தான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காகவும் தான் தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை, என் வாழ்க்கையை நன்றாக வாழ்வேன் என புரிதலும் தைரியமும் அவளுள் இருந்தாலும் ஆழ் மனதில் அந்த மார்ஃபிங் செய்யப் பட்ட புகைப்படங்கள் அவளை பாதிக்கவே செய்திருத்தன.
இப்போது விருப்பமில்லாத திருமணம் வேறு. எதிர் பார்க்காத யுகியின் நெருக்கம் அவளை அதிர வைத்து விட்டது. அவனை அடித்தது தவறு என்பதால் விளைந்த குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ள நடுக்கம் பிறந்து விட்டது.
சில நிமிடங்களில் இயல்பான நிலைக்கு மீண்ட அஞ்சலி, அவனது முகத்தை பார்க்க இயலாமல் “ஸாரி” என்றாள்.
“இப்போ ஓகேவா நீ? என்ன செஞ்சாலும் மறைக்காம சொல்லிடு” என்றான் யுகி.
தனது நிலையை மேலோட்டமாக சொன்னவள், “நீங்க அப்படி செய்வீங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணல, என் மைண்ட் ஷாக் ஆகிடுச்சு. வெரி ஸாரி, இப்போ நல்லாருக்கேன்” என்றாள்.
மீதமிருந்த உணவை எடுத்துக் கொடுத்தான். அவள் மறுக்க, “ஆமாம் இதுக்கு மேல சாப்பிட்டா நைட் உன்னால சாப்பிட முடியாது” என சொல்லி அவனே சாப்பிட்டான்.
“அது…” என்றவள் சொல்லத் தயங்கி பார்க்க, “அந்த எச்சில் மேட்டர் எல்லாம் உனக்குத்தான் எனக்கு இல்லை” என்றான்.
அவனை அடித்து விட்டோமே என சங்கடத்திலேயே இருந்தாள் அவள். புரிந்தது போல, “பெரிய விஷயம் இல்லை அஞ்சலி, சரி பண்ணிடலாம். நீ தப்பா நினைக்க மாட்டேன்னு நம்பி கேட்கிறேன், கவுன்சிலிங் போனா உனக்கு பெட்டரா இருக்கலாம், வீட்ல யாருக்கும் சொல்லிக்க வேணாம். நான் பார்க்கவா?” எனக் கேட்டான்.
“அந்த அளவுக்கு அஃபெக்ட் ஆகியிருக்கேனான்னு தெரியலை. இதுக்கு முன்னாடி இது போல எனக்கு ஆனதில்லை” என்றாள்.
இன்னொரு சமயம் இது குறித்து பேசலாம் என நினைத்தவன் சூழலை இலகுவாக்க நினைத்து ஸ்பூனில் பாஸ்தா எடுத்து நீட்டினான்.
அவள் முகம் திருப்பிக் கொள்ள, “ஹையோ பெரிய தொரையம்மாதான்” என்றான்.
அறைக் கதவை தட்டி விட்டு வந்த அலமேலு மருமகளிடம் விளக்கேற்ற வரும் படி சொல்லி சென்றார். அதன் பின் நேரம் பறந்தது.
இரவில் உறங்க வந்த போது பக்கத்தில் படுக்கலாமா என அனுமதி கேட்ட யுகியை சங்கடமாக பார்த்தவள், “உங்க விருப்பம்” என்றாள்.
முதல் நாள் ஒரே படுக்கைதான் என்ற போதும் இன்று மாலையில் நடந்த நிகழ்வு அவனை யோசிக்க வைத்திருந்தது. இப்போதும் சரி என சொல்லாமல் போனதில் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை அவன்.
அவளுக்கு ஏதும் பெரிய பிரச்சனையாக இருக்க கூடாது என நினைத்தவன் அதை அறிந்து கொள்ளும் வரையாவது அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய வேண்டாமென முடிவெடுத்துக் கொண்டான்.
ஆகவே அவளை படுக்கையில் படுக்க சொல்லி விட்டு தனக்கு தரையில் பாய் விரித்துக் கொண்டான். அடுத்த நாள் அனைவருக்கும் பைரவியின் வீட்டில்தான் விருந்து. இங்கேயே இருந்த பெற்றோருக்கு மட்டும் சாப்பாடு கொடுத்தனுப்பி விட்டாள். இரவே மஸ்கட் செல்ல தயாராகி விட்டான் வாசு.
ரோஹித் ஒரே அழுகை. நந்தினி சமாதானம் செய்து அவளுடன் வைத்துக்கொண்டாள். நான் பார்த்துக் கொள்கிறேன் என அண்ணனுக்கு ஆறுதல் சொன்னான் யுகி.
“நந்தினி மேரேஜ்க்கு கொஞ்சம் முன்னாடியே வந்திடுறேன், நீயே எல்லா வேலையும் இழுத்து போட்டுக்காத, மேரேஜ் லைஃப் என்ஜாய் பண்ணு” என தம்பியிடம் சொல்லி விட்டுத்தான் புறப்பட்டான் வாசு.
நந்தினியும் அடுத்த நாள் சென்னைக்கு பயணப் பட்டு விட்டாள். வார இறுதியில் பொள்ளாச்சியில் நடந்த விருந்தோடு கல்யாண சடங்குகள் முடிவுக்கு வந்தன.
அஞ்சலிக்கு அலமேலுவுடன் இன்னும் ஒட்டுதல் ஏற்பட்டிருக்கவில்லை. பிடிக்கிறதோ இல்லையோ கணவன் உடன் இருந்த காரணத்தால் தான் புகுந்த வீடு அவளுக்கு மிரட்சியை தரவில்லை. இன்றிலிருந்து அவன் வேலையை பார்க்க கிளம்பி விடுவான்.
“என்ன வேணும்னாலும் அம்மாகிட்ட கேட்டுக்க, இல்லைனா எனக்கு கால் பண்ணு. ஃபிரீயா இரு” என எளிதாக சொல்லி கிளம்பி விட்டான் யுகி.
சமையல் வேலைகள் எல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியாது. அஞ்சலியின் குடும்பத்தினர் மீது அலமேலுவுக்கு மனத் தாங்கல் இருந்த போதிலும் அதை அவர் மருமகளிடம் காட்ட முனையவில்லை.
சிறு சிறு வேலைகள் சொன்னார், அவளும் கேட்டு கேட்டு செய்தாள். பனிரெண்டுக்கெல்லாம் மதிய சமையல் முடித்து விட்டு அறைக்கு சென்று விடுவார் அலமேலு. ஸ்ரீஜா எட்டிப் பார்க்கவே இல்லை.
ஒரு மணி போல வந்த அலமேலு சாப்பிடுகிறாயா அல்லது யுகி வந்ததும் சாப்பிடுகிறாயா என கேட்டார். அவர் கேட்ட விதமே அவனோடு சேர்ந்து சாப்பிடு என சொல்வது போலிருக்க, அவளும் “அவர் வரட்டும் அத்தை” என சொல்லி விட்டாள்.
இரண்டு மணிக்கு மேல்தான் அவன் வந்தான். சாப்பிட்ட பிறகு சற்று நேரம் வீட்டில்தான் இருந்தான். இரவு எப்போது வருவான் என கேட்டறிந்து கொண்டவள், “நான் இங்க என்ன பண்றது? டைம் பாஸ் ஆகவே மாட்டேங்குது” என்றாள்.
“பொள்ளாச்சில என்ன பண்ணுவ?” என விசாரித்தான்.
“அங்கேயும் இப்படித்தான், அதுக்காக இங்கேயும் அப்படியே இருக்கணுமா? அதாவது நான் பொறந்து வளர்ந்த இடம், இங்க சமாளிக்க கஷ்டமா இருக்கு” என்றாள்.
“தெரிஞ்சுக்க கேட்டேன் அஞ்சலி. ஏதாவது ஹாபி இருந்தா அதை செய்யலாமே?”
வார நாட்களில் இரண்டு மணி நேரமாகவும் வார இறுதியில் நான்கு மணி நேரமாகவும் நான்கு மாதங்கள் பயிலும் ஆன்லைன் கோர்ஸ் ஒன்றின் பெயரை கூறியவள், “ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்” என்றாள். அவனும் சரி என்றான்.
உடனே லேப்டாப் எடுத்து வைத்துக் கொண்டவள், “ஃபீஸ் பே செய்யணும்” என்றாள்.
“இப்பவேவா?”
“ஆமாம், நாளையிலேருந்தே படிக்க போறேன். ஃபியூச்சர்ல எனக்கு ஹெல்ப்பா இருக்கோ இல்லியோ இப்ப ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்” என்றாள்.
“பத்து பதினைச்சு நாள்ல நந்துவோட மேரேஜ் இன்விடேஷன்லாம் கொடுக்க ஆரம்பிச்சிடுவேன் அஞ்சலி. முக்கிய சொந்தக்காரங்களுக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து போயிதான் கொடுக்கிற மாதிரி இருக்கும். உன்னால கோர்ஸ் படிக்க டைம் ஒதுக்க முடியுமா? அவசர பட வேணாமே, நந்துக்கு மேரேஜ் முடிச்சிட்டு ஜாயின் பண்ணிக்கோயேன்” என்றான்.
குறிப்பிட்ட நேரத்தில் நேரலையாக வகுப்பு நடக்கும். நேரலையில் இணைய முடியாதவர்களுக்கு வகுப்பை ரெகார்டு செய்து அனுப்பி விடுவார்கள். நேரலை என்றால் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம், மற்றொன்றில் அது இயலாது.
அதை சொன்னவள், “முடியாதப்போ ரெகார்டட் கிளாஸ் பார்த்துக்கிறேன். ரெண்டு மாசம் வரைக்கும் இப்படி சும்மா இருக்க என்னால முடியாது” என்றாள்.
இரண்டு நாட்கள் போகட்டும், சொல்கிறேன் என அவன் சொல்ல பட் என லேப்டாப்பை மூடியவள் எழுந்து பின்பக்கம் சென்று விட்டாள்.
சற்று நேரத்தில் அவளை தேடிக் கொண்டு வந்தான் யுகி. வெற்றிலை கொடிக்கு பக்கத்தில் நின்று கொழுந்து வெற்றிலை ஒன்றை வருடி விட்டுக் கொண்டிருந்தாள்.
“பேசிகிட்டுதானே இருந்தோம் அஞ்சலி, டூ டேஸ் வெயிட் பண்ண முடியாதா உன்னால?” எனக் கேட்டான்.
“நாம பொள்ளாச்சிக்கு போவோம், நான் கிளம்பி வெளில போயிடுறேன், நான் வர்ற வரைக்கும் வீட்ல நீங்க சும்மா இருந்து பாருங்க, அப்பதான் என்னை உங்களால புரிஞ்சுக்க முடியும்” என்றாள்.
தன்னுடைய சேமிப்பு கணக்கு அட்டையை அவளிடம் கொடுத்தவன், “என் ஃபிரெண்ட் ஒருத்தன் நீ சொல்ற கோர்ஸ் லைன்லதான் வேலைல இருக்கான், அவன்கிட்ட ஒரு முறை விசாரிக்கலாம்னு நினைச்சேன், அவனுக்கு தெரியலைன்னாலும் யார்கிட்டேயும் கேட்டு சொல்வான். அதுக்குத்தான் ரெண்டு நாள் டைம். இப்பவே பே பண்ணனும்னா பண்ணிக்கோ” என்றான்.
“நீங்களும் விஷயத்தை சொல்லி வெயிட் பண்ண சொல்லிருக்கலாம்” என்றாள்.
“கோர்ஸ்ல நான் ஜாயின் பண்றதுக்கு விட மாட்டீங்கன்னு உங்களை தப்பா நினைச்சிட்டேன்”
அவள் பேசியதை கேட்டுக் கொண்டே அவளிடம் கையை நீட்டிச் சென்றான் அவன். அவள் வேகமாக விலக, அவளின் தோளில் ஊர்ந்த சிட்டெறும்பை தட்டி விட்டு அவளை கண்டனமாக பார்த்தான்.
அவள் கெஞ்சலாக பார்க்க, “நீ என்னை பத்தி நினைக்கிறது முழுக்க தப்பாதான் இருக்கு. கார்ட் உன்கிட்டேயே இருக்கட்டும், கோர்ஸ் பத்தி ரெண்டு நாள்ல சொல்றேன்” என சொல்லி கடைக்கு புறப்பட்டான்.
அவளும் அவனுடன் நடந்து வாசல் வரை வந்தாள். பைக்கில் ஏறி அமர்ந்தவன், “வர்றேன்” என்றான்.
வெளியிலிருந்த மரத்தை சுட்டிக் காட்டி, “அரை நெல்லிக்காய் மரம்தானே?” எனக் கேட்டாள்.
அவளது பார்வையையும் மரத்தையும் மாறி மாறி பார்த்தான். பைக்கிலிருந்து இறங்கியவன் துள்ளிக் குதித்து மரக் கிளையை வளைத்து பிடிக்க, அவளும் அவன் பக்கத்தில் வந்து விட்டாள்.
நல்ல பெரிதாக ஒரு காயை பறித்து அவளிடம் கொடுத்தான். உடனே கடித்து சாப்பிட்டவள் அதன் புளிப்பில் கண்களை மூடி முகத்தை சுளித்தாள். வேண்டுமென்றே அவன் ஒரு காயை சாப்பிட்டு பார்த்து, “இது நல்லாருக்கு சாப்பிட்டு பாரு அஞ்சலி” என நீட்டினான்.
“சீச்சி அது ரொம்ப புளிக்கும்” என்றாள். சட்டென அவள் கையிலிருந்த காயை தன் வாயில் போட்டுக் கொண்டவன் கொத்து கொத்தாக பறித்து அவளின் கைகளில் கொடுத்தான். கைகளில் இடம் போதாமல் புடவை முந்தானையை விரித்து அதில் பத்திரப் படுத்தினாள்.
“வாய்ல இருக்க நெல்லிக்கா அவ்ளோ ருசிக்குது, நெல்லிக்கா டேஸ்ட்டா இல்லை உன்…” என அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முடிக்கும் முன்னரே சுற்றிலும் பார்த்தவள் அவனது தலையில் கொட்டப் போனாள், வலிக்காமல்தான். ஆனால் இறுதி நொடியில் அவனது முறைப்பில் திகைத்து கையை பின் இழுத்துக் கொண்டாள்.
“வெளில ஆள் இல்லைனா என்ன, எந்த வீட்டு ஜன்னல் வழியா யார் நம்மள பார்க்கிறாங்களோ. ரூம்ல வச்சு எவ்ளோ வேணும்னாலும் கும்மு, ஆச்சுவலா அதுக்கெல்லாம் நான் வெயிட்டிங்” என்றான்.
“இந்த பேச்செல்லாம் வேணாம்”
“பேச்சுக்கும் தடைனா நான் கேட்டுக்க மாட்டேன். நிஜமா சொல்றேன் இந்த மரத்து நெல்லிக்காய் இவ்ளோ டேஸ்ட் இல்லை. அஞ்சலி டேஸ்ட் பண்ணின நெல்லிக்காய் ஸ்பெஷல்தான்”
“அப்புறமா பாவக்காய கடிச்சிட்டு தர்றேன், டெஸ்ட் பண்ணி பார்த்திட்டு சொல்லுங்க” என்றாள்.
அவளை மையலாக பார்த்தவன், “மாட்டேன்னா சொல்வேன்?” என கேட்டுக் கொண்டே புறப்பட்டான்.
‘இந்தாளு ஏதேதோ பேசி என்னை கவர் பண்ண பார்க்கிறார், கேர்ஃபுல் அஞ்சலி’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டேதான் வீட்டுக்குள் சென்றாள் அஞ்சலி.