ வருவேன்னு நம்பிக்கையோட போறேன். நீ வர்ற வரைக்கும் உள்ள வர மாட்டேன்” என சொல்லி சென்று விட்டான் யுகி.
‘இவர் சொல்ற மாதிரி நடந்துக்க மாட்டார், இவரா என்னைய பத்தி ஏதாவது நினைச்சு அப்புறம் எம்மேல நம்பிக்கையோட போவாராம், நானும் பின்னாலேயே ஓடணுமா?’ என வீம்பு கொண்டவள் நன்றாக இழுத்திப் போர்த்திக் கொண்டாள்.