அஞ்சலிக்கு மாமியாரை விட மாமனாருடன் பழகுவது இலகுவாக இருந்தது. சில சமயங்களில் வெங்கட்டுக்கு பிசியோதெரபி நடக்கும் நேரத்தில் அவளும் அவருடன் இருப்பாள். அந்தக் காலத்தில் இந்த ஊருக்கு வந்தது, கடை அமைத்தது, சந்தித்த சவால்கள் என மருமகளுக்கு கதைகள் சொல்வார் வெங்கட்.
அஞ்சலியும் நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வாள். இப்போதெல்லாம் மருமகளின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார் அவர். மனைவியிடம் “இன்னும் அஞ்சலிய காணல, உடம்புக்கு ஏதுமில்லையே?” என விசாரிப்பார்.
“அவ ஏதோ படிக்கிறா ல்ல, இன்னிக்கு இந்த நேரம்தான் கிளாஸ், அப்புறம் வருவா” என அலமேலுவும் பதில் சொல்வார். ஆமாம் அந்த கோர்ஸில் சேர்ந்து விட்டாள் அஞ்சலி.
மாலையில் ரோஹித் விளையாடும் நேரத்தில் வீட்டின் பின் பக்கத்தில் வெங்கட், அஞ்சலி இருவரையும் பார்க்கலாம். எப்போதாவது பைரவியின் மகள்கள் வருவார்கள். சேர்ந்து நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது, ஏதாவது சொல்லி கலாய்த்துக் கொள்வது என அவர்களுடன் அவளுக்கு நேரம் நன்றாகவே செல்லும்.
தன் கணவருடனும் பேரப் பிள்ளைகளிடமும் கபடம் இல்லாமல் பழகும் விதத்தால் மாமியாரையும் கவர்ந்து விட்டாள் அந்த வீட்டின் சின்ன மருமகள்.
ஆனால் சமையல் வேலைதான் சரிவர செய்ய மாட்டாள். அவளை சலிப்பாக பார்ப்பார் அலமேலு, ஆனால் வாயை திறந்து குறையாக ஏதும் சொல்ல மாட்டார். அந்த பார்வைக்கே அஞ்சலிக்கு ஒரு மாதிரி ஆகி விடும்.
ஒரு நாள் மதிய உணவின் போது கணவனிடம் மாமியாரை பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு குக்கிங் வரலை, என்ன பண்ணுவேன் நான்? இல்லை தெரியாமதான் கேட்கிறேன், ஒரே சைஸ்ல காய் நறுக்கினாதான் வாய்க்குள்ள போகுமா? அதுக்கெல்லாம் லுக் விடுறாங்க உங்கம்மா” என்றாள்.
“நான் சொல்லி வைக்கிறேன் அஞ்சலி” என்றான் யுகி.
“என்னன்னு?”
“சைஸ்ல என்னம்மா இருக்கு? அவ விருப்ப படி கட் பண்ண விடுங்கன்னு”
“ஆள பாரு. அதெல்லாம் நீங்க ஏதும் கேட்டுக்க வேணாம்”
“கம்ப்ளைண்ட் சொன்னா கேட்கத்தான் செய்வாங்க”
“ஆமாம் இவர் பெரிய வால்டர் வெற்றிவேல், கம்ப்ளைண்ட்க்கு ஆக்ஷன் எடுத்திட்டுத்தான் ஓய்வார்”
“அம்மாட்ட கேட்காம வேற என்ன செய்யணும் நான்?”
“நான் பேசுறத உங்களை கேட்டுக்க சொல்றேன், அவங்கள்ட்ட கேட்கறதுக்காக சொல்லல. மனசுலேயே வச்சுக்க முடியாது என்னால, யார்கிட்டயாவது சொல்லிடணும். என் அம்மா பாட்டிகிட்ட சொன்னா கதை வேற மாதிரி ஆகிடும். அதனால பதில் பேசாம நீங்க கேட்டுக்கோங்க. இல்லை உங்கம்மாட்ட கேட்டு பிரச்சனைதான் செய்வேன்னு நீங்க நின்னா அப்புறம் நான் எதுவுமே சொல்ல மாட்டேன்” என்றாள்.
“கேட்டுக்கிறேன் அஞ்சலி, தயவுசெஞ்சு எதையும் மறைக்காம என்கிட்ட சொல்லிடு”
“எல்லாம்லாம் சொல்ல முடியாது. என்ன சொல்லலாம்னு தோணுதோ அது மட்டும்தான் சொல்லுவேன். இந்த பீன்ஸ் பொடிசா நறுக்கலையாம், அதனால என்ன, சாப்பிட நல்லாத்தானே இருக்கு?” எனக் கேட்டுக் கொண்டே பீன்ஸ் பொரியல் இன்னும் கொஞ்சம் அவனுக்கு வைத்தாள்.
அவன் பதில் தராமல் சாப்பிட, “கேட்கிறேன் ஒன்னும் சொல்லாம சாப்பிடுறீங்க?” என்றாள்.
“நீதானே கேட்டுக்க மட்டும் சொன்ன?”
“சொல்றத கேட்டுக்கணும், கேள்வி கேட்டா பதில் சொல்லணும்”
“என்ன கேட்ட?”
“பீன்ஸ் பொரியல்?”
“ஆஹா இப்படி ஒரு பீன்ஸ் பொரியல் சாப்பிட்டதே இல்லை நான்” என அதீதமாக சிலாகித்தான்.
“கிண்டல்தானே?” எனக் கேட்டு அவள் முறைக்க, “அப்புறம் நல்லாருந்தா நாங்களே சொல்ல மாட்டோமா? ஆனா நீ கட் பண்ணினதுல இல்லை குறை. அம்மா ஏதோ சொதப்பி வச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்” என சமாளித்தான்.
“ஆமாமில்ல… எனக்கும் ஏதோ மிஸ் ஆன மாதிரிதான் இருந்தது” என அவளும் அவனது பேச்சை ஒத்து பேசினாள்.
“ஹப்பா! மாமியார் பத்தி குறை பேசுறதுன்னா பல்பு எரியுது முகத்துல” என அவன் கிண்டல் செய்ய, சன்னமாக சிரித்தாள் அவள்.
சாப்பிட்டு முடிக்கும் போது கவுன்சிலிங் பற்றி கூறினான். அவசியமா என்பது போலத்தான் பார்த்தாள்.
“போய் பார்க்கலாம் அஞ்சலி, கண்டிப்பா உனக்கு பெட்டரா இருக்கும்” என அவன் அழுத்தி சொல்ல, சரியென சொல்லி விட்டாள்.
அவன் கிளம்புவதற்கு முன் ஏதோ மாத்திரை வாங்க வேண்டும் என சொல்ல அவனிடம் வந்தார் அலமேலு. மெடிக்கல் ஷாப்க்கு சொல்லி விடுகிறேன் கொடுத்து விடுவார்கள் என்றான் அவன்.
கடையின் தொடர்பு எண்ணை கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் அஞ்சலி. அவனும் அனுப்பி விடுகிறேன் என்றான். உடனே என்ன மாத்திரைகள் வாங்க வேண்டும் என பார்ப்பதற்காக மாமனாரின் அறைக்கு சென்று விட்டாள் அவள்.
“சமையல் தவிர மத்தது எல்லாம் இவளுக்கு தண்ணி பட்ட பாடு” என்றார் அலமேலு. பாராட்டா குறையா என யுகியால் சரியாக இனம் கண்டறிய முடியவில்லை.
“உன் சாப்பாடே எனக்கு பழகிப் போச்சுமா, அவளை சமைக்க விடுறேன்னு என்னை படுத்தி வச்சிடாத. இன்னிக்கு பீன்ஸ் பொரியல் அட்டகாசம்” என்றான். அலமேலு புளகாங்கிதம் அடைந்து விட்டார்.
யுகியிடம் ஏதோ சொல்ல வந்த அஞ்சலிக்கு அவன் பேசியது அப்படியே கேட்டு விட்டது.
‘அடப்பாவி!’ என அவள் பார்க்க, மழுப்பலாக அவளை பார்த்து சிரித்தவன் இருவருக்கும் பொதுவாக சொல்லிக் கொண்டு வெளியேறினான். அவனை வழியனுப்பி வைக்க அஞ்சலியும் சென்றாள்.
பைக்கை எடுத்தவன் அஞ்சலியை பார்க்க, கைகளை கட்டி கொண்டு அவனை வில்லங்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“என்ன அஞ்சலி?”
“பீன்ஸ் அட்டகாசம்… இல்லை!” என நக்கலாக சொன்னாள்.
அவன் கண்களை சிமிட்டி சிரிக்க, “வீட்ல கூட வியாபார யுக்திய நல்லா யூஸ் பண்றீங்க, ஃபிராட்” என்றாள்.
“உனக்கு எப்போ கிளாஸ், டைம் ஆகல?” என பேச்சை மாற்றினான்.
லேப்டாப் ஸ்கிரீன் அதிக நேரம் பார்க்க அவளுக்கு சிரமமாக இருக்கிறதாம். கண்களுக்கு பவர் இல்லாத கண்ணாடி வேண்டுமாம். அதை அவனிடம் சொன்னாள்.
பக்கத்திலேயே ஆப்டிகல் ஷாப் இருப்பதை சொன்னவன், “அண்ணியோட ஸ்கூட்டர் எடுத்துக்க. கீ கீழதான் இருக்கும், அம்மாகிட்ட கேளு தருவாங்க. கார்ட் உன்கிட்ட இருக்குதானே, அதை மட்டும் ரொம்ப தேச்சிடாம கொஞ்சம் கவனம்” என்றான்.
“லட்சம்லாம் மேட்டரா, நான் சம்பாதிக்கிறது முழுக்க உனக்குதானே அஞ்சலி” என அவன் ஐஸ் வைக்க, நம்பவிட்டேன் என தலையாட்டினாள்.
“மறக்காம ஹெல்மெட் போட்டுக்க” என சொல்லி அவனும் புறப்பட்டு விட்டான்.
அஞ்சலி பொறுப்பாக மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்து, இணைய வகுப்பையும் முடித்துவிட்டு மாமியாரிடம் சொல்லிக் கொண்டு கண்ணாடி வாங்க கடைக்கு புறப்பட்டு சென்றாள்.
அந்த வீட்டில் ஸ்கூட்டர் ஒன்றுதான், வாசு வாங்கியது அது. அவனது திருமணத்துக்கு பின்னரே வாங்கப் பட்டிருந்தாலும் ஸ்ரீஜாவுக்காக என வாங்கப் பட்டதில்லை.
நந்தினி அவளுடைய ஸ்கூட்டரை சென்னைக்கு எடுத்து சென்று விட்டாள். ஆகவே இங்கு வந்தால் அவளுக்கு வாகனம் தேவையாக இருந்தது. சில சமயங்களில் பைரவியை அவளது கணவன் ட்ராப் செய்து விட்டு செல்வான், மீண்டும் அவள் வீட்டுக்கு செல்ல அவளுக்கும் தேவையாக இருந்தது.
ஸ்ரீஜாவும் கணவனுடன் வெளிநாட்டுக்கே செல்லவிருந்ததால் வீட்டு பெண்களுக்கு என பொதுவாகத்தான் வாசு வாங்கி போட்டிருந்தான்.
ஸ்ரீஜா இங்கேயே வந்து விட்ட பிறகு அவள் மட்டும்தான் உபயோகிக்கிறாள். மற்றவர்களுக்கு உபயோகிக்கும் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை.
தன் வண்டியை அஞ்சலி எடுத்து சென்றதை மேலிருந்து பார்த்து விட்ட ஸ்ரீஜாவுக்கு அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பள்ளியிலிருந்து வந்த மகனை வேண்டுமென்றே தயார் படுத்தி அவனுடன் கீழே வந்தாள்.