கடைக்கு வந்து டீலரை சந்தித்து பேசி அனுப்பி வைத்த யுகேந்திரனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. அம்மாவுக்கு அழைத்து பேசினான்.
பின் பக்கத்தில் உலவ வந்த வெங்கட் ‘எங்கே அஞ்சலி, ரோஹித் இருவரும்?’ என கேட்டதாகவும் அதற்கு என்ன சொல்வதென தெரியாமல் தான் தவித்துப் போய் விட்டதாகவும் மகனிடம் சொன்னார் அலமேலு.
“அவளுக்கு உடம்பு முடியலைன்னு சொல்றதுக்கு என்னம்மா?” என கடிந்து கொண்டான் யுகி.
“பேசி முடிக்கிறதுக்குள்ள இடைல பேசாதடா” என அதட்டினார் அலமேலு.
ஏதாவது வேலையாக இருப்பாள், வருவாள் என கணவரிடம் சொல்லி சமாளித்து விட்டார் அலமேலு. ஆனால் ‘தொந்தரவு செய்யாதே’ என யுகி சொல்லியிருந்ததால் தானாக சென்று அஞ்சலியை அழைக்க சங்கட பட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.
ஸ்ரீஜா கைப்பேசியில் பிஸி ஆகி விட, சத்தமில்லாமல் கீழே வந்து விட்டான் ரோஹித். அவனே அஞ்சலியிடம் சென்று தாத்தா தேடுவதாக சொல்லியிருக்கிறான். வருவதாக சொல்லி அனுப்பியவள் சில நிமிடங்களில் எதுவுமே நடக்காத மாதிரி வந்து நின்றாள்.
“என்ன ம்மா டல்லா இருக்கியே, என்ன விஷயம்?” எனக் கேட்ட மாமனாரிடம் ஸ்ரீஜா பற்றி எந்த புகாரும் சொல்லாமல் ‘லேப்டாப் பார்த்து பார்த்து கண்கள் சோர்ந்து விட்டதால் அப்படி தெரிகிறேனா இருக்கும்’ என சொல்லி சமாளித்து விட்டாள்.
“பிடாரின்னுலாம் என்ன பேச்சும்மா?” என யுகி கண்டிக்க, அவர் கண்டு கொள்ளவே இல்லை.
ரோஹித்தை அவனது பள்ளியில் இலைகளின் வகைகள் குறித்து பிராஜக்ட் செய்ய சொல்லியிருந்தனர். அதை தாத்தாவிடம் சொன்ன ரோஹித், “அம்மாக்கு உடம்பு சரியில்லை அதனால செய்ய முடியலைன்னு மிஸ்கிட்ட சொல்ல சொன்னாங்க அம்மா” எனவும் சொன்னான்.
“ஏன் என்ன ஸ்ரீஜாவுக்கு?” என சின்ன மருமகளிடம் கேட்டார் வெங்கட்.
“தெரியலை மாமா” என்றவள் ரோஹித்தை பார்த்து, “நாம செய்யலாம்டா, நீ ரெடியா?” எனக் கேட்டாள். அவன் உற்சாகமாக தலையாட்டினான்.
உடனே பின் பக்கத்திலேயே மேசை, நாற்காலி எல்லாம் எடுத்து போட்டு விட்டாள் அஞ்சலி.
பிராஜக்ட் பற்றி மாமனாரிடம் சொல்லி, “எந்தெந்த இலையெல்லாம் யூஸ் பண்ணலாம்னு யோசிச்சு வைங்க மாமா, வந்திடுறோம்” என அவருக்கு வேலை வைத்தாள்.
யோசித்ததோடு நிற்காத வெங்கட், பைரவிக்கு அழைத்து அவளது வீட்டில் இருக்கும் வாதாங்காய் மர இலையை பேத்தியிடம் கொடுத்தனுப்ப சொன்னார்.
“பூவரச மரம் நம்ம வீட்ல இல்லை, கடைசி வீட்டு கொல்லையில இருக்கும், கேட்டு பறிச்சிட்டு வா” என அலமேலுவையும் ஏவினார். கணவரின் உற்சாகத்தில் அவரும் ஓடிச் சென்று பறித்து வந்தார்.
ரோஹித்தையும் உடன் அழைத்துக் கொண்டு முனை கடைக்கு சென்றிருந்த அஞ்சலி தேவையான பொருட்கள் வாங்கி முடித்து வீடு வந்து சேர்ந்த போது வாதாங்காய் மர இலைகளோடு வந்திருந்தாள் சுப்ரியா.
ரோஹித்தை கொண்டே இலைகள் எல்லாம் பறிக்க வைத்தாள். சுப்ரியா அவனுக்கு உதவினாள். சார்ட் பேப்பரில் ஒட்ட ரோஹித்துக்கு உதவி செய்து பெயரும் எழுத வைத்தாள் அஞ்சலி. சின்ன சின்னதாக உதவி செய்து கொண்டே வேடிக்கை பார்த்திருந்தார் வெங்கட்.
இடையில் ஃபெவிகாலை கையில் தடவி, காய வைத்து, உறித்து என விளையாட்டு வேறு. வீட்டின் பின் பக்கம் கல கலப்பாக இருந்தது.
நிலக்கடலை அவித்து எடுத்து வந்த அலமேலு உரித்து உரித்து பேர பிள்ளைகளுக்கு கொடுத்தவர் மருமகளுக்கும் கொடுத்தார். அவளின் கைகள் பசையாக இருக்க, பின்னர் சாப்பிடுவதாக சொன்னாள்.
“ஸ்பூன் கொண்டு வந்து கொடுடி” என பர பரத்தார் வெங்கட்.
“உங்க மருமகளை பார்க்க வச்சு ஒன்னும் தின்னிட மாட்டோம்” என கணவரிடம் இடித்துரைத்துக் கொண்டே அஞ்சலிக்கும் வாயில் கொடுத்தார் அலமேலு.
ரோஹித்தின் பிராஜக்ட் முடிந்தும் கூட இலைகள் செம்பருத்திப் பூக்கள் எல்லாம் வைத்துக்கொண்டு ஏதோ செய்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
“இன்னும் அங்கதான் இருக்காங்க மூனு பேரும். கொஞ்ச நேரத்துல கொசு வந்து அப்பினாதான் உள்ள வருவாங்க போல. காய் ஏதும் நறுக்கி தருவா, குருமா செய்யலாம்னு பார்க்கிறேன், இன்னிக்கு சமைய கட்டுக்குள்ளேயே நுழைய மாட்டா போல உன் பொண்டாட்டி” என பெரிதாக கதை சொல்லிக் கொண்டிருந்தார் அலமேலு.
தன் மனதை வேறு எதிலும் செலுத்த நினைத்த அஞ்சலி அதற்காக ரோஹித்தின் பிராஜக்ட்டை பயன் படுத்தியிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் யுகி. அவளது பிறந்த வீட்டில் அவளை யாரும் சரியாக கையாளவில்லை என குறை சொல்லியவனுக்கு இன்று தான் பேசியதை நினைத்து உள்ளுக்குள் குன்றலாகிப் போனது.
இப்போதும் சண்டையால் ஏற்பட்ட மனதின் பாதிப்பிலிருந்து தானாகவே வெளிவர முயன்றிருக்கிறாள். அப்பாவிடம் உண்மை சொல்லாமல் பிள்ளைகளிடம் முகம் காட்டாமல் என அவளின் செயல்களில் அவனுக்கு அவள் மீதான மதிப்பு கூடிப் போனது.
அண்ணியுடன் சண்டையென தெரிந்த போதே அவளிடம் மனம் விட்டு பேசாத தன்னை தானே திட்டியும் கொண்டான்.
“என்னடா பேச்சையே காணோம்?” எனக் கேட்டார் அலமேலு.
“ஹ்ம்ம்… நீ ஏதாவது சிம்பிலா சமைச்சுக்க ம்மா, இன்னிக்கு அவளை அவ போக்குல விடு” என்றான்.
“இன்னிக்கு விஷயத்தை விடு, இன்னும் எவ்ளோ நாளைக்கு நானே சமைச்சு கொடுப்பேன் உனக்கு, எனக்கு உதவி செய்யணும்னு நான் நினைக்கல, இதெல்லாம் அவ கத்து வச்சுக்க வேணாமா? நாளைக்கு நீதான் சாப்பாட்டுக்கு அல்லாடணும்”
“போக போக கத்துக்குவா, இல்லைனா என்ன… சமைக்க ஆள் போட்டுக்கிறேன். நல்ல பொண்ணும்மா அவ, சும்மா குறை சொல்லாத”
“நான் மட்டும் அவளை நல்ல பொண்ணு இல்லைனா சொன்னேன், குடும்பம் நடத்த தெரிஞ்சவளாவும் இருக்கணும்னுதான் சொல்றேன். இன்னிக்கு ரூம் சாத்திகிட்டு இருந்ததெல்லாம் தப்பில்லையா? நீ இடம் கொடுக்க கொடுக்க இன்னும் ஏறிக்குவா. இந்த வீட்ல உங்கண்னன் ஒருத்தன் படுறது போதாதா? எனக்கென்ன? நீ சரியா இல்லைனா கஷ்ட பட போறதும் நீதான், பார்த்து தாங்குடா அவளை” என கடுப்பாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார் அலமேலு.
சற்று நேரம் அஞ்சலி பற்றிய யோசனையில் இருந்த யுகி, தனக்கு தெரிந்த இரு சக்கர வாகன ஷோ ரூம்’க்கு அழைத்து பேசினான். பின் இளவரசனை அங்கு அனுப்பி வைத்தான்.
கீழே ஏன் சென்றாய் அங்கு போகாதே என்றெல்லாம் ரோஹித்தை அதீதமாக ஸ்ரீஜாவால் கண்டிக்க முடியாது. அப்பாவுடன் காணொளி அழைப்பில் பேசுபவன் சொல்லி கொடுத்து விடுவான்.
ஆகவே நன்றாக பொழுதை போக்கி விட்டு அப்பம்மா கையாலேயே இரவு உணவையும் முடித்து விட்டுத்தான் அம்மாவிடம் சென்றான் ரோஹித்.
சேகர் வந்து சுப்ரியாவை அழைத்து சென்று விட்டான்.
சமையலுக்கு எந்த உதவியும் செய்திராத அஞ்சலி இனி என்ன செய்வாள் என அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் அலமேலு.
குளிர் சாதன பெட்டியை ஒழுங்கு செய்தாள், சோஃபா விரிப்புகளை மாற்றினாள், உணவு மேசையில் வைக்கப் பட்டிருந்த சிறு தடுக்குகளை எடுத்து வந்தவள், “இந்த ஃபூட் மேட்ஸ்லாம் பழசா போயிடுச்சே அத்தை, வேணுமா என்ன, தூக்கி போட்டிடலாம்தானே?” எனக் கேட்டாள்.
இவளை என்ன செய்வது என மனதில் நினைத்தாலும், “ம்ம்… இதை போட்ரலாம், இன்னொரு செட் கப்போர்ட்ல இருக்கும், கையோட அதை போட்ரு” என்றார்.
“புதுசு வச்சுக்கிட்டே எதுக்கு இதை மாத்தாம இருந்தீங்க?” என மாமியாரிடம் கேள்வி கேட்டு, அவரின் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள்.
‘அடியே!’ என மனதில் கூவினார் அலமேலு.
வீட்டின் கப்போர்டுகள் எல்லாம் ஒதுங்க வைத்து விட்டாள். வேலைகள் இழுத்து போட்டு செய்ததில் நன்றாக வியர்த்து போயிருந்த அஞ்சலியை கண்டு அலமேலுவுக்கு உருகிப் போனது.
“போதும் அஞ்சலி, நாளைக்கு எந்த விருந்தாளி வரப் போறாங்கன்னு இன்னிக்கே எல்லாம் செய்ற?” என கேட்டு அவளை நிறுத்தினார் அலமேலு.
குளித்து விட்டு வருகிறேன் என அவரிடம் சொல்லி அறைக்கு சென்று விட்டாள்.
காலையில் தண்ணீர் ஏற்றியது, இப்போது குறைந்திருக்கும் என்பதால் வெளியில் வந்து மோட்டார் போட்டு விட்டார் அலமேலு.
மலர் மாலையெல்லாம் போடப் பட்டிருந்த புதிய ஸ்கூட்டியில் வந்திறங்கினான் யுகி.
“என்னடா இது? உன் வண்டி எங்க?” என வியப்பாக கேட்டார் அலமேலு.
அவனது பைக் கடையில் நிற்கிறதாம், இது அஞ்சலிக்காக வாங்கியிருக்கிறான்.